ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bavaria state election delivers major blow to Germany’s grand coalition

பவேரிய மாநில தேர்தலில் ஜேர்மனியின் மகா கூட்டணிக்கு மிகப்பெரிய தாக்குதலை கொடுத்துள்ளது

By Johannes Stern
15 October 2018

ஞாயிறன்று நடத்தப்பட்ட பவேரிய மாநில தேர்தல் முடிவுகள், ஜேர்மனியை ஆளும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) இன் மகா கூட்டணிக்கு ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும். பழமைவாத ஒன்றியம் (CDU மற்றும் CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சியும் (SPD) போருக்குப் பிந்தைய காலத்தில் செப்டம்பர் 2017 பொது தேர்தலில் அவற்றின் படுமோசமான வாக்குகளைப் பெற்ற பின்னர், இந்தாண்டு நடத்தப்பட்ட இந்த முதல் மாநில தேர்தலில், வாக்காளர்கள் இந்த அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளுக்கு அவர்களின் எதிர்ப்பை காட்டியதால், இந்த கட்சிகள் மொத்தமாக 21 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்து, இன்னும் மோசமான தோல்வியைத் தழுவின.

1957 க்குப் பின்னர் இருந்து பவேரிய மாநிலத்தில் ஆட்சி செய்து வந்துள்ள CSU, வெறும் 37.3 சதவீத வாக்குகளே பெற்று, ஓர் அறுதிப் பெரும்பான்மைப் பெற தவறியது. இது 1950 க்குப் பின்னர் அதற்கு கிடைத்துள்ள படுமோசமான வாக்கு எண்ணிக்கையாகும். கடைசியாக 2013 இல் நடந்த மாநில தேர்தலில் அக்கட்சி 47.7 சதவீத வாக்குகள் வென்றிருந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி வெறும் 9.5 சதவீத வாக்குகள் பெற்று CSU ஐ விட அதிக வாக்குகள் இழந்திருந்தது, இது 11.1 சதவீத வீழ்ச்சி என்பதோடு, போருக்குப் பிந்தைய ஒரு மாநில தேர்தல் வரலாறில் இது அதன் படுமோசமான வாக்கு எண்ணிக்கையாக உள்ளது. கூட்டாட்சி மட்டத்தில், சமூக ஜனநாயகக் கட்சியினர் இப்போது கருத்துக்கணிப்புகளில் வரலாற்றிலேயே மிகக் குறைவாக 15 சதவீதத்தில் நிற்கின்றனர்.

“எங்களால் வாக்காளர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை, இது கசப்பான விடயம் தான்,” என்று தேர்தல் நாளன்று இரவு சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ் வெளிப்படையாக குறைபட்டுக் கொண்டார். பேர்லினில் "மகா கூட்டணியின் மோசமான செயல்பாடு" இந்த அவமானகரமான தேர்தல் முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறதாம். CDU இற்கும் CSU இற்கும் இடையிலான அரசியல் மோதல்களில் இருந்து சமூக ஜனநாயகக் கட்சி தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பவேரியாவின் தேர்தல் முடிவானது, SPD இன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாகத்தில் நிலவும் ஆழ்ந்த வெறுப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த கட்சி தான், மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் மூழ்கடித்து ஐரோப்பாவில் மிகக் குறைந்த குறைவூதிய துறையை உருவாக்கிய சமூக-விரோத திட்டநிரல் 2010 கொள்கையை அறிமுகப்படுத்தியது. மிக வலதுசாரி சக்திகளது ஆதரவை அடித்தளத்தில் கொண்டு, இராணுவவாத கொள்கையைத் தீவிரப்படுத்துவது, பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளைக் கட்டமைப்பது மற்றும் சமூக வெட்டுகள் செய்தல் என இந்த மகா கூட்டணியின் "செயல்பாட்டில்" SPD இன் செயல்பாடுகளும் உள்ளடங்கும்.

கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ஹோர்ஸ்ட் சீகோவர், SPD இன் ஆதரவு இருந்ததினால் மட்டுமே, (வலதுசாரி Afd இன் கொள்கையைப் பெரிதும் அடிப்படையாக கொண்டிருந்த) அவரின் "புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான மாபெரும் திட்டத்தை" செயல்படுத்த முடிந்தது. இதே இது, AfD மற்றும் வலதுசாரி வட்டாரங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றவரும் இப்போதும் உள்நாட்டு உளவுத்துறை முகமை (BND) தலைவராக இருப்பவருமான ஹன்ஸ்-ஜியோர்க் மாஸனுக்கும் பொருந்துகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஆயிரக் கணக்கான நவ-நாஜிக்கள் கெம்னிட்ஸ் நகரில் அணிவகுத்து, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடதுகளை விரட்டியடித்ததுடன், ஒரு யூத விடுதியைத் தாக்கிய போது, மாஸனும் சீகோவரும் அந்த வலதுசாரி கும்பலுடன் ஐக்கியத்தை வெளிப்படுத்தினார்கள்.

சமூக ஜனநாயகக் கட்சி, SPD, அதிவலதுடன் அதன் உறவுகளை இறுக்கி வருவதால் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பவேரியா தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், இரண்டரை இலட்சம் பேர் மத்திய அரசாங்கத்தின் வலதுசாரி திட்டநிரல் மற்றும் AfD மற்றும் எதிர்கட்சிகளை எதிர்த்து போராடுவதற்காக பேர்லின் வீதிகளில் இறங்கினர். 2013 இல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் பவேரியாவில் வாக்குப்பதிவு அண்மித்து 10 சதவீதம் அதிகமாக இருந்தபோதும், இந்த உணர்வு தற்போதுள்ள கட்சி அமைப்புமுறைக்குள் ஒரு குழப்பமிக்க வெளிப்பாட்டை மட்டுமே கண்டது.

இதில் இலாபமடைந்த பிரதான கட்சி பசுமைக் கட்சியாகும். இது ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றதை விட சுமார் 9 சதவீதம் அதிகமாக, 17.5 சதவீத வாக்குகள் பெற்றது. தேர்தல் ஆய்வு அமைப்பு Infratest dimap தகவல்களின்படி, பசுமைக் கட்சிக்கான பிரதான வாக்கு அதிகரிப்பானது SPD (210,000) மற்றும் CSU இன் (180,000) முன்னாள் வாக்காளர்களிடம் இருந்து வந்திருந்தது. இதற்கு கூடுதலாக, முன்னர் வாக்களிக்காத சுமார் 120,000 பேர் இம்முறை அவர்களின் வாக்குகளைப் பசுமைக் கட்சிக்கு வழங்கினர்.

அகதிகள் கொள்கை என்று வருகையில் மற்ற கட்சிகளை விட அது ஆக்ரோஷம் குறைந்தது என்ற கருத்துடன் சிலர் பசுமை கட்சிக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் அவ்வாறிருந்தால் இதுவொரு பிரமையே. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஜேர்மனியின் முதல் இராணுவ தலையீடாக 1999 இல் (யூகோஸ்லோவியாவில்) தலையீட்டை முன்னாள் பசுமைக் கட்சி அமைதிவாதிகள், கடுமையான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஆதரித்த பின்னர், அக்கட்சியும் சமூக மற்றும் அகதி கொள்கை விடயத்தில் வலதுக்கு மாறியது. பசுமைக் கட்சியினர் எங்கேயெல்லாம் அரசாங்கத்தில் இருந்தார்களோ, அவர்கள் அங்கே பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் மற்றும் அகதிகள் மீதான மூர்க்கமான நாடு கடத்தலை ஆதரித்தனர். ஹெஸ்ச மாநிலத்தில், Volker Bouffier (CDU) தலைமையில் CDU மற்றும் பசுமை கட்சியின் கூட்டணி, நாடு கடத்தலில் புதிய செயல்வரலாறை அமைத்துள்ளது. அம்மாநிலம் இந்தாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் அண்மித்து 600 ஆண்கள் மற்றும் பெண்களை நாடு கடத்தி உள்ளது, இது 2017 இன் இதே காலகட்டத்தை விட 50 சதவீதம் அதிகமாகும். ஜேர்மனியின் அடுத்த மாநில தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் ஹெஸ்ச இல் நடக்க உள்ளது.

பவேரியாவில், பசுமைக் கட்சியினர் சீகோவரின் CSU உடன் ஒரு கூட்டணி உருவாக்கி, அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு எதிராக அதன் வலதுசாரி அரசியல் போக்கை செயற்படுத்த முயன்று வருகின்றனர். பவேரியாவின் அக்கட்சியினது முன்னணி வேட்பாளர்கள் லூட்விக் ஹார்ட்மான் மற்றும் கத்தரீனா ஷூல்ஸ்ச இருவருமே, பேர்லினை மையமாக கொண்ட முன்னணி பசுமைக் கட்சி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, CSU உடனான ஒரு கூட்டணிக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். பசுமைக் கட்சியின் பெண் செய்திதொடர்பாளர் பிரான்சிஸ்கா பிரண்ட்னர் வலியுறுத்துகையில், “கூட்டாட்சி மட்டத்தில் ஜமைக்கா கூட்டணி (பழமைவாதிகள், பசுமை கட்சி மற்றும் நவ-தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சியின் கூட்டணி) மீதான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாங்கள் அதே வழியில் செல்ல தயாராக உள்ளோம், நாங்கள் ஆக்கபூர்வமாக பங்கு வகிக்க விரும்புகிறோம், இந்த முடிவுக் காட்சியில் நாங்கள் SPD ஐ விட மிகவும் தீர்மானகரமாக உள்ளோம்,” என்றார்.

ஆனால் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக, அம்மாநில அளவிலான சுதந்திர வாக்காளர்கள் கட்சியுடன் (Free Voters - FW) இணைந்து நிர்வாகம் அமைக்க CSU முனைந்து வருவதற்கான அறிகுறிகள் இருந்தன. அக்கட்சி 2.6 சதவீதம் கூடுதலாக பெற்று 11.6 சதவீத வாக்குகள் பெற்றன. தேர்தலன்று இரவு பவேரிய முதலமைச்சர் மார்க்கூஸ் ஷோடர் (CSU) அறிவிக்கையில் CSU க்கு "அரசாங்கம் அமைப்பதற்கான தெளிவான ஆணை" கிடைத்துள்ளது, அது சுதந்திர வாக்காளர்கள் கட்சியுடன் ஒரு “மக்கள் கூட்டணி” (civic alliance) அமைக்க முயலும் என்றார். FW தலைவர் கூபேர்ட் ஐவான்கர் அறிவிக்கையில், "ஷோடர் இன் மேசையில் ஓர் ஏற்கத்தக்க முன்மொழிவுகளை" வைக்க இருப்பதாக அறிவித்தார்.

சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) 5.1 சதவீத வாக்குகளுடன் புதிய நாடாளுமன்றத்தில் நுழைகின்ற அதேவேளையில், இடது கட்சி 3.2 சதவீதத்துடன், மாநில பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கான 5 சதவீத வரம்பைக் கூட எட்ட தவறியது. பரவலாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் இடது கட்சி ஒரு மாற்றீடு என்பதை விட ஓர் அரசியல் எதிரியாக பார்க்கப்படுகிறது. SPD உடனோ அல்லது பசுமை கட்சியுடனோ கூட்டணியில் இடது கட்சி ஆட்சி செய்யும் நிர்வாகங்களில், அது நாசகரமான விளைவுகளுடன் சிக்கன கொள்கைகளை நிர்வகிக்கிறது. அகதிகள் கொள்கை விடயத்தில், அக்கட்சி தீவிர வலதுசாரி மற்றும் தேசியவாத கண்ணோட்டங்களை முன்னெடுக்கிறது.

கடந்த வாரம் இடது கட்சியின் நாடாளுமன்ற கன்னை தலைவர் சாரா வாகன்கினெக்ட், பேர்லினில் சனிக்கிழமை நடந்த பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். “அனைவருக்கும் எல்லைகளைத் திறந்து விடுவதைக் குறித்து நாம் பேசினால், பின் பெரும்பாலானவர்கள் அதை யதார்த்தமற்ற மற்றும் முற்றிலும் அன்னியப்பட்ட ஒன்றாக கருதுகின்றார்கள் என்பதையும், அதுபற்றி அவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம்,” என்று விவரித்து, AfD இன் கருத்தை எதிரொலித்தார். அவர் புதிதாக நிறுவிய "எழுந்து நில்” இயக்கம் இனவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்திற்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்க்கும் நோக்கம் கொண்ட ஒரு வலதுசாரி தேசியவாத இயக்கம் என்பதை விட வேறொன்றுமில்லை.

சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு அதிகரிப்பதை குறித்து கவலை கொண்டுள்ள வாகன்கினெக்ட் மற்றும் இடது கட்சி, AfD இன் வலதுசாரி, வெளிநாட்டவர் விரோத பிரச்சாரத்தை ஏற்றுள்ளது. அவர் ஒரு சமயம் AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்டின் பாராட்டையும் வென்றார். பெரிதும் 1933 ஹிட்லர் உரையை மையப்படுத்தி ஒருசில நாட்களுக்கு முன்னர் Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியிட்ட கௌலாண்ட், வாகன்கினெக்ட் ஐ "நியாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பவர்" என்று பாராட்டினார்.

ஜேர்மனியின் ஆளும் உயரடுக்குகளும் அவர்களின் முன்னணி ஊடங்கங்கள் மற்றும் கட்சிகளும் திட்டமிட்டு AfD ஐ ஊக்குவித்து அதன் இழிவார்ந்த கொள்கைகளைச் சட்டபூர்வமாக்குகின்றன என்றாலும், இந்த வலதுசாரி தீவிரவாதிகள் எதிர்பார்த்ததை விடவும் மிகக் குறைவான வாக்குகளே வென்றார்கள். AfD பெற்ற சுமார் 10 சதவீத வாக்குகள் செப்டம்பர் 2017 கூட்டாட்சி தேர்தலில் பவேரியாவில் பெற்ற அதன் மொத்த எண்ணிக்கையை (12.4 சதவீதம்) விட குறைவாக இருந்தது.

ஆனால் இதில் திருப்திப்பட்டுக்கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. பவேரியாவில் எந்த அரசாங்கம் அமைந்தாலும், அது வேறுபாடின்றி வலதை நோக்கி திரும்பும் என்பதோடு AfD இன் வேலைத்திட்டத்துடன் இன்னும் அதிகமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். வலதிலிருந்து வரும் அச்சுறுத்தலை, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். ஆகவே தான் சோசலிச சமத்துவக் கட்சியைக் (SGP) கட்டியெழுப்புவது அதிமுக்கியத்துவமானதாக உள்ளது.