ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tamil family fight UK plans to deport their seriously ill father

ஒரு தமிழ் குடும்பம் மிகவும் உடல்நலம் குன்றிய அவர்களின் தந்தையை நாடு கடத்துவதற்கான இங்கிலாந்தின் திட்டங்களை எதிர்த்து போரிடுகின்றது

By Simon Whelan
27 October 2018

பிரிட்டனின் மிருகத்தனமான குடியேற்ற முறை, கடுமையாக உடல்நலம் குன்றிய ஒருவரை நாடு கடத்துவதற்கான முயற்சியின் மீது மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது. அவர் உயிருக்கு கடுமையான ஆபத்து என்பது தெளிவான பின்னரே, அதிகாரிகள் நாடு கடத்துவதை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட வயதுவந்த ஐந்து தமிழர்களை உள்ளடக்கிய பாலச்சந்திரன் குடும்பத்தினர், அக்டோபர் 15 இல், ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவதற்கான விமானத்தில் ஏற மறுத்தனர், ஏனென்றால் அவர்களின் தந்தை விமானத்தில் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டால் அவருக்கு உயிராபத்தான பக்கவாதம் ஏற்படலாமென அவர்கள் அஞ்சினர். அறுபத்தியொரு வயதான சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை மார்படைப்பில் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் இதை மன அழுத்தத்துடன் தொடர்புபடுத்தி உள்ளனர்.

பிறப்பால் இலங்கை தமிழரும் ஆஸ்திரேலிய குடியுரிமையும் கொண்ட சங்கரப்பிள்ளை, அவருக்கு ஏற்பட்ட ஒவ்வொரு மார்படைப்பும் அவர் குடும்பத்தின் மீதான குடியேற்ற வழக்கின் போது ஏற்பட்ட மனஅழுத்த காலங்களிலேயே ஏற்பட்டதாக கூறுகிறார். உள்துறை அலுவலகத்தின் கரங்களில் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

பாலச்சந்திரனின் மூத்த மகள் கார்த்திகா கூறுகையில், அக்குடும்பத்தினர் எந்த விதிகளையும் மீறியதில்லை என்றபோதும், உள்துறை அலுவலகம் அக்குடும்பத்தை "குற்றவாளிகளைப் போல" நடத்துவதாக அவர் உணர்ந்ததைத் தெரிவித்தார். அக்குடும்பம் வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் முயற்சியில் அக்குடும்பத்தின் நண்பர்கள் மற்றும் உற்றார்கள் அளித்த ஒரு மனு, தற்போது 15,000 கையெழுத்துக்களை எட்டி வருகிறது.

அக்குடும்பத்தினர் அவர்களே முன்வந்து இரண்டு முறை இந்தாண்டு ஆஸ்திரேலியா திரும்ப உடன்பட்டனர், ஆனால் அவ்விரு சந்தர்ப்பங்களிலும் சங்கரப்பிள்ளை உடல்நலமின்றி இருந்ததால் அவர்களால் பயணிக்க முடியவில்லை. அந்த குடும்பம் பரிசோதித்தளித்த ஒரு மருத்துவ வல்லுனர் அறிக்கை, பாலச்சந்திரன் விமானத்தில் பறக்க வேண்டியிருந்தால் அவருக்கு தீவிர ஆபத்து ஏற்படலாமென முடிவு செய்தது.

தண்ணீர் சுத்திகரிப்பு முறையில் நிபுணத்துவம் கொண்ட உயர்தர சிறப்பு பொறியாளரான பாலச்சந்திரனை ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் கட்டுமானத்துறை பொறியாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவரது சிறப்பு திறமைகளுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேடிபிடித்து கொண்டு வந்த பின்னர், இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ள ஒரு குடும்பத்தின் மீது இந்த கடுமையான அணுகுமுறை பிரயோகிக்கப்படுகிறது. 1990 களின் இறுதியில், புலம்பெயர்வோரை ஏற்றுக் கொள்ளும் திட்டத்தின் பாகமாக அக்குடும்பம் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது, குடும்பத்தினர் அனைவருக்கும் அங்கே குடியுரிமை வழங்கப்பட்டன.

30 வயதான கார்திகாவுக்கு வாசிப்பு குறைபாடு உள்ளது என்றாலும் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக செயிண்ட் ஜோர்ஜ் மருத்துவமனையில் தன்னார்வ நிர்வாகியாக பணியாற்றி உள்ளார். 28 வயதான சிந்துஜா Queen Mary பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு பொருளாதார பட்டம் பெற்றவர் என்பதுடன், உள்துறை சேவை துரிதவழி பரிட்சைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது குடியேற்ற அந்தஸ்து பிரச்சினை தீர்க்கப்படுவதைச் சார்ந்து, உள்துறை சேவையில் அவருக்கான ஒரு வேலை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

சிந்துஜா கூறுகையில், “நான் சற்று செவிதிறன் குறைந்தவர் என்பதால் மற்றவர்களின் அதே மட்டத்தை எட்ட நான் அதிக கடுமையாக முயற்சிக்க வேண்டியிருந்தது, ஆனால் பின்தங்கி விடக்கூடாது என்பதில் நான் தீர்மானகரமாக இருந்தேன். இப்போது அவை அனைத்தும் வீணாகிவிடும் போலிருக்கிறது. உள்துறை அலுவலகம் வெறுமனே ஒரு அரசு துறை தான். அரசு மக்களுக்காக இருக்குமென நான் கருதினேன்,” என்றார்.

அக்குடும்பத்தின் ஒரே மகனான, 23 வயதான பிரணவன், Queen Mary பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞான பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்றாலும், அவரது நிலையற்ற குடியேற்ற அந்தஸ்து காரணமாக அவர் இடத்தைப் பெற அவரால் முடியவில்லை.

பாலச்சந்திரன் நீண்ட விமான பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவோமோ என்று உயிரச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அதுபோன்ற பயணம் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மார்படைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்பது நன்கறியப்பட்டதே. பாலச்சந்திரனுக்கு அவரது உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பாலச்சந்திரன் நாடு கடத்தப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து என்பது குறித்து உள்துறை அலுவலகம் நன்கறிந்துள்ளது என்றாலும் ஒரு மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் இந்த தருணத்தில் அவர் விமானத்தில் பயணிக்கலாமென அது வலியுறுத்தியது. நான்குக்கு குறைவின்றி துணை மருத்துவக் குழுவினர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உடன் அவரை விமான நிலையம் வரையில் கொண்டு சென்று அகற்றும் அளவுக்கு அதிகாரிகள் மிகவும் தீர்மானகரமாக இருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கான விமானம் புறப்படும் நேரம் நெருங்கிய போது, சங்கரபிள்ளையின் இரத்த அழுத்தம் 169/113 ஆக அதிகரித்தது, “அவசர சிகிச்சை” நிலையம் நெருக்கத்தில் இருந்த போதும் கூட உள்துறை அலுவலகம் நியமித்திருந்த துணை மருத்துவக் குழுவினர் அவர் விமானத்தில் பயணிக்கலாம் என்றே கூறினர். பத்திரிகை செய்திகளின்படி பாலச்சந்திரன் நிலைகுலைந்து போயிருந்தார், ஒரு சமயத்தில், அரைகுறையாக நனவிழந்ததாக தெரிந்தது.

அக்குடும்பம் விமானத்தில் ஏற மறுத்து, பின்னர் அவர்களது வழக்கறிஞரின் கோரிக்கைக்கு இணங்க, மார்படைப்புக்கும் மன அழுத்தத்திற்கும் இடையே தொடர்புபடுத்தி பார்க்கும் ஓர் உளவியல் நிபுணர் ஒரு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: “எனது கருத்தில், அவருக்கு மேலதிக CVA கள் (மார்படைப்புகள்) ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுடன், உயர்மட்ட மன அழுத்தத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளையக்கூடும்.” "உயிருக்கு ஆபத்தான மூளை பாதிப்பு" அபாயத்தில் அவர் இருப்பதாக குறிப்பிட்ட அந்த அறிக்கை, கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தற்கொலைக்கு நிகரானது என்று குறிப்பிட்டது.

