ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

12,800 immigrant children detained in American internment camps

அமெரிக்க தடுப்புக்காவல் முகாம்களில் 12,800 புலம்பெயர்ந்த குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்

Eric London
14 September 2018

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவுக்கு தங்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வராத ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இளவயதினரைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும் ஒரு நடவடிக்கையை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக புதனன்று இரவு நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது.

அந்த செய்தியின்படி, குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையமும் (ICE) சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையமும் (CBP) பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத சிறுவர்களைக் கைது செய்யும் எண்ணிக்கையை, மே 2017 இல் சராசரியாக ஒவ்வொரு இரவும் 2,400 ஆக இருந்ததில் இருந்து இம்மாதம் ஒவ்வொரு இரவும் 12,800 ஆக அண்மித்து ஆறு மடங்கு, அதிகரித்துள்ளது. அமெரிக்கா எங்கிலும் அமைந்துள்ள நூற்றுக்கணக்கிலான குழந்தைகளுக்கான தடுப்புக்காவல் முகாம்கள் மற்றும் இடப்பெயர்வு மையங்களின் வலையமைப்பு இப்போது முழு கொள்திறனை எட்டி வருகின்றது, அவற்றில் புலம்பெயர்ந்த இளைஞர்கள் தடுப்புக்காவல் அறைகளிலும் (cells) கூடார வீடுகளிலும் (bunk houses) அடைக்கப்பட்டு, பாதுகாவலர்களால் உடல்ரீதியிலும், உணர்வுபூர்வமாகவும், பாலியல்ரீதியிலும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகம் தடுப்புக்காவல் முகாம் நகரங்களின் அளவை வெகுவாக விரிவாக்க தயாரிப்பு செய்து வருகிறது.

குழந்தைகளை 20 நாட்களுக்கு மேல் அரசு அடைத்து வைப்பதைத் தடுக்கும் 1997 நீதிமன்ற தீர்ப்பைக் கைவிடுவதாக கடந்த வியாழனன்று நிர்வாகம் அறிவித்தது, இதன் அர்த்தம் இனி அரசாங்கம் காலவரையின்றி குழந்தைகளை அடைத்து வைக்கும்.

செவ்வாயன்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவிக்கையில், அது எல் பாசோவுக்கு வெளியே அமைந்துள்ள டொர்னில்லோ கூடார நகரத்தின் தடுப்புக்காவல் முகாம் அளவை மும்மடங்கு விரிவாக்கி வருவதாக அறிவித்தது. நீதித்துறையின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையின் கீழ் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை "தற்காலிகமாக" தங்க வைக்க ஜூனில் அமைக்கப்பட்ட அந்த முகாமில் இப்போது 3,800 குழந்தைகள் உள்ளனர்.

ஆவணமற்ற உறவினர்களைப் பீதியூட்டுவதற்கும் இளவயதினரைச் சிறையில் தனிமைப்படுத்துவதற்குமான ஒரு அப்பட்டமான முயற்சியாக, குடியேற்ற அதிகாரிகளிடம் கைரேகைகளைச் சமர்பிக்க உரிய பொறுப்பாளர்களைக் கோரும் ஒரு புதிய கொள்கையை நிர்வாகம் ஜூனில் தொடங்கியது. இதன் விளைவாக, 2018 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் CBP ஆல் 40,000 க்கும் அதிகமான ஆதரவாளரற்ற குழந்தைகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்தது.

காவலில் வைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்த பாரிய அதிகரிப்பானது, பெடரல் நீதிபதி ஒருவர் மே மாதம் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை நடைமுறைப்படுத்தி பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட எல்லா குழந்தைகளையும் மீண்டும் உரியவர்களுடன் ஒப்படைக்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு ஆறு வாரங்களுக்குப் பின்னர் வருகிறது.

நிர்வாகம் பட்டவர்த்தனமாக நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்துள்ளதுடன், பிரிக்கப்பட்ட குழந்தைகளின் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களைத் தேடுவதற்காக குவான்டனாமா, ஹொன்டுராஸ் மற்றும் எல்-சல்வடோரின் தொலைதூர கிராமங்களின் கதவுகளைத் தட்டுதவற்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறு அரசு-சாரா அமைப்புகளைப் பலவந்தப்படுத்தி வருகிறது.

 “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையின் விளைவாக 400 க்கும் அதிகமான குழந்தைகள் அவர்களின் குடும்பங்களை விட்டு பிரிக்கப்பட்டுள்ளனர். AZ Central சமீபத்தில் குறிப்பிட்டவாறு, “வேண்டுமென்றே அல்லது தவறுதலாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெற்றோர்கள் மீண்டும் இணைவதற்கான அவர்களின் உரிமையை இழந்துவிட்டார்கள் என்பதால், அனேகமாக ஆயிரக் கணக்கான குடும்பங்கள் ஒருபோதும் மீண்டும் இணையாமலேயே போகலாம்,” என்று குறிப்பிட்டது.

Times இன் ஆரம்ப செய்தி ஒருபுறம் இருக்க, குழந்தைகள் அடைக்கப்படுவதில் ஆறு மடங்கு அதிகரிப்பு குறித்த வெளியீடு பெருநிறுவன ஊடகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பத்திரிகை நேரத்தில், இந்த பிரச்சினை குறித்து CNN, Politico, Fox News, MSNBC, The Hill, மற்றும் ABC News என எந்த ஊடகத்திலும் பேசப்படவில்லை.

மக்களின் சீற்றத்திற்கு விடையிறுப்பாக, ஜனநாயக கட்சி, குடும்பங்களைப் பிரிக்கும் ட்ரம்ப் கொள்கைக்கு போலியான எதிர்ப்பைக் காட்டிய நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்ப் தாக்குதலுக்கு அடித்தளம் அமைத்ததற்கு ஜனநாயகக் கட்சியினரே பொறுப்பாகின்றனர். ஒபாமாவும் ஆயிரக் கணக்கான குழந்தைகளை அடைத்து வைத்திருந்தார், குறிப்பாக 2014 இல் புலம்பெயர்வு அதிகரித்த போது. இப்போது ஜனநாயகக் கட்சியினர், புலம்பெயர்ந்தோரின் பிரச்சினையை ஏறத்தாழ முழுமையாக இந்த நவம்பர் இடைத் தேர்தல்களில் கைவிட்டுள்ளனர்.

PBS குறிப்பிட்டவாறு, “நவம்பர் செனட் தேர்தல் போட்டியில் போட்டியிடும் எந்தவொரு ஜனநாயகக் கட்சியினரும் ICE ஐ கலைக்க வேண்டுமென அறிவுறுத்தவில்லை.” உண்மையில் மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட போட்டியிடும் செனட் ஜனநாயக கட்சியினரில் மிகவும் பலவீனமான ஆறு பேரில் ஐந்து பேர், இந்த கடைசி பதவிகாலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ட்ரம்புக்கு இணக்கமாக வாக்களித்திருந்தனர்: பில் நெல்சன் (43 சதவீதம்), கிளையர் மெக்காஸ்கில் (45 சதவீதம்), ஜோ டொன்னெல்லி (55 சதவீதம்), ஹெய்டி ஹெய்ட்காம்ப் (55 சதவீதம்) மற்றும் ஜோ மன்சின் (61 சதவீதம்).

பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினரில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், சிறிய குற்றங்கள் கொண்டிருக்கும் நூறாயிரக் கணக்கானவர்களை நாடு கடத்துவதற்கு இட்டுச் செல்லும் ஒரு புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு சட்டமசோதாவை நிறைவேற்ற வாக்களித்தனர். புலம்பெயர்ந்தவர்கள் மீதான துஷ்பிரயோகத்திற்காக இந்த வசந்தகாலத்தில் முதலைக் கண்ணீர் வடித்த பிரதிநிதிகள் சபையின் இலத்தீனோ வேட்பாளர் தேர்வு தேர்தல் அதிகாரி Michelle Lujan-Grisham உம் அந்த சட்டமசோதாவுக்கு ஆதரவளித்தவர்களில் ஒருவராவார். “முற்போக்கு ஜனநாயகவாதிகள்" என்று சுய-பிரஸ்தாபம் செய்து கொண்ட பலரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் அல்லது வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டனர், இதில் DNC துணை தலைவர் கீத் எலிசன் மற்றும் வடக்கு கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளின் அண்மித்து ஒட்டுமொத்த குழுவும் உள்ளடங்கும்.

பதவி வகித்து வரும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக பிரதிநிதிகள் சபை ஆசனங்களுக்காக போட்டியிட்டு வரும் பல ஜனநாயகக் கட்சியினர், வெளிப்படையாகவே புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு திட்டங்களுடன் போட்டியிடுகின்றனர்.

அரிசோனா ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பெண் பிரதிநிதியும் செனட் வேட்பாளருமான கிறிஸ்டென் சினெமா, கடந்த மாதம் கூறுகையில் “ICE சில முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது, அபாயகரமான மற்றும் குற்றகரமான அன்னியர்களை வெளியேற்றுவதற்கு ICE பொறுப்பேற்றுள்ளது, இந்த அன்னியர்கள் கற்பழிப்பு அல்லது கொலையில் ஈடுபட்டு மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள்,” என்று கூறி, ட்ரம்பை எதிரொலித்தார்.

கென்டக்கியில் இருந்து நாடாளுமன்றத்திற்காக போட்டியிடுகின்ற அமி மெக்கிராத் ICE-எதிர்ப்பு போராட்டக்காரர்களை "தவறானவர்கள்" என்று கண்டித்ததுடன், ICE “மிகவும் தொழில்முறை சார்ந்து" இருப்பதற்காக மற்றும் "நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் ஓர் இன்றியமையா செயல்பாட்டைச் செய்து வருவதற்காக" அதை பாராட்டினார். டெக்சாஸ் வேட்பாளர் ஜினா ஓர்டிஸ் ஜோன்ஸ், பன்முகத்தன்மை மற்றும் "அமெரிக்க கனவு" குறித்த அர்த்தமற்ற கருத்துக்களை, “நமது தேசத்தின் எல்லை பாதுகாப்புடன் சமரசப்படுத்திக் கொள்ள முடியாது,” மற்றும் "அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நுட்பமான, பொறுப்பான புலம்பெயர்வு கொள்கை சீர்திருத்தம் நமக்கு வேண்டும்,” என்ற அச்சுறுத்தல்களுடன் இணைத்தார்.

பெருந்திரளான மக்கள் நாடு கடத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்த அனைத்து பிரதான சட்டங்களையும் நிறைவேற்றுவதில் ஜனநாயகக் கட்சி தான் பொறுப்பாக இருந்தது என்ற உண்மைக்கு இடையிலும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற அமைப்புகள் புலம்பெயர்வு-விரோத, முதலாளித்துவ-சார்பு, ஏகாதிபத்திய-சார்பு ஜனநாயகக் கட்சியை "இடதுக்கு" நகர்த்த அழுத்தமளிக்க முடியுமென வாதிடுகின்றன. “ICE ஐ எவ்வாறு கலைப்பது" என்று தலைப்பிட்ட ஜூன் 29 கட்டுரை ஒன்றில், DSA-ஆதரவிலான Jacobin சஞ்சிகை ஜனநாயகக் கட்சியினருக்கு அழுத்தமளிக்குமாறு பின்வருமாறு அதன் வாசகர்களுக்குக் கோரியது:

“அதன் அடிப்படை கொள்கைகளுக்காக ICE கலைக்கப்படுவதை ஜனநாயகக் கட்சியினர் ஆதரிக்க வேண்டும்: பொதுவாக மிகப் பெரியளவில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு தளமாக விளங்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையை அது சடரீதியில் மேம்படுத்துகிறது. … அந்த அமைப்பைக் கலைப்பதற்கான முயற்சிகள் குறுகிய காலத்தில் வெற்றியடையவில்லை என்றாலும் கூட, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் அவர்கள் எந்த பக்கம் நிற்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்கும், ஒரு போக்கை வரைவதற்கும் அது மதிப்புடையதாக இருக்கும். நிறைய ஜனநாயகக் கட்சியினர் நம் தரப்பில் வருகையில், ICE இன் கலைப்பு ஒரு யதார்த்தமாக மாறுவதை நோக்கி நகரும்.”

ஜனநாயகக் கட்சியின் "ஆதரவுதளம்", புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் பாசிசவாத தாக்குதல்களை வெறுக்கும் பெருந்திரளான தொழிலாளர்களோ இளைஞர்களோ இல்லை, அது வோல் ஸ்ட்ரீட் வங்கிகள், இராணுவ-உளவுத்துறை எந்திரமாகும், ICE மற்றும் CBP முகவர்கள் அவர்களின் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்னதாக பாராட்டி புகழ்ந்துரைத்து வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் ட்ரம்பின் புலம்பெயர்வு கொள்கைகளுடன் ஒத்துழைக்க அதன் விருப்பத்தை சூளுரைக்கும், இது ஜனவரி 2018 இல் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் அறிக்கையில் எதிரொலித்தது: “எவருமே, நமக்கு பலமான எல்லை பாதுகாப்பு வேண்டும் என்பதில் உடன்படாமல் இருக்க மாட்டார்களென நான் நினைக்கிறேன். நமக்கு பலமான எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களுடன் ஜனாதிபதி இணைந்து செயல்பட விரும்பினால், அதை செய்யலாம்,” என்றார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் "தேசிய பாதுகாப்பு" மற்றும் "எல்லை பாதுகாப்புக்காக" அடிப்படை ஜனநாயக உரிமைகளை அகற்றுவது நியாயமானதே என்ற அலுத்துபோன பொய்யைத் திரும்ப திரும்ப கூறுகின்றன. அதிகாரத்திலிருந்து ஆளும் வர்க்கத்தை அகற்றுவதற்கும், அவர்களின் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அவர்களின் செல்வ வளங்களைப் பறிமுதல் செய்வதற்கும், எல்லைகளை அகற்றுவதற்கும் மற்றும் இந்த பூமியில் பாதிப்பின்றி பயணிப்பதற்கும் அனைத்து தொழிலாளர்களின் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பலமான பாரிய இயக்கம் அவசியப்படுகிறது.