ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Reject the anti-Semitism slurs against Jeremy Corbyn! Drive out the Labour Party right wing!

ஜெர்மி கோர்பினுக்கு எதிரான யூத-எதிர்ப்புவாத அவதூறுகளை நிராகரி! தொழிற் கட்சியினுள் உள்ள வலதுசாரி பிரிவை வெளியேற்று!

Chris Marsden
31 August 2018

ஜெர்மி கோர்பினை பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றும் நம்பிக்கையில், அக்கட்சியின் வலதுசாரியால் அவரை யூத-எதிர்ப்புவாதியாக (anti-Semite) சித்தரிக்கும் ஒரு பிரச்சாரம் தீவிரமாக்கப்பட்டிருப்பதை சமீபத்திய வாரங்கள் கண்டுள்ளன.

இத்தகைய முயற்சிகளின் அளவு மற்றும் மூர்க்கத்தனத்தில், இவை, இங்கிலாந்தில் MI5, இஸ்ரேலில் மொஸாட் (Mossad) மற்றும் அமெரிக்காவில் மத்திய உளவுத்துறை முகமை (CIA) சம்பந்தப்பட்டுள்ள ஒரு ஸ்திரமற்றதாக்கும் பிரச்சாரத்தின் அனைத்து அடையாளங்களையும் தாங்கியுள்ளன.

பிரிட்டனின் ஆளும் உயரடுக்கும், அதன் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதன் ஊடகங்களும் கோர்பின் தலைமையிலான ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதை அவற்றால் சகித்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்தி வருகின்றன. அனைத்திற்கும் மேலாக, அவர் அவமானப்பட்டு வெளியேறுவதைக் காண, பிரிட்டனில் உள்ள சக்திகளைப் போலவே அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான நாடுகளினது அதேமாதிரியான சக்திகளும் அதேயளவுக்கு தீர்மானகரமாக உள்ளன என்பதையே, தீவிரப்படுத்தப்பட்டு வரும் இந்த வேட்டையாடலின் சர்வதேச வீச்செல்லை உறுதிப்படுத்துகிறது.

அதன் தலைமையைக் கவிழ்ப்பதற்கான தொழிற் கட்சியின் வலதுசாரியினது தோல்வியடைந்த 2016 சதிக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் முடிவின்றி கூறப்பட்டு வந்துள்ள, யூத-எதிர்ப்புவாதம் (anti-Semitism) தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், கோர்பினைத் தொங்க விடுவதற்கான சுறுக்குக் கயிறை வழங்குகின்றன. ஆனால் இப்பிரச்சாரத்தின் குறிக்கோள், சிக்கன நடவடிக்கைகளுக்கும், மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் இராணுவவாதம் மற்றும் போரைத் தீவிரமாக பின்தொடர்வதற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்த சவாலையும் தடுக்கும் நம்பிக்கையில், சோசலிசத்தை மதிப்பிழக்க செய்வதே ஆகும்.

இதுவரையில், வலதுசாரி தொழிற் கட்சிவாதிகள், சியோனிசவாதிகள் (Zionists - யூத-அரசு அமைப்பதை எதிர்ப்பவர்கள்) மற்றும் பழமைவாத கட்சியின் ஒரு கூட்டத்தினது கோர்பின் மீதான சாத்தியமானளவுக்கு ஒவ்வொரு கண்டனமும் உலகின் பத்திரிகைகளான ரூபேர்ட் முர்டோஹின் டைம்ஸ், சண்டே டைம்ஸ் மற்றும் சன் ஆகியவற்றுடன், கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற அவற்றின் "தாராளவாத" பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27 இல் நியூ யோர்க் டைம்ஸில், “ஜெர்மி கோர்பினின் யூத-எதிர்ப்புவாதம் பற்றிய ஒரு உண்மையான நிலைப்பாட்டை காட்டு" என்ற தலைப்பில் ஜோஸ் கிளான்சி எழுதிய ஒரு துணை-தலையங்கம் அந்த பிரச்சாரத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.

2013 கருத்தரங்கு ஒன்றில் “பண்டைய யூத-எதிர்ப்புவாத" கருத்துக்களைக் கோர்பின் குறிப்பிட்டதாக அவர் [கிளான்சி] கூறுவதைக் காட்டும் ஒரு காணொளியை, ஆகஸ்ட் 23 இல் டெய்லி மெயில் வெளியிட்டதும், பிரிட்டனின் "பிரதம மந்திரியாக ஆகக்கூடியவர் … என் மக்களுக்கு எதிரான பழைய தப்பெண்ணங்கள்" பற்றிய "யதார்த்தத்தை" முகங்கொடுக்க விரும்பவில்லை என்றவர் வலியுறுத்தினார். கோர்பினைத் தாக்குவதில் முக்கிய பாத்திரம் வகித்துள்ள சன்டே டைம்ஸ் க்கான நியூயோர்க் செய்தியாளராக கிளான்சி இல்லாமல் இருந்திருந்தால், அவரின் ஜோடனை வசனங்கள் அதிக நம்பத்தகுந்ததாக இருந்திருக்கும்.

“குழப்பான விதத்தில்" கோர்பின் இஸ்ரேலை வெறுக்கிறார் என்றும், தொழிற்கட்சி உறுதிப்படுத்தும் "யூத-எதிர்ப்புவாதம் தவறு, வலி நிறைந்தது, எதிர்ப்பதற்குரியது" என்றும், கோர்பின் அரசாங்கம் யூதர்களுக்கு "மோசமானதாக" இருக்கும் என்றும் வலியுறுத்தும் கருத்துக்களை, பல வாரங்களாக, கிளான்சி பதிவிட்டு வந்துள்ளார்.

“பயங்கரவாத குழு ஹமாஸ் இன் பிரச்சார வலைத் தளம் ஒழுங்கமைத்த" ஒரு கருத்தரங்கில் கோர்பின் உரையாற்றுவதாக வாதிட்ட மெயில், சில பிரிட்டிஷ் சியோனிசவாதிகளுக்கு "வரலாறு படிக்க விருப்பமில்லை" என்றும், அவர்கள் “ஆங்கில மொழியின் முரண்நகையை கூட புரிந்து கொள்வதில்லை" என்றவர் கூறியதாக குறிப்பிட்டது.

உண்மையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015 இல் ஆலோசகர் அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ஆலோசனைக் குழுவான பாலஸ்தீன மீள்வருகை மையம் (Palestinian Return Centre- PRC) அழைத்திருந்த ஒரு கூட்டத்தில்தான் கோர்பின் உரையாற்றி இருந்தார். கோர்பின், பாலஸ்தீன ஆணையத்தின் பிரிட்டன் பிரதிநிதியான மானுவல் ஹஸ்சாசியன் இன் (Manuel Hassassian) முந்தைய நாடாளுமன்ற உரை மீது கவனம் கொண்டு வர அதைக் குறித்து பேசியிருந்தார், ஹஸ்சாசியன் ஒன்றுக்கு ஒன்று முரணாக இவ்வாறு கூறியிருந்தார்: “நான் என்ன முடிவுக்கு வருகிறேன் என்றால், யூதர்கள் கடவுளின் குழந்தைகள், அவர்கள் மட்டுமே கடவுளின் குழந்தைகளாக இருக்கிறார்கள், அந்த நிலம் கடவுளால் வரமாக வழங்கப்படுகிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நான் கடவுள் ஒருவேளை அவர்கள் பக்கம் இருக்கிறார் என்று நம்ப தொடங்கிவிட்டேன், ஏனென்றால் அதன் இரட்சகரின் கனவான இஸ்ரேலை கட்டமைத்து வருவதை யாராலும் நிறுத்த முடியவில்லையே,” என்பதால் என்றார்.

“யூதர்கள் பெடரல் ரிசர்வை மட்டும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை, மாறாக கடவுளின் பணத்தையும் கூட இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்,” என்று ஹஸ்சாசியன் கூறியதாக பல கோடி மில்லியனரான வலைப்பதிவாளர் ரிச்சார்ட் மில்லெட் வலியுறுத்தினார். ஆனால் இதில் முதல்பாதி மில்லெட் மட்டுமே கூறியதாகும். கோர்பின், மில்லெட்டைச் சுட்டிக்காட்டும் விதத்தில், ஹஸ்சாசியனின் கவனப்பிசகுகள் வரலாறையோ அல்லது எதிர்கருத்துக்களையோ புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு (Campaign Against Antisemitism) இந்த பலவீனமான ஜோடிப்புகள் மீது உருவான சீற்றத்தின் அடிப்படையில், “ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்" கொண்டு வந்தோ அல்லது "அவர்களின் சொந்த அரசியல் கட்சியை" நிறுவியோ, கோர்பினை வெளியேற்றுமாறு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து, Change.org இல் ஓர் இணையவழி மனுவைத் தொடங்கியது.

