ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In Germany’s Hambacher Forest: The state shows its ugly face

ஜேர்மனியின் ஹம்பகா காடுகளில்: அரசு அதன் அவலட்சணமான முகத்தைக் காட்டுகிறது

By Marianne Arens 
21 September 2018

கொலோன் அருகே உள்ள ஹம்பகா (Hambacher) வனப்பகுதியில், காடுகளை அழித்துத் தரைமட்டமாக்கப்படுவதை தடுக்க முனைகின்ற ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதியில், இந்த வாரத்தில், இரண்டு மர வீடுகளுக்கு இடையிலான ஒரு தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் ஒரு பத்திரிகையாளர் 15 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்தார்.

இந்த 33 வயது வலைப் பதிவரைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பயனின்றி, அவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். போலிசினால் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு விட்டிருந்த காட்டின் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடந்த சமயத்தில், போலிசுடன் இருந்த இன்னொரு பத்திரிகையாளரிடம் ஒரு மெமரி கார்டை கொடுப்பதற்காக அவர் சென்றதாக செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


ஹம்பகா காட்டில் போலிஸ் நடவடிக்கை, ஏப்ரல் 6, 2017

காட்டில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஒழுங்கமைத்து வருகின்ற நடவடிக்கை கூட்டணியான “Hambi remains,” போலிஸ் வெளியேற்றங்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியது. “போலிசும் எரிசக்தி பெருங்குழும நிறுவனமான RWE (Rheinisch-Westfälisches Elektrizitätswerk) உம் உடனடியாக காட்டை விட்டு வெளியேற வேண்டும், இந்த அபாயகரமான நடவடிக்கையை நிறுத்தியாக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். வேறெந்தவொரு உயிரும் அபாயத்திற்குட்படக் கூடாது” என்று ஆரம்பகட்ட அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.

உண்மையில், போலிசின் கொடூரமான நடவடிக்கைகள் வாழ்க்கையை அச்சுறுத்துவனவாக உள்ளன. செப்டம்பர் 6 முதலாக, 12,000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தக் காட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலிஸ் அகற்றி வருகிறது, அங்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் செயல்பாட்டாளர்கள் காடுகளை அழிப்பதை தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இந்த அழிப்பு நடவடிக்கைக்கும் மற்றும் பொறுப்பற்ற போலிஸ் நடவடிக்கைக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, ஞாயிறன்று சுமார் 8,000 பேர் ஒரு “காட்டு நடைப்பயண”த்திற்காக ஒன்றுதிரண்டனர்.

காட்டைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருந்த குறைந்த எண்ணிக்கையிலானோரைக் கையாளுவதற்கு ஒரு வாரத்தில் சுமார் 3,000 போலிஸ் அதிகாரிகள் வந்திருந்தனர். ஒட்டுமொத்த போலிஸ் யூனிட்டுகளும், வெட்டாது எஞ்சியிருந்த மரங்களை வெட்டியபடி –இதில் சில 300 வருடங்கள் பழமையானவை- தண்ணீர் பீரங்கிகள், தூக்கும் கிரேன்கள் மற்றும் பிற கனரக சாதனங்களுடன் முன்னேறின. காடு பாதுகாப்பு போராட்டத்தினர் சுமார் ஆறு வருட காலத்தில் அங்கு கட்டியிருந்த 50க்கும் அதிகமான மர வீடுகள் மற்றும் குடில்களையும் ஒன்றன்பின்ஒன்றாக அவர்கள் அழித்தனர். RWE எரிசக்தி நிறுவனம் இந்தப் பகுதியை அதன் Garzweiler II நிலக்கரி (லிக்னைட்) சுரங்கத்துடன் இணைத்துக் கொள்வதற்காக அக்டோபர் 14 அன்று காட்டிலிருந்து அனைவரையும் துப்புரவாக வெளியேற்றும் பரந்த-அளவிலான நடவடிக்கையைத் தொடக்கவிருக்கிறது.

இதனிடையே, இந்த வார இறுதியில் மட்டும் மிளகுத் தூவல்கள் மற்றும் லத்திகள் கொண்டான நடவடிக்கைகளில் பல பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண், மொத்தம் நான்கு பேர் ஆஹன் (Aachen) என்னும் இடத்தில் இப்போதும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “சட்ட அமலாக்க அதிகாரிகளை எதிர்த்தமை” தான் அவர்கள் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

காட்டை துப்புரவுப்படுத்துவது மின் உற்பத்தியின் பாதுகாப்புக்கு அவசியமாயுள்ளதாக RWE கூறுகிறது. குறுகிய-காலம் நிறுத்தி வைத்தாலும் கூட அது திறந்தவெளி சுரங்கத்திலான வேலைகளையும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலான உற்பத்தியையும் கேள்விக்குறியாக்கி விடும் என்று RWE தலைவரான ரோல்ஃப் மார்ட்டின் ஸ்கிமிட்ஸ் தெரிவித்தார். BUND சுற்றுச்சூழல் அமைப்பின் ஆவணங்கள் மற்றும் RWE வரைபடங்களின் அடிப்படையில் பார்த்தால், இது ஒரு பொய் என்பதை தொலைக்காட்சி நிறுவனமான Deutsche Welle இன் ஒரு செய்தி காட்டுகிறது. காட்டை துப்புரவுப்படுத்தல் இல்லாமலேயே கூட, RWE மின் உற்பத்தி நிலையங்களுக்கு இப்போதிருக்கும் விநியோகங்கள் மூன்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட, இந்த ஆண்டின் பிற்பகுதியில் லிக்னைட் சுரங்கம் தோண்டுவதன் எதிர்காலத்தின் மீது கூட்டரசாங்கத்தின் “நிலக்கரி ஆணையம்” முடிவெடிப்பதற்கு முன்பாக, ஏற்கனவே செய்துமுடிக்கப்பட்டு விட்ட வேலையாக இதனை ஆக்கி விடுவதற்காக நிறுவனம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வறட்சி, காட்டுத்தீக்கள் மற்றும் நாசம் செய்கின்ற வெப்பமண்டலப் புயல்கள் ஆகியவற்றினால் விளையும் காலநிலை மாற்றம் எல்லாருக்குமே வெட்டவெளிச்சமாகியிருக்கும் நிலையில், ஜேர்மனி அதன் உலக வெப்பமயமாதல் இலக்குகளுக்கு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், ஜேர்மன் அரசாங்கம் நெருக்குதலில் இருக்கிறது. RWE ஒரு நீதிமன்றத் தீர்ப்பையும் முந்திக் கொண்டு தடுத்து விட விரும்புகிறது. BUND இன் ஒரு புதுப்பித்த நீதிமன்ற வழக்கு, ஹம்பகா காடு ஐரோப்பிய ஒன்றிய உத்தரவுகளின் கீழ் பாதுகாப்பதற்குத் தகுதியானதாகும் என்ற ஒரு தீர்ப்புக்கு கொண்டுசெல்லக் கூடும்.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் NRW மாநில அரசாங்கம் RWEக்குப் பின்னால் தன்னை அணிநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஆயினும் இது வெறுமனே இந்த எரிசக்தி பெருநிறுவனத்தின் இலாப நலன்களைத் திணிப்பது குறித்த விடயம் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் மேல், எந்தவிதமான இடது-சாரி மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கும் எதிராய் ஒரு உதாரணத்தை அமைத்து விடுவதற்காய் CDU-FDP ஆட்சி விரும்புகிறது. கேம்னிட்ஸ், கோதேன் மற்றும் பிற நகரங்களில், நவ-நாஜிக்கள் போலிஸின் இடைஞ்சலில்லாமல் புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடிக் கொண்டும் பீதியடையச் செய்து கொண்டும் இருக்க முடிகின்ற அதேநேரத்தில், டுஸெல்டோர்ஃப் (Düsseldorf) மாநில அரசாங்கம் அமைதியான காடு பாதுகாப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராய் ஆயிரக்கணக்கான போலிஸை குவித்துக் கொண்டிருக்கிறது.

“அவர்கள் மரங்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக நமது அரசை ஒழிக்க விரும்புகிறார்கள்” என்று செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சரான ஹேர்பேர்ட் ரூல் (CDU) வெடித்தார். ஆகவே “நமது பூச்சிய-சகிப்பு சட்ட நிலைப்பாடு” ஐ நிறைவேற்றுவது முக்கியமானதாக இருந்தது. இதேபோல, ஆஹன் போலிஸ் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளராக இருக்கும் பால் கீமேன், ஒளிபரப்பு நிறுவனமான ARDயிடம் திங்களன்று இவ்வாறு கூறினார், “இவர்கள் பலப்பிரயோகத்திலான ஏகபோகத்தை இடைஞ்சல் செய்கிறார்கள்”, சேர்த்துக் கொண்டார், “அடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். அத்துடன் லத்திகள் மற்றும் மிளகுத்தூவல்கள் போன்ற சாதனங்களுக்கும் அனுமதி இருக்கிறது. அவை வெளிப்பட எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” 

ஆகஸ்டு மாத இறுதியில், மாநில ஆளுநர் Armin Laschet (CDU) கூறுகையில், ஹம்பா காடு தொடர்பான சர்ச்சையில் தனது அரசாங்கம் குறுக்கிடாது என்றார். சற்றுகாலத்திற்குப் பின்னர், NRW Minister for Construction Ina Scharrenbach (CDU) கூறுகையில், “நெருப்பு பாதுகாப்பு இல்லாத” காரணத்தால் ஹம்பகா காட்டில் இருந்து குடில்களும் மரவீடுகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றார். அப்போதுமுதலாக போலிஸ் நடவடிக்கை தொடங்கியது, எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஆதரவும் இதற்கு உள்ளது.

ஹம்பகா காட்டில் போலிசின் நடவடிக்கைகள் ஒரு போலிஸ் அரசைக் கட்டுவதின் ஒரு நேரடியான பகுதியாக இருக்கின்றன. மற்ற பல பிராந்தியங்களில் இருக்கிற மாநில அரசாங்கங்களைப் போலவே, NRW நிர்வாகமும் ஜூலையில் ஒரு புதிய மாநில போலிஸ் சட்டத்தை கொண்டுவந்தது. நடமாட்ட மற்றும் ஸ்தாபிப்பு சுதந்திரத்திற்கான உரிமை, ஒருவரின் சொந்த தரவு மீதான சுய-நிர்ணயத்திற்கான உரிமை மற்றும் வேலைநிறுத்தம் செய்வதற்கும் ஒன்றுதிரள்வதற்குமான உரிமை ஆகியவற்றை இது அகற்றுவதோடு, தன்னிச்சையான போலிஸ் நடவடிக்கைகளுக்கு கதவுதிறந்து விடுகிறது.

Baden-Württemberg இல் பசுமைக் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கமும் 2017 நவம்பரில் அதன் போலிஸ் சட்டத்தை மேலும் இறுக்கியது, SPDம் இடது கட்சியும் நிர்வாகத்தில் இருக்கும் Brandenburg இல் ஒரு கடுமையான போலிஸ் சட்டத்திற்கு திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. CDUக்கு இளைய பங்காளிகளாக பசுமைக் கட்சியினர் ஆட்சி செய்கிற Hesse இல், அரசு அதன் அதிகாரங்களை பாரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; வருங்காலத்தில், போலிஸ் அதிகாரிகள் தாக்குதல் துப்பாக்கிகள் போன்ற இராணுவ ஆயுதங்களுடன் ரோந்து சுற்றுவதற்கு இயலவிருக்கிறது.

ஜூலை மாதத்தில் NRW போலிஸ் மசோதாவுக்கு எதிராக 20,000க்கும் அதிகமானோர் டுஸெல்டோர்ஃப் இல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார், ஆர்ப்பாட்டங்கள் இன்னும் நின்றுவிடவில்லை. மூனிச்சில் புதிய பவாரியன் போலிஸ் சட்டத்தை எதிர்த்து 40,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர், ஹனோவரில் சுமார் 10,000 பேர் பங்குபெற்ற இன்னுமொரு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இருந்தபோதும், NRW, இந்த இலையுதிர் காலத்தில் மாநில அரசாங்கம் அதன் போலிஸ் சட்டத்தை நிறைவேற்றி விட விரும்புகிறது. மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் SPD இதற்கு விருப்பத்துடன் ஒத்துழைப்பதற்கு முன்வந்திருக்கிறது.