ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The CIA Democrats: A balance sheet of the primaries  

சிஐஏ ஜனநாயகக் கட்சியினர்: முதல் நிலை தேர்தல்கள் குறித்த ஒரு நிலுவைக் கணக்கு

By Patrick Martin 
21 September 2018

முதல் நிலை தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், ஜனநாயகக் கட்சித் தலைமையும் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்குள் இருந்த அவர்களது கூட்டணிக் கட்சிகளும், இராணுவம், சிஐஏ மற்றும் சிவிலிய தேசிய பாதுகாப்பு அலுவலர்கள் மத்தியிலிருந்து நியமிக்கப்பட்ட  ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் மூலமான “நட்புரீதியான கையகப்படுத்துகை” என்ற முதல் நிலையை நிறைவு செய்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம், சிஐஏ ஜனநாயகக் கட்சியினரின் தோற்றப்பாடுகளை மார்ச்சில் பிரசுரித்த ஒரு தொடர் கட்டுரைகளில் அடையாளம் காட்டியது. அந்த நேரத்தில், பாராளுமன்றத்திற்கான போட்டி நடைபெறும் மாவட்டங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த முனைவதில், பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் இருந்து ஈர்க்கப்பட்டிருந்ததை நாங்கள் குறிப்பிட்டோம். ஒருவேளை நவம்பர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருக்குமானால், அத்தகைய இராணுவ-உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் புதிய பிரதிநிதிகள் சபையில் அதிகார சமநிலையைத் தக்க வைத்திருப்பார்கள்.

மார்ச்சில் நாங்கள் அடையாளம் கண்ட 44 மாவட்டங்களில் —பின்னர் 46 ஆக வளர்ந்துவிட்டதில்— இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்கள் 30 தேர்தல் நியமனங்களை வென்றுள்ளனர், இது 66 சதவிகிதம் அல்லது மூன்றில் இரண்டு பங்கு அளவிலான வெற்றி விகிதமாகும். ஜனநாயகக் கட்சியின் தலைமையிலிருந்தும், ஜனநாயகக் கட்சியின் நீண்ட கால நிதி ஆதரவாளர்களிடமிருந்தும், மற்றும் தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்தும் கிடைப்பதான அவர்களின் பரந்துபட்ட ஆதரவுக்கு இது சான்றளிக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவால் (Democratic Congressional Campaign Committee –DCCC) அல்லது காங்கிரஸ் தேர்தல்கள் குறித்த மாவட்ட வாரியான பகுப்பாய்வில் சிறப்புவாய்ந்த குழுக்களால், 115 மாவட்டங்கள் போட்டித்திறன் மிக்கவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், 30 இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்கள் அதாவது ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் கால் பகுதியினருக்கும் கூடுதலாக அவர்கள் உள்ளனர் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் (26), வழக்கறிஞர்கள் (20), மில்லியனர்கள் (15), ஏனைய தொழில்வல்லுநர்கள் (8), ஒபாமாவின் முன்னாள் உதவியாளர்கள் (3) மற்றும் இதர நபர்கள் (13) என்ற எண்ணிக்கையிலான குழுக்களுக்கு முன்னால், அவர்களை மிகப்பெரிய ஒற்றைக் குழுவாக உருவாக்குகிறது.

பிரதிநிதிகள் சபையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் 23க்கு அதிகமான, ஒருவேளை 50 அல்லது 60 ஆசனங்களை வெற்றி கொள்வது அவசியம் என்பதாக காங்கிரஸ் தேர்தல்கள் குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் விசாரணை செய்தும் மதிப்பீடு செய்தும் உள்ளன. பிந்தைய சூழ்நிலையின்படி, முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் புதிய வர்க்கத்தின் அதிகபட்சம் பாதிக்கும் மேலானவர்களைக் கொண்டு சிஐஏ ஜனநாயகக் கட்சியினர் சமன் செய்யக்கூடும்.

நவம்பர் 6 வாக்குச்சீட்டில் இருந்த 30 இராணுவ-உளவுத்துறை ஜனநாயகக் கட்சியினரின் விபரங்கள், அதாவது அவர்களது சொந்த தேர்தல் பிரச்சார வலைத் தளங்கள் வழங்கியதன்படி, தேசிய பாதுகாப்பு எந்திரத்தில் அவர்கள் வகித்திருந்த பதவிகள் பற்றிய விபரங்களுடனான ஒரு முழுமையான பட்டியல் பின்வருமாறு உள்ளது.

இந்த வேட்பாளர்கள் குழுவின் அரசியல் பற்றி குறிப்பிடக்கூடிய அச்சுறுத்தும் அம்சம் ஒன்று உள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்துவரும் கடந்த இரண்டு தசாப்த கால போர்களிலும், மற்றும் பரந்த அமெரிக்க தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் அவர்களது தனிப்பட்ட ஈடுபாடு இருந்தபோதிலும், பெரும்பாலான சிஐஏ ஜனநாயக கட்சியினர் தங்களது வலைத் தளங்களில் வெளிநாட்டு மற்றும் இராணுவக் கொள்கை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இது, உலகெங்கிலுமான அமெரிக்க இராணுவத் தலையீடு மற்றும் அரசியல் கவிழ்ப்பு நடவடிக்கை ஆகியவற்றின் ஆக்கிரோஷமான விரிவாக்கத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர் என்பதை வலுவாக அறிவுறுத்துகிறது என்றாலும், அவர்களது மாவட்டங்களின் வாக்காளர்களிடமிருந்து இந்த உண்மையை மறைக்கவே அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த வேட்பாளர்கள் அவர்களது மாவட்டங்களின் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களைப் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் அவர்களது சொந்த வலைத் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. தேசிய-பாதுகாப்பு எந்திரத்துடனான நீண்டகால சாதனைகளை ஆட்சிக்கு வருவதற்கான அவர்களது முக்கிய சான்றுகளாகத்தான் அவர்கள் காண்கிறார்கள், மாறாக எதையும் அவர்கள் குறைத்துமதிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போர்-எதிர்ப்பு என்பது ஒன்றைத் தவிர, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யேமன் மற்றும் ஏனைய நாடுகளில் நடந்த போர்களில் அவர்களது சொந்த பங்கேற்பிலிருந்து முடிவெடுப்பது குறித்து இந்த வேட்பாளர்கள் எவரும் எந்தவித எதிர்மறையான தாக்கத்திற்கும் உள்ளாகவில்லை என்பதும் அதே அளவிற்கு குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா : நான்காவது மாவட்டம்


Jessica Morse

ஜெசிகா மோர்ஸ், அவரது சொந்த வலைத் தள தகவல்படி, “ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு மூலோபாயவாதியாக” அவர் பணியாற்றியதில் வெளியுறவுத்துறைக்கான ஈராக் நாட்டின் ஒருங்கிணைப்பாளராக அவர் இருந்துள்ளார். ஒரு நீண்டகால சிஐஏ முன்னணி அமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான முகமைக்காக (Agency for International Development) அவர் பணியாற்றியுள்ளார், பின்னர் அமெரிக்க பசிபிக் கட்டளையகத்திற்கான ஆலோசகராக அவர் இருந்துள்ளார், அப்போது அவர் “அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவை வலுப்படுத்தினார் என்பதுடன், தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக செயலாற்றினார்.” அவர் உண்மையில் ஐந்து முறை குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவரான டாம் மெக்கிளிண்டாக்கை இறுதி அறிவிப்பு செய்யும் காலமான கடந்த ஜூன் 30 ஆம் தேதிக்குள், கடந்து சென்று விட்டார், ஆனாலும் போட்டியில் ஒரு பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார். இந்த மாவட்டம், Sierra Nevada range மற்றும் அதன் அடிவாரத்தைச் சேர்த்து தெற்கு சேக்ரமெண்டோ புறநகர் பகுதியிலிருந்து விரிவடைகிறது.         

கொலராடோ : ஆறாவது மாவட்டம்


Jason Crow

ஜேசன் க்ரோ, ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரச்சாரக் குழு (DCCC) அதன் “சிவப்பிலிருந்து நீலம்” திட்டத்தின் கீழ் பதவி உயர்வு அளித்த முதல் வேட்பாளர்களில் ஒருவராக அவர் இருந்தமை, பல முதன்மை போட்டியாளர்களை விட அவரை சாதகமானவராக்கியது. ஈராக் படையெடுப்பின் போது வான்குடை மிதவை படைவீரர் படைப்பிரிவை வழிநடத்திய 82வது வான்வழிப் பிரிவின் மூத்த படைத்துறை வீரராக அவர் உள்ளார். அவரது வலைத் தள தகவல்படி, “ஈராக்கில் இருந்து திரும்பிய பின்னர் உடனடியாக அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கான 75வது ரேஞ்சர் படைப்பிரிவில் அவர் சேர்ந்தார், மேலும், கூட்டு சிறப்பு நடவடிக்கை பணிக்குழுவின் (Joint Special Operations Task Force) ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் இரண்டு கூடுதல் சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டார் என்பதுடன், பாக்கிஸ்தான் எல்லையில் பணியாற்றி கேப்டனாகவும் ஜேசன் பதவியுயர்வு பெற்றார்.” பின்னர், டென்வரில் வர்த்தக நலன்கள் தொடர்பான ஒரு வழக்கறிஞராக கடந்த ஒரு டசின் ஆண்டு காலத்தை அவர் செலவிட்டுள்ளார். ஐந்து முறை குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைக் காஃப்மேன் அளவிற்கு டாலருக்கு டாலர் ஈடாக நிதி திரட்டுவதில் இணையானவராக க்ரோ இருந்தார் என்பதுடன், டென்வர் புறநகர் மாவட்டத்தில் மக்களுக்கு பிடித்தமானவராகவும் அவர் கருதப்படுகிறார்.              

ஃபளோரிடா : ஆறாவது மாவட்டம்


Nancy Soderberg

நான்சி சோடெர்பேர்க், கிளிண்டன் நிர்வாகத்திற்கு திரும்பிச் செல்ல வைக்கும் ஒரு நீண்டகால அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரமுகர் ஆவார். 1992 கிளிண்டன்-கோர் பிரச்சாரத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவராக அவர் இருந்தார், பின்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாளர்களின் இயக்குநராகவும், பின்னர் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் துணை உதவியாளராகவும், பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான ஒரு மாற்று அமெரிக்க தூதுவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பொஸ்னியாவில் அமெரிக்கத் தலையீடு மற்றும் கொசோவோ குண்டுவீச்சு போன்ற கொள்கைகளோடு அவர் அடையாளம் காணப்படுகிறார். அதன் பின்னர், சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) உட்பட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்த தனியார் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு தலைமை வகிப்பதில் அவருடைய நேரத்தை அதிகம் செலவிட்டார். மேலும், கடற்படை முதுநிலைக் கல்வி (Naval Postgraduate School) மற்றும் கடற்படைப் போர் கல்லூரி (Naval War College) ஆகியவற்றின் தலைவருக்கான ஆலோசகர்களின் வாரியத்திலும் அவர் இருக்கிறார். இந்த பந்தயம் சமவாய்ப்பு கொண்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், சோடெர்பேர்க், ஆளுநருக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ரான் டி சாண்டிஸ் ஐ வெற்றி கொள்ளும் பந்தயத்தில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிக்கேல் வால்ட்ஸை விட அதிகளவு முன்னிலையில் உள்ளார்.

புளோரிடா : பன்னிரண்டாவது மாவட்டம்


Christopher Hunter

கிறிஸ்டோபர் ஹண்டர், 9/11 தாக்குதலைத் தொடர்ந்து FBI இல் சேர்ந்த நிலையில், தனது அரசு வழக்கறிஞர் பணியை விட்டு அவர் வெளியேறினார். குறிப்பாக, “புலனாய்வு எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் சர்வதேச தப்பியோடல்கள் குறித்த விசாரணைகளை மையப்படுத்தும்” ஒரு முகவராக அவர் பணிபுரிந்தார். நீண்டகால இராணுவ மிரட்டலுக்கு உள்ளான அவரது வலைத் தளம், “மேம்பட்ட துப்பாக்கிச் சூடு, தீவிரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் அதிநவீன உளவுத்துறை நடவடிக்கைகள் போன்றவை எங்களது பாதுகாப்பு மூலோபாயத்தை இயக்க வேண்டும்” என தெரிவிப்பதுடன், “ரஷ்யா மற்றும் அதன் கொடுங்கோன்மை ஆட்சி மீதான ஒரு சமரசமற்ற வெற்றியையும்” கோருகிறது. ஹண்டர், FBI பணியிலிருந்து விலகி ஒரு கூட்டாட்சி வழக்கறிஞராக ஆனார், பின்னர் கடந்த டிசம்பரில் நீதித்துறையை விடுத்து அவரது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தம்பா-சென் பீட்டர்ஸ்பேர்க் புறநகர்ப்பகுதிகளில் உள்ள ஒரு மாவட்டத்தில் மூன்று முறை குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வான குஸ் பிலிராக்கிக்கு எதிரான ஒரு நீண்டகால சாத்தியமுடையவராக அவர் கருதப்படுகிறார்.

புளோரிடா : பதினெட்டாவது மாவட்டம்


Lauren Baer

லாரன் பேயர், வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் அவரை அடுத்துவந்த ஜோன் கெர்ரி ஆகிய இருவருக்கும், அத்துடன் ஐ.நா. தூதர் சமந்தா பவர் என்பவருக்கும் சட்ட ஆலோசகராக இருந்தார். வெளியுறவுத்துறையை விட்டு வெளியேறிய பின்னர், முன்னாள் வெளியுறவுச் செயலரான மட்லீன் ஆல்பிரைட் ஸ்தாபித்த உலகளாவிய மூலோபாய நிறுவனமான Albright Stonebridge Group இல் சேர்ந்தார். பின்னர், அவர் தனது பலவருட கால வெளியுறவுக் கொள்கை அனுபவங்களை மக்கள் சபைக்கு எடுத்துச் சென்று, அங்கு அவர் பென்டகனுக்கு நிதியுதவியளிப்பதற்கு உறுதி செய்தார், “ஏனென்றால், உலகிலேயே வலுவான, சிறந்த ஆயுதமேந்திய மற்றும் மிகுந்த பயிற்சி பெற்ற இராணுவத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்” என்பதாக அவரது வலைத் தளம் தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தனது இரண்டு கால்களையும் இழந்த தாமே ஒரு நீண்ட அனுபவமிக்க இராணுவப் படைவீரராக, பேயர், முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப்ரையன் மாஸ்ட் இன் சுவடுகளை பின்பற்றுகிறார் என்பதுடன், West Palm Beach இன் மையத்திலுள்ள புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோர மாவட்டத்தில் நிதி திரட்டுவதிலும், வாக்காளர் வாக்கெடுப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இல்லினாய்ஸ் : பன்னிரண்டாவது மாவட்டம்


Brendan Kelly

பிரெண்டன் கெல்லி, இந்த ஆண்டுக்கு முன்னர் அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த ஒரு டசின் இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். சிவிலிய பென்டகன் ஊழியர்களின் மகனாக, ஸ்காட் விமானப் படைத் தளத்தில் வளர்ந்து, ROTC இல் சேர்ந்து பயின்று ஒரு கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மத்திய கிழக்கில் தயார்ப்படுத்தல் பணியில் இருந்தது உள்ளிட்ட சிறு காலத்திற்கு பின்னர், தெற்கு இல்லினாய்ஸூக்கு அவர் திரும்பி, சட்டத்தில் பட்டம் பெற்று, ஒரு கூட்டாட்சி வழக்கறிஞராக ஆனார், பின்னர் சென் லூயிஸ் இன் இல்லினாய்ஸ் புறநகர் பகுதியில், சென் கிளேர் கவுண்டி க்கான அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். குவாண்டநாமோ வளைகுடாவில் கைதிகள் மீதான வழக்குக்களை கண்காணிப்பவராக பணிபுரிந்து தேசிய மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை (National District Attorneys Association) அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர், இரண்டாவது முறை குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள மைக் பாஸ்டுக்கு எதிராக சமவாய்ப்புள்ள ஒரு பந்தயத்தில் இருக்கிறார் என்பதுடன், நிதி திரட்டும் பொறுப்பிற்கும் பொருத்தமானவராக உள்ளார்.      

கென்டக்கி : ஆறாவது மாவட்டம்


Amy McGrath

ஆமி மெக்ராத், அநேகமாய் இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்களில் பெரியளவில் பிரசித்தி பெற்றவர் என்பதுடன், முன்னதாக அரசியல் ரீதியாக அறியப்படாத அளவிலான ஒரு மாபெரும் தொகையாக 3 மில்லியன் டாலரை அவர் திரட்டியுள்ளார். மெக்ராத், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்த 89வது நடவடிக்கைகுழுவுடன் இணைந்து பணியாற்றிய கடற்படை (Marine Corps) போர் விமான ஓட்டியாக இருந்தார். அவரது இராணுவ வாழ்க்கை அவரது தேர்தல் வேட்பாளர் தன்மைக்கான அச்சாணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வலைத் தளத்தின் முகப்பு பக்கம் அவரை அமெரிக்க கடற்படை (ஓய்வு), லெப்டினன்ட் கர்னல் என அடையாளம் காட்டுகிறது. அத்துடன், ஒரு ஜெட் விமானம் மற்றும் ஒரு போர் ஜெட் விமானத்திற்கு அடுத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரேமாதிரி நிற்கும் மெக்ராத்தின் வழமையான புகைப்படம் பக்கத்திற்கு பக்கம் காட்சியளிப்பதாக உள்ளது. மூன்று முறை குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள ஆண்டி பார் க்கு எதிராக ஒரு சிறியளவு ஆதரவு பெற்ற வேட்பாளராக மெக்ராத் கருதப்படுகிறார்.

மைனே : இரண்டாவது மாவட்டம்


Jared Golden

ஜாரெட் கோல்டன், 9/11 தாக்குதலுக்குப் பின்னர் கடற்படையில் சேர்க்கப்பட்டார் என்பதுடன், 2004ல் ஆப்கானிஸ்தானிலும் 2005-2006ல் ஈராக்கிலும் பணியமர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகளை ஒரு காலாட்படை வீரராக அவர் செலவழித்தார். இந்த 30 இராணுவ-உளவுத்துறை ஜனநாயகக் கட்சியாளரில் ஒரே அடிமட்ட இராணுவ சிப்பாயாக அவர் ஒருவர் மட்டுமே இருந்ததும், மற்றும் அமெரிக்க துருப்புக்கள் மீதான போரின் எதிர்மறை தாக்கத்தை ஒப்புக்கொண்ட ஒரே நபராக அவர் இருந்ததும், பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவு உடனான அவரது சொந்த நோய் ஆய்வை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க போர்களில் அவர் தெளிவாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார், என்றாலும், ஒரு தன்னார்வமிக்க பள்ளி ஆசிரியராகத் தான் ஆப்கானிஸ்தானுக்கு அவர் திரும்பினார், மேலும் தொடர்ந்து, செனட் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசு விவகாரக் குழுவிற்கான (Senate Homeland Security and Governmental Affairs Committee) ஒரு பணியாளராக பணிபுரியத் தொடங்கினார், அங்கு மைனேவின் குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் கொலின்ஸூக்கு அவர் வேலை செய்தார். மைனே பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியாளாக ஒரு ஆசனத்தை அவர் வென்றதன் மூலமாக, அவரது சொந்த அரசியல் வாழ்க்கைக்கான பொற்காலம் என்பது 2014ல் தொடங்கியது, பின்னர் 2016ல் ஜனநாயகக் கட்சிக்கான சவுக்கடி அதிகரித்த நிலையில், இந்த ஆண்டு கட்சி ஸ்தாபகத்தின் ஆதரவுடன் நாடாளுமன்றத்திற்கான பரிந்துரைப்பை வென்றார். பெருமளவு நிதியளிப்பு பெற்ற இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான புரூஸ் பொலிகுயின் உடனான சமவாய்ப்புள்ள ஒரு பந்தயத்தில் அவர் உள்ளார்.

மேரிலாந்து : முதல் மாவட்டம்


Jesse Colvin

ஜெஸ்ஸி கொல்வின், ஆப்கானிஸ்தானுக்கு நான்கு போர் ஆயத்த பணிகளுக்குச் சென்றது, மற்றும் வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைக்குட்படாத மண்டலத்தில் (Demilitarized Zone) கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு பணியாற்றச் சென்றது உட்பட, இராணுவ புலனாய்வுகளில் ஆறு ஆண்டுகளை அவர் செலவிட்டார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, “இராணுவத்தில் பிரதான தலைமைத்துவ பாடசாலையான அமெரிக்க இராணுவத்தின் ரேஞ்சர் பாடத்திட்டத்தின் (US Army’s Ranger Course) கீழ் பயின்ற ஒரு பெருமைமிக்க பட்டதாரியாக நான் இருக்கிறேன்… தாலிபான், அல் கொய்தா மற்றும் ஏனைய பயங்கரவாதத் தலைவர்களை பிடித்தல் / கொலை செய்தல் இயக்கங்களின் பணிகளை எளிதாக்குவதற்கு செயலாற்றிய உளவுத்துறை குழுவினரை நான் வழிநடத்தினேன். நான், அழிக்கும் ஆளில்லா விமானத் திட்டங்களை நிர்வகித்தேன். மேலும், மனித உளவுத்துறை ஆதாரங்களை நான் இயக்கினேன். தினமும், எனது அணியும், நானும் எடுத்த டசின் கணக்கான முடிவுகள், எனது சக ரேஞ்சர்கள், எங்களது ஆப்கான் கூட்டாளிகள், மற்றும் ஆப்கானிய குடிமக்கள் ஆகியோரது வாழ்வு பறிபோவதற்கும், உயரிழப்பிற்கும் காரணமாகின.” மேரிலாந்தின் மொத்த கிழக்கு கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய பெரும்பாலும் கிராமப்புற மாவட்டமான அங்கு, நான்கு-முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ஆண்டி ஹாரிஸூக்கு எதிரான, ஆனால் மாவட்டத்தில் ஒரு தனித்துவமான பின்தங்கிய வேட்பாளராக அவர் உள்ளார்.

மிச்சிகன் : முதலாவது மாவட்டம்


Matthew Morgan

மத்தேயு மோர்கன், கடற்படைப் பிரிவில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் வாய்ப்பைக் கொண்டிருந்தார். “அதில் வழக்கமாக நான் வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுவேன், மேலும், உச்சபட்சமாக பல மூத்த பணியாளர் பதவிகளில் இருந்துகொண்டு, பாதுகாப்புச் செயலர் உட்பட பல இராணுவத் தலைவர்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்” என தெரிவிக்கிறார். மேலும், ஈராக்கிற்கு இரண்டு சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டார் என்பதுடன், ஆபிரிக்காவின் மையப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புப் பணியிலும் ஈடுபட்டார். ஒட்டுமொத்த மேல்மட்ட தீபகற்பத்தையும் மற்றும் கீழ்மட்ட தீபகற்பத்தின் வடக்கு பகுதியின் முக்கால் பங்கு பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கிராமப்புற பகுதியைக் கொண்ட முதலாவது மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்பதற்கு எதிர்ப்பற்றவராக அவர் இருந்தார். முதல்முறை தேர்வாகியுள்ள குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான, அதிலும் அவரும் ஒரு ஓய்வுபெற்ற கடற்படைப் பிரிவு லெப்டினன்ட் ஜெனரலாக ஒருமுறை கடற்படையினருக்கு உத்தரவிட்டவரான ஜாக் பெர்க்மேனுக்கு எதிராக பந்தயத்தில் இவர் உள்ளார். 

மிச்சிகன் : எட்டாவது மாவட்டம்


Elissa Slotkin

எலிஸா ஸ்லாட்கின், ஒப்பீட்டளவில் இளமையானவர் என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களில் முன்னணி பங்காளியாக ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நபராவார். 42 வயதான இவர், ஈராக்கில் ஒரு சிஐஏ முகவராக மூன்று சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது, பின்னர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியது உட்பட, தேசிய பாதுகாப்பு பதவிகளில் 15 ஆண்டுகளை செலவழித்து, பின்னர் ஈராக் இயக்குநர் பதவிக்கு உயர்வு பெற்றார். ஒரு தந்திரமிக்க போர்க் குற்றத்தன்மை கொண்ட, தேசிய புலனாய்வுப் பிரிவின் முதல் இயக்குநரான ஜோன் நெக்ரோபோன்ட், அவரை ஒரு உயர் உதவியாளராக பணியமர்த்தினார். பின்னர் அவர் பென்டகனுக்கு இடம்பெயர்ந்து, அங்கு, சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களுக்கான பாதுகாப்புச் செயலருக்கான ஒரு முதன்மை துணை உதவியாளராக பணியமர்த்தப்பட்டு, ஆளில்லா விமானத் தாக்குதல்கள் (drone warfare), “உள்நாட்டு பாதுகாப்பு” மற்றும் இணைய போர் போன்றவை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பொறுப்பில் இருந்தார். அவரது குடியரசுக் கட்சி எதிர்ப்பாளரான, குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்வான மைக் பிஷப்பை மிகவும் விஞ்சியவராக அவருக்கான ஆசனத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளார். (பார்க்கவும் : “Elissa Slotkin: A CIA Democrat runs for Congress in Michigan”)       

மின்னசோட்டா : முதலாவது மாவட்டம்


Dan Feehan

டான் ஃபீஹான், ஒரு முன்னணி இராணுவ சிப்பாயாகவும், மற்றும் ஒரு சாதாரண பென்டகன் அதிகாரியாகவும் இருந்தார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, 2005 முதல் 2009 வரையிலும், “ஒரு செயதிறன்மிக்க கடமையுணர்வுள்ள சிப்பாயாக பணியாற்றி, ஈராக்கிற்குள் அமெரிக்க ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து புஷ் நிர்வாகம் பெயரிட்ட ஓர்வெல்லிய தலைப்பான, ஈராக்கிய சுதந்திர நடவடிக்கை (Operation Iraqi Freedom) என்பதன் ஒரு பாகமாக இரண்டு போர் சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ஒபாமா நிர்வாகத்தில் சேர்ந்து, முதலில் ஒரு வெள்ளை மாளிகை உதவியாளராகவும், பின்னர் பாதுகாப்புச் செயலருக்கான இடையேற்பு உதவியாளராகவும் பணியாற்றினார். அயோவா எல்லையுடன் கூடிய மின்னசோட்டாவின் தெற்கு அடுக்கை உள்ளடக்கிய முதல் மாவட்டத்தில் அவர் சற்று பிரபலமானவர், அங்கு இப்போது கட்சியின் கவர்னர் வேட்பாளராகவுள்ள, ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிம் வால்ஸ் இந்த மாவட்டத்தை முன்னர் தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கணிசமான ஆதரவுடன் ஃபீஹான், 2016ல் வால்ஸிடம் தோற்றுப்போன குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜிம் ஹேஜ்ட்ரோனை பின்தங்கச் செய்துள்ளார்.    

நியூ ஜெர்சி : மூன்றாவது மாவட்டம்


Andy Kim

ஆண்டி கிம், ஒரு போர் திட்ட வகுப்பாளராகவும் சிவிலிய மூலோபாயவாதியாகவும் இருந்தாரே தவிர, ஒரு சிப்பாயாக இல்லை. அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது மற்றும் நாட்டை பாதுகாப்பது குறித்து வெள்ளை மாளிகையில் நான் பணியாற்றினேன் என்பதுடன், தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்புச் செயலருக்கும், பென்டகனுக்கும் ஆலோசனை வழங்கினேன், மேலும் ஆப்கானிஸ்தானில் ஜெனரல்களாக இருந்த டேவிட் பெட்ரீயஸ் மற்றும் ஜோன் ஆலன் ஆகியோருக்கு ஒரு மூலோபாய ஆலோசகராகவும் பணியாற்றினேன். ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றியபோது, நான் ஒரு ஜனநாயாகவாதியா அல்லது குடியரசுவாதியா என எவரும் என்னைக் கேட்கவில்லை. எங்களது நாட்டைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தை மையப்படுத்தி நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றினோம்” என தெரிவிக்கிறார். ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஈராக்கிற்கான இயக்குநராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்ததான தனது இறுதிப் பதவி பற்றி அவர் எதையும் விவரிக்கவில்லை. தென் ஜெர்சி மாவட்டத்தை இரண்டு முறை தக்கவைத்துக் கொண்ட, குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாம் மாக்தூருடன் ஒரு சமவாய்ப்புள்ள பந்தயத்தில் இவர் போட்டியாளராகவுள்ளார்.

நியூ ஜெர்சி : நான்காவது மாவட்டம்


Josh Welle

ஜோஷ் வெல்லே, கடற்படை கல்விச்சாலையில் பட்டம் பெற்று, ஆப்கானிஸ்தானில் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு என நான்கு கப்பல்துறை சார்ந்த பணிநியமனங்களைப் பெற்றது உட்பட 12 ஆண்டுகள் உற்சாகத்துடன் பணியாற்றினார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, “அவரது பொறுப்புக்கள் என்பது, காபூலில் மூலோபாயரீதியில் ஆலோசனையளிக்கும் ஒரு தூதராக விரிவடையத் தொடங்கி, பாரசீக வளைகுடாவில் ஒரு கடற்படை அகழ்பீரங்கி எதிர்ப்பு நடவடிக்கை கப்பலின் நிறைவேற்று அதிகாரி என்பதில் முடிவடைந்தது.” பின்னர், பென்டகனுக்காக ஒரு மொபைல் பயன்பாடுகளை உருவாக்கும் மென்பொருள் நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். கருக்கலைப்பு உரிமைகள் மீதான வெறித்தனமான அவரது எதிர்ப்பை வைத்து நீண்டகாலமாக அடையாளம் காணப்படுபவரும், 19 முறை தேர்வான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கிறிஸ்டோபர் ஸ்மித்துக்கு மிகவும் பின்தங்கிய போட்டியாளராக லே இருந்தார், என்றாலும் பெருமளவு நிதியை அவர் திரட்டியிருந்தார். விளாடிமிர் புட்டினுடன் ஒருபுறம் தோன்றிய ட்ரம்ப்பின் ஆகஸ்ட் பத்திரிகையாளர் மாநாட்டை கண்டனம் செய்ய மறுத்துவிட்டதற்காக ஸ்மித்தை அவர் கண்டனம் செய்து, “நமது தேசிய பாதுகாப்பு நிறுவனங்களையும் மற்றும் உலகெங்கிலுமான நீண்டகால நலன்களையும் பாதுகாக்கின்ற வகையில், 4வது மாவட்ட மக்கள் பிரதிநிதிக்கு தகுதியுடையவர்” என்றும் தெரிவிக்கிறார்.

நியூ ஜெர்சி : ஏழாவது மாவட்டம்


Tom Malinowski

டாம் மலினோவ்ஸ்கி, “மனித உரிமைகள் ஏகாதிபத்தியம்” என்றழைக்கப்படுவதன் ஒரு நீண்டகால ஆதரவாளராவார். மறைந்த செனட்டர் டானியல் பாட்ரிக் மோய்னிஹானுக்கு ஒரு உதவியாளராக இருந்து, பின்னர் 1990 களில் வெளியுறவுத்துறை மற்றும் கிளின்டன் வெள்ளை மாளிகையில் முக்கியமாக உரையாசிரியராக பணியாற்றினார். 2001 முதல் 2014 வரையிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வாஷிங்டன் அலுவலகத்திற்கு அவர் தலைமை வகித்தார், இந்த காலகட்டத்தில் அரசு சாரா அமைப்பு (NGO) அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் உறுதியாக இணைந்திருந்தது. 2014ம் ஆண்டில் ஜோன் கெர்ரியின் கீழ், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் உழைப்பு குறித்த உதவி வெளியுறவுத்துறை செயலராக ஒபாமா நிர்வாகத்தில் மலினோவ்ஸ்கி சேர்ந்தபோது இது வெளிப்படையானது. அமெரிக்க அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ள ISIS போன்ற குடிப்படைக் குழுக்கள் மற்றும் மியன்மர் (இராணுவ ஆட்சிக்குழு சீன சார்பில் இருந்து அமெரிக்க சார்பு நோக்குநிலைக்கு மாற்றப்பட்டது வரை), இலங்கை (அதன் அரசாங்கம் அதேமாதிரி செய்தது வரை), வட கொரியா மற்றும் உக்ரேன் போன்ற அரசுகளுக்கு எதிரான மனித உரிமை குற்றம்சாட்டுதல்களில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கிடையில், சவூதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் அத்தகைய அழுத்தத்தைப் பெறவில்லை. கணிசமானளவு ஆதரவுடன், ஐந்து முறை தேர்வான குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான லியோனார்டு லான்ஸை பின்தங்கச் செய்ததுடன், நியூ யோர்க் பெருநகரப் பகுதியின் மேல்தட்டு மேற்கு புறநகர் பகுதிக்கான ஒரு ஆசனத்தை வெற்றி கொள்வதற்கான சாதகத்தை அவர் கொண்டுள்ளார்.

நியூ ஜெர்சி : பதினோராவது மாவட்டம்


Mikie Sherrill

மைக்கி செர்ரில், கடற்படை கல்விச்சாலையில் பட்டம் பெற்று, பின்னர் ஒரு கூட்டாட்சி வழக்கறிஞர் ஆவதற்கு முன்னதாக, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் 10 ஆண்டுகள் செயலூக்கமிக்க சேவையாற்றி ஹெலிகாஃப்டர் விமானி ஆனார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, இராணுவத்தில் இருந்தபோது, “ஈராக்கிய ஆக்கிரமிப்பின் போது ஐரோப்பிய அரங்கில் யுத்தக் கண்காணிப்புத் தளத்தில் (Battle Watch Floor) மைக்கி பணியாற்றினார், மற்றும் அமெரிக்க அட்லாண்டிக் கடற்படையின் தலைமை துணை தளபதிக்கு ஒரு கொடி உதவியாளராகவும் (a Flag Aide) பணியாற்றினார். மேலும், ஒரு ரஷ்ய கொள்கை அதிகாரியாக அவர் பணிபுரிந்து, எங்களது அணுசக்தி உடன்படிக்கைகளை செயல்படுத்துவதற்காக செயலாற்றியதோடு, அமெரிக்க கடற்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் கடற்படை இடையேயான உறவையும் மேற்பார்வையிட்டார்.” ஒருவேளை, அவரது கடைசிக்கட்ட வேலைகள் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தினால் ஈர்க்கப்படுவதற்கு இணக்கமானதாய் இருந்தது, அவரது பிரச்சாரத்திற்காக பணத்தை வாரியிறைக்க அக்கட்சி வழிசெய்ததும், 12 முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ரோட்னி ஃப்ரீலிங்சூசென் ஓய்வு பெறும் நிலையில் இருந்தமையும் சேர்ந்து, ஒரு ஆசனத்திற்கான முதன்மைப் போட்டியை வெற்றிகரமாக நீக்குகிறது. நியூ ஜெர்சியில், பேட்டர்ஸன் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் செல்வவளமிக்க மாவட்டங்களில் ஒன்றான இம்மாவட்டத்திலுள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜே வெப்பரை விட பெரும் ஆதரவு கொண்டவராக செர்ரில் உள்ளார். சமீபத்திய FEC அறிக்கையின்படி, அவர் வெப்பரை விட 4.2 மில்லியன் டாலருக்கு அதிகமாக, ஆனால் 600,000 டாலருக்கு குறைவாக நிதி திரட்டியிருந்தார்.

நியூ யோர்க் : பதினோராவது மாவட்டம்


Max Rose

மேக்ஸ் ரோஸ், அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, அவர், “அமெரிக்க இராணுவத்தின் ஒரு நீண்டகால அனுபவமிக்க முன்னாள் இராணுவ வீரர் ஆவார். ஆப்கானிஸ்தானில் 2012-2013 காலகட்டத்தில் ஒரு செயலூக்கமிக்க கடமையுணர்வுள்ள அதிகாரியாக அவர் சேவையாற்றினார், என்பதுடன், வெண்கல நட்சத்திரம் (Bronze Star), பர்பில் ஹார்ட் (Purple Heart) மற்றும் காலாட்படைப் பிரிவு போர் பதக்கம் (Combat Infantryman Badge) ஆகியவற்றை வென்றவராவார். தேசிய பாதுகாப்பில் இப்போது தனது சேவையை அவர் தொடர்வதுடன், ரேஞ்சர் பதவிக்கு தகுதி வாய்ந்தவராக உள்ளார்.” தொடர்ந்து தேசிய பாதுகாப்பில் ஒரு அதிகாரியாக அவர் பணியாற்றிய அதே நேரத்தில், செலூக்கமிக்க கடமையாற்றலுக்குப் பின்னர், புரூக்ளின் மாவட்ட அரசு வழக்கறிஞருக்கு ஒரு சிறப்பு உதவியாளராக பணிபுரிய ரோஸ் நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில், சிறியளவிலான பயிற்சிகளில் பங்கேற்பதற்காக அவரது பிரச்சாரத்தில் இருந்து இரண்டு வாரகால இடைவெளி எடுத்துக் கொண்டார். ஸ்டேட்டன் தீவு மற்றும் புரூக்ளினின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய இந்த மாவட்டத்தில் இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டான் டொனோவனை சற்று விஞ்சி விட்டார்.

வடக்கு கரோலினா : ஒன்பதாவது மாவட்டம்


Dan McCready

டான் மெக்ரெடி, கடற்படைப் பிரிவின் ஒரு மூத்த படைத்துறை வீரராக பணியாற்றிய இவர் ஈராக்கில் இயேசுவைக் கண்டதாகக் கூறும் “சுத்தமான ஆற்றல்” மிக்க கோடீஸ்வரராக ஆனார், அங்கு யூப்ரடீஸ் நதியில் ஞானஸ்நானமும் பெற்றார். அவர், 9/11 தாக்குதலுக்குப் பின்னர் கடற்படையுடன் சேர்ந்து, ஈராக்கில் 2007ம் ஆண்டு “எழுச்சி” அலையின் போது 65 பேர் கொண்ட ஒரு படைப் பிரிவுக்கு கட