ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the WRP joined the NATO camp
Imperialist war in the Balkans and the decay of the petty-bourgeois left

தொழிலாளர் புரட்சிக் கட்சி நேட்டோ முகாமில் எப்படி இணைந்து கொண்டது?

பால்கனில் ஏகாதிபத்திய யுத்தமும் - குட்டி முதலாளித்துவ இடதுகளின் சீரழிவும்

Statement of the International Committee of the Fourth International
14 December 1995 

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பெரு வல்லரசுகள் மீண்டுமொருமுறை உலகை வன்முறையால் மறுபங்கீடு செய்வதில் இறங்கியுள்ளன.  இதுதான் யூகோஸ்லாவியாவின் கலைப்பினால் உருவான நான்கு வருட கால மோதலுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா மேற்கொள்ளும் தலையீட்டின் முக்கியத்துவம் ஆகும். பொஸ்னியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பு பால்கனில் ஒரு இராணுவத் திருப்புமுனைக்கும் கூடுதலான ஒன்றைக் குறித்து நிற்கிறது. சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்படும் முதலாவது முக்கியமான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையான இது அவர்கள் புதிய உலக ஒழுங்கு என அழைப்பதின் உருக்கொடுப்பு ஆகும். இது பழைய உலக ஒழுங்குடன், அதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்தியத்தின் எழுச்சியுடன் வெடித்தெழுந்து வந்த போர்கள் மற்றும் புரட்சிகளுக்கான சகாப்தத்துடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. முதலாம் உலகப் போருக்கு முன்னரான காலகட்டத்தில் போல, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ மேலாதிக்கத்திற்காக பெரும் சக்திகள் தீவிரமாக மோதிக்கொள்கின்ற களமாக பால்கன்கள் ஆகியுள்ளன.

பொஸ்னியாவிலான அமெரிக்காவினது சமாதான உடன்படிக்கை (Pax Americana) ஏற்கனவே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்டும் மேலும் பல மில்லியன் கணக்கானோரை அகதிகளாக்கியும் உள்ள, இன அடிப்படையிலான பிரிவினை நிகழ்வுப் போக்கை பூரணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஹிட்லரது இராணுவத்தின் தோல்வியின் பின்னர் முதல் தடவையாக, பால்கன் பகுதிக்குள் ஏகாதிபத்தியப் படைகளை நுழைப்பதை முன்னெடுப்பதன் மூலம், அமெரிக்கா புதிய பரந்த பல முரண்பாடுகள் வெடிக்கவிருப்பதற்கு உத்தரவாதமளிக்கிறது. இந்த ஏற்பாட்டுக்கான நிலைமைகளை உருவாக்க கிளிண்டன் நிர்வாகம் இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது, அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் பினாமி இராணுவங்கள் இரண்டும் இதில் பங்குபெற்றன. கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதல்கள் 3200 முறை மேற்கொள்ளப்பட்டது, அதாவது ஒரு டன்னிற்கு மேற்பட்ட குண்டுகள். அத்துடன் அட்றியாட்டிக் (Adriatic) கடலில் இருந்து அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டன. பொஸ்னியா முழுக்கவும் நகரங்களும் கிராமங்களும் இதற்கு இலக்காக்கப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் உள்ளனர். 

இந்த குண்டுவீச்சுகளின் உடனடி நோக்கம் பொஸ்னியாவைச் சேர்ந்த சேர்பிய இராணுவத்தின் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து இணைப்புகளைத் தரைமட்டமாக்குவதன் மூலம், குரோஷியாவின் சட்டபூர்வமான இராணுவம் பொஸ்னிய முஸ்லீம் மற்றும் குரோஷிய படைகளுடன் சேர்ந்து வடமேற்கு பொஸ்னியாவில் உள்ள சேர்பியப் பிராந்தியங்களை நாசமாக்க அனுமதிப்பதாகும். இத்தரைவழித்தாக்குதல் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, காயப்படுத்தியதுடன் இன்னுமொரு ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் மக்களை மேலும் அகதிகளாக்கியது. அமெரிக்காவின் பின்னணி ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையின்போது, கடந்த ஆகஸ்டில் கிராஜினாவில் (Krajina) இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் சேர்பிய அப்பாவி மக்கள் எண்ணிக்கையுடன் இந்த எண்ணிக்கை சேர்ந்து கொண்டது. 

இரண்டு மாத கால இடைவெளியில், பொஸ்னிய உள்நாட்டு யுத்தத்தின் மொத்த காலத்திலும் கண்டிராத இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் மிகப் பாரிய நடவடிக்கைகள் அமெரிக்க மேற்பார்வையில் நடந்தேறின. இவ்வாறு தான் ஓஹியோவில் உள்ள டைற்றனில் (Dayton, Ohio) அமெரிக்க மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரங்கு அமைக்கப்பட்டது.

பல வருடங்களாக ஐரோப்பாவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்வுகளை அவை “இனச் சுத்திகரிப்பிற்கு” இடமளிக்கின்றன என்றும் பொஸ்னியாவின் சுதந்திரத்தையும், பல்லினத் தன்மையையும் பேணத் தவறிவிட்டன என்றும் கூறி தடைப்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒருதலைப்பட்சமாக தனது சொந்த துண்டாடல் திட்டத்தை சுமத்தியுள்ளது. அமெரிக்கா, தனது ஐரோப்பியக் கூட்டாளிகளை ஒருபுறமாக ஒதுக்கித்தள்ளி விட்டு, பொஸ்னியாவை முஸ்லீம், சேர்பிய, குரோஷிய நிலத்துண்டுகளாகப் பிரிக்கும் உள்முக எல்லைகளை உத்தரவிட்டுள்ளதுடன் முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசிற்கு ஒரு புதிய அரசியல்சட்டத்தையும் கூட வரைந்துள்ளது. இப்பிரிவினையை அமல்படுத்தவும், புதிய எல்லைகளின் படி தாங்கள் தவறான பக்கங்களில் இருப்பதாய் காணும் இன மக்களை முறைப்படி வெளியேற்றுவதற்கும், 60,000 நேட்டோ படையினர் பொஸ்னியாவுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்கத் திட்டத்தினை எதிர்க்கும் எவரொருவருக்கு எதிராகவும் அடக்கி ஆளும் சக்தியை பயன்படுத்துவதற்கு கிளிண்டன் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த ஏற்பாட்டை உறுதி செய்வதற்கு சேர்பியாவின் ஸ்லோபோடன் மிலோசெவிக் (Slobodan Milosevic), குரோஷியாவின் ஃபிராஞ்சோ ருஜ்மன் (Franjo Tudjman) மற்றும் பொஸ்னிய ஜனாதிபதியான அலிஜா இசட்பெகோவிக் (Alija Izetbegovic) ஆகியோர் டேய்ட்ரனில் (Dayton) உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டு காலமாக மிலோசெவிக்கை பால்கனிச ஹிட்லருக்குச் சமமானவர் என்று கூறிக் கண்டித்து வந்திருந்த அமெரிக்கா டேய்ட்ரனில் அவரை அமைதிக்காகப் பாடுபடுபவர் எனக் கூறித் தழுவிக் கொண்டது. சேர்பிய மேலாதிக்கத்துக்கு உரம்போட்டும் பொஸ்னிய சேர்பியர்களிடையே மிக வெறிபிடித்த வகுப்புவாதக் கூறுகளை ஊக்குவித்தும் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருந்த மிலோசெவிக் பொஸ்னியப் போருக்கான ஒரு பிரதான பொறுப்பாளி ஆவார். எப்படியிருந்த போதிலும், டேய்ரனில் அவர், பெல்கிரேடுக்கான பொருளாதாரச் சலுகைகள் அளிப்பதற்கான வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டு பரிமாற்றமாக சேர்பியர் வசம் இருந்த பிராந்தியத்தைத் திரும்ப ஒப்படைத்தார்.

யுத்தத்தின் பிரதான வெற்றியாளனாக ருஜ்மன் பேச்சுவார்த்தைக்கு வந்தார். சேர்பியர்களை துரத்தியடிப்பதற்கான அமெரிக்காவின் உயர்ந்தபட்ச உதவிக்கு நன்றி தெரிவித்தவாறு, அவர் பெருமளவில் அவரது இலக்கான ஒரு இனரீதியில் ஒருங்கிணைந்ததான குரோஷியாவை சிரஷ்டிப்பதில் வெற்றியீட்டியுள்ளார். அவருங்கூட பொஸ்னியப் பிராந்தியத்தின் ஒரு பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், அதனை குரோஷியாவின் ஒரு இணைப்பு மாகாணமாகவும் மாற்றியுள்ளார்.

பல ஆண்டுகளாக, வாஷிங்டன், கூறப்பட்ட பொஸ்னிய சுதந்திரத்தையும், பல்லினத் தன்மையையும் பாதுகாப்பதன் அடிப்படையில் நியாயப்படுத்தியது. பொஸ்னிய ஆட்சியின் சுதந்திரத்தினது கட்டுக்கதையான தன்மையானது, அமெரிக்க அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவினால் தெளிவாக்கப்பட்டது. அதனது பிரதான ஆலோசகர், றேகன் நிர்வாகத்தின் கீழ் அணு ஆயுதக் கொள்கையின் பாதுகாப்பு வருடக்கணக்காக வாஷிங்டன் பால்கனிலான அதனது தலையீட்டை அதனது பொறுப்பிற்கு உப செயலாளராக விளங்கிய றிச்சார்ட் பேர்ள் (Richard Perle) ஆகும். இன்னொரு அமெரிக்கர், நியூ ஹாம்ஷேர் (New Hampshire) என்னும் இடத்தில் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவராக விளங்கிய கிறிஸ் ஸ்புறு (Chris Spirou) இவர் பேச்சுவார்த்தைகளில் பொஸ்னியப் பிரதிநிதியாக நேரடியாகப் பங்குபற்றினார். அரச திணைக்களத்தின் விசேட கொடுப்பனவின் கீழ் பொஸ்னிய வெளிநாட்டு அமைச்சராக செயல்படும் இன்னொரு அமெரிக்கப் பிரஜையான முகமட் சகிர்பே (Muhamed Sacirbey) உடன் கிறிஸ் ஸ்புறு இணைந்து கொண்டார். பொஸ்னியப் பிரதிநிதிகளின் தெரிவு, டேய்ட்ரன் பேச்சுக்களின் ஏனைய எல்லாக் கூறுகளையும் போலவே, இந்தக் கூறப்படும் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையான இயல்பினை வெளிப்படுத்துகின்றது. இது ஒரு பாரம்பரிய ஏகாதிபத்திய துண்டாடலாகும்.

வியட்னாம் யுத்தத்தின் 20 வருடங்களின் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னொரு பேரழிவு மிக்க தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. பொஸ்னியாவிலான வாஷிங்டனின் இறுமாப்பு மிக்க இராஜதந்திரம், முன்னறிந்திராத அளவு அமெரிக்க ஐரோப்பிய நெருக்கடியை ஏற்கனவே உருவாக்கியுள்ளதுடன், நேட்டோ கூட்டினையும் உடைவுப் புள்ளிக்கு கொண்டுவந்துள்ளது. இத் தலையீடு கடந்த 15 வருடங்களாக ஐக்கிய அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட தொடர் இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் அண்மையதாகும். வாஷிங்டன், அமெரிக்காவின் பூகோள நலன்களை முன்னெடுப்பதற்கு திரும்பத் திரும்ப ஆயுத பலத்தை நாடிநின்ற, இந்த எல்லா வேளைகளிலும் தனது நடவடிக்கைகளை சமாதானம், ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற உரிமைகோரலின் கீழ் மேற்கொண்டது.

1980ல் இருந்து உலகம், கிரெனடா, பனாமா மீதான ஆக்கிரமிப்பு, லிபியா மீதான குண்டு வீச்சு, நிக்கரக்குவாவிலும் எல்சல்வடோரிலுமான CIA யினால் வழிநடத்தப்பட்ட கேடுகெட்ட யுத்தங்கள், லெபனான் சோமாலியா ஹயிட்டி ஆகியவற்றின் மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கள், அத்துடன் நிட்சயமாய் வளைகுடா யுத்தம் ஆகியவற்றையும் கண்டுகொண்டது. அமெரிக்க இராணுவ வாதத்தின் இன்னும் பாரிய எழுச்சிகள் எதிர்வரும் காலங்களில் காத்துக்கொண்டுள்ளது. இன்று நடந்துகொண்டிருக்கும் சீன விரோதப் பிரச்சாரத்திலும், அதேபோல் ஜப்பானுடனான நீடித்த வர்த்தகத் தகராறுகளிலும் உள்ளடங்கி இருப்பது ஆசியாவிலான எதிர்கால யுத்தங்களுக்கான விதைகளாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 2ம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அது ஈட்டிக்கொண்ட பொருளாதார மேலாதிக்கத்தினை இழந்த நிலமையின் கீழ், தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, அதனிடம் இன்னமும் எஞ்சியிருக்கும் இராணுவ பலத்தினை நோக்கி என்றுமில்லாத அதிகரித்த விதத்தில் திரும்புகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும், உலகம் பூராவும் தொழிலாளர் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் மரணத்தறுவாயில் உள்ள அதிகாரத்துவங்கள், ஏகாதிபத்தியங்களது எந்த நடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்கு இயலும் தன்மையையோ அல்லது ஒரு சிறு நகர்வினையோ காட்டவில்லை. பரந்துபட்ட தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக வழிதடுமாறியுள்ளதற்கும், அந்தவகையில் இந்த நிகழ்வுகளில் இயல்பாகவே அமைந்துள்ள பேரழிவு மிக்க அபாயங்களை, பரந்துபட்ட மக்கள் புரிந்து கொள்ள முடியாத மட்டத்திலான சமூக நனவு நெருக்கடி ஒன்றை சிருஸ்டித்ததற்கும் இவர்களே பிரதான பொறுப்பாளிகளாகும்.

பொஸ்னியாவும் இடதுகளும்

1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அரசியலில் தீவிரமயப்பட்ட ஒரு பரந்த சமூகத்தட்டினருக்கு பொஸ்னியாவிலான சம்பவங்கள் ஒரு கூர்மையான வலதுசாரி திருப்பத்திற்கான சந்தர்ப்பமாகும். ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தலையீடுகளுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் எதிரான பழைய எதிர்ப்பு இயக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய இவர்களில் பலர், இன்று ஏகாதிபத்தியம் பொஸ்னிய யுத்தத்தினுள் நுழைவதற்கான தயாரிப்பிற்கு உதவினார்கள். முன்னய ஒரு காலகட்டத்தில், புரட்சிகர ரீதியாக ஒலிக்கும் பெயர்களைக் கொண்டதும், மார்க்சிச வசன ஜாடையை ஈர்த்துக்கொண்டதுமான அமைப்புக்களில் ஒரு பகுதியினர் இணைந்தவேளையில், ஏனையோர் யுத்த எதிர்ப்பு வாதிகளாகவும் தாராளவாத மனிதாபிமான வாதிகளாகவும் மாறினர். அவர்கள் ஏகாதிபத்தியத்தினது மிகவும் அப்பட்டமான குற்றச்செயல்களை கண்டித்த அதேவேளையில் மாணவர் சக்தி, பெண் விடுதலை, பல்வேறுவடிவிலான தேசிய வாதங்கள் போன்ற நெறிப்படுத்தல்களுக்கு வக்காலத்து வாங்கினர். அவர்கள் எல்லோரும் தங்களது அரசியலுக்கு வர்க்கப் போராட்டத்தை அடித்தளமாகக் கொள்ளத் தவறியதுடன், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தினை நோக்கி ஒரு ஆழமான ஐயுறவு வாதத்தினைப் பகிர்ந்துகொண்டனர். தற்போது அவர்கள், அவர்களாலேயே புரிந்து கொள்ளமுடியாத பலம்மிக்க வர்க்க சக்திகளின் தாக்கத்தின் கீழ் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

அன்ரனி லூயிஸ் (Anthony Lewis) போன்ற லிபரல் பண்டிதர்கள் வியட்னாம் யுத்தத்திற்கு எதிரான தங்களது முன்னய எதிர்ப்புக்கு பரிகாரம் தேடும் வகையில், கட்டுரைக்குப் பின் கட்டுரையாக வாஷிங்டனும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றனர். அவர்கள், குளிர் யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தில், ஏகாதிபத்தியக் கொள்கை ஒரு ஒழுக்க நெறி அவசியத்தினால் –இந்தவகையில், சேர்பியர்களை தண்டிப்பதற்கு– வழிநடத்தப்படுவதாக விவாதிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களும், அவர்களைப் போன்றோரும் முன்னய ஒரு காலகட்டத்தில் ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்ப்பதற்கு ஹானோய் (Hanoi) இற்கு அல்லது பெய்ரூட்டிற்கு (Beirut) விஜயம் செய்ததுபோல், இன்று எழுத்தாளர் சுசான் சொன்ராக் (Susan Sontag) நடிகை வனசா ரெட்கிரேவ் (Vanessa Redgrave) போன்றோர் ஏகாதிபத்திய தலையீட்டை ஆதரிக்கும் பொருட்டு சரஜேவோ (Sarajevo) விற்கு யாத்திரைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த பரிமாணத்தின் முக்கியத்துவத்தை கருதுவதற்கும் கூட நின்று பார்க்கவில்லை.

ஏனையோர் பொஸ்னியாவில் தங்களது நீண்ட வலது நோக்கிய திருப்பத்தை பூரணப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைக் கண்டுகொண்டனர். ஐக்கிய அமெரிக்காவில், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து உடைத்துக் கொண்ட ரிம் வொல்போத் (Tim Wohlforth) “யுத்தத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள்” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில் பொஸ்னியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை அறிவித்தார். இன்று ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு ஆதரவு வழங்கும் முன்னை நாள் யுத்த எதிர்ப்பாளர்களின் ஒரு பரந்த தட்டினர்க்கு அறிவித்துக்கொள்ளும்போது, “நாங்கள் எங்களது அணிவகுப்பில் முன்னோக்கிச் செல்கையில் எங்களது முஸ்டிகளை உயர்த்தியவாறு, எங்கு ஒழுக்க ரீதியாக இராணுவ நடவடிக்கை அவசியமோ அப்போது அதற்கான அழைப்பை எங்களது பதாகைகளில் பறக்கவிடவேண்டும்” என அவர் பிரகடனப்படுத்துகின்றார். இத்தாலிய தீவிரவாதக் குழுவான லொற்றா கொன்ரினுவா (Lotta Continua) வின் முன்னாள் தலைவரான அட்றியானோ சொவ்றி (Adriano Sofri) சேர்பியர்களுக்கு எதிரான உடனடி இராணுவ நடவடிக்கைகளுக்கு அழைப்புவிட்டார். “நான் அவர்களுக்கு குண்டு போட விரும்புகிறேன். தனிய குண்டு மட்டுமே போட விரும்புகிறேன்” என அவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஜேர்மனியைப்போல் வேறெங்கும் பொஸ்னிய விவகாரம் அத்தகைய ஒரு செறிவான அரசியல் விடுபடல் உணர்வினை பிறப்பிக்கவில்லை. 1945ல், மனித வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு அதனது துணைபோதலின் பின்பு, ஜேர்மன் குட்டிமுதலாளித்துவ வாதிகள் அதனது சுவாஸ்திகா (நாஜிக்கட்சியின் சின்னம்) வை விலக்கிவிட்டு யுத்த எதிர்ப்புத் தோற்றத்தை ஈர்த்துக் கொண்டது. இந்த அடித்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பரந்துபட்ட எதிர்ப்பு இயக்கம் 1980கள் வரை நன்றாக உயிர்வாழ்ந்து வந்ததுடன், இன்றும் கூட பசுமை கட்சி (Green party) என்ற வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்கும், ஜேர்மன் மறுஐக்கியத்திற்கும் பின்பு, எப்படியிருந்தபோதும், அரசியல் வர்க்க சக்திகளின் அணிசேர்க்கை துன்பகரமாக நகர்வடைந்துள்ளது. அதனது அரசியல் பொருளாதார சக்தி கெட்டியாகப் பலமடைந்துள்ள ஜேர்மன் முதலாளித்துவம் மீண்டும் ஒரு முறை உலக அரங்கினுள் சாகசம் மிக்கதாக நுழைந்துகொண்டுள்ளது. ஜேர்மன் மூலதனத்தின் மீள் எழுச்சியுடன் முன்னாள் எதிர்ப்பாளர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். நேற்றய பசுமைக் கட்சியில் பூத்த குழந்தைகள், யுத்த எதிர்ப்பினை நிராகரிப்பதோடு நேட்டோவின் ஆகாயத் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலமும், பால்கனிலான வேய்ர்மாக்ற் (Wehrmacht) இன் இரண்டாம் உலக யுத்தத்தின் போதான பாதையை மீள வரையுமாறு இராணுவத்துக்கு அழைப்பு விடுவதன் மூலமும் ஜேர்மன் தேசத்திற்கான தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்கின்றனர். 1968 மாணவர் எதிர்ப்பில் மிகவும் ஆக்கிரோஷமாக விளங்கிய டானியல் கோன் பென்டிற் (Daniel Cohn-Bendit) ஒரு “மனிதாபிமான” ஏகாதிபத்தியத் தலையீட்டின் வக்கீலாக எழுந்துள்ள அதேவேளையில் பிராங்பேர்ட் பள்ளியின் ஒரு முன்னணி நபரான யூர்கன் ஹாபர்மாஸ் (Jurgen Habermas) தான் “நடுங்கும் கரங்களுடன்” இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னணி ஆதரவு வழங்க கட்டாயப் படுத்தப்பட்டதாக அறிவிக்கின்றார். ஒரு சர்வதேச மட்டத்தில், முன்னய ஒரு காலகட்டத்தில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களை எதிர்த்த அதே நபர்கள் இன்று, இன சோவினிச யுத்த அல்லோல கல்லோலங்கள், நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு போன்ற எல்லாவற்றிற்கும் மனித உரிமைகள், தேசிய சுயநிர்ணயம் என்பவற்றின் பேரால் ஆதரவளிக்கின்றனர்.

“இடது” என்கின்ற பதம் இந்த மூலகங்களை விபரிப்பதற்கு விமர்சனம் அற்ற முறையில் பிரயோகிக்கப்படுமாயின், இது அதனை தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக மங்கலாக்கவே உதவிசெய்யும், ஏனெனில் இது அவர்களின் பரிணாமத்தை கணக்கில் கொள்ளத் தவறி விடுகின்றது. இந்த சமூக அரசியல் போக்கினை, முன்னைநாள் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் முகாம் எனக் குறிப்பிடுவது சில வேளைகளில் மிகச் சரியானதாக இருக்கும்.