அவர்கள் தாமே முன்வந்து மொத்தமாக வெளியேற வேண்டும் அல்லது எதிர்வரும் நாட்களில் தனித்தனியாக பலவந்தமாக வெளியேற்றப்படும் சாத்தியக்கூறை முகங்கொடுக்க வேண்டும் என்று அக்குடும்பத்திடம் கூறப்பட்டது. பிரணவன் கார்டியனுக்குக் கூறினார், “நாங்கள் விமானத்தில் ஏறாவிட்டால், வரவிருக்கும் நாட்களில் உள்துறை அலுவலகத்தால் பலவந்தமாக வெளியேற்றப்படலாம், என் தந்தையின் மோசமான உடல்நலமின்மையால் அவர் இங்கே தங்க வைக்கப்பட்டு குடும்பமாக அனுப்பப்படுவதற்கு பதிலாக தனித்தனியாக நாடு கடத்தப்படலாம் என்று எங்களுக்குக் கூறப்பட்டது.”

பாலச்சந்திரனின் வேலைக்கான நுழைவனுமதி காலாவதி ஆகிவிட்டதாலும் உள்துறை அலுவலகம் அதற்குப்பின்னர் அக்குடும்பம் காலவரையின்றி தங்கியிருக்க அனுமதிக்க மறுத்து விட்டதாலும், இங்கிலாந்தின் கடுமையான குடியேற்ற சட்டங்களின் கீழ், பாலச்சந்திரன் குடும்பத்திற்கு இனி பிரிட்டனில் வேலை செய்ய அனுமதி இல்லை. அவர்களை இங்கிலாந்திலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமென அவர்கள் 2012 இல் விண்ணப்பித்தபோதுதான் அக்குடும்பத்திற்குப் பிரச்சினைகள் தொடங்கின, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் அவர்கள் 2013 இல் ஒரு மனு செய்து அதில் ஜெயித்தார்கள், அப்போது நீதிபதி அவர்கள் விடயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் பின்னர் ஏறத்தாழ ஓராண்டுக்கு அக்குடும்பத்திற்கு எதுவும் எழுதவில்லை.

இறுதியாக ஜூலை 4, 2014 தேதியிட்டு அக்குடும்பத்தின் வழக்கறிஞர்களுக்கு முகவரியிட்டு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ஓர் உள்துறை அலுவலக அதிகாரி கடுமையாக விவரித்திருந்தார், “காலவரையின்றி இங்கேயே தங்கியிருப்பதை அனுமதிக்க கோரிய மேலே குறிப்பிட்ட விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர்கள் மறுத்த அந்த சமயத்தில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை என்பதும், ஆகவே அவர்கள் ஒரு முறையீடு செய்ய வேண்டியிருப்பதைக் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் என் கவனத்திற்கு வந்துள்ளது.”

மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றாலும் இறுதியில் பெப்ரவரி 2017 இல் அக்குடும்பத்தின் வழக்கு உள்துறை அலுவலகத்தால் மறுக்கப்பட்டது. மனித உரிமைகள் கோருவதைப் பின்தொடர்வதற்காக, சட்ட உதவி அமைப்பால் வழக்கு செலவுகளுக்கான நிதி பிரத்யேகமாக அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டது, ஆனால் உள்துறை அலுவலகம் ஏற்கனவே அக்டோபர் மத்தியில் விமானத்தில் பதிவு செய்திருந்த காரணத்தால் அவர்களுக்குப் போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்று கூறப்பட்டது.

வேலை செய்வதற்கான உரிமை பாலச்சந்திரனுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அக்குடும்பம் வீடற்றதாக ஆனதுடன், வேறு வழியின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவர்களின் சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள். அக்குடும்பம் ஹீத்ரோ விமான நிலையத்திலேயே படுத்துறங்கி ஒரு இரவைக் கழித்தது.

