ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A quarter-million protest in Berlin against the grand coalition and the return of fascism

மகா கூட்டணி மற்றும் பாசிசவாதத்தின் மீள்வருகைக்கு எதிராக பேர்லினில் கால்-மில்லியன் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்

By Ulrich Rippert
15 October 2018

அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடுவதற்கு எதிராகவும், இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் இனவாதத்திற்கு எதிராகவும் சனியன்று அண்மித்து 250,000 பேர் பேர்லினில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
 


Potsdamer Platz
இல் நடந்த ஆர்ப்பாட்டம்

 “ஒதுக்கி வைப்பதற்குப் பதிலாக #பிரிக்கவியலா—ஐக்கியம்" என்ற மத்திய கோஷத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட அந்த போராட்டம், சமீபத்திய ஜேர்மன் வரலாற்று போராட்டங்களில் ஒன்றாக இருந்தது.

40,000 பேர் பங்கெடுப்பர் என்ற எதிர்பார்ப்போடு அதை ஒழுங்கமைத்தவர்கள், எதிர்பார்த்ததை விட ஆறு மடங்கு அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதைக் கண்டு மலைத்துப் போயினர். பேர்லினின் Alexanderplatz இல் தொடங்கிய பேரணி நெரிசலில் நிறைந்து வழிந்தது, மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்பகுதி, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா தூணை எட்டியபோது, திட்டமிட்டிருந்த பகுதியை அடைவதற்கு அப்போதும் பலர் ஆரம்ப இடத்திலேயே நின்றிருந்தார்கள்.

இந்த போராட்டம், அனைத்து பிரதான கொள்கைகளிலும் AfD இன் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்ற, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் இந்த மகா கூட்டணிக்கு எதிராக அதிகரித்து வரும் அணித்திரள்வின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

சமீபத்திய வாரங்களில், AfD மற்றும் இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களில் நடந்துள்ளன. பெரும்பாலும் ஊடங்களில் அவை மிகக் குறைவாகவே குறிப்பிடப்படுகின்றன. மிகச் சமீபத்தில் 40,000 க்கும் அதிகமானவர்கள் இனவாதம் மற்றும் புதிய வலதுசாரி பொலிஸ் சட்டத்திற்கு எதிராக மூனிச் மற்றும் ஹம்பேர்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முக்கியமாக வலதுசாரி குண்டர்களும் நவ-பாசிசவாதிகளும் வெளிநாட்டவர்களை விரட்டியடித்து அட்டூழியம் செய்த கெம்னிட்ஸ் மற்றும் டோர்ட்முண்ட் சம்பவங்களுக்குப் பின்னர் இருந்து, இச்சம்பவங்களுக்குப் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து அனுதாபமான மற்றும் ஆதரவான கருத்துக்கள் வெளியாகி இருந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வந்துள்ளது. சனியன்று, போராட்டக்காரர்கள் "முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு வேண்டாம்,” “நாஜிகளுக்கு இடமில்லை" மற்றும் "இனவாதம் ஒரு மாற்றீடு கிடையாது,” என்ற பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியிருந்தனர்.

“வலதுசாரி, இனவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஐக்கியம்,” என்று ஒரு பதாகை குறிப்பிட்டது.

இனவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்திற்கு எதிராக போராடியதற்கும் கூடுதலாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தின் சமூக-விரோத கொள்கைகள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையின் அதிகரிப்பையும் எதிர்த்தனர். கூட்டு நலன்புரி அமைப்பின் தலைமை நிர்வாகி உல்றிச் ஷினைடர் ஜேர்மனியில் அதிகரித்து வரும் வறுமையின் விளைவுகளைக் குறித்து எச்சரித்ததுடன், பல நகரங்களில் வாடகைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதற்கு எதிராக அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதிகரித்து வரும் ஏழைகள் மற்றும் தேவை மிகுந்தோரின் பிரிவை புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு எதிராக நிலைநிறுத்தும் முயற்சிகளையும் அவர் கண்டித்தார்.

தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் கடுமையான நிலைமைகள் மற்றும் ரையன்எயர் விமானிகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமீபத்திய மாதங்களில் விமானச் சேவை சிப்பந்திகளின் போராட்டத்தைக் குறித்து குறைவூதிய விமானச் சேவை நிறுவனமான ரையன்எயரின் ஒரு பணியாளர் பேசினார்.
 


