ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German government places Socialist Equality Party on subversive watch-list

ஜேர்மன் அரசாங்கம் சோசலிச சமத்துவக் கட்சியை எதிர்மறை கண்காணிப்பு பட்டியலில் வைக்கிறது

By the Sozialistische Gleichheitspartei
17 August 2018

ஜேர்மனியின் உள்நாட்டு உளவுச்சேவை முகமையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் (BfV) அதன் வருடாந்தர "அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கையில்" அரசு கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் "இடதுசாரி தீவிரவாத" அமைப்புகளது அதன் உத்தியோகபூர்வ பட்டியலில் கடந்த மாதம் சோசலிச சமத்துவக் கட்சியை இணைத்திருந்தது. இது ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) மீதான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் தாக்குதலாகும்.

முந்தைய ஆண்டுகளின் வருடாந்தர அறிக்கையில் SGP தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இப்போது அது, மூன்று "இடதுசாரி தீவிரவாதக் கட்சிகளில்" ஒன்றாகவும், இரகசிய சேவைகளால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு “கண்காணிப்பிற்குரிய விடயமாகவும்" இரண்டு இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

இரகசிய சேவையால் கண்காணிக்கப்படுவது என்பதன் அர்த்தம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது பாரிய கட்டுப்பாடுகள் இருக்கும், மேலும் இது தடை செய்யப்படுவதற்கான ஒரு முன்நடவடிக்கையாகவும் அமைகிறது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் அதன் அங்கத்தவர்கள் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும், அவர்களின் தகவல் தொடர்புகள் இடைமறிக்கப்பட்டு வருகின்றன என்பதும் மற்றும் அவர்கள் இரகசியமான முறைகளில் உளவு பார்க்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் உணர வேண்டும். அவர்கள் "அரசியலமைப்பின் எதிரிகள்" என முத்திரை குத்தப்பட்டுள்ளனர், தேர்தல்கள், பொது இடங்களில் முன்நிற்பது, வீடு வாடகைக்கு எடுப்பது அல்லது ஒரு வேலை தேடுவது ஆகியவற்றில் அவர்கள் தொல்லைகளை முகங்கொடுப்பது போன்றவற்றை எதிர்நோக்கலாம்.

சான்றாக, RCDS, ஆட்சியில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிகளின் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம்) மாணவர் அமைப்பானது, இரகசிய சேவையால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற அமைப்புகள் மற்றும் அவற்றின் அங்கத்தவர்களைப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்ற வேண்டுமென கோருகிறது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) எந்தவொரு சட்டத்தையும் மீறி வருகிறது என்றோ அல்லது வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக என்றோ இரகசிய சேவை எந்தவொரு குற்றச்சாட்டும் வைக்கவில்லை. SGP அதன் குறிக்கோள்களைச் சட்டரீதியான வழிவகைகள் மூலமாகவே செய்து வருகிறது. அதாவது தேர்தல்களில் பங்கெடுப்பதன் மூலமாக மற்றும் விரிவுரைகள் மூலமாக அதன் அரசியல் கருத்துக்களுக்கு மக்கள் ஆதரவைப் பெற முயன்று வருகிறது" என்பதையும் கூட அது வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது.

அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அறிவுறுத்துகிறது, முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது, ஸ்தாபக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கிறது என்ற உண்மையின் காரணமாக மட்டுமே SGP ஐ பிரத்யேக கண்காணிப்பில் வைப்பதை அது நியாயப்படுத்துகிறது. BfV அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது: “SGP இன் பிரச்சாரமானது அதன் வேலைத்திட்டத்தில், 'முதலாளித்துவத்தின்' பொதுவான தேய்வடைதலாக இருக்கும் இப்போது நிலவும் அரசு மற்றும் சமூக ஒழுங்குமுறைக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, குற்றஞ்சாட்டப்படும் தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக, சமூக ஜனநாயகத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்களுக்கு எதிராக, இடது கட்சிக்கு எதிராக [DIE LINKE] வழிநடத்தப்படுகிறது.”

முதலாளித்துவம் மற்றும் அதன் சமூக விளைவுகள் மீது எந்தவொரு சோசலிச விமர்சனத்தையும் ஒடுக்குவதை இரகசிய சேவை உத்தேசித்துள்ளது என்பதை “இடதுசாரி தீவிரவாதம்" என்ற அத்தியாயத்தின் பொதுவான அறிமுகம் தெளிவுபடுத்துகிறது.

"இடதுசாரி தீவிரவாதிகளைப் பொறுத்த வரையில் 'முதலாளித்துவ அமைப்புமுறையை' முற்றுமுழுதாக நிராகரிப்பது என்பது ஒரு பொருளாதார வடிவம் என்பதற்கும் அதிகமானது. அதாவது உள்நாட்டில் 'ஒடுக்குமுறை' மற்றும் வெளிநாடுகளில் 'ஆக்கிரமிப்பு' மூலமாக 'முதலாளித்துவ ஆட்சிக்கான' அடித்தளத்தை அவ்வமைப்பு முறை உத்தரவாதப்படுத்துகிறது. ஆகவே 'முதலாளித்துவம்' சமூக அநீதி, வீட்டுவசதிகள் 'சீரழிவு', போர்கள், வலதுசாரி தீவிரவாதம் மற்றும் இனவாதம், அத்துடன் சுற்றுச்சூழல் பேரழிவுகள் போன்ற அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்முரண்களுக்கும் அதுவே பொறுப்பாவதாக,” “இடதுசாரி தீவிரவாதிகளின்" “சித்தாந்த அடித்தளம்" காண்கிறது, இதனால் அது “'முதலாளித்துவ அமைப்புமுறையை ஒட்டுமொத்தமாக' நிராகரிக்கிறது,” என்று அந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

இரகசிய சேவையைப் பொறுத்த வரையில், முதலாளித்துவம் மீதான அதுபோன்றவொரு விமர்சனமானது, மில்லியன் கணக்கான மக்கள் அதை ஏற்றுக் கொள்கின்ற நிலையில், "நமது அரசு மற்றும் சமூக ஒழுங்கமைப்பின் மீதும், அவ்விதத்தில் தாராளவாத ஜனநாயகம்" மீதும் ஒரு தாக்குதலாக உள்ளது. “மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினை" தனது “முன்னணி தத்துவார்த்த அறிஞராக" அடித்தளத்தில் வைத்திருக்கும் அல்லது ஏற்றுக் கொண்டிருக்கும் யாரேனும் ஓர் ஆணோ பெண்ணோ, அல்லது "ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒடுக்கப்படுபவர்களின்" “புரட்சிகர வன்முறையை" கோட்பாட்டுரீதியில் “நியாயமானதாக" கருதும் எவரொருவரும், இரகசிய சேவையின் பார்வையில், ஒரு "இடதுசாரி தீவிரவாதியாக" மற்றும் "அரசியலமைப்பின் எதிரியாக" தெரிகிறார்.

இது, ஜேர்மனியின் நீண்டகால நாசகரமான வரலாற்று பாரம்பரியமான சோசலிச  கட்சிகளை ஒடுக்குவதற்குள் வருகிறது. 1878 இல், ஜேர்மன் சான்சிலர் ஒட்டோ வொன் பிஸ்மார்க் "சமூக ஜனநாயகத்தின் மனிதயினப் படுகொலை அபிலாஷைகளுக்கு எதிராக" இழிவார்ந்த சோசலிச-விரோத சட்டத்தை நிறைவேற்றினார், அது பன்னிரெண்டு ஆண்டுகள் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) சட்டவிரோத நிலைமைக்குள் தள்ளியது. நாஜி சர்வாதிகாரத்திற்கும், இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதர்களை நிர்மூலமாக்குவதற்கும் பாதையைத் திறந்து விடுவதற்காக 1933 இல், ஹிட்லர் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியையும் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியையும் நசுக்கினார். இப்போது கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அதன் உளவுத்ததுறை முகமைகளின் மாபெரும் கூட்டணி சோசலிச-விரோத சட்டத்தின் மூன்றாவது வடிவத்தைத் தயார் செய்து வருகிறது. ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) கொள்கையை ஏற்று வரும் அவர்கள், இந்த வலதுசாரி கட்சியை எதிர்க்கும் எவரொருவரும் சட்டவிரோதமாக்கப்படுவார்கள் என்பதைக் கொண்டு அச்சுறுத்துகின்றனர்.

AfD இன் முன்னணி பிரதிநிதிகள் வழமையாக புலம்பெயர்ந்தோர்க்கு எதிராக கிளர்ச்சி செய்தாலும், இனவாதத்தைத் தூண்டிவிட்டு, ஹிட்லரின் ஜேர்மன் இராணுவத்தைப் பெருமைபீற்றி, தேசிய சோசலிசத்தின் குற்றங்களைக் குறைத்துக் காட்டி வருகிறார்கள் என்றபோதும் கூட, BfV அறிக்கையில் "வலதுசாரி தீவிரவாதம்" குறித்த அத்தியாயத்தில் இக்கட்சி குறித்து ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது, AfD உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள அதன் வொல்கிஸ்ச்-இனவாத பிரிவு (völkisch-racist wing), புதிய வலது வலையமைப்பு மற்றும் வெளிநாட்டவர் விரோதம் கொண்ட பெஹிடா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.

துரிங்கியா மாநிலத்தின் AfD செய்தி தொடர்பாளர் Björn Höcke, வலதுசாரி தீவிரவாத அறிக்கைகள் வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக அக்கட்சியே இரண்டு ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையிலும், அவரைக் குறித்து அந்த அறிக்கையில் ஒன்றும் காணப்படவில்லை. வலதுசாரி சித்தாந்தவாதி Götz Kubitschek இன் “அரசு கொள்கைக்கான பயிலகம்”, Jürgen Elsässers இன் Compact சஞ்சிகை அல்லது வாரந்தார பத்திரிகை Junge Freiheit குறித்தும் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. Identarian இயக்கம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும், அது "சந்தேகத்திற்குரிய ஒன்றாக" மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

“இடதுசாரி தீவிரவாதம்" என்ற அத்தியாயத்தில், AfD பலமுறை குறிப்பிடப்படுகிறது — அதாவது, "இடதுசாரி தீவிரவாதிகள்" எனப்படுபவர்களால் அது பாதிக்கப்பட்ட ஒன்றாக குறிப்பிடப்படுகிறது! AfD க்கு எதிராகவோ, வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராகவோ போராடுபவர்கள் அல்லது அவர்களைக் குறித்து தகவல் சேகரிப்பவர்கள் "இடதுசாரி தீவிரவாதிகளாக" கணக்கில் வைக்கப்படுகிறார்கள்.

“ஏப்ரலில் கொலோன் நகரிலும், டிசம்பரில் ஹனோவரிலும், AfD இன் இரண்டு கட்சி மாநாடுகளுக்கு எதிரான போராட்டங்கள்,” BfV அறிக்கையில், “தீவிர இடது" உணர்விற்கான ஆதாரமாக மேற்கோளிடப்படுகின்றன. இதே இது "வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கும்" மற்றும் "வலதுசாரி தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்கள் அல்லது உண்மையான வலதுசாரி தீவிரவாதிகள் குறித்தும் மற்றும் அவர்களது கட்டமைப்புகள் குறித்தும் தகவல்" சேகரிப்பவர்களுக்கும் பொருந்துகிறது.

BfV அறிக்கையின் பெரும்பாலான பகுதிகள் ஏதோ AfD கட்சி தலைமையங்களில் எழுதப்பட்டதைப் போல தெரிகின்றன. பல பந்திகள் அதன் கருத்துகளுக்கு ஒத்ததாக உள்ளன. BfV இன் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் பல முறை முன்னணி AfD பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார் என்பதை உள்துறை அமைச்சகமே உறுதிப்படுத்தி உள்ளது. அந்த அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, மாஸன் ஆறாண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்றதில் இருந்து, CDU/CSU, SPD, பசுமைக் கட்சி, இடது கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) அரசியல்வாதிகளுடனும் மற்றும் AfD அரசியல்வாதிகளுடனும் "சுமார் 196” விவாதங்கள் நடத்தி உள்ளார்.

AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலான்ட் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஃபிரவ்க்க பிட்ரி (Frauke Petry) ஆகியோரும்  மாஸன்  இன் பேச்சுவார்த்தை கூட்டாளிகளில் உள்ளடங்குவர். பிட்ரியின் இன் முன்னாள் பணியாளரின் கருத்துப்படி, "BfV ஆல் AfD கண்காணிக்கப்படுவதை விரும்பவில்லை" என்பதை மாஸன் அவரே உறுதிப்படுத்தியதாகவும், அதுபோன்ற கண்காணிப்பை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாஸன் மறுத்தாலும் கூட, BfV இன் அந்த அறிக்கையில் AfD குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையானது, பிட்ரியின் சக கூட்டாளி சரியாகவே கூறியிருந்தார் என்பதையே அறிவுறுத்துகிறது.

ஒரு வலதுசாரி சூழ்ச்சி

கூட்டாட்சி அரசுதான் இரகசிய சேவைக்கு பொறுப்பாகவுள்ளது, இரகசிய சேவை நேரடியாக உள்துறை அமைச்சருக்கு பதிலளிக்கிறது, இவர் தான் BfV அறிக்கைக்கு முன்னுரை எழுதியவர். CDU, CSU மற்றும் SPD பாரிய கூட்டணியின் ஒப்புதல் இல்லாமல், இந்த அறிக்கை இந்த வடிவில் வந்திருக்க முடியாது. SGP ஐ தாக்குவது மற்றும் AfD ஐ ஆதரிப்பது என்ற முடிவு அரசின் உயர்மட்டங்களில் எடுக்கப்பட்டதாகும்.

இந்த மகா கூட்டணி, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் அதிகரித்தளவில் தீவிரப்பட்டு வருவதற்கு எதிர்வினையாற்றி வருகிறது, மிகப்பெரும் பெரும்பான்மையில் உள்ள இவர்கள் அதன் நிரந்தர சமூக நல வெட்டுக்கள், இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் ஒரு போலிஸ் அரசைக் கட்டியெழுப்பும் அதன் கொள்கையை நிராகரிக்கின்றனர். கடந்த செப்டம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், CDU, CSU மற்றும் SPD, 70 ஆண்டுகளில் அவற்றின் மிக மோசமான வாக்குகளைப் பெற்றன. கூட்டாட்சி நாடாளுமன்ற (Bundestag) தேர்தல்கள் இன்று நடத்தப்பட்டால், இந்த மகா கூட்டணி இப்போது பெரும்பான்மையைப் பெறாது.

இந்த நிலைமைகளின் கீழ், உத்தியோகபூர்வ அரசியல் தீவிர வலதுசாரி சக்திகளைப் பாதுகாக்கும் ஒரு நிரந்தர சூழ்ச்சி குணாம்சத்தை ஏற்கிறது.

கிட்டத்தட்ட 2013 இன் தொடக்கத்தில், அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, திரைக்குப் பின்னால் நடந்த பல மாதகால பேச்சுவார்த்தைகள், இராணுவவாதத்திற்கு பொறுப்பேற்பதில் உச்சத்தை அடைந்திருந்தன. முன்னணி அரசு அதிகாரிகள் "இராணுவக் கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக" அறிவித்ததுடன், ரஷ்யாவுடன் ஒரு கூர்மையான மோதலைத் தூண்டிய உக்ரேனிய வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தனர். ரஷ்ய எல்லை வரையில் நேட்டோ படைகளை நிலைநிறுத்துவதில் ஜேர்மன் பங்குபற்றி இருந்தது.

இம்முறை, இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் —ஒரு வரலாற்று சாதனையாக— ஆறு மாதங்களுக்கு நீடித்தது. CDU, CSU மற்றும் SPD 1945 க்குப் பின்னர் இருந்து மிக வலதுசாரி வேலைத்திட்டத்தின் மீது உடன்பட்டிருந்தன. அவை ஒரு விரிவார்ந்த மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் ஒரு போலிஸ் அரசு ஸ்தாபிக்கும் கொள்கையைத் தீர்மானித்தன. இராணுவச் செலவினங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படுமென எதிர்நோக்கப்படுகிறது, இதன் அர்த்தம் இராணுவ வரவு-செலவு திட்டக் கணக்கு அண்மித்து இரட்டிப்பாகிறது. இதற்கிடையே கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது மற்றும் ஜேர்மன் ஆயுதப் படையில் (Bundeswehr) அணுஆயுத தளவாடங்களைச் சேர்ப்பது ஆகியவையும் விவாதத்தின் கீழ் உள்ளன.

இராணுவ பலத்தைக் கொண்டு அதன் ஏகாதிபத்திய விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான ஆளும் வர்க்கத்தின் உத்தேசங்களுக்கு, கடந்த காலத்தின் குற்றகரமான அரசியலைக் குறைத்துக் காட்டி மீண்டும் புத்துயிரூட்ட வேண்டியிருக்கிறது. நாஜி குற்றங்கள் "வெற்றிகரமான ஆயிரம் ஆண்டு ஜேர்மன் வரலாற்றில் [வெறுமனே] பறவையின் எச்சம்" என்று AfD தலைவர் கௌலான்ட் நீண்டகாலத்திற்கு முன்னரே அறிவித்திருந்தார், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரும் இன்றைய மத்திய அரசின் ஜனாதிபதியுமான பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD), ஜேர்மன் "பக்கவாட்டில் இருந்து உலக அரசியலைக் குறித்து வெறுமனே கருத்துரைப்பதை விட வலிமையானது" என்று பிரகடனப்படுத்தினார். அரசியல்துறை விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர், “ஒவ்வொன்றுக்கும் நாம் தான் குற்றவாளி என்ற கருத்தை நீங்கள் கொண்டிருக்கும் வரையில் ஐரோப்பாவில் ஒரு பொறுப்பான கொள்கையைத் தொடர்வது சாத்தியமில்லை,” என்பதைச் சேர்த்துக் கொண்டார்.

ஆனால், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்பை எதிர்கொள்கிறது, இது இப்போது வர்க்கப் போராட்டத்தின் ஒரு தீவிரப்பாட்டுடன் பொருந்தி வருகிறது. SPD மற்றும் CDU தலைமையிலான அரசாங்கங்கள் இரண்டாலும் அடிமட்டத்திலிருப்பவர்களிடம் இருந்து மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சமூக மறுபகிர்வு செய்யப்பட்ட பின்னர், சமூக உறவுகள் சின்னாபின்னமாக கிழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மேற்கு ஐரோப்பாவில் மிகப் பெரிய மலவு-கூலி துறையை உருவாக்கி உள்ளது. இளைஞர்களால் வழமையாக ஒரு வேலையைக் காண முடியவில்லை; புதிய பணியாளர்களில் வெறும் 44 சதவீதத்தினர் மட்டுமே ஒரு நிரந்தர ஒப்பந்தத்தைப் பெறுகின்றனர். வறுமை வெடித்து பெருகுகின்றது. மறுபுறம், 45 மிகப் பெரிய செல்வந்தர்கள் ஏறத்தாழ மக்கள்தொகையில் பாதி ஏழைகள் கொண்டிருக்கும் செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

பல தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவ சமூகம் திவாலாகிவிட்டதை உணர்கிறார்கள், அவர்கள் ஒரு மாற்றீட்டை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். SGP இன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) ஏழு பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்திருந்த "கார்ல் மார்க்சின் 200 ஆண்டுகள்—மார்க்சிசத்தின் மெய்மை" (“200 Years of Karl Marx—The Actuality of Marxism,”) என்ற சொற்பொழிவுகள் ஓராயிர பார்வையாளர்களை ஈர்த்திருந்தன.

ஆளும் வர்க்கம், இந்த தீவிரமயப்படலுக்கு, சோசலிஸ்டுகளை ஒடுக்கியும் மற்றும் அதிவலது கொள்கைகளை ஏற்றும் 1930 களின் சர்வாதிகார கொள்கைகளுக்குத் திரும்புவதன் மூலமாக விடையிறுத்து வருகிறது. இந்த நெருக்கடி ஜேர்மன் முதலாளித்துவத்தின் நிஜமான நிறத்தை எடுத்துக்காட்ட அதன் "ஜனநாயக" முகத்திரையைக் கிழித்து வருகிறது.

நாஜி ஆட்சிக்கு முன்பிருந்த வைய்மர் குடியரசின் போது, இரகசிய சேவை, போலிஸ் மற்றும் நீதித்துறையும் ஈவிரக்கமின்றி சோசலிசவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பாளர்களை இன்னலுக்கு உள்ளாக்கி, நாஜிக்களைப் பலப்படுத்தின. 1923 இல், ஹிட்லர் ஓர் இரத்தந்தோய்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்காக ஒன்பது மாதங்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் (அங்கே தான் அவர் Mein Kampf எழுதினார்), நீதித்துறையோ Weltbühne இன் பதிப்பாசிரியர் Carl von Ossietzky ஐ இராணுவவாத எதிர்ப்புக்காக இரண்டு முறை நீண்டகாலத்திற்கு சிறையில் அடைத்தது. பின்னர் அவர் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இறுதியில், ஹிட்லர் மக்கள் இயக்கத்தின் மூலமாக அதிகாரத்திற்கு வரவில்லை, மாறாக குடியரசின் ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க்கைச் சுற்றி ஒன்றுகூடிய அரசு எந்திரத்திற்குள் நடத்தப்பட்ட ஒரு சூழ்ச்சியின் மூலமாக அதிகாரத்திற்கு வந்தார். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாஜிக்கள் கடுமையான தோல்வியை அடைந்ததுடன், நிதி திவால்நிலைமையை முகங்கொடுத்தனர். ஹிட்லர் தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டவுடன் நீதித்துறை, இரகசிய சேவை, போலிஸ் மற்றும் இராணுவம் அவருக்கு சுமுகமாக தம்மை அடிபணிய செய்து கொண்டன.

இந்த மகா கூட்டணியும் இரகசிய சேவையும் இப்போது இந்த பாரம்பரியங்களுக்குப் பின்னால் தான் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் இன்று அவை பெருந்திரளான ஒரு பாசிசவாத இயக்கத்தின் மீது தங்கியிருக்க முடியாது. AfD பரந்த பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படுகிறது. அதன் வலதுசாரி பிரச்சாரத்தை பரப்புவதற்கு ஆர்வமாக இருக்கும் அரசும், இந்த ஸ்தாபக கட்சிகளும் ஊடகங்களும் தான் இவ்வாறு உருவாக்குகின்றன. அதன் தலைவர்கள் பெருமளவுக்கு CDU, CSU, SPD இல் இருந்தும், இராணுவம், உளவுத்துறை சேவைகள், நீதித்துறை மற்றும் போலிஸில் இருந்தும் வந்துள்ளார்கள்.