பாலச்சந்திரனின் உடல்நல பிரச்சினைகள் மற்றும் இரண்டு மகள்களின் உடல்ஊனம் —மற்றும் அவர்களின் கதியைக் குறித்த கேள்விக்கிடமற்ற மனஅழுத்தம்— ஆகியவற்றுடன், வீதிகளில் இருப்பதைக் காட்டிலும் அதற்கு மாற்றாக தடுப்புக்காவலில் வைக்குமாறு அவர்கள் உள்துறை அலுவலகத்திற்கு முறையிட்டனர்.

ஆனால் மிரட்டல்களுக்கு இடையே அக்குடும்பம் சகிக்கவியலாத நிலைமையில் தங்களை கண்டது. சிந்துஜா விவரித்தார்: "தடுப்புக் காவலில் வைக்க முடியாதளவுக்கு எங்கள் தந்தை மிகவும் சுகமின்றி இருந்ததாக உள்துறை அலுவலகம் எங்களுக்குத் தெரிவித்தது, மேலும் நாங்களே முன்வந்து திங்களன்று மாலை ஆஸ்திரேலியாவுக்கு திரும்புகிறோம் என்ற ஆவணங்களில் நாங்கள் கையெழுத்திட்டால் நிபந்தனையில் பேரில் தடுப்புக்காவல் மையத்திற்கு அருகில் உள்ள குறைந்த கட்டண விடுதியில் எங்களைத் தங்க வைக்கவும் ஒப்புக் கொண்டது. நாங்கள் வீதிகளில் உயிர்வாழ முடியாது என்பதால், கையெழுத்திடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தோம். ஆனால் விமானத்தில் ஏறினாலோ எங்கள் தந்தை உயிரிழக்கக்கூடும்.”

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்நலனைப் பாதுகாக்க முனைந்து வருகின்ற Medical Justice என்ற அறக்கட்டளை, மருத்துவரீதியில் விமானத்தில் பறக்க முடியாதவர்களாக கருதப்படுபவர்களை உள்துறை அலுவலகம் வெளியேற்றுவதற்காக செய்யும் முயற்சியாக மாதத்திற்கு மூன்று சம்பவங்களையாவது அது எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 12,666 பேர் பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலமாக பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்கள்—அதாவது சராசரியாக நாளொன்றுக்கு அண்மித்து 35 பேர். மார்ச் 2014 இல் இருந்து மார்ச் 2017 வரையில் வெறும் மூன்றாண்டுகளில், மொத்தம் 40,039 பேர் "பலவந்தமாக திருப்பியனுப்புவதற்கு" உள்ளாக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்னதாக புலம்பெயர்வின் அனைத்து அம்சங்களையும் ஆளும் உயரடுக்கு இறுக்கி வருகின்ற நிலையில், இவர்களில் 12,585 பேர் ஐரோப்பிய ஒன்றிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2010 இல் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 46 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை ஜிம்மி முபென்கா மிருகத்தனமாக நாடு கடத்தப்பட்டபோது அவர் இறந்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான வாக்குறுதிகளை, பாலச்சந்திரன் குடும்பத்தினரைக் கையாளும் விதம் கேலிக்கூத்தாக ஆக்குகிறது.

இந்த ஆண்டில்தான், இன்னொரு மனிதருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான மற்றொரு நாடு கடத்தும் சம்பவமும் HuffPost UK இல் பதிவு செய்யப்பட்டது. 20 நிமிட நேர குரல் பதிவில், அப்துல் எனும் ஒருவர் துருக்கிய விமானச்சேவை விமானத்தில் பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கான ஒரு முயற்சியின் போது சரீரரீதியிலும் வார்த்தைகளாலும் அவமானப்படுத்தப்பட்டதைக் குறித்து மீண்டும் மீண்டும் குறைகூறுகிறார்.

பாலச்சந்திரன் குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் இங்கிலாந்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான மற்றும் வேலை செய்யவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Britain: Perverse verdict clears security guards of Jimmy Mubenga killing
[20 December 2014]

UK inquest reveals brutality of immigrant detainee’s death 
[17 August 2016]