ஏகாதிபத்தியத்தை நோக்கிய திருப்பத்தின் பின்னால்

இந்தப் போக்கின் பிரதிநிதிகள், ஏகாதிபத்திய முகாமினுள்ளான தங்களது திருப்பத்திற்கான காரணமாக சேர்பியக் கொடூரங்களைக் குறிப்பிடுகின்றனர். இத்தகையதொரு துடைத்துக் கட்டக் கூடிய அரசியல் மீள்அணிதிரள்வுக்கான, திருப்தியளிக்கும் விளக்கமாக இது மிகவும் அரிதாகத்தான் விளங்குகிறது. சேர்பிய தேசியவாத சக்திகள் மிகவும் பரந்துபட்ட கொடூரங்களை மேற்கொண்டனர் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. ஆனால் குரோஷிய இராணுவத் துருப்பினரும் குடிப் படையினரும் குரோஷியாவில் உள்ள சேர்பியர்களுக்கு எதிராகவும், பொஸ்னியாவில் உள்ள முஸ்லீம்கள், சேர்பியர்கள் ஆகிய இரு சாராருக்கு எதிராகவும் இதையொத்த குற்றங்களை நிகழ்த்தியுள்ள குற்றவாளிகளாவர். முஸ்லீம் படைகளும், பொஸ்னியாவில் உள்ள சேர்பியர், குரோஷியர்கள் மீது இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்த எல்லா தேசியவாதக் கன்னைகளும், இனத்துவம் என்ற பிற்போக்கு கோட்பாட்டு அடித்தளத்தில் அரசுகளை துண்டாட முயற்சிக்கும் அரசியல் அயோக்கியர்கள், முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள், வகுப்புவாத அரசியல் வாதிகள் போன்றோரினால் வழிநடத்தப்படுகின்றன. இறுதி ஆய்வுகளில் இவர்கள் எல்லோரும் பால்கனில் ஒரு புதிய மீள்பிரிவினைக்கு முயற்சிக்கும் இந்த அல்லது அந்த ஏகாதிபத்தியக் கன்னையின் ஏஜன்டுகளாக தொழிற்படுகின்றனர்.

முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான ஒரு அரசியல் அணுகுமுறை, அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சார்பு ரீதியான கொடூரத்தினை அடித்தளமாகக் கொண்டு, போட்டியிடும் தேசிய வாதக் குழுக்களிடையே கன்னைகளைத் தேர்ந்தெடுப்பதுடன் சம்பந்தப்பட வேண்டும் எனும் கூற்றை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியுமாய் இருந்தால், பின்னர் அவர்களது சொந்தப் பிராந்தியத்தை விட்டு பாரிய அளவில் வெளியேற்றப்பட்ட கிராஜினாவின் சேர்பியர்களுக்கும் இதேபோன்ற ஒரு அவசியமான முடிவையே எடுக்கவேண்டியிருக்கும். இன்னமும் கிராஜினாவினது சேர்பியர்களது துன்பங்கள், பொஸ்னியாவில் உள்ளான “மனிதாபிமான” தலையீட்டுக்கு அழைப்பு விடுபவர்களிடையே எந்த வகையிலேனும் ஆதரவைப் பெற்றுவிடவில்லை. இதற்கு மறுதலையாக அவர்களில் அனேகர் இந்த சேர்பியருக்கு எதிரான தாக்குதலை குரோஷிய “சுயநிர்ணய” த்தின் வெற்றியாகத் தழுவிக்கொண்டனர். அவர்களது ஒழுக்கநெறிப் பிரச்சாரத்துக்குப் பின்னணியில், அவர்கள் பொஸ்னியாவில் தங்களது அரசியலை ஏகாதிபத்தியத்தினது அரசியலுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொண்டனர். இது தனிநபர்களின் அரசியல் அபிவிருத்தி பற்றிய ஒரு விடயமல்ல, பதிலாக மிகவும் ஆழமான வேர்களை உடைய சமூக நிகழ்சிப்போக்கினது ஒரு வெளிப்பாடாகும்.

ஸ்ராலினிசத்தின் உடைவு

ஏகாதிபத்திய முகாமிற்கான இந்த அணிவகுப்பினை, பாரிய சம்பவங்கள் விளைவாக்கியுள்ளது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் வீழ்ச்சி, முன்னய ஒரு காலகட்டத்தில் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டிருந்தவர்களின் ஒரு அவசியமான ஆதாரத்தை அகற்றியுள்ளது. இந்தச் சமூகத்தட்டு அதனது இடதுசாரித்தனத்தை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களில் அன்றி பதிலாக ஸ்ராலினிசத்தின் தோற்ற ரீதியான பலத்திலேயே அடித்தளமாகக் கொண்டிருந்தது. இது நீண்ட காலத்துக்கு முன்னரேயே புரட்சிகர சோசலிச அரசியலைக் கைவிட்டிருந்ததுடன், சமுதாயத்தை ஒரு நேர்மையான முற்போக்கான அடித்தளத்தில் மாற்றுவதற்கான சாத்தியம் தொடர்பாகவும் அதிகரித்தவிதத்தில் சிடுமூஞ்சித்தனத்தைக் காட்டிக்கொண்டது. இவ்விதமாகவே இது, முதலாளித்துவ வாதிகளின் பிரகடனமான, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது எந்தவொரு சோசலிசப் பதிலீட்டினதும் முடிவைக் குறிக்கிறது என்பதை உடனடியாக ஏற்றுக்கொண்டது.

தொழிலாள வர்க்கத்துடனான இந்த குட்டி முதலாளித்துவப் பகுதியினரின் உறவு, நாட்டுக்குப் பின் நாடாக உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கத்தை வடிவமைத்த பழைய ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சீரழிவுடன் மேலும் அடிப்படையாக மாற்றமுற்றுள்ளது. தொழிலாளர் இயக்கம், இன்னமும் இந்த குட்டி முதலாளித்துவ இடதுகளுக்கு, அதே பழைய செயற்பாட்டுக்கான ஆதாரங்களையோ அல்லது அரசியல் செல்வாக்குக்கான மார்க்கங்களையோ வழங்கவில்லை. மேலும், குறைந்தது பகுதியளவிலேனும் தொழிலாள வர்க்கத்தின் நல்லிருப்புடன் (well-being) அதனது தலைவிதியைப் பிணைத்த, நலன்புரி அரசு அமைப்புக்களும் ஒழுங்கு முறையாகக் கலைக்கப்பட்டு வருகின்றது.

இந்த தட்டினது பிரதிநிதிகள் ஒரு திட்டவட்டமான சமூக பரிணாமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பலர் ஆரம்பத்தில் சலுகை படைத்த உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்தே வந்தனர். தருணங்களில் அவர்கள் தங்களது பழைய சூழலுடனான தனிப்பட்ட, சமூக, கலாச்சாரப் பிணைப்புகளினால் மீள இழுக்கப்பட்டனர். அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது வருமான மட்டம், அவர்களது சமூகத் தொடர்புகள் என்பன, என்றும் இல்லாதவகையில், அவர்களில் இருந்து மிகவும் தூரத்திலும் அன்னியப்பட்டும் இருக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் சனத்தொகையை விட, செல்வந்த உயர் மத்தியதர வர்க்கத்துடனும் முதலாளித்துவ வாதிகளுடனும் நெருக்கமாகப் பிணைந்திருந்தது.

இந்த நகர்வு கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பரந்து பட்டுவந்த ஒரு சமூகத் துருவப்படலின் பாகமாகும். தொழிலாள வர்க்கத்திற்கும், அதிகரித்த மத்தியதர வர்க்க மக்களின் பகுதியினருக்கும் முதலாளித்துவ உற்பத்தி வடிவங்களிலான துடைத்துக்கட்டும் மாற்றங்கள், வேலைகள் வாழ்க்கைத்தரங்கள் சமூக நிலமைகள் என்பவற்றில் ஒரு “கீழ்நோக்கிய வீழ்ச்சியை” கருதியது. ஆனால் முன்னாள் தீவிரவாதிகளில் ஒரு பகுதியினர் பல்கலைக் கழக பேராசிரியர்களாகவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களாகவும், பாராளுமன்ற அரசியல் வாதிகளாகவும் அல்லது இதையொத்த சொகுசான பாத்திரத்தை அனுபவித்ததுடன், தங்களது சொந்தச் செல்வத்தின் பங்கு உயர்ந்ததையும் கண்டு கொண்டனர். ஏனைய குறைந்த அதிர்ஸ்டம் உள்ளோர், தங்களது முன்னய அரசியல் நடவடிக்கைகளுக்காக கசப்பாக மனம் வருந்துவதுடன், ஒரு மேலும் சலுகைமிக்க நிதி பாத்திரத்துக்கு தங்கள் உயர்வினைத் தடுத்ததாக அவர்களை குற்றம் சாட்டினர். இது பரிகாரம் தேடுவதற்கான இன்னும் பலம் மிக்க உந்துதலை வழங்கியது. இந்தத் தட்டினர், முதலாளித்துவ அரசியலுடன் ஒரு உத்தியோகபூர்வ உடன்பாட்டிற்கான அதனது திருப்பத்தை அறிவிக்கும் ஒரு வழியாக பொஸ்னியா விளங்கியது.

தொழிலாளர் புரட்சி கட்சி: “புரட்சிகர ஒழுக்கநெறி” யில் இருந்து ஏகாதிபத்திய ஒழுக்க நெறிக்கு

இந்த ஏகாதிபத்திய சார்பு அரசியலை நோக்கிய பொதுவான திருப்பத்தின் மிகவும் வெட்கக்கேடான வெளிப்பாடு, கிளீவ் சுலோட்டரினால் (Cliff Slaughter) வழிநடத்தப்படும் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் கண்டுகொள்ளப்பட்டது. 1986 பெப்பிரவரியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்தான அதனது உடைவில் உச்ச வெளிப்பாட்டைக் கண்டுகொண்ட, தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் எழுந்த உள்நெருக்கடி இடம்பெற்று 10 வருடமாகின்றது. ட்ரொட்ஸ்கிசத்துடனான அதனது பேரளவிலான தொடர்புகளையும் கைவிட்டு ஒரு தசாப்தத்தின் பின்னர், சுலோட்டரின் தொழிலாளர் புரட்சிக் கட்சி தன்னை வெளிப்படையாக ஏகாதிபத்திய முகாமினுள் அமர்த்தியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இந்தக் கட்சியினது பிரதான அரசியல் நடவடிக்கை பொஸ்னியாவிற்கான தொழிலாளர் உதவி (Workers Aid for Bosnia) என்ற போலி மனிதாபிமான முகமூடியோடு பொஸ்னிய நகரமான ருஷ்லாவுக்கு எடுத்துச் செல்லல் உதவிகளை ஒழுங்குபடுத்துவது விளங்கியது. இது இந்த எடுத்துச் செல்லல்களை, சேர்பிய குரோஷிய மற்றும் முஸ்லீம் படைகளிடையேயான ஒரு மும்முனைப் போராட்டத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஒரு இராணுவ மூலோபாயப் பாதையான, “வடக்கத்தைய பாதையைத் திறத்தல்” என்பதற்கான கிளர்ச்சிக்கு பயன்படுத்தியது.

தற்போது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முயற்சிகள் பூரணப்படலைக் கண்டுகொள்கின்றன. அமெரிக்க இராணுவம் இந்தப் பாதையினூடாக,  அதனது எதிர்கால தலமையகத்தை ஸ்தாபிக்க இருக்கும் ருஷ்லாவினுள், பல பத்தாயிரக் கணக்கான படையாட்களையும், டாங்கிகளையும் அனுப்புவதற்கு தயார்செய்து கொண்டிருக்கின்றது. சுலோட்டரும், அவரது கும்பலும் அவர்களது அடுத்த எடுத்துச் செல்லல் “உதவி”க்கு, நேட்டோ சரக்கு வண்டியில் ஒரு மதிப்புமிக்க இடம் வழங்கப்படவேண்டும் எனக் கேட்பதற்கு ஒவ்வொரு உரிமையும் கொண்டுள்ளனர். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் தலையீடுகள் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கான பாதையைச் சுலபமாக்குவதற்கே உதவியது.

நேட்டோ தலையீட்டிற்கு இட்டுச் செல்வதற்கு முன்னைய மாதங்களில் தொழிலாளர் புரட்சிக் கட்சி டவுனிங் வீதியில் “பொஸ்னியாவுக்கான ஒரு இடைவிடாத மறியல் போராட்டத்தை” முன்னெடுத்தது. லண்டனினது வைற் ஹோல் (Whitehall) பல்தரப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டிருந்தபோதும், சிலவேளைகளில், தன்னையும் இடதுகளின் பாகமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு அமைப்பு, பிரித்தானியப் பிரதம மந்திரி இராணுவ நடவடிக்கை எடுக்கத் தவறியதைக் கண்டிப்பதற்கு வீதியில் இறங்கியதை காண்பது இதுதான் முதல்தடவையாக இருக்கும்.

குரோஷியா, அமெரிக்காவின் பின்னணி ஆதரவுடன், கிராஜினா மீதான அதனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த வேளையில், ஒரு படுகொலை முறையென மட்டுமே விபரிக்கக் கூடிய முறையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரதிபலித்தது. அதனது பத்திரிகையான வேர்க்கஸ் பிரஸ் (Workers Press) ஆகஸ்ட் 12 இதழில் பதிப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், குரோஷிய இராணுவத்தினால் சேர்பியப் பொதுமக்கள் பாரிய அளவில் வெளியேற்றப்பட்டதை, குரோஷிய வலதுசாரித் தீவிரவாதிகள் பாவிப்பதில் இருந்து சிறிதும் வேறுபடாத வார்த்தைகளில் தழுவிக்கொண்டது.

இக்கட்டுரை “கிராஜினாவிலான சேர்பிய செற்னிக் ஆயுதம் தாங்கிய கொடியோரது சிறிய துண்டு நிலப்பரப்பை, குரோஷிய இராணுவம் நிர்மூலமாக்கியதை” கைதட்டி வரவேற்கிறது. இது எவ்வாறு “கிராஜினாவின் சேர்பியத் 'தலைநகரான' கினனில் (Knin) குரோஷியர்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள்” என மிகவும் ஆர்வத்துடன் விபரித்ததுடன், “குரோஷியப் படையினரின் துணிகரமான வெற்றிக்கு” பொஸ்னிய மக்களது “நன்றியையும்” பிரகடனப்படுத்தியது.

குரோஷிய இராணுவம், வாஷிங்டனினதும் பொண்னினதும் (Bonn) உறுதியானதும் நேரடியானதுமான பின்னணி ஆதரவுடனேயே, இதனது தாக்குதலை மேற்கொண்டது. உஸ்ராஷ் (Ustashe) குண்டர்களைக் கொண்ட அவரது படையை முழு ஐரோப்பாவிலேயுமே மிகவும் சிறப்பாக ஆயுதபாணியாக்கப்பட்ட இராணுவங்களுள் ஒன்றாக மாற்றியமைப்பதற்கு, ஜேர்மனி பிரான்ஜோ ருஜ்மனின் வலதுசாரி ஆட்சிக்கு நிதியுதவி வழங்கியது. முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களின் தலைவரும் உள்ளடங்கலாக உயர்மட்ட அமெரிக்க இராணுவ உத்தியோகத்தர்கள், ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் என்ற மூடிமறைப்பிற்குப் பின்னே, அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டு, இத்தாக்குதலை ஒழுங்குபடுத்துவதற்கு கொண்டுவரப்பட்டனர். இது எதுவும் குரோஷியாவின் “உறுதியான வெற்றியின்” மீதான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தோஷத்தை தொய்வடையச் செய்யவில்லை.

ஒரு மாதத்தின் பின்பு நேட்டோ குண்டுவீச்சு ஆரம்பித்தபோது தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆதரவுக் குரல் கொடுத்தது. நேட்டோ தலையீட்டுக்கான பொஸ்னியாவின் புகழ்ச்சியை குறிப்பிடும்போது வேர்க்கஸ் பிரஸ் பின்வருமாறு எழுதுகிறது, “நாங்கள் இந்த விளங்கிக் கொள்ளக்கூடியதும் இயற்கையானதுமான பிரதிபலிப்பையிட்டு ஒவ்வொரு ஆதரவையும் தெரிவிக்கின்றோம். நாங்கள், கடந்த மூன்றரை வருட யுத்தத்தின் போது, பொஸ்னியாவுக்கோ அல்லது அதனது மக்களுக்கோ எதுவும் செய்ய மறுத்துவிட்டு, வறிய ஜெனரல் மிலாடிக் (General Mladic) இனதும், அவரது ஆட்களினதும் சார்பில் தங்களது எதிர்ப்புகளை பதிப்பிக்க விரைகின்ற இந்த நோய்பிடித்த 'இடதுகள்', கிறிஸ்த்தவ யுத்த எதிர்ப்பாளர்கள், ஸ்ராலினிஸ்டுக்கள் போன்றோருடன் எதையும் பொதுவாகக் கொண்டிருக்கவில்லை.”

சேர்பிய நகரங்களையும் கிராமங்களையும் அமெரிக்கா குண்டுவீசியது பற்றிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கரிசனை மிகவும் இறுக்கமாக தந்திரோபாய ரீதியிலானது: “நேட்டோவின் ஆகாய படைப்பலம் உண்மையில் பொஸ்னிய பக்கத்திற்கு சார்பாகப் பாவிக்கப்பட்டிருக்குமாய் இருந்தால்... இராணுவ தர்க்கவியல், பொஸ்னியப் படைகள் தரைப்பிராந்தியத்தினுள் தொடர்ந்து நகர அனுமதிக்கப்பட்டிருக்கும் என்பதைக் கருதுகிறது”. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அக்கறைகள் நோயுற்ற அடித்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டது. சம்பவங்கள் விரைவாக நிரூபித்ததுபோல், நேட்டோ குண்டுவீச்சுக்கள் “தரையில்” குரோஷிய பொஸ்னிய இராணுவங்கள் வடமேற்கு பொஸ்னியப் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றும் விதத்திலான நடவடிக்கை எடுப்பதற்கான ஆகாயப் பாதுகாப்பாகப் பிரயோகிக்கப்பட்டது.

இக் கட்சியின் பிற்போக்கு அரசியல் நிலைப்பாடும், ஆத்திரமூட்டும் நடைமுறையும் இவ்விதமாக, பொஸ்னியாவை பாதுகாத்தல் என்ற கூற்றுகளின் பின்னே, பால்கனில், அமெரிக்க-நேட்டோ தலையீட்டினை முன்னெடுப்பதற்கு அரசாங்கங்களும் பத்திரிகைத்துறையும் மேற்கொண்ட பிரச்சாரத்தின் ஒரு முன்னோடிப் பாத்திரத்தினை வகித்தது என்பது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1985-86ல் அனைத்துலகக் குழுவில் இடம்பெற்ற பிளவு, மத்திதர வர்க்க இடதுகளின், ஏகாதிபத்தியத்துடனான பரந்த சர்வதேச மீள் அணிசேர்க்கையை முன்காட்டியது. தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் ஒரு துடைத்துக்கட்டும் தீவிரமான நெருக்கடியை முகங்கொடுத்தபோது, கிளீவ் சுலோட்டர், கட்சியினது சீரழிவினது அரசியல் மூலங்களை கையாளும் எந்த முயற்சியையும் வெளிப்படையாக நிராகரித்தார். பதிலாக அதனது எல்லாப் பிரச்சினைகளும் ஜெரி கீலி என்ற தனிமனிதனின் அக்கிரமமான பழக்கவழக்கங்களின் விளைவு என வலியுறுத்தியதுடன், உண்மையான பிரச்சனை “புரட்ச்சிகர ஒழுக்கநெறி” ("revolutionary morality") உடன் சம்பந்தப்பட்டதொன்று எனப் பிரகடனப்படுத்தினார். இந்த வழியில் சுலோட்டர், தொழிலாளர் புரட்சிக் கட்சியை பிற்போக்கு அகநிலை அரசியலின் அடித்தளத்திலும், மத்தியதர வர்க்க வெறித்தனத்தின் (hysteria) அடித்தளத்திலும் மீள ஸ்தாபிப்பதற்கு நிதானமாக வேலைசெய்தார்.

“புரட்சிகர ஒழுக்கநெறி” என்பது, தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டுகின்ற முயற்சியினுள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி விட்டோம் எனவும் வரலாற்றினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் உணர்ந்தவர்களது யுத்தக் கோஷமாக வந்தது. அவர்கள் வேலைத்திட்டம், முன்னோக்கு, தத்துவம் போன்ற பிரச்சனைகளைக் கையாள விரும்பவில்லை; பதிலாக அவர்கள் தங்களது எல்லாப் பிரச்சினைகளுக்கும் குற்றஞ்சாட்டக் கூடிய ஒரு வில்லனை வேண்டிநின்றனர். கீலி போன்ற, ஒரு கூறப்படுகின்ற அயோக்கியனை முகங்கொடுக்கும்போது, அரசியல் வர்க்க ஆய்வு என எவரும் ஏன் தம்மை கஸ்டப்படுத்திக் கொள்ளவேண்டும்? இந்த விரக்தியடைந்த உணர்வுகளை விதைப்பதிலும் கையாள்வதிலும் ஒரு நிபுணர் என சுலோட்டர் தன்னை நிரூபித்துக் கொண்டார்.

அத்தகைய ஒரு வழிமுறையை அடித்தளமாகக் கொண்டு, அது முகங்கொடுக்கின்ற மகத்தான போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வது சாத்தியமில்லை. குட்டி முதலாளித்துவ ஒழுக்கவியல் வாதம், தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்திடம் கையளிப்பதற்கு மாத்திரமே உதவிசெய்யும். ஒரு தத்துவார்த்தப் புரட்சியை அடித்தளமாகக் கொண்ட, கார்ல் மார்க்சின் மகத்தான சாதனை, வரலாற்று சடவாத முறையை அறிமுகப்படுத்தி, அரசியலை ஒழுக்கநெறி மட்டத்திற்கு மேல் உயர்த்தியதுடன், வர்க்கப் போராட்டம் வரலாற்றின் உந்து சக்தி என்பதை வெளிப்படுத்தியதுமாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சி, இடதுகளின் ஏனைய பரந்த தட்டினர் போலவே, ஒரு வரலாற்று சடவாத, வர்க்க நிலைப்பாடு பற்றி பாவனை செய்வதைக் கூட கைவிட்டுள்ளது.

