ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Risk of no-deal Brexit staggers European companies and economy

ஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிட்டின் அபாயம் ஐரோப்பிய நிறுவனங்களையும் பொருளாதாரத்தையும் திகைப்படையச் செய்கிறது

By Alex Lantier
5 October 2018

அடுத்த மார்ச் மாதத்தில் எந்த ஒப்பந்தங்களுமற்ற ஒரு பிரெக்ஸிட் நடந்தேறுவதற்கு பெருகும் சாத்தியமானது ஐரோப்பாவெங்கிலும் பொருளாதார மற்றும் அரசியல் அதிர்ச்சியலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட்டுக்கு ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரசா மே அளித்த “செக்கர்ஸ் திட்ட”த்தை ஐரோப்பிய ஒன்றியம் சென்ற மாதத்தில் நடந்த Salzburg உச்சிமாநாட்டில் நிராகரித்ததைத் தொடர்ந்து, வருங்கால அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பான எந்த உடன்பாடும் இல்லாமலேயே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடும் —இது மிகப் பரந்த மற்றும் இன்னும் கணக்கிடப்படாத பலவிளைவுகளைக் கொண்டதொரு நிகழ்வாக இருக்கும்— என்பது முன்னினும் தெளிவாகியிருக்கிறது.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் நத்தலி லுவசோ (Nathalie Loiseau) பாரிஸில் புதனன்று பேசுகையில், பிரெக்ஸிட் தொடர்பாக பிரான்சில் தோன்றக் கூடிய பிரச்சினைகளைக் கையாளும் விதமாய் அவசர உத்தரவுகளைக் கொண்டுவர ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை அனுமதிக்கின்ற ஒரு சட்டத்தை பிரான்சின் அமைச்சரவை முன் தான் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“ஐக்கிய இராச்சியத்தின் வெளியேறல் தொடர்பான ஒரு நல்ல உடன்பாட்டிற்கான சாத்தியம் இப்போதும் இருக்கிறது” என்றார் லுவசோ. “ஆயினும் எந்த உடன்பாடும் ஏற்படாமல் போகும் நிலை உள்ளிட அத்தனை நிலைமைகளுக்கும் நாம் தயாரிப்புடன் இருந்தாக வேண்டும். அத்தனை இறுதிநிலைமைகளுக்கும் நாம் ஆயத்தமாக இருப்பது நமது குடிமக்களுக்கும், நமது நிறுவனங்களுக்கும் மற்றும் பிரான்சில் வாழுகின்ற பிரிட்டிஷ் குடிமக்களுக்கும் நாம் கொண்டிருக்கும் கடமையாகும்”. அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “நாங்கள் இந்தத் தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கிறோம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற உறுப்பு நாடுகளும் இதே தயாரிப்பை செய்து கொண்டிருக்கின்றன. நம்மைப் போலவே பிரிட்டனும் தங்களை தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகளின் நிலைக்கோ அல்லது நமது பிரிட்டிஷ் பங்காளிகள் தொடர்பாகவோ அவநம்பிக்கை காட்டுவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை.”

ஆயினும், முக்கியமான பிரச்சினைகளில் “இப்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகின்ற பிரெஞ்சுக்காரர்கள் பிரான்சுக்கு திரும்பும்படியான நிலைமை” அதேபோல “மார்ச் 30, 2019 அன்று, பிரான்சில் வாழ்ந்து வருகின்ற பிரித்தானியர்கள் திடீரென்று தாங்கள் ஆவணமற்ற புலம்பெயர்ந்த மக்களாக ஆகியிருப்பதாக உணரும்படி ஆகாமலிருப்பதை” உறுதிசெய்வது உள்ளிட்டவை இடம்பெறக் கூடும் என்று லுவசோ தெரிவித்தார். சுமார் 1.2 மில்லியன் பிரிட்டன் குடிமக்கள் இப்போது பிரிட்டனுக்கு வெளியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலண்டனுக்கும் இடையிலான கிட்டத்தட்ட இரண்டாண்டு கால பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய பொருளாதாரத்தின் இருதயத்தானமாக இருக்கின்ற நாடுகளுக்கு இடையில் ஒரு ஸ்திரமான உறவை உருவாக்குவதில் எந்த குறிப்பிட்டு சொல்லும்படியான முன்னேற்றத்தையும் கண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. சென்ற மாதத்தில் பிரான்ஸினதும் பிரிட்டனினதும் ஸ்கலூப்-மீன் பிடிப்பு படகுகள் ஆங்கிலக் கால்வாயில் வன்மையாக மோதலில் ஈடுபட்டன. இப்போது பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் இருந்து என்னமாதிரியான புதிய உறவுகள் எழக்கூடும் என்பது ஒருவருக்கும் தெரியாத நிலைமைகளின் கீழ், பழைய கால்வாய்-கடந்த உறவுகள் திடீரென முடிவுக்கு வருகின்ற நிலைக்கு தயாரிப்பு செய்து கொள்வதற்காக துறைமுகங்களும், தொழிற்துறை நிறுவனங்களும் மற்றும் அரசாங்கங்களும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன.

பிரிட்டனை ஒட்டியிருக்கும் அத்தனை பெரிய ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுமே பிரிட்டனுடன் மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை ஸ்தாபிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன, இது ஐரோப்பிய விநியோகச் சங்கிலிகளில் நாசத்தை உண்டாக்குவதாய் இருக்கும். எந்த ஒப்பந்தமுமற்ற ஒரு பிரெக்ஸிட்டின் எதிர்பார்ப்பில், பிரிட்டனுக்கு படகின் மூலமாக அல்லது சுரங்கப்பாதைகள் மூலமாக செல்கின்ற லாரிகளை சோதிப்பதற்கு 700 புதிய எல்லைக் காவலர்களை நிலைநிறுத்த செவ்வாயன்று பிரெஞ்சு அரசாங்கம் உடன்பட்டது. நெதர்லாந்து பிரெக்ஸிட் தொடர்பாக ஜூலையில் 1,000 புதிய எல்லைக் காவலர்களை நிலைநிறுத்துவதற்கும் பெல்ஜியம் ஜூனில் 141 எல்லைக் காவலர்களை நிலைநிறுத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொண்டன.

வாகன உற்பத்தி நிறுவனங்களில் பெருந்தொகை வேலையிழப்புகளுக்கு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எந்தவகையான பிரெக்ஸிட் நெருக்கடிக்கான முழு விலையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் சுமத்துவதற்கான திட்டங்கள் சர்வதேச அளவில் ஆளும் வட்டாரங்களில் மிக முன்னேறிய நிலையில் இருக்கின்றன. சென்ற மாதத்தில், ஜாகுவார் லாண்ட் ரோவர், பேர்மிங்ஹாமில் இருக்கும் அதன் Castle Bromwich ஆலையில் உள்ள 1,000 தொழிலாளர்களை ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு வாரத்திற்கு மூன்று-நாள் வேலைக்கு மாற்றியது.

ஜப்பானின் Keidanren வணிக குழுமத்தின் தலைவரான, ஹிரோகி நகானிஷி, புளூம்பேர்க் பத்திரிகையிடம் கூறுகையில், ஒரு ஒப்பந்தமற்ற பிரெக்ஸிட் ஏற்படுமாயின், “ஜப்பானிய நிறுவனங்கள் ஐக்கிய இராச்சியத்தை விட்டு கிளம்பத் தொடங்கலாம் என்று அனுமானிப்பது இயல்பே” என்றார். இந்த நிறுவனங்களில் டொயோட்டாவும் உண்டு, ஐரோப்பாவுக்கான இதன் தலைவரான ஜோஹான் வான் ஸைல், பிரிட்டனின் Burnaston ஆலையில் தயாரிக்கப்படும் 144,000 வாகனங்களில் 87 சதவீதம் அதன்பின் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற காரணத்தால், பிரிட்டனில் உற்பத்தியை நிறுத்துவதற்கு அது திட்டமிட்டுக் கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். மிட்சுபிஷி நிதிக் குழுமமும் அதன் ஐரோப்பியத் தலைமையகத்தை இலண்டனில் இருந்து ஆர்ம்ஸ்டர்டாமுக்கு மாற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது, இது 2,000 வேலைகளை அச்சுறுத்துகிறது.

ஆயினும், ஜப்பான் நிறுவனங்களில் பிரெக்ஸிட்டால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் அத்தனை வேலைகளுமே பிரிட்டனில் தான் இருக்கின்றன என்றில்லை. ஜப்பானின் மது உற்பத்தி நிறுவனமான ஆஷாஹி ஏற்றுமதி நிறுவனம் பெரொனி பீரை இத்தாலியில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டுசெல்கிறது, இத்தாலியில் உள்ளூர் பீர் சந்தையில் அது சிறிய பிரசன்னம் கொண்டுள்ளது, இத்தாலியில் கணிசமான இழப்புகளுக்கு அது முகம்கொடுக்கலாம். ஹிட்டாச்சி கட்டுமான எந்திரங்கள் நிறுவனம் அது உற்பத்தி எந்திரங்களை நெதர்லாந்தில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டி வரலாம், பதிலாக ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யும்படியாகலாம் என்று தெரிவித்திருக்கிறது.

மிக விரிந்த மட்டத்தில் பார்த்தால், பிரெக்ஸிட் எதிர்பார்ப்புகள் ஐரோப்பிய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை அனுப்பக் கூடிய வர்த்தக உறவுகளிலான ஒரு பரந்த மாற்றத்திற்கான திட்டங்களை இயக்கத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன. ஜேர்னல் ஆஃப் காமர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், அது பிரிட்டனில் நேர்காணல் செய்த வணிகங்களில் 40 சதவீதத்தினர் ஐரோப்பாவில் இருந்து அவற்றுக்கு விநியோகம் செய்து வருவோரை பிரதியீடு செய்ய பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விநியோகங்களைப் பெறுகின்ற ஐரோப்பிய ஒன்றிய வணிகங்களில் 63 சதவீதம் தமது விநியோகச் சங்கிலிகளின் பகுதியை அல்லது முழுவதையும் பிரிட்டனுக்கு வெளியில் ஏற்பாடு செய்து கொள்வதற்கு வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இலண்டனுக்கும் இடையிலான ஒரு நட்பான உடன்பாட்டுடன் முடிகின்ற ஒரு பிரெக்ஸிட் உட்பட, எந்த வகையான பிரெக்ஸிட்டுக்கும் என்ன பின்விளைவுகள் இருக்கப் போகின்றன என்று கண்டறிய முடியாமல் துறைமுகங்களும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. “குறைந்தபட்சம் நீங்கள் என்ன கொண்டுசெல்கிறீர்கள் என்பதை இன்றிருப்பதை விடவும் மிக விரிவான அளவில் சுங்கத் துறைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டியதாயிருக்கும். ஒரு சரக்கு பெட்டகம் சோதனைக்காக தனியாகப் பிரித்துப் பார்க்கப்பட போகவில்லை என்றாலும் கூட, அப்போதும் நீங்கள் ஆபத்து மதிப்பீட்டுப் பிரிவுக்கு தேவையான அத்தனை விவரங்களையும் வழங்க அவசியமாயிருக்கும்” என்று ECS European Containers இன் தலைமை செயலதிகாரி பீட்டர் பால்சியன் தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

சுமார் 14,000 டிரக்குகள் ஐரோப்பிய ஒன்றிய-பிரிட்டன் எல்லையை அன்றாடம் கடந்து செல்கின்றன, ஐக்கிய இராச்சியத்தின் இறக்குமதியில் 53 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வருகிறது என்பது, ஐக்கிய இராச்சியம்-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான போக்குவரத்தில் விரிவான எல்லைக் கட்டுப்பாடுகளை செய்வதை —எந்த ஒப்பந்தமுமற்ற ஒரு பிரெக்ஸிட்டில் பொதுச் சந்தையை விட்டு பிரிட்டன் விலகும்பட்சத்தில் இது கட்டாயமாகலாம்—  கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது. பெல்ஜியத்தின் ஸீபிரக் துறைமுகத்தின் தலைமை செயலதிகாரியான ஜோசிம் கோயன்ஸ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறுகையில், சுமார் 4,000 டிரக்குகள் ஸீபிரக் வழியாக பிரிட்டனுக்கு சென்று வருவதாக தெரிவித்தார். “ஒரு சில மணி நேரங்களுக்கு அவை முடக்கப்பட்டாலும் கூட, 60 கிலோமீட்டர் தூரத்திற்கு (40 மைல்கள்) தடைப்பட்டு போய்நிற்கும் நிலை ஏற்படும். யாரும் அதை விரும்பவில்லை” என்றார் அவர்.

பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியப் போக்குவரத்தில் அன்றாடம் 10,000 டிரக்குகளைக் கையாளுகின்ற பிரிட்டிஷ் துறைமுகமான டோவரிலும், அதேபோல பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான சுரங்கப்பாதையிலும் (Eurotunnel) இதனினும் பெரிய முட்டுக்கட்டை நிலைகள் உண்டாகலாம்.

மோசமான நிலையையும் எதிர்பார்த்து, தொழிற்துறை நிறுவனங்கள், ஐக்கிய இராச்சிய-ஐரோப்பிய ஒன்றிய எல்லை ஒரு நீண்ட தாமதத்திற்கு வழிவகுக்கும் பட்சத்திலான ஏற்பாட்டிற்காக சரக்குகளின் கையிருப்பை ஏற்கனவே அதிகரித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

Kuehne-Nagel என்னும் பெரிய ஜேர்மன் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான Detlef Trefzger, ஜேர்னல் ஆஃப் காமர்ஸ் பத்திரிகையிடம் கூறினார்: “எங்களது ஐக்கிய இராச்சிய வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்கு கையிருப்பை அதிகரித்து வைக்கத் தொடங்கியுள்ளனர், என்ன மாதிரியான தாக்கம் இருக்கப் போகிறது என்பதைக் குறித்த ஒரு தெளிவு கிடைக்கின்ற வரையில் ஆறு முதல் 12 மாத காலத்திற்குத் தேவையான சரக்குகளை கூடுதலாக கையிருப்பு வைத்துக் கொள்வதற்கு முடிவெடுத்து அவர்கள் எங்களிடம் கேட்கின்றனர்... செலவுகளை மனதில் வைத்து CFOக்கள் (தலைமை நிதி அதிகாரிகள்) சரக்கு கையிருப்பை அதிகரிக்க விரும்புவதில்லை, ஆனால் அவர்களும் தயாரிப்புடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. உயர்-தொழில்நுட்பத் துறை, வாகனத் துறை மற்றும் வான்வெளித்துறை தொழிற்சாலைகளில் இதனை நாங்கள் காண்கிறோம்.”

ஐரோப்பிய சரக்கு போக்குவரத்து கவுன்சிலின் ஒரு அறிக்கை குறிப்பிட்டது, “துறைமுகத்தில் நெரிசல், சரக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் மீதான தாக்கம், மற்றும் வர்த்தகத்திலான புதிய முட்டுக்கட்டைகள் என பிரெக்ஸிட்டால் சாத்தியமாகக் கூடிய பின்விளைவுகளை பகுப்பாய்வு செய்வதில் ஐரோப்பாவெங்கும் மற்றும் உலகெங்கும் இருக்கும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு வருகின்றன. அவசரகால திட்டங்கள் செய்யப்படலாம், ஆயினும் அவை ஒவ்வொன்றும் உருவாக்கப்படுவதற்கு பெரும் நேரம் எடுக்கக் கூடியவை, அத்துடன் இப்போது நிலவுகின்ற நிச்சயமற்ற சூழலில் பல விதமான காட்சிநிலைகள் பரிசீலிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.”

பிரெக்ஸிட்டை ஒட்டி எழுந்திருக்கும் குழப்பநிலையானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரெக்ஸிட் வாக்களிப்பு —பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் கூடுதல் தேசியவாதப் பிரிவுகளது ஊழலடைந்த உத்திகளை மட்டுமல்லாது, எல்லாவற்றையும் விட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் பரந்துபட்ட வாக்காளர்கள் பிரமைவிலகலைக் கண்டிருப்பதையும் இது பிரதிபலித்தது— உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை ஒரு புதிய தீவிர மட்டத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. ஒரு பொருளாதாரப் பொறிவின் அபாயம் தெளிவுபட வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

ஆயினும், இன்னும் விரிந்த மட்டத்தில் பார்த்தால், கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்ற ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் பிரெக்ஸிட்டின் விலையை தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கான அவர்களது முயற்சிகளுக்கு எதிராகவுமான போராட்டத்தில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே முன்வைக்கப்பட்டிருக்கும் அதிமுக்கியமான கேள்வியாகும்.