ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pompeo visits Pakistan to demand “reset” in support for Afghan war

ஆப்கான் போருக்கு ஆதரவாக பாக்கிஸ்தானை “மீட்டமைக்க” பொம்பியோ விஜயம் செய்கிறார்

By V. Gnana and Athiyan Silva 
7 September 2018

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோவும், மரைன் கோர்ப்ஸ் பணியாளர்களின் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டும் புதனன்று பாக்கிஸ்தானுக்கு ஒரு நான்கு மணிநேர குறுகிய விஜயத்தை மேற்கொண்டனர். சமீபத்தில் பாக்கிஸ்தானில் பிரதம மந்திரிக்கான தேர்தல் நடந்துமுடிந்து, அதில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர விளையாட்டு வீரரான இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் இரத்தக்களரியான நேட்டோ போரில் அதன் ஆதரவை மேலும் தொடருவதற்கு இஸ்லாமாபாத்தை மிரட்டி நடவடிக்கையில் ஈடுபடவைக்க நோக்கம் கொண்டு பாக்கிஸ்தானுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

அப்போது, பிரதமர் கான், பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா ஆகியோரை பொம்பியோ சந்தித்தார். “எங்களது கூட்டுப் பொறுப்புக்களை வழங்குவதற்கான சரியான நேரம் இதுவே என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்,” என்று பொம்பியோ கூறினார். மேலும், “அடுத்தப் பக்கத்தைத் திருப்பி இன்னும் முன்னேறத் தொடங்குவோம் என நான் நம்புகிறேன், என்றாலும் உண்மையான பல எதிர்பார்ப்புக்களும் உள்ளன. அதாவது எங்களுக்கு உதவுவதில் பாக்கிஸ்தான் தீவிரமாக ஈடுபட வேண்டும்…” என்றும் அவர் அறிவித்தார்.

பொம்பியோ திரும்பிச்சென்ற பின்னர், “பிராந்திய அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்திவருகின்ற பயங்கரவாதிகளுக்கும் போராளிகளுக்கும் எதிராக நீடித்த மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு பாக்கிஸ்தானுக்கு” அவர் அழைப்பு விடுத்தார் என இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.

பூகோள புவிசார் அரசியலில் வெடிக்கும் மாற்றங்களுக்கு மத்தியில், பாக்கிஸ்தானின் வரலாற்று போட்டியாளரான இந்தியாவிற்கு பொம்பியோ தொடர்ந்து பயணம் செய்தார், இந்நிலையில், வாஷிங்டன் அதன் நீண்டகால மூலோபாயப் போட்டியாளரான சீனாவுடனான மோதலில் ஒரு முக்கிய பிராந்திய நட்பு நாடாக அதனை தயார்ப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குண்டுவீச்சுக்களையும், ட்ரோன் (ஆளில்லா விமான) கொலைகளையும் விரிவாக்கம் செய்வதற்காக, அமெரிக்க கோரிக்கைகளுக்கு இஸ்லாமாபாத் கீழ்ப்படிய வேண்டும், அல்லது வாஷிங்டன் இந்தியாவுடனான அதன் உறவுகளை அபிவிருத்தி செய்து வரும் நிலையில், அது இழக்க நேரும் என்பதுதான் ஒரு தெளிவான செய்தியாக இருந்தது.

பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர், நிதி ரீதியாக பாக்கிஸ்தானை திணறடிக்க வாஷிங்டன் பலமுறை அச்சுறுத்தியது. வாஷிங்டன் “முட்டாள்தனமாக பாக்கிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக நிதியுதவியை வாரி வழங்கியுள்ளது.  ஆனால் அவர்களோ எங்களது தலைவர்களை முட்டாள்கள் எனக் கருதி பொய்களையும் வஞ்சகத்தையும் தவிர வேறெதையும் திருப்பித் தரவில்லை. அவர்கள் அடைக்கலம் கொடுக்கும் பயங்கரவாதிகளையே நாங்கள் வேட்டையாடுகிறோம், அதுவும் சிறு உதவியுடன், இனி அதுவுமில்லை!” என்று ஒரு புத்தாண்டு ட்வீட்டில் எரிச்சலடைந்த தொனியில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.

பொம்பியோ பயணத்திற்கு சற்று முன்னதாக, பாக்கிஸ்தானுக்கு வழங்கிவரும் கூட்டு ஆதரவு நிதியான (Coalition Support Fund) 300 மில்லியன் டாலரை வாஷிங்டன் இரத்து செய்தது, பாக்கிஸ்தானுக்குள் ஆப்கானிய எதிர்ப்பு ஆதரவாளர்கள் மீதான இராணுவத் தாக்குதல் குறித்து இத்தொகை வழங்கப்பட்டு வந்தது. “தெற்காசிய மூலோபாயத்திற்கு ஆதரவாக பாக்கிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய காரணத்தினால், எஞ்சியிருந்த 300 மில்லியன் டாலருக்கு மறுதிட்டம் வகுக்கப்பட்டது” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் Lt. Col. கோன் பால்க்னர் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, பாக்கிஸ்தான் ஆளும் வட்டாரத்திற்குள் பிரபலமற்ற ஒரு நபரான சால்மே கலில்ஜாத் என்பவரை ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அமெரிக்க சிறப்பு ஆலோசகராக நியமித்து பொம்பியோ அறிக்கை வெளியிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இறக்குமதியை சமாளிக்கும் அளவிற்கான பாக்கிஸ்தானின் சரிந்துவரும் டாலர் இருப்புகளுடன், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வரும் (International Monetary Fund-IMF) கடன்களையும் வெட்டுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். ஞாயிறன்று, லண்டனின் Financial Times பத்திரிகை, 12 பில்லியன் டாலர் IMF பிணைய நிதியைப் பெற முனைவதற்கான திட்டங்களை மூத்த பாக்கிஸ்தானிய அதிகாரிகள் வகுத்து வருகின்றனர், என்றாலும், இது பாக்கிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்குதல்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தது.

சீனாவை நிதி ரீதியாக சேதப்படுத்துவதற்கான, மற்றும் பாக்கிஸ்தான் உடனான அதன் பொருளாதார உறவுகளை வெட்டுவதற்கான முயற்சியில், இந்தக் கடனைப் பெறுவதற்கும் அவர்கள் தடையாக இருக்கலாம் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தி வருகின்றனர். CNBC தொலைக்காட்சிக்கு பொம்பியோ பின்வருமாறு தெரிவித்தார்: “தவறு செய்யாதீர்கள். IMF என்ன செய்கிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம். IMF நிதியின் பகுதியாக இருக்கும் அமெரிக்கா டாலர்களுடன் IMF இன் வரிசெலுத்துவோர் டாலர்களையும் சீனப் கடன்பத்திரதாரர்களையோ அல்லது சீனாவையோ பிணை எடுப்பதற்கு எந்தவித காரணமும் கிடையாது.”  

அதாவது, சீனா-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத்தைக் (China-Pakistan Economic Corridor-CPEC) கட்டமைப்பதற்கு 60 பில்லியன் டாலருக்கு அதிகமாக சீனா முதலீடு செய்வது மீதான அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையே இது பிரதிபலிக்கிறது. பாக்கிஸ்தானிய துறைமுகமான குவடாரில் எண்ணெய் சேமிப்பு வசதிகளையும், மற்றும் குவடாரில் இருந்து பாக்கிஸ்தான் வழியாக, மற்றும் மேற்கு சீனாவில் உள்ள கஷ்கர் வரையிலுமான மலைப்பாங்கான பாக்கிஸ்தானிய-சீன எல்லைப்பகுதிகள் ஊடாக குழாய்வழிகள், இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை உள்ளடக்கி 3,000 கிமீ வலையமைப்பையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. மேலும், விமான போக்குவரத்து, இரயில் உள்கட்டமைப்பு, காற்று மற்றும் நீர் மின்சக்தி மற்றும் ஃபைபர்-ஆப்டிக் தகவல்தொடர்பு ஆகியவற்றிற்கு இது ஒத்துழைக்கிறது என்பது இன்றியமையாதது, என்றாலும், இவையனைத்தும் வாஷிங்டனால் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது போரைத் தொடங்கியுள்ள நிலையில், 2001ல் பாக்கிஸ்தானுக்கு வாஷிங்டன் விடுத்த எலும்பை முறிக்கும் விதிமுறைகளைத்தான் பொம்பியோவின் விஜயம் நினைவூட்டியது. அப்போதைய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலரான ரிச்சார்ட் ஆர்மிட்டேஜ், சிறிது காலத்திற்கு முன்பு வரை தாலிபானுடன் வாஷிங்டன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தது என்றாலும், தாலிபான் உடனான தனது உறவுகளை முறித்துக்கொண்டு படையெடுப்புக்கு பாக்கிஸ்தான் உதவவில்லை என்றால், “மீண்டும் கற்காலத்திற்கு இட்டுச்செல்லும் வகையில்” பாக்கிஸ்தான் மீது குண்டுவீசப்படும் என்று அச்சுறுத்தி இஸ்லாமாபாத்துக்கு மிரட்டல் விடுத்தார்.

17 ஆண்டுகால போருக்குப் பின்னரும், மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் பாக்கிஸ்தானில் அமெரிக்க ட்ரோன் (ஆளில்லா விமான) கொலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னரும், அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகள் இன்னும் மோசமாக தற்போது அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் பாக்கிஸ்தானிய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் பரந்த எதிர்ப்பு நிலவுகின்ற போதிலும், மற்றும் அமெரிக்க கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதில் பாக்கிஸ்தானுக்கு பரந்த பொருளாதாரச் செலவினங்கள் ஏற்படுகின்ற போதிலும், இஸ்லாமாபாத்துக்கு எந்தவித விருப்பத் தேர்வையும் வழங்குவதற்கு உத்தேசிக்க வாஷிங்டன் மறுப்பதுடன், அதன் கோரிக்கைகளுக்கு அவமானகரமாக சரணடைய வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் நேட்டோ இரத்தம்சிந்தவைப்பில் இணையுமாறு இஸ்லாமாபாத்தை இது கோருகிறது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்திற்குள், 1,692 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 3,430 பேர் காயமடைந்தது உட்பட, மொத்தம் 5,122 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 2001ம் ஆண்டிற்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அதிகளவு நேட்டோ குண்டுவீச்சுக்கள் நிகழ்ந்த ஆண்டாக இருக்கும் அளவிற்கு 2018இன் போக்கு உள்ளது என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவி இயக்கம் (UN Assistance Mission in Afghanistan-UNAMA) ஞாயிறன்று செய்தி வெளியிட்டது.

ஆப்கானிஸ்தானில் பெருமளவு இந்திய தலையீட்டைப் பெறுவதற்கு வாஷிங்டன் முனைவது குறித்து பாக்கிஸ்தானிய ஆளும் வட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன. இந்தியாவும் பாக்கிஸ்தானும் மூன்று போர்களைச் சந்தித்துள்ளன, மேலும் ஆப்கானிஸ்தானில் எந்தவொரு இந்திய இராணுவ பிரசன்னத்தையும் பாக்கிஸ்தான் எப்போதும் எதிர்க்கிறது. இருப்பினும், இந்தியாவை, “ஒரு உண்மையான மூலோபாயப் பங்குதாரராக” பொம்பியோ பாராட்டியதுடன், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன அதிகாரத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவின் வெற்றிக்கு அது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானை விட்டு பொம்பியோ சென்ற பின்னர், பாதுகாப்பு ஆய்வாளரான ஜாஹீத் ஹூசைன், ஆப்கானிஸ்தான் என்ற ஒரு-புள்ளி திட்டநிரலாக வாஷிங்டன் உடனான பாக்கிஸ்தானின் உறவுகள் குறைக்கப்பட்டுள்ளன என்ற இஸ்லாமாபாத்தின் விரக்தியை வலியுறுத்தினார். மேலும், “ஆப்கானிஸ்தான் எனும் முப்பட்டக கண்ணாடி ஊடாக மட்டுமே பாக்கிஸ்தானை அமெரிக்கா பார்ப்பதாகத் தோன்றுகிறது,” என்றும், “அமெரிக்கா உடன் நட்புறவைப் பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம் என்பது முக்கியம் தான் என்றாலும், அது கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

அதன் நீண்டகால இராணுவம் மற்றும் தற்போது இந்தியா உடனான அணுவாயுதப் போட்டி போன்றவை தொடர்பாக “அதன் சொந்த தேசிய பாதுகாப்பு கவலைகள் பற்றி விளக்குவதற்கு” பொம்பியோவுடன் பரந்த விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள முயலுமாறு பாக்கிஸ்தானுக்கு ஹூசைன் அறிவுறுத்தினார்,

பொம்பியோவின் விஜயமானது இம்ரான் கானை அம்பலப்படுத்தி காட்டியதாகவும், மேலும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பார்கள் என்ற நம்பிக்கைகளின் திவால்தன்மையில் இருந்து பெறும் ஒரு சிறந்த நடைமுறைப் பாடமாகவும் இருந்தது. 2011-2014 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள பாக்கிஸ்தானின் பழங்குடிப் பிரதேசங்களில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களை எதிர்த்ததோடு, பாக்கிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கடந்து செல்லும் ட்ரக் விநியோகிக்கும் நேட்டோ துருப்புக்களை நிறுத்துவதற்கு முன்மொழிந்தார் என்ற வகையில், ஆப்கான் போரின் எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டு, பாரிய போர் எதிர்ப்பு உணர்வின் தகுதியற்ற பயனாளியாக கான் இருந்தார்.

2012ல், BBC இல், பாக்கிஸ்தானில் அமெரிக்க ட்ரோன் கொலைகள் குறித்து கான் கண்டனம் தெரிவித்தார்: “முதலில் இந்த தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்காவை சமாதானப்படுத்த நான் முயலுவேன், மாறாக, அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால், ட்ரோன் ஊடுருவல்களை சுட்டுவீழ்த்த எங்களது விமானப்படையை நான் கோருவேன்.”

இருப்பினும், அவரது கட்சிக்கான அதிர்ஷ்டம் அதிகரித்த நிலையில், இந்த தொனியைத் திடீர் திருப்பமாகக் குறைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் “பரஸ்பர நன்மைபயக்கும்” உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதே அவரது நோக்கம் என கான் அறிவித்தார். ஜூலை 25 தேர்தல்களுக்கு சற்றுப் பின்னர், இது பாக்கிஸ்தான் தொடர்புடைய போர் இல்லை என்ற நிலையில், “பயங்கரவாதம் மீதான போரில்,” பாக்கிஸ்தான் கலந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார்.

கான் பதவிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களில் நிகழ்ந்த பொம்பியோவின் விஜயத்திற்குப் பின்னர், அமெரிக்க ட்ரோன்களை சுட்டுவீழ்த்துவது பற்றி நீண்டகாலமாக எதையும் அவர் பேசவில்லை. வாஷிங்டன் உடனான உறவுகள் பற்றி “நம்பிக்கை” கொண்டிருந்ததாக அவர் அறிவித்தார். “நான் ஒரு பிறவி நன்நம்பிக்கையாளன் என்பதை நீங்கள் அறிவீர்கள்,” என்றும், “ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் நன்னம்பிக்கைக்குரியவர்” என்றும் அவர் தெரிவித்தார்.

பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர், அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகள் என்று “கிட்டத்தட்ட எதுவுமில்லை” என விவரித்த வெளியுறவு அமைச்சரான குரேஷி, தற்போது, “நாங்கள் ஒரு சிறந்த சந்திப்பை மேற்கொண்டோம். எங்களது இந்த சந்திப்பு குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.