250,000 பேர்
களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதி

இந்த ஆர்ப்பாட்டம், சுமார் 4,500 சம்மேளனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களின் ஒரு கூட்டணியான "பிரிக்கவியலாத" கூட்டணி (Indivisible alliance) என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டணியில் தேவாலய அமைப்புகள், அறக்கட்டளைகள் மற்றும் தொழிற்சங்கங்களும் இணைந்தன. பிரபல நடிகர் Benno Fürmann, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் Jan Böhmermann மற்றும் இசை வாத்தியக் குழு Die Ärzte உட்பட பல பிரமுகர்களும் இப்போராட்டத்தை ஆதரித்தனர். மாலையில், பாடகர்கள் Konstantin Wecker மற்றும் Herbert Grönemeyer இன் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

உண்மையில் எதிர்பார்த்ததை விட வரப்போகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே தெளிவாகி இருந்ததால், பல அரசியல் கட்சிகளும் இதில் கலந்து கொள்ள முயன்றன. சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் "சகிப்புத்தன்மை மற்றும் பல்நோக்குத்தன்மை [மிகப்பெரியளவில்] உறுதி செய்யப்பட்டிருப்பதாக" பேசினார். [எல்லைகளை] மூடி தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நிறைய பல்நோக்குத்தன்மையும் ஐக்கியமும் தேவைப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதை, கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் வெளிநாட்டவர்களுக்கு எதிராக எழுதிய "மாபெரும் திட்டம்" எனப்படுவதை ஆதரிக்கும் ஒரு கட்சியான SPD இன் அமைச்சர் கூறுகிறார். இத்திட்டம் புலம்பெயர்ந்தவர்களை முகாம்களில் அடைத்து வைப்பதற்கான ஒரு திட்டமாகும், இங்கே அவர்கள் அதிகாரத்தைக் கொண்டு துஷ்பிரயோகமாக நடத்தப்படப்பட்டு சாத்தியமான அளவுக்கு விரைவாக அவர்களை நாடு கடத்த முடியும். முந்தைய மகா கூட்டணி அரசாங்கத்தில், அப்போதைய நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஹம்பேர்க்கில் ஜி-20 எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை "இடதுசாரி தீவிரவாதிகள்" என்று தாக்கியிருந்ததுடன், “இடதுகளுக்கு எதிரான ராக்" இசை நிகழ்ச்சியை நிறுத்தி வைக்குமாறு அழைப்புவிடுத்தார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) “வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது,” என்று தலைப்பிட்ட பல ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தது. இரண்டு தகவல் விளக்க அரங்குகளில், SGP, அவர்கள் ஏன் திரும்ப வந்துள்ளார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சூழ்ச்சி மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் மீள்வருகை என்று தலைப்பிட்ட ஒரு புதிய புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் குறித்து அறிவித்தது. அந்நூல் பெரும் வரவேற்பு பெற்றதுடன், பல விவாதங்களைத் தூண்டியது.


SGP விளக்க அரங்கு

பிராண்டன்பேர்க் மாநிலத்தின் Luckenwalde இல் இருந்து தனது அன்னையுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஓர் இளம் பெண், AfD பலமடைந்து வருவதன் மீதும் மற்றும் வலதுசாரி வன்முறை அதிகரித்து வருவதன் மீதும் பெரும் கவலை வெளிப்படுத்தினார். “வலதுசாரி போக்குகள் மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதற்கு இதுவே சரியான தருணம்,” என்றவர் தெரிவித்தார். “ஏற்கனவே மனிதாபிமானமற்ற நிறைய விடயங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். அவை எங்கே இட்டுச் செல்கிறது என்பதை நாம் இரண்டாம் உலக போரிலேயே கண்டுவிட்டோம். என்னைப் பொறுத்த வரையில், இதை நாம் ஒரு தொடக்கமாக பார்க்கலாம். நாம் அதை எதிர்த்தாக வேண்டும்,” என்றார்.

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் கூறுகையில், அவர் தனது வாழ்நாளில் அனுபவித்ததைப் போன்ற கொடூரமான சம்பவங்களை இனி ஒருபோதும் மீண்டும் நடக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அவரது பாட்டியிடம் வாக்குறுதி அளித்திருப்பதற்காக அந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பல விவாதங்களில், இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. முகாம்கள் அமைக்கும் முறையும் மற்றும் அகதிகளைக் காட்டுமிராண்டித்தனமாக நாடு கடத்துவதும், இந்த அரசாங்கம் "வெளிநாட்டவர்களை வெளியேற்று!” என்ற AfD இன் கோஷத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்பது பரவலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் தனது பெயரை வெளியிட விரும்பாத Frankfurt am Main இல் வந்திருந்த ஒரு இளைஞர், அரசாங்க கொள்கை மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அகதிகளைக் கையாளும் முறை "முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது" என்றார். “அகதிகளுக்கு உதவ விரும்புபவர்களும் குற்றவாளிகளைப் போல கையாளப்படுகிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளவியலாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் தொடர்ந்து கூறினார், அடுத்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சுரண்டப்படுவதிலிருந்தும், இன்னும் அதிக புலம்பெயர்ந்தோர் அவர்களின் தாய்நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படலாம் என்பதை ஒருவர் கருதிப்பார்க்க வேண்டும்.

இந்தாண்டில் மட்டும் 1,500 க்கும் அதிகமான அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்ற உண்மையாலும், ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் அகதிகள் கொள்கைகளைத் தொடர்ந்து இறுக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். “கடலில் மீட்பு ஒரு குற்றமில்லை,” என்பது போன்ற பதாகைகளால் இது தெளிவுபடுத்தப்பட்டது.


மிக்கையில்

நிலைமையைக் கண்டு அவர் "திகைத்து கோபமுற்றிருப்பதாக" மிக்கையில் தெரிவித்தார். ஐரோப்பாவின் எல்லைகளை மூடுவது என்பது "நூற்றுக் கணக்கான அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்க" அனுமதிப்பதை அர்த்தப்படுத்துகிறது, இது பயங்கரமானது,” என்றார்.

அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற கொள்கை வெறுமனே அகதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அதன் சொந்த மக்களுக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார். “பில்லியன் கணக்கான யூரோக்கள்" இராணுவ ஆயுதங்களுக்காக செலவிடப்பட்டு வருகின்ற அதேவேளையில், “மருத்துவக் கவனிப்பு, மழலையர் காப்பகம் மற்றும் இன்னும் பல சமூக தேவைகளுக்கும், அகதிகளுக்கும் அங்கே மிகக் குறைந்த பணமே ஒதுக்கப்படுகிறது,” என்றார்.

பேரணி நிறைவில், அங்கே சமூக ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளும் இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி தலைவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, அங்கே உரத்த கூச்சல்களும் விசில் சத்தங்களும் இருந்தன. கிழக்கு பேர்லினில் இருந்து வந்திருந்த ஒரு விற்பனை உதவியாளர் மாயா கோபத்துடன் கூறுகையில், “துல்லியமாக இங்கே எதிர்க்கப்பட்டு வருகின்ற கொள்கையை SPD அரசாங்கத்தில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற அதேவேளையில், அது இங்கே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதை செவிமடுக்க முடியவில்லை,” என்றார்.

ஒட்டுமொத்தமாக அந்த போராட்டம் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளால் குணாம்சப்பட்டிருந்தது. பல ஆர்ப்பாட்டக்காரர்களும் AfD, நவ-பாசிசவாத சக்திகளின் வளர்ச்சி மற்றும் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளால் சீற்றமுற்று, இதை எதிர்க்க ஒரு வழியைக் காண துடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த பேரணியில் உரையாற்றியவர்கள் பலர் விடயங்களைத் தண்மைப்படுத்தவும் மற்றும் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கவும் முனைந்தனர். நல்லிணக்கம், சமரசம் மற்றும் அண்டைஅயலார் மீது அன்பு ஆகியவை அவர்களின் முக்கிய வார்த்தைகளாக இருந்தன.

சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் ஜேர்மன் பிரிவின் பொதுச் செயலாளர் Markus Beeko அவர் உரையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட உலகந்தழுவிய மனித உரிமைகளின் பிரகடனத்தைக் குறிப்பிட்டார். அவர் கூறினார், “இந்த பூமியின் ஒவ்வொரு மனித உயிர்களுக்கும் உலகந்தழுவிய மற்றும் மறுக்கவியலாத உரிமைகளுக்கு" அது உத்தரவாதமளிக்கிறது என்றார். நீங்கள் விரும்புவதைச் சிந்திக்கவும் பேசவதற்கான, நீங்கள் விரும்புபவரை நம்புவதற்கான, சித்திரவதை அல்லது இன்னல்படுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான, நீங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை—அதுவொரு "சிறந்த சிந்தனை", அதற்காக செயல்படுவது மதிப்புடையதாக இருக்கும்,” என்றார்.

புராட்டஸ்டான்ட் இறையியலாளர் மற்றும் பேர்லின் பொது சூப்பர்டண்டன்ட் Ulrike Trautwein, வெறுப்பு, சமூக சகவாழ்வைச் சேதப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். அப்பெண்மணி 1989 இன் இலையுதிர் காலத்தில் கிழக்கு ஜேர்மனியில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களைச் சுட்டிக் காட்டினார். அதே நேரத்தில், ஒரு பொதுவான கோஷம் "வன்முறை அல்ல" என்றார். அந்த பாதிரியார் ஆச்சரியத்துடன் தெரிவித்தார், “அது நம்மை இன்று இணைத்து வைக்கும்! வன்முறை வேண்டாம்!” என்றார். இனவாதமும் யூத-எதிர்ப்புவாதமும் சமூக வன்முறையைச் சமூகரீதியில் மீண்டும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக செய்யும் என்றார்.

Action Reconciliation Service for Peace (ASF) அமைப்பின் செயல் இயக்குனர் Jutta Weduwen உம் சமூக மோதல் அதிகரித்து வருவதைக் குறித்து கவலை வெளியிட்டதுடன், “தேய்ந்து வரும் நல்லுறவு மற்றும் கடுமையான உணர்வுகளுக்கு" எதிராக எச்சரித்தார்.


ஹன்னா மற்றும் மாத்தேயு

பல போராட்டக்காரர்களும் நல்லுறவுக்கான அதுபோன்ற அழைப்புகளுக்கு அதிருப்தியோடு அல்லது கோபத்தோடு விடையிறுத்தனர். இந்த உணர்வு பேர்லினில் இருந்து வந்திருந்த ஒரு தம்பதியினரான ஹன்னா மற்றும் மாத்தேயு உடன் பேசியதில் தெளிவாக வெளிப்பட்டது, இவர்கள் தங்கள் குழந்தையை சக்கர நாற்காலியில் வைத்து அணிவகுத்து வந்தனர். “இங்கே வலியுறுத்தப்படுவதை நான் முழுமையாக நேசிக்கவில்லை,” என்று மாத்தேயு கூறினார், இவர் ஸ்காட்லாந்தில் இருந்து வந்து பேர்லினில் படித்து வருகிறார். “வலதுசாரி தீவிரவாதிகள் மீண்டும் வளர்ந்து வருவதைக் காணும்போது, எனக்கு கோபம் வருகிறது. எல்லா உரைகளிலும் என்ன தவற விடப்படுகிறது என்றால்—வன்முறை அல்ல, மாறாக ஓர் அரசியல் போராட்டம்,” என்றார்.

“இது நேசம் சம்பந்தப்பட்டதல்ல,” என்பதை ஹன்னா சேர்த்துக் கொண்டார், இவர் ஏற்கனவே அவரின் உயிரியியல் படிப்புகளை முடித்துள்ளார். “பிரச்சினைகளுக்கு காரணம் முதலாளித்துவமும், தொடர்ந்து சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதும் தான். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும், ஒருவருக்கு ஒருவர் நல்லவராக இருங்கள் என்று கூறுவதை விட இப்போதைய அமைப்புமுறைக்கு எதிராக போராடுகின்ற ஒரு இடதுசாரி இயக்கம் நமக்கு அவசியப்படுகிறது. ஒரு தொலைநோக்குப் பார்வை, ஓர் அரசியல் சிந்தனை இல்லை,” என்றார்.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டம், வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் நவ-பாசிசவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்தடுத்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்தன என்ற உண்மையால் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் பெருகக்கூடிய சமூக கருத்து முரண்பாடுகள் ஓர் அரசியல் வித்தியாசப்படலுக்கு விரைவில் இட்டுச் செல்லும் என்பது ஏற்கனவே தென்பட்டுள்ளது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீடு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் தயாரிப்பு செய்வதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்ததுடன், வலதுக்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியப்படுகிறது, அவ்விதத்தில் ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி மற்றும் நவ-பாசிசவாதிகளின் வளர்ச்சி எவ்வாறு சித்தாந்தரீதியில் தயாரிப்பு செய்யப்பட்டன என்பதை SGP சமீபத்திய ஆண்டுகளில் எடுத்துக்காட்டி உள்ளது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஹெர்பிரட் முல்லெர் போன்ற பேராசிரியர்கள், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்களைக் குறைத்துக் காட்ட முயன்ற முயற்சிகளுக்கு எதிராக SGP போராடி உள்ளது. இத்தகைய அபிவிருத்திகள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையில் உள்ள அவற்றின் மூலக்காரணங்கள் மற்றும் அதன் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனுதாபிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட SGP போராடி உள்ளது, இவற்றில் SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சி போன்ற "இடது" அமைப்புகள் என்று கூறிக் கொள்பவையும் உள்ளடங்கும்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட SGP இன் துண்டறிக்கை குறிப்பிடுகிறது: “இந்த அபிருத்தியை எதிர்க்கக்கூடிய மற்றும் வலதுசாரியை நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த காரணத்திற்காக தான், நாம் தொழிலாள வர்க்க போராட்டங்களை கண்டம் தழுவிய போராட்டங்களாக விரிவாக்க அழைப்பு விடுக்கிறோம். இந்த மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளால் மட்டுமே பாதுகாப்படுகின்ற, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச பாரம்பரியத்திற்கு புத்துயிரூட்ட இதுவே சரியான தருணமாகும். தொழிலாளர்களும், இளைஞர்களும் முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க இணையுமாறு SGP அழைப்பு விடுக்கிறது.”