ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Inequality and the crisis of American democracy

சமத்துவமின்மையும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும்

Andre Damon
20 August 2018

அமெரிக்காவின் 350 மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளது சம்பளம் 2016 மற்றும் 2017 க்கு இடையே 17.6 சதவீதம் அதிகரித்ததாக பொருளாதார கொள்கை பயிலகம் (Economic Policy Institute) வியாழனன்று அறிவித்தது. சாதாரணமாக தலைமை செயலதிகாரி ஒருவர் 18.9 மில்லியன் டாலர் வருவாயாக பெற்றார். மறுபுறம் சாதாரண ஓர் அமெரிக்க தொழிலாளரின் கூலி மிக அற்பமாக 0.3 சதவீதமே அதிகரித்திருந்தது.

அமெரிக்காவில் ஒரு சாதாரண தலைமை செயலதிகாரி இப்போது சராசரி தொழிலாளர் சம்பாதிப்பதை விட 312 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார், இது 1960 களில் இருந்ததை விட 20 க்கு 1 விகிதத்தில் அதிகமாகும். இதன் அர்த்தம், ஒரு தலைமை செயலதிகாரி, சராசரியாக, ஏறத்தாழ சராசரி தொழிலாளர் ஓராண்டு முழுவதும் சம்பாதிப்பதை ஒரே நாளில் சம்பாதிக்கிறார்.

2008 நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் மனித வரலாற்றில் மிகப்பெரிய வங்கி பிணையெடுப்புகளை வழங்கிய பத்தாண்டுகளுக்குப் பின்னர், சமூக சமத்துவமின்மை குறித்த ஒவ்வொரு புள்ளிவிபரங்களும் வானளாவ விரிந்து நிற்கின்றன.

2008 இல், அமெரிக்காவில் 400 செல்வந்தர்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருந்தனர். இந்த புள்ளிவிபரம் அதிலிருந்து இரட்டிப்பாகி, 3 ட்ரில்லியனுக்கு அண்ணளவாக நிற்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர், அமசன் நிறுவன தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் இன் நிகர மதிப்பு 8.7 பில்லியன் டாலராகும். இப்போது இது 16 மடங்கு உயர்ந்து 140 பில்லியன் டாலரில் நிற்கிறது. நிதியியல் நெருக்கடியின் அந்நேரத்தில் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சுக்கர்பேர்க்கின் நிகர சொத்து மதிப்பு 1.5 பில்லியனாக இருந்தது. இப்போது அவர் செல்வவளம் 46 மடங்கு அதிகரித்து 69 பில்லியன் டாலரில் நிற்கிறது.

இந்த நிதியியல் நெருக்கடியைத் தூண்டிய குற்றங்களுக்குக் காரணமானவர்கள் எவருமே சிறைக்குச் செல்வதில் இருந்து தவிர்க்கப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் இன்னும் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆகியுள்ளார்கள். ஜேபி மோர்கன் சேஸிஸ் தலைமை செயலதிகாரி ஜேமி டிமன் மற்றும் கோல்ட்மன் சாக்ஸ் இன் முன்னாள் தலைமை செயலதிகாரி லொயிட் பிளான்ஃபைன் இருவருமே அப்போது அடமானக் கடன்-அடிப்படையிலான பத்திரக் குமிழிகள் மீது பணயம் வைத்து இலாபமீட்டுவதற்காக அதை உருவாக்குவதில் முக்கிய பாத்திரம் வகித்திருந்த நிலையில், இருவருமே கடந்த தசாப்தத்தில் பில்லியனர்களாக ஆகியுள்ளார்கள்.

பொருளாதார மீட்சி என்று கூறப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், பொருளாதாரம் பெயரளவிற்குத்தான் முழு வேலைவாய்ப்பை நெருங்கி கொண்டிருந்தது என்ற நிலையில், அதுவும் கூட தசாப்தங்களாக வேலையின்மை இறுக்கமாக இருந்ததுடன், ஆண்டுக்கு ஆண்டு கூலிகள் தொடர்ந்து சரிந்து வந்தன. கடந்த 12 மாதங்களில், நிஜமான அர்த்தத்தில் கூலிகள் 0.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் பங்கு விலைகளோ 12 சதவீதம் உயர்ந்தன.

உயர்ந்து கொண்டே இருக்கும் இலாபங்களுக்கு இடையே கூலிகள் சீராக சரிந்து வந்திருப்பதைக் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்ற போது, “மேலெழும் பேரலை எல்லா படகுகளையும் மேலுயர்த்துகிறது” என்ற "சுதந்திர சந்தை" சூத்திரம் இருக்கையில், பெருமைப்பீற்றப்பட்ட அதன் இயங்குமுறை ஏன் உடைந்தது என்று அவை மண்டையைக் குழப்பிக் கொள்கின்றன. ஆனால் ஆளும் வட்டாரங்களில் இதுவொரு ஒளிவுமறைவற்ற இரகசியமாக உள்ளது, அதாவது சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பானது நிதியியல் குமிழி, பொறிவு மற்றும் பிணையெடுப்பின் எதிர்நோக்கப்பட்ட விளைவாக உள்ளது.

நிதிய நெருக்கடிக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் ஒருபோல, வங்கி நெறிமுறை ஆணையங்களுடன் சேர்ந்து, ஒன்று மாற்றி ஒன்றாக நிதியியல் குமிழியை உருவாக்க ஊக்குவித்தன. அந்த பொறிவுக்குப் பின்னர், அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் எவருமே குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்படவில்லை, வங்கிகளின் அனைத்து வாராக் கடன்களும் பொது நிதிகளைக் கொண்டு ஈடுகட்டப்பட்டன, மேலும் பெடரல் ரிசர்வ் மற்றும் ஒபாமா நிர்வாகமும் உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து ஆளும் உயரடுக்கைச் செல்வ செழிப்பாக மற்றொரு பாரிய நிதியியல் குமிழியை உருவாக்குவதற்கு ஊக்குவித்தன.

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத இந்த சமூக சமத்துவமின்மை மட்டங்கள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், களவாடப்பட்ட 2000 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் பறிப்புக்கும் விடையிறுத்து, உலக சோசலிச வலைத் தளம் விவரிக்கையில், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பே ஜனநாயக உரிமைகளின் சீரழிவுக்கு அடியில் இருப்பவை என்பதை விளங்கப்படுத்தியது.

2006 உரையில், WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு குறிப்பிட்டார்:

அமெரிக்க சமூகம் ஆழமாக முறிந்து போயுள்ளது. சமூக துருவப்படுத்தலின் அளவு வெடிப்பார்ந்த பரிமாணங்களை எட்டியுள்ளது. வருவாய் மற்றும் செல்வவளத்தின் வரையறைகளில் முதல் ஐந்து பேர் அல்லது சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதத்தினர் ஜனநாயக உரிமைகள் மீது எந்த ஆழ்ந்த பொறுப்பும் கொண்டிருக்கவில்லை. நிச்சயமாக இந்த சமூக வகைப்பாட்டில் ஒரு சில விதிவிலக்குகளும் உள்ளன தான். ஆனால் ஜனநாயகத்துடனான சமூகத்தின் செல்வவளமான அடுக்கின் புறநிலை உறவானது பரந்த பெருந்திரளான மக்களுடையதைப் போலன்றி முற்றிலும் வேறுபட்ட குணாம்சத்தில் உள்ளது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரையில், ஜனநாயகம் என்பது அவசியமானதாக கருதப்படுவதில்லை, ஏதோவொரு வகை சௌகரியமாக கருதப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் முழுமையாக எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, சர்வாதிகாரம் செல்வவளத்தை அச்சுறுத்துவதில்லை, அதைப் பாதுகாக்க சேவையாற்றுகிறது.

2008 பொறிவைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில், இந்த நிகழ்ச்சிபோக்குகள் வெறுமனே தீவிரப்படுத்தப்பட்டன. 2010 இல் ஒபாமா நிர்வாகம் டிரோன் ஏவுகணை தாக்குதலைக் கொண்டு அமெரிக்க குடிமக்களை, அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட, கொல்ல உரிமை இருப்பதாக வலியுறுத்தியதுடன், இரண்டு அமெரிக்க குடிமக்களை நீதி விசாரணையின்றி எதற்காக என்றுகூட நிரூபிக்காமலேயே கொன்றது.