1980களின் நடுப்பகுதியில், தொழிலாளர் புரட்சிக் கட்சியை பீடித்த உணர்வுகள், பொஸ்னிய நெருக்கடியில் பெரும்பாலான மத்தியதர வர்க்க முன்னாள் தீவிரவாதிகளினால் எடுக்கப்பட்ட அணுகுமுறையில், ஒரு தவிர்க்க முடியாத பிரதிபலிப்பைக் கண்டுகொண்டது. யூகோஸ்லாவியாவின் உடைவைச் சூழ்ந்துள்ள சிக்கலான பிரச்சினைகளையிட்டு, ஒரு விஞ்ஞானபூர்வமான, வரலாற்று ரீதியான அணுகுமுறையை அலட்சியம் செய்துவிட்டு, அவர்கள் கூட வெறுப்பதற்கு ஒரு வில்லனைத் தேடியதுடன், அவ்விதமாக முதலாளித்துவ பத்திரிகைத் துறையினால் முன்னெடுக்கப்பட்டவற்றை -சேர்பியர்களை- தயாராக ஏற்றுக் கொண்டனர். இந்த “புரட்சிகர ஒழுக்கநெறி” நேட்டோ, அமெரிக்க வெளியுறவுத்துறை, பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஒழுக்க நெறியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

அட்டிலா ஹோர்

தொழிலாளர் புரட்சிக் கட்சி அதனது பொஸ்னியத் தலையீட்டிற்கு கேம்பிரீட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குரோஷிய மாணவனான அட்டிலா ஹோர் இனால் விரிவாக்கப்பட்ட நிலைப்பாட்டையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. முன்னாள் யூகோஸ்லாவியாவிலான போராட்டம், “தேசிய சுயநிர்ணய”த்துக்கு குரோஷியாவிற்கும் பொஸ்னியாவிற்கும் உள்ள உரிமையில் மையப்பட்டுள்ளது என்பதே ஹோரினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மையக்கருத்தாகும். இந்த “உரிமையின்” யதார்த்தமாதல் “நவீன, தொழிற்துறைமயப்பட்ட யூகோஸ்லாவிய முதலாளித்துவத்தின்” அபிவிருத்தியுடன் பிணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

முன்னாள் யூகோஸ்லாவியாவிலான அதனது நடவடிக்கைகளை, தத்துவார்த்தப் போர்வையின் மூலம் தொழிலாளர் புரட்சிக் கட்சி நியாயப்படுத்துவதற்கான, ஹோரினது இறுதியான பிரதான பங்களிப்பு, 1994 கோடையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையான மார்க்சிசமும்-சந்தர்ப்பவாதமும், பால்கன் நெருக்கடிகளும் என்பதற்கான ஒரு பதிலாகும். அனைத்துலகக் குழுவின் இந்த அறிக்கை, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிற்போக்கு அரசியலை, தேசியப் பிரச்சினைகளதும் பால்கனிலான அதனது விசேட அபிவிருத்தியையும் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வின் சூழ்நிலையில் அம்பலப்படுத்தியது.

அவரது பதிலில், ஹோர் வரலாறு பற்றிய அவரது சோவினிசத் தத்துவத்தை, நாஜிகளுக்கும், அவர்களது உள்நாட்டு உள்ளூர் ஒத்துழைப்பாளர்களுக்கும் எதிரான கூட்டுப் போராட்டத்தை, ஒன்றில் இருந்து ஒன்றாக “ஒவ்வொரு யூகோஸ்லாவிய தேசமும் தனிப்பட்ட முறையில் விடுவித்துக் கொள்வதற்கான” போராட்டமாக விபரித்து விரிவாக்கினார். அவர், டீட்டோ ஆட்சியின் பிரதான சாதனை “குரோஷியர்கள், சுலோவேனியர்கள், பொஸ்னியர்கள், மசடோனியர்கள் போன்ற ஒவ்வொருவரும், தற்போது குடியரசு மட்டத்திலும் பெடரல் மட்டத்திலும் அதிகாரத்துவப் பதவிகளை இட்டுநிரப்பக் கூடியதான” ஒரு அரச கருவியைச் சிருஸ்டித்ததாகும் என பிரகடனப்படுத்தினார். “புரட்சியினால் உருவாக்கப்பட்ட குடியரசுகளிற்கு உள்ளடக்கத்தை வழங்கியது இதுவேயாகும்; இது இந்த புதிய அதிகாரத்துவங்களை, கடந்த 45 ஆண்டுகளின் பாதையில் புதிய முதலாளித்துவவாதிகளாக உருவாகுவதையும் அனுமதித்தது” என அவர் தொடர்கிறார்.

இந்த மையக்கருத்தின் படி, யூகோஸ்லாவியப் புரட்சியின் வரலாற்று பங்களிப்பு என்பது, பிரான்ஜோ ருஜ்மனின் தலமையின் கீழ் ஒரு குரோஷிய முதலாளித்துவவாதிகளின் “உருவாக்கம்” ஆகும்! ஹோர் யூகோஸ்லாவிய, உலக நிலமை பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையுடன் தனது பதிலிறுப்பை முடிவுக்குக் கொண்டுவந்தார்: “பொஸ்னியாவில் பெரும்பாலும் தொழிலாள வர்க்கம் உடல் ரீதியாக அழிக்கப்பட்டுவிட்டது; சேர்பியாவிலும் குரோஷியாவிலும் நாங்கள் முழுமையாக தொழிலாளர்களின் எதிர்ப்பையே கொண்டிருக்கவில்லை; மேற்கு ஐரோப்பாவிலும் தொழிலாளர் இயக்கம், அதனது பல தலைவர்களும் குழுக்களும் பால்கனில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவளிப்பதுடன் பெருமளவில் மனமுடைந்துபோயுள்ளது. நாங்கள் இன்னமும் பொஸ்னிய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவை அணிதிரட்டுவதினூடு தொழிலாள வர்க்க சர்வதேசியத்தை மீளக்கட்டி அமைப்பதற்கான முயற்சியின் கட்டத்தில் இருக்கின்றோம். இன்னமும் சாத்தியமாகாமல் இருந்தால் கூட, நாங்கள் இன்னும் இந்தக் கட்டத்தைக் கடந்துவிட விடவில்லை என்பது உயர்ந்த அளவில் சாதகமானது. இன்னமும் நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கு நேர்மையாக இருப்பதும், அதற்குச் சாதகமாக எங்களது மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதும் எந்த அளவிலான குறுங்குழுவாத வாயடிப்புகளையும் விட முடிவற்ற முறையில் பெறுமதியானது”.

தொழிலாள வர்க்கத்திலோ சோசலிசத்திற்கான போராட்டத்திலோ இதனது அரசியலை அடித்தளமாகக் கொள்வது பற்றிய எந்த நடிப்பையும் கைவிடுகின்ற இடதுகளின் ஒரு பரந்த தட்டுக்களின் எண்ணப்பாடுகளின் கூட்டுமொத்தத்தை இது வெளிப்படுத்துகின்றது: தொழிலாள வர்க்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது; வரலாற்று அட்டவணையில் இருந்து சோசலிசம் இல்லாமல் போய்விட்டதுடன் இந்த அல்லது அந்த இன, வகுப்புவாத இயக்கத்தின் பின்னால் அணிதிரள்வதை விட செய்வதற்கு ஒன்றுமில்லை. ஹோர் தனது தேசியவாத பூர்வீக கட்டுக்கதைகளை, போக்கிற்கு எதிராக (Against the Current) என தவறாகப் பெயரிடப்பட்ட பத்திரிகையை பதிப்பிக்கும் அமெரிக்காவில் உள்ள அரச முதலாளித்துவ (state capitalists) வாதிகளினதும், திரிபுவாதிகளினதும் கதம்பக் கூட்டும் உள்ளடங்கலான, ஏனைய மார்க்சிச விரோத அமைப்புகளுக்கும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்.

ஹோரினது புறப்பாட்டிற்குப் பின்பு தொழிலாளர் புரட்சிக் கட்சி “சுயநிர்ணய உரிமை” பற்றிய அதனது கருத்துப்பாட்டை ஆழமாக்குவதற்கு எதனையும் செய்யவில்லை. எப்படியிருந்தபோதிலும்,  புறநிலையான சம்பவங்கள், சமகாலத்தில் இந்தக் கோரிக்கையின் பிற்போக்கு தன்மையினை மேலும் விளக்கி காட்டியுள்ளது. அவர்களது மண்ணை விட்டு இரண்டரை லட்சம் மக்களை வெளியேற்றியதில் வெளிப்பாட்டைக் கண்ட, குரோஷியாவினது “தேசிய சுயநிர்ணயத்தின்” யதார்த்தமாக்கல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொண்டது.

சுலோட்டர் பொஸ்னியாவை நோக்கிய தனது அணுகுமுறையை மார்க்கிச முன்னோக்குடனோ அல்லது யூகோஸ்லாவியாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கொண்ட ஒரு வரலாற்று சடவாத ஆய்வுடனோ ஒப்பீடு  செய்வதற்கும் முயற்சிக்கவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏகாதிபத்திய இராஜதந்திரத்தின் பதப்பிரயோகத்துடனும், கருத்துப்பாடுகளுடனும் தன்னளவில் திருப்திப்பட்டுக் கொண்டு, “சேர்பியத் தாக்குதலுக்கு” எதிராக பொஸ்னியாவின் “பல்லினத் தன்மையை” அது பாதுகாப்பதாக, இதனுடைய அல்லது அதனுடைய மூலங்களை உச்சரித்தும் பாராமல் பிரகடனம் செய்கின்றது.

பொஸ்னியாவும் யூகோஸ்லாவியாவின் உடைவும்

ஒரு முறைப்படியான சுதந்திர அரசாக பொஸ்னியாவின் மூலங்கள், யூகோஸ்லாவியாவின் கலைப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. சுலோவேனியா, குரோஷியா, பொஸ்னியா-ஹேர்செக்கோவினா போன்ற சுதந்திர அரசுகளின் உருவாக்கம், “தேசிய விடுதலை இயக்கங்களின்” வெற்றிகள் எனவும், “1989-91 காலகட்டத்தில் ஐரோப்பாவைத் துடைத்துச் சென்ற மகத்தான புரட்சிகளின்” பாகம் எனவும் தழுவியவண்ணம் தொழிலாளர் புரட்சிக் கட்சி, திரும்பத் திரும்ப இந்த அபிவிருத்திக்கு தனது ஆதரவை பிரகடனப்படுத்தியது. தங்களது சொந்த மேலாதிக்கத்தினை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு, ஏகாதிபத்திய சக்திகள் திரும்பத் திரும்ப சிறிய தேசங்களுக்கிடையிலான முரண்பாட்டை கையாண்ட ஒரு பிராந்தியமான பால்கனில், தேசியப் பிரச்சனைகளின் அபிவிருத்தி பற்றி மார்க்சிச இயக்கம் ஈர்த்துக்கொண்ட பாடங்களை இது புறக்கணித்தது. “பால்க்கன்மயப்படுத்தல்” (Balkanization - பிளவுபடுத்துதல்) என்ற பதத்தின் தோற்றத்திற்கும் இக் கொள்கையே இடம் அளித்தது. இன்று குரோஷியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும், சேர்பியர்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட்டும், சுரண்டியும் மீண்டும் ஒரு முறை ஏகாதிபத்தியம் தலையிட்டுக் கொண்டிருக்கும்போது, தொழிலாளர் புரட்சிக் கட்சி, இப் பிளவுபடுத்தலை “தேசிய விடுதலையின்” றோசா வண்ணத்தில் நிறம் தீட்டுகிறது.

பால்கனில் உள்ளான தேசியக் கேள்வியின் வரலாற்றுப் பிரச்சனை இராச்சிய எல்லைகளதும் இன சனத்தொகையினரதும் கலப்பாகும். இப் பிராந்தியம் துருக்கிய ஒட்டோமான், ஆஸ்திரிய-கங்கேரியன் போன்ற போட்டி பேரரசுகளால் கீழ்ப்படுத்தப்பட்டதன் விளைவாகவும், கட்டாயப்படுத்தப்பட்டதும் சுயமானதும் ஆகிய இரு வகையிலும் மக்கள் தொகைகளின் நகர்வினாலும், பல்வேறு மக்கள் மிகவும் குறிப்பாக சேர்பியர்கள், ஒரு தொகை வித்தியாசமான அரச எல்லைகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டனர். இப் பிராந்தியம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை, பால்கன் சோசலிசக் கூட்டு, என்ற மூலோபாயக் கோரிக்கையின் அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்குப் போராடுவதன் மூலம், மார்க்சிச இயக்கம் இப் பிரச்சனைக்கு விடையளிக்க முயன்றது. சுலோட்டரும், தொழிலாளர் புரட்சிக் கட்சியும் இவ்வேலைத்திட்டத்தை முன்னாள் யூகோஸ்லாவியாவிலான “உண்மையான போராட்டத்திற்கு” “பொருத்தமற்றது” என நிராகரிக்கின்றனர். பதிலாக அவர்கள் சேர்பிய தேசியவாதத்திற்கு எதிராக, பொஸ்னிய முஸ்லீம், குரோஷிய தேசியவாதத்தை முன்னெடுக்கின்றனர்.

முதலாம் உலக யுத்தத்திற்கு முதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த பால்கன் யுத்தங்களின் போது, லியோன் ட்ரொட்ஸ்கி பால்கன் குடாநாட்டிலான அரச துண்டுகளின் ஒட்டு வேலைப்பாடுகளை, ஒரு உயிர்வாழக்கூடிய அரசின் ஸ்தாபிதத்தின் பேரில், துடைத்துக்கட்டுவதற்கு வேண்டிய பொருளாதார அரசியல் அவசியங்களை உச்சரித்தார். 80வருடங்களின் பின்னும் தீர்க்கதரிசனத்துடன் விளங்கும் வார்த்தைகளில், இது பின்வரும் வழிகளிலேயே சாத்தியமாக முடியுமென எச்சரித்தார், “ஒன்றில் மேலிருந்து, தன்னைப் பலமானது என நிரூபித்துக் கொள்ளும் ஒரு பால்கன் அரசு, பலவீனமான ஒன்றின் செலவில் விரிவாக்கிக் கொள்வது- இது பலவீனமான தேசங்களை அடக்குகின்றதும் நிர்மூலமாக்கும் யுத்தங்களினதும் பாதையாகும், இது முடியாட்சியையும் இராணுவவாதத்தையும் பலப்படுத்தும்; அல்லது கீழிருந்து, மக்கள் தாங்களாகவே ஒன்றாக வருவதன் மூலம்- இது புரட்சியினது பாதை, இது பால்கன் அரச வம்சத்தினை தூக்கி எறிவதைக் கருதுகின்ற பாதை”

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் டீட்டோ ஆட்சி, யூகோஸ்லாவியாவின் பல்வேறு தேசிய சிறுபான்மையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு சிக்கலான யாப்பு ஒழுங்கு முறையினூடு இப்பிரிவினைகளைக் கடப்பதற்கு முயற்சித்தது. இப் பொஸ்னிய யுத்தம், ஒரு ஆழமான பொருளாதார சமூக நெருக்கடியினதும், அன்னிய முதலாளித்துவ சக்திகளினது தலையீட்டினதும் கூட்டுத் தாக்கத்தின் கீழ், இவ் ஒழுங்கு முறையின் சிதைவினது இறுதி விளைவாகும்.

சர்வதேச சூழ்நிலை

யூகோஸ்லாவிய நெருக்கடியின் அபிவிருத்தியை அதனது வரலாற்று, சர்வதேச சூழ்நிலையில் மட்டுமே விளங்கிக் கொள்ளப்பட முடியும். இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்த தசாப்தங்களில், மார்சல் ஜோசிப் புரொஸ் டீட்டோ இனால் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சி, சோவியத் முகாமிற்கும், மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் ஒரு மையப்பாத்திரத்தை வகித்தது. 1944ல் யுத்தம் ஒரு முடிவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் சேர்ச்சிலும், ஸ்ராலினும் பால்கனிலான செல்வாக்குப் பிராந்தியங்களைப் பிரிப்பதற்கு சந்தித்தனர். ஸ்ராலினால் முன்மொழியப்பட்ட கொடூரமான சூத்திரத்தின் படி, யூகோஸ்லாவியாவிலான செல்வாக்கு கிழக்கிற்கும்—மேற்கிற்கும் இடையே “ஐம்பதுக்கு ஐம்பது” என பிரிக்கப்பட இருந்தது. திறியெஸ்ற் (Trieste) மீதும் கிரேக்க உள்நாட்டு யுத்தத்தின் மீதும் உண்டான ஏகாதிபத்தியத்துடனான ஆரம்ப முரண்பாடுகளுக்குப் பின்னரும், அதைத் தொடர்ந்து 1948ல் ஸ்ராலினுடனான உடைவின் பின்னரும், டீட்டோ தனது ஆட்சியை, ஸ்ராலினிசத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான இந்த கொடுக்கல் வாங்கலினால் சுமத்தப்பட்ட கட்டமைப்பிற்கு அமையவே ஸ்தாபித்தார்.

ரூமானின் (Truman) 1947ன் கோட்பாட்டின் படி, வாஷிங்டன், பால்கனிலான தோல்விகண்ட பிரித்தானிய இராச்சிய நலன்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், யூகோஸ்லாவியாவுடன் ஒரு விசேடமான உறவினையும் முன்னெடுத்தது. டீட்டோ ஆட்சியின் சோசலிசப் போலிப்பகட்டுகளுக்கு மத்தியிலும், வாஷிங்டன் இதற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வர்த்தக, கடன் வசதிகளை வளங்கியது. இதற்கு கைமாறாக, சோவியத் முகாமை நோக்கிய நேட்டோவினது கட்டுப்படுத்தும் மூலோபாயத்தில், விசேடமாக மத்தியதரை பிராந்தியத்தில், யூகோஸ்லாவியா ஒரு பிரதான காரணியாக வந்தது. ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான முரண்பாட்டில் நடுநிலைத் தோற்றத்தை முன்னெடுத்த அணிசேரா நாடுகளினது இயக்கத்தினது (விசேடமாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளின்) பிரதான ஸ்தாபகராக டீட்டோ விளங்கினார். வாஷிங்டனுக்கு எதிராக மாஸ்கோவை முன்நிறுத்தி தங்களது பேரம்பேசும் நிலையை மேம்படுத்திக் கொண்டிருந்த நேரு, நாசர், சுகார்னோ போன்ற முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் நலன்களுடன் இந்த நிலைப்பாடு பொருந்தி வந்தது.

டீட்டோ ஆட்சி இந்த சர்வதேச சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு நிபுணனாக விளங்கியது. இது மேற்குடனும், சோவியத் கூட்டுடனும், பரவலாக அழைக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடனும் சாதகமான பொருளாதார உறவுகளை ஈட்டிக் கொள்வதற்கு, அதனது தனித்த பூகோள அரசியல் பாத்திரத்தினை பயன்படுத்தியது. இது அதனது திருப்பத்தில் “சந்தை சோசலிசம்” என்ற யூகோஸ்லாவிய அமைப்பினது ஆரம்ப வெற்றிகளில் குறிப்பிடக்கூடிய பாத்திரத்தினை வகித்தது. எப்படியிருந்தபோதும், அதேவேளையில் இது 1980களில் ஆரம்பித்த சர்வதேச உறவுகளிலான துடைத்துக்கட்டும் மாற்றங்களுக்கு டீட்டோ ஆட்சியினை நின்றுபிடிக்க முடியாததாக்கியது.

கிழக்கு ஐரோப்பாவினதும், சோவியத்தினதும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் முதலாளித்துவப் புனருத்தாரணத்தை நோக்கித் திரும்பியமை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது, யூகோஸ்லாவிய அரசுடனான விசேட உறவுகளின் முடிவினை உச்சரித்தது. இதற்கு இன்னமும், பெல்கிரேட்டிலான ஆட்சி சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு இராணுவத் தடுப்பரணாக தேவைப்படவில்லை. வாஷிங்டன் பல்தேசிய வங்கிகளதும், கூட்டுத்தாபனங்களினதும் நலனின் பேரிலான, நாட்டினது பொருளாதாரத்தை தனியார் மயப்படுத்துவதை பூரணப்படுத்துவதற்கு, யூகோஸ்லாவிய கூட்டாட்சி அரசு அமைப்பு, ஒரு தடையெனப் பார்க்க ஆரம்பித்தது. முதலாளித்துவ பொருளாதார “சீர்திருத்தப்” போக்கினை விரைவுபடுத்தும் நோக்கில், அமெரிக்காவும் ஏனைய பிரதான வல்லரசுகளும் இன, வகுப்புவாதத்தை தூண்டிவிடுவதன் மூலம், பழைய டீட்டோயிச அமைப்பு முறையினை, கலைப்பதைப் பிரகடனப்படுத்தியோருக்கு, தமது ஆதரவினைத் தெரிவித்தனர். அவர்களுள் ஒருவர்தான், அமெரிக்க வெளிநாட்டு கொள்கை அமைப்பினது ஒரு நீண்டநாள் விருப்பத்துக்குரியவரும், பின்னகர்வு தேசியக் கோரிக்கையான ஒரு “பாரிய சேர்பியா” வை முன்னெடுத்து, தனது சொந்த அரசியல் பிடியினை நிலைநிறுத்த முயன்ற சுலோபோடன் மிலோசெவிக்.

மறுஇணைப்புக்குப் பின்னர், தனது அதிகரித்த அரசியல் பலத்தை இறுக்கமாக்கும் ஆவலில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் சுலோவினியாவிலும், குரோஷியாவிலும் பிரிவினைவாதத்தை முன்னெடுத்ததுடன், 1991ல் யூகோஸ்லாவியக் கூட்டுடன் ஒருமுறை இக் குடியரசுகள் உடைத்துக்கொண்டதும், அவற்றிற்கு முழு அங்கீகாரம் வழங்குவதற்கு விரைந்தது. கோல் அரசாங்கம், குரோஷிய ஆட்சியாளர்கள் அதனது சேர்பிய சிறுபான்மையினரை தவறாக நடத்துவதும் இவ் ஒவ்வொரு ஆட்சியினரும் எஞ்சிய யூகோஸ்லாவியாவுடன் ஒரு உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தையை தவிர்த்ததும், ஒரு உள்நாட்டு யுத்தத்தை விளைவாக்கும் என்ற எச்சரிக்கைகளைத் தள்ளுபடி செய்தது. ஜேர்மனி தனது சொந்த மறுஇணைப்பை நியாயப்படுத்த முன்னெடுத்த ஒரு சூத்திரமான “சுயநிர்ணய உரிமை” –ஜேர்மனி தனது சொந்த மறுஇணைப்பை நியாயப்படுத்த முன்னெடுத்த ஒரு சூத்திரம்– மற்ற எல்லா பிரச்சினைகளையும் மீறிச்செல்கின்றது என வலியுறுத்தியது.

அமெரிக்காவும் ஏனைய மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளும் ஆரம்பத்தில் இவ் அங்கீகாரத்தை எதிர்த்தபோதும், அவர்கள் இறுதியில் ஜேர்மனியினது நிலைப்பாட்டிற்கு அடிபணிந்தனர். ஐக்கிய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவின் பொருளாதார அபிவிருத்திக்கான செலவுகளை, ஜேர்மன் முதலாளித்துவத்தின் மீது நகர்த்திவிட முயன்றதுடன், இப் பிராந்தியத்தின் அரசியல் பதங்களை ஒருதலைப்பட்சமாக உச்சரிக்கும் நிலையிலும் இருக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் பொருளாதார ஒன்றியத்திலான மாஸ்ட்ரிச் (Maastricht) உடன்படிக்கையைப் பூரணப்படுத்துவதுடனும், புதிதாக மீள்இணைக்கப்பட்ட ஜேர்மனியை முழு ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைப்பதிலும் ஈடுபட்டிருந்தன. மாஸ்ட்ரிச் மீதான இறுதிப் பேச்சுவார்த்தைகளில் குரோஷியாவையும், சுலோவினியாவையும் அங்கீகரிப்பது இறுதியில் ஒரு இழுபறிப் புள்ளியாக வந்தது.

முதல் இரண்டு பிரிவினைவாதக் குடியரசுகளதும் அங்கீகாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்ததன் பின்னர், வாஷிங்டன் விரிவடைந்து செல்லும் பால்கன் நெருக்கடியில், தனது ஆரம்பிப்பை மீள ஸ்தாபிக்கும் ஒரு மார்க்கமாகக் கருதி, பொஸ்னிய சுதந்திரத்தை ஆக்கிரோஷமாக முன்னெடுத்தது. சேர்பியர்கள் ஒரு இன்னும் பெரிய சிறுபான்மையைக் கொண்டிருந்ததும் யூகோஸ்லாவிய இராணுவம் தனது பெரும்பான்மையான படையினரையும் இராணுவ சாதனங்களையும் கொண்டிருந்ததுமான இக் குடியரசினது பிரிவினை, உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கும் என்ற எச்சரிக்கைகள் மீண்டும் ஒரு முறை முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஏகாதிபத்திய வல்லரசுகளும் தங்களது சொந்த நலன்களை முன்னெடுக்க விரைகையில் மீண்டும் ஒரு முறை அவை புறக்கணிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்தே, யூகோஸ்லாவியாவின் வீழ்ச்சியின் மீது தங்களை ஸ்தாபித்துக்கொள்ள முயன்ற பல்வேறு அரசுகளும், தங்களது நடவடிக்கைகளை இந்த அல்லது அந்த வல்லரசுகளிடம் இருந்து ஆதரவை ஈர்த்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே மேற்கொண்டன. இந்த வெளித்தலையீடுகள் யூகோஸ்லாவிய அரசினது நெருக்கடியை விரைவுபடுத்தி செறிவாக்கியதுடன், அதனது கலைப்பில் இருந்து உருவான, உள்நாட்டு யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு, பாரிய அளவில் பங்களிப்புச் செய்தன.

டீட்டோயிச அரசின் முரண்பாடுகள்

யூகோஸ்லாவியாவில் இப்போது உடைந்துபோயுள்ள  அரச வடிவமைப்பானது 2ம் உலக யுத்தத்தின் முடிவில் நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சியினால் வழிநடத்தப்பட்ட கூட்டு வெற்றியின் விளவாகும். டீட்டோவின் தலமையின் கீழ் யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியால், பால்கனைத் திரும்பத் திரும்ப சகோதரத்துவ யுத்த அல்லோல கல்லோலங்களில் மூழ்கடித்த குறுந்தேசிய வாதத்தினைக் கடக்கும் நோக்குடன் புதிய அரச வடிவங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டது. 2ம் உலக யுத்தத்தின் போதான தேசிய சோவினிசத்துடனான கசப்பான அனுபவங்கள், அதனது எல்லா மக்களுக்கும் சமத்துவத்தை உத்தரவாதம் செய்கின்ற ஒரு தனித்த யூகோஸ்லாவியாவில் உள்ளான “சகோதரத்துவத்திற்கும் ஐக்கியத்திற்குமான” டீட்டோ ஆட்சியின் அழைப்பிற்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவை விளைவாக்கியது.

சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை மாதிரியாகக் கொண்டும், பால்கனில் ஏகாதிபத்தியத்தினால் சுமத்தப்பட்ட தேசியப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டதுமான, டீட்டோ ஆட்சி, இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இயலாதது என நிரூபித்துக்கொண்டது. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பேரம்பேசுவதன் மூலம், ஒரு அற்ப தேசிய சுதந்திரத்தினை ஸ்தாபித்துக் கொள்வதற்கு இது முயற்சித்துக் கொண்டிருந்தவேளையில், மேற்கத்திய முதலாளித்துவத்திடமிருந்து, அதிகரித்த பொருளாதார அரசியல் அழுத்தத்தின் கீழ் வந்தது. உள்ளார்ந்த வகையில் இந்த அரசு தேசிய சச்சரவுகளின் எழுச்சியை 6 அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைந்த குடியரசுகளையும், 2 தன்னாட்சி மாகாணங்களையும் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையினூடு கட்டுப்படுத்த முயன்றது. இந்த ஒவ்வொரு பிராந்தியத்தினுள்ளும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான விரிவான உத்தரவாதங்கள், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப்பட்டதுடன் மத்திய அரசினால் வலியுறுத்தப்பட்டது.

நடைமுறையில் ஆட்சியின் அதிகாரத்துவ இயல்பு, பிராந்தியத்தின் பொருளாதார பின்தங்கிய நிலமையின் பாரம்பரியத்துடன் இணைந்து பலம்மிக்க மையவிலக்கு போக்குகளை உருவாக்கியது. ஒவ்வொரு குடியரசிலும் உள்ள ஆளும் அதிகாரத்துவங்கள் தங்களது சொந்த சக்தியையும், சலுகைகளையும் பலப்படுத்திப் கொள்ளும் நோக்குடன் ஒரு பகுத்தறிவுக்கு பொருந்தாத எதேச்சதிகார பாணியில் தங்களது தொழிற்துறைகளையும் மேற்கட்டுமானத்தையும் அபிவிருத்தி செய்து அதிகரித்த முறையில் தனிப்பட்ட பொருளாதார முழுமைகளாகத் தொழிற்பட்டனர். இறுதியில் ஒவ்வொரு குடியரசுகளும் தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இடையிலானதை விட வெளிநாட்டு முதலாளித்துவத்துடன் பரந்த பொருளாதாரத் தொடர்புகளை ஸ்தாபித்தனர்.

டீட்டோவின் கீழான மத்திய அரசு அதனது பலத்தை தேசிய இராணுவத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், வித்தியாசமான குடியரசுகளுக்கிடையேயான, குறிப்பாக குரோஷியாவிற்கும் சேர்பியாவிற்கும் இடையேயான முரண்பாடுகளை தீர்த்துவைப்பதன் மூலமும் ஈர்த்துக்கொண்டது. இது ஒரு குடியரசிலும் பின்னர் மற்றதிலுமாக தேசிய வாதத்தின் வெளிப்பாடுகளை ஒன்றன் பின் ஒன்றாய் அடக்கியது, இறுதியில் இரண்டிலும் தேசியவாதப் போக்குகளைத் தூண்டிவிட்ட விளைவுகளை உருவாக்கியது. 2ம் உலக யுத்தத்தின் போதான கூட்டுப் போராட்டத்தை வழிநடத்திய அனைத்து யூகோஸ்லாவிய தேசிய வாதம் ஒரு வெற்று கோமாளித்தனமாக ஆகியது.

டீட்டோ ஆட்சி யூகோஸ்லாவியாவின் வேறுபட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு எந்த உண்மையான முயற்சியையும் எடுக்கவில்லை. அசாதாரணமான முறையில் இது பல்வேறு குடியரசுகளிலும் இருந்து மாணவர்களை உள்ளடக்கிக் கொண்டதான ஒரு தனித்த தேசிய பல்கலைக் கழகத்தை ஒருபோதுமே ஸ்தாபிக்கவில்லை. குரோஷிய இளைஞர்கள் சாகிரபிற்கும், சேர்பிய இளைஞர்கள் பெல்கிரேட்டுக்கும் சென்றனர். அதிகாரத்துவம் சிறப்புரிமைவாதத்திற்கு எதிராகப் போராடாது விட்டமை தற்செயலானது அல்ல. இதனது பாரிய பயம், குடியரசு எல்லைகளை குறுக்காக அழித்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் எழுந்து வரும் என்பதே. டீட்டோ அவரது குறிப்பிடக்கூடிய பாதுகாப்புக் கருவிகளின் முழுப் பலத்தையும், அத்தகைய இயக்கத்தை அடக்குவதற்குப் பாவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையின் பாத்திரம்

யூகோஸ்லாவியாவின் உடைவு 1970 களின் முடிவில் இருந்து, வெளிநாட்டு வங்கிகளாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் சுமத்தப்பட்ட ஒரு தொடர் சிக்கன வேலைத்திட்டங்களால் விரைவுபடுத்தப்பட்டது. இதனது நோக்கம் உள்நாட்டு நுகர்வை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலம், பலூன் போல் விரிவடைந்து வந்த நாட்டின் வெளிநாட்டுக் கடனுக்குரிய கொடுப்பனவுகளை ஈர்த்துக் கொள்வது விளங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகள் ஒரு பேரழிவு மிக்க தாக்கத்தினைக் கொண்டிருந்தது. 1980களின் மத்தியில் வேலையின்மை பொருளாதார மந்தகால மட்டத்தை அடைந்திருந்தபோது பணவீக்கமும், சம்பளக் கட்டுப்பாடும் உண்மையான வருமானத்தை இந்த இரு தசாப்தங்களுள் மிகவும் கீழான மட்டத்திற்கு வீழ்ச்சியடையச் செய்தது. இதனது விளைவு யூகோஸ்லாவியா பூராவும் பலமான பொருளாதாரத்தை கொண்ட நாட்டின் நாணயத்தை வைத்திருந்தோர்க்கும் அது அற்றோருக்கும் அதேபோல் செல்வந்தக் குடியரசுகளுக்கும் –சுலோவினியா, குரோஷியா– நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சமூகத் துருவப்படுத்தல் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.

யூகோஸ்லாவியாவின் நலிவடைந்து “செல்லும்” பொருளாதாரத்திற்கு, சுலோவினிய, குரோஷிய கட்சித் தலைவர்களும் அதிகாரத்துவங்களும் றேகனினதும், தாட்சரினதும் மொழியில் வாதிட்டனர். அவர்கள் சுலோவினியாவிலும், குரோஷியாவிலும் உள்ள தொழிற்சாலைகள் தெற்கில் உள்ள மிகவும் முன்னேற்றம் அடையாத பகுதிகளின் அபிவிருத்திக்கு ஒரு பகுதியைச் செலுத்துவதைவிட, தங்களது மிகவும் செறிவான ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கிடைக்கும் முழு வருமானத்தையும் தாங்களே கொண்டிருக்க அனுமதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விட்டனர். இந்த நோக்கத்திற்கான அவ்வாறான வரிவிதிப்பு ஒரு “தேசிய சுரண்டல்” வடிவத்தினைக் கொள்வதாகக் குற்றம் சாட்டினர். ஆஸ்திரியாவிலும், ஜேர்மனியிலும் இருந்தான வெளிநாட்டு மூலதனத்துக்கான அதிகரித்த வசதிகளுடன், அவர்களால் பெல்கிரேட்டில் உள்ள மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைகளை தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது.

முன்னர் மத்தியில் இருந்தான பொருளாதாரப் பரவலாக்கத்தை உற்சாகப்படுத்தி விட்டு, தற்போது சர்வதேச நாணய நிதியம், இறுக்கமான வரவுசெலவுதிட்ட, நாணயக் கட்டுப்பாட்டை பல்வேறு குடியரசுகளின் மீது சுமத்துவதில் மத்திய அரசாங்கம் பாரிய பொறுப்பு வகிக்கவேண்டும் எனக் கேட்கிறது. சமூக நெருக்கடியை தணிப்பதற்கான எல்லா மார்க்கங்களும் அகற்றப்பட்டு, பெல்கிரேட் அரசாங்கம், வெளிநாட்டு வங்கிகளுக்கான சேகரிப்பு ஏஜன்சியின் பாத்திரத்தை எடுத்தது. பல்வேறு குடியரசுகளிலும் உள்ள அதிகாரத்துவங்கள் இந்த மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் எந்த அக்கறையையும் காணாததுடன் பதிலாக தங்களது பொருளாதார, அரசியல் சுயாதீனத்தை அதிகரிக்க முயன்றனர்.

ஒரு புரட்சிகர முன்னோடி நிலமை

யூகோஸ்லாவியாவின் சிதைவு பற்றிய ஒரு உட்பார்வை மிக்க ஆய்வான பால்கன் துன்பியல் என்ற நூலில் ஆசிரியர் சுசான் வூட்வாட் (Susan Woodward) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“1985–86 அளவில் ஒரு புரட்சிகர நிலமைக்கான முன்நிபந்தனைகள் தோற்றத்திற்கு வந்தன. அதிகரித்துச் செல்லும் வேலையின்மை வீதம் சுலோவீனியாவையும் குரோஷியாவையும் தவிர்ந்த எல்லாக் குடியரசுகளிலும் 20 வீதத்திற்கும் அதிகமாகும். பணவீக்கம் வருடத்திற்கு 50 வீதமாக இருந்ததுடன் உயர்ந்து சென்றது. கிட்டத்தட்ட 80 வீதம் மக்கள் தொகையினரின் வீட்டுக் கையிருப்புக்கள் முடிவடைந்தன. டொச் மார்க், அமெரிக்க டாலர் போன்ற மேற்கத்தைய நாணயங்கள் உள்நாட்டு நாணய மாற்றில் முன்னுரிமை வழங்கப்பட்டன. உதவி (Allocation) சம்பந்தப்பட்ட முடிவுகள் அதிகரித்தவிதத்தில் கூர்மையான உயிர்பிழைப்புப் பிரச்சனையாக வந்தது. அழுத்தத்தை தணிப்பதற்கான முயற்சிகள் பணவீக்கத்தைக் கூட்டியதுடன் பொருளாதார முக்கியத்துவத்தையும் கீழ்ப்படுத்தியது. இந்த பொருளாதாரத் துருவப்படல், சமூகத் துருவப்படலுக்கு இட்டுச்சென்றது.” (Susan L. Woodward, Balkan Tragedy: Chaos and Dissolution After the Cold War [Washington, D.C.: The Brookings Institution, 1995], p. 73). 

யூகோஸ்லாவிய தொழிலாள வர்க்கம், இந்த சிதைவடைந்துவரும் அதிகாரத்துவ அரசிற்கு எதிராக தனது சொந்த சுயாதீன அரசியல் பதிலீட்டை முன்வைப்பதன் மூலம், இந்தப் புரட்சிகர முன்னோடி நிலமையில் இருந்து அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இயலாதென நிரூபித்தது. பதிலாக ஆளும் அதிகாரத்துவங்கள் அதிதீவிர தேசியவாத சக்திகளுடனும், வெளிப்படையான பாசிஸ்ட்டுகளுடனும், புலம்பெயர் குழுக்களுடனும் இணைந்து இந்தப் புரட்சிகர முன்னோடி நிலமையை, புதிய இன அடிப்படையில் ஒருங்கிணைந்த பிராந்தியங்களைப் பிரித்தெடுப்பதற்கான, சகோதரத்துவ யுத்தத்தின் வழியில் இட்டுச் சென்றனர்.

இது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் பற்றாக் குறையினால் ஏற்பட்டதல்ல. IMF ன் முதல் சுற்று சிக்கன வேலைத்திட்டத்திற்கு பிரதிபலிப்பாக 1982க்கும் 83க்கும் இடையே வேலைநிறுத்தங்கள் 80 வீதம்வரை உயர்ந்தது. 1987ல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி 365,000 தொழிலாளர்கள் 1,570 வேலைநிறுத்தங்களில் சம்பந்தப்பட்டிருந்தனர். அத்துடன் 1988ன் முடிவில் –யுத்த வெடிப்பின் மூன்று வருடத்திற்கு முன்னர்– குரோசியா, வோச்லோடினா, சேர்பியா என்பவற்றில் இருந்து தொழிலாளர்களின் பரந்துபட்ட பிரதிநிதிகள் யுத்தத்திற்கு பின்னய காலகட்டத்தில் முதல் தடவையாக பெல்கிரேட்டில் உள்ள கூட்டாட்சி பாராளுமன்றத்தின் வாசலில் தங்களது எதிர்ப்புகளில் அணிதிரண்டனர்.

மக்கள் தொகையின் மிகப்பெரும்பான்மையானோர் தேசிய சிறப்புரிமை வாதத்திற்கு ஆதரவை வழங்கவில்லை. யுத்தத்தை நோக்கிய நகர்விற்கு எதிராக மீண்டும் மீண்டும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் யூகோஸ்லாவியாவின் துண்டாடலுக்கு பரந்துபட்ட எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. எப்படியிருந்தபோதிலும் தொழிலாள வர்க்கத்திடம் பற்றாக்குறையாக இருந்தது என்னவெனில், முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களதும் வகுப்புவாத அரசியல்வாதிகளதும் கூட்டிற்கு எதிராக, அதனை ஒரு சுயாதீனமான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு இயலக்கூடிய ஒரு முன்னோக்கும் தலைமையுமாகும். குறிப்பிடக்கூடிய பகுதியிலான தொழிலாளர்கள் சிறப்பாக இளைஞர்கள், கிழக்கு ஐரோப்பா பூராவும் இருந்த அதனது சகாக்களைப்போலவே யூகோஸ்லாவிய அதிகாரத்துவம் அதனது சொந்த ஆட்சியையும் சலுகைகளையும் “சோசலிசத்துடன்” இனங்காட்ட முயன்றமையும் ஸ்ராலினிசத்தின் அழிவுமிக்க கொள்கைகளின் விளைவாகவும், குழப்பியடிக்கப்பட்டனர்.

யூகோஸ்லாவியா ஒரு உலக அளவில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் தலைமை நெருக்கடியின் ஒரு கூர்மையான வெளிப்பாட்டை வழங்கியது. தொழிலாளர் இயக்கத்தை ஆதிக்கம் செலுத்திய அதிகாரத்துவங்கள் –ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, தொழிற்சங்க– முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை ஒன்றில் அவற்றின் மூலத்தில் இருந்தே எதிர்த்தன அல்லது நீண்ட காலத்திற்கு முன்னரே நிராகரித்துவிட்டன. அவர்கள் எல்லோரும் தேசிய வாதத்தையும் இலாபநோக்கு அமைப்பிற்கு ஆதரவளிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை வரித்துள்ளனர். இந்த அரசியல் வெற்றிடத்தை எடுத்துக்கொண்டு, வளர்ச்சியடைந்து வந்த முதலாளித்துவவாதிகள், யூகோஸ்லாவியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த சமூக நிலமைகளுடனான பிரமாண்டமான திருப்தியின்மையை வலதுசாரி சோவினிசப் பாதைகளில் திருப்பி உள்ளனர்.

இன்னொரு காலகட்டத்தில் கிரிமினல்களாகவும், மூர்க்கமான மூளை குளம்பியோராகவும் ஒதுக்கி வைக்கப்படும் நபர்கள் தேசிய கதாநாயக மட்டத்திற்கும் அரசியல் தலைவர்கள் மட்டத்திற்கும் உயர்த்தப்பட்டுள்ளனர். வேலையற்ற இளைஞர்கள், வேலை கண்டுகொள்வதற்கு எந்த மார்க்கமும் அற்றிருந்த பாடசாலைப் பட்டதாரிகள், ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டுக்கள் என்போர் ஒரு புரட்சிகரப் பாதையைக் காண்பதைவிட, இன அடிப்படையிலான இராணுவத்திலும் படைகளிலும் ஒருவரை ஒருவர் கொன்று தள்ளுவதற்கு அணிதிரட்டப்படுகின்றனர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் இடம்பெற்றுக் கொண்டுள்ள வகையிலான சகோதரத்துவ உள்நாட்டுயுத்தம், ஆகாயத்திலிருந்து விழவில்லை. இது ஒரு புரட்சிகரத் தலைமையும் முன்னோக்கும் இல்லாமையே யூகோஸ்லாவிய தொழிலாள வர்க்கத்தால் செலுத்தப்படுகின்ற விலையாகும். இதுதான் இந்தப் பின்னகர்வு அபிவிருத்தியை “தேசிய சுயநிர்ணயத்துக்கான” போராட்டமாகக் காட்ட முயற்சிக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சியினதும், ஏனைய தங்களைத் தாங்களாகவே “சோசலிஸ்ட்டுக்கள்” என பிரகடனம் செய்து கொள்பவர்களதும் முயற்சிகளை இவ்வளவு பிற்போக்கானதாக்குகிறது.

யூகோஸ்லாவிய குடியரசுகளில் சுலோவினியாதான் முதலில் தேசிய பிரிவினைவாதப் பாதையை தேர்ந்து எடுத்ததாகும். சுலோவினிய இன தேசத்துக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இது பழைய குடியரசில் இருந்து சுதந்திரத்தை பிரகடனப்படுத்தியது. குரோஷியா, சுலோவினியாவின் உதாரணத்தை தொடர்ந்தது. அப்படியிருந்தபோதும் குரோஷியாவில் இந்த விடயம் அதிக சிக்கலானதாக இருந்தது. யூகோஸ்லாவியாவின் உடைவுக்கு முன்னர் மொத்த சனத்தொகையில் 12.2 வீதம் அளவிலான ஒரு சேர்பிய சிறுபான்மையினை இக் குடியரசு கொண்டிருந்தது. இச் சிறுபான்மை, திடீரென அதனது சக்திக்கும் அப்பாற்பட்ட விதத்தில் ஒரு புதிதாக சுதந்திரம் அடைந்த குரோஷியாவினுள் இழுத்துச் செல்லப்பட்டதை கண்டுகொண்டது. இது கடைசியாக இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடந்தது. அப்போது குரோஷியாவின் சேர்பியர்கள் சித்திரவதை முகாங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டதுடன் நூறாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

குரோஷிய குடியரசினது டீட்டோ காலகட்ட அரசியலமைப்பு, சேர்பியர்களது பயங்களை கடக்கும் நோக்குடன் இக் குடியரசு “குரோஷிய மக்கள் குரோஷியாவிலுள்ள சேர்பியர்களுடன் சகோதரத்துவ ரீதியில் ஐக்கியப்பட்டுள்ள” ஒரு சமூகம் என பிரகடனப்படுத்தியது. எப்படியிருந்தபோதும், ருஜ்மனால் வழிநடத்தப்படும் தேசியவாத அரசியல்வாதிகளால் வரையப்பட்ட அந்த ஆவணம், சுதந்திர குரோஷியா, குரோஷிய தேசத்தினது அரசாகும் என பிரகடனப்படுத்துகின்றது. இவ்விதமாக பிரஜா உரிமையை இனத்துவத்துடன் இணைப்பதுடன், அவர்கள் பலநூறு வருடங்களாக வாழ்ந்து வந்த ஒரு நாட்டில் சேர்பியர்களை கீழ் நிலமைக்கு தள்ளுகின்றது.

ருஜ்மனின் ஆட்சி, சேர்பியர்களுக்கு எதிரான பாகுபாட்டுடன் இன தேசியவாதத்தின் மீளெழுச்சியையும் இணைத்துக்கொண்டது. இது இரண்டாம் உலக யுத்த காலகட்ட உஸ்ராஷ் ஆட்சியின் அறிகுறிகளை புத்துயிர்ப்படையச் செய்ததுடன், அதனது அரசியலையும் புனர்நிர்மாணம் செய்துகொண்டுள்ளது. இதற்குப் பதிலீடாக சேர்பிய தேசியவாத கூறுகள், யூகோஸ்லாவிய அரசியலமைப்பின் கீழ் ஏற்கெனவே உத்தரவாதப்பட்டிருந்தும் கூட, தங்களது சொந்த சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றனர். அவர்கள் குரோஷியாவில் இருந்தான ஒரு உடைவையையும், சேர்பியாவுடனான ஐக்கியத்தையும் கோருகின்றனர். யுத்தம் இதனது தவிர்க்க முடியாத விளைவாகும்.

பொஸ்னியாவில் இன தேசியவாதத்தின் எழுச்சி பிரமாண்டமான அபாயத்தை எழுப்புகின்றது. இங்கு எந்தவொரு இனப் பெரும்பான்மையும் இல்லாமல் இருப்பதுடன் இதன் மூன்றுவகை சனத்தொகையினரும் பெருமளவில் ஒருவருடன் ஒருவர் கலந்தே உள்ளனர். முஸ்லீம்கள் 40 வீதத்துக்கும் குறைவான சனத்தொகையினரை கொண்டுள்ள அதேவேளையில் சேர்பியர்கள் 30 வீதத்துக்கு அதிகமாகவும் குரோஷியர்கள் 17 வீதம் ஆகவும் உள்ளனர்.

இங்கேயும் கூட தேசியவாதக் கட்சிகளே முதலிடத்தை வகிக்கின்றன. இதை விளங்கிக்கொள்வதற்கு ஒருவர் இங்குள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொள்ளவேண்டும் – யூகோஸ்லாவியாவின் கலைப்பு, சுலோவினியா, குரோஷியா, சேர்பியாவில் உக்கிரமான தேசியவாதங்களின் எழுச்சி, அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரத் தலைமை இன்மையின் விளைவு. மூன்று கட்சிகள் –இசட்பேகோவிக்கின் SDA, குரோஷிய HDZ சேர்பிய SDS– ஒட்டுமொத்தமாக 80 வீத வாக்குகளினை 1990 தேர்தலின் போது வென்றுகொண்டன. ஒவ்வொரு கட்சியும், தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிரகடனம் செய்துகொண்ட இன சமூகத்தின் சனத்தொகையிற்கு ஏறக்குறைய சமனான பங்கு வாக்குகளை பெற்றுக் கொண்டன. இந்த ஒவ்வொரு கட்சியும், இன அடையாளத்தின் அடிப்படையில் வாக்குகளுக்கு அழைப்பு விட்டதுடன், அவை எல்லாம் வெளிப்படையான கம்யூனிச விரோத கட்சிகளாகும். மேலும் இந்த மூன்று கட்சிகளும் தங்களது இனவாத வகுப்புவாத அழைப்புகளை பழைய குடியரசு எல்லைகளையும் தாண்டி வழிநடத்தின.

SDS குரோஷியாவிலும், பொஸ்னியாவிலும் இருந்து சேர்பிய நிலத்துண்டை பிரிப்பதற்கு முயற்சித்ததுடன், பழைய கோரிக்கையான அனைத்து சேர்பியர்களையும் ஒரு அரசில் ஐக்கியப்படுத்தல் என்பதனையும் புத்துயிர்ப்படைய செய்தது. “உலகில் உள்ள அனைத்துக் குரோஷியர்களதும் கட்சி” என தன்னை அழைத்துக் கொண்ட HDZ, ஹேர்ஸகோவினாவின் மேற்குப்பகுதியை கட்டுப்படுத்தியதுடன் அதனது நோக்கம் குரோஷியாவுடன் இதனை இணைப்பதே என்பதை சற்றும் மறைத்துவைக்கவில்லை. இறுதியாக இசட்பெகோவிக்கின் SDA சேர்பியாவில் உள்ள சான்ட்சாக் (SandSzak) பகுதியில் இருந்தும் மொன்டெனேகுரோ (Montenegro) வில் இருந்தும் ஆதரவை ஈட்டிக்கொள்ள முயற்சித்ததுடன், அவற்றினது முஸ்லீம் சனத்தொகை பொஸ்னியாவுடன் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது. அவர்களது வித்தியாசமான தேசியவாத திட்டங்களுக்கு இடையேயான வெளிப்படையான முரண்பாட்டிற்கு மத்தியிலும், எவ்வழியிலேனும் இனபேதங்களைக் கடந்து அழைப்புவிடுகின்ற எல்லா கட்சிகளையும் அரசாங்கத்தில் இருந்து அகற்றும் பொருட்டு, இம் மூன்று கட்சிகளும் பாரிய கூட்டினை ஸ்தாபித்தன.

பொஸ்னியாவின் சேர்பிய, குரோஷிய தேசியவாதிகள் பொஸ்னியாவின் பிரிவினைக்கும், அவர்களது சொந்த இன பிராந்தியங்களை முறையே சேர்பியாவுடனும், குரோஷியாவுடனும் ஒருங்கிணைப்பதற்கும் ஆதரவளித்தனர். எப்படியிருந்தபோதிலும் முஸ்லீம் தேசியவாதிகளுக்கு பொஸ்னியா-ஹேர்ஸகோவினாவிற்கு வெளியே அத்தகைய உந்துசக்தி வழங்குவோரை கண்டுகொள்ள முடியவில்லை. ஆகவே அவர்கள் பழைய பொஸ்னியா-ஹேர்ஸகோவினா குடியரசின் எல்லைகளினது தூய்மையை வலியுறுத்தினர். பன்முகத் தன்மையை (plurality) வலியுறுத்திய வண்ணம் அவர்கள் இன்னமும் பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்தமுடியும் என நம்பினர். இதுதான் SDA யின் கூறப்பட்ட பல்லினத் தன்மைக்கான அடிப்படையாகும்.

பொஸ்னியாவின் சுதந்திரம்

அக்டோபர் 1991ல் முஸ்லீம் SDA யும், குரோஷிய HDZ ம் பொஸ்னியா-ஹேர்ஸகோவினா ஒரு சுதந்திர அரசு எனப் பிரகடனம் செய்யும் ஒரு தீர்மானத்தை முன்தள்ளுவதற்கு ஐக்கியப்பட்டன. இது பொஸ்னிய தேசிய சுதந்திரத்துக்கான ஒரு பரந்துபட்ட இயக்கத்தின் விளைவல்ல அப்படியொன்றும் இருக்கவுமில்லை. முதலில் SDA சுதந்திரத்தினை எதிர்த்தது. இது பொஸ்னியாவில் உள்நாட்டு யுத்தத்தினை உருவாக்கும் என்ற பயத்தின் கீழ் குரோஷியாவின் அங்கீகாரத்தை மறுக்குமாறு மேற்கு ஐரோப்பிய தலைவர்களை இசட்பேகோவிக் இரந்தார். சுலோவினியாவும், குரோஷியாவும் பிரிவினையின் திசையில் சென்றதன் பின்னர், எப்படியாயினும் SDA அதனது சொந்த தேசியவாத திட்டத்திற்கு ஏகாதிபத்திய சக்திகளின் பின் ஆதரவை வெல்லும் நம்பிக்கையில் முன்னயவற்றைத் தொடர தீர்மானித்தது. HDZ ஐ பொறுத்தவரையில் இது இந்நகர்வினை தனியே பிரிவினையில் இருந்து குரோஷியாவுடனான ஐக்கியத்துக்கான ஒரு இடைமருவு கட்டமாகவே பார்த்தது.

சேர்பிய SDS, சுதந்திரப் பிரகடனத்துக்கு பிரதிபலிப்பாக அரசாங்கத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தது. அது இந்த நடவடிக்கையை, இவ்வாறான எத்தகைய தீர்மானத்திலும் மூன்று குழுக்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்திய அரசியலமைப்பு கோரிக்கையின் ஒரு மீறல் என கண்டித்தது. 1992 பெப்பிரவரி 29 இலும் மார்ச் 1 இலும் முஸ்லீம் குரோஷிய கூட்டு, சுதந்திரத்துக்கான ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பில் அணிதிரண்டதுடன், ஐரோப்பிய சமூகத்திடமிருந்து அங்கீகாரத்தை வென்று கொள்ளும் ஒரு முயற்சியில் இதற்கு துரிதமாக அழைப்பு விட்டனர். சனத்தொகையில் முழுமையாக மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது சேர்பியரில் பெரும்பான்மையானோர் இவ் வாக்கெடுப்பை பகிஸ்கரித்தனர்.

மூன்று சமூகத்தினரதும் பங்களிப்பை ஈர்த்துக் கொண்டால் மாத்திரமே இவ் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கத்தய வல்லரசுகள் சட்டபூர்வமானதென கருதும் என்ற முன்னய உத்தரவாதங்கள் இருந்தும் மேற்கு ஐரோப்பாவும், ஐக்கிய அமெரிக்காவும் சம்பிரதாய அங்கீகாரத்தை வழங்கின. இதிலிருந்தே சேர்பியர், குரோஷியர், முஸ்லீம்களுக்கிடையிலான உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. பழைய யூகோஸ்லாவிய, மக்கள் இராணுவத்தில் இருந்து உருவான பொஸ்னியாவின் சேர்பிய இராணுவ அலகு, பொஸ்னியாவின் உள்ளே மிகவும் பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக விளங்கியதுடன், சேர்பியாவில் இருந்தான அதிதீவிர தேசியவாத இராணுவக் குழுக்களாலும், கிரிமினல் குழுக்களாலும் பின்னாதரவு வழங்கப்பட்டது. குரோஷியாவும் கூட பொஸ்னியாவினுள் ஒழுங்கான இராணுவ அலகுகளை அனுப்பியதுடன், இவை பாசிச தேசியவாத இராணுவக் குழுக்களுடன் இணைந்து தொழிற்பட்டன. இவ் இரு சக்திகளதும் பிரதான தாக்குதல் முஸ்லீம் பொதுசனங்களுக்கு எதிராக நடத்தப்பட்டதுடன், அவர்களே இப் பொஸ்னிய முகங்கொடுப்பின்போது ஒட்டுமொத்தமான இழப்பினை கொண்டிருந்தனர்.

முஸ்லீம்கள் ஆதிக்கம் வகிக்கும் பொஸ்னிய அரசாங்கத்தினது போரிடும் சக்தி, ஆரம்பத்தில் சரஜேவோவின் காடையர் மூலகங்களில் இருந்தே ஈர்க்கப்பட்டது. நகரத்தை அவர்கள் பாதுகாத்தமை, அவர்களது இலாபம் மிக்க கறுப்புச் சந்தையினை கட்டுப்படுத்துவதுடன் தவிர்க்கமுடியாமல் பிணைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கன்னையும் தம்மால் பாதுகாக்ககூடிய பிராந்தியங்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில், அதிகரித்த விதத்தில் இசட்பேகோவிக் அரசாங்கம் தனது பிரகடனமான அனைத்து பொஸ்னியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவவதாக கூறி ஒரு முஸ்லீம் நிலத்துண்டை பிரித்தெடுக்கும் நோக்குடன் இணைத்தது. 1993 அளவில் SDA அரசியல்வாதிகளும் முஸ்லீம் இராணுவக் குழுக்களும் பொஸ்னிய தேசிய அடையாளத்தை பெருமளவில் கைவிடுவதாக பாசாங்கு செய்துகொண்டு ஒரு முஸ்லீம் அரசினை சிருஸ்டிப்பதற்கு வெளிப்படையாகவே செயற்பட்டனர். முஸ்லீம்கள் அல்லாதோர் கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில், அரசாங்க உத்தியோகத்தர்கள் கலப்புத் திருமணத்தை பகிரங்கமாக கண்டனம் செய்ததுடன், பாடசாலைகளில் மத அறிவுறுத்தல்களை அறிமுகப்படுத்த முனைந்தனர். 1994ல் இசட்பேகோவிக் ஆட்சி, பொஸ்னிய குரோஷியர்களுடன் ஒரு கூட்டில் இணைந்த வண்ணம் பிரிவினையையும், ஒரு முஸ்லீம் அரசு என்ற அந்தஸ்தினையும் ஏற்றுக்கொண்டது. இக் கூட்டு வாஷிங்டனால் தரகு வகிக்கப்பட்டதுடன், இதில் குரோஷியர் முழு தேசிய உரிமையையும் கோரினர். இதுதான் தொழிலாளர் புரட்சிக் கட்சி, சோசலிஸ்ட்டுகள் கட்டாயமாக பாதுகாக்க வேண்டுமென பிரகடனப்படுத்தும் “பல்லின” பொஸ்னிய அரசினது யதார்த்தமாகும்.

பொஸ்னியாவின் சனத்தொகையின் பரந்துபட்ட பகுதியினர், முன்னாள் யூகோஸ்லாவியா பூராவும் உள்ள சனத்தொகையினர் போலவே இன தேசியவாதத்தை எதிர்த்தனர். SDS எல்லா சேர்பியர்களையுமோ, SDA எல்லா முஸ்லீம்களையுமோ, அல்லது HDZ எல்லா குரோஷியர்களையுமோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.  1991 யூலையில் கூட 50,000க்கும் மேற்பட்ட மக்கள் சரஜேவோவில் யுத்தத்தினை எதிர்த்தும் ஐக்கியப்பட்ட யூகோஸ்லாவியாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அணிவகுத்தனர். பொஸ்னியாவை நாசம் செய்யும் இன இராணுவக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் எதிராக சேர்பியர்கள், குரோஷியர்கள், முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் பாதுகாத்தமை பற்றிய பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இங்கேயும் தொழிலாளர் புரட்சிக் கட்சி பரந்துபட்ட மக்களின் உண்மையான உணர்வுகளை, குரோஷிய முஸ்லீம் தேசியவாத அரசியல்வாதிகளின் சிடுமூஞ்சித்தனமான கணிப்புகளுடன் சமப்படுத்துவதுடன், இவற்றை “பொஸ்னிய சுயநிர்ணயத்துக்கான” ஆதரவாக தவறாக காட்டுகின்றது. இது இவ்விதமாக அரசியல் சூழலை விஷமாக்க உதவி செய்வதுடன், பொஸ்னியாவிலும் பால்கன் பூராவுமான உழைக்கும் மக்களை இன எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் தடைசெய்கிறது.

கிராஜினா தாக்குதலும் “பல்லினத் தன்மையும்”

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் “பல்லின” அரசியலின் உண்மையான உள்ளடக்கம்; அதனது முன்னணி அமைப்பான பொஸ்னியாவிற்கான தொழிலாளர் உதவி என்பது, நேட்டோ குண்டு வீச்சுக்கு மத்தியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அதனது வெளிப்பாட்டைக் கண்டது. “பல்கலாச்சார சமூகத்தையும் அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானமாக வாழ்வதற்கான உரிமையையும் பாதுகாப்பதற்கான வளர்ந்துவரும் இயக்கத்தை” துதிபாடுகையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி பின்வருமாறு பிரகடனப்படுத்தியது, “இவ் இயக்கம் அண்மையில் குரோஷியாவில் உள்ள செற்னிக் (Chetniks) குகளின் தோல்வியினால் பிரமாண்டமான உந்துசக்தியை பெற்றுள்ளது”.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் படி “அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானமாக வாழ்வதற்கான உரிமை” கிராஜினாவில் உள்ள சேர்பியர்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள், குரோஷிய இராணுவத்தால் பயங்கரமான முறையில் துரத்தியடிக்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையினால் “பிரமாண்டமான உந்துசக்தியை” பெறுகிறது. இதுதான் இன சோவினிசத்திற்கும் ஏகாதிபத்திய அரசியலலுக்கும் சாதகமாக மார்க்சிசத்தை நிராகரிக்கின்ற ஒரு கட்சியினது தர்க்கவியலாகும்.

ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் பல்கலாச்சார சமூகத்திற்கான இவ் “உந்து சக்தி” யை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது கிராஜினா பிராந்தியத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தைய இராணுவ நடவடிக்கைகளின் முடிவின் இரண்டு மாதங்களின் பின்னர், கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சேர்பிய பொதுமக்களின் உடல்கள் பற்றிய விபரத்தை வெளியிட்டது. இறந்தோருக்கு மத்தியில் ஒரு 90 வயது பெண்ணும் அடங்குவர். இவர்கள் தப்புவதற்கு இயலாமல் இருந்த வயோதிபரும், நோயுற்றோரும், பலவீனமானோருமாகும்.

அந்த அறிக்கை கூறுகிறது: “ஒரு நாளுக்கு 6 உடல் என்ற சராசரியில் இடம்பெற்ற கொடூரங்களுக்கான சாட்சியங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது... சில குளிர்மையானதும், சில சிதைவடைந்து போனவையுமான உடல்கள் பிரதானமாக வயோதிபர்களுடையதாகும். பலர் பிடரியில் சுட்டோ அல்லது தூக்கிலிட்டோ அல்லது முழுமையாக சிதைக்கப்பட்டோ கொல்லப்பட்டுள்ளனர்… சேர்பிய வீடுகளும் நிலங்களும் தொடர்ச்சியாக கொழுத்தப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டும் வருகிறது”.

அறிக்கை மேலும் தொடர்கிறது: “இக் குற்றங்கள் குரோஷிய இராணுவத்தினாலும், குரோஷிய பொலிசினாலும், குரோஷிய பொதுமக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கே இதனை நிறுத்துவதற்கான எந்த முயற்சிகளும் அவதானிக்கப்பட்டில்லாததுடன், ஒரு துடைத்துக் கட்டும் கொள்கையினை சுட்டிக்காட்டுகின்றன”.

கார்டியன் புதினப் பத்திரிகை குரோஷியாவில் உள்ள ஐரோப்பிய கூட்டு அவதானிகளால் விடப்பட்ட இதையொத்த அறிக்கையை சுட்டிக் காட்டுகிறது. அது பின்வருமாறு கூறுகின்றது: “ஐரோப்பிய கூட்டு அதனது கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்துவதற்கு தயாராக உள்ளதா என்பது தெளிவாகவில்லை. குரோஷியா ஒரு தீர்மானகரமான பங்காளியாகப் பார்க்கப்படுவதுடன், இது எதிர்வரும் வருடத்தில் ஐரோப்பிய ஆலோசனை சபையில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது”.

ஒரு ஐரோப்பிய இராஜதந்திரி பின்வருமாறு தெரிவித்தார். "இந்த நாளின் முடிவில் நித்திரை கொள்ளும் நாய்களை இறக்கவிடுவதுபோல் குரோசியாவுடனான புரிந்துகொள்ளலை தாராளமாக கண்டுகொள்ளலாம். இது மக்களின் வாய்களில் ஒரு மோசமான உணர்வை விட்டுச்செல்லும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், குரோஷியா மற்றும் ஏனையோருடன் ஒரு நெருக்கமான உறவே ஒரு சமாதான உடன்படிக்கையின் விலையாக இருக்கும். அவ்வாறாயின் அது அவ்வாறே இருக்கட்டும்." 

அமெரிக்க வெளியுறவுச் செயலகம் இக் கொடூரங்களுக்கான சாகிரப் ஆட்சியின் பொறுப்பை மூடிமறைப்பதுடன், ஏகாதிபத்தியங்களின் தணிக்கையுடன் இதனை மேற்கொண்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி குரோஷியாவை தழுவிக் கொள்கிறது

ஐரோப்பிய கூட்டினதும் அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தினதும் வழிநடத்தலை பின்பற்றி, தொழிலாளர் புரட்சிக் கட்சி சேர்பிய பொதுமக்களுக்கு எதிரான கொடூரங்கள் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் நிராகரித்தது. இது குரோஷிய ஆட்சியின் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை, பொஸ்னியாவில் உள்ள சேர்பிய படைகளின் குற்றங்களுடன் சமப்படுத்த முயன்றவர்களைத் தாக்கியது.

கடந்த மே மாதத்தில் ஒரு முன்னய குரோஷிய தாக்குதலின் விளைவாக மேற்கு சுலோவினியாவில் உள்ள 15,000 சேர்பிய பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு ஓட கட்டாயப்படுத்தப்பட்டபோது வேர்க்கஸ் பிரஸ் “குரோஷியக் கொடூரங்கள் பற்றி விரைவான குற்றச்சாட்டுக்களை” வழங்குவோரை கண்டனம் செய்தது. அந்த நடவடிக்கையில் டாங்கி, ஆட்டிலறி, ஆகாய குண்டுத் தாக்குதல் போன்றவற்றில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், அவர்களது உடல்கள் பாரிய புதைகுழிகளுள் எறியப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன் எஞ்சியிருந்தோரும் சூறையாடும் குரோஷிய இராணுவத்தின் கரங்களில் பயங்கரங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

குரோஷியாவில் சேர்பியர்களுக்கு எதிராகவும், பொஸ்னியாவில் முஸ்லீம்கள், சேர்பியர்கள் ஆகியோருக்கு எதிராகவும் இடம்பெற்ற குரோஷிய கொடூரங்களுக்கு பரந்த அளவிலான ஆதாரங்கள் உள்ளன. குரோஷிய குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதன் மூலம், தொழிலாளர் புரட்சிக் கட்சி தன்னை இக் கொலைபாதக செயல்களில் அரசியல் பங்காளியாக முத்திரை குத்திக் கொள்கிறது. செப்டம்பர் 23, 1995 வேர்க்கஸ் பிரஸ் இதழில் தொழிலாளர் புரட்சிக் கட்சி குற்றங்களை முன்கூட்டியே மன்னிக்கும் ஒரு நிலைக்குச் செல்வதுடன் வடமேற்கு பொஸ்னியாவிலான முஸ்லீம் குரோஷிய தாக்குதல் பற்றிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறது.

“பொஸ்னியா-ஹேர்ஸகோவினா இராணுவ படைகள், தங்களது பக்கத்தில் இருந்தான பழிவாங்குதல்களையும் கொடூரங்களையும் தடுப்பதன் மூலம் ஒரு உயர்ந்த ஒழுக்கநெறி தளத்தையும் அதேபோல் தங்களது இராணுவ வெற்றியையும் பேணுவார்கள் என நாங்கள் நம்புகிறோம், ஆனால் நாங்கள் இத்தகைய சிறு தவறுகளை தாவிப்பிடித்துக் கொண்டு அனைத்துக் கன்னைகளும் கொடூரம் இளைக்கின்றன என கூறுவதற்கான நிரூபணத்துக்கு காத்துக் கொண்டுள்ள ஒழுக்க ரீதியில் திவாலான இடதுகளுக்கும், ஸ்ராலினிஸ்டுகளுக்கும் எந்த இடத்தையும் கொடுக்கமாட்டோம்”.

இக் கட்டுரையை பதிப்பதற்குள்ளேயே இத்தகைய பல “சிறுதவறுகள்” இடம்பெற்றுவிட்டன. பொஸ்னிய முஸ்லீம் உத்தியோகத்தர்கள் சேர்பிய யுத்தக் கைதிகளை திடீரென கொலை செய்ததற்கான தங்களது உத்தரவுகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. சேர்பிய பொதுமக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த கிராமங்களிலும் நகரங்களிலும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இவ்வகையில் இன சுத்திகரிப்பின் மீதும் ஏனைய கொடூரங்கள் மீதுமான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கண்டனம், முதலாளித்துவ அரசியல் வாதிகளதும் பத்திரிகைகளதையும் போன்றே அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் வழிநடத்தப்படுகின்றது. இது உயர்ந்த அளவில் தேர்வு செய்யப்பட்டதாயும் பிரமாண்டமான சிடுமூஞ்சித்தனமானதாயும் உள்ளது. இது இப்பிராந்தியத்தில் உழைக்கும் மக்களை பாதுகாப்பதுடன் எதையும் பொதுவாய் கொண்டிருக்கவில்லை. மேலும் இது ஒரு தேசியவாத குழுவை, இன்னொன்றுக்கு எதிராக தூண்டிவிடுவதற்கு கணிக்கப்பட்டுள்ளதுடன் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான ஒரு சூழலையும் வழங்குகிறது.

ட்ரொட்ஸ்கியும் தேர்ந்தெடுத்த கண்டனமும்

1912-13ல் பால்கன் யுத்தத்தின்போது, ஒரு யுத்தக்கள நிருபராக விளங்கிய லியோன் ட்ரொட்ஸ்கி, திட்டவட்டமாக இத்தகையதொரு நிலைப்பாடு எடுத்ததற்காகவே ரஷ்ய முதலாளித்துவ பத்திரிகைகளையும் மில்யூக்கோவ் போன்ற லிபரல்களையும் கண்டனம் செய்கிறார். அவர்கள் துருக்கிய அட்டூழியங்களை கடுமையான சத்தத்தில் எதிர்த்த அதேவேளையில், சேர்பிய பல்கேரிய படைகளால், முஸ்லீம் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரங்களை கண்டனம் செய்வதை தவிர்த்தனர். அல்லது மௌனமாக இருந்தனர்.

பால்கனை ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கு சேர்பியர்களும், பல்கேரியர்களும் நடாத்திய யுத்தத்தில் ஒரு முற்போக்கான கூறு இருப்பதை ட்ரொட்ஸ்கி இனங்கண்டு கொண்டிருந்தபோதிலும், கொடூரங்களின் மீதான தேர்ந்தெடுத்த கண்டனங்களை அவர் கண்டனம் செய்தார். அவர் துருக்கிய அட்டூழியங்களை தாராளவாதிகள் அம்பலப்படுத்துவது “மனித குலத்தினதும் கலாச்சாரத்தினதும் பொதுவான கோட்பாடுகளில் இருந்தன்றி, பதிலாக ஏகாதிபத்திய பேராசையின் நிர்வாணமான கணிப்புகளில் இருந்தே” உருவெடுக்கிறது என வலியுறுத்தினார்.

அவர் பின்வருமாறு சேர்க்கின்றார், “ஒரு தனிமனிதனோ, ஒரு குழுவோ, ஒரு கட்சியோ அல்லது ஒரு வர்க்கமோ, மனிதர்கள் இரத்தத்தை குடித்துக் கொண்டிருப்பதையும், மேலிருந்து தூண்டிவிடப்பட்டு பாதுகாப்பற்ற மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் பார்த்துக்கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டிருக்க இயலுமானவர்களாய் இருந்தால் அவர்கள் உயிருடன் இருந்தபோதிலும், வரலாற்றினால் அழிவிற்கும் உளுத்தப்போன நிலமைக்கும் கண்டனம் செய்யப்படுகின்றனர்”.

தொழிலாளர் புரட்சிக் கட்சியும் அதனது தலைவர் கிளிவ் சுலோட்டரும் இதேபோன்ற உளுத்தப்போன நபர்களாகும். நெருக்கடிக்கு எந்தவொரு சோசலிசத் தீர்வும் சாத்தியமில்லை என உறுதியாக நம்பிக்கொண்டு, அவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி தங்களது வெறுப்பினை வெளிப்படுத்த நகர்ந்துகொண்டுள்ளனர். பொஸ்னியாவிலான ஏகாதிபத்தியத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சி, இத்தகையதொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்கள் இதனால் துடைத்துக் கட்டப்படுவதுடன், ஏகாதிபத்தியக் கொள்கையின் ஒரு சிறுகருவி என்பதைத் தவிர வேறு எதுவும் அற்றவர்களாக மாற்றமடைந்துள்ளனர்.

ஒரு விவாதத்தின் நிமித்தம், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிழையான பிரகடனமான கொடூரங்களுக்கான விசேடமான பொறுப்பை சேர்பியர்கள் கொண்டுள்ளார்கள் என்பதையும் யுத்தம் தனியே சேர்பியத் தாக்குதலால் விளைவாக்கப்பட்டது என்பதையும் ஒருவர் ஏற்றுக் கொள்வாராயினும் கூட, இது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலையீட்டினது பிற்போக்கு இயல்பை மாற்றிவிடாது. இந் நிபந்தனைகளில் கூட சோசலிஸ்ட்டுகள், முதலாளித்துவ ஆட்சியாளர்களான ருஜ்மனுடனும், இசட்பேகோவிக்குடனும் கூடிவிட முடியாது. மேலும் இங்கே ஏகாதிபத்திய தலையீட்டிற்கான, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஆதரவை நியாயப்படுத்துவதற்கு எந்த நிலமைகளும் கிடையாது. அத்தகையதொரு கொள்கை, கோட்பாடு சார்ந்த அரசியலை கைவிடுவதையும், தொழிலாள வர்க்கத்தினது சுயாதீன நிலைப்பாட்டை கைவிடுவதனையும், ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகளிடம் ஒரு ஒழுக்கநெறி அரசியல் அடிபணிவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மார்க்சிஸ்டுகள் யுத்தத்தை நோக்கிய தங்களது அணுகுமுறையை, ஒருபோதும் யார் முதல் வேட்டைத் தீர்க்கிறார்கள் என்பதில் இருந்தோ அல்லது எந்த கன்னை பாரிய கொடூரங்களுக்கு பொறுப்பு என்பதில் இருந்தோ ஆரம்பிப்பதில்லை. இராணுவத் தாக்குதல் என்பது எப்போதும் சம்பவங்களின் ஒரு சிக்கலான சங்கிலியில் ஒரு இணைப்பு மட்டுமே என விளங்கிக்கொள்ளப்படுகிறது. யுத்தங்கள் தற்செயலானவை அல்ல. இவை அவற்றிற்கு முன்னிருந்த சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியினால் தயார் செய்யப்படுகின்றன.

முதலாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனியே மோதலை தூண்டிவிட்டது என்பதில் எப்போதுமே எந்த சந்தேகத்துக்கும் இடமிருக்கவில்லை. எப்படியிருந்தபோதிலும் பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா என்பவற்றின் ஆளும் வர்க்கங்கள் “சிறிய பெல்ஜியத்துக்கு” எதிரான ஜேர்மனின் தாக்குதலை தங்களது சொந்த யுத்த நோக்கங்களை முன்னெடுப்பதற்கு பயன்படுத்திக் கொண்டனர். சோசலிஸ்ட்டுகள் தனியே ஜேர்மனியை மட்டுமன்றி அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் எதிர்த்தனர். லெனினின் தலைமையின் கீழ் அவர்கள் ஏகாதிபத்திய யுத்தத்தை, உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடினர்; அதாவது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அதனது “சொந்த” முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக புரட்சிகர ரீதியில் அணிதிரட்டுவதற்கு போராடினர்.

1914ல் சேர்பிய சோசலிஸ்ட்டுக்கள், சேர்பியா ஆஸ்திரிய-கங்கேரிய சாம்ராஜ்யத்தால் ஆக்கிரமிக்கப்பட்டும் அந்நிய அடிமைத்தனத்தை முகங்கொடுத்தபோதிலும் கூட தங்களது சொந்த அரசாங்கத்தை எதிர்த்தனர். சேர்பிய அரசினது பிற்போக்கு நோக்கங்களில் எந்த நம்பிக்கையையும் வைக்காததோடு, அவர்கள் எதிர் ஏகாதிபத்திய நலன்கள் போட்டியில் உள்ள ஒரு பூகோளப் போராட்டத்தின் பாகமாக பால்கன் யுத்தத்தை இனங்கண்டனர்.

2ம் உலக யுத்தத்தின் போது நாஜி ஜேர்மனியினால் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளும் அக்கிரமங்களும் பாரிய நாசம்மிக்கதாகும். தொழிலாள வர்க்கத்தினுள் நாஜி ஆட்சிக்கு ஒரு ஆழ்ந்த வெறுப்பு இருந்து வந்தது. அப்போது நான்காம் அகிலத்தின் மார்க்சிஸ்டுகள் ஸ்ராலினிஸ்டுகளுக்கும், சமூக ஜனநாயகவாதிகளுக்கும் எதிரான போராட்டத்தில், ஹிட்லருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஏகாதிபத்தியத்துடனான கூட்டில் இருந்து வேறுபடுத்தினர். அவர்கள் பாசிசத்துக்கு எதிரான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் பணி என வலியுறுத்தியதுடன், ஏகாதிபத்தியத்தின் எந்த கன்னையிலும் நம்பிக்கை வைக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கரங்களில் அழிவை முகங்கொடுத்த செக்கோஸ்லாவக்கிய ஆட்சியும் ஏனையவையும் உள்ளடங்கலான எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்க மறுத்தனர்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி, யுத்தப் பிரச்சனைக்கான இந்த அடிப்படை மார்க்சிச அணுகுமுறையுடன் உடைத்துக்கொண்டது. யுத்தங்களாலும், இனப் படுகொலைகளாலும் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட ஒரு நூற்றாண்டான 20ம் நூற்றாண்டின் இறுதியில், ஏகாதிபத்தியம் ஒரு முற்போக்கு பாத்திரம் வகிக்க முடியுமென மக்கள் நம்பவேண்டுமென தொழிலாளர் புரட்சிக் கட்சி விரும்புகிறது. பொஸ்னியாவிலான இனசுத்திகரிப்பு பயங்கரங்களுக்கான ஒரு தீர்வு, இந்த அல்லது மற்ற தேசியவாத குழுவின் வெற்றியிலோ அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டிலோ தங்கியுள்ளது என்ற கருத்துப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கக்கூடிய சாத்தியமான உண்மைகள் எவை? தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த கேள்விக்கு விடைகொடுக்க தன்னை வருத்திக்கொள்ளவில்லை. இது சாதாரணமாக அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தையும், சமாதானத்தின் முகவர்களாக பெரும் வல்லரசுகள் காட்டிக்கொள்வதையும் பிரதிபலிக்கிறது.

அரசியலை வேறு மார்க்கங்களில் முன்னெடுத்தல்

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலமாகவே குளோஸ்விச்சின் (Clausewitz) அறிவுபூர்வமான கூற்றான, யுத்தம் என்பது அரசியலை வேறு மார்க்கங்களில் தொடர்வதே ஆகும் என்பதை மேற்கோள் காட்டி வந்துள்ளனர். அவர்கள் ஒரு தரப்பட்ட முரண்பாட்டின் இயல்பை, இந்த அல்லது அந்த போரிடும் கன்னை மேற்கொள்ளும் குற்றங்களை ஒழுக்கநெறி அடிப்படையில் பிரிப்பதன் மூலமோ அல்லது எந்தப் போரிடும் கன்னை தாக்குதலாளராக விளங்குகிறது என்ற மேலோட்டமான அபிப்பிராயத்தின் அடிப்படையிலோ மதிப்பிடுவதில்லை. பதிலாக அவர்கள் இம் முரண்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ள சமூக சக்திகள் பற்றியும், சம்பந்தப்பட்டுள்ள ஆட்சியின் வர்க்க இயல்பு பற்றியும், யுத்தத்திற்கு முன்பு இருந்ததும் அதனது பொது வடிவங்களை நிர்ணயிக்கின்றதுமான அரசியலின் வர்க்க முக்கியத்துவத்தைப் பற்றியதுமான ஒரு விஞ்ஞான பூர்வமான ஆய்வை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

நேட்டோவின் ஆகாயத் தாக்குதல், படுகொலைகள், முன்னாள் யூகோஸ்லாவியாவின் முழுச் சனத்தொகையையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றுதல் என்பவற்றினூடு முன்னெடுக்கப்படும் அரசியல் என்ன? முன்னாள் குடியரசுகளினுள்ளான இன்றைய அரசியல் தலைமைகள், தங்களது சொந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அதிகரிப்பதற்கும், இன தேசிய வாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்னெடுப்பதன் மூலம் வெளிநாட்டு மூலதனத்துடன் மிகவும் சாதகமான உறவுகளை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சித்துக்கொண்டுள்ள, முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களினதும் கம்யூனிச விரோத அரசியல் வாதிகளினதும் எழுச்சியடைந்துவரும் முதலாளித்துவவாதிகளினதும் ஒரு குறுகிய குழுவினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வெளிநாட்டு சக்திகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொன்றும் ஒழுக்கநெறி நடிப்பு பாசாங்குகளின் பின்னே, பால்கனில் தங்களது திட்டவட்டமான சொந்த நலன்களை முன்னெடுக்கின்றன. இப்பிராந்தியத்தில் உள்ளான பொருளாதார, அரசியல், இராணுவ செல்வாக்குக்கான போராட்டம், உலக சந்தை மீது ஆதிக்கத்தை மேற்கொள்வதற்காக அதிகரித்த விதத்தில் ஏகாதிபத்தியங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் கசப்பான போராட்டங்களின் ஒரு பாகமாகும்.

வார்சோ உடன்படிக்கையின் கலைப்பினைத் தொடர்ந்து, அதனது இருப்பிற்கான காரணத்தை இழந்துவிட்ட நேட்டோ கூட்டினுள்ளே, அதனது ஆதிக்கம் மிக்க பாத்திரத்தை பேணுவதை ஒரு பிரதானமான நோக்கமாகக் கொண்டு வாஷிங்டன் தலையிட்டுக் கொண்டுள்ளது. கிழக்கினது புதிதாக திறக்கப்பட்ட சந்தைகளை சுரண்டுவதற்கான நகர்வில், ஜேர்மனியின் பின்னே தள்ளப்பட்ட அமெரிக்க முதலாளித்துவம், நேட்டோவின் உள்ளேயான அதனது மேலாதிக்கப் பாத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம், ஐரோப்பிய விடயங்களில் ஒரு தொடர்ச்சியான பிடியினை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. மேலும் அதனது குண்டுவீச்சு விமானங்களையும் ஆகாய ஏவுகணைகளையும் பொஸ்னிய சேர்பியர்கள் மீது இலக்கு வைப்பதனூடு, அமெரிக்கா உலகினது சிறிய தேசங்களுக்கு, அதனது உத்தரவுகளை மறுப்பவர்களுக்கு காத்திருக்கும் தலைவிதி இதுதான் என்ற உதாரணத்தை காட்டுகின்றது.

அமெரிக்காவினது இராணுவ நடவடிக்கைகள் திட்டவட்டமான பூகோள அரசியல் கருத்துப்பாடுகளால் வழிநடத்தப்படுகின்றது. இது 1992ல் முதலில் வெளிச்சத்துக்கு வந்த ஒரு பென்டகன் பத்திரத்தில் உச்சரிக்கப்படுகின்றது. சோவியத் யூனியனின் உடைவினைத் தொடர்ந்து அதனது மூலோபாயக் கொள்கையை வரைகையில், வாஷிங்டனது பிரதான அக்கறை அதனது இராணுவ மேலாதிக்கத்தைப் பேணுவதும், பிராந்திய ரீதியாகவோ அல்லது பூகோள ரீதியாகவோ எந்தவொரு ஆழமான எதிராளியினது எழுச்சியை தடுப்பதுமாகும் என பத்திரம் கூறுகிறது. அதனது எதிராளிகளுள், ரஷ்யாவின் ஆழ்ந்த கூட்டுடனான ஒரு விரிவடைந்த சேர்பிய அரசினது அபாயமும் குறிப்பிடப்படுகிறது.

கிளின்டனது பொஸ்னிய தலையீட்டுக்கான அதனது ஆதரவை அறிவித்த ஒரு பிரதான ஆசிரியத் தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அதனது இந்த மூலோபாய கருத்துப்பாடுகள் பற்றி எதையும் மறைக்கவில்லை. “ரஷ்யா இன மன்னிப்புகளை அதனது ஒரு அயலவரின் மீது –உதாரணமாக ஒரு பால்டிக் துறைமுகம்– பாய்வதற்கு உபயோகப்படுத்தினால் அல்லது உபயோகப்படுத்தும்போது எப்படி நாங்கள் பதிலிறுக்க வேண்டும் என்பதற்கு, பொஸ்னியா ஒரு பரீட்சார்த்த களமாக சரியாக பார்க்கப்பட முடியும்” என இது எழுதுகிறது.

ஜேர்மனி தலையிடுகிறது

ஆயுத முரண்பாடு தொடங்குவதற்கு முன்பிருந்தே யூகோஸ்லாவிய நெருக்கடியில் ஜேர்மனி ஒரு பிரதான பங்கைக் கொண்டுள்ளது. மறுஇணைப்பால் அதனது அரசியல் பொருளாதார நிறை அதிகரித்துள்ளதுடன், 50 வருடங்களில் முதல் தடவையாக உலக அரசியலை வெளிப்படையாக முன்னெடுப்பதற்கான களமாக இது பால்கனை தேர்ந்தெடுத்துள்ளது. சுலோவினியாவிலும், குரோஷியாவிலும் எழுச்சியடைந்த பிரிவினைவாத அரசியல் இயக்கங்களுக்கு இது அதனது அரசியல் பொருளாதார ஆதரவினை வழங்கியதுடன், அவற்றை ஜேர்மன் ஏகாதிபத்திய இறகுகளின் கீழ் கொண்டுவரும் நோக்குடன், இச் சிறு அரசுகளின் சுதந்திரத்தையும் முன்னெடுத்தது.

பொஸ்னியா, ஜேர்மனிக்கு இராணுவ சக்தியை வெளிநாடுகளில் பாவிப்பதற்கு இருந்த அரசியலமைப்பு ரீதியான தடையை அழிப்பதற்கான சூழ்நிலையை வழங்கியதுடன், இவ்வகையில் யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தினது அமைதிவாத நடிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அதிபர் ஹெல்மூட் கோலினது அரசாங்கம், தொர்நாடோ யுத்த விமானங்களை நேட்டோ ஆகாயத் தாக்குதலுக்கு ஆதரவாக அனுப்பியது. இம் முரண்பாட்டினுள் அவர்களது நுழைவு, போலந்தின் மீதான ஜேர்மனியின் ஆக்கிரமிப்பின் 56வது ஆண்டு நிறைவின் போது இடம்பெற்றது.

பிரெஞ்சு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் புதிதாக ஐக்கியப்பட்ட ஐரோப்பாவினுள், தங்களது சொந்த இராணுவ பலத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இரண்டு பெரிய ஐ.நா சபை இராணுவப் பிரிவுடன் பால்கனினுள் நுழைந்துள்ளன. இவ் இரு நாடுகளினுள்ளும் சேர்பியாவை நோக்கியா அல்லது குரோஷியாவை நோக்கியா கவனம் செலுத்துவது என்பதில் ஆளும் வர்க்கங்களிடையே கூர்மையான வேறுபாடுகள் எழுந்தன. எப்படியிருந்தபோதிலும் இவ்விரு நாடுகளும் ஜேர்மனியின் புதுப்பிக்கப்பட்ட பலத்தை கவலையுடன் பார்ப்பதுடன், ஐரோப்பாவின் இராணுவப் பிரச்சனைகளை தங்களால் கையாள முடியும் என்பதை பொஸ்னியாவில் காட்டுவதற்கு முயற்சிக்கின்றன. பிரான்ஸ், பொஸ்னியாவிலான அதனது “அமைதி காப்பை” தென் பசுபிக்கிலான அதனது ஆடம்பரமான அணு ஆயுத பரிசோதனைகளுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

பாரிசை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு அமைப்பினது ஒரு பேச்சாளர், பிரெஞ்சு முதலாளித்துவவாதிகளின் இராணுவ கணிப்புகளை, “ஐரோப்பாவில் அமெரிக்காவினது பிரசன்னத்திலும்  உத்தரவாதத்திலும் எல்லையற்று சார்ந்திருக்க முடியாத இன்றைய தருணத்தில், ஜேர்மனியின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு உதவுவதில், பிரெஞ்சு அணு ஆயுதங்கள் முக்கியமான பாத்திரம் வகிக்க முடியும்” என வலியுறுத்துவதன் மூலம் உச்சரித்தார். எத்தகைய அபாயத்துக்கு எதிராக இத்தகைய அணு ஆயதங்கள் தேவைப்படுகின்றன என்பதற்கு பேச்சாளர் விடையிறுக்க முயற்சிக்கவில்லை. பிரான்சின் ஏவுகணைகள் மாஸ்கோ, வாஷிங்டன், பேர்லினுக்கோ அல்லது இவை மூன்றுக்குமோ குறிவைக்கப்படக்கூடும்.

இறுதியாக இங்கு ரஷ்யாவின் பாத்திரம் உள்ளது. ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கைக்கு தானாகவே கீழ்படுத்திக் கொண்டு, பொறிஸ் யெல்ஸ்டினின் முதலாளித்துவ புனருத்தாரண ஆட்சி, பால்கன் பிரிவினையில், தான் விலக்கி விடப்பட்டிருப்பதை காண்பதுடன், ரஷ்யாவின் எல்லைகள் வரை நேட்டோ கூட்டு விஸ்தரிக்கப்பட்டிருப்பதனால் பயமுறுத்தவும்படுகிறது. அமெரிக்க உத்தியோகத்தர்கள், பொஸ்னியா மீதான நேட்டோ குண்டு வீச்சை யெல்ஸ்டின் கண்டனம் செய்ததையும், “ஒன்றுடன் ஒன்று யுத்தமிட்டுக் கொண்டுள்ள இரண்டு ஆயுத முகாங்களை நோக்கிய திருப்பம்” பற்றிய அவரது எச்சரிக்கையையும் உள்நாட்டு அரசியலின் விடயம்போல தள்ளுபடி செய்து விடுகின்றனர். ஒருவர், தலையீட்டிற்கான அமெரிக்காவின் தீர்மானத்தை, 1996 தேர்தல் பிரச்சாரத்துக்கான கிளின்டனின் அக்கறையுடன் இலகுவாக பொருத்த முடியும். எப்படியிருந்தபோதிலும் அத்தகைய நோக்கங்கள் இரண்டாம் பட்சமானவை மாத்திரமே.

அக்டோபர் 1917 புரட்சிக்கு முன்னரும் பின்னருமாக பால்கன் விவகாரங்களில் ரஷ்யா நூற்றாண்டுகளாக தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளது. பொறிஸ் யெல்ஸ்டினின் தலைவிதி என்னவாக இருந்தபோதிலும், வரலாறும் புவியியலும் இது இப்பிராந்தியத்தில் தனது நலன்களை, இராணுவ வழிகளும் உள்ளிட்ட முறையில், தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்பதை எச்சரிக்கிறது.

முன்னாள் யூகோஸ்லாவிய கலைப்பில் இருந்து எழும் முரண்பாடுகளில், பூகோள நெருக்கடி, மேற்பரப்பில் உடைத்துக்கொண்டு வெளிப்படுகின்றது. 80 வருடங்களுக்கு முந்தய பால்கன் யுத்தங்களை போலவே இன்றய மோதல்கள், ஒரு உலக ஏகாதிபத்திய யுத்தத்துக்கான முன்னறிவிப்பாக விளங்குகின்றது. மீண்டும் ஒருமுறை உலகம் மீள் பிரிவினைக்கு உட்படுவது பால்கனில் ஆரம்பிக்கிறது.

பொஸ்னியாவும் ஸ்பெயினும்

முன்னாள் யூகோஸ்லாவியாவில் இருந்து ஐக்கிய நாடுகளது ஆயுதத்தடையை நீக்கவேண்டும் என்பதே தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய கோரிக்கையாக விளங்குகின்றது. அண்மைய மாதங்களில் பொஸ்னியாவுக்கான ஆயுத எடுத்துச் செல்லலின் மீதான உத்தியோகபூர்வ தடையை, 1936ல் பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்ட தலையிடாக் கொள்கையுடன் ஒப்பிட்டு, பொஸ்னியாவிலான யுத்தத்தையும் 1936-39 சிவில் யுத்தத்தையும் சமப்படுத்த முயற்சிக்கின்றது. வேர்க்கஸ் பிரஸ் அதனது ஆகஸ்ட் 12 கட்டுரை ஒன்றில் பிரிட்டனின் பாதுகாப்புச் செயலாளர் மிகையில் போர்டிலோவின் மீதான ஒரு தாக்குதலில், ஸ்பெயின் மீதான ஒரு விந்தையான ஒப்பீட்டை மேற்கொண்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி, கிராஜினா தாக்குதலை “இன சுத்திகரிப்பின்” ஒரு உதாரணம் என கூறியதற்காக போர்ட்டிலோவை விமர்சித்தது.

“உள்நாட்டு யுத்தத்தின் போது குடியரசு ஸ்பெயினுக்கு எதிரான பிரிட்டிஷ் பிரெஞ்சு அரசாங்கங்களின் ஆயுதத்தடை இல்லாமல் இருந்திருக்குமாய் இருந்தால், போர்ட்டிலோவின் தந்தை தனது வீட்டைவிட்டு அகதியாகப் புறப்பட்டிருந்திருக்க முடியாது” என “எதிரிடையாக” இது கூறுகிறது.

ஒரு வலதுசாரி டோரி அமைச்சரிடம்  ஒரு ஒழுக்கநெறிரீதியாக   அழைப்புவிடுகின்ற இயல்புடைய இக்குறிப்பின் பின்னே, திட்டவட்டமானதும் மிகவும் பிற்போக்கானதுமான அரசியல் கருத்துப்பாடுகள் உள்ளன. ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தை, பொஸ்னிய முரண்பாட்டுடன் சமப்படுத்த முயற்சிப்பது அயோக்கியத்தனமானதாகும். ஸ்பெயினில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை, பாசிச பிற்போக்கு தனத்தினால் அடக்குவதற்கான முதலாளித்துவ வாதிகளின் முயற்சியின் விளைவாய் யுத்தம் வெடித்தது. பொஸ்னியாவில், யூகோஸ்லாவிய அரசின் கலைப்பில் இருந்தும், போட்டியிடும் தேசியக் குழுக்கள் தேசிய வாதத்தை தூண்டி விடுவதனூடும், ஏகாதிபத்திய சக்திகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதனூடும் சொந்த அரசை சிரஷ்டித்துக் கொள்வதற்காக முயற்சித்ததனதும் விளைவாய் யுத்தம் தோன்றியது.

ஆனால் இங்கே ஒரு வரலாற்று ரீதியாக தவறான ஒப்பீடு என்பதைவிட அதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளது. ஸ்பானிய புரட்சியினது தோல்வியிலும் பிராங்கோவினது வெற்றியிலுமான பிரதான பிரச்சனை, தலையிடா கொள்கையினது விளைவாய் அரசு விசுவாசிகளுக்கு ஏற்பட்ட ஆயுத பற்றாக்குறையே என தொழிலாளர் புரட்சிக் கட்சி உணர்த்துகிறது. ஒருவர் ட்ரொட்ஸ்கியினது எழுத்துக்களில், ஸ்பெயினில் பாசிசத்தின் வெற்றிக்கான காரணத்தை, ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கு பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்கள் ஆயுதம் வழங்காததை குறிக்கின்ற ஒரு அறிக்கையை வீணே தேடிக்கொண்டிருக்க முடியும்.

உண்மையில் இதுதான் அந்நேரத்தில் கிரெம்ளின் ஆட்சியாலும் உலகம் பூராவும் உள்ள அதனது சுற்றுவட்டத்தில் உள்ள “கம்யூனிஸ்ட்” கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடாக இருந்தது. இது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரு நோக்கங்களுக்கு சேவை செய்தது: ஒன்று ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை நசுக்கியதில் கோமின்ரேனினதும், ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியினதும் பாத்திரத்தை மூடி மறைப்பதற்கும்; அந் நேரத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரிட்டன், பிரான்சுடனான “கூட்டுப்பாதுகாப்பு” ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதில் மைய கவனத்தை செலுத்திய கிரெம்ளினின் வெளிநாட்டுக் கொள்கையை மேலும் முன்னெடுப்பதற்குமாகும். இற்றை நாள் வரையில் ஸ்ராலினிஸ்ட்டுக்களும் அவர்களது அனுதாபிகளும் பிராங்கோவின் வெற்றிக்கு, பிரிட்டிஷ் பிரான்ஸ் “தலையிடாமைதான்” ஒரு பிரதான காரணி என பேணுகின்றனர்.

ஸ்ராலினிச நிலைப்பாட்டை பிரதிபலித்தும், ஸ்பானிய புரட்சியினது உதவிக்கு “ஜனநாயக நாடுகள்” வரும் என்ற பிரமையை முன்னெடுத்தும் வந்த மத்தியவாதிகளை ட்ரொட்ஸ்கி ஏளனம் செய்தார். சம்பவங்களின் அபிவிருத்தி திசையில், ஸ்பானிய முதலாளித்துவவாதிகளதும் பாசிச பிற்போக்கினதும் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, பிரிட்டிஷ் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் தங்களது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யும் என்பதை ட்ரொட்ஸ்கி பேணினார். முதலாளித்துவ அரசிற்கும், தொழிலாள வர்க்க கட்சிகளுக்கும் இடையேயான ஒரு கூட்டு, என்ற கருவியினூடு தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவவாதிகளுக்கு கீழ்படுத்திய கிரெம்ளினின் பின்னணி ஆதரவுடைய மக்கள் முன்னணி என்ற துரோகக் கொள்கைக்கு எதிராக நான்காம் அகிலம் போராடியதே அன்றி, ஆயுத தடையை நீக்குவதற்காக அல்ல. முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதனூடும் தீவிரமான சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதனூடு பாசிசத்தை தோற்கடிப்பதற்கான ஒரு புரட்சிகர கொள்கைக்கு நான்காம் அகிலம் போராடியது. மையப்பிரச்சனைகள் இராணுவ ரீதியானது அன்றி, அரசியல் ரீதியானதே என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொஸ்னிய பிரச்சாரம், முன்னாள் யூகோஸ்லாவிய தொழிலாளர்களுக்கு ஒரு சுயாதீனமான கொள்கையை முன்னெடுக்கவுமில்லை, எந்த சமூக நடவடிக்கைகளை முன்மொழியவுமில்லை, பதிலாக தொழிலாள வர்க்கம் அழிக்கப்பட்டு விட்டது எனவும், வர்க்கப் போராட்டம் இல்லாது போய்விட்டது எனவும் வலியுறுத்துகின்றது. அதனது கொள்கை பொஸ்னிய முதலாளித்து அரசாங்கத்துக்கு விமர்சனமற்ற ஆதரவாக விளங்குவதோடு, “ஜனநாயக” ஏகாதிபத்திய நாடுகள் அதற்கு இராணுவ ஆதரவு வழங்கவேண்டும் என அழைப்பதாகவும் உள்ளது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியினது ஸ்பெயின் மீதான தொழுகைக்கு ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கம் உள்ளது: மேலும் அடித்தளம் அற்ற வடிவத்தில் ஒரு மக்கள் முன்னணி அரசியலை புத்துயிர்ப்படையச் செய்வதேயாகும். இது பால்கனில் ஏகாதிபத்திய தலையீட்டுக்கான ஆதரவை அணிதிரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதுடன், பிரிட்டிஷ் முதலாளித்துவவாதிகளை –அதிலும் குறிப்பாக அதனது தொழிற் கட்சி பிரதிநிதிகளை– “ஜனநாயக” நோக்கத்திற்கு வென்றெடுக்க முடியும் என்ற பிரமையையும் முன்னெடுக்கின்றது.

ருஜ்மனுக்கான வக்காலத்து

முன்னாள் யூகோஸ்லாவியாவை நோக்கிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அணுகுமுறையின் மிகவும் கொடூரமான அம்சங்களில் ஒன்று, குரோஷியாவின் பலம்மிக்க வலதுசாரி நபரான பிரான்ஜோ ருஜ்மனுக்கான அதனது ஆதரவாகும். கிராஜினாவிலான குரோஷிய தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்த அதனது ஆகஸ்ட் 12 கட்டுரை ஒன்று, அண்மையில் கிராஜினாவில் இருந்து சேர்பியர்களை வெளியேற்றியதற்காக குரோஷியாவுக்கு அவர்களது “நன்றி” இருந்தும், “பல பொஸ்னியர்கள் (அத்துடன் பல குரோஷியர்கள்) குரோஷிய ஜனாதிபதி ருஜ்மனில் அவநம்பிக்கையாக உள்ளனர்” என வேர்க்கஸ் பிரஸ் பிரகடனப்படுத்துகிறது. வேர்க்கஸ் பிரஸ் இச் சந்தேகங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றது. பொஸ்னியாவுக்கான அவரது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது ஒரு உணவுபட்டியல் (menu) அட்டையின் பின்பக்கத்தில் ஒரு வரைபடத்தைக் கீறி, எப்படி இப்பிராந்தியம் சேர்பியாவின் சுலோபோடன் மிலோசவிக்குக்கும் தனது ஆட்சிக்கும் இடையே பிரிக்கப்படும் என்பதை ருஜ்மன் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் ஒரு பரவலாக அறியப்பட்ட, லண்டனில் நடந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி “இதனது முக்கியத்துவம் பற்றி சந்தேகங்கள் உள்ளது” என பிரகடனப்படுத்துகிறது.

ருஜ்மனின் அரசியல் நகர்வுப் பாதையை அறிந்து கொண்ட எவருக்கும் அத்தகைய சந்தேகங்கள் எதுவும் கிடையாது. பொஸ்னிய பிராந்தியத்தையும் இணைப்பதனூடான “உயரிய குரோஷியா”வுக்கான தனது ஆதரவை அவர் திரும்பத் திரும்ப பிரகடனப்படுத்தியுள்ளார். அவரது அமெரிக்க எஜமானர்கள் கூட, அவரது விசர்த்தனமான முஸ்லீம் வெறுப்பினால், வாஷிங்டன் தனது தீர்வினை சுமத்துவதில் கஸ்டங்களை சந்தித்ததாக முறையிட்டுள்ளனர். குரோஷிய படையினரும் பாசிச குழுக்களும் ஒரு இன ரீதியாக ஒருங்கிணைந்த ஹேர்ஸக்-பொஸ்னிய அரச துண்டை சிருஸ்டிக்கும் நோக்கில், சேர்பியர்களையும் முஸ்லீம்களையும் ஹேர்ஸகோவினாவில் படுகொலை செய்தும், துரத்தியடித்துக் கொண்டும் இருப்பது, ருஷ்மனால் திட்டமிடப்பட்டுள்ள இன பிரிவினையின் முன்னுதாரண யதார்த்தமாகும். இப் பெயரளவிலான பொஸ்னியப் பிராந்தியத்தில் வசிப்போர், குரோஷிய நாணயத்தை பயன்படுத்துவதுடன் குரோஷிய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதனுடனும் மடடுமல்லாமல் அண்மைய குரோஷிய தேர்தல்களில் சட்ட ரீதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குகளும் அளித்தனர்.

வேர்க்கஸ் பிரஸ் பின்வருமாறு கூறுவதற்கும் செல்கிறது: “ஜெனிவாவில், பிரிட்டிஷ் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய அரச அலுவலர்களால் வரையப்படுகின்ற கோடுகளே பொஸ்னியாவுக்கு மிகவும் அபாயமானது என நிரூபிக்கின்றன!... பொஸ்னிய மக்களினது (அத்துடன் இறுதியில் குரோஷியர் சேர்பியர்களுக்கும்) பாரிய எதிரிகளான கராட்சிக், மிலோசிவிக் போன்ற தேசியவாத காடையர்களின் பின்னேயே பால்கனை பிரிப்பதற்கு பெரும் வல்லரசுகள் முயல்கின்றன”.

வாஷிங்டனாலும் பொன் (Bonn) இனாலும் வரையப்பட்ட வரைபடங்கள் – குரோஷிய தாக்குதல்கள், நேட்டோ ஆகாயத் தாக்குதல்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பவற்றின் பின்னணி ஆதரவுடன்– தொழிலாளர் புரட்சிக் கட்சியைப் பொறுத்தமட்டில் அதிக விருப்பத்துக்குரியது. அதனது எதிரிகளது அட்டவணையில் ருஜ்மன் சேர்க்கப்படவில்லை. சுலோட்டரும் தொழிலாளர் புரட்சிக் கட்சியும் இவ் குறிப்பிட்ட தேசியவாத காடையனை நோக்கி ஒரு சிறப்பு உறவினை அபிவிருத்தி செய்துகொண்டுள்ளனர்.

வலதுசாரி தேசியவாத குழுக்களிடம் இருந்தும், இடம் பெயர்ந்த உஸ்ராஷ் குழுக்களிடம் இருந்துமான தாரளமான நிதி ஆதரவிற்கு பெருமளவு நன்றி செலுத்திய வண்ணமே குரோஷியாவின் ஜனாதிபதியாக ருஜ்மன் உருவானார். அவரது தேர்தல் பிரச்சாரத்தில் உஸ்ராஷ் உடன் “ஒத்துப்போவதற்கு” அவர் அழைப்பு விட்டதுடன், குரோஷியாவை அவர் “ஜசெனோவாக் மனச்சிக்கல்” (Jasenovac complex) என குறிப்பிட்டதில் இருந்து விடுவிப்பதற்கும் அழைப்புவிட்டார். (2ம் உலக யுத்தத்தின்போது, ஆன்ற் பவலிக் (Ante Pavelic) பாசிச ஆட்சியினால் கொண்டு நடத்தப்பட்ட சித்திரவதை முகாமினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தையே சிக்கல்களாக குறிப்பிட்டார்) 700,000 மேற்பட்ட சேர்பியர்களும், 30,000 மேற்பட்ட யூதர்களும் இம் முகாமில் குரோஷிய பாசிஸ்ட்டுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இது ஐரோப்பாவில் இருந்த நாஜிகளால் நடாத்தப்படாத ஒரேயொரு சித்திரவதை முகாமாகும். அவர் உஸ்ராஷ் ஆட்சியினை “குரோஷிய மக்களின் வரலாற்று உச்சரிப்புக்களின் ஒரு வெளிப்பாடு” என விபரிக்கின்றார்.

ருஷ்மனுடைய அழைப்பு, ஜேர்மனியர்களை நாஜிசத்தின் சாதகமான பங்களிப்புக்களுடன் சமரசப்படுத்தி, அவுஸ்விற்ச் கொலைமுகாம்கள் தொடர்பான அவர்களது குற்றவுணர்வுகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளித்த ஒரு ஜேர்மன் வேட்பாளரை ஒத்ததாகும். சேர்பியர்களின் மரண எண்ணிக்கை பிரமாண்டமாக மிகைமதிப்பிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது எனவும், ஜசெனோவாக் முகாமில் தனியே 70,000 பேர் “மாத்திரமே” ஒழித்துக் கட்டப்பட்டனர் என வலியுறுத்தியதன் மூலம் குரோஷிய தேசியவாத வட்டாரங்களில் ருஜ்மன் முன்னணிக்கு எழுந்தார். அவர் இதேபோல் நாஜி, யூதபடுகொலையில் (Holocaust) 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படடனர் என்பதையும் மறுத்ததோடு “வெறும்” 900,000 பேரே கொல்லப்பட்டதாக கூறினார்.

ருஜ்மனின் பண்படுத்தப்படாத பூமி

1989ல் சாகிரப்பில் பதிப்பிக்கப்பட்ட அவரது பிரதான படைப்பான, பண்படுத்தப்படாத பூமி என்ற தீவிரவாத யூத-எதிர்ப்பு கைநூல், யூதப்படுகொலைகளுக்கான குற்றத்தை யூதர்களின் மீது சுமத்துகின்ற அதேவேளையில், கிட்லரது “இறுதி தீர்வினை” நியாயப்படுத்துகின்றது. அவர் இவ்விதமாக எழுதுகின்றார்:

“எப்போது ஒரு இயக்கம், ஒரு மக்கள், ஒரு அரசு, ஒரு கூட்டு அல்லது ஒரு கருத்தியல் அதனது உயிர்வாழ்க்கையை பயமுறுத்துகின்ற அல்லது அதன்மீது மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கக் கூடிய ஒரு எதிராளியை முகங்கொடுக்கும்போது, அதனை அழிப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அதற்கு கிடைக்கக் கூடிய அனைத்துக் கருவிகளையும் பாவிப்பதுடன் சாத்தியமான ஒவ்வொன்றையும் செய்யவேண்டும். இத்தகைய முகங்கொடுப்புக்களில் ஒரு இன அழிப்புக்குப் போவதை விலக்குவது, பெருமளவில் சுய அழிப்பையே விளைவாக்கும்”.

அத்துடன் அவர் நாஜி ஆட்சிபற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஒரு உயர்ந்த இனமாக 'உயர் ஜேர்மன் மக்களின்' உலக இருப்பு என்ற கருத்து, யூத பிரச்சனைக்கான 'இறுதி தீர்வு' ஜேர்மன், ஐரோப்பிய வரலாற்றில் இருந்து யூதர்களை திட்டவட்டமாக அகற்றவேண்டும் என்ற கருத்துப்பாட்டையே அடித்தளமாகக் கொண்டது. இதற்கான விளக்கம் –வரலாற்று மூலங்களுக்கும் மேலதிகமாக– ஜேர்மன் ஏகாதிபத்தியம் பூகோள அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்துவதை நோக்கி பிரதானமாக நகர்ந்தது என்ற உண்மையில் கண்டுகொள்ள வேண்டும். இவ்விதமாக ஹிட்லரின் “புதிய ஐரோப்பிய ஒழுங்கு” யூதர்களை (குறையவோ கூடுதலாகவோ முழு ஐரோப்பிய நாடுகளிலும் விரும்பப்படாதோர்) அகற்றுவதற்கானதும் அதேபோல் வேர்சாயில் (பிரெஞ்சு ஆங்கில) பிழையினை திருத்துவதையும் ஆகிய இரு தேவைகளினாலும் நியாயப்படுத்தப்பட முடியும்”. ஐரோப்பிய யூதர்களை, மடகஸ்காருக்கு அனுப்புவது என்ற ஒரு ஆரம்ப நாஜி திட்டத்தை அவர் ஏற்றுக் கொள்வதை குறிப்பிடுவதோடு, “படிப்படியான துடைத்துக்கட்டல்” ரஷ்யாவில் நீடித்த இராணுவ முகங்கொடுப்பினால் பின்னர் அவசியப்பட்டது என பிரகடன்ப்படுத்துகின்றார்.

அவர் விவிதியத்தின் பழைய ஏற்பாட்டினை யூதர்களின் இன அழிப்பு வன்முறையை ஒரு இயல்பான தோற்றமாக நியாயப்படுத்துவதற்கு மேற்கோள் காட்டுகிறார். “யூதர்களது இன அழிப்பு வன்முறை மனிதனதும் அவனது சமூக இயல்புடனும் ஒத்துப்போகும் ஒன்றாகும்... வன்முறை அனுமதிக்கப்படக் கூடியதாக மட்டுமன்றி பரிந்துரைக்கூடியதாகவும் விளங்கியது; மேலும் இது பலம்மிக்க யேகோவாவின் வார்த்தைகளுடன் பொருந்தக் கூடியதாகவும் இருந்தது; இது எப்போது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் இராஜ்யத்தின் புத்துயிர்ப்புக்கோ அல்லது புத்தெழுச்சிக்கோ தேவைப்படும்போது பாவிக்கப்பட முடியும்” இறுதியாக அவர் பல ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜசெனோவாக்கில் உள்ள உஸ்ராஷ் சித்திரவதை முகாம், யூதர்களாலேயே நடத்தப்பட்டது என ஒரு கேடுகெட்டத்தனமான பிரகடனத்தை செய்கிறார்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த மனிதனுக்கு வக்காலத்து வாங்குவதுடன், அவரது இராணுவ வெற்றிகளையும் தழுவிக் கொள்கின்றது. இது அதனது சொந்த மட்டத்தில் இந்த நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவோரை கண்டனம் செய்கிறது. ருஷ்மனுக்கான இதனது ஆதரவு, தனியே கிளிவ் சுலோட்டரின் நோய் பிடித்த மோகத்தின் வெளிப்பாடு அல்ல. குரோஷிய வலதுசாரிகளுக்கான, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஆதரவு திட்டவட்டமான நடைமுறை நடவடிக்கைகளில் அதனது வெளிப்பாட்டைக் கண்டு கொண்டது.

பொஸ்னியாவிற்கான தொழிலாளர் உதவி

1993ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி, பொஸ்னிய நகரமான ருஷ்லாவுக்கு ட்ரக் மூலம் எடுத்துச் செல்லலும் உள்ளடங்கலான, பொஸ்னியாவுக்கான அதனது தொழிலாளர் உதவி பிரச்சாரத்தை குரோஷிய ஆட்சியினது நேரடி உதவியுடன் அபிவிருத்தி செய்ததாக ஏற்றுக் கொண்டது. எடுத்துச் செல்லலின் மைய அமைப்பாளர் டொட் கிப்சன், கட்சி தனது பிரச்சாரங்களை, “குரோஷிய வெளிநாட்டு அமைச்சினது பிரதிநிதிகளுடனும்... பொஸ்னிய-ஹேர்ஸகோவினா அரசாங்கத்துடனும் உதவிப் பாதையை திறப்பது பற்றி கலந்துரையாடிய” கூட்டங்களினூடு ஒருங்கிணைத்ததாக கூறினார்.

அவர் குரோஷிய வெளிநாட்டு அமைச்சு குரோஷியாவில் இருந்து ருஷ்லாவுக்கு வடக்கு பாதையினூடு ("northern corridor") போவதற்கு நாங்கள் சாகிரேப்பில் இருந்து சுபன்ஜாவுக்கு (Zupanja) போகவேண்டும் என முன்மொழிந்தது” என வெளிப்படுத்தினார். (வேர்க்கஸ் பிரஸ் நவம்பர் 6, 1993) குரோஷிய வெளிநாட்டு அமைச்சு தற்போது கிராஜினா கைப்பற்றப்பட்டதில் யதார்த்தமாக்கப்பட்ட அதனது சொந்த இராணுவ நோக்கத்தை மேலும் முன்னெடுப்பதற்கே “வடக்கு பாதையை” பிரேரித்தது. வடக்கு பாதையை பொஸ்னிய சேர்பியர்கள் ஆதிக்கம் செலுத்தியமை கிராஜினா பிராந்தியத்துக்கான மீள் விநியோகத்தை செய்ய அனுமதித்தது, ஆகவே சேர்பியர்களின் கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவது சாகிரப் ஆட்சியின் ஒரு பிரதான இராணுவ நோக்கமாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சி அதனது ட்ரக்குகளை இப்பாதையினூடு அனுப்ப முடியாமல் இருந்தபோது, கிப்சன் குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் கொய்கோ சுசாக்கிற்கு (Gojko Susak) ஒரு நேரடி அழைப்பு விட்டார். முன்னைநாள் கனேடிய பிற்சா (pizza) தொழிலதிபரான இம் மனிதர், தனது தாய்நாட்டுக்கு 1980களின் இறுதியில் திரும்பியதுடன், ருஜ்மனின் தேர்தலுக்கு நிதியிடுவதற்கு தனது செல்வத்தை பயன்படுத்தியதுடன் அவரது இரட்டை கொள்கையான கம்யூனிச விரோதத்தையும், “மகத்தான குரோஷியாவிற்கான” போராட்டத்தையும் முன்னெடுத்தார். ஹேர்ஸகோவினாவின் குரோஷிய சிறுநிலப்பரப்பை அடித்தளமாகக் கொண்டுள்ள அவர், ருஜ்மனின் குரோஷிய ஜனநாயகக் கூட்டின் மிகுந்த பாசிச போக்கினது அறியப்பட்ட தலைவராவர்.

1994 ஜனவரி 10 என திகதியிடப்பட்ட அவரது கடிதத்தில் கிப்சன், ருஷ்லாவுக்கான தொழிலாளர் புரட்சி கட்சியின் “மனிதாபிமான உதவி எடுத்துச் செல்லலுக்கான பாதையை சரிசெய்யுமாறு HVO படைகளிடம்” (பொஸ்னியா-ஹேர்ஸகோவினாவில் உள்ள குரோஷிய தேசியவாத இராணுவக் குழு, இதன் தலைவர்கள் யுத்த குற்றவாளிகளாக இன அடையாளங் காணப்பட்டுள்ளனர்) கட்டளையிடுமாறு சுசாக்கிடம் அழைப்புவிட்டார். இது பொஸ்னிய சேர்பியர்களுக்கு எதிராக, ஒரு தாக்குதலை முன்னெடுக்குமாறு குரோஷிய ஆட்சியிடம் நேரடி அழைப்பு விடுவதை உள்ளடக்கி இருந்தது. இது அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தினால் இத்தகைய ஒரு தாக்குதலை மேற்கொள்ளுமாறு சாகிரப்புடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் இருந்து ஒரு வருடம் முன்பே இடம்பெற்றுள்ளது.

தற்போது ருஷ்லா, அமெரிக்க இராணுவத்தினது தலைமை அலுவலகமாக மாறியுள்ளது. தொழிலாளர் புரட்சிக் கட்சியும், அமெரிக்க இராணுவமும் தங்களது நடவடிக்கைகளுக்கான மைய இடமாக இந்நகரத்தை தேர்ந்தெடுத்தது தற்செயலாக ஒருங்கிணைந்த சம்பவங்கள் அல்ல. ருஷ்லாவை நோக்கிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வழி நடத்துகை, இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான ஏஜன்டான குரோஷிய ஆட்சியுடனான அதனது உறவுகளின் பகுதி விளைவாய் உருவானதாகும். தற்போது தொழிலாளர் புரட்சிக் கட்சி, ஏகாதிபத்திய படைகளை வெளியேற்றுவதற்கான போராட்டத்திற்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்தும் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளுமா? ஒருவரும் தமது மூச்சை பிடித்துக்கொள்ள தேவையில்லை. இது அத்தகையதொரு சுலோகத்துக்கு வாயளவில் சேவை செய்ய தேர்ந்தெடுத்தாலும் கூட, இது அர்த்தமற்றது. கடந்த மூன்று வருடங்களான தொழிலாளர் புரட்சி கட்சியின் அரசியல் தலையீட்டினது முழு உள்ளடக்கமும், ருஷ்லாவினுள் அமெரிக்க டாங்கிகள் நகர்வதற்கான பாதையை தயார் செய்ததே.

சுலோட்டரின் “உண்மையான தீர்வு”

குரோஷிய சோவினிசத்துக்கான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் விமர்சனம் அற்ற ஆதரவு, அது தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிற்போக்கு அரசியல் சூழலில் கூட, சந்தேகங்களை எழுப்பியுள்ளமை வெளிப்படையாகின்றது. “பால்கன் மக்களுக்கான ஒரு உண்மையான அரசியல் தீர்வு” என தலைப்பிடப்பட்ட ஒரு பிரசித்திபெற்ற ஆசிரிய தலையங்கத்தை வேர்க்கஸ் பிரஸ் தாங்கி வந்தது. இவ் ஆசிரியத் தலையங்கத்தின் மீதான உள் விமர்சனத்துக்கு பிரதிபலிப்பாக, இப் பகுதி “பெரும்பாலும் என்னால் எழுதப்பட்ட குறிப்புகளை அடித்தளமாகக் கொண்டது” என சுலோட்டர் பின்னர் அறிவித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுக்கான அரசியல் பொறுப்பை, கட்சியின் செயலாளர் உரிமைகோருவது, மிக மிக அரிதான ஒரு நிகழ்வாகும். சுலோட்டர் வேலைசெய்யும் முறையுடன் பரீட்சயமான எவருக்கும், அவர் தனது அழுக்கு வேலைகளை ஏனையவர்களை செய்யவிடுகின்ற அதேவேளையில், தான் அரசியல் பல்பொருள்படும் தன்மையின் தோற்றத்தை பேணிக்கொண்டு, சாதாரணமாக திரைமறைவில் வேலைசெய்கின்றவர் என்பதை அறிவார்கள்.

தற்போது சுலோட்டர், தொழிலாளர் புரட்சிக் கட்சியினது நிலைப்பாட்டிற்கு தனிப்பட்ட பொறுப்பை பிரகடனப்படுத்துகின்றார். யாருக்கு இவ் அறிவிப்பு வழிநடத்தப்படுகிறது? திட்டவட்டமாக தொழிலாள வர்க்கத்துக்கு அல்ல. அவர் ஆளும் வர்க்க வட்டாரங்களுக்கு, யுத்த காலகட்டங்களில் கிளீவ் சுலோட்டரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமென்பதை தெரியப்படுத்த விரும்புகின்றார். “ருஜ்மனின் குரோஷியப் படைகளின் இராணுவத் தாக்குதல், பொஸ்னியப் போராட்டத்துக்கான மிகவும் சாதகமான இராணுவ நிலைமையை சிரஷ்டிக்கிறது என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை” எனப் பிரகடனப்படுத்தி, சுலோட்டர் கிராஜினா தாக்குதல் பற்றிய வேர்க்கஸ் பிரசின் நிலைப்பாட்டை தழுவிக்கொள்கிறார். எப்படியாயினும் அவர் பின்வருமாறு சேர்க்கிறார், “இறுதி ஆய்வுகளில் பால்கன் நெருக்கடிக்கு எந்த இராணுவத் தீர்வும் கிடையாது என்பதை இனங்கண்டு கொள்வது இன்னும் பாரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரேயொரு தீர்வு, அரசியல் ரீதியானது மட்டுமே”.

நிச்சயமாய் கிளின்ரனும், கோலும் கிராஜினாவில் அவர்களால் பின்னாதரவு வழங்கப்பட்டு வழிநடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலும், பொஸ்னியாவிலான நேட்டோ ஆகாயத் தாக்குதலும் “இறுதி ஆய்வுகளில்” ஒரு திட்டவட்டமான அரசியல் முடிவான: பால்கனை புதிய செல்வாக்குப் பிராந்தியங்களாக பிரிப்பதிலான ஒரு உடன்பாட்டை, அடைவதற்கான வெறும் கருவிகளே என்பதை ஒத்துக்கொள்வர். இம் முடிவுக்குத்தான், கிளின்டன் நிர்வாகம் மிலோசவிக், ருஷ்மன், இசட்போகோவிக்கை டேற்றனில் உள்ள ஓகியோ ஆகாய படைத்தளத்தில் தணிந்து போகச் செய்துள்ளது. (Wright-Patterson Air Force base)

இத்தீர்வு, “பொஸ்னியா-ஹேர்ஸக்கோவினா, சேர்பியா, குரோஷியாவின் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தமட்டில் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது” என எழுதுமளவிற்கு வேர்க்கஸ் பிரசின் ஆசிரியத் தலையங்கம் செல்கின்றது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம், யூகோஸ்லாவியாவை இன அடிப்படையிலான அரச துண்டுகளாக பிளவுபடுத்துவதற்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் அன்றி, யூகோஸ்லாவியாவை இன அடிப்படையிலான அரச துண்டுகளாக பிரிப்பதாலேயே ஏற்படுகின்றது. நேட்டோவின் ஆதரவுடன் சாதிக்கப்படும் இச் “சுயாதீனம்” தொழிலாள வர்க்கத்தை, ஒவ்வொரு முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசிலும் உள்ள முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களினதும், முதலாளித்துவ தேசிய வாதிகளதும் ஆளும் கன்னைகளது பிரிவினைவாத வேலைத்திட்டங்களுடன் கட்டிப் போடுகின்றது.

“பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்துடன் அணிதிரளல்”

இப் பிற்போக்கு அரசியல் தீர்வினை முன்வைத்த வண்ணம், குரோஷியாவினாலும் அதனது வெளிநாட்டு பின்னணியாளர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகளுக்கான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஆதரவை சுலோட்டர் மீள வலியுறுத்துகின்றார். “பால்கனிலான யுத்தத்தில் ஏதாவது ஒரு கன்னைக்கு ஆதரவு கொடுக்கவேண்டியதன்” அவசியத்தை பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வாறு செய்யத் தவறுவது, “பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்துடன் அணிதிரள்வதை” குறிக்கின்றது என்கிறார். பொஸ்னிய சேர்பியர்களின் மீது நேட்டோ குண்டு வீச்சு இடம்பெற்றபோது, பிரிட்டிஷ் யுத்த விமானங்கள் இணைந்துகொண்ட வேளையில், சுலோட்டர் இவ் ஆளும் வர்க்கத்துடன் அணிதிரண்டு காணப்பட்டார். அவர் இவ் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆதரவளித்ததுடன் மட்டுமன்றி, அவரும் தொழிலாளர் புரட்சிக் கட்சியும் பகிரங்கமாக இதற்கு அழைப்பும் விட்டனர்.

“பொஸ்னியாவின் பாதுகாப்புக்கான இரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும்” டவுன் ஸ்ட்ரீட்டிலான “நிறுத்தாத மறியல் போராட்டமும்” “பிரிட்டனிலான நிலமையில் ஒரு உடைவு” என ஆசிரிய தலையங்கம் குறிப்பிடுகின்றது. இவ் ஆர்ப்பாட்டங்களின் அரசியல் நோக்கம், பிரிட்டனும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் சேர்பியர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுவதாகும். சுலோட்டர் தொடர்கிறார், “ 'தனியே தொழிலாள வர்க்கம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும்' போன்ற வெற்று அருவங்களுடன் (invoke empty) திருப்திப்பட்டுக் கொண்ட இடதுகளைப் போலல்லாது, நாங்கள் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடிக்கு திட்டவட்டமானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டை முன்னெடுத்தோம்”

தொழிலாள வர்க்கம் மாத்திரமே “நெருக்கடியைத் தீர்க்க முடியும்” என்ற கருத்துப்பாடு மார்க்சிச இயக்கத்தினது ஒரு மூலோபாய தகவமைவாகும் – அதாவது முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுவதை நோக்கமாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் ஐக்கியத்தையும் சாதிப்பதற்கான போராட்டத்துக்கு வெளியே யுத்தமும் பிற்போக்கும் தோற்கடிக்கப்பட முடியாது. சுலோட்டருக்கு இம் முன்னோக்கு “வெற்று அருவமாக” மாறியுள்ளது. அவரது தொழிலாளர் புரட்சிக் கட்சி, குரோஷியப் படைகளும் நேட்டோ குண்டு வீச்சு விமானங்களும் சம்பந்தப்பட்டுள்ள மிகவும் திட்டவட்டமான முறைகளுக்கு ஆதரவளிக்கின்றது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாட்டின் அரசியல் தர்க்கவியல்

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், சுலோட்டரும், அவரது ஆதரவாளர்களும் அனைத்துலகக் குழுவுடனான உடைவில் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பிரச்சனைகளை ஆய்வு செய்யவோ, தொழிலாளர் புரட்சி கட்சியின் சொந்த வரலாற்றை ஒரு விமர்சன ரீதியிலான மதிப்பீடு செய்யவோ மறுத்தனர். அவர்கள் அத்தகைய எந்த ஆய்வினையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, கட்சி நெருக்கடிக்கான முழுப் பொறுப்பையும் ஜெரி கீலி என்ற ஒரு தனி மனிதனின் நடவடிக்கையுடன் இணைத்தனர். சுலோட்டர் ஒரு அரசியல் ஆய்வினை மறுத்த அதேவேளையில், பின்வந்த தொழிலாளர் புரட்சிக் கட்சியினது ஏகாதிபத்தியத்தை நோக்கிய பாய்ச்சலுக்கு ஒரு தெளிவான அரசியல் தர்க்கவியல் உண்டு. 1970கள் 1980களில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவுக்கும், 1995ல் நேட்டோவிற்கான அதனது ஆதரவுக்கும் இடையே, ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டினது தொடர்ச்சி காணப்படுகிறது.

உடைவிற்கு முன்னய காலகட்டத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியினது அரசியல், பல்வேறு முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களையும், ஆட்சிகளையும் நோக்கிய சந்தர்ப்பவாத அடிபணிவினால், அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும், கேர்ணல் கடாபியினது லிபிய ஆட்சியையும் ஏனையவற்றையும் –அதேபோல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை அவர்களுடன் மேற்கொண்ட வணிக உறவுகளும்– துதிபாடியமையில் கட்சியினது வர்க்க அடித்தளத்திலான நகர்விற்கும், மேலும் பல பிரச்சனைகளில் சந்தர்ப்பவாத வழிநடத்துகைக்கும் அடித்தளமாக இருந்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி, இவ் இயக்கங்களுக்கு அவை ஒருபோதும் கொண்டிராத புரட்சிகர ஆற்றலை அவைக்கு இருப்பதாக காட்டிய அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை புறக்கணித்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தேசிய பிரச்சனைகள் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச புரட்சியின் வரையறைக்கு உள்ளே மட்டுமே தீர்க்கப்பட முடியும் என ஸ்தாபித்த, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை இது முற்றாக நிராகரித்தது.

சுலோட்டரின் பொஸ்னிய சாகசம், அம் முன்னோக்கினது அவசியமான தொடர்ச்சியே எனினும், இது அப்பழைய நோயின் ஒரு முன்னேறிய வெளிப்பாடாகும். இவ் இடைப்பட்ட தசாப்தம், தேசிய இயக்கங்களிலும் அதேபோல் தொழிலாளர் புரட்சி கட்சியிலும் ஒரு பண்பு ரீதியான சீரழிவினை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு முன்னய காலகட்டத்தில் PLO வும் அதையொத்த இயக்கங்களும் தங்களது “தேசிய சுயநிர்ணய உரிமைக்கான” கோஷத்தை ஒரு குறிப்பிடக் கூடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் இணைத்துக்காட்ட முற்பட்டதுடன், இவ் உரிமை ஆயுதப் போராட்டத்தினூடு மட்டுமே வெல்லப்பட முடியும் என பிரகடனப்படுத்தினர்.

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளது வீழ்ச்சியின் பின்னர், இவ் இயக்கங்கள் அவற்றின் புரட்சிகர நடிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏகாதிபத்திய தீர்வினை திணிப்பதில் இளைய பங்காளிகளாகவும், பூரண பொலிஸ் முகவர்களாகவும் தாங்களாகவே தொழிற்படுகின்றனர்.

இதற்கு முன்னைய ஒரு காலகட்டத்தில் புரட்சிகர தேசிய இயக்கங்களை இயல்பாக்கம் செய்த பிரபஞ்ச ரீதியான இயல்பையும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எழுச்சியையும் எவ்விதத்திலும் கொண்டிராத புதிய இயக்கங்கள், “சுயநிர்ணய உரிமையின்” சாதனையாளர்களாக எழுந்துள்ளன. முன்னாள் யூகோஸ்லாவியாவில் இருந்து கியூபெக், இந்தியாவரை இவ் இயக்கங்கள், தாங்கள் இன, மொழி பிரிவினைகளை அடித்தளமாகக் கொள்வதுடன், உள்நாட்டு முதலாளித்துவ குழுக்களின் நலன்களின் பேரில் புதிய அரசுகளை பிரித்தெடுப்பதற்கு, ஏகாதிபத்தியத்தின் ஆதரவை வென்றெடுக்க முயற்சிக்கின்றனர்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி சம்பவங்களால் தகமையை இழந்துபோன, ஒரு முன்னைநாள் அரசியல் நிலைப்பாட்டை பிரயோகித்துக் கொண்டு, தன்னை இத்தகைய இயக்கங்களுடனேயே இணைத்துக் கொள்கிறது. பால்கனிலோ அல்லது வேறு எங்குமோ தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு இயல்பாகவே முற்போக்குத் தன்மை கிடையாது. முதலாளித்துவத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டுகொள்வதற்கு, தொழிலாளர் இயக்கத்தின் பழைய தலைமைகளின் இயலாமையின் ஒரு உபவிளைவாய் இது உருவாகியிருப்பினும் கூட, இது பிற்போக்கானதே. முன்னாள் யூகோஸ்லாவியாவில் மிகவும் குறிப்பாய் இதுதான் நிலைமை. 1970களில் கூட தொழிலாளர் புரட்சி கட்சி மத்திய கிழக்கில் தேசியவாத இயக்கங்களுக்கான அதனது சந்தர்ப்பவாத அடிபணிவினை ஆரம்பித்திருந்த வேளையில், சுயநிர்ணய உரிமை சுலோகமானது முதலாளித்துவ வாதிகளின் ஒரு பகுதியினருக்கான அதனது அடிபணிவினை மூடிமறைப்பதற்கே பயன்பட்டது. தற்போது இது, கட்சியினது நடவடிக்கைகளை ஏகாதிபத்தியத்தின் தேவைகளுடன் நேரடியாகப் பிணைப்பதற்கான ஒரு மார்க்கமாக மாறியுள்ளது.

சாக்ட்மனும் சுலோட்டரும்

அனைத்துலகக் குழு அதனது மே 1994 அறிக்கையான மார்க்சிசமும், சந்தர்ப்பவாதமும் பால்கன் நெருக்கடியும் என்பதில், பால்கனிலான தேசியவாத சக்திகளுக்கும், ஏகாதிபத்தியத்துக்குமான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஆதரவினை சுட்டிக்காட்டி, இது பிரிட்டனிலும் இதையொத்த பாத்திரத்தை சிறப்பாக வகிக்க முடியுமென எச்சரிக்கை செய்தது. இவ் அறிக்கை தொழிலாளர் புரட்சிக் கட்சியினைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது, “எதிர்காலத்தின் சில நிலைமைகளில் இது தேசிய மீட்சிக்கான ஒரு முதலாளித்து கூட்டரசாங்கத்தின் ஒரு அங்கமாக வரக்கூடும்”.

இப் பத்திரத்துக்கான தனது பதிலில் தொழிலாளர் புரட்சிக் கட்சி, அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கையை “அதிசயிக்கத்தக்கது” என நிராகரித்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்குள் சுலோட்டரும் அவரது ஆதரவாளர்களும் பால்கனிலான ஒரு பாரம்பரிய ஏகாதிபத்திய பிரிவினைக்கு நேரடியான ஒரு ஆதரவினை வழங்கிக்கொண்டுள்ளதுடன், இதில் இப் பிராந்தியத்தினது மக்களது தலைவிதி, ஒரு சிறு மாற்றத்துக்கே உட்படுவதாக குறிப்பிடுகின்றனர். தொழிலாளர் புரட்சிக் கட்சியினது கொள்கையில் உள்ள ஒவ்வொரு விடையமும், அதனை வந்துகொண்டுள்ள வருடங்களுக்கு துன்பகரமான விளைவுகளை கொண்டுள்ள ஒரு திட்டத்தின் கேடுகெட்ட பங்காளியாக்குகின்றது.

நான்காம் அகிலத்துடனான அவரது சொந்த உடைவின் 10 வருடங்களின் பின்னர், மக்ஸ் சாக்ட்மன் (Max Shachtman) கொரியாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தத்திற்கு பகிரங்கமாக ஆதரவளித்தார். இது அவர் ஏகாதிபத்திய முகாமிற்குள் திட்டவட்டமாக நுழைந்ததை குறித்து நின்றதுடன், இதிலிருந்து அவர் ஒரு போதும் திரும்பிப் பார்க்கவில்லை. சாக்ட்மனால் வழிநடத்தப்பட்ட போக்கு, அதிதீவிர கம்யூனிச விரோத வழிகளில் அபிவிருத்தி அடைந்ததுடன், அமெரிக்க வெளிவிவகாரத் துறைக்கும், AFL-CIO அதிகாரத்துவத்திற்கும் ஒரு தொகை ஆலோசகர்களை உருவாக்கியது. இறுதியில் சாக்ட்மனிசம், றேகன் நிர்வாகத்திற்கான பிரதான கருத்தியல் பாதுகாவலர்களை பிறப்பித்தது. சுலோட்டர், அவரது பொஸ்னிய பிரச்சாரத்துடன் இத்தகைய பாதையிலேயே திரும்பியுள்ளார்.

எவ்வாறு சாக்ட்மனின், குட்டிமுதலாளித்துவ ஒழுக்க நெறியின் அரசியல் அவரை 45 வருடங்களுக்கு முன்னே கொரியாவில், ஸ்ராலினிசத்துக்கு எதிராக “ஜனநாயகத்திற்கு” ஆதரவளிக்க இட்டுச் சென்றதோ, அவ்வாறே சுலோட்டரின் “புரட்சிகர ஒழுக்க நெறியின்” கொள்கை, குட்டி முதலாளித்துவ இடதுகளின் ஒரு முழுத்தட்டுடன் இணைந்த விதத்தில், பால்கனில் நேட்டோவின் பின்னே அணிவகுக்க இட்டுச் சென்றுள்ளது. இப் போக்கினது வலது நோக்கிய நகர்வு, பிரமாண்டமான சமூகப் போராட்டங்களை முன்னறிவிக்கிறது. இது ஒரு உலக அளவில், முதலாளித்துவத்துக்கும் பாட்டாளிகளுக்கும் இடையே புரட்சிகர முகங்கொடுத்தலுக்கு தளம் தயார் செய்யப்படுவதை குறித்து நிற்கின்றது.

ஒரு பக்கத்தில் மார்க்சிசத்துக்கும், மறுபக்கத்தில் குட்டி முதலாளித்துவ தீவிர வாதத்தினதும், எதிர்ப்பு அரசியலினதும் நோய்பிடித்த சந்ததிக்கும் இடையிலான பிரிகோடு முன்னெப்போதும் இல்லாத விதத்தில் உறுதியாக உள்ளது. அனைத்துலகக் குழு, இவ் அரசியல் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை அம்பலப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் கைவிடாமல் இருப்பதுடன், இவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தினுள் உண்மையான சோசலிச சர்வதேச தலைமையை மேலும் அபிவிருத்தி செய்யும். தொழிலாள வர்க்கம் யூகோஸ்லாவிய நெருக்கடியின் பாடங்களை உள்ளீர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகின்ற அனைவரது வர்க்க நலன்களின் பேரில் அழைப்பு விடுக்க சக்தியுள்ளதும், இவ்விதத்தில் அவர்களை தேசிய, இன, இனத்துவ அல்லது மத அடிப்படையில் பிரிப்பதற்கான முயற்சிகளை கடக்கக் கூடியதுமான ஒரு புதிய சர்வதேச கட்சி கட்டியமைக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே இந்தப் பணியை முன்னெடுக்கிறது.