ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The militarist component of Trump’s trade war

ட்ரம்ப்பின் வர்த்தகப் போரின் இராணுவவாத உட்கூறு

By Nick Beams
20 September 2018

திங்களன்று சீன இறக்குமதிகள் மீது புதிய வரிவிதிப்புக்களை வாஷிங்டன் திணித்திருப்பதும் அதன்பின் தீவிரமடையும் வர்த்தகப் போர் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்களும் அமெரிக்க கொள்கையின் அத்தியாவசியமான உந்து சக்திகளாக இருப்பவற்றை தெளிவாக்கியிருக்கின்றன.

புதிய நடவடிக்கைகளின் கீழ், அடுத்த திங்கள்கிழமை முதலாக சுமார் 200 பில்லியன் மதிப்புள்ள சீனத் தயாரிப்புகளின் மீது 10 சதவீத சுங்கவரி விதிக்கப்பட இருக்கிறது, அநேகமாய் நடக்க சாத்தியமில்லாதவொரு அபிவிருத்தியில், பெய்ஜிங்கின் முழுமையான சரணாகதியை அமெரிக்கா பார்க்கமுடியவில்லை என்றால், 2019 ஜனவரியில் இது 25 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படும்.

சீனாதான் இப்போது பிரதான இலக்காக இருக்கிறது என்றபோதிலும், அமெரிக்கா இப்போது உலகின் எஞ்சிய பகுதிகளுக்கு எதிராக ஒரு பொருளாதாரப் போரில் இறங்கியிருப்பதாகவே ட்ரம்ப் நிர்வாகம் காண்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, அதன் பழைய எதிரிகளுடன், குறிப்பாக ஜேர்மனி மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் நீண்ட-காலத்திலான பொருளாதார வீழ்ச்சியும், அத்துடன் சீனாவின் வடிவில் ஒரு புதிய எதிரி எழுந்து வருவது குறித்த அதன் அச்சமும்தான் மோதலின் உந்துசக்தியாக இருப்பதாகும்.

செவ்வாய்கிழமையன்று போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ர்ஜெஸ் டூடா சகிதமாக செய்தியாளர்களை சந்தித்த சமயத்தில் ட்ரம்ப் கூறிய கருத்துக்களில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. முந்திய நாளில் விதித்திருந்த வரிவிதிப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ட்ரம்ப், அமெரிக்காவின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் அனைவருக்கு எதிராகவும் செலுத்தப்பட்ட வரிசையான கண்டனங்களைப் பறக்கவிட்டார்.

1980களில் ஜப்பானில் தொடங்கி இப்போது சீனா வரை விரிவடைந்திருக்கின்ற அமெரிக்க பற்றாக்குறைகள் தொடர்பான தனது 30 ஆண்டுகளுக்கும் அதிகமான கவலையை வலியுறுத்திய அவர் கூறினார்: “நாங்கள் உலகத்திற்கு சேமிப்பு உண்டியலாக இருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் எங்களை பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது. எல்லாருமே எங்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கனடா நீண்ட காலமாய் எங்களை அனுகூலத்திற்காய் பயன்படுத்தி வந்திருக்கிறது.”

ஜூலையில் அவருக்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவரான ஜோன் குளோட் ஜுங்கருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் நினைவுகூர்ந்திருப்பது வாஷிங்டன் இப்போது மாபியா-பாணி பேச்சுவார்த்தை நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததாகக் கூறிய ட்ரம்ப், ஜுங்கரிடம் இவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார்: “அப்படியானால் சரி, நாம் பேச்சுவார்த்தை இனி நடத்த வேண்டாம். நீங்கள் அமெரிக்காவுக்குள் அனுப்புகின்ற மில்லியன் கணக்கான கார்கள் அனைத்திற்கும் நாங்கள் வரிவிதிக்கப் போகிறோம்.”

ட்ரம்ப் தொடர்ந்தார்: “நேர்மையாகச் சொல்கிறேன், அத்தனை வேகமாக பறக்கின்ற விமானங்கள் அவர்களிடம் இருப்பது எனக்குத் தெரியாது, அந்தளவுக்கு மிக விரைவாக அவர் என் அலுவலகத்திற்கு வந்து விட்டிருந்தார். இப்போது ஒரு உடன்பாடு மாதிரியான ஒன்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் -ஒரு மிகப் பெருமளவுக்கு- இது பொருளாதாரரீதியாக அனைத்தும் கார்கள் சம்பந்தப்பட்ட விடயம். கார்கள் ஒரு மிகப் பெரிய காரணி.”

ஐரோப்பாவில் இருந்தான உருக்கு மற்றும் அலுமினியம் ஏற்றுமதிகள் மீதான தீர்வைகளை அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கும் என்று அது வலியுறுத்தியிருந்ததன் பின்னர் வந்திருந்த இந்த உடன்பாட்டின் கீழ், இரண்டு நாடுகளும் வர்த்தக முட்டுக்கட்டைகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்த உடன்பட்டிருக்கின்றன, உலக வர்த்தக அமைப்பின் மூலமாக சீனாவைப் பின்னோக்கித் தள்ளுவதில் அமெரிக்காவுடன் கைகோர்க்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்திருக்கிறது.

“தேசியப் பாதுகாப்பு” அடித்தளங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் 1962 வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ், கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் இறக்குமதிகள் மீது 25 சதவீத தீர்வை விதிக்கும் தனது மிரட்டலை, குறைந்தபட்சம் இப்போதைக்கேனும், முன்தள்ளாமல் இருப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டிருக்கிறது.

ஆயினும், ஜேர்மன் உற்பத்தியாளர்களை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடியதும், அவர்களின் ஏற்றுமதிகளில் சிலவற்றை அமெரிக்க சந்தையில் இலாபகரமற்றதாக்கக் கூடியதுமான ஆலோசனையளிக்கப்பட்ட இந்த தீர்வையானது கைவிடப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் மீது ஒரு கத்தி போல அது தொங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய ஒன்றியம் கோடு தாண்டிவிட்டதாக அமெரிக்கா கருதுமேயானால் அப்போது இந்த வரிகள் விதிக்கப்படும்.

ஜுங்கர் உடனான தனது “விவாதங்களை” நினைவுகூர்ந்ததன் பின்னர், ட்ரம்ப் திரும்பவும் அவரது மையப் பொருளுக்கு திரும்பினார்: “எங்களது நாடு கிட்டத்தட்ட அது வர்த்தகம் செய்கின்ற ஒவ்வொரு நாட்டினாலுமே அனுகூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது, இனி நாங்கள் அவ்வாறு நடக்க விடப் போவதில்லை” என்று அவர் அறிவித்தார்.

வரிவிதிப்புகள் குறித்து கூறிய மற்ற கருத்துக்களின் போது, உற்பத்தித் துறையை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டுவரும் பொருட்டு இப்போதிருக்கும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என்ற, கீழமைந்த பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றினை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்: “என்ன நடக்கும் என்றால், வர்த்தகங்கள் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பத் தொடங்கும்… அதுதான் கனவு... தயாரிப்புகள் இங்கே உற்பத்தி செய்யப்படத் தொடங்கும்.”

இந்த பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாத சித்தாந்தமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவாத முனைப்புடன் மாற்றவியலாமல் தொடர்புபட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் மிக சிரத்தையான சீன-விரோத வல்லூறுகளாக இருந்துவருகின்ற, வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகரான பீட்டர் நவரோவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ரோபர்ட் லைட்ஸியரும், உள்ளபடியே வர்த்தகப் பற்றாக்குறைகள் அல்ல முக்கியமான பிரச்சினை என்பதை தெளிவாக்கியிருக்கின்றனர். விட்டால் அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கும் இறுதியில் அதன் இராணுவ மேலாதிக்கத்திற்கும் அச்சுறுத்தலாகி விடும் என்ற கவலையில், சீனா அதன் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களது மிதமிஞ்சிய கவலையாக இருக்கிறது.

