ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France refuses to let Aquarius dock as EU seeks to block refugees

ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளைத் தடுக்க முயன்று வருகையில், பிரான்ஸ் புலம்பெயர்ந்தோர் மீட்பு கப்பலான அக்குவாரியஸிக்கு துறைமுகத்தில் இடம் தர மறுக்கிறது

By Alex Lantier
27 September 2018

புலம்பெயர்ந்தோர் மீட்பு கப்பலான அக்குவாரியஸ் (Aquarius), போரால் பாதிக்கப்பட்டு லிபியாவிலிருந்து கடும் அவதிக்குள்ளாகி தப்பி வந்த 58 அகதிகளைக் கொண்டிருந்த நிலையில், பிரெஞ்சு அரசாங்கம் செவ்வாயன்று பிரெஞ்சு துறைமுகத்தில் அதற்கு நிறுத்த இடம் தர மறுத்தது. இது, மத்திய தரைக்கடலில் அகதிகளுக்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்க முனைந்து வருகின்ற நிலையில் வருகிறது. மத்திய தரைக்கடலில் ஆயிரக் கணக்கானவர்கள் மூழ்கி இறந்துள்ளனர், மேலும் அக்குவாரியஸ் பனாமா நாட்டு கொடியை ஏந்தியிருந்ததால் அதை வாய்ப்பாக்கி அதன் அங்கீகாரத்தை இரத்து செய்வதற்காக ரோம் பனாமாவுக்கு அழுத்தமளித்தது.

பிரெஞ்சு நிதி அமைச்சர் புரூனோ லு மேர் கூறுகையில், அக்குவாரியஸை மார்சைய்யில் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு பாரிஸ் அனுமதி மறுக்கும் என்றார். ஐரோப்பிய ஒன்றிய விதிகள் மீட்பு கப்பல்களை அருகிலுள்ள ஐரோப்பிய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு உத்தரவிடுகின்றன என்று வாதிட்டு, “இப்போதைக்கு 'கிடையாது',” என்று லு மேர் BFM-TV க்குத் தெரிவித்தார். “புலம்பெயர்வு விவகாரத்தில், இப்பிரச்சினை உறுதியாகவும் தெளிவாகவும் கையாளப்பட வேண்டும், ஐரோப்பிய விதிகள் மதிக்கப்பட வேண்டும்,” என்றார்.

Agence France-Presse உடன் பேசுகையில், எலிசே ஜனாதிபதி மாளிகையின் ஓர் ஆதார நபரும் அக்குவாரியஸ் நிறுத்துவதற்கு அனுமதி மறுத்தார்: “பிரான்ஸிற்கோ அல்லது ஸ்பெயினுக்கோ அல்லது வேறெங்கேயோ செல்வதற்காக அது கடலில் நான்கு-ஐந்து நாட்கள் செலவிட முடியாது என்ற உண்மையை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். அதை விரைவில் நிறுத்த வேண்டியிருக்கும், இப்போது அது மால்டாவுக்கு அருகில் உள்ளது.”

அக்குவாரியஸில் உள்ள பயணிகள் பெரும்பாலும் வசதியான லிபியர்கள் என்றும், பழங்குடியினர் அல்லது இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் மற்றும் அந்நகரத்தில் கடத்தல் அச்சுறுத்தல்களுக்கு இடையே திரிப்போலி நகரில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் என்றும் செய்திகள் குறிப்பிட்டன, இந்த நிலைமைகள் 2011 இல் கர்னல் மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தை அழித்த நேட்டோ போரை பின்தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போரின் விளைபொருளாகும். ஆகஸ்டிற்குப் பின்னர் திரிப்போலியில் சண்டை சமீபத்தில் அதிகரித்திருப்பது, இதில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், முன்பினும் அதிக எண்ணிக்கையில் மக்களை தப்பிப் பிழைக்க உந்தி வருகிறது.

அக்குவாரியஸ் கப்பலில் இருந்த ஒரு பயணி மலக் கூறினார், அவரது கணவர் கடத்தப்பட்டார் "திரிப்போலியில் ஒரு மாதத்திற்கு முன்னர். … அவர் உணவு விற்பனை துறையில் பணியாற்றி வந்தார், அவரிடம் பணம் இருந்தது.” அந்த தருணத்தில் தான் தனது குழந்தைகளோடு அப்பெண்மணி தப்பி வர முடிவெடுத்தார், ஆனால் "ஒரு நுழைவனுமதியுடன் கூடிய கடவுச்சீட்டைப் பெறுவது சாத்தியமில்லை" என்பதால் அவர் படகு மூலமாக மத்திய தரைக்கடலை கடக்கும் அபாயத்தை ஏற்க தீர்மானித்தார்.

Ibtissem என்ற பெண்மணி கூறுகையில், அவர் குடும்பம் பாதுகாப்பிற்காக முதலில் திரிப்போலியில் இருந்து ஜாவியாவுக்கு தப்பி சென்றது என்றும், ஆனால் சாலை தடுப்பில் துப்பாக்கிகளோடு (Kalashnikovs) ஆயுதமேந்தி இருந்த கடத்தல்காரர்களால் அவர்களின் மகன் கடத்தப்பட்டதும் அவர்கள் அங்கிருந்து நகர தீர்மானித்ததாக தெரிவித்தார். அவர்களின் மகனை விடுவிக்க அந்த கடத்தல்காரர்கள் அச்சுறுத்தி கோரிய 8,750 யூரோவை திரட்டுவதற்காக அவர்கள் தங்களின் இரண்டு கார்களை விற்க வேண்டியிருந்தது என்பதோடு, அவர்களின் மகன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டதில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. “லிபியாவில், நாங்கள் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று Ibtissem தெரிவித்தார். “நாங்கள் வெளியேற வேண்டியிருந்தது, அங்கே வேறெந்த தீர்வும் இருக்கவில்லை.”

நேற்று, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலும் அக்குவாரியஸ் இல் உள்ள அகதிகளைப் பங்கிட்டு கொள்ள ஓர் உடன்பாட்டை எட்டின. அக்குவாரியஸ் கப்பல், அவர்கள் வலியுறுத்தினார்கள், துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படாது. ஆனால் இந்த ஒவ்வொரு நாடும் முறையே 18, 15, 15 மற்றும் 10 என அகதிகளை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தன.

மால்டிஸ் அதிகாரிகள் அக்கப்பலை அவர்களின் துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப் போவதில்லை, சர்வதேச கடல் பரப்பிலேயே அந்த அகதிகள் மால்டிஸ் கப்பல்களுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து மால்டிஸ் கப்பல்கள் அவர்களை கரைக்கு அனுப்பும் என்பதை சுட்டிக்காட்டினர்.

ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் தஞ்சம் கோரும் அடிப்படை உரிமையை சட்டவிரோதமாக நசுக்கி, மத்திய தரைக்கடலின் வழியாக வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளை முடக்க ஆக்ரோஷமாக நகர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டின் 121,000 நபர்களுடன் ஒப்பிட்டால், இந்தாண்டு இதுவரையில் வெறும் 38,140 நபர்கள் மட்டுமே மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குள் வர முயற்சித்துள்ளனர், ஆனால் ஏற்கனவே குறைந்தபட்சம் 1,260 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலைமைகளின் கீழ், மத்திய தரைக்கடலில் துன்பத்திற்குள்ளாகும் அகதிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரித்து வருகிறது, லிபியா ஓர் உள்நாட்டு போர் நிலையில் இருக்கின்ற போதும் கூட, லிபிய கடல் ரோந்துப்படை பலவந்தமாக அகதிகளை லிபியாவுக்கே திரும்ப அனுப்பும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

லிபிய கடல் ரோந்துப்படை வாகனங்கள் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெறும் லிபியாவில் உள்ள தடுப்புக்காவல் முகாம்களுக்கு அகதிகளை வழமையாக திருப்பி அனுப்பி வருவதாகவும், அங்கே அவர்கள் கொடூரமாக கையாளப்படுவதாகவும் பரவலாக செய்திகள் உள்ளன. இந்த முகாம்களில் உள்ளவர்கள் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அடிமையாக விற்கப்பட்டு வருவதாகவும் மற்றும் படுகொலைகளே கூட செய்யப்படுவதாகவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய தரைக்கடலில் கடைசியாக எஞ்சியிருக்கும் இந்த தனியார் மீட்பு கப்பல், அக்குவாரியஸ், கடந்த வாரம் லிபிய கடல் ரோந்துப்படை வாகனங்களுடன் ஒரு கடுமையான மோதலில் சிக்கியது. அக்குவாரியஸ் இன் கப்பலோட்டும் குழுவினர் Le Monde க்கு கூறுகையில், லிபிய கப்பலின் தளபதிகள் அவர்களை அனைவரையும் கைதிகளாக பிடிக்க அச்சுறுத்தியதாக தெரிவித்தார்: “உங்களுக்கு திரிப்போலி தெரியுமா? சில காலத்திற்கு நீங்கள் அங்கே செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் எங்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற மாட்டேன் என்கிறீர்கள்! நீங்கள் தலையிட வேண்டாம், அகதிகளுக்கு நெருக்கமாக செல்ல வேண்டாமென நாங்கள் கூறினோம். இப்போது நீங்கள் பெரிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் புலம்பெயர்வோரை ஐரோப்பாவுக்குள் வர ஊக்குவித்து வருகிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இப்போது நாங்கள் தான் உங்களுக்கு கூற வேண்டியிருக்கும்.”

அக்குவாரியஸ் கப்பலை அச்சுறுத்துவதும் பீதியூட்டுவதும் நவ-பாசிசவாத திருப்பத்தின் விளைவாகும், மேலும் ஐரோப்பிய முதலாளித்துவ அரசியல்வாதிகளின் எல்லா வகையறாக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தஞ்சம் கோரும் உரிமையை அவமதிப்பதன் விளைவும் ஆகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து, லிபியா, சிரியா, ஈராக் மற்றும் அதற்கு அங்காலும் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமான நேட்டோ ஏகாதிபத்திய போர்கள் 60 மில்லியன் அகதிகளை அவர்களின் வீடுகளை விட்டு தப்பியோடி வர நிர்பந்தித்துள்ளது. இவ்வாறிருக்கையில் இப்போது, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாதளவில் அதிக அகதிகளுக்கு, ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் பழியுணர்ச்சியோடு தஞ்சம் கோரும் உரிமையை மறுத்து வருகின்றன.

ஒருபுறம், அவை லிபியாவில் மட்டுமல்ல, கிரீஸ் மற்றும் அதற்கு அப்பாலும் அதுபோன்ற ஐரோப்பிய ஒன்றிய அரசுகளில், ஐரோப்பிய ஒன்றிய சிறை முகாம்களின் பரந்த வலையமைப்பை விரைவாக கட்டமைத்து வருகின்றன. அவை, குறைந்தபட்சம் இப்போதைக்கு, பத்தாயிரக் கணக்கான அகதிகளைக் கொடூரமான நிலைமைகளின் கீழ் அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிவலது இத்தாலிய அரசாங்கத்திடமிருந்து வரும் அழுத்தத்தின் கீழ், இந்த போலிஸ் பயங்கரவாத எந்திரம் அகதிகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டதுடன், அதன் நடவடிக்கைகள் விரைவிலேயே ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிராக தீவிரப்படுத்தப்பட உள்ளது.

ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பாசிசவாத ஆட்சிக்குப் பின்னர் பார்த்திராத அளவில் போலிஸ் வேட்டையாடல்கள் மற்றும் இனவாத துப்புரவாக்கலுக்காக களம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்தாலியின் நவ-பாசிசவாத உள்துறை அமைச்சர் "சல்வீனி சட்டஆணை" என்று கூறப்படும் ஒரு சட்டஆணையை வரைந்ததும், இத்தாலிய அமைச்சர்கள் குழு திங்களன்று அதை ஏற்றது, இது, இத்தாலியில் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் நுழைவனுமதியை வழங்குவதிலிருந்தும் திரும்ப புதுப்பிப்பதிலிருந்தும் இத்தாலிய அதிகாரிகளைத் தடுக்கும்.

பெரும் எண்ணிக்கையில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை உருவாக்குவதும், பின்னர் அவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்காக மிகப் பெரியளவில் போலிஸ் வேட்டையாடல்களுக்குத் தயாரிப்பு செய்வதுமே சல்வீனி சட்டஆணையின் தாக்கமாகும். இத்தாலியிலிருந்து ஆண்டுதோறும் நாடு கடத்தப்படும் அகதிகளின் எண்ணிக்கை 5,000-7,000 இல் இருந்து ஏறத்தாழ 50,000 ஆக அதிகரிக்கக்கூடும். அதேநேரத்தில், சல்வீனி கூறுகையில், ரோமா முகாம்களைக் கலைத்து ரோமா மக்களைப் பெருந்திரளாக வெளியேற்றுவதற்குத் தயாரிப்பு செய்ய, இத்தாலி எங்கிலுமான நகரங்களில் உள்ளாட்சி அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ரோமின் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் புலம்பெயர்வு கொள்கைகளுக்கான ஒரு பேராசிரியர் கிறிஸ்தோபர் ஹெய்ன் கார்டியனுக்குக் கூறுகையில், “பல்வேறு நடவடிக்கைகளினூடாக இத்தாலியில் ஒட்டுமொத்தமாக அகதிகளே இல்லாமல் செய்வதுதான் இறுதி நோக்கம்: கடல் துறைமுகங்களை அடைப்பது, புலம்பெயர்வோரை மீட்கும் அரசு சாரா அமைப்புகளைக் குற்றகரமாக்குதல், கடல் ரோந்துப்படை உடனான கூட்டு ஒத்துழைப்பை விரிவாக்குதல், மற்றும் இப்போது, இந்த சட்டஆணையைக் கொண்டு, அவர்கள் ஏற்கனவே இங்கே இருப்பவர்களை இலக்கு வைக்கிறார்கள், அல்லது எதிர்காலத்தில் வரவிருப்பவர்களை இலக்கு வைக்கிறார்கள், எந்தவித பாதுகாப்பும் கிடைக்காமல் செய்ய முயல்கிறார்கள்—இதுவொரு தடுப்பு நடவடிக்கையாகும்.”

அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கூட்டணி அதிகாரங்கள், மத்திய தரைக்கடலில் கடல் போக்குவரத்து சட்டத்தை மதித்து, ஆழ்கடல்களில் கடும் அவதிக்கு உள்ளான அகதிகளை மீட்க முயலுபவர்களைத் தொடர்ந்து பீதியூட்டி தாக்கி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மொராக்கோவின் புலம்பெயர்வு-தடுப்பு நடவடிக்கைகளின் நெருக்கமான கூட்டுறவுக்குப் பின்னர், நேற்று, ஒரு மொரோக்கோ போர்க்கப்பல் ஓர் அகதிகள் கப்பலைச் சுட்டுவீழ்த்தியது, இதில் 22 வயதான ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் ஏனைய மூன்று அகதிகள் காயமடைந்தனர்.