ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The fight against fascism in Germany requires a socialist perspective

ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது

The Sozialistische Gleichheitspartei
4 September 2018

ஜேர்மனியிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள், ஜேர்மன் நகரமான கெம்னிட்ஸ் இன் (Chemnitz) பாசிசவாத வன்முறை காட்சிகளுக்கு தமது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று, அந்நகர் எங்கிலும் அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான நவ-நாஜிக்கள், போலிஸாரால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படாமல் ஹிட்லர் வணக்கம் செய்ததுடன், வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் கண்டவர்களைத் தாக்கினார்கள்.

சமீபத்திய நாட்களில், பத்தாயிரக் கணக்கானவர்கள் இந்த மிதமிஞ்சிய வலதுசாரி வன்முறைக்கு எதிராக ஜேர்மனி எங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் பாசிசவாத அடாவடித்தனத்தை நிறுத்த தார்மீகரீதியான கோபம் மட்டும் போதுமானதல்ல: அதன் மீள்எழுச்சிக்கான அரசியல் வேர்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

1930 களைப் போல் அல்லாமல், நாஜிக்கள் இன்று ஒரு பரந்துபட்ட இயக்கமாக இல்லை, மாறாக வெறுக்கப்படும் ஒரு சிறுபான்மையாக உள்ளனர். ஆனால் இது அவர்களை அபாயம் குறைந்தவர்களாக ஆக்கிவிடாது. அவர்கள் ஸ்தாபக கட்சிகளின் அரசியலில் இருந்தும் மற்றும் அரசு எந்திரத்தில் இருந்து அவர்கள் பெறும் ஆதரவிலிருந்தும் தங்களின் பலத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் போலிஸ், இரகசிய சேவை மற்றும் அரசாங்கத்தில் அவர்களின் நண்பர்களைக் கொண்டிருப்பதால் பலமாக உணர்கிறார்கள். கெம்னிட்ஸ் இல் நாஜி அணிவகுப்புக்கு முன்னதாக வலதுசாரி தீவிரவாத அரசியலை ஊக்குவிப்பதற்கான பல ஆண்டுகால பிரச்சாரம் நடந்தது.

எட்டாண்டுகளுக்கு முன்னர், சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவர் திலோ சராஸின் (Thilo Sarrazin) எழுதிய "ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது" என்ற நூல் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் இனவாதத்திற்கு உத்தியோகபூர்வமாக புத்துயிரூட்ட கதவுகளைத் திறந்துவிட்டது. ஜேர்மன் சமூகம் வெளிநாட்டவர்களால் அழிக்கப்பட்டு வருவதாக வாதிட்ட இந்நூலின் முதல் பிரதி புத்தக நிலையங்களை எட்டுவதற்கு முன்னரே, முக்கிய கட்டுரைகளிலும் உரையாடல் நிகழ்ச்சிகளிலும் அது பெரியளவில் விற்பனையாகி வரும் நூலாக பாராட்டப்பட்டது.

2013 இல், ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் ஜேர்மன் இராணுவக் கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக அறிவித்தார், புதிதாக அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசாங்கம் பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டது. அந்த அரசாங்கம் உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததுடன், ரஷ்யாவுடன் ஒரு தொடர்ச்சியான மோதலை இயக்கத்திற்குக் கொண்டு வந்தது.

ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஜேர்மன் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியது. “ஒவ்வொன்றுக்கும் நம்மை பழிக் கூற வேண்டியிருக்கும் என்ற கருத்துடன் நீங்கள் ஆரம்பித்தால், ஐரோப்பாவில் அதுவொரு பொறுப்பான கொள்கையாக இருக்காது,” என்று பேர்லின் கல்வித்துறையாளர் ஹெர்பிரீட் முன்ங்லெர் தெரிவித்தார்.

Der Spiegel சஞ்சிகையில், அவர் சக கல்வியாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி நாஜி அனுதாபியான ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ பாதுகாத்ததுடன், ஹிட்லர் "யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேச" விரும்பவில்லை என்பதால் அவர் "வக்கிரமானவர் இல்லை" என்று விவரித்தார்.

2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு குழு விவாதத்தின் போது, பார்பெரோவ்ஸ்கி கூறுகையில், மேற்கத்திய இராணுவங்கள் "பிணைக்கைதிகளைப் பிடிக்க, கிராமங்களை எரிக்க, மக்களைத் தூக்கிலிட, அச்சம் மற்றும் பீதியைப் பரப்ப" தயாராக இருந்தால் தான், சிரியாவில் இஸ்லாமிக் அரசு மற்றும் பிற பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜெயிக்க முடியும் என்றார்.