ஆயினும், இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் வெறுமனே ட்ரம்ப் மற்றும் அவரது முக்கியமான பொருளாதார ஆலோசகர்களது காய்ச்சல்கண்ட மண்டைகளில் இருந்து மட்டுமே எழுந்தவை என்ற பிரமையில் யாரும் மூளையைப் போட்டு வருத்திக் கொள்ளக் கூடாது. ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக அவை பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

மேலும், அமெரிக்காவின் “தேசிய பாதுகாப்பு” -அதாவது, போர் புரிவதற்கான அதன் திறன்- மீது உலகளாவிய உற்பத்தி கொண்டிருக்கின்ற தாக்கம் குறித்த கவலைகள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பே எழுப்பப்பட்டு விட்டன. “உலகமயமாக்கமும் அதன் அதிருப்திகளும்” என்ற தலைப்பில் 2008, மே 29 அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் அவை வார்த்தைவடிவம் கொடுக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி நிக்சனின் வெளியுறவுச் செயலராகவும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தவரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நெடுங்கால மூலோபாயவாதியும் அதன் இரத்தக்களரி மிக்க குற்றங்களில் சிலவற்றைத் தூண்டியிருந்தவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.

உலகளாவிய உற்பத்தியும் நிதியும் அபிவிருத்தி கண்டிருக்கும் நிலையில், மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மலிவான தொழிலாளர் செலவுகளை அனுகூலமாக்கிக் கொள்கின்ற விதத்தில் தமது செயல்பாடுகளது இடத்தை அமைத்துக் கொள்ள விழைகின்றன என்பதை கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டுக் காட்டினார். ஆனால் இந்த நிகழ்சிபோக்கானது அமெரிக்காவின் இராணுவ செயல்திறன்களை பலவீனப்படுத்தின என்றார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், போரின் ஆற்றல்வளங்கள் கலைந்துவிடப் பார்த்தன.

அவர் எழுதினார், “உலகமயமாக்கத்தின் மூலோபாயத் தாக்கமானது, இரண்டு மட்டங்களில் மிக முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகிறது: வெளிநாட்டு முதலீடுகள் வரம்புபடுத்தப்பட வேண்டும் அல்லது தவிர்க்கப்பட்டு விட வேண்டுமான விதத்தில், தேசியப் பாதுகாப்பு விடயத்தில் ஒதுக்கமுடியாத தொழிற்துறைகள் என்று இருக்கின்றனவா? இரண்டாவதாக, அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டுமாயின், என்னென்ன தொழிற்துறைகள் உருக்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தவறாக பிரயோகிக்கப்படப் பார்க்கும் என்பது தெளிவு. ஆயினும் தேசிய நலன் கட்டாயங்கள் முகம்கொடுத்தாக வேண்டியிருப்பதை தவிர்ப்பதற்கான ஒரு சாக்காக இது இருக்கக் கூடாது.”

“அமெரிக்காவின் தவிர்க்கமுடியாத மூலோபாய தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தில் என்னென்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன, அதனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பவற்றை ஆராய்வதற்கு” உயரிய மட்டத்தில் ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு நிர்வாகத்திற்கு அவர் அழைப்புவிடுத்தார்.

ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் அனைத்துமே “தேசியப் பாதுகாப்பு” முகாந்திரங்களின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்ற உண்மையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்த கிஸ்ஸிங்கரின் கருத்துக்கள் சேவைசெய்கின்றன. இது சிலசமயங்களில் வெறுமனே பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கான ஒரு காரணநியாயம் என்பதாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஒரு ஆழமான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். பொருளாதார அபிவிருத்தியின் அலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இருக்கின்ற நிலையில், அதன் பழைய மற்றும் புதிய எதிரிகளுக்கு எதிராக செலுத்தப்படுகின்ற இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு போரின் ஆற்றல்வளங்களை ஒன்றாகக் கொண்டுவருவதற்கு அது விழைகிறது. இப்போதைய வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் உந்துசக்திகளாக இருப்பவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கிறது.