ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nineteen sentenced to death over 2004 grenade attack in Bangladesh

பங்களாதேஷில் நடந்த 2004ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 19 பேருக்கு மரண தண்டனை

By Rohantha De Silva 
20 October 2018

பங்களாதேஷில், தற்போது பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 2004ம் ஆண்டில் அவர் நடத்திய ஒரு அரசியல் பேரணி மீதான வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் ஏற்பட்ட இறப்புகள் குறித்து பங்களாதேஷ் தேசிய கட்சியுடன் (Bangladesh National Party-BNP) தொடர்புடைய 19 பேருக்கு தண்டனைகளை விதித்து, அக்டோபர் 12 அன்று, பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு, தாக்குதல் நடந்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதிகரித்துவரும் மோதல்களுக்கு மத்தியில் தற்போது வெளிவந்துள்ளது. ஹசினாவின் அவாமி லீக் தலைமையிலான அரசாங்கம், எதிர்க்கட்சியான BNP ஐ முடக்கவும், அதன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் மிரட்டவும் முனைந்து வருகிறது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு டசின் பேர் கொல்லப்பட்டதுடன், ஹசினா உட்பட சுமார் 300 பேர் காயமடைந்தனர். நீதிபதி ஷாஹேத் நூருதின் தனது தீர்ப்பில், அவாமி லீக் கட்சியின் தலைவரைக் கொல்வது தான் இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தண்டனைக்குரியவர்களில், முன்னாள் உள்விவகார அமைச்சரான லுட்ஃபுஸமான் பாபர் மற்றும் தொழில்துறை துணை அமைச்சரான அபுஸ் சலாம் ஆகியோர் அடங்குவர், இவர்கள் இருவருமே முந்தைய BNP அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள். மேலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவரான கலீடா ஸியாவின் மகனான தாரிக் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் வெளிநாட்டில் வசிப்பதனால், ஆஜராகாமல் இருக்க முயற்சித்தார்.

மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஏனையோரில், தடை செய்யப்பட்ட ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத குழுவான ஜர்கத்-உல்-ஜிகத் இன் குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்கள் அடங்குவர். ஏனைய பதினேழு பேர் ஆயுள் தண்டனைப் பெற்றுள்ளனர். மேலும், மற்றொரு பதினோரு பேர், ஆறு மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால அளவிலான சிறை தண்டனைகளைப் பெற்றுள்ளனர்.

ஆளும் கட்சியான அவாமி லீக் இந்த முடிவை வரவேற்றது, ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்களோ அவர்களது குற்றமற்றத்தன்மை பற்றி தெரிவித்து தீர்ப்பை எதிர்த்தனர். BNP இன் பொது செயலாளரான, ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், இந்த தீர்ப்பும் தண்டனைகளும் அவாமி லீக் கட்சியினால் ஒத்தூதப்பட்டதான “அரசியல் பழிவாங்கலின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும்” எனக் கூறினார்.

இது, அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதல்கள் என்பதையும், அதற்குப் பின்னால் குற்றம் இருந்திருக்கலாம் என்பதையும் BNP அறியும். என்றாலும், இந்த ஆண்டு அல்லது 2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முன்னணி வகிப்பதில், அதன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் துடைத்தெறிவதான அவாமி லீக் கட்சியின் முயற்சிகளாகவே இந்த கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கடந்த பிப்ரவரியில், ஜோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கலீடா ஸியா வுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பல மருத்துவ பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, இப்போது ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். BNP இன் மிக முக்கிய பிரமுகர்களான, கலீடாவும் அவரது மகன் ரஹ்மானும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளினால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹசினா அரசாங்கம் அதிகரித்தளவில் எதேச்சதிகார வடிவத்திற்கு திரும்பும் நிலையில், ஆளும் உயரடுக்கிற்குள்ளான மோதல்கள் எழுகின்றன. சமூக பதட்டங்கள் அதிகரிப்பதற்கு மத்தியில், ஊடகங்களை நசுக்கவும், எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கவும் இது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஒரு புதிய இலத்திரனியல் (டிஜிட்டல்) பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு நிர்வாகம் தயாராகி வருகிறது, இது மேலும் பத்திரிகை சுதந்திரத்தை பறித்துவிடும் என்பதுடன், இணையவழியில் எதிரொலிக்கும் குரல்களை ஒடுக்கிவிடும். இந்த இலத்திரனியல் பாதுகாப்புச் சட்டம், நாட்டின் ஜனாதிபதி அப்துல் ஹமீது மூலம் அக்டோபர் 8 அன்று அங்கீகரிக்கப்பட்டது. புதிய பல அடக்குமுறை நடவடிக்கைகளைக் கொண்ட கொடூரமான காலனித்துவ-சகாப்த உத்தியோகபூர்வ இரகசிய சட்டம் என்பதுடன் இதுவும் ஒருங்கிணைகிறது.

“இலத்திரனியல் வெளியையும் சமூகத்தையும் பாதுகாக்க” இந்த சட்டம் அவசியமாக இருந்தது என தகவல்துறை அமைச்சர் ஹசானுல் ஹக் இனு கூறினார். மேலும், “இந்த சட்டம் வெகுஜன ஊடகங்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல” என்றும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களும் மனித உரிமை குழுக்களும் இந்த வலியுறுத்தல்களை நிராகரித்தன. இதனை “கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீதான ஒரு ஆபத்தான கட்டுப்பாடு” என முத்திரைகுத்தி, இணையவழி அரசியல் விவாதங்களை மட்டுப்படுத்தவும், எதிர்ப்பை முறியடிக்கவும் இந்த சட்டமியற்றல் பயன்படுத்தப்படக் கூடுமென சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்தது. 

டாக்கா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆசியா நஜ்ருல், ஒரு பங்களாதேஷ் செய்தித்தாளான Prothom Alo விடம், “பங்களாதேஷின் ஜனநாயகம் என்ற பெயரிலான இருண்ட காலத்தின்” ஒரு வெளிப்பாடாக இந்த சட்டங்கள் இருக்கின்றன என தெரிவித்தார்.

சட்டப் பிரிவு 25(a) இன் கீழ், “தீவிரமான அல்லது அச்சுறுத்தும்” தகவல்களைப் பரப்பும் தனிநபர்களுக்கு மூன்றாண்டுகள் வரையிலான சிறை தண்டனைகளை வழங்கலாம். மேலும், “இனவாத ஒற்றுமையை அழிக்கும் அல்லது ஸ்திரமற்றத் தன்மையை அல்லது ஒழுங்கின்மையை அல்லது இடையூறுகளை உருவாக்கும், அல்லது சட்டம் அல்லது ஒழுங்கு நிலைமை சீர்குலைக்கும் வகையிலான இடையூறுகளை விளைவிக்கும்” தகவல்களை பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைகளை சட்டப் பிரிவு 31 வழங்குகின்றது. 

ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பர்மா, கம்போடியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கு பின்னால், உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் (world press freedom index) எல்லைகளற்ற செய்தியாளர்களின் கணிப்பின் படி பங்களாதேஷ் 146வது இடத்தில் உள்ளது. இந்த குறியீடு தொடங்கப்பட்டபோது, 2002 இல் 118வது இடத்தில் இது இருந்தது.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அறிக்கைகளும் மறைந்து போய் கொண்டிருக்கின்றன. “வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கட்டாயமாக காணாமற்போக நிர்ப்பந்திக்கப்படலாம் என்ற பயம் தற்போது நிலவுவது யதார்த்தமே” என்று டாக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவான ஒடிஹிகார் கருத்து தெரிவித்தது.

இந்த மாதம் ஒடிஹிகார் வெளியிட்ட ஒரு அறிக்கையில், செப்டம்பரில் அரசியல் காரணங்களுக்காக மட்டும் சட்ட அமலாக்க அமைப்புகள் 30 பேரை பிடித்துவைத்துள்ளது, ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 28 ஆக இருந்ததில் இருந்து ஒரு கூர்மையான அதிகரிப்பாக இது இருந்தது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் இறந்துகிடந்தனர், மற்றும் ஒருவர் காணமல் போய்விட்டார், அதே வேளையில் 26 பேர் கைது செய்யப்பட வேண்டும் என்பது தாமதமாக உறுதிசெய்யப்பட்டது. எதிர்க்கட்சியின் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் கூட தடைசெய்யப்பட்டு வருகின்றன.  

ஆகஸ்ட் 5 அன்று, ஒரு முக்கிய புகைப்பட பத்திரிகையாளரான, ஷாஹிதுல் ஆலம், Al Jazeera ஊடகத்திற்கு பேட்டியளித்தது குறித்து கைது செய்யப்பட்டார், இப்பேட்டியில், “மிருகத்தனமான பலம் கொண்டு” அதிகாரத்தை இறுகப் பற்றுவதாக அரசாங்கத்தை அவர் குற்றம்சாட்டியுள்ளார். பத்திரிகையாளர்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையையும் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists and Amnesty organizations) உட்பட 25 மனித உரிமை அமைப்புகள் இருக்கின்ற போதிலும், ஷாஹிதுல் இன்னமும் கம்பிகளுக்கு பின்னால் இருக்கின்ற நிலையில், அனைத்து அமைப்புகளும் அவரை விடுவிக்கக் கோரி ஒரு அறிக்கையை விடுத்துள்ளன.

சாதாரண மக்களிடையே வளர்ந்து வரும் இந்த அதிருப்தி சமூக வெடிப்பைத் தூண்டும் என்று அவாமி லீக் அரசாங்கம் அஞ்சுகிறது. அதனால் தான், அரசாங்க வேலைகளில் நுழைவதற்கான ஒதுக்கீடுகளில் மாற்றங்களை நாடி, ஜூலையில், பல்கலைக்கழக மாணவர்களும், வேலையில்லா பட்டதாரிகளும் நடத்திய ஆர்ப்பாட்டங்களை இந்த அரசாங்கம் மிருகத்தனமாக நசுக்கியது. 

மோசமான வேலை நிலைமைகள் மற்றும் குறைவூதியங்கள் குறித்து நாட்டின் 40 மில்லியன் ஆடைத் தொழிலாளர்கள் மத்தியிலான கோபமும் கூட அதிகரித்து வருகிறது. டாக்காவில் கடந்த மாதம், குறைந்தபட்ச மாத ஊதியமாக 16,000 டாக்கா (189.63 அமெரிக்க டாலர்) வழங்க வேண்டுமெனக் கோரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால், அதிகபட்ச-சுரண்டலை அடிப்படையாக வைத்து, உலகளாவிய ரீதியிலான போட்டியில் அவர்களது தொழில்களை தக்கவைத்துக் கொள்ள முடிகிறதா என்பதை உறுதிப்படுத்த முனைந்து, அரசாங்கமும் முக்கிய வேலை வழங்குநர்களும் இந்த கோரிக்கைகளை நிராகரித்தனர். 

தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் போராட்டங்களுக்கு எதிராக அரசின் முழு அதிகாரத்தை கட்டவிழ்த்து விட இது தயாரிப்பு செய்து வருகிறது என்பதை மேலும் எச்சரிப்பதாகவே அரசாங்கத்தின் அதிகரித்துவரும் எதேச்சதிகார நடவடிக்கைகள் உள்ளன.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்: