ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 50th anniversary of the founding of the SEP (Sri Lanka)
The lessons of the Lanka Sama Samaja Party’s Great Betrayal

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்ட 50 வது ஆண்டுநிறைவு

லங்கா சம சமாஜக் கட்சி செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள்

By Rohantha De Silva and Vilani Peiris 
24 September 2018

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து 50 வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அது வெளியிடும் தொடர் கட்டுரைகளில் இது முதலாவதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட அது, 1996ல் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என பெயர் மாற்றப்பட்டது. 1968 ஜூன் 16-17 இல் நடந்த ஸ்தாபக மாநாட்டை குறிக்கும் விதமாக அறிக்கை ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைகள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கைப் பிடிப்பான அடித்தளங்களை எடுத்துரைக்கவிருக்கின்றன, அத்துடன் கடந்த 50 ஆண்டுகளாக இந்த கொள்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர உள்ளன. ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி, 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலமாய் காட்டிக்கொடுத்த சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், தொழிலாள வர்க்கம் மட்டுமே, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க இயலுமை கொண்ட ஒரே வர்க்கமாகும் என்று ஸ்தாபித்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்காகப் போராடுவதே சோசலிச சமத்துவக் கட்சியின் மையப் பணியாக இருந்து வந்துள்ளது. இந்த படிப்பினைகள் இலங்கையில் மட்டுமன்றி ஆசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியடைந்துவரும் போராட்டங்களுக்கு தீர்க்கரமானவை ஆகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) ஆனது, பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான அரசாங்கத்துக்குள், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1964 ஜூலையில் நுழைந்ததன் மூலம் செய்த காட்டிக்கொடுப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் காட்டிக்கொடுப்பின் மூலம் லங்கா சம சமாஜக் கட்சி, தீவில் முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்திக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்திற்கு குழிபறித்தது. அதன் காட்டிக் கொடுப்பு, இலங்கையில் மட்டுமல்லாது அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் குழப்பத்தை விதைத்தது.

இந்த நோக்குநிலை தடம்புரள்வின் மத்தியில், வியட்நாம் போரினாலும் மற்றும் பிறவெங்கிலுமான ஏகாதிபத்திய சூறையாடும் குற்றங்களாலும் அரசியல்ரீதியாக தீவிரப்பட்டிருந்த, பிரதானமாக இளைஞர்களைக் கொண்டிருந்த குழுவொன்று, லங்கா சம சமாஜக் கட்சி ஏன் காட்டிக்கொடுத்தது என்பதை புரிந்துகொள்ள முயற்சித்தனர். ஆயினும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட போது மட்டுமே அவர்களால் அதற்கான பதிலைக் கண்டறிய முடிந்தது.

இந்த "மாபெரும் காட்டிக்கொடுப்பானது" வெறுமனே லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களின் துரோகம் அல்லது தவறான கொள்கைகள் சம்பந்தமான விடயமாக இருக்கவில்லை. மாறாக, அது லங்கா சம சமாஜக் கட்சி இணைந்திருந்த பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் சந்தர்ப்பவாத அரசியலிலேயே அடித்தளம் கொண்டிருந்தது. இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமானது, பப்லோவாதத்திற்கும் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தின் பகுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியொன்றை அங்கு ஸ்தாபிக்க வேண்டியதை அவசியமாக்கியிருந்தது. இதுவே தொழிலாள வர்க்கத்திற்கு இருந்த ஒரே வழியாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சோசலிச சமத்துவக் கட்சியாக இருக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே, ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேச சோசலிச முன்னோக்குக்கான போராட்டத்தில் தனித்து நிற்கிறது. இலங்கை முதலாளித்துவத்திற்கு பிரதான அரசியல் முண்டுகோலாக தசாப்த காலங்களாக செயற்பட்டு வந்திருக்கும் லங்கா சம சமாஜக் கட்சியே தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான நீண்டநெடும் 30 ஆண்டுகால போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் உட்பட, அதன் அத்தனை குற்றங்களுக்கும் பொறுப்பாளியாகும். இன்று அதற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த ஆதரவு அடித்தளமும் கிடையாது. அது இன்று, முதலாளித்துவக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தேர்தல்கால தொங்குதசை என்பதற்கு மேலான எதுவொன்றாகவும் இல்லை.

1964ல் லங்கா சம சமாஜக் கட்சியில் பிரிந்த, ஆனால் பப்லோவாத ஐக்கிய செயலகத்தில் இருந்து பிரியாத, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியின் (LSSP (R)) அனைத்து கன்னைகளும், பொறிந்து போய்விட்டன. லங்கா சம சமாஜக் கட்சியின் இரண்டு போலி-இடது வழித்தோன்றல்களான நவ சம சமாஜக் கட்சியும் (NSSP) ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP) கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் உதவி அமைப்புகளாக வெட்கமின்றி செயல்பட்டு வருவதோடு தற்போதைய வலது சாரி "தேசிய ஐக்கிய" அரசாங்கத்தை ஸ்தாபிப்பதிலும் உதவி செய்திருக்கின்றன.

இந்த போக்குகளின் பரிணாம வளர்ச்சி லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பிலேயே முன்காணக் கூடியதாக இருந்தது. குறிப்பிடத்தக்க விதத்தில் பெரும் தொலைநோக்குடன் முடிவுக்கு வந்திருந்த அனைத்துலகக் குழு, 1964 இல் விளக்கியதாவது: "பண்டாரநாயக்கவின் கூட்டணிக்குள் லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினர்கள் நுழைந்தமையானது, நான்காம் அகிலத்தின் பரிணாமத்தில் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கின்றது. ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக சேவை செய்வதிலும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு தோல்வியை தயாரிப்பதிலும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள்ளான [பப்லோவாத] திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது."


ஜேம்ஸ் பி. கனன்

அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனன், ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதற்காக அழைப்பு விடுத்து உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எழுதிய "பகிரங்க கடித”த்தின் பின்னர், மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாத போக்கிற்கு எதிரான போராட்டத்தில், 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

பப்லோவாதிகள், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மறுஸ்திரப்படலுக்கு தம்மை தகவமைத்துக் கொண்டு விட்டிருந்தனர், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போராட்டத்தை நிராகரித்தனர். அதற்குப்பதிலாய், தொழிலாள வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய பல்வேறு சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளை இடதுபுறமாக நகர்வதற்கு அழுத்தம் கொடுத்தல் என்ற போர்வையின் கீழ், அவர்கள் நான்காம் அகிலத்தின் ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளை கலைத்து விடுவதற்கு அழைப்பு விடுத்தனர்.

இலங்கை போன்ற நாடுகளில், நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை கைவிட்ட பப்லோவாதம், பரந்த மக்களின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாசைகளை பல்வேறு "இடது" முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் தலைவர்களும் பூர்த்தி செய்ய முடியும் என்ற மரணகரமான மாயையை ஊக்குவித்தது. பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நுழைந்ததன் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்த லங்கா சம சமாஜக் கட்சியின் பின்னடைவின் ஒவ்வொரு அடியெடுப்பிற்கும் பப்லோவாதிகள் அதற்கு ஊக்கமளித்தும் வழிவகை அமைத்தும் கொடுத்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடனான லங்கா சம சமாஜக் கட்சியின் கூட்டணியானது, உள்ளூர் முதலாளித்துவத்துடன் பிரிட்டன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளின் விளைவாக, இந்திய துணைக் கண்டத்தில் 1947-48ல் நிறுவப்பட்ட பிற்போக்கான அரச கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வதை பிரதிநிதித்துவம் செய்தது. லங்கா சம சமாஜக் கட்சி, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை கைவிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிளவுபடுத்தும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை ஏற்றுக்கொண்டதோடு, தேசியமயமாக்கங்கள் மற்றும் வரம்புபட்ட சமூக நல செயல்பாடுகளைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டம் சோசலிசத்துக்கான பாதையைக் கொண்டிருந்தது என்ற ஆபத்தான மாயையை ஊக்குவித்தது. வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளை முன்னெடுப்பதற்கு முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவும் இயல்பாகவே திறனற்று இருந்ததை விளங்கப்படுத்தி, தொழிலாள வர்க்கமானது உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக முதலாளித்துவத்தை தூக்கி வீசும் புரட்சிகர போராட்டத்தில் விவசாயிகளை தனக்குப் பின்னால் அணிதிரட்ட வேண்டும் என வலியுறுத்திய, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கு எதிரான தத்துவமாக இது இருந்தது.

லங்கா சம சமாஜக் கட்சி 1930களில் ஒரு தீவிரப்பட்ட தேசிய இயக்கமாக முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை எதிர்த்த அதன் உறுப்பினர்களில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுக்கப்பட்ட புத்திஜீவிகள் தட்டு முன்னணியில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது அவர்கள், கட்சிக்குள் இருந்த மாஸ்கோவின் கட்டளைகளைப் பின்பற்றி, பிரிட்டனுக்கும் நாஜி ஜேர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான ஜனநாயக ஏகாதிபத்தியங்கள் என்று சொல்லப்பட்டவற்றுக்கும் ஆதரிவளித்த ஒரு ஸ்ராலினிசக் கன்னைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்ராலினிஸ்டுகள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர்கள், இரண்டாம் உலகப் போரின் பாதையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு பரந்த இயக்கம் பிராந்தியம் முழுவதும் வெடிக்கவிருந்ததிற்கான தயாரிப்பில், இலங்கை உட்பட இந்திய துணைக்கண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக, நான்காம் அகிலத்தின் பகுதியாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (BLPI) ஸ்தாபித்தனர்.


கொல்வின் ஆர். டி சில்வா

கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்தன போன்ற இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள், போரின்போதும் மற்றும் அதன் உடனடி பிந்தைய காலத்திலும், அவர்கள் முன்னெடுத்த உத்வேகமான மற்றும் கொள்கைப் பற்றான போராட்டத்தின் பெறுபேறாக மகத்தான அரசியல் கௌரவத்தை வென்றனர். போருக்குப் பின்னர் லங்கா சம சமாஜக் கட்சியை மறு-ஸ்தாபிதம் செய்த ஒரு சந்தர்ப்பவாதப் போக்குக்கு எதிராக, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி 1948ல் பிரிட்டனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட "போலி சுதந்திர”த்தையும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என வகுப்புவாத வழியில் துணைக்கண்டத்தை இரத்தக் களரியில் பிரித்ததையும் அம்பலப்படுத்தியது.

இருப்பினும், சுதந்திரமென்பதாய் சொல்லப்பட்டதானது நடுத்தர வர்க்கத்தின் பகுதியினருக்கு வணிகத்திலும் மற்றும் அரசியலிலும் வாய்ப்புகளை திறந்து விட்ட நிலையில், அது கட்சியின் மீது புதிய அழுத்தங்களை உருவாக்கியது. மிஷேல் பப்லோவால் ஊக்குவிக்கப்பட்டு, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தேசிய எல்லைகளால் பிளவுற்றது. இலங்கையில் 1950ல் அது சந்தர்ப்பவாத லங்கா சம சமாஜக் கட்சியுடன், இரு கட்சிகளுக்கு இடையிலான அடிப்படை அரசியல் வேறுபாடுகள் பற்றிய எந்த கலந்துரையாடலும் இல்லாமல், ஒரு அவசரகதியிலான ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டது.

1953 நவம்பரில், அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜேம்ஸ் கனன், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்திற்குள் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசவாதிகளை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்து, ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டார். லங்கா சம சமாஜக் கட்சி, பப்லோ மீதும் அவர் ஸ்ராலினிசத்தைத் தழுவிக்கொண்டதன் மீதும் விமர்சனம் கொண்டிருந்தது, ஆயினும் அது பப்லோவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அடித்தளமாகக் கொண்டிருந்த பகிரங்க கடிதத்தை நிராகரித்தது. அனைத்துலகக் குழுவின் கொள்கைப்பிடிப்பான நிலைப்பாட்டை ஆதரிப்பதானது, பாராளுமன்ற ஆசனங்களின் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையின் மீதே சந்தர்ப்பவாதரீதியில் முழுக்கவனத்தையும் அதிகரித்துச் சென்று கொண்டிருந்த லங்கா சம சமாஜக் கட்சியின் பாதையில் குறுக்கிடுவதாய் இருந்திருக்கும்.


லெஸ்லி குணவர்தன

லங்கா சம சமாஜக் கட்சி புரட்சிகர நோக்குநிலையை கைவிட்டிருந்தமை 1953 ஆகஸ்ட்டில் ஏற்கனவே வெளிப்படையாகி விட்டிருந்தது; அச்சமயத்தில் வெகுஜன வேலை நிறுத்த இயக்கங்கள், கடை அடைப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், அல்லது "ஹர்த்தால்" வெடித்து அரசாங்கத்தை வீழ்ச்சியின் விளிம்புக்கே கொண்டு வந்தன. ஆனால், லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து, ஒரு நாளுக்குப் பின்னர் போராட்டத்தை முடித்துக்கொண்டு போராட்டத்தினரை அரசு ஒடுக்குமுறையின் கொடூரத்துக்கு விட்டுவிட்டது; வெகுஜன எதிர்ப்பை புதிய தேர்தல்களை நடத்துவதன் பக்கம் திருப்பிவிட முனைந்தது. புரட்சிகரத் தலைமையை வழங்க லங்கா சம சமாஜக் கட்சி தவறியமை, 1951ல் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கிராமப்புற வெகுஜனங்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள அனுமதித்தது. அதே சமயம், எழுச்சியினால் அதிர்ச்சியடைந்து, தனது ஆட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை தேடிக்கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வென்றது.

அனைத்துலகக் குழுவிற்கு ஆதரவளிப்பதில்லை என அந்த ஆண்டின் பிற்பகுதியில் லங்கா சம சமாஜக் கட்சி எடுத்த முடிவுதான், பப்லோ, மண்டேல் மற்றும் அவர்களின் சர்வதேச செயலகத்துடனான "வாழ் மற்றும் வாழவிடு" என்ற ஒரு சந்தர்ப்பவாத உறவின் தொடக்கமாய் இருந்தது. சோசலிச சமத்துவக் கட்சி அதன் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற ஆவணத்தில் விவரித்துள்ளவாறு: "தேசிய அரங்கில் லங்கா சம சமாஜக் கட்சி அதன் சீர்திருத்தவாத அரசியலுக்கு, ட்ரொட்ஸ்கிச நற்சான்றிதழுக்கு உரிமை கோரக் கூடியதாக இருந்த அதேவேளை, சர்வதேச செயலகத்தால் ஆசியாவில் ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கொண்டிருப்பதாக பெருமை பாராட்டிக்கொள்ள முடிந்தது. பப்லோவாதத்திற்கான லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான, ஆகவே தொழிலாள வர்க்கத்திற்கு –குறிப்பாக ஆசியாவில்– எதிரான ஒரு பெரும் அடியாக இருந்தது."

அடுத்த தசாப்தத்தில், பப்லோவாதிகளின் உதவி மற்றும் உடந்தையுடன், லங்கா சம சமாஜக் கட்சிவின் பின்னடைவு துரிதப்படுத்தப்பட்டது. இது, சிங்கள ஜனரஞ்சகவாதம் மற்றும் தமிழர் விரோத பேரினவாதத்துடன் சோசலிச வாய்ச்சவடாலை கலந்துகொடுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் மேலும் அப்பட்டமாக தகவமைத்துக் கொள்ளும் வடிவத்தை எடுத்தது. முக்கியமான திருப்புமுனைப் புள்ளிகளாக இருந்தவை பின்வருமாறு:

* 1956 பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழர் விரோத உணர்வை நனவுடன் தூண்டிவிட்டது. அதன் இனவாத பிரச்சாரம், சிங்களத்தை மட்டும் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக ஆக்குவதையும் சிங்கள பெரும்பான்மையினரின் மதமான பௌத்தத்துக்கு அரசுக்குள் ஒரு விசேட அந்தஸ்த்தை ஒதுக்குவதையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது தானாகவே தீவின் சிறுபான்மையினரை, குறிப்பாக தமிழர்களையும் முஸ்லிம்களையும் இரண்டாம் தர குடிமக்களின் அந்தஸ்துக்குக் கீழிறக்குவதை அர்த்தப்படுத்தியது.

லங்கா சம சமாஜக் கட்சி சிங்களம்-மட்டும் கொள்கையை எதிர்த்த அதேவேளையில், அது தொழிலாள வர்க்கத்தை அன்றி, நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற அடிப்படையிலேயே அதை எதிர்த்தது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், LSSP சிங்கள ஜனரஞ்சக பிரச்சாரத்துக்கு தகவமைத்துக் கொண்டு, "போட்டித்தவிர்ப்பு" உடன்படிக்கை ஒன்றை ஸ்ரீ.ல.சு.க உடன் ஏற்படுத்திக்கொண்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றபோது, லங்கா சம சமாஜக் கட்சி அந்த அரசாங்கம் சம்பந்தமாக "பதிலளிக்ககூடிய வகையிலான ஒத்துழைப்பை" வழங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்ததோடு 1957ல் அரசாங்கத்தின் கொள்கையை நிர்ணயிக்கும் "அரியாசன உரைக்கு" ஆதரவாக வாக்களித்தது.

* 1960ல் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் லங்கா சம சமாஜக் கட்சியின் வலது நோக்கிய நகர்வு துரிதப்பட்டது. மார்ச் மாதம், புரட்சிகர முன்னோக்கை வெளிப்படையாக கைவிட்ட லங்கா சம சமாஜக் கட்சி, சோசலிசத்துக்கான பாராளுமன்ற பாதையைத் தழுவிக்கொண்டு, 100 ஆசனங்களில் போட்டியிட்டதோடு "சம சமாஜ வாத அரசாங்கத்துக்காக" அழைப்பு விடுத்தது. பப்லோவாத சர்வதேச செயலகம், லங்கா சம சமாஜக் கட்சிக்கு உத்வேகத்துடன் ஆதரவளித்ததோடு அதன் தேர்தல் பிரச்சாரத்தை "அதிகாரத்திற்கான ஒரு தீர்க்கமான போராட்டம்" என்று அபத்தமான முறையில் விவரித்தது.


என்.எம். பெரேரா

லங்கா சம சமாஜக் கட்சி 1956ம் ஆண்டை விட குறைவான ஆசனங்களையே வென்றபோது, ​​அதன் தலைவர் என்.எம். பெரேரா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பகிரங்கமாக பரிந்துரைத்தார். முதல் படியாக, இலங்கை முதலாளித்துவத்தின் இந்த கட்சியுடன் ஒரு “எதிர்த்துப் போட்டியிடாத உடன்படிக்கை”க்கு அவர் அழைப்பு விடுத்தார். "ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடனான ஒரு வேலைத்திட்ட உடன்பாட்டை" ஏற்படுத்துவது அதனைப் பின்தொடர்ந்து வரவிருந்தது.

மீண்டும் ஒருமுறை, தனது அரசியல் ஆசீர்வாதத்தை வழங்கிய சர்வதேச செயலகம், காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகளில் "தொழிலாள வர்க்க அரசு அல்லாத ஒன்றுக்கு விமர்சனத்துடனான ஆதரவை கொடுப்பது" சாத்தியமானதே என பிரகடனம் செய்தது. கட்சியானது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடன் ஒரு கூட்டணிக்கான பெரேராவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத அதேவேளை, 1960 ஜூலை தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடாத உடன்படிக்கைக்குள் அது நுழைந்ததோடு, அரியாசன உரைக்கு ஆதரவாக மறுபடியும் வாக்களித்தது.

* 1963 ஜூனில், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியானது 1953 பகிரங்க கடிதத்தில் எடுக்கப்பட்ட கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை கைவிட்டு, பப்லோவாதிகளுடன் மீண்டும் ஐக்கியப்பட்டது. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் குட்டி முதலாளித்துவ கெரில்லா இயக்கம் ஒரு "தொழிலாளர் அரசை" ஸ்தாபித்துள்ளதாக அறிவித்து, அதன் வெற்றியை போற்றியமை சோசலிச தொழிலாளர் கட்சி முழுமையாக பப்லோவாத முன்னோக்குக்கு அடிபணிந்து போனதை தெளிவாக்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய செயலகமானது, கியூபா போன்ற நாடுகளில், "ஒரு மழுங்கிய ஆயுதத்தைக்" கொண்டு, அதாவது அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடும் ஒரு லெனினிஸ்ட் கட்சி இல்லாமலேயே, ஆட்சியைக் கைப்பற்றுவது சாத்தியமாகியிருந்ததாக அறிவித்தது.

மறுஐக்கிய மாநாடும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிங்கள இனவாத மக்கள் ஐக்கிய முன்னணி (Mahajana Eksath Peramuna [People’s United Front] – MEP) உடன் சேர்ந்து ஒரு ஐக்கிய இடது முன்னணியை (ULF) அமைக்கும் லங்கா சம சமாஜக் கட்சியின் திட்டங்களை பாராட்டியது. ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கும் போது, மக்கள் ஐக்கிய முன்னணிக்கு (MEP) வழங்கும் ஒரு சலுகையாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான சம அந்தஸ்து கோரிக்கையை கைவிட்ட லங்கா சம சமாஜக் கட்சி, நடப்பில் இருந்த "சிங்களம் மட்டும்" சட்டத்துக்கு தகவமைத்துக் கொண்டதுடன், அந்தச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என அறைகூவல் விடுக்க மறுத்து, அது பாரபட்சம் குறைந்ததாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கோரியது. பப்லோவாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய இடது முன்னணியானது லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு உந்து சக்தியாக ஆனது.

1961 முதலாக, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகமானது சோசலிச தொழிலாளர் கட்சியின் மறுஐக்கியத்தை நோக்கிய நகர்வுகளை எதிர்த்து வந்தது. அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாள வர்க்கத்துக்கு தலைமை கொடுக்கும்படியாக குட்டி முதலாளித்துவ தலைமைகள் "புரட்சியின் தர்க்கத்தினாலேயே" நிர்ப்பந்திக்கப்படும் என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) வாதத்தை நிராகரித்த சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), போல்ஷிவிக் வகையிலான கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் பாட்டாளி வர்க்கத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதே நான்காம் அகிலம் எதிர்கொண்டுள்ள மையமான பணியாகும் என்று வலியுறுத்தியது.


ஜெரி ஹீலி

சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர் ஜெரி ஹீலி, 1963 ஜூனில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய குழுவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், பப்லோவாதிகளுடனான அதன் மறுஐக்கியத்தை கண்டனம் செய்ததோடு, குறிப்பாக லங்கா சம சமாஜக் கட்சி ஒரு காட்டிக்கொடுப்புக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறது என தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கத் தவறியதற்காக அதை விமர்சித்தார். மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) ஒரு கூட்டு மே தினப் பேரணியில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவத்தை எதிர்த்ததை சுட்டிக் காட்டிய பின்னர், ஹீலி அறிவித்ததாவது: "லங்கா சம சமாஜக் கட்சி என்றென்றைக்கும் அதற்கு வெட்கக்கேடாகும் விதத்தில் இந்த கேலிக்கூத்துக்கு உடன்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இலங்கையில் இந்திய மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் சமத்துவத்திற்காக நிபந்தனையின்றி முன்நின்ற ஒரேயொரு கட்சியாக லங்கா சம சமாஜக் கட்சி மட்டுமே இருந்தது என்பது நினைவு கூரப்பட வேண்டும்."

லங்கா சம சமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணிக்கு (MEP) சரணடைவதானது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு இட்டுச்செல்லும் என்று அந்த கடிதம் எச்சரித்தது. "தமிழ் மற்றும் சிங்கள மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது பற்றிய பிரச்சினையில், தலைவர்கள் உண்மையான மற்றும் மிகப்பெரிய விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக இருக்கின்றார்கள் என்பது இப்போது லங்கா சம சமாஜக் கட்சியில் சுதந்திரமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. திருமதி. பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு அவர்களை இட்டுசென்றிருக்கின்ற சரணடைவின் தர்க்கம் இதுவே ஆகும்," என ஹீலி எழுதினார்.

* தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அமைதியின்மை பெருகிவந்ததன் மத்தியில், முதல் முறையாக நகர்ப்புற தொழிலாளர்களுடன் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்திய, 21 அம்ச பொது கோரிக்கைகளை சூழ்ந்து, 1963ல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு (Joint Committee of the Trade Unions – JCTUO) அமைக்கப்பட்டது. 1963 செப்டம்பரில், ஒரு மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நூறு பிரதிநிதிகள், 21 கோரிக்கைகள் இயக்கத்தை முன்னெடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடியைத் தோற்றுவித்தனர்.

கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஆன பண்டாரநாயக்க அம்மையார், 1964 மார்ச்சில் ஐக்கிய இடது முன்னணி (ULF) தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினார். இந்தப் பேச்சுவார்த்தை பகிரங்கமானபோது, ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை "துப்பாக்கி முனையில் மற்றும் துப்பாக்கி ஈட்டி முனையில் வேலை செய்ய" கட்டாயப்படுத்துவது உட்பட வேறெந்தவொரு தெரிவும், "நாம் விரும்பும் இடத்திற்கு நம்மைக் கொண்டு செல்லாது," என அறிவித்து பிரதமர் தனது முடிவை நியாயப்படுத்தினார். லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் தங்கள் பங்கிற்கு, பண்டாரநாயக்கவின் சலுகையை ஏற்றுக்கொண்டதோடு அது ஒரு "இடது நோக்கிய" நகர்வு என பொய்யாக பிரகடனம் செய்தனர்.


கொல்வின் ஆர். டி சில்வா பண்டாரநாயக்கவுடன் அக்கம் பக்கமாக உட்கார்ந்துள்ளார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடன் ஒரு கூட்டணியை அமைக்கும் முடிவுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, ஜூன் 6-7ல் கட்சி மாநாட்டுக்கு என்.எம். பெரேரா அழைப்பு விடுத்தார். இவ்வாறாய் சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை அப்பட்டமாக கைவிட்டதை பப்லோவாத ஐக்கிய செயலகம் பொதுவாக எதிர்த்தது என்றபோதிலும், ஒவ்வொரு அடியெடுப்பிலும் காட்டிக்கொடுப்புக்கான பாதையை அது அமைத்துக் கொடுத்தது.

பெரேரா தலைமையிலான பெரும்பான்மையானது, ஏனைய ஐக்கிய இடது முன்னணி கட்சிகளும் கூட்டணி அரசாங்கத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு விமர்சனத்தை மட்டும் கொண்டிருந்த ஒரு "மத்திய" கன்னையாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் நுழைவது “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு செய்யும் துரோகம்” என ஒரேகுரலில் கண்டனம் செய்த ஒரு சிறுபான்மைக் கன்னையாலும் எதிர்க்கப்பட்டது. வாக்கெடுப்பின் பின்னர் –வாக்களிப்பில் பெரேராவின் தீர்மானத்திற்கு 501 வாக்குகளும் “மத்திய” கன்னைக்கு 75 வாக்குகளும் மற்றும் எதிர்த்தவர்களுக்கு 159 வாக்குகளும் கிடைத்தன– கூட்டணியை முற்றுமுழுதாக எதிர்த்தவர்கள் உடனடியாக மாநாட்டை விட்டு வெளியேறி, தனியாகக் கூடி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி அல்லது LSSP (R) என்று ஆனதை ஸ்தாபித்தனர்.

லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டில் தலையீடு செய்வதற்காக ஹீலி கொழும்புக்கு பயணித்தார். கூட்டம் நடந்த இடத்துக்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூட்டணியை எதிர்த்து நின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் அவர் பேசினார். இந்த அரசியல் கலந்துரையாடல்கள் ஊடாக அவர், 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகிக்க இருந்தவர்களுடன் முக்கியமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டார். பப்லோவாத காட்டிக்கொடுப்புக்கு எதிராக புரட்சிகரக் கட்சிகளை உருவாக்குவதற்கு ஹீலியும் அனைத்துலகக் குழுவும் விடுத்த அழைப்பு, இவ்வாறாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டதன் ஊடாக இலங்கையில் யதார்த்தமாக்கப்பட்டது.

தொடரும்......