ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Unsubmissive France summer school: Mélenchon invites the right wing

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் கோடை பள்ளி: மெலொன்சோன் வலதுசாரிகளை அழைக்கிறார்

By Anthony Torres
14 August 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் பெனாலா, மே தினத்தில் அமைதியான போராட்டக்காரர்களை அடித்ததைச் சுற்றி கடந்த மாதம் எழுந்த அவதூறின் போது, அடிபணியா பிரான்ஸ் (LFI), வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) மற்றும் நவ-பாசிசவாதிகளுடன் ஓர் அணியை உருவாக்கியது. போலிசின் தொடர் கட்டளைகளைப் பெனாலா மீறினார் என்பதுதான் அத்தாக்குதலில் இருந்த ஒரே பிரச்சினை என்று வலியுறுத்திய போலிஸ் கருத்துகளையே அடிபணியா பிரான்ஸ் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனும் எதிரொலித்தார். “அரசைப் பாதுகாப்பது மற்றும் குடியரசின் விதிமுறைகளை மதிப்பது என்று வருகையில், நாங்கள் வலதுசாரியுடன் சேர்ந்து நிற்கிறோம், இதை கூறுவதற்காக நான் வெட்கப்படவில்லை,” என்றார்.

போலிசுக்கான இந்த விசுவாசமான பிரகடனம் என்ன அடிக்கோடிடுகிறது என்பது இன்னும் அதிக தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளில் மக்ரோன் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மெலொன்சோன் LFI இன் கோடை பள்ளிக்கு ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), சமூக-ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் முன்னாள் PS ஜனாதிபதி வேட்பாளர் பெனுவா அமோனின் Génération.s கட்சி ஆகிவற்றுடன் குடியரசுக் கட்சியையும் வரவேற்று, வெளிப்படையாகவே வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு கரம் நீட்டி வருகிறார். LFI, PS, LR மற்றும் நவ-பாசிசவாத தேசிய பேரணி (முன்னர் தேசிய முன்னணி (FN) என்றிருந்த இப்போதைய Rassemblement national - RN) ஆகியவை பிரெஞ்சு இராணுவத்திற்கு பொதுவான ஆதரவை வழங்குகின்றன என்பதே இக்கூட்டணியின் அடித்தளமாக உள்ளது.

அடிபணியா பிரான்ஸின் கோடை பள்ளியில் குடியரசு கட்சியின் (LR) சார்பாக அதன் நிர்வாகிகள் Marianne Dubois (Loiret) மற்றும் Olivier Marleix (Eure-et-Loir) ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்வர். ஒரு வட்டமேசை விவாதத்தில் Dubois பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசுவார், அதேவேளையில் Marleix சர்ச்சைக்குரிய பொறியியல் நிறுவனம் Alstom ஐ தனியார்மயப்படுத்துவது குறித்து விவாதிப்பார். குடியரசுக் கட்சி தலைவர் லோரன்ட் வோக்கியே க்கு நெருக்கமானவரும், FN/RN க்கு நெருக்கமான தொடர்புகளின் நீண்டகால ஆலோசகருமான Dubois 2012 இல் இருந்து நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவப் படைகளது குழுவில் இருந்து வருகிறார். அப்பெண்மணி இராணுவத்தில் குடிமக்களை ஈடுபடுத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் திட்டங்களுக்கான "இராணுவ மற்றும் குடிமக்கள்" திட்டத்தை, அதாவது கட்டாய இராணுவச் சேவையை நெறிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.

அடிபணியா பிரான்சின் பிரச்சார இயக்குனர் Manuel Bompard குடியரசுக் கட்சி அழைக்கப்பட்டதை நியாயப்படுத்தி Le Figaro க்குக் கூறுகையில், “இமானுவல் மக்ரோனின் கொள்கையை முகங்கொடுக்கையில், நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அரசியல் எதிர்ப்பை வழிநடத்தும் பலம் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திற்கும் தளம் அமைத்துக் கொடுக்கப்படும் என்பதை காட்டுவதே குறிக்கோளாகும்,” என்றார்.

அடிபணியா பிரான்ஸ், மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படையாகவே வலதுசாரி முன்னோக்குகளுடன் பிணைக்க விரும்புகிறது என்பதே Bompard இன் அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட பிரான்சின் பிரதான சமூக-ஜனநாயக அரசாங்க கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் கடந்த ஆண்டு தோல்விக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சியின் தொங்குதசைகளும் மற்றும் அதன் பல்வேறு ஸ்ராலினிச மற்றும் போலி-இடது கூட்டாளிகளும், மக்ரோனின் மீது ஒழுங்கமைந்த இடது பக்கத்திலான அரசியல் எதிர்ப்பு எழுவதைத் தடுக்க பெரும்பிரயத்தனத்தில் உள்ளன.

சோசலிஸ்ட் கட்சி நிர்வாகியும் கட்சி செய்தி தொடர்பாளருமான Boris Vallaud அதில் கலந்து கொள்ளவிருக்கிறார், அத்துடன் மெலோன்சோன் சோசலிஸ்ட் கட்சியில் இருந்த அக்காலத்திய அவரது முன்னாள் கூட்டாளியும், சோசலிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்றவாதியுமான Emmanuel Maurel லும் கலந்து கொள்வார், முன்மொழியப்பட்டுள்ள அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான சுதந்திர-வர்த்த உடன்படிக்கை குறித்து இவர்கள் விவாதிப்பார். Génération.s கட்சியின் நிர்வாகி Régis Juanico மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி Stéphane Peu ஆகியோர் அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதிப்பர். மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் கட்சியின் (LRM) ஓர் உறுப்பினரான Sonia Krimi, புலம்பெயர்ந்தவர்களை வரவேற்பதில் "அதிக மனிதநேயம் மற்றும் கருணைக்கு" கோரியதால் ஒரு "அதிருப்தியாளராக" கூறப்படும் இவர், கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுப்பதற்கு முன்னதாக கலந்து கொள்வதற்கு சிறிது கருதி வந்தார்.

LFI நிர்வாகி Danièle Obono, பெனாலா விவகாரத்தில் மக்ரோனை விமர்சிப்பதற்காக நவ-பாசிசவாதிகளை வரவேற்றபோது எழுந்ததைப் போல, ஒரு புதிய கண்டனத்தைத் தவிர்ப்பதற்காக LFI நவ-பாசிசவாதிகளை அழைக்கவில்லை, ஆனால் இது வெறும் ஒரு தந்திரோபாய முடிவு தான். மரீன் லு பென்னைச் சுற்றிய நவ-பாசிசவாதிகளின் குறிப்பிடத்தக்க அடுக்குகள் நீண்டகாலமாகவே "குடியரசுக்காரர்களின்" மதிப்பை பெறுவதற்கு ஆர்வமுடன் உள்ளனர். ஆகவே லு பென் இயக்கத்தின் பிரிவுகளுக்காக பெயரளவிற்கான ஒரு "குடியரசு" மறுகுழுவாக்கமும் கூட LFI ஐ உள்ளிணைப்பதற்குத் தயாரிப்பு செய்யக்கூடும்.

மெலோன்சோன் தயாரிப்பு செய்து வரும் கூட்டணியின் உண்மையான இயல்பு என்னவாக இருந்தாலும், வலதை நோக்கி அவர் கரம் நீட்டி வருவதைத் தொழிலாளர்கள் ஓர் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும்: LFI தலைமையின் இந்த ஜனரஞ்சகவாத அரசியல், தொழிலாள வர்க்கத்திற்கு மிகக் குரோதமானது என்பதை நிரூபிக்கும்.

அடிபணியா பிரான்சின் கிரேக்க கூட்டாளி சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி") கிரீஸில் பதவியேற்று அதிவலது சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் ஓர் கூட்டணி அரசாங்கம் உருவாக்கி மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அது ஒரு பிற்போக்குத்தனமான சிக்கன கொள்கையைத் திணித்து வருகிறது. சிரிசா ஒரு பாரிய சமூக பின்னோக்கி திரும்புதலை மேற்பார்வையிட்டு வரும் அதேவேளையில், அகதிகளுக்குத் தடுப்புக்காவல் முகாம்களையும் கட்டியெழுப்பி வருகிறது மற்றும் வேலைநிறுத்தத்திற்கான அரசியலமைப்பு உரிமையையும் தாக்கி வருகிறது.

பிரான்சில், கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலின் போது LFI இன் சொந்த வாக்காளர்களில் பெரும்பான்மையினர் முதலீட்டு வங்கியாளர் மக்ரோன் அல்லது லு பென் இருவருக்கும் வாக்களிக்க மறுத்தபோதும், LFI எந்தவொரு நிலைப்பாடும் எடுக்க மறுத்தது.

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, அவ்விரு பிற்போக்கு வேட்பாளர்களில் யார் தேர்தலை ஜெயித்தாலும் அவருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டாம் சுற்றைச் செயலூக்கத்துடன் நிராகரிப்பதற்கு அழைப்பு விடுத்த ஒரே கட்சியாக இருந்தது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்தின. முதலாளித்துவத்தின் முன்னொருபோதும் இல்லாத நெருக்கடி மற்றும் பிரான்சில் மக்ரோனுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபம் உட்பட தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு இடையே, போலி-இடது கட்சிகள் வலது முகாமுக்குள் நகர்ந்து வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியை, குட்டி-முதலாளித்துவ ஜனரஞ்சகவாத போலி-இடதுக்கு ஒரு ட்ரொட்ஸ்கிச மாற்றீடாக கட்டியெழுப்புவதே முக்கிய பிரச்சினையாகும்.

மெலோன்சோனின் 2014 புத்தகம் மக்களின் சகாப்தம் (The Era of the People) பிரசுரிக்கப்பட்டதற்குப் பின்னர், அவர் வலதை நோக்கிய ஒரு தொடக்கத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறார் என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. WSWS எழுதியது, “முதலாளித்துவத்தின் மரணஓலமும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட போராட்டமும் குறித்த அவர் பயம் தான் அவரை வலதின் முகாமை நோக்கி திரும்புவதற்கு உந்தி வருகிறது என்பதை மெலொன்சோனின் நூல் குறித்த ஓர் ஆய்வு தெளிவுபடுத்துகிறது.” மெலொன்சோனைச் சுற்றிய நடுத்தர வர்க்க சக்திகள் குறித்து WSWS தொடர்ந்து குறிப்பிட்டது: “முதலாளித்துவ 'இடது' கட்சிகள் மதிப்பிழப்பதைக் கண்டு பீதியுற்று, உலக போர் மற்றும் பொருளாதார பொறிவைத் தவிர்க்கவியலாது என்பதை வஞ்சகமான பாணியில் ஏற்றுக் கொண்டு, பெரும்பிரயத்தனத்துடன் தொழிலாளர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க, அவர்கள் விஷமத்தனமாக சோசலிசம் மடிந்துவிட்டது என்று வலியுறுத்துகிறார்கள். இது மற்றொரு அரசியல் மோசடி.”

சோசலிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு பதிலாக, மெலொன்சோன் ஒரு "மக்கள் புரட்சிக்கு", அதாவது, சோசலிசமும் இல்லாத மற்றும் தொழிலாள வர்க்க தலைமையும் இல்லாத ஒரு தேசியவாத மற்றும் ஒருவித "முதலாளித்துவ-எதிர்ப்பு" புரட்சிக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் அதுபோன்றவொரு முன்னோக்கு, பிரான்ஸ் வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் அதிவலது தேசியவாத இயக்கத்துடன் தொடர்புபட்டது. உண்மையில் மக்களின் சகாப்தம் நூல் எழுதுகையில் லு பென் உடனான மற்றும் Claude Guéant போன்ற உயர்மட்ட குடியரசுக் கட்சி நிர்வாகிகள் உடனான மெலொன்சோனின் சந்திப்புகளும் தொடர்புகளும் குறித்து பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.

மெலொன்சோன் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியை ஊக்குவிக்கும் பத்திரிகையாளர் எரிக் சிமோரையும் பாதுகாத்துள்ளார். ஐரோப்பிய பாசிசத்தின் இராணுவவாத மற்றும் இனப்படுகொலை கொள்கைகளில் விச்சி எந்தளவுக்கு பங்கெடுத்திருந்தது என்பதை முதன்முதலில் தெளிவாக அம்பலப்படுத்தி இருந்த, விச்சி குறித்து எழுதுவதில் புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்றாளர் ரோபர்ட் பாக்ஸ்டனை சிமோர் அடுத்தடுத்து கண்டிக்கும் அளவுக்குச் சென்றவராவார்.

அக்குற்றங்கள் பாரபட்சமாக அரேபியர்களால் நடத்தப்பட்டதாக வலியுறுத்தியதற்காக சிமோர் விமர்சிக்கப்பட்டதும், மெலொன்சோன் கூறினார்: “சிமோரை எனக்குத் தெரியும். அவர் தவறு செய்திருப்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் ஒரு இனவாதி இல்லை. அவர் ஒரு சிறந்த புத்திஜீவி, ஆனால் மற்ற புத்திஜீவிகள் அனைவரையும் போலவே, அவரும் பிடிவாதத்துடன் இருக்கிறார்.” இதற்குப் பின்னர், சிமோரின் நிலைப்பாட்டுடன் மெலொன்சோன் தன்னை நிறுத்திக் கொண்டதுடன், அந்த இனப்படுகொலையில் பிரான்ஸ் சம்பந்தப்பட்டிருந்ததைக் கடந்த ஆண்டு மறுத்தார்.

இப்போதோ, பிரான்சில் மக்ரோனும் மற்றும் உலகெங்கிலும் இதேபோன்ற அரசாங்கங்களும், குறிப்பாக அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகமும் திணித்துள்ள சமூக வெட்டுகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கோபத்திற்கு இடையே, மெலொன்சோன் மற்றும் அவர் பரிவாரங்களை மீண்டும் நடுக்கம் தொற்றி வருகிறது. வலதிற்கு LFI அழைப்பு விடுத்திருப்பதானது, LFI, PS மற்றும் அவற்றின் போலி-இடது துணை அமைப்புகளான பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்றவற்றின் சமூக அடித்தளத்தை உருவாக்குகின்ற செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அடுக்குகளது அரசியல் சிதைவின் முன்னேறிய கட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்திற்கும் மற்றும் மெலொன்சோனைச் சுற்றிய பிற்போக்குவாதிகளின் தேசிய ஜனரஞ்சகவாதத்திற்கும் இடையிலான போராட்டமே, இப்போது தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற தொழிலாள வர்க்க போராட்டங்களில் தீர்க்கமான பிரச்சினையாக இருக்கும்.