ரிச்சர்ட் நிக்சனின் உளவாளிகளின் வேலையை அர்த்தமற்றதாக்கும் அளவுக்கு அமெரிக்க உளவுத்துறை முகமைகள் அமெரிக்க மக்கள் மீது உளவு பார்த்து வருகின்றன என்பதை இரகசியங்களை அம்பலப்படுத்தியவரான எட்வர்ட் ஸ்னோவ்டென் எடுத்துக்காட்டினார். அவர் ரஷ்யாவில் நாடு கடந்து வாழ நிர்பந்திக்கப்பட்டார். ஜனநாயகத்திற்கு எதிரான போர் குற்றங்களையும் சூழ்ச்சிகளையும் ஆவணப்படுத்திய பத்திரிகையாளர் ஜூலியான் அசான்ஜ், அமெரிக்க அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் இலண்டனில் நடைமுறையளவிலான சிறைவாசத்தில் உள்ளார்.

எல்லாவற்றையும் விட மிகவும் கேடுவிளைவிப்பதாக, அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி பிரமுகர்களின் சார்பாக, மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், முன்னொருபோதும் இல்லாத அளவிலும் மற்றும் முறையிலும் இணைய தணிக்கை முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இப்போது அமெரிக்க ஜனநாயக நெருக்கடி ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் ஊழல் மற்றும் குற்றகரத்தன்மையின் உருவடிவமாக திகழும் டொனால்ட் ட்ரம்ப் அவரது பாசிசவாத அடித்தளத்திற்கு முறையிடுவதன் மீதிருந்து முன்பினும் அதிக வெளிப்படையாக ஓர் எதேச்சதிகார அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தில் உள்ள ட்ரம்ப் எதிர்ப்பில் சிறிதும் கூட ஜனநாயக உள்ளடக்கம் இல்லை. முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னென் மற்றும் தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் போன்ற பிரமுகர்கள், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான எண்ணற்ற குற்றங்களுக்குப் பொறுப்பான அரசு உளவுத்துறை முகமைகள் அரசியல் வாழ்வுக்குள் நேரடியாக தலையிட வேண்டுமென, ஜனநாயக கட்சி மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன், கூறுகிறார்கள்.

மேலும் மேலும் அதிகமாக, ஊடக பிரிவுகளும் ஆளும் உயரடுக்கும் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கான ஆதரவு கோரும் தொனியில், அத்தகைய மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஏறக்குறைய இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரத்துவத்தினது ஒரு கலகத்திற்கு அழைப்பு விடுத்து வெள்ளிக்கிழமை ரிம் வெய்னெர் எழுதிய துணை-தலையங்கம் ஒன்றை நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டது.

அவர் எழுதினார்:

யாருக்காக அவர் பேசுகிறார் என்பதை நன்கு அறிந்துள்ள ஜோன் பிரென்னென், இந்த ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்புக்கு —அதாவது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு ஓர் அடிமை, என்பதற்கு குறைவின்றி, உளவுத்துறைக்கு-விரோதமான ஓர் அச்சுறுதலாக— கருதுகிறார் … இவை பதவியிலிருக்கும் தளபதிகள் மற்றும் அட்மிரல்களுக்கும், சிப்பாய்கள் மற்றும் உளவாளிகளுக்கும் ஒரு சேதியை அனுப்புகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டின் அனைத்து எதிரிகளுக்கு எதிராகவும் அரசியலமைப்பைப் பாதுகாக்க மற்றும் காப்பாற்ற நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு நெருக்கடியில் [ட்ரம்பின்] உத்தரவுகளைப் பின்தொடர்வதற்கு முன்னதாக ஒன்றுக்கு இரண்டு முறையாவது சிந்தியுங்கள்.

ஆளும் வர்க்கத்தின் இரண்டு கன்னைகளது பரஸ்பர சேறடிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அவை இரண்டுமே வலதுசாரி, எதேச்சதிகார அரசியல் போக்குகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் இத்தகைய பிரதிநிதிகள், வர்க்கப் போராட்ட முறைகளைக் கொண்டு அதாவது, அரசியல் வாழ்வில் தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான, சுயாதீனமான தலையீட்டினால் எதிர்க்கப்பட வேண்டும். அமெரிக்காவில் UPS தொழிலாளர்கள் தொடங்கி, ஐரோப்பாவில் ரைன்எயர் விமானிகள் மற்றும் விமானச் சேவை சிப்பந்திகள் வரையில், உலகெங்கிலும், தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைந்து வருகிறார்கள். ஒரு கருத்துக்கணிப்பு மாற்றி ஒன்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இந்த இயக்கத்தை ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதற்காக போராடுவது மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழிவகையாகும், இதை சமத்துவமின்மை, போர் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும்.