தேர்தல் தோல்விக்கு இடையிலும் மகா கூட்டணியைத் தொடர்வது என்று தீர்மானித்ததன் மூலமாக, SPD திட்டமிட்டு AfD ஐ பலப்படுத்தி உள்ளது. கூட்டாட்சி தேர்தலில் AfD வெறும் 12.6 சதவீத வாக்குகளே பெற்றது என்றபோதினும், இப்போது அது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக தலைமை ஏற்றுள்ளது. அதன் அகதிகள்-விரோத கிளர்ச்சி, இந்த மகா கூட்டணியின் உத்தியோகபூர்வ கொள்கையாக மாறியுள்ளது, இதை அது அரசின் அதிகாரங்களை அதிகரிக்கவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுப்படுத்தி பேரினவாதத்திற்கு எரியூட்டவும் பயன்படுத்துகிறது.

இந்த வலதுசாரி சூழ்ச்சியில் BfV ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. அது இந்த வலதுசாரி சேற்றுநிலத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதிவலது ஜேர்மன் தேசிய கட்சி (NPD) ஒரு "அரசு விடயம்" எனும் அளவுக்கு நிறைய நிழலுலக BfV உளவாளிகளை அக்கட்சி அதன் தலைமையில் கொண்டுள்ளது என்ற அடித்தளத்தில் ஜேர்மனியின் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்னர் அதற்கு தடைவிதிக்க மறுத்தது. 2000 மற்றும் 2004 க்கு இடையே ஒன்பது புலம்பெயர்ந்தோரை மற்றும் ஒரு போலிஸ் பெண்மணியைக் கொன்ற தேசிய சோசலிஸ்ட் மறைமுக அமைப்பின் (NSU) நெருக்கமான வட்டாரங்களில், ஏழு டஜன் செயலூக்கமான BfV நிழலுலக உளவாளிகள் உள்ளடங்குவர். ஒரு படுகொலையின் போது ஒரு உளவாளியே கூட அந்த இடத்தில் இருந்தார், ஆனால் எதையும் பார்க்காததைப் போல கூறிக்கொண்டார். NSU எதிலிருந்து ஆதரவைப் பெறுகிறதோ அந்த துரிங்கிய உள்நாட்டு பாதுகாப்புத்துறை BfV வழங்கிய நிதியுதவிகளால் அமைக்கப்பட்டதாகும்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியைப் (SGP) பாதுகாப்போம்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்துள்ளதால் அது இந்த சூழ்ச்சியின் இலக்கில் வைக்கப்பட்டுள்ளது. SGP, ஸ்தாபக கட்சிகளின் அகதிகள்-விரோத கிளர்ச்சியையோ அல்லது நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலையோ ஏற்பதில்லை. அது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் பின்னால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்காக போராடி வருகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஒரு பிரிவாக, அது ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பின் பாரம்பரியத்தில் நிற்கிறது.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1930 களில் நாஜிக்களின் வளர்ச்சிக்கு எதிராக இடைவிடாது போராடியது. தேசிய சோசலிசம் குறித்த லியோன் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வும், அதன் விளைவுகள் குறித்த அவர் எச்சரிக்கைகளும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் நாஜிக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை எடுத்துக்காட்டி ஹிட்லருக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணிக்காக போராட மறுத்த ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராபத்தான கொள்கை மீதான அவர் விமர்சனமும் இப்போதும் கூட முற்றிலும் பொருத்தமாக இருப்பதுடன், அந்த விடயத்தில் எழுதப்பட்ட சிறந்த படைகளில் ஒன்றாக விளங்குகின்றன.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நாஜி இரகசிய போலிஸ் கெஸ்டாபோவினால் (Gestapo) கண்மூடித்தனமாக இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1937 இல், Gdansk நீதிமன்றம் ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில் பத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு நீண்டகால சிறைதண்டனை விதித்தது. ஆக்கிரமிப்பு பெல்ஜியம் மற்றும் பிரான்சில் சட்டவிரோத சோசலிச வேலைகளை மேற்கொண்டிருந்தவரும், அவுஸ்விட்ச் (Auschwitz) இன் விஷவாயு கூடங்களில் படுகொலை செய்யப்பட்டவரும், யூத பிரச்சினை மீது மார்க்சிச ஆய்வுகளை மேற்கொண்டவருமான ஆசிரியர் ஆப்ரஹாம் லியோன், நாஜிக்களால் பலியான ட்ரொட்ஸ்கிஸ்டுகளில் உள்ளடங்குவார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் வலதுசாரி தீவிரவாத கட்சி முதன்முதலில் உள்ளே நுழைந்ததுமே, ட்ரொட்ஸ்கிச இயக்கம் மீண்டும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்ற உண்மை, உத்தியோகபூர்வ அரசியலின் வலது நோக்கிய திருப்பத்தை அடிக்கோடிடுகிறது.

அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் என்றழைக்கப்படுவது பரப்பிவிடும் பொய்களுக்கு முரண்பட்ட விதத்தில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) முழுமையாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கிறது. எவ்வாறிருப்பினும், சமூகத்தின் பொருளாதார அடித்தளங்கள் தனிநபரினது மூலதன உரிமையின் இறுக்கிப்பிடியில் இருக்கும் வரையில், உடல் மற்றும் உயிரியல்ரீதியான பாதுகாப்பை மீறாமை, சட்டத்திற்கு முன்னால் சமத்துவம், மனசாட்சியின் சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம், தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம், இன்னும் இதர பிறவற்றிற்காக அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் உயிரற்றே கிடக்கும் என்பதோடு, அவற்றிற்கு எதிர்விதமாக திருப்பப்படும். நிஜமான ஜனநாயகத்தை அடைவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் முன்நிபந்தனையாகும்.

எதிர்வரும் அண்மைக்காலத்தில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி வீசி,  ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கவில்லை என்றால், மீண்டும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் செல்வதையும் மூன்றாம் உலக போரையும் தவிர்க்க முடியாது. இது, இருபதாம் நூற்றாண்டு பேரழிவுகளின் படிப்பினை மட்டுமல்ல, டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் மிகப்பெரும் வேகத்தில் அவற்றின் இராணுவ படைகளை விரிவாக்கியும், நடந்து வரும் போர்களைத் தீவிரப்படுத்தியும் புதிய போர்களுக்குத் தயாரிப்பும் செய்து வருகின்றன என்பதில் இது இயல்பாகவே எடுத்துக்காட்டப்படுகிறது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) மார்க்சிச பகுப்பாய்வு அதிகரித்தளவில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதால் BfV அதை இலக்கில் வைத்துள்ளது. சுரண்டல், சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, போர் மற்றும் வலதுசாரி தீவிரவாதத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பால் எச்சரிக்கை அடைந்துள்ள BfV உம் மற்றும் இந்த மகா கூட்டணியில் உள்ள அதன் எஜமானர்களும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) சோசலிச வேலைத்திட்டம் செல்வாக்கு பெறுவதில் இருந்து அதைத் தடுக்க விரும்புகின்றனர். அக்கட்சி "சமூக சமத்துவக் கட்சி" என்ற அதன் பெயரை "சோசலிச சமத்துவக் கட்சி" என்று மாற்றி கொண்டு, அவ்விதத்தில் அக்கட்சியின் பெயரிலேயே அதன் சோசலிச குறிக்கோள்களை வெளிப்படுத்துகிறது என்பதை ஓராண்டுக்கு முன்னேரே BfV அறிக்கை வெளிப்படையாக குறிப்பிடுகிறது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பல ஆண்டுகளாக ஜேர்மன் வரலாற்றின் திருத்தல்களையும் மற்றும் நாஜிகளுக்கு புத்துயிரூட்டுதலையும் எதிர்த்ததற்காக ஊடக கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. SGP மற்றும் IYSSE அதிவலது தீவிரவாத வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்த போது, ஊடகங்கள் கோப புயலைக் கட்டவிழ்த்து விட்டன.

பார்பெரோவ்ஸ்கி நாஜிக்கு வக்காலத்துவாங்கும் ஏர்ன்ஸ்ட் நோல்டவைப் பாதுகாத்ததுடன், ஹிட்லர் "வக்கிரமானவர் இல்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார். IYSSE இதை நேரடியாக ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையுடன் தொடர்புபடுத்தியது. “இருபதாம் நூற்றாண்டைக் குறித்த ஒரு புதிய சொல்லாடலை,” “ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைக் குறைத்துக் காட்டி நியாயப்படுத்தும் வரலாற்று பொய்மைப்படுத்தலை" அபிவிருத்தி செய்யாமல் ஜேர்மனியால் ஓர் இராணுவவாத கொள்கைக்குத் திரும்ப முடியாது என்பதை அது விவரித்தது.

பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சனம் மாணவர்களிடையே கணிசமானளவுக்கு ஆதரவைக் கண்டது. பல்வேறு மாணவர் பிரதிநிதி அமைப்புகள் அதனுடன் உடன்பட்டன. ஆளும் வட்டாரங்கள் எச்சரிக்கை அடைந்தன. பழமைவாத Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை, SGP ஐ “வம்புக்கிழுக்கிறது" என்று குற்றஞ்சாட்டியதுடன், அதன் "நடைமுறை தாக்கங்கள்" (effectiveness) குறித்தும் குறை கூறியது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு அந்த அதிவலது தீவிரவாத பேராசிரியரை ஆதரித்ததுடன், அவர் மீது விமர்சனம் வைப்பதை "அனுமதிக்க இயலாது" என்று அறிவித்தது. கூகுள் நிறுவனம், ஓராண்டுக்கும் அதிகமாக, ஜேர்மன் அரசு வட்டாரத்துடன் நெருக்கமாக கலந்தாலோசித்து, இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை, மிக குறிப்பாக உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்து வந்துள்ளது.

இடது கட்சி மற்றும் பசுமை கட்சியிடமிருந்து கோழைத்தனமான மவுனம் மட்டுமே வந்துள்ளது, அல்லது அவர்கள் பார்பெரோவ்ஸ்கியை மற்றும் இந்த மகா கூட்டணியின் நடவடிக்கைகளை ஆதரித்துள்ளனர். அவர்கள் இந்த வலதுசாரியின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள எதையும் செய்யவில்லை அல்லது —Tübingen நகரத்தின் பசுமைக் கட்சி நகரசபை தலைவர் போரிஸ் பால்மர், இடது கட்சி அரசியல்வாதிகள் சாரா வாகன்கினெக்ட் மற்றும் ஆஸ்கர் லாபோன்டைன் போன்றவர்கள்— அகதிகளுக்கு விரோதமான அதன் கூச்சலில் ஒத்துப்பாட இணைந்தனர்.

இடது கட்சியைப் பின்தொடர்பவர்கள் பலர் உள்ளடங்கலாக கல்வித்துறை "இடது" கூட, ஒரு சில பாராட்டத்தக்க விதிவிலக்குகள் தவிர்த்து, மவுனமாக உள்ளனர் மற்றும் இந்த வலதுசாரி தாக்குதலுக்கு முன்னால் மண்டியிட்டுள்ளனர். அகதிகளுக்கு எதிராக பார்பெரோவ்ஸ்கி பகிரங்கமாக கிளர்ந்தெழுந்த போதும் மற்றும் வலதுசாரி தீவிரவாத அரங்கிலிருந்து பல பிரபலங்கள் பங்கெடுத்த ஒரு விவாதக் குழு பேர்லினில் நிறுவப்பட்ட போதும் கூட இது மாறவில்லை.

நமது கட்சியை "இடதுசாரி தீவிரவாத" அமைப்பு என்று BfV வகைப்படுத்துவது, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் அதன் சோசலிச அரசியலை ஒடுக்குவதற்கான மற்றொரு முயற்சியாகும். இது SGP ஐ தான் குறி வைத்துள்ளது என்றாலும், சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருபவர்களையும் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கை அறிவுறுத்தும் எவரொருவரையும் இலக்கில் வைக்கிறது.

இந்த மகா கூட்டணி மற்றும் அதன் உளவுத்துறை முகமைகளது இத்தாக்குதலைக் கொண்டு SGP ஐ மிரட்ட முடியாது. இது மக்களின் மிகப் பெரிய பிரிவுகளிடையே மதிப்பிழந்துள்ள நிராகரிக்கப்படுகின்ற மக்கள்விரோத ஓர் அரசாங்கத்திடமிருந்து வருகிறது. இதற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க நமக்கு உரிமை உள்ளது. எம்மிடமுள்ள சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிவகைகள் மூலமாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே SGP இன் செல்வாக்கை அபிவிருத்தி செய்ய, நாம் நமது பணியைத் தொடர்வோம் மற்றும் நமது முயற்சிகளைப் பலப்படுத்துவோம். மற்ற விடயங்களோடு சேர்ந்து, அடுத்த இளவேனிற்கால ஐரோப்பிய தேர்தல்களில் பங்கெடுக்கவும் நாம் திட்டமிடுகிறோம்.

இடது கட்சி, SPD மற்றும் பசுமை கட்சியில் உள்ள அக்கறை மிகுந்த அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக வலதின் வளர்ச்சியை எதிர்க்க விரும்பும் அனைவரின் பக்கமும் நாம் திரும்புகிறோம் என்பதோடு, BfV இன் தாக்குதலுக்கு எதிராகவும் SGP ஐ பாதுகாத்தும் போராடுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். SGP மீதும் மற்றும் ஏனைய அனைத்து இடதுசாரி அமைப்புகள் மீதும் கண்காணிப்பை உளவுத்துறை சேவை கைவிட வேண்டுமென்றும், இந்த ஜனநாயக-விரோத வலதுசாரி விளைநிலம் கலைக்கப்பட வேண்டுமென்றும் நாங்கள் கோருகிறோம்.