ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The “treason” charge against Donald Trump

டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக "தேசத்துரோக" குற்றச்சாட்டு

Bill Van Auken
19 July 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹெல்சின்கியில் அவரது ரஷ்ய சமதரப்பினர் விளாடிமீர் புட்டினைச் சந்தித்தமை மீதான தொடர்ச்சியான விஷமப் பிரச்சாரம் மற்றும் கண்டனங்களுக்கு மத்தியில், நியூ யோர்க் டைம்ஸ் புதனன்று அதன் முதல் பக்கத்தில் "விவாதத்தில் தேசதுரோக வார்த்தை நுழைகிறது,” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை பிரசுரித்தது.

இக்கட்டுரை டைம்ஸின் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் பீட்டர் பெக்கரால் எழுதப்பட்டிருந்தது, இவர் இரண்டு புத்தகங்களின் ஆசிரியராவார், ஒன்று, வரலாற்றின் அழைப்பு (The call of history) என்று தலைப்பிட்டு ஒபாமாவின் துறவு வாழ்வைக் குறித்தது, மற்றொன்று கிரெம்ளின் வளர்கிறது: விளாடிமீர் புட்டினின் ரஷ்யாவும், புரட்சியின் முடிவும் (Kremlin Rising: Vladimir Putin's Russia and the End of Revolution) என்ற தலைப்பில் பனிப்போர் பாணியில் புட்டினைப் பூதாகரமாக சித்தரித்திருந்தது. ஜனநாயகக் கட்சியும் மற்றும் ஸ்தாபக ஊடக தாராளவாதமும் ஒருசமயம் வலதை நோக்கி எடுத்த கூர்மையான மாற்றம் குறித்து இவர் அக்கட்டுரையில் உள்நோக்கமின்றி அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளார்.

 “அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் ரஷ்ய தேர்தல் தலையீடு குறித்து புட்டினின் வார்த்தைகளை" ட்ரம்ப் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது என்பதிலிருந்து இந்த தேசத்துரோக குற்றச்சாட்டு எழுவதாக குறிப்பிட்டு, பெக்கர் எழுதுகிறார்:

“திரு. ட்ரம்ப் மோசமான முடிவெடுத்துவிட்டார் என்பதற்காக மட்டுமல்ல, மாறாக தேசத்துரோகத்திற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார்—அதுவும் விளிம்போர கூறுபாடுகளாலும் மற்றும் தாராளவாத உரையாடல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாலும் மட்டுமல்ல, மாறாக ஒரு முன்னாள் சிஐஏ இயக்குனராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார்.

“முன்னொருபோதும் இல்லாத ஒரு ஜனாதிபதி பதவிக்காலத்தில், வரலாற்று புத்தகங்களுக்கான மற்றொரு தருணத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு நேரம் தேசத்துரோக குற்றச்சாட்டு அரசியல் விவாதத்தின் நுனிகளில் இழுக்கப்படுகிறது, இந்த நவயுகத்தில் தேசிய உரையாடலின் பாகமாக இந்தளவுக்கு வேறெதுவும் பிரபலமானதில்லை.”

பெக்கரைப் பொறுத்த வரையில், இந்த "நவயுகம்" உண்மையில் குறுகிய காலத்திற்கு தான் இருக்கும் என்பதாக தெரிகிறது. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க ஸ்தாபக "பத்திரிகை ஆவணங்களின்" உள்பக்கங்களில் அதே நாளில் இத்துடன் தொடர்புடைய மிக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருந்தது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது: அதுவாவது, 1964 இல் None dare call it treason என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு நூலின் ஆசிரியரான ஜோன் ஸ்டொர்மருக்கான இரங்கல் செய்தி வெளியாகி இருந்தது.

அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளர் பாரி கோல்ட்வாட்டர் ஜனாதிபதியாகும் முயற்சியில் தோல்வியடைவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த இந்நூல், ஒரு காலத்தில் செனட்டர் ஜோசப் மக்கார்த்தியுடன் தொடர்புபட்டிருந்த மற்றும் அமெரிக்க அரசியலின் அதிதீவிர வலதுசாரியால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த சொல்லாடலை, அதாவது அமெரிக்க அரசு பெரிதும் கம்யூனிஸ்ட் உளவாளிகளால் கைப்பற்றப்பட்டு, கிரெம்ளினின் நலன்களுக்காக அது "போலிகளால்" (dupes) நடத்தப்பட்டு வருகிறது, என்பதை தொகுத்து விரிவாக்கி இருந்தது.

அந்நூலின் தலைப்பு முன்னுரை பின்வரும் வாசகத்தை ஏந்தியிருந்தது: “1964 ஒரு நெருக்கடியின் மற்றும் தீர்மானத்தின் ஆண்டாகும். அபாயத்தின் முன்னால் அமெரிக்கா நிராயுதபாணியாக நிற்பதற்கும், பூமியின் ஒவ்வொரு மூலையிலும் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகளின் முன்னால் தலைகுனிவதற்கும், தொடர்ந்து அது கம்யூனிஸ்ட் எதிரிக்கு உதவிக் கொண்டிருக்குமா? முடிவு உங்களுடையது.”

இதே பைத்தியக்காரத்தனமான பாணி, மறுக்கவியலாதபடிக்கு, ஜனநாயகக் கட்சி மற்றும் டைம்ஸ் க்கு உள்ளே இருந்தும் பிரதிபலிப்புகளைக் கண்டு வருகிறது. வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், அப்பத்திரிகையின் வெளியுறவு விவகாரங்களுக்கான வார்த்தைகளில் விளக்கவியலாத கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் ட்ரம்பை "ஒரு ரஷ்ய உளவாளியாக" வர்ணித்து, ஆயுதப்படைகளுக்கும் அதுபோன்றதொரு அழைப்பு விடுத்தார்: “என் சக-அமெரிக்கர்களே, நாம் பிரச்சினையில் உள்ளோம், இன்றே நாம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்,” என்றார். இதே ப்ரீட்மன் கடந்த ஆண்டு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான வழிமுறைகளைக் கொண்டு ஜனாதிபதியை நீக்குவதற்கு, பகிரங்க கடிதம் மூலமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்க அவர் கட்டுரையைப் பயன்படுத்தி இருந்தார்.

பெக்கர் அவரது தேசத்துரோக கட்டுரைக்காக, அமெரிக்க மத்திய உளவுத்துறை முகமையின் (CIA) உயர்மட்ட அதிகாரியான முன்னாள் இயக்குனர் ஜோன் பிரென்னெனை மேற்கோளிடுகிறார், இவர் "ட்ரம்பை வார்த்தைகளில் விமர்சிக்கும் பலரில் ஒருவர்" என்று பெக்கர் வர்ணிக்கிறார். ஹெல்சின்கியில் ட்ரம்பின் நடத்தையை "தேசதுரோகத்தனத்திற்கு குறைவில்லாதது" என்று பிரென்னென் சாடியிருந்தார்.

ட்ரம்ப் கிரெம்ளினின் உளவாளி என்ற கருத்து, மக்கார்த்தி, ஸ்டோர்மர் (Stormer) போன்றவர்களாலும் மற்றும் ஜோன் பெர்ச் சமூகத்தாலும் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஐசன்ஹோவர் மற்றும் கென்னடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை விட சற்று கூடுதலானது என்பதில் அதிக நம்பகத்தன்மை உள்ளது.

ஜனநாயகக் கட்சி அமெரிக்க அரசியல் வட்டாரத்தின் மிக வலதுசாரி கூறுபாடுகளுடன் தொடர்புடைய ஒரு சொல்லாடலைப் புதுப்பிக்கிறது என்ற உண்மையில், மிகவும் அச்சுறுத்தலான பாதிப்புகள் உள்ளன. அது அமெரிக்க மக்களிடையே அரசியல் நோக்குநிலை பிறழ்ச்சியை விதைக்கவும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ அரசால் இன்னும் தீவிர பிற்போக்குத்தனமான மற்றும் அபாயகரமான திருப்பத்திற்கு அடித்தளம் அமைக்கவும் மட்டுமே சேவையாற்றும்.

ட்ரம்பினது "தேசதுரோகத்தின்" உள்ளடக்கம் என்ன? அதிர்ச்சியான மற்றும் சீற்றமான குரலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் விவாத பேச்சாளர்களும் மீண்டும் மீண்டும் முடிவின்றி என்ன குற்றச்சாட்டு வைக்கிறார்கள்?—இதே ஊடக கைக்கருவிகள் தான் அமெரிக்க-மெக்சிக்கன் எல்லையில் குழந்தை அகதிகளை ட்ரம்ப் நிர்வாகம் சித்திரவதை செய்வதையும், சிரியா மற்றும் ஈராக்கில் அதன் போர் குற்றங்கள் மீதும் மற்றும் யேமன் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை அது ஆதரித்த போதும் கிட்டத்தட்ட மவுனமாக கடந்து சென்றார்கள் அல்லது அவற்றிற்கு நியாயப்பாடுகள் வழங்கினார்கள்.

அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் வார்த்தையை, ட்ரம்ப் ஏற்க தவறிவிட்டார் என்பதுதான் அது. இந்த "பெருங்குற்றம்" என்று கூறப்படுவதை முன்னுக்குக் கொண்டு வரும் அதிகாரிகளாக இருப்பவர்கள் யாரென்றால், தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கான "பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வாளர்களாக" இருந்து தங்களின் வங்கி கணக்கை இப்போது பெருக்க வைத்துக் கொண்டுள்ள மூன்று முன்னாள்-உளவுத்துறை தலைவர்கள், ஜோன் பிரென்னென், மைக்கல் ஹேடன் மற்றும் ஜேம்ஸ் கிளாப்பர் ஆகியோர் ஆவர்.

என்னவொரு நம்பமுடியாத உண்மையின் பாதுகாவலர்கள்! சிஐஏ இன் இயக்குனர்களாக இவர்கள் அனைவரும், சித்திரவதை, “இரகசிய தளங்கள்", “பிற நாட்டிடம் அசாதாரணமாக ஒப்படைப்பது" மற்றும் ஆளில்லா டிரோன் படுகொலைகளை மேற்பார்வையிட்டவர்கள் என்பதோடு, இவர்கள் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் ஏனைய பிற குற்றங்களையும் செய்தவர்களாவர்.

சிஐஏ இன் இரகசிய நபர்களைக் கொண்டு செனட் உளவுத்துறை குழுவின் கணினிகளை ஊடுருவுவதற்கு உத்தரவிட்டதன் மூலமாக பிரென்னென் சிஐஏ சித்தரவதை நடவடிக்கைகள் அம்பலமாவதைத் தடுக்க முனைந்தார். கிளாப்பர் ஒரு பொய்யர், தேசிய பாதுகாப்பு முகமைக்கும் இவரே தலைமை தாங்கி இருந்த போது, அமெரிக்க குடிமக்களைக் குறித்து அது தகவல்களைச் சேகரித்தை மறுத்து நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தார், இந்த பொய்யைத்தான் எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தினார். அடுத்து ஹேடன், இவரும் NSA இன் தலைவராக இருந்தவர் தான், உள்நாட்டில் பாரிய உளவுபார்ப்பு திட்டங்களைத் தொடங்கியவர்.

வரலாறு குறித்து ஒருவருக்கு மேலோட்டமான அறிவு இருந்தாலும் கூட, "தேசதுரோகி" ட்ரம்புக்கு எதிராக தற்போது ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக பெருமைப்பீற்றிக் கொள்ளும் இந்த முகமைகளைக் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும், முதலாளித்துவ அரசின் இரகசிய போலிஸூம் உளவுத்துறை சக்திகளும் எப்போதுமே மிகப்பெரும் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டு வந்துள்ளது. இது அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவுக்கு உண்மையாக இருந்திருக்காது.

உண்மையில், சிஐஏ இன் இரகசிய நடவடிக்கைகள் தேசியளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இரண்டு விதத்திலும் சட்ட வரையறைகளை மீறி நடந்திருப்பதை அதன் ஸ்தாபக சாசனம் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், அமெரிக்காவிற்கு உள்ளேயே அதன் நடவடிக்கைகளைத் தடுத்து வைக்கும் அளவுக்கு, சிஐஏ மீதான ஐயப்பாடு மிகப் பெரியளவில் இருந்தது.

படுகொலைகளை ஒழுங்கமைத்ததற்காக “படுகொலை நிறுவனம்” (Murder, Inc.”) என்றழைக்கப்பட்ட அது, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் வடிவமைத்து, ஈரான் மற்றும் குவாண்டமாலாவில் இருந்து துருக்கி மற்றும் கிரீஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலுமான நாடுகள் வரையில் மூர்க்கமான சர்வாதிகாரங்களை நிறுவியது.

மத்திய புலனாய்வு அமைப்பை (FBI) பொறுத்த வரையில், அதன் முன்வரலாற்றில் நீதித்துறை ஜோடிப்புகளும், ஆத்திரமூட்டல்கள் மற்றும் படுகொலைகளும் சிதறிக் கிடக்கின்றன. இந்த அமைப்பானது குடிமக்கள் உரிமைகள் இயக்கம், போர்-எதிர்ப்பு இயக்கம் மற்றும் அமெரிக்க இடதின் ஒவ்வொரு பிரிவுகளுக்கு உள்ளேயும் ஆயிரக் கணக்கான உளவாளிகளையும், ஆத்திரமூட்டும்-முகவர்களையும் வெள்ளமென உள்நுழைத்து, அந்த அமைப்புகளுக்கு எதிராக நடைமுறையளவில் ஒரு போர் நடத்தியது.

இந்த முகமைகள் பெரிதும் இரண்டு பொய்களுக்குப் பொறுப்பாகின்றன, “பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற இவை, முடிவில்லா ஆக்கிரமிப்பு போர்களின் அடிப்படையில் கடந்த கால் நூற்றாண்டு அமெரிக்க வெளியுறவு கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.

CIA, FBI மற்றும் NSA இன் வாய்மை, நேர்மை மீது ஐயுறவாதத்தை வெளிப்படுத்துவது தேசத்துரோகமாக முத்திரை குத்தப்படலாம் என்பது அமெரிக்க போலிஸ் அரசைக் குறித்த ஒரு கூர்மையான அபாய எச்சரிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

மற்றொரு "தேசத் துரோகத்தனமான" நடவடிக்கை என்னவென்றால் மாஸ்கோவுடன் பதட்டங்களைக் குறைக்க முயற்சி எடுப்பதாகும். ட்ரம்ப் ரஷ்யாவை அவரின் பரிவர்த்தனைரீதியான "அமெரிக்கா முதலில்" வெளியுறவு கொள்கை பட்டகத்தின் வழியாக நோக்குகின்ற அதேவேளையில், அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் வாஷிங்டனின் பரந்த இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் மேலோங்கிய கன்னைகளோ ரஷ்ய கூட்டாட்சியைத் துண்டாடி, காலனிமயப்படுத்தும் நோக்கத்தில், எந்த விட்டுக்கொடுப்புகளையும் சகித்துக் கொள்ள முடியாது என்று ஓர் இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்ய அதிகளவில் பொறுப்பேற்றுள்ளன.

இந்த நலன்களைத் தான் வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் பரிபூரண கட்சியான ஜனநாயகக் கட்சி வெளிப்படுத்தியது. அது இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து எதிர்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், முற்போக்கான நிலைப்பாட்டிலிருந்து கூட ட்ரம்பை எதிர்க்கவில்லை அவ்வாறு எதிர்க்க அதற்கு விருப்பமும் இல்லை, ஏனென்றால் அது நிதி மூலதன நலன்களுக்கும் மற்றும் ஜெஃப் பெஸோஸாக்களின் உலகிற்கும் பாதுகாவலராக விளங்குகிறது.

அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் உள்ளடக்கத்தினுள் "இடது" மற்றும் "வலது" என்ற வார்த்தைகளுக்கு எந்த நிஜமான முக்கியத்துவமும் கிடையாது. ஜனநாயகக் கட்சி ஏற்றுள்ள நவ-மக்கார்த்திய அரசியலானது ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகமும், அதன் பரவலான கன்னைகளும் உழைக்கும் பரந்த பெருந்திரளான மக்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதையும் மற்றும் பிற்போக்குத்தனத்தையும் நோக்கி திரும்பிவிட்டதை வெளிப்படுத்துகிறது.

இதே இயக்கவியல் தான் ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்தில் இயங்கி வரும் போலி-இடது அமைப்புகளிலும் மேலோங்கி உள்ளது, ஹெல்சின்கி சந்திப்பு குறித்து குரல் எழுப்பிய சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) பிற்போக்குத்தனத்தில் இது தெளிவுபடுத்தப்பட்டது, “ட்ரம்ப், இப்புவியில் மிகவும் வெளிப்படையான தீயவர்களில் ஒருவரினது போலி நகலைப் போல தெரிகிறார்,” என்று  அறிவித்தது.

உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சலுகை படைத்த அடுக்குகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இத்தகைய அரசியல் போக்குகள் அனைத்தும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் எழுந்து வரும் வர்க்க போராட்ட மேலெழுச்சியாலும் ஒரு புரட்சிகர சமூக வெடிப்பின் அச்சுறுத்தலாலும் வலதை நோக்கி கூர்மையாக தள்ளப்பட்டு வருகின்றன.