ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India cancels talks with Pakistan, threatens military action

இந்தியா பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இரத்துசெய்வதோடு இராணுவ நடவடிக்கைக்கு மிரட்டுகிறது

By Keith Jones
24 September 2018

சனிக்கிழமையன்று இந்திய இராணுவப் படை தளபதியான பிபின் ராவத், இந்த வாரத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் சமயத்தில் இருநாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பதற்கு பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு விட்டு பின் இந்திய அரசாங்கம் திடீரென்று செய்த தலைகீழ் மாற்றத்தை பாராட்டிய அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராய் இராணுவ நடவடிக்கைக்கும் மிரட்டல் விடுத்தார்.

“நமது அரசாங்கத்தின் கொள்கை நன்கு தெளிவாகவும் இரத்தினச்சுருக்கமாகவும் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தளபதி ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒருசேர நடக்க முடியாது என்ற உண்மையை நாம் ஒளிவுமறைவற்று வெளிப்படுத்தியிருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.”

நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியால் தலைமை கொடுக்கப்படும் இந்திய அரசாங்கம், பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட பிரதமரான இம்ரான் கான் பேச்சுவார்த்தைகளுக்கு வழங்கிய ஆலோசனையை வியாழனன்று ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதன்பின் 24 மணி நேரம் கழிவதற்கு முன்பே, இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜுக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரான ஷா முகமது குரேஷிக்கும் இடையில் நடைபெறவிருந்த கூட்டத்தை புதுடெல்லி இரத்து செய்துவிட்டது.

வியாழனன்று இரவு ஜம்மு-காஷ்மீரில் அவர்களது வீடுகளில் இருந்து இந்திய-விரோத காஷ்மீர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டிருந்ததையும், முன்னதாய் அந்த வாரத்தில் இந்தியாவையும் பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமிருந்துமான துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்த இந்திய சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டதாக சொல்லப்படுவதையும், இந்தியா காரணமாகக் கூறியது. புர்ஹான் வானி —இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாத குழுவின் 21 வயது தளபதியான இவர் 2016 ஜூலையில் கொல்லப்பட்டமை இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது— நினைவாக பாகிஸ்தான் தபால் அலுவலகம் தபால்தலைகளின் ஒரு வரிசையை வெளியிட்டதும் மூன்றாவது காரணமாய் இந்தியாவால் கூறப்பட்டது.

இந்தியாவின் அணு ஆயுத வல்லமையுடைய எதிரிக்கு எதிராய் ஒரு மூர்க்கமான கொள்கையைப் பின்பற்றுவதற்கு தயாராயிருந்த காரணத்தால் கூடுதல் மூத்த அதிகாரிகளையும் தாண்டி பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜெனரல் ராவத், சனிக்கிழமையன்று கூறிய கருத்துக்களில், அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை ஆதரிப்பதையும் தாண்டிச் சென்றார், இந்தியா பாகிஸ்தானுக்கு “வலி”யை உண்டாக்கியாக வேண்டும் என்று அறிவித்தார். “பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் இராணுவமும் நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு பழிதீர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுப்பது அவசியம். ஆம், அவர்கள் கொடுப்பதை நாம் திருப்பிக் கொடுப்பதற்கான நேரமிது, அதே வகையான காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவது மூலமாக இல்லாவிட்டாலும் கூட. ஆனால் எதிர்ப்பக்கமும் இதே வலியை உணர்ந்தாக வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.”

தெற்கு ஆசியாவின் 1947 வகுப்புவாதப் பிரிவினையில் இருந்து பிறந்த பரம-வைரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாய் முடங்கிப் போய் இருந்து வந்திருக்கின்றன.

2016 செப்டம்பர் பிற்பகுதி தொடங்கி, இந்தியாவும் பாகிஸ்தானும், முழுமூச்சிலான போருக்கான இரத்தக்கொதிப்பேற்றும் மிரட்டல்களையும் அத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியெங்கிலும் (LoC) இருதரப்பிலும் ஏராளமான இராணுவத்தினர் மற்றும் அப்பாவி மனிதர்களின் சேதாரங்களுக்கு காரணமாகின்ற கனரக ஆட்டிலறி மற்றும் துப்பாக்கிச் சூடுகளையும் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாய் நடத்திக் கொண்டு வந்திருக்கின்றன.

இருப்பினும், சென்ற மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தமையானது பதட்டங்களைத் தணிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதாக புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே கூறின.

