ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Greek Prime Minister Tsipras claims social cuts over as Syriza prepares more austerity

சிரிசா கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து வரும் நிலையில், கிரேக்க பிரதம மந்திரி சிப்ராஸ் சமூக வெட்டுக்களுக்கு முறையிடுகிறார்

By Alex Lantier
22 August 2018

பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பிணையெடுப்பு திட்டத்திலிருந்து அது வெளியே வந்திருப்பதை அவரது சிரிசா (“தீவிர இடது கூட்டணி") அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புதிய விடியல் என்று நேற்று புகழ்ந்துரைத்தார். அந்த உரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் பொய்மூட்டையாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக, 2015 இல் அது தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பதில் சிரிசா ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளதையும், வரவிருக்கும் தசாப்தங்களில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க அது இப்போது சூளுரைத்திருப்பதையும் அவர் மூடிமறைக்க முயன்றார்.

கிரீஸின் நாசகரமான, பத்தாண்டுகளாக நீண்ட சிக்கன நடவடிக்கைப் பயணம் நிறைவடையும் நெருக்கத்திற்கு வந்துவிட்டதாக வாதிடுவதற்கு, சிப்ராஸ், வீராவேசத்துடன் ஹோமர் சாகச பயணத்தின் கதாநாயகன் Ulysses இன் பிறந்த இடமான இத்தாகா (Ithaca) ஐ தேர்ந்தெடுத்தார். “கிரீஸ் 2010 க்குப் பின்னர் இருந்து அதன் நவீன சாகசப் பயணத்தைக் கடந்து வந்துள்ளது,” என்றார். “ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாக, ஒரு நாட்டில் அமைதி காலத்திலேயே முன்னொருபோதும் இல்லாத விடயங்கள் நிகழ்ந்துவிட்டன. நாம் நமது தேசிய செல்வ வளத்தில் 25 சதவீதத்தை இழந்துவிட்டோம். 10 இல் மூன்று பேர் வேலைவாய்ப்பின்றி இருந்தனர். இளைஞர்களில் 10 இல் ஆறு பேர் அவ்விதத்தில் இருந்தனர். 65 பில்லியன் யூரோ சிக்கன நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்முறையும் ஒடுக்குமுறையும் அன்றாட வாழ்வின் பாகமாக மாறியிருந்தன.”

இருப்பினும் ஒரு "புதிய நாள்" பிறந்தது என்று பின்வருமாறு அவர் வாதிட்டார்: “மக்கள், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வரலாற்று முடிவை எடுத்தார்கள்: நாட்டைக் கரடுமுரடாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த வழிநடத்தியவர்களிடம் இருந்து அதை புதிய மாலுமிகளிடம் ஒப்படைத்தார்கள். நாம் இந்த பெரும் சுமையான பொறுப்பை ஏற்றோம். … இந்த பாதைக்காக போராடியவர்கள் அருகே நின்று பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் குரலின்றி, நம்பிக்கையின்றி, மறைந்திருக்கவில்லை. வழிநடத்துவதில் அவர்கள் நம்மோடு சேர்ந்து நமக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். கடுமையான நேரங்களில், அவர்கள் அதை உறுதியாக பிடித்திருந்தார்கள்” என்றார்.

சிப்ராஸ் அவருக்கும் மற்றும் ஹோமரின் வீரக்காவிய கதாநாயகனுக்கும் இடையே வரைந்த முட்டாள்தனமான ஒப்பீட்டில் ஒரேயொரு ஒற்றுமை உள்ளது. Ulysses கிரேக்க இராணுவத்தை கோட்டைக்குள் நுழைக்க மரக்குதிரைகளை வடிவமைத்து வஞ்சகமாக அந்நகரைச் சூறையாடினார், ஆனால் சிப்ராஸோ பொய்கள் மற்றும் துரோகம் மூலமாக பிரதம மந்திரி மாளிகையில் நுழைந்து, வங்கிகளின் நலன்களுக்காக கிரீஸைச் சூறையாட அவர் பதவியைப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை புரிந்துணர்வை இரத்து செய்வது என்ற அவர் வாக்குறுதியின் அடிப்படையில் ஜனவரி 2015 இல் சிப்ராஸ் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் சரியாக நேரம் பார்த்து அவற்றை கைவிட்டார். அவர் பதவியேற்று வெறும் ஒரு சில வாரங்களிலேயே புரிந்துணர்வைப் பேணுவதற்கான ஒரு சூளுரையில் கையெழுத்திட்டதுடன், பின்னர் சிக்கன நடவடிக்கை மீது ஜூலை 2015 இல் அவரே அழைப்பு விடுத்திருந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் பாரியளவில் "வேண்டாம்" வாக்குகளைப் பெற்றதையும் காலடியில் இட்டு மிதித்தார். சிரிசாவுக்கு "ஆம்" வாக்குகள் கிடைக்கும் என்றும், அது பதவியிலிருந்து இறங்கி, கூடுதல் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான அல்லது யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியும் ஒரு வலதுசாரி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதையும் அது எதிர்நோக்கி இருந்தது.

இதற்கு மாறாக, 61 சதவீத பெருவாரியான “வேண்டாம்" வாக்குகளைப் பெற்றதும் அவற்றை ஏளனமாக அவமதித்து, கிரேக்க வங்கிகளும் சொத்துடைமை வர்க்கங்களும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பலமான யூரோ செலாவணியை அணுகுவதைத் தக்க வைப்பதற்குப் பிரதிபலனாக பத்து பில்லியன் கணக்கான யூரோ புதிய சமூக வெட்டுக்களைத் திணிக்கும் பொறுப்பு சிப்ராஸிற்கு கொடுக்கப்பட்டது.

தொழிலாளர்களை நோக்கிய சிரிசாவின் விரோதம் முன்பினும் அதிகமாக பட்டவர்த்தனமாக, ஆணவத்துடன் உள்ளது. அது ஜனவரியில் ஒப்புதல் முத்திரை குத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தின் "பன்முக-சட்டமசோதா" இல் பில்லியன் கணக்கான ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் அரசு சொத்துக்களை அடிமட்ட விலையில் தனியார்மயமாக்குவதை மட்டும் உள்ளடக்கி இருக்கவில்லை. அது, நாஜி ஆக்கிரமிப்பின் கீழ், அத்துடன் 1967-74 சிஐஏ-ஆதரவிலான இராணுவத் தளபதிகளின் ஆட்சியின் கீழ், கிரீஸ் அறியப்பட்டிருந்த பெருவணிகங்களின் தடையற்ற சர்வாதிகாரத்திற்கு ஒருவித பாதுகாப்பாக கிரீஸின் 1975 அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு உரிமையான வேலைநிறுத்தத்திற்கான உரிமையையும் மட்டுப்படுத்தியது.

சிரிசா யேமனுக்கு எதிரான சவூதி அரேபியாவின் அமெரிக்க-ஆதரவிலான இரத்தந்தோய்ந்த போருக்கு ஆயுதங்களையும் அனுப்புவதோடு, சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏகியன் கடல் வழியாக கிரீஸிற்கு தப்பி வரும் அகதிகளை அடைத்து வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டுமிராண்டித்தனமான தடுப்புக்காவல் முகாம்களையும் செயல்படுத்தி வருகிறது.

சிப்ராஸ் பேசிக் கொண்டிருந்த சமயத்திலும் கூட, கிரீஸில் பேரழிவுகரமாக தீப்பிடிக்கும் பருவகாலத்திற்கு ஏற்ப அதிகாரிகள் எந்த திட்டமும் தயாரிக்கத் தவறியதன் மீது மக்கள் கோபம் அதிகரித்து கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை திட்டங்கள் கிரேக்க தீயணைப்பு வீரர்கள் மீது வரவுசெலவு திட்டக்கணக்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வெட்டுக்களைத் திணித்த பின்னர், மாட்டியில் ஏற்பட்ட ஜூலை 23 காட்டுத் தீயில் குறைந்தபட்சம் 92 பேர் உயிரிழந்தனர். சிப்ராஸின் பாதுகாப்பு அமைச்சர், அதிவலது சுதந்திர கிரேக்க கட்சியின் பேனொஸ் கமெனொஸ், மாட்டியில் வந்திறங்கிய போது பெரும் வெறுப்புக் கூச்சலை எதிர்கொண்டதுடன், அந்த இறப்புகளுக்கு மாட்டியில் வசித்தோர் உரிமம் இன்றி கட்டுமானங்களை மேற்கொண்டிருந்ததே காரணமென பழிசுமத்தினார்.

இப்போது ஐரோப்பிய ஒன்றிய கடன் பிணையெடுப்பு முடிந்திருப்பதானது ஒரு புதிய பொற்காலத்தின் தொடக்கத்தை அர்த்தப்படுத்துவதாக சிப்ராஸ் வாதிட்டார், ஆனால் இது நேரடியாக தனியார் கடன் சந்தைகளில் இருந்து கிரீஸ் கடன் வாங்குவதை மீண்டும் தொடங்கி வைக்கும். அவர் கூறினார், “சிக்கன நடவடிக்கைகள், பொருளாதார பின்னடைவு மற்றும் சமூக மக்கள்தொகை குறைப்பு ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு இறுதியாக நிறைவடைந்துள்ளது. நம் நாடு, ஒரு வழமையான ஐரோப்பிய நாட்டைப் போலவே, எந்தவித புற நிர்பந்தமும் இல்லாமல், அதன் சொந்த நல்வாழ்வை மற்றும் அதன் எதிர்காலத்தை அதுவே தீர்மானிப்பதற்கான அதன் உரிமையை மீண்டும் பெற்றுள்ளது,” என்றார்.

இது இன்னும் அதிகமான பொய்யுரையாகும். கிரீஸின் தொழிலாளர்களும் இளைஞர்களும் சிரிசாவுக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள்வதன் மூலமாகவும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகரித்தளவில் வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களுக்கு அவர்களின் கிரேக்க சகோதர சகோதரிகளை ஆதரிக்குமாறு முறையிடுவதன் மூலமாகவும் மட்டுமே கடன் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க முடியும்.

சிரிசா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் படுமோசமாக சிப்ராஸை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக அவை சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதைப் புகழ்ந்தும், அதையொரு முன்மாதிரியாகவும் முன்வைத்த அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரிட்டனில் உள்ள சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளின் ஒட்டுமொத்த அடுக்கையும் அம்பலப்படுத்தி உள்ளன. வங்கிகளுக்கு நூறு பில்லியன் கணக்கான யூரோவைத் தொடர்ந்து கிரீஸ் திரும்பச் செலுத்தும் என்று இப்போது சிரிசா சூளுரைத்து வருகிறது.

ஒரு மிகச் சிறிய பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், கிரீஸில் சமூக நிலைமைகள் படுமோசமாக உள்ளன. தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள் & வியாபாரிகளின் ஹெலெனிக் சம்மேளனம் (GSEVEE) சமீபத்தில் பின்வருவதைக் கண்டறிந்தது:

கிரேக்க இளைஞர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள்;

51 சதவீத குடும்பங்கள் ஓய்வூதியங்களைச் சார்ந்துள்ளன;

20 சதவீத வேலைவாய்ப்பின்மை, நீண்டகால வேலைவாய்ப்பின்மையாக 75 சதவீத வேலையின்மை உள்ளன.

34.2 சதவீத கிரேக்க குடும்பங்கள் ஆண்டுக்கு 10,000 யூரோவுக்கும் குறைவான தொகையில் வாழ்கின்றன;

62.4 சதவீத கிரேக்க குடும்பங்கள் 2017 இல் வருவாய் வீழ்ச்சியை அறிவித்தன.

அண்மித்து ஒரு தசாப்த காலமாக ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகள் மூலமாக வழங்கப்பட்ட 288 பில்லியன் யூரோ கிரீஸிற்கு உதவவோ அல்லது அதன் பொருளாதாரத்தில் முதலீடு செய்யவோ செல்லவில்லை. அதற்கு பதிலாக, அது வங்கிகளுக்கும் மற்றும் காலங்கடந்து சென்று கொண்டிருந்த கிரீஸின் கடன்களுக்கும் பணத்தைப் பாய்ச்ச செலவிடப்பட்டன. மீண்டும் அந்நாட்டின் தேசிய கடன் 2018 இன் இரண்டாம் காலாண்டில் 1.6 பில்லியன் யூரோ அதிகரித்து, 345.3 பில்லியன் யூரோவை எட்டி உள்ளதாக கிரீஸின் பொதுக் கணக்கு அலுவலகம் ஆகஸ்ட் 17 இல் தகவல் வெளியிட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இல் தாங்கொணாதளவில் 181 சதவீதமாகும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகளும் விடாப்பிடியாக கடன் நிவாரணத்தை எதிர்க்கின்றன.

இதற்கு பதிலாக சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிணையெடுப்பிலிருந்து வெளியேறும் ஒரு திட்டத்தைத் திட்டமிட்டன, இது தலைமுறை தலைமுறைக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கிறது. கடன் சேவைகளுக்காக கிரீஸ் அதன் பொருளாதார வெளியீட்டில் 2022 வரையில் குறைந்தபட்சம் 3.5 சதவீதத்தையும், 2060 வரையில் 2.2 சதவீதத்தையும் அர்பணிக்க வேண்டியிருக்கும்—இது பில்லியன் கணக்கான யூரோக்களைக் கிரீஸின் நலிந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக ஐரோப்பிய நிதியியல் செல்வந்தத் தட்டுக்களின் பைகளுக்குத் திருப்பி விடுகிறது.

வாஷிங்டன் போஸ்டில் இத்திட்டத்தை விவரித்து அமெரிக்க பொருளாதார நிபுணர் Matt O’Brien எழுதுகையில், “இதுதான் சரி: இன்னும் நான்கு தசாப்தங்களுக்குச் சிக்கன நடவடிக்கை. இதற்குப் பின்னர் கிரீஸின் பொருளாதாரம் 2030 வரை, அது 2008 இல் இருந்த நிலைக்குத் திரும்ப வரவே முடியாது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.” “நீங்கள் முன்னொருபோதும் பாத்திராத போர் அல்லது புரட்சி என்ற விதத்தில் மிகப்பெரிய பொருளாதார தோல்விகளில் ஒன்றாக" கிரீஸைக் குறிப்பிட்ட அவர், “போரால் நாசமாக்கப்பட்ட அளவுக்கு மிகவும் நலிந்த ஒரு பொருளாதாரத்தைத் தான் ஐரோப்பா ஒரு வெற்றியாக குறிப்பிடுகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க பூர்ஷூவாவின் பலம் வாய்ந்த பிரிவுகளும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றன. நேற்று கிரீஸ் வங்கி ஆளுநர் யானிஸ் ஸ்ரோனாரஸ் Xinhua க்கு கூறுகையில், “நாம் நமது கடமைப்பாடுகளை முழுமையாக மதிக்கிறோமா, நமக்கு கடன் வழங்கியவர்களிடம் நாம் ஒப்புக் கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துகிறோமா என்பதை, முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார். கிரேக்க மக்கள் "இன்னும் பல ஆண்டுகளுக்கு நிதி கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள" வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.