ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China and Russia strengthen ties to counter US threats

அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்க்க சீனாவும் ரஷ்யாவும் அவற்றின் உறவுகளைப் பலப்படுத்துகின்றன

By Peter Symonds
13 September 2018

செவ்வாயன்று விளாடிவொஸ்டொக்கில் சந்தித்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் அவரது ரஷ்ய சமதரப்பான விளாடிமீர் புட்டினும், அமெரிக்காவை எதிர்கொள்ளும் நோக்கில் மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டுறவை அதிகரிக்க சூளுரைத்தனர்.

ட்ரம்ப் நிர்வாகம் சீன பண்டங்கள் மீது இன்னும் 200 பில்லியன் டாலர் தீர்வை வரி விதிக்க தயாரிப்பு செய்து கொண்டே, சீனாவுக்கு எதிரான அதன் வர்த்தக போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதுடன், அதேவேளையில் ரஷ்யா மீது கூடுதலாக தடையாணைகளை விதித்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பென்டகனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயமானது, அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் பிரதான ஒருங்குவிப்பில் இருப்பது பயங்கரவாதமல்ல, வல்லரசு போட்டியே என்று பிரகடனப்படுத்தியது. அது சீனா மற்றும் ரஷ்யாவை "திரித்தல்வாத சக்திகளாக"—அதாவது அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இப்போதிருக்கும் "சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கு" ஓர் அச்சுறுத்தலை எதிர்நிறுத்தும் நாடுகளாக முத்திரை குத்தியது.

புட்டின் ஆகட்டும் அல்லது ஜி ஆகட்டும் அமெரிக்காவையோ அல்லது ட்ரம்பையோ பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றாலும், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பலமான உறவுகள் தண்டிக்கும் வகையிலான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஒரு எதிர்நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகத்தையும் வைக்கவில்லை. வெளிப்படையாக வாஷிங்டனைச் சுட்டிக்காட்டும் ஒரு குறிப்பில், ஜி அறிவிக்கையில், "ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக பாதுகாப்புவாத கொள்கையை எதிர்க்க" இவ்விரு நாடுகளும் கூடி இயங்கும் என்று அறிவித்தார்.

இந்தாண்டில் அவர் புட்டினை மூன்று முறை சந்தித்திருப்பதாகவும், இரண்டு நாடுகளும் "சர்வதேச விவகாரங்களில் ஒரே மாதிரியான அல்லது ஒரே நிலைப்பாடுகளைக்" கொண்டிருப்பதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர் அறிவிக்கையில், சீன-ரஷ்ய கூட்டுறவானது "உலகளாவிய அளவில் ஸ்திரமின்மை மற்றும் அனுமானிக்கவியலாத நிலைமைகள் அதிகரித்து வரும் பின்புலத்தில் முன்பினும் அதிக முக்கியத்துவத்தைப் பெற்று" வருவதாக தெரிவித்தார்.

புட்டின் அறிவிக்கையில், ஜி உடனான அவர் பேச்சுவார்த்தைகள் "ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையே விரிவான பங்காண்மை மற்றும் மூலோபாய கூட்டுறவை" விரிவாக்க பாதை வகுத்துள்ளதாக அறிவித்தார். அவ்விரு தலைவர்களும் "இராணுவ-தொழில்நுட்ப கூட்டுறவு" குறித்து விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, “கொரிய தீபகற்ப நிலைமையில் ஓர் அரசியல் மற்றும் இராஜாங்க தீர்வுக்கான" அவசியம் மீது அவை கொண்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டங்களைக் குறிப்பிட்ட புட்டின், வட கொரியாவுடனான உறவுகளை இயல்புக்குக் கொண்டு வருமாறு வாஷிங்டனை வலியுறுத்தினார்.

3,000 க்கும் அதிகமான சீன துருப்புகள், 30 சாதாரண போர் விமானங்களுடன், சேர்பியாவில் வொஸ்டொக் என்றறியப்படும் மிகப்பெரிய ரஷ்ய இராணுவ ஒத்திகையில் இணைந்தபோது, ஜி மற்றும் புட்டினின் சந்திப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவும் ரஷ்யாவும் போர் சாகச பயிற்சிகளில் ஈடுபடுவது வழமையானது தான் என்றாலும், இந்த வருடாந்தர பயிற்சிகளில் வெளிநாடுகள் பங்கெடுப்பது என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்த ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளிகள் மட்டத்தில் முன்னர் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தன. கடந்த காலத்தில், இத்தகைய குறிப்பிட்ட பயிற்சிகள் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்டன.

சுமார் 300,000 ரஷ்ய சிப்பாய்கள் மற்றும் 1,000 க்கும் அதிகமான போர் விமானங்கள், 36,000 டாங்கிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுடன், வாரக் கணக்கில் நீண்ட இந்தாண்டின் வொஸ்டொக் பயிற்சிகளை ரஷ்ய இராணுவம் 1981 க்குப் பிந்தைய மிகப்பெரிய பயிற்சியாக கணக்கில் காட்டியது.

மாஸ்கோவை மையமாக கொண்ட பொருளாதார உயர் பள்ளியின் ஒரு பகுப்பாய்வாளரான Vasily Kashin வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவிக்கையில், ரஷ்யாவுடனான சீனாவின் ஒத்திகைகள் "சர்வதேசரீதியில் தகைமை கொண்ட ஒரு சண்டையிடும் படையை பெய்ஜிங் ஸ்தாபிக்க விரும்பினால், அதற்கு முக்கியமான, பெரிதும் அவசியப்படும் வெளிநாட்டு அனுபவத்தை" வழங்கும் என்றார்.

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக, புட்டின் 2015 இல் நிறுவிய கிழக்கு ஆசிய பேரவையில் பங்கெடுக்கவே ஜி விளாடிவொஸ்டொக்கில் இருந்தார். அண்மித்து 1,000 சீன வணிகர்களின் ஒரு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒரு குழுவுடன், ஜி முதல்முறையாக கலந்து கொண்டார் என்ற உண்மை அவ்விரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் உறவுகளை எடுத்துக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தது.

வாஷிங்டனிலிருந்து அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் முகங்கொடுத்து, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ அவற்றிற்கிடையே எதிர்முரணான நலன்கள் இருந்தாலும் அவற்றின் கூட்டுறவை விரிவாக்கி உள்ளன. 2014 இல், இவ்விரு நாடுகளும், விலை நிர்ணயத்தின் மீது நீண்டகால தொங்கிக் கொண்டிருந்த, சீனாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

சீனா ஒரு எதிரியாக ஆவதற்குரிய சாத்தியக்கூறு இன்னமும் இருப்பதாக அஞ்சி, ரஷ்யா சீனாவுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்கவும் தயங்கி வந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மாஸ்கோ தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் S-400 ஏவுகணை அமைப்புமுறை மற்றும் நான்காம் தலைமுறை Su-35 போர் விமானங்கள் உட்பட பெய்ஜிங்கிற்கு அதன் மிக அதிநவீன ஆயுதங்களில் சிலவற்றை விற்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் திணித்த தடையாணைகளைச் சமாளிக்க ஒரு வழிவகையாக, புட்டின், தெளிவாக சீனாவுடனான பொருளாதார உறவுகளை விரிவாக்க முயன்று வருகிறார். ரஷ்ய ஜனாதிபதி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஜி மற்றும் அவரும் "வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டுறவில் சிறப்பு கவனம்" செலுத்தியதாக தெரிவித்தார்.

“இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் இருதரப்பு வர்த்தகம் 50 பில்லியன் டாலரை எட்டி ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு அதிகரித்ததை நாங்கள் மனநிறைவுடன் கவனித்தோம்,” என்று புட்டின் தெரிவித்தார். “இந்தாண்டின் இறுதிக்குள் வர்த்தகம் சாதனையளவுக்கு 100 பில்லியன் டாலரை எட்டுமென நாங்கள் நம்புவதற்கு அங்கே எல்லா காரணமும் உள்ளன,” என்றார்.

கிழக்கு ஆசிய பேரவையின் பக்கவாட்டில், சீன மின்-வர்த்தக பெருநிறுவன ஜாம்பவான் அலிபாபா ரஷ்ய அரசு நிறுவனமான நேரடி முதலீட்டு நிதியம், ரஷ்ய இணைய குழுமம் Mail.ru மற்றும் தொலைதொடர்பு நிறுவனம் Megafon ஆகியவற்றுடன் ரஷ்ய இணைய வழி விற்பனை தளத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

“ரஷ்ய-சீன பிராந்தியரீதியிலான, உற்பத்திரீதியிலான மற்றும் முதலீட்டுரீதியிலான கூட்டுறவை தொலைதூர கிழக்கில் ஒருமுனைப்படுத்தும்" நோக்கில் சீனாவும் ரஷ்யாவும் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. அவை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் தொலைதூர கிழக்கில் இருதரப்பு "வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் முதலீட்டு கூட்டுறவை" அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை விவரித்தன. அவ்விரு நாடுகளும் "பரஸ்பர நிதி பரிமாற்றத்திற்கு தேசிய செலாவணிகளைப் பயன்படுத்துவதை விரிவாக்குவதில் அவற்றின் ஆர்வத்தையும் மீளவலியுறுத்தின,” அவ்விதத்தில் அமெரிக்க டாலரை வர்த்தக செலாவணியாக பிரயோகிப்பதைத் தவிர்க்கின்றன.

ஜி ஊடங்களுக்குத் தெரிவிக்கையில், “எங்கள் வர்த்தகம் முன்னேறி வருகிறது. ஒரே இணைப்பு, ஒரே பாதை திட்டம் மற்றும் யுரேஷிய பொருளாதார ஒன்றியம் [EAEU] திட்டம் ஆகியவற்றில் நல்லிணக்கம் பேணவும், எரிசக்தி துறை, விமானச்சேவை துறை, வான்வழி போக்குவரத்து தொடர்புகளில் மிகப்பெரிய மூலோபாய திட்டங்களை ஊக்குவிக்கவும், நிதி, விவசாயம் மற்றும் மின்-வர்த்தகத்துறை போன்ற புதிய துறைகளில் எங்களின் கூட்டுறை அபிவிருத்தி செய்வதற்கும் இரண்டு தரப்பிலிருந்தும் செயலூக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.

யுரேஷியாவை இணைப்பதற்கான சீனாவின் மிகப்பெரிய ஒரே இணைப்பு, ஒரே திட்டம் உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும், முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் அரசியல் கூட்டுறவுக்காக ரஷ்யா முன்மொழிந்த EAEU திட்டத்தையும் குறித்த குறிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவை பரந்த யுரேஷிய பெருநிலப்பகுதியை மாஸ்கோ அல்லது பெய்ஜிங் செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கு சாத்தியமானளவுக்கு எதிர் திட்டங்களாக இருக்கின்றன. இந்த முக்கிய பிரச்சினையில் ஜி ஒரு "நல்லிணக்கத்தை" வழங்குகிறார் என்பது, அவ்விரு நாடுகளும் குறைந்தபட்சம் இப்போதைக்காவது, அவற்றின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வருகின்றன என்பதற்கு அறிகுறியாக உள்ளது.

ரஷ்யாவும் சீனாவும் உத்தியோகப்பூர்வ இராணுவ கூட்டாளிகள் இல்லை, குறிப்பிடத்தக்க மூலோபாய மற்றும் பொருளாதார கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதைக் குறித்து இரண்டு தரப்பும் நன்குணர்ந்துள்ளது. அமெரிக்கா முன்நிறுத்தும் அச்சுறுத்தலை எதிர்க்க உறவுகளைப் பலப்படுத்த பார்த்து வந்தாலும், மாஸ்கோவும் சரி பெய்ஜிங்கும் சரி வாய்ப்பு வாய்த்தால் ஒருவரை ஒருவர் விலையாக கொடுத்து வாஷிங்டனுடன் ஓர் உடன்பாட்டை எட்ட இரண்டுமே விருப்பமுறுகின்றன.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் விட்டுக்கொடுக்காத தன்மை, ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஜப்பானுடன் அமெரிக்காவின் நீண்டகால கூட்டணிகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி வருவதைப் போலவே, இவ்விரு நாடுகளையும் ஒன்றின் கரங்களுக்குள் ஒன்றை நகர்த்தி வருகிறது.

இந்த ஸ்திரமின்மை, வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னுக்குப் பின் முரணான பொறுப்பற்ற கொள்கைகளின் விளைவல்ல. இந்த கொந்தளிப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார மற்றும் இராணுவ வழிவகைகள் மூலமாக அதன் வரலாற்று வீழ்ச்சியைத் தடுக்க முனையும் முனைப்பைப் பிரதிபலிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டைப் போலவே, உலக போருக்கான முன்நிகழ்வுகளாக, மீண்டுமொருமுறை எதிர்விரோத பொருளாதார மற்றும் அரசியல் அணிகள் உருவாகி வருகின்றன.