கோர்பின் கீழ்மன்றத்தை (Commons) “மதிப்பிழக்க" செய்து விட்டாரா என்பதை விசாரிக்க வேண்டுமென நெறிமுறைகளுக்கான நாடாளுமன்ற ஆணையரைப் பழமைவாத கட்சி கோரியது. கோர்பினின் 2013 கருத்துக்களை முன்னாள் தலைவர் Rabbi Lord Jonathan Sacks உணர்ச்சிகரமாக விவரிக்கையில், 1968 இல் பழமைவாத கட்சியின் Enoch Powell இன் புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாத "இரத்த ஆறு" உரைக்குப் பின்னர், ஒரு முன்னணி அரசியல்வாதியின் "மிகப்பெரிய அத்துமீறல்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் மீது பிரதம மந்திரி தெரேசா மே பேரம்பேசியுள்ள உடன்படிக்கையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதன் மீதான வாக்கெடுப்புக்குப் பின்னர், ஏப்ரல் 2019 வாக்கில் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை உடைக்க இருப்பதாக நாளாந்தம் செய்திகள் வருகின்றன. டோரி கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சியினரின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பிரிவுடன் இணைந்து தொழிற் கட்சி வலது செயல்பட்டு வருகிறது, இதற்காக வணிக பெருந்தலைகளால் குறைந்தபட்சம் 50 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டது. தொழிற் கட்சி துணை தலைவர் டோம் வாட்சன் டோரி பிளேயரின் முக்கிய ஆலோசகரான பீட்டர் மண்டெல்சனின் வீட்டில், “ஜெர்மி கோர்பினை எவ்வாறு வெளியேற்றுவதென சதித்திட்டம் தீட்ட" ஏனைய "மிதவாத நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்" சேர்ந்து, சந்திப்புகள் நடத்தி இருப்பதாக சன் குறிப்பிட்டது.

ஆழமாக ஊடுருவியுள்ள இடதுசாரி யூத-எதிர்ப்புவாதம் குறித்த குற்றச்சாட்டுக்கள், கீழ்தரமான நோக்கம் கொண்டிருப்பதுடன் அதேயளவுக்கு ஒரு கீழ்தரமான அவதூறுமாகவும் உள்ளன.

யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆழ்ந்த வரலாற்று வேர்களைக் கொண்டுள்ள போதிலும், ஜேர்மனியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நவீனகால யூத-எதிர்ப்புவாதம் ஒரு பாரிய அரசியல் இயக்கமாக மேலெழுந்தமை, தொழிலாளர்களின் சோசலிச இயக்கம் முன்நிறுத்தும் புரட்சிகர அச்சுறுத்தலுக்கு எதிராக குட்டி-முதலாளித்துவ அடுக்குகளை அணித்திரட்டுவதற்கான முதலாளித்துவ வர்க்கத்தினது முயற்சிகளுடன் பிணைந்திருந்தன.

யூதர்களை நவீன முதலாளித்துவத்தின் அரக்கத்தனத்துடன் ஒப்பிடுவது, வர்க்க போராட்டம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தை எதிர்க்கும் இனவாத மற்றும் தேசியவாத கட்சிகள் ஒன்றிணைவதற்கான ஜனரஞ்சகவாத காரணங்களை வழங்கியது. இதில் ஹிட்லரின் நாஜி கட்சி உள்ளடங்கலாக, "சர்வதேச யூதர்களை" சோசலிசத்துடன் அடையாளப்படுத்தின.

இந்தவொரு முயற்சி இப்போது யூத-எதிர்ப்புவாதத்தைத் திருத்தியமைப்பதற்கும், இஸ்ரேல் மற்றும் அதன் காட்டுமிராண்டித்தனமான பாலஸ்தீன ஒடுக்குமுறை மீதான இடதுசாரி விமர்சனங்களுடன் அதை சமப்படுத்துவதற்காகவும், சியோனிசவாதிகளால், பிளேயர்-ஆதரவாளர்கள் மற்றும் டோரி-ஆதரவாளர்களாலும் நடத்தப்பட்டு வருவதுடன், யூத-எதிர்ப்புவாதத்தைக் குறித்த சர்வதேச இனப்படுகொலை ஞாபகார்த்த அமைப்பின் வரையறையைத் தொழிற் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளை இது மையப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு, இஸ்ரேலை ஒரு அரசாக ஸ்தாபிப்பததை ஒரு "இனவாத முயற்சியாக" வரையறுப்பதை யூத-எதிர்ப்புவாதமாக வரையறுக்கின்றது.

இஸ்ரேல் ஏறத்தாழ அன்றாடம் தொடர்ந்து பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து வருகின்ற நிலைமைகளின் கீழ் இவை நடந்து வருகின்றன, மேலும் அது "தேசிய-அரசு" சட்டத்தையும் நிறைவேற்றி உள்ளது. இச்சட்டம், "இஸ்ரேல் அரசின் தேசிய சுய-நிர்ணயம் செய்வதற்கான உரிமை" “பிரத்தியேகமாக யூத மக்களுக்கு இருப்பதாக,” வலியுறுத்துகிறது.

அனைத்திற்கும் மேலாக பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு மற்றும் அவர் அரசாங்கமும், ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டொர் ஓர்பான் மற்றும் ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்தியான் குர்ஸ் போன்ற யூத-எதிர்ப்புவாதிகளுடனேயே வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. ஐரோப்பாவின் அதிவலதோ, நெத்தனியாகு மீதான நல்லெண்ணங்களுக்குத் திரும்பி வருகிறது. டச்சு சுதந்திர கட்சியின் கீர்ட் வில்டர்ஸ், “ஜூடியா மற்றும் சமாரியாவில் ஒரு பாலஸ்தீன அரசுக்கு எதிர்ப்பை" பகிர்ந்து கொள்வதாக பிரகடனப்படுத்துகிறார். அதேவேளையில் பெல்ஜியத்தின் Vlaams Belang இன் ஃபிலிப் டிவென்டர் "ஐரோப்பாவிற்கான முதல் ஆபத்தே இஸ்லாமியமயமாதல் தான்" என்று புரிந்து வைத்திருப்பதற்காக நெத்தனியாகுவைப் பாராட்டுகிறார்.

கோர்பின் மீதான பிரிட்டன் ஆளும் உயரடுக்கின் எதிர்ப்பை, இரண்டு அடிப்படை கருத்துக்கள் தீர்மானிக்கின்றன.

முதலாவதாக, நேட்டோவை ஆதரிப்பதிலிருந்தும் மற்றும் நிலம், நீர், வானில் பிரயோகிக்கவல்ல அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல் ஏவுகணை அமைப்புமுறையை பேணுவதிலிருந்தும் கோர்பின் பின்வாங்கியதற்கு மத்தியில், அமெரிக்காவின் ஒரு பிரதான நேட்டோ கூட்டாளியின் தலைவராக கோர்பினை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. தொழிற் கட்சி தலைவராக அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே, முர்டோஹின் சன்டே டைம்ஸ் குறிப்பிடுகையில், அவர் பிரதம மந்திரியாக ஆகக்கூடிய தருணத்தில் "ஒரு கலகம்" உண்டாக்கப்படுமென "பணியிலிருக்கும் மூத்த தளபதி" ஒருவரின் அச்சுறுத்தலை வெளியிட்டது. முன்னாள் தலைமை கடற்படை அதிகாரியும் மற்றும் முன்னாள் தொழிற் கட்சி அமைச்சருமான Lord West எச்சரிக்கையில், கோர்பின் "தேசத்திற்குத் தலைமை கொடுக்கக் கூடாது" ஏனென்றால் இராணுவவாதத்திற்கான அவர் விமர்சனம் "அவருக்கு சிந்திக்கத்தெரியாத பெருந்திரளான மக்களின் வாக்குகளைப்" பெற்று தரக்கூடும் என்று எச்சரித்தார்.

கோர்பின் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் குறைந்தபட்ச தன்மை கொண்டவை எனும் போதும் கூட, பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பார்வையில் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது, தேசிய மருத்துவச் சேவையைப் பாதுகாப்பது, பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்களிடம் இருந்து செல்வ வளத்தை மறுபகிர்வு செய்வது ஆகியவற்றுடன் அவர் இணைத்துப் பார்க்கப்படுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் மீது அதிகரித்து வரும் நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மூர்க்கமான சமூக தாக்குதலைத் தீவிரப்படுத்த கோருகின்ற நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கிற்கு இத்தகைய உணர்வுகள் ஒவ்வாததாக உள்ளன.

கோர்பினுக்கு எதிரான இப்பிரச்சாரம் தொழிற் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பரந்த சீற்றத்தைத் தூண்டியுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கி கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற அழைப்புகளும் அதில் உள்ளடங்கும். சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்த கோரிக்கைக்கு முழு ஆதரவை வழங்குகிறது. இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அரசியல் குற்றவாளிகள் தங்களின் தொழிலாள-வர்க்க விரோத திட்டநிரலைச் செயல்படுத்துவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கி விடக்கூடாது.

ஆனால் கோர்பினும் நிழல்-அரசியல் சான்சிலர் ஜோன் மெக்டொனெல் போன்ற அவர் கூட்டாளிகளும் துல்லியமாக இதைத்தான் செய்ய மறுக்கிறார்கள். கட்சியின் ஐக்கியத்தைப் பேணுவது "சிலரின் அல்ல, பலரின்" ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தொழிற் கட்சியை அனுமதிக்குமென்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதுவொரு அபாயகரமான போலிவாதம், அரசின் உயர்மட்டத்தில் அரசியல் சதிகாரர்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பாதுகாப்பதில் எங்கும் நிற்கப் போவதில்லை என்ற நிலையில், இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நிராயுதபாணியாக ஆக்குகிறது.

தொழிற் கட்சி வலதைக் கொண்ட எந்தவொரு அரசாங்கமும் பலரின் நலன்களுக்கு எதிராக சிலரின் அரசாங்கமாகவே இருக்கும். தொழிற் கட்சியைச் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும், போர்-எதிர்ப்பு கட்சியாக மாற்றிவிடலாம் என்ற கோர்பினின் வாதத்திற்கு எதிராக, இதனால்தான், சோசலிச சமத்துவக் கட்சி, 2015 இல் அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து எச்சரித்து வந்துள்ளது. தொழிற் கட்சி "ஒரு வலதுசாரி முதலாளித்துவ வர்க்க கட்சி… பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் எல்லா குற்றங்களிலும் உடந்தையாக இருந்துள்ளதுடன், ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக சோசலிசத்திற்குப் பிரதான அரசியல் எதிர்ப்பாளராக செயல்பட்டு வந்துள்ளது,” என்று நாம் எழுதினோம்.

இதுவரையில் நடந்துள்ள ஒவ்வொன்றும் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். 1935 இல், லியோன் ட்ரொட்ஸ்கி "அனைத்து புரட்சிகர தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கும் குழுக்களுக்கும்" ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். ஹிட்லர் பதவிக்கு வந்த பின்னர், ஐரோப்பா எங்கிலும் அதிவலது சக்திகளின் வளர்ச்சிக்கு இடையே உலகை ஆய்வு செய்து ட்ரொட்ஸ்கி கூறுகையில், “உலக பொருளாதாரத்தின் சிதைவு" “சோசலிச புரட்சியின் பணியைத் திட்டநிரலில் பலமாக" முன்கொண்டு வருகிறது என்றார்.

தொழிலாள வர்க்கத்தின் சீர்திருத்தவாத ஸ்ராலினிச தலைவர்களின் திராணியின்மையும் மற்றும் துரோகமும் தான் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய ஆபத்து என்பதை ட்ரொட்ஸ்கி விவரித்தார். தற்போதைய சூழலுக்கு அசாதாரணமான முறையில் ஒத்துப் போகின்ற ஒரு பந்தியில் அவர் பின்வருமாறு எழுதினார்:

“தொழிற் கட்சியின் தேர்தல் வெற்றிகள் அதை மீண்டுமொரு முறை பதவிக்குக் கொண்டு வந்தால், அதன் விளைவுகள் பிரிட்டனை அமைதியாக சோசலிசத்திற்கு மாற்றுவதாக இருக்காது, மாறாக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தை ஒன்றுதிரட்டுவதாகத்தான் இருக்கும், வேறுவிதத்தில் கூறுவதானால், ஓர் உள்நாட்டு போரின் சகாப்தமாக இருக்கும், இதன் முன்னால் தொழிற் கட்சி தலைமை தவிர்க்கவியலாமல் அதன் முழு திவால்நிலைமையை வெளிப்படுத்தும்.” [நான்காம் அகிலத்தின் ஆவணங்கள்: ஆரம்ப ஆண்டுகள் (1939-40), பக்கம் 67]

பிரிட்டிஷ் முதலாளித்துமும் உலக முதலாளித்துவமும் புரட்சிகர நெருக்கடியின் ஒரு புதிய காலக்கட்டத்திற்குள் நுழைந்து வருகின்ற நிலையில், அவரின் எதிர்ப்பாளர்கள் முன்னால், கோர்பினின் நிலையான தொடைநடுங்கிய அடிபணிவு மீது தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயங்களைக் குறித்த மிகவும் தீர்க்கதரிசனமான எச்சரிக்கையாக உள்ளது.

பெருவணிகங்களின் இந்த பிரதிநிதிகளுடன் அரசியல் சமரசம் செய்வதற்கான அனைத்து முறையீடுகளையும் நிராகரித்து, தொழிலாள வர்க்கம் இப்போது சோசலிச சர்வதேசியவாதத்திற்கான சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்பத்தையே ஒவ்வொன்றும் சார்ந்துள்ளது. இதனுடன் உடன்படுபவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.