ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russian aircraft shot down during Israeli missile attack on main Syrian government port

பிரதான சிரிய அரசு துறைமுகம் மீதான இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலின்போது ரஷ்ய போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

By Bill Van Auken
18 September 2018

சிரியாவின் பிரதான துறைமுக நகரமும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தின் பலமான பிடியில் இருப்பதுமான லடாகியா மீது திங்களன்று ஓர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது, அத்தாக்குதலில், கிடைத்த விபரங்களின்படி, ஒரு ரஷ்ய இராணுவ போர்விமானத்தில் 14 இராணுவ சிப்பாய்கள் அதில் இருந்துள்ள போதே சுட்டுவீழ்த்தப்பட்டது.

ஒரு பிரதான மேற்கத்திய தலையீட்டைத் தூண்டுவதற்கும் மற்றும் உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சாத்தியமான ஒரு மோதலைத் தூண்டுவதற்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்த, வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் ரஷ்ய-ஆதரவு அரசு தாக்குதலை அத்துமீறலை முன்கூட்டியே தடுப்பதற்காக ரஷ்யா மற்றும் துருக்கி ஒரு கூட்டு உடன்படிக்கையை அறிவித்து ஒரு சில மணி நேரங்களில் அந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அந்த ஏவுகணை தாக்குதல்கள் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்த, மற்றும் செய்திகளின்படி ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப தொழில்துறை நிறுவனத்தை இலக்கில் வைத்திருந்ததாக சிரிய அரசு செய்தி நிறுவனம் SANA குறிப்பிட்டது.

அத்தாக்குதல்கள் மத்தியதரைக் கடலில் இருந்து நடத்தப்பட்டிருந்ததாக சிரிய அரசாங்கத்தின் ஆதாரநபர்கள் தெரிவித்தனர். அங்கே சிரியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டுமே சமீபத்திய வாரங்களில் கடற்படைகளை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளன.

கிடைத்த விபரங்களின்படி, அந்த ஏவுகணை தாக்குதல்கள் Hmeymim இல் உள்ள ஒரு பிரதான ரஷ்ய விமானப்படை தளத்திற்கு அருகில் நடந்தது.

அந்நாட்டின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும், அவை இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்டிருந்ததாகவும் சிரியாவின் ஆதாரநபர்கள் தெரிவித்தனர். ரஷ்ய ஆதாரநபர்கள் அந்த தாக்குதல்களை நான்கு F-16 போர் விமானங்கள் மீது சாட்டினர், அவை அந்த துறைமுக நகரைத் தாக்க வெளிப்படையாகவே லெபனான் மற்றும் மத்திய தரைக்கடல் மீது பறந்து வந்ததாக தெரிவித்தனர்.

“ரஷ்ய-இஸ்ரேலிய ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இருக்கலாமென" இஸ்ரேலிய ஜெருசலேம் போஸ்ட் அனுமானித்தது. ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய இராணுவ கட்டளையகங்கள் நெருக்கமாக "மோதல் நிறுத்த" உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன, சிரியாவில் உள்ள ஈரானிய சொத்திருப்புகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மாஸ்கோவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது.

ஆனால் லடாகியா மீது வீசப்பட்ட ஏவுகணைகளைச் சுட்டுவீழ்த்துவதில் ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டிருந்ததாக அங்கே செய்திகள் இருந்தன.

அத்தாக்குதலின் போது 14 நபர்கள் இருந்த II-20 போர்விமானங்களில் ஒன்று ராடார் வீச்செல்லையிலிருந்து மறைந்து போனதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்தது, இது இஸ்ரேலிய போர்விமானங்களால் அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறை அதிகரிக்கிறது. Hmeymim விமானத்தளத்தின் சிப்பாய்கள் தேடும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர்.

இஸ்ரேல் F-16 தாக்குதல் நடந்த அதேநேரத்தில் மத்திய தரைக்கடலில் இருந்து பிரெஞ்சு கடற்படையின் சிறிய போர்க்கப்பல் FS Auvergne உம் ஏவுகணைகளை ஏவி இருந்ததாக மாஸ்கோ அறிவித்தது.


பிரெஞ்சு சிறிய போர்க்கப்பல் FS Auvergne, ரஷ்ய போர்விமானம் காணாமல் போன அதேநேரத்தில் இது ஏவுகணைகள் வீசியதாக ரஷ்யா குறிப்பிட்டது. புகைப்படம்: பிரெஞ்சு கடற்படை

பென்டகன் செய்தி தொடர்பாளரான கடற்படை தளபதி சீன் ரோபர்ட்சன் கூறுகையில், “ஐயத்திற்கிடமின்றி இது எங்கள் நடவடிக்கை இல்லை" என்று கூற முடியுமென வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்குத் தெரிவித்தார். சிரிய அரசின் போர்விமானங்களைத் தகர்க்கும் குண்டுகள் தான் ரஷ்ய விமானம் II-20 வீழ்த்தப்படுவதற்குத் தற்செயலாக காரணமாகி இருக்குமென அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அத்தாக்குதல்களோடு மின்வெட்டும் சேர்ந்திருந்தன, ஆனால் அது ஏவப்பட்ட ஏவுகணைகளால் உண்டானதா அல்லது இலக்குகளாக இருந்தவற்றை மறைப்பதற்காக மின் அமைப்புமுறையை நிறுத்துவதென திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவின் விளைவா என்பதன் மீது எதிர்முரணான செய்திகள் இருந்தன. அத்தாக்குதலுக்குச் சிறிது நேரம் கழித்து மின்சாரம் மீட்டமைக்கப்பட்டது.

லடாகியா மீதான தாக்குதல் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் வருகின்றன, அது செய்திகளின்படி ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த விமான நிலைய கிடங்குகளை அழித்தன, சில விபரங்களின்படி, ஈரானிய போயிங் சரக்கு விமானம் ஒன்றும் அழிக்கப்பட்டிருந்தது.

சிரியாவுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி டெல் அவிவ்வின் "கருத்து தெரிவிப்பதற்கில்லை" பாரம்பரியத்தை முறித்து, இம்மாத தொடக்கத்தில் ஓர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகையில், சுமார் 800 வெடிப்பொருட்களைக் கொண்டு இஸ்ரேல் கடந்த 18 மாதங்களில் குறைந்தபட்சம் 200 இலக்குகளைத் தாக்கியிருந்ததை ஒப்புக் கொண்டார். டமாஸ்கஸ் விமான நிலையம் மீதான தாக்குதலுக்கு வெறும் ஒரு சில மணி நேரத்திற்குப் பின்னர் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு சனியன்று அறிவிக்கையில், இஸ்ரேல் சிரியாவில் "சிவப்பு கோட்டை" அமல்படுத்தி வருவதாக அறிவித்தார், அந்நாட்டில் உள்ள ஈரானிய படைகளை விரட்டுவதும் இதில் உள்ளடங்குகிறது.

இதே வெளியுறவு கொள்கை நோக்கத்தை வெள்ளை மாளிகையும் பென்டகனும் தெளிவுபடுத்தி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசை (ISIS) எதிர்ப்பதற்காக என்ற பெயரில், ஆனால் சிரியாவிலும் அப்பிராந்தியம் எங்கிலும் ஈரானிய செல்வாக்கை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க துருப்புகளில் 2,000 க்கும் அதிகமானவர்கள் தற்போது சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதை அவை நியாயப்படுத்துகின்றன.

அமெரிக்கா சிரிய மோதலை கொதிப்பு நிலையில் வைத்திருக்க விரும்புகிறது என்ற நிலையில், லடாகியா மீதான தாக்குதலில் அமெரிக்க படைகள் என்ன நேரடி பாத்திரம் வகித்திருந்தாலும், அது ஐயத்திற்கிடமின்றி வாஷிங்டன் ஆதரவைக் கொண்டிருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் இடையே ரஷ்ய கருங்கடலின் சுற்றுலா நகரமான சோச்சியில் திங்களன்று சந்திப்பு நடந்த பின்னர் உடனடியாக அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அங்கே அவ்விரு அரசு தலைவர்களும், சிரிய அரசு துருப்புகளுக்கும் மற்றும் இட்லிப் மாகாணத்தில் குவிந்துள்ள மேற்கத்திய ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களுக்கும்" இடையே கூட்டாக ரோந்து மேற்கொள்ளப்படும் ஓர் "இராணுவமயப்படாத பகுதியை" ஸ்தாபிக்க உடன்பாட்டை எட்டியிருந்தனர்.

இந்த சக்திகளில் மேலோங்கி இருப்பது தஹ்ரீர் அல்-ஷம் (Tahrir al-Sham), இது சிரியாவில் உள்ள அல் கொய்தாவின் துணை-அமைப்பு அல் நுஸ்ரா முன்னணியாக முன்னர் அறியப்பட்ட குழுவினது தலைமையில் உள்ள இஸ்லாமிய போராளிகளது குழுக்களின் ஒரு கூட்டணியாகும்.

அல் நுஸ்ரா உட்பட "எல்லா தீவிர போராளிகளையும்" இட்லிப்பில் இருந்து விரட்டுவதையும், இராணுவமயப்படாத பகுதியிலிருந்து அனைத்து "கனரக ஆயுதங்களையும்" நீக்குவதற்கும் அந்த உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாக புட்டின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை “இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய ஒரு மனித துயரத்தைத் தடுக்கும்" என்றும், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அந்த உடன்படிக்கை "அப்பிராந்தியத்தில் நம்பிக்கையைக்" கொண்டு வருமென்றும் எர்டோகன் தெரிவித்தார்.

வரவிருக்கும் நாட்களில் இட்லிப்பிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுமென கடந்த வாரங்களில் அனுமானிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கே தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

இட்லிப்பில் ஓர் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்துவதற்கு டமாஸ்கஸ் திட்டமிடுவதாக கூறப்படுவதைக் கைப்பற்றி, வாஷிங்டனும், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி உட்பட அதன் நேட்டோ கூட்டாளிகள் அனைத்தும் சிரியா மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் தொடுக்க அச்சுறுத்தி இருந்தன. இதற்கிடையே குளோரினை வெளியேற்றி அதுபோன்றவொரு தாக்குதலை நடத்தவும், அவ்விதத்தில் அமெரிக்க-நேட்டோ தாக்குதலுக்கு சாக்குபோக்கை வழங்குவதற்கும் "கிளர்ச்சியாளர்கள்" தயாரிப்பு செய்திருப்பதற்கு ஆதாரமிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வாதிட்டது.

வாஷிங்டனில் இருந்து வரும் சமீபத்திய அறிக்கைகள் ஓர் இரசாயன தாக்குதலுக்கு மட்டுமல்ல, மாறாக அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் எந்தவொரு ரஷ்ய-ஆதரவிலான சிரிய அத்துமீறலுக்கும் ஓர் இராணுவ விடையிறுப்பை கொண்ட அச்சுறுத்தலை விரிவாக்கி உள்ளது. இது அமெரிக்க அரசிடம் இருந்து வருகிறது, அதன் சொந்த நடவடிக்கைகளே கடந்த இரண்டாண்டுகளில் சிரியா மற்றும் ஈராக்கில் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொன்றுள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக மாற்றியுள்ளது.

இதற்கிடையே துருக்கி இதன் சொந்த படைகளை இட்லிப்க்கு நகர்த்தி உள்ளது, திங்களன்று Hurriyet நாளிதழ் குறிப்பிடுகையில், டாங்கிகளும் சுமார் 50 இராணுவ வாகனங்களும் எல்லையைக் கடந்திருப்பதாகவும், ரஷ்ய மற்றும் சிரிய அரசின் வான்வழி தாக்குதல்களின் இலக்கில் இருக்கும் அம்மாகாணத்தின் தெற்கு பகுதியான ஜிஸ்ர் அல்-ஷுக்ஹோர் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டது.

செப்டம்பர் 7 இல் புட்டின், எர்டோகன் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி தெஹ்ரானில் சந்தித்த போது, இட்லிப்பில் போர்நிறுத்தத்திற்கான எர்டோகனின் பரிந்துரையை புட்டின் நிராகரித்திருந்தார், மேலும் மாஸ்கோவும் சரி டமாஸ்கஸூம் சரி அம்மாகாணத்தில் இருந்து அல்நுஸ்ராவை வெளியேற்றி, அரசின் கட்டுப்பாட்டை மீண்டும் ஸ்தாபிக்க அவற்றின் தீர்மானத்தை உறுதிப்படுத்தி இருந்தன.

ஓர் அத்துமீறல் நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியுடன் மோதலுக்கு வழிவகுக்கலாம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது நிலையான ஓர் இராணுவத் தாக்குதலுக்கும் இட்டுச் செல்லக்கூடும் என்ற ஒரு நேரடி அச்சுறுத்தலை முகங்கொடுத்து, புட்டின் அரசாங்கம் அங்காராவுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த முடிவெடுத்ததாக தெரிகிறது.

இந்த உடன்படிக்கை எவ்வாறு எட்டப்பட்டது, அதுவும் குறிப்பாக அங்காரா ஆதரவளிக்கும் "மிதவாத" இஸ்லாமியவாத போராளிகள் குழுக்கள் எனக் கூறப்படுவதில் இருந்து அல் நுஸ்ரா தலைமையிலான சக்திகளைப் பிரிக்கும் வகைமுறைகள் எவ்வாறு எட்டப்பட்டன என்பது எந்த விதத்திலும் தெளிவாக இல்லை. இந்த சக்திகள் அவற்றின் "மனித கேடயங்களை" கைவிட ஒப்புக்கொண்டன என்பது சாத்தியமில்லாததாக உள்ளன—இந்த வார்த்தை வாஷிங்டனின் எதிரிகள் குறித்து பேசுகையில் அமெரிக்க ஊடகங்களால் சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டன, ஆனால் அதன் அல் கொய்தா தொடர்புடைய கூட்டாளிகளைச் சம்பந்தப்படுத்தி ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை. சிரிய அரசுடன் ஒரு சமாதான ஏற்பாட்டை செய்து கொள்வதை ஆதரிக்கும் எவரொருவரையும் தூக்கிலிட அல் நுஸ்ரா அம்மாகாணத்தில் தூக்குமரங்கள் அமைத்திருப்பதாக இட்லிப்பில் இருந்து வரும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையே எர்டோகன் சோச்சியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், சிரிய குர்திஷ் YPG போராளிகள் குழுக்களின் பிரசன்னம் தான் சிரியாவில் துருக்கிய நலன்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றார், இக்குழுக்கள் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் மூலோபாயரீதியில் முக்கியமான எண்ணெய் வயல்களை அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து எடுப்பதில் அமெரிக்க இராணுவத்திற்கான பிரதான பினாமி தரைப்படையாக சேவையாற்றுகின்றன.

சோச்சி உடன்படிக்கை எர்டோகனுக்கான ஓர் இராஜாங்க ஆட்சிக்கவிழ்ப்பு சதியை உள்ளடக்கி இருக்கலாம் என்றபோதும், இது எந்தவிதத்திலும் வாஷிங்டனால் அதே வெளிச்சத்தில் பார்க்கப்படவில்லை. சிரிய குர்திஷ்களுடனான அமெரிக்க கூட்டணி விவகாரத்திலும், மாஸ்கோ உடனான எர்டோகனின் நல்லிணக்கத்தினாலும் மற்றும் துருக்கியின் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தி உள்ள அமெரிக்க தடையாணைகளின் திணிப்பினாலும் அமெரிக்காவும் துருக்கியும் அதிகரித்தளவில் கருத்துமோதல்களில் சிக்கி உள்ளன.

லடாகியா மீதான திங்கட்கிழமை தாக்குதல் வெறுமனே சிரியாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்க தலைமையிலான ஒரு பரந்த தீவிரப்பாட்டின் தொடக்கம் மட்டுந்தானா என்பது வரவிருக்கும் மணித்தியாலங்களில் மற்றும் நாட்களில் தெளிவாகும். நிச்சயமானது என்னவென்றால் சிரியா மோதலில் ஒருமுகப்பட்டுள்ள வெடிப்பார்ந்த புவிசார் அரசியல் மோதல்கள் ஒரு மிகப் பரந்த பிராந்திய மற்றும் உலக போரையே கூட வெடிக்க செய்ய அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.