ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Far-right candidate Bolsonaro elected as Brazil’s president

அதிவலது வேட்பாளர் போல்சொனாரோ பிரேசிலின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

By Miguel Andrade
29 October 2018

இம்மாத தொடக்கத்தில் முதல் சுற்று வாக்கெடுப்பிலும், அதற்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் என்ன முன்கணிக்கப்பட்டதோ அதையே ஞாயிறன்று நடந்த பிரேசிலின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் உறுதிப்படுத்தியது, பாசிசவாத ரிசர்வ் படை இராணுவ தளபதியும் ரியோ டி ஜெனெய்ரோ மாநிலத்தில் ஏழு முறை மத்திய அரசு பிரதிநிதியாக இருந்தவருமான ஜயர் போல்சொனாரோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிலாளர் கட்சி (PT) வேட்பாளர் பெர்னாண்டோ ஹாடாட் இன் 47 மில்லியன் வாக்குகள் அல்லது 45 சதவீத வாக்குகளுக்கு எதிராக, போல்சொனாரோ 58 மில்லியன் வாக்குகள் அல்லது மொத்த வாக்குகளில் 55 சதவீதம் வென்றார். இந்த இரண்டாம் சுற்று வாக்கெடுப்பும் முதல் சுற்றைப் போலவே மீண்டும் முன்பில்லாதளவில் வாக்கு புறக்கணிப்பு மற்றும் செல்லா ஓட்டுகளைக் கண்டது, வாக்களிக்கக்கூடிய மொத்தம் 146 மில்லியன் வயது வந்தோரில் 40 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் வாக்களிப்பைத் தவிர்த்து விட்டிருந்தனர்.

1985 வரையில் பிரேசிலை ஆட்சி செய்து வந்த அமெரிக்க ஆதரவிலான 21 ஆண்டுகால இராணுவ சர்வாதிகாரத்தையும் மற்றும் அதன் காட்டுமிராண்டித்தனமான படுகொலை ஒடுக்குமுறையையும் வெளிப்படையாக ஆதரிக்கும் போல்சொனாரோ தேர்வானமை, இராணுவம் அதிகாரத்தைக் கைவிட்ட பின்னர் பிரேசிலில் மேலெழுந்த படைத்துறைசாரா முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முழு உடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

இது முன்னர் பதவியில் இருந்த அனைத்து கட்சிகளின் தோல்வியையும், முதலும் முக்கியமுமாக 13 ஆண்டுகால பிரேசிலிய முதலாளித்துவ ஆட்சியின் விருப்பத்திற்குரிய கருவியாக சேவையாற்றிய தொழிலாளர் கட்சியின் (PT) பொறிவையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. மேலும் அந்த சர்வாதிகாரத்திற்கு முன்னாள் சட்டபூர்வ எதிர்ப்பாக மேலெழுந்த கட்சியான பிரேசிலிய ஜனநாயக இயக்கம் (MDB), மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதான வலதுசாரி கட்சியான பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சி (PSDB) ஆகியவற்றின் சீரழிவாகவும் இது இருந்தது. முதல் சுற்று நாடாளுமன்ற தேர்தல்கள் ஏற்கனவே PSDB மற்றும் MDB இரண்டினது வாக்காளர் மட்டமும் பாதியாக குறைந்ததையும், தொழிலாளர் கட்சி (PT) தக்க வைத்திருந்த ஆசனங்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததையும் கண்டது.

இந்த தேர்தல் PT மற்றும் முன்னாள் வலதுசாரி எதிர்கட்சிகள் மேலாதிக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் மீதான பரந்த எதிர்ப்பைக் குறிக்கிறது, 2015 மற்றும் 2016 க்கு இடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சி மற்றும் அப்போதிருந்து மிக மெதுவான மீட்சி ஆகியவற்றுடன் அந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இக்கட்சிகளே பொறுப்பாவதாக பிரேசிலியர்களின் பரந்த அடுக்குகள் காண்கின்றன. வேலைவாய்ப்பின்மை விகிதம் —சுமார் 13 மில்லியன் வேலையின்மையுடன்— 12 சதவீதத்தில் தேங்கி நிற்கிறது, அதீத வறுமை மற்றும் குழந்தை இறப்புவிகிதம் அதிகரித்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக தொழிலாளர் கட்சியும் ஏனைய இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளுமே ஒட்டுமொத்த ஊழலுக்கும் துணை-பொறுப்பாவதாக பார்க்கப்படுகிறது, இத்துடன் MDB ஏறத்தாழ 30 ஆண்டுகளாக அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மற்ற இரண்டுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. 1994 இல் முதன்முதலில் PSDB ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், அதை அடுத்து 2002 இல் இருந்து நான்கு முறை PT ஜெயித்து வந்த பின்னர், PT மற்றும் PSDB உம் காங்கிரஸில் வாக்குகளை விலைக்கு வாங்கியதில் இருந்து, PSDB இன் கீழ் மோசடியான தனியார்மயமாக்கல் வரையில், PT ஆட்சியின் கீழ் கட்டுமானம், தொழில்துறை மற்றும் எரிசக்தித்துறை ஏகபோகமயமாக்கல்களை உள்ளடக்கிய பொது ஒப்பந்தங்களில் இலஞ்சங்கள் மற்றும் கையூட்டுகள் வரையில் ஊழல் மோசடி திட்டங்கள் விரிந்து பரந்திருந்தன — இதன் மத்தியிலிருந்த திட்டமானது "லாவா ஜாட்டோ" (Carwash) விசாரணை என்றழைக்கப்பட்ட ஒரு விசாரணையால் வெளியில் கொண்டு வரப்பட்டது, இதன் வேர்கள் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் நடைமுறையளவில் எஞ்சிய ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்கா வரையில் பரவியுள்ளன.

இந்த பின்புலத்திற்கு எதிராக, ஊழல் மற்றும் குடும்ப வாரிசு ஆட்சி மீதான வெகுஜன விமர்சனங்களுடன், போல்சொனாரோ இந்த மூன்று கட்சிகளின் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளுக்கு ஒரே எதிர்ப்பாக தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது. மூத்த இராணுவ அதிகாரிகளின் ஒரு அணியாலும் மற்றும் படிப்படியாக பெருவணிகங்களாலும் அரவணைக்கப்பட்ட ஒரு வேட்பாளராக போல்சொனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் வர்க்கப் போர் கொள்கைகளின் இழிவான தோல்வி மற்றும் அம்பலப்படுத்தலால் முன்னர் முற்றிலுமாக தார்மீகத்தன்மை இழந்துவிட்டிருந்த, கடிந்து கொள்ளப்பட்ட பிரேசிலிய இராணுவம், 1985 க்குப் பின்னர் முதல் முறையாக அரசாங்கத்தில் ஒரு மேலாதிக்க பாத்திரம் வகிக்க உள்ளது.

முதல் சுற்று போக்குகளைத் தொடர்ந்து, 1980 களில் முதலில் தொழிலாளர் கட்சி (PT) எங்கெல்லாம் பலமாக வாக்குகளைப் பெற்றிருந்ததோ மற்றும் இறுதியில் எங்கிருந்து தேசியளவில் அதிகாரத்திற்கு உயரந்ததோ அதன் முந்தைய பலமான இடங்கள் அனைத்திலும் நடைமுறையளவில் முற்றிலும் தோல்வியடைந்திருந்ததை வாக்குகளின் முறிவு எடுத்துக்காட்டியது. இது சாவோ பாவ்லொவைச் சுற்றிய தொழில்துறை நகரங்களின் ABC பிரதேசம் என்றழைக்கப்பட்டதில், அத்துடன் அந்நகரின் புறநகர் பகுதியில் தொழிலாள வர்க்க பகுதியின் "சிவப்பு பட்டை" என்றழைக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

தேசிய அரசின் கட்டுப்பாட்டை அது எடுப்பதற்கு முன்னரே மிக நீண்டகாலமாக தொழிலாளர் கட்சிக்கு தேர்தல் வெற்றிகள் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த இடதுசாரி மாநிலங்கள், ரியோ கிரேட் டொ சுல் மற்றும் ரியோ டி ஜெனெய்ரோ போன்றவை, 63 சதவீதத்திற்கும் அதிகமாக மலைப்பூட்டும் வெற்றிகளை போல்சொனாரோவுக்கு வழங்கின.

ABC பிரதேசத்தில் சாவோ பெர்னார்டோ நகர், இங்கே தான் PT பிறப்பெடுத்தது மற்றும் அதன் முன்னாள் தலைவர் Luiz Inácio Lula da Silva, சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு செல்ல இட்டுச் சென்ற தொடர்ச்சியான பல பிரதான 1978 வேலைநிறுத்தங்களில் உலோகத்துறை தொழிலாளர்களுக்குத் தலைமை கொடுத்தார் (இப்போது இவர் Carwash விசாரணை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்) என்ற நிலையில், இந்நகர் போல்சொனாரோவுக்கு 60 சதவீத வாக்குகளை வழங்கியது, அதேவேளையில் ஏனைய ABC நகரங்கள் அவருக்கு 75 சதவீதம் வரையிலான வாக்குகளை வழங்கின.

அந்நாட்டின் வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில் மட்டுமே PT ஆல் ஆதரவைத் தக்க வைக்க முடிந்தது, முதன்முதலில் 2002 இன் லூலா ஜனாதிபதியாக வென்றபோது இப்பிரதேசத்தில் அது ஊடுருவியது, இங்கே அது IMF ஒப்புதல் பெற்ற மட்டுப்பட்ட வறுமை குறைப்பு திட்டங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, போல்சொனாரோ PT மீதான அவர் எதிர்ப்பை அறிவித்து பல ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டார், அவர்களை அவர் "சிவப்பு குற்றவாளிகள்" என்று வர்ணித்ததுடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதையோ அல்லது சிறைச்சாலையையோ தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்றார். அதேபோல அவர் "பிரேசிலிய வரலாற்றில் ஒருபோதும் பார்த்திராத அளவுக்கு தூய்மைப்படுத்தலின்" ஒரு கட்டத்திற்கு சூளுரைத்தார்.

போல்சொனாரோவின் துணை-ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வலதுசாரி தளபதி Hamilton Mourão, “சட்டம் ஒழுங்கை" பாதுகாக்க "இராணுவ தலையீட்டின்" தேவை குறித்து வலியுறுத்தும் உரைகள் ஆற்றிய பின்னர் இந்தாண்டு தான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதுடன், அவர் தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுகையில் புதிய அரசாங்கத்தின் முதல் பணியானது, ஒரு கடுமையான ஓய்வூதிய "சீர்திருத்தம்" உட்பட பொருளாதார சீரமைப்பு திட்டங்களை நடத்துவதாக இருக்க வேண்டுமென வெளிப்படையாக குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதும் "சில ஆணிகளை அடிக்க" “தேனிலவு காலத்தின்" ஆதாயங்களைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென அத்தளபதி கூறினார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதும், போல்சொனாரோ சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தைக் குறைகூறி சமூக ஊடகம் மீதான ஆத்திரங்களை வெளியிட்டார். அதன்பின்னர் உடனடியாக, சட்டம் மற்றும் சொத்துரிமைகள் அத்துடன் நிதி பொறுப்புகள் மீதான ஜனநாயக ஆட்சிக்கு அவரது ஆதரவை சூளுரைக்க தேசிய தொலைக்காட்சியில் தோன்றினார். பிரேசிலின் வெளியுறவு கொள்கையை அவர் இன்னும் நெருக்கமாக வாஷிங்டனுடன் அணிசேர்க்க இருப்பதாகவும் அவர் சமிக்ஞை செய்தார். அவ்விரு நாடுகளும் "தலைச்சிறந்த பங்காண்மைகளை" எட்ட முடியுமென கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து அவர் ஒரு வாழ்த்து அழைப்பைப் பெற்றதாகவும் சேர்த்துக் கொண்டார்.

போல்சொனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டமை, அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரே சீராக அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்களை எதிர்கொள்வதில் பிரேசிலிய முதலாளித்துவம் கூர்மையாக வலதுக்கு திரும்புவதைத் தெளிவாக சமிக்ஞை செய்கிறது.

அவர் அதிகாரத்திற்கு வருவதற்கான பாதையை PT தான் வகுத்தளித்தது, அது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் முழுச்சுமையைத் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் நிறுத்திய IMF கோரிய பொருளாதார கொள்கைகளைத் திணிக்க, அதன் 13 ஆண்டு கால ஆட்சியில் தன்னை போல்சொனாரோ மற்றும் காங்கிரஸில் இருந்த ஒட்டுமொத்தமாக பல்வேறு வலதுசாரி அரசியல்வாதிகளுடன் அணி சேர்த்துக் கொண்டது.

லூலா சிறையில் அடைக்கப்பட்டமை ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதில் இருந்து அவரை தடுத்திருந்த நிலையில், லூலாவைச் சிறையில் அடைத்ததே PT தோல்விக்கான பிரதான காரணமாக பலர் சுட்டிக்காட்டினர். ஆனால் பிரேசிலிய மக்களில் பெரும்பான்மையினர் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும், PT கட்சியின் அடையாள நிறமான சிவப்பை போல்சொனாரோ பயன்படுத்தும் பிரேசிலிய கொடியின் அதே பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய அதேவேளையில், இரண்டாம் சுற்று பிரச்சாரத்தில் அவர் பிம்பத்தைத் தொழிலாளர் கட்சியே கூட கைவிட்டிருந்தது என்றும் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.

பெருந்திரளான பிரேசிலிய தொழிலாளர்கள் PT ஐ மலைப்பூட்டும் அளவில் நிராகரித்ததை இத்தேர்தல் பிரதிநிதித்துவம் செய்தது என்பதே யதார்த்தம், அவர்களில் பலர் போல்சொனாரோவுக்கு வாக்களித்தனர், இன்னும் பலர் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் மீதும் விரக்தி கொண்டு யாரொருவருக்கும் வாக்களிக்கவில்லை.

தொழிலாளர் கட்சி (PT) போல்சொனாரோ அதிகாரத்திற்கு வருவதால் முன்நிற்கும் வலதுசாரி அச்சுறுத்தலை எதிர்க்க தொழிலாளர்களுக்கு எந்த வர்க்க முறையீடும் செய்ய இலாயக்கற்று இருந்தது மற்றும் விருப்பமின்றி இருந்தது. இரண்டாம் சுற்று வாக்குகளுக்கு முன்னதாக தொழிலாளர்களை வீதிகளுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யப்படவில்லை, அவ்வாறு அது செய்திருந்தாலும் கூட PT இன் அழைப்புக்கு பலர் அனேகமாக பதிலளிக்காமல் தான் இருந்திருப்பார்கள். அதற்கு பதிலாக, அக்கட்சி ஒரு பரந்த "ஜனநாயக முன்னணிக்கு" முறையீடு செய்து, மதிப்பிழந்த முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து ஆதரவைப் பெற முயன்றது, இவை ஒரு காலத்தில் கொண்டிருந்த குறைந்தளவிலான மக்கள் ஆதரவையே கூட இழந்திருந்தன.

பிரேசிலில் ஒட்டுமொத்த போலி இடதும் இந்த திவால்நிலைமை மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைக்கு ஒரு "இடது" மூடுமறைப்பை வழங்க முயன்றன, அவை ஹாடாட் க்கான வழங்கப்படும் வாக்குகளை பிரேசிலில் பாசிசவாதத்தின் வருகையை தடுப்பதற்கான ஒரே வழிவகையாக சித்தரித்தன. பல தசாப்த காலமாக தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்திருந்த அக்கட்சி பிரிவின் கீழ் தொழிலாளர்களை அடைப்பதற்கான இந்த முயற்சியும் ஒரு முழு தோல்வியாக நிரூபணமானது.

போல்சொனாரோ இப்போது அறிமுகப்படுத்த முயற்சிக்க இருக்கும் வலதுசாரி சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளைத் தான் ஒரு PT அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தாலும் ஏற்றிருக்கும் என்பதே யதார்த்தமாகும். முதல் சுற்று வாக்கெடுப்புகளுக்குப் பின்னர் ஹாடாட் அவரது முதல் பயணமாக ஓர் அரசியல் விவாதத்திற்காக பிரேசிலிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதியைக் காண சென்றிருந்த நிலையில், அரசாங்கத்திற்குள் இராணுவத்தைக் கொண்டு வருவதற்கான போல்சொனாரோவின் இதே நகர்வு PT அரசாங்கத்தின் கீழும் பார்க்கப்பட்டிருக்கும்.

சுமார் 210 மில்லியன் மக்களின் ஒரு நாட்டின் மீது பாசிசவாத சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கு ஒரு தேர்தலுக்கும் கூடுதலானவை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மிகப் பெரிய வர்க்க போராட்டங்கள் வரவிருக்கின்றன. தொழிலாளர் கட்சி (PT), அதனுடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு CUT, மற்றும் அவர்களைச் சுற்றிய சுற்றுவட்டத்தில் உள்ள போலி-இடது குழுக்களின் பரிவாரங்களின் கரங்களில் தசாப்தங்களாக நடத்தப்பட்ட காட்டிக்கொடுப்புகளின் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதே தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் தீர்க்கமான பிரச்சினையாகும். சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகர இயக்கம் கட்டமைக்கப்பட்டு, அமெரிக்கா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் பிரேசிலிய தொழிலாளர்களின் போராட்டங்களை இணைப்பதற்கான போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும்.