புது டெல்லியிடம் இருந்து வெள்ளியன்று வந்த அறிவிப்புக்கும் மற்றும் ராவத்தின் மிரட்டல்களுக்கும் பாகிஸ்தான், பேச்சுவார்த்தைகளுக்கான தனது ஆலோசனையை மீண்டும் முன்வைப்பதன் மூலமும் போருக்கு தான் ஆயத்தமாக இருப்பதை அறிவிப்பதன் மூலமும் பதிலிறுப்பு செய்திருக்கிறது. “நட்பு”க்கு பாகிஸ்தான் முன்வருவதை அதன் “பலவீனமாக” இந்தியா புரிந்துகொள்ளக் கூடாது என்று எச்சரித்த பிரதமர் இம்ரான் கான் கூறினார், “எங்கள் மக்கள் தயாராய் இருக்கிறார்கள், எங்களது பீரங்கிகளும் கூட தயாராகவே இருக்கின்றன.”

இந்தியா செய்த தலைகீழ் மாற்றம் ஒரு மோசடி என்றும், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு முன்செல்வதற்கு அது ஒரு போதும் விரும்பியதில்லை என்றும் இஸ்லாமாபாத் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த வாரத்தில் ஐ.நா பொது சபைக் கூட்டத்தை ஒட்டி இராஜதந்திர நடவடிக்கைகள் நிறைய நடக்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடும் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகத் தான், முதலில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்பதாக காட்டி விட்டு ஒருநாள் தள்ளி பின்வாங்குவதற்கு அது முடிவுசெய்திருந்தது.

இந்திய உயரடுக்கினர், தெற்கு ஆசியாவில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியாக இந்தியா எழுந்து வருவதில் துணிச்சலடைந்து, புது டெல்லியின் மேலோங்கிய நிலையை விளக்கமான விதத்தில் ஏற்றுக்கொள்வதற்கு பாகிஸ்தானை அச்சுறுத்தி பணியவைக்க தீர்மானத்துடன் இருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, காஷ்மீரில் இந்திய-விரோத கிளர்ச்சிக்கு எந்த தடவாள உதவியும் வழங்குவதில்லை என்பதை இஸ்லாமாபாத் உறுதிசெய்ய வேண்டும் என்று அது கோருகிறது. இந்தியாவின் ஒரேயொரு முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலத்தின் மக்களது அந்நியப்படலை பாகிஸ்தானின் சூழ்ச்சி வேலைகளாகக் குறைத்துக் காட்டுகின்ற ஒரு விவரிப்பும் இதனுடன் கரம்கோர்த்து நடத்தப்படுகிறது.

உண்மையில், இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் அரசியல்சட்டரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சுயாட்சியை மீறி வந்திருப்பதோடு அதன் தேர்தல்களிலும் முறைமீறல்கள் செய்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாய், இந்திய பாதுகாப்புப் படைகள் ஜம்மு காஷ்மீரில் ஒரு “அழுக்கான” கிளர்ச்சி-எதிர்ப்புப் போரை நடத்தி வந்திருக்கின்றன, மாநிலத்தின் மக்களை ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கும், சித்தரவதைக்கும், காணாமல் போதல்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்தமான தண்டனைகளுக்கும் ஆட்படுத்தி வந்திருக்கின்றன.

காஷ்மீரின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளது ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளுக்கு பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருக்கும் குரோதமும் சளைத்ததல்ல. தனது சொந்த பிற்போக்கான புவி-மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பிற்போக்கான இஸ்லாமிய சக்திகளை ஊக்குவித்து, கிளர்ச்சியை அது கைப்புரட்டு செய்து வந்திருக்கிறது.

வெளியுறவு அமைச்சர்களது பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக (BJP) அரசாங்கத்தின் அரசியல் கணக்குகளுடன் நன்கு பொருந்திப் போவதாய் இருக்கிறது. 2016 செப்டம்பர் 28-29 அன்று பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியப் படைகள் நடத்திய ஆத்திரமூட்டலான தாக்குதலின் இரண்டாவது ஆண்டுதினத்தைக் குறிக்கின்ற விதமாய் செப்டம்பர் 29 தினத்தை “குறிவைத்த தாக்குதல்கள்” (Surgical Strikes) தினமாக அது பிரகடனம் செய்திருக்கிறது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உரையாற்றுகிறதாகவும், இராணுவப் படைகளுக்கு ஆதரவைக் கூறுகின்ற கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் எழுதுவதற்கு மாணவர்களை கவர்வதற்குமாய் நாட்டின் பல்கலைக்கழகங்கள் அணிவகுப்புகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அது “ஆலோசனை” அளித்திருக்கிறது.

ஆயினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மோதல்போக்கில் பணியவைக்கும் நிலைப்பாட்டுக்கு இந்திய அரசியல் ஸ்தாபகமெங்கிலும் வலுவான ஆதரவு இருக்கிறது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பேச்சுவார்த்தைகளுக்கான பாகிஸ்தானின் ஆலோசனைக்கு பாஜக அரசாங்கம் அதன் சொற்ப ஆயுள் கொண்ட ஏற்பை அளித்ததை அது கண்டனம் செய்தது, அது இரத்து செய்யப்பட்டபோது, பாஜக அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கே ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்கக் கூடாது என்று அது புகாரிட்டது.

வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு புதுடெல்லி ஏற்பளித்து பின் இரத்து செய்ததற்கு இடையிலான மிகக்குறைந்த காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இந்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் “மகத்தான செய்தி” என்று அறிவித்தது.

கடந்த தசாப்த காலத்தில், சீனாவுக்கு எதிரான தனது இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றும் நோக்கத்துடன் அதன் மீது மூலோபாய அனுகூலங்களைப் பொழிந்து வரும் வாஷிங்டன், அதேநேரத்தில் பாகிஸ்தானுடனான உறவுகளை ஒரேயடியாக கீழிறக்கி விட்டிருந்தது. ஒரு முக்கிய நேட்டோவில்-இல்லாத கூட்டாளியாக இஸ்லாமாபாத்திற்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்கா மறுக்க முடியும் என்றும், அத்துடன் இஸ்லாமாபாத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அவசரக் கடன் ஒன்றை தடுப்பதற்கும் ட்ரம்ப்பும் அவரது தலைமை உதவியாளர்களும் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களும் இதில் அடங்கும். ஆயினும் நாட்டின் பெரும்பகுதியை ஆப்கான் போருக்கான ஆதரவில் ஒரு கொலை மண்டலமாக உருவாக்கி விட்டிருக்கும் பாகிஸ்தானை நெருக்கிப் பணியவைக்க அமெரிக்கா இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறது, புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையில் பதட்டங்கள் குறைவது உதவிகரமாக இருக்கும் என்று அது கணக்குப் போடுகிறது.

இந்தியா, நான்கு ஆண்டு கால பாஜக அரசாங்கத்தின்கீழ், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முனைப்பில் அதன் இணைப்பை ஒரேயடியாக அதிகரித்திருக்கிறது, பென்டகனின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் வேண்டியபோது பயன்படுத்திக் கொள்வதற்கு தனது வான்தளங்களையும் துறைமுகங்களையும் முழுக்கத் திறந்து விட்டிருப்பது, மற்றும் ஆசிய-பசிபிக்கில் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வது ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை மிகப்பெருமளவில் சார்ந்திருக்கிறது, அதற்கு மிகப்பெருமளவில் விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது என்ற நிலையிலும் கூட, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளுக்கு, தயக்கத்துடன் தான் என்றாலும், இணங்கிச் செல்வதற்கும் இந்தியா தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது.

ஆயினும், பாகிஸ்தான் விடயமென்று வரும்போது, வாஷிங்டனை உதாசீனம் செய்யவும் இந்தியா தயாராக இருக்கிறது, அதன் மையமான மூலோபாய நலன்களாக அது கருதுவனவற்றை தாட்சண்யம் பார்க்காமல் பின்தொடர்வதற்குத் தேவையான மிகப்பெரும் இடத்தையும் நெம்புநிலையையும் அது எதிர்பார்க்கிறது என்பதே அதன் காரணமாகும்.

இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கு இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் அளித்த பதிலிறுப்பில், அடுத்த ஆண்டு மே மாதம் வரவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடந்து முடிகின்ற வரையில் “திறம்பட்ட சமாதான முன்னேற்றம்” எனச் சொல்லப்படுவதை புதுப்பிப்பதற்கான எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் இருக்கப் போவதில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று அவை கூறின.

இத்தகைய கூற்றுக்கள், இந்திய-பாகிஸ்தான் மோதலின் எரிதன்மையையும், எந்த அளவுக்கு அது உலக புவியரசியலின் எல்லாவற்றையும் விட அமெரிக்கா-சீனா மோதலின் சூறாவளிப்புயலுடன் பின்னிப்பிணைந்ததாக ஆகியிருக்கிறது என்பதையும் மிகப்பெருமளவுக்கு குறைமதிப்பீடு செய்வதாக இருக்கின்றன. இந்தியாவை தனது வேட்டையாடும் மூலோபாய அபிலாசைகளுக்கேற்ப கூர்தீட்டுவதற்கான அமெரிக்காவின் முனைப்பு, பிராந்தியத்தில் அதிகார சமநிலையை புரட்டிப் போட்டிருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. தெற்கு ஆசியா போட்டிக் கூட்டணிகளாக —அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராய் சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டணி— ஸ்தூலப்படுவதற்கு இட்டுச்செல்கின்ற விதத்தில், பெய்ஜிங் உடன் தனது நீண்டகால மூலோபாய கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் தந்திரோபாய, அதாவது யுத்தக்கள, அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது ஆகிய இரண்டுக்கும் இது இஸ்லாமாபாத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது.