ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP member Mohamdiramlage Chandrasiri (1955–2018)

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின்  உறுப்பினர் மொஹம்திராம்லாகே சந்திரசிறி (1955-2018)

By Wimal Fernando 
19 July 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) நீண்டகால உறுப்பினரான மொஹம்திரம்லாகே சந்திரசிறி ஜூன் 21 அன்று 63 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு கொழும்பில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராகமவில் தலகொல்ல பொதுமயானத்தில் இடம்பெற்றது. இதில் சுமார் 200 பேர் வரை கலந்துகொண்டனர். இந்த தன்னலமற்ற மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காக கொள்கை ரீதியான போராளியாக இருந்த அவருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தியவர்களில் அவரது உறவினர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்களும் அடங்குவர். 

இருதய பாதிப்பு உட்பட பல உடல்நலக் கோளாறுகளைக் கொண்ட சந்திரசிறி ராகமாவில் ஒரு வாடகை அறையில் தனித்து வசித்து வந்த நிலையில், ஜூன் 21 அன்று சோகமான முறையில் காலமானார். அவர் அறையில் இறந்து கிடப்பது மறுநாளே கண்டறியப்பட்டது. ராகம போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை அரச வைத்திய அதிகாரி அவர் மாரடைப்பால் இறந்துபோனதை உறுதிசெய்தார்.  


மொஹம்திரம்லாகே சந்திரசிறி

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபத்தில் ஓரளவு செல்வந்த குடும்பத்தில் பிறந்த சந்திரசிறி, அந்நகரிலுள்ள பிரதான கத்தோலிக்க சென் மேரிஸ் கல்லூரியில் பயின்றார். அவர் குடும்பத்தில் மூத்த மகனவார். அவருக்கு ஒரு சகோதரனும் ஐந்து சகோதரிகளும் உள்ளனர்.

பாடசாலை காலத்திலேயே சந்திரசிறி சோ.ச.க. முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) நோக்கி ஈர்க்கப்பட்டதுடன் சோசலிசம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வத்தில் வெளிப்படுத்தினார். அவர் பு.க.க. பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, கட்சியின் வாராந்திர வெளியீடான கம்கறு மாவத்தை (தொழிலாளர் பாதை) பத்திரிகையை வழமையாக வாசித்து வந்தார். பு.க.க. சிலாபத்தில் ஒரு கிளையை பேணி வந்ததோடு மாணவர்கள் உட்பட தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரினதும் பரந்த ஆதரவை அங்கு அது பெற்றிருந்தது.

அது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியனதும் இரண்டாவது முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கூர்மையான போராட்டங்கள் நடந்த காலகட்டமாகும்.

கூட்டணி அரசாங்கம் 1970ல் ஆட்சிக்கு வந்ததுடன், 1972ல் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டது. இந்த 108 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசாங்கம் அடக்கி ஒடுக்கியதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து, அனைத்து வேலைநிறுத்தக்காரர்களையும் வேலை நீக்கம் செய்தது. உலக எண்ணெய் விலைகளில் கடும் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையையும் எதிர்கொண்ட இலங்கை அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற மக்களதும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான பெரும் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது.

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெடித்த உழைக்கும் மக்களின் அனைத்து முக்கிய போராட்டங்களிலும் பு.க.க. தலையிட்டு, ல.ச.ச.க. மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும், சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு போராடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது அதன் அரசியல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. இந்த தந்திரோபாய கோரிக்கை, ல.ச.ச.க. மற்றும் ஸ்டாலினிஸ்டுகளின் சீர்திருத்தக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதையும், வர்க்க நனவுள்ள தொழிலாளர்களை பு.க.க. பக்கம் வென்றெடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.

தொழிலாளர்களின் உறுதியான போராட்ட நடவடிக்கையானது அரசாங்கம் மற்றும் ல.ச.ச.க. உள்ளே பிளவுகளை ஆழப்படுத்தியமை 1975 செப்டம்பரில் ல.ச.ச.க. கூட்டணியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளியது. தொழிலாளர்களின் அதிகரித்தளவிலான போர்க்குணமிக்க நடவடிக்கை 1976ல் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் அதன் உச்சத்தை எட்டியதுடன், இறுதியில் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க அரசாங்கத்தை நிர்பந்தித்தது.

ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது (ஐ.தே.க.), ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக்கொடுப்புகளுடன் மத்தியதர வர்க்க பகுதியினரின் வெறுப்பைச் சுரண்டிக்கொண்டு தேர்தலில் வெற்றி கண்டது. சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, அந்த வலதுசாரி ஆட்சி உடனடியாக “சுதந்திர சந்தை” பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. அதே வேளையில், ஜயவர்த்தன அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான இனவாத ஆத்திரமூட்டல்களை அதிகரித்து வந்தது. இது, 1983ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அதன் இனவாத யுத்தத்தைத் தொடுத்ததில் உச்ச கட்டத்தை எட்டியது.

சந்திரசிறி 1974ல் தனது 18 வயதில் இலங்கை வங்கியில் பணிபுரியத் தொடங்கியபோது, பு.க.க. உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு கட்சியில் இணைந்தார். 1978ல், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு மறியல் போராட்டத்தை, ஐ.தே.க. குண்டர்கள் வன்முறையாக தாக்கிய பின்னர், வங்கி ஊழியர்கள் மத்தியில் அவர் முன்முயற்சி எடுத்து, கட்சியின் அரசியல் முன்னோக்கிற்காகப் போராடினார். எப்பொழுதும் போல், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்க அதிகாரத்துவம், அதன் உறுப்பினர்களிடம் அவர்களது போராட்டங்களுக்குள் அரசியலைத் திணிக்க வேண்டாம் என்று தெரிவித்ததுடன், நிர்வாகத்துடன் மோதல்போக்கு இல்லாத பேரம் பேசலுக்கு அழைப்பு விடுத்தது.

பு.க.க. மற்றும் சந்திரசிறியின் அரசியல் வேலை, வங்கி ஊழியர்களோடு மட்டும் வரையறுக்கப்படாமல், கட்சிக்காக புதிய உறுப்பினர்களை வென்றெடுக்க போராடுவதில் பிற தொழில்துறைகள் மற்றும் தொழிலாள வர்க்க இருப்பிடங்களிலும் தைரியமான தலையீடுகளை மேற்கொண்டது.

எவ்வாறாயினும், ஒட்டுமொத்த இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கும் அது ஒரு கடினமான அரசியல் காலகட்டமாக இருந்தது. 1980ல் ஐ.தே.க. அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தை தோற்கடித்து கிட்டத்தட்ட 100,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கிய ல.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி, நவ சம சமாஜக் கட்சி மற்றும் தொழிற் சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளின் விளைவாகவே ஐ.தே.க. அரசாங்கத்தால் இந்த ஒடுக்குமுறையை முன்னெடுக்க முடிந்தது. அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் இளைஞர்களையும் வழிநடத்தும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டி எழுப்புதற்கான போராட்டத்தை இந்த அமைப்புகள் எதிர்த்தன. மாறாக, பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கு கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்கும் என அவர்கள் வலியுறுத்தினர்.

வேலைநிறுத்தம் தோல்வி கண்டு, அரசாங்கத்தின் தாக்குதல் தொழிலாள வர்க்கத்தை பின் தள்ளிய நிலையில், 1980களின் நடுப்பகுதியில், கட்சியின் அரசியல் பணியில் மும்முரமாக பங்கேற்பதில் இருந்து சந்திரசிறி விலகினார். இறுதியில் 2000ம் ஆண்டில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நிலைக்கு அவரை கொண்ட சென்ற இதய நோய் உட்பட அவரது நிலையற்ற ஆரோக்கியமும் கூட, அவரது விலகலுக்கு பங்களிக்கும் ஒரு காரணியாக இருந்தது.

இருப்பினும், சந்திரசிறி கட்சியுடனான உறவுகளை ஒருபோதும் முறித்துக்கொண்டதில்லை. வழமையாக நிதியளித்து வந்ததுடன் அவர் தொழிற்சங்கங்களுக்குள் அதன் போராட்டங்களை அங்கீகரித்து வந்தார். 2004ல் அவர் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தார்.


சோ... பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள சந்திரசிறி (வலது)

உலக சோசலிச வலைத் தளத்தின் சிங்கள பக்கத்துக்கு பல கட்டுரைகளை எழுதியுள்ள சந்திரசிறி, ஏனைய தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார். தொழிலாளர்கள் மத்தியில் எமது வலைத் தள கட்டுரைகளை விநியோகித்ததோடு அவர்களுடன் அதன் பகுப்பாய்வு பற்றி ஆர்வத்துடன் கலந்துரையாடினார்.

கடந்த ஆண்டு நடந்த மீதொடமுல்ல குப்பை மேட்டு விபத்து தொடர்பாக விசாரிக்க சோசலிச சமத்துவக் கட்சி நிறுவிய சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவில் கூட சமீபத்தில் சந்திரசிறி பங்கெடுத்திருந்தார்.

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மீதொடமுல்ல குப்பை மலை 2017 ஏப்பிரலில் சரிந்து போனதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன், ஆயிரத்திற்கும் அதிகமான பிரதேசவாசிகள் இடம்பெயர்ந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தற்போதைய அரசாங்கம் உட்பட இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இந்த சமூகக் குற்றத்திற்கு பொறுப்பாகும்.

உண்மையை மறைப்பதற்கு அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் தற்போது மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக, சுயாதீன விசாரணைக் குழு பேரழிவை உருவாக்கிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை முறையாக வெளிப்படுத்தியது.

துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, உள்ளூர் மக்களுடன் உரையாடுவது மற்றும் கூட்டங்களை ஒழுங்கமைக்க உதவுவது என சந்திரசிறி ஏனைய தோழர்களுடன் சேர்ந்து குழுவின் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அரசியல் விளக்கம் குறித்து உதவுவதற்கு, அவர் சோ.ச.க. விரிவுரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துரையாடல் நேரத்தின் போது எப்போதும் கேள்விகளைக் கேட்பார். திரைப்படம் மற்றும் அரங்கேற்றல் துறையிலும் கூட ஆர்வம் காட்டி வந்த அவர், அந்த கலை வடிவங்களைப் பற்றி சோ.ச.க. உறுப்பினர்களுடன் அடிக்கடி அவர் கலந்துரையாடினார்.  

அவரது நோய்வாய்ப்பட்ட தாய்க்கு உதவுவதற்காக, 2010 டிசம்பரில் தனது 55 வது வயதில் வேலையில் இருந்து முழுநேர ஓய்வு பெற சந்திரசிறி முடிவு செய்தார்.

சந்திரசிறியின் இறுதி ஊர்வலத்தின் போது, தனது பெரிய குடும்பத்தின் நலவாழ்வை முன்னிட்ட அவரது தாராளமிக்க மற்றும் சுய தியாக பங்களிப்பு குறித்து அவருடைய உடன்பிறந்த சகோதரர்கள் பாராட்டினார்கள். அவரது சக வங்கி ஊழியர்கள், சந்திரசிறி முற்றிலும் கொள்கை ரீதியானவர் என்பதோடு தனது நம்பிக்கைகளுக்காகப் போராடிய ஒரு மனிதர் என்று அவரை விவரித்தனர். ட்ரொட்ஸ்கிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்பவும் அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக அவரது தோழர்களால் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார்.