பார்பெரோவ்ஸ்கி மே 2016 இல் ஒரு மெய்யியல் கருத்தரங்க விழாவில், புலம்பெயர்ந்தோர் வன்முறைக்கு எதிராக "ஜேர்மனியில் ஆண்கள்" ஒன்றும் செய்ய இயலாது இருப்பதாகவும், ஏனென்றால் அவர்களால் சண்டையிட முடியாது இருப்பதால் என்றும் வாதிட்டார். “வன்முறையை எவ்வாறு கையாள்வது என்று ஜேர்மனியர்களுக்கு தெரியவில்லை என்பதை நாம் பார்க்கிறோம்,” என்றார். எண்ணற்ற வலதுசாரி வலைத் தளங்களில் பிரசித்தமாக மேற்கோளிடப்படும் இந்த கருத்துக்கள், நடைமுறையில் கெம்னிட்ஸ் இல் பாசிசவாத கும்பல்களால் புகுத்தப்பட்டது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் அதன் மாணவர் அமைப்பான IYSSE உம் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகள் மற்றும் நாஜி குற்றங்களை மூடிமறைப்பதற்கான அவர் முயற்சிகளுக்கு எதிராக போராடிய போது, ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் வெறித்தனமான வேட்டையாடலின் இலக்கில் நாம் வைக்கப்பட்டோம். பார்பெரோவ்ஸ்கி அனைத்து தொலைக்காட்சி சேவைகளிலும் அகதிகளுக்கு எதிராக கலகம் தூண்டியதுடன், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) முன்னணி பிரதிநிதிகள் பங்கெடுத்த ஒரு வலதுசாரி விவாதக் குழுவை அவர் ஸ்தாபித்த வேளையில், ஊடகங்களும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகமும் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாத்தன.

இந்த வலதுசாரி சூழலில் தான் AfD செழித்தோங்கியது. அரசினது—அதாவது இராணுவம், உளவுத்துறை அதிகாரிகள், போலிஸ்காரர்கள், நீதிபதிகள் மற்றும் பேராசிரியர்களின் பல பிரதிநிதிகளும் அந்த பாசிசவாத கட்சியின் தலைவர்களில் உள்ளடங்கி உள்ளனர். இந்தாண்டின் பொதுத் தேர்தலில் வெறும் 13 சதவீத வாக்காளர்கள் மட்டுமே AfD ஐ ஆதரித்திருந்த போதினும், இப்போது அது பேர்லினில் அரசியல் கருத்தை தீர்மானிக்கின்றது. இந்த கூட்டாட்சி அரசாங்கமும் AfD இன் வெளிநாட்டவர் விரோத அகதி கொள்கையை முற்றுமுழுதாக ஏற்றுள்ளது. முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை கொடுத்து வருகின்ற AfD, உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக இருப்பதுடன் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் ஊடகங்களில் பிரசன்னத்தை அனுபவித்து வருகிறது.

இந்த வலதுசாரி சூழ்ச்சியில் இரகசிய உளவுச்சேவை ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. அதன் 3,100 பணியாளர்கள் மற்றும் 350 மில்லியன் யூரோ ஆண்டு வரவுசெலவு திட்டக்கணக்குடன், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் என்றழைக்கப்படும் ஜேர்மன் இரகசிய சேவை, வலதுசாரி தீவிரவாதத்தின் விளைநிலமாக உள்ளது. தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு (National Socialist Underground - NSU) இனவாத பயங்கரவாத குழுவில் இரகசிய சேவைக்குப் பணியாற்றும் நிழலுலக உளவாளிகள் வியாபித்திருப்பதுடன், அது பகுதியாக அதற்கு நிதி வழங்குகிறது.

ஜூலையில் வெளியான ஜேர்மன் இரகசிய சேவையின் "அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கை 2017,” AfD இல் இருந்து பிரித்துப் பார்க்கவியலாத அளவுக்கு AfD இன் வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி உள்ளது. AfD மற்றும் பெஹிடாவைச் சுற்றிய நவ-நாஜிக்கள், ஜார்ன் ஹோகே (Björn Höcke), கோட்ஸ் குபிட்செக் (Götz Kubitschek) மற்றும் யூர்கன் எல்சஸர் (Jürgen Elsässer) போன்ற புதிய வலதின் பிரதிநிதிகள், அத்துடன் Junge Freiheit மற்றும் Compact போன்ற வலதுசாரி தீவிரவாத பிரசுரங்கள் என இவற்றின் வலையமைப்பு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவே இல்லை. “இடதுசாரி தீவிரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் பாதிக்கப்பட்டதாக மட்டுமே AfD இன் பெயர் தென்படுகிறது!

AfD க்கு சுதந்திர அனுமதி வழங்குகின்ற அதேவேளையில், அந்த அறிக்கை “தேசியவாதம் எனப்படுவதற்கும், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்குமான (மூலப்பிரதியில் உள்ளவாறு)” எதிர்ப்பை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று திட்டவட்டமாக முத்திரை குத்துகிறது. "இடதுசாரி தீவிரவாத கட்சி" என்றும், “கண்காணிப்பதற்குரிய ஒன்று" என்பதாகவும் SGP அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதான், தீவிர வலதை அம்பலப்படுத்துதவற்கான SGP இன் முயற்சிகளுக்கு ஜேர்மன் இரகசிய சேவையினது பதில். ஜேர்மன் அரசின் பார்வையில், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியோ நவ-நாஜிக்களோ பிரச்சினை இல்லை, மாறாக அவர்களை எதிர்ப்பவர்கள் தான் பிரச்சினையாக தெரிகிறார்கள்.

அரசும் அரசாங்கமும், AfD மற்றும் நவ-நாஜிக்களை ஆதரிக்கின்றன, ஏனென்றால் அவை இராணுவ மீள்ஆயுதமயமாக்கல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் அதன் கொள்கைகளுக்கு ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்க சேவையாற்றுகின்றன. ஜேர்மன் ஜனநாயகம் 1930 களில் இருந்ததைப் போலவே உடையும் நிலையில் இருப்பதையே சமீபத்திய வாரங்களின் இந்த அபாயகரமான அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஓர் ஏகாதிபத்திய வல்லரசு கொள்கையை ஏற்று, அடிமட்டத்திலிருந்து எதிர்ப்பை உணர்ந்ததும், உடனேயே மீண்டும் அது தீவிர வலதுக்கு நகர்கிறது.

கிறிஸ்துவ ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் இந்த மகா கூட்டணி ஒரு பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியான அமெரிக்காவை, வெள்ளை மாளிகை "சிவப்பு கோட்டை" தாண்டினால் ஒரு "எதிர்பலத்தைச்" சந்திக்குமென எச்சரித்துள்ளார். ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கீழ் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலோபாய ஆவணங்கள் ஐரோப்பா மீதான ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான நாஜி போர்வெறிகளைப் போல எழுதப்பட்டுள்ளன.

இந்த கொள்கைக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. இதனால்தான் உத்தியோகபூர்வ அரசியல் அரசின் உயர் மட்டத்தில் சூழ்ச்சி வடிவத்தை எடுக்கிறது, இதில் எதிர்கட்சிகளும் —பசுமை கட்சி, இடது கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP)—சம்பந்தப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவாக்கிய சமூக சிக்கன நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உதவி உள்ளன. இவை அதிக போலிஸ் மற்றும் பலமான உளவுத்துறை சேவைகளைக் கோருவதுடன், இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் இராணுவவாத கொள்கைகளை ஆதரிக்கின்றன.

இந்த அபிவிருத்தி ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. ஐரோப்பா எங்கிலும், அதிகரித்து வரும் சமூக பதட்டங்களின் முன்னால், ஆளும் உயரடுக்குகள் எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் பாசிசவாத சக்திகளைச் சார்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிபோக்கின் உலகளாவிய இயல்பு என்ன தெளிவுபடுத்துகிறது என்றால் இதுவொரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை போக்கு என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இந்த அபிவிருத்தியை எதிர்க்கக் கூடிய மற்றும் தீவிர வலதுசாரிகளைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த காரணத்திற்காக தான், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) வர்க்கப் போராட்டத்தை இக்கண்டம் தழுவி விரிவாக்க அழைப்பு விடுக்கிறது. இந்த மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்தியாக வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகள் பாதுகாக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச பாரம்பரியங்களை மீட்டுயிர்பிக்க இதுவே சரியான தருணமாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் SGP இல் சேருவதற்கும், முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் SGP அழைப்புவிடுக்கிறது.

SGP இன் கோரிக்கைகள்:

* மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து!

* இனியும் போர் வேண்டாம்! மீண்டும் இராணுவவாத வல்லரசு அரசியலை நோக்கி ஜேர்மனி திரும்புவதை நிறுத்து!

* இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, உடனடியாக SGP மற்றும் ஏனைய இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை நிறுத்து!

* தஞ்சம் கோரும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்! அரசு அதிகாரங்கள் மற்றும் கண்காணிப்பை அதிகரிக்காதே!

* சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! நிதியியல் செல்வந்த தட்டுக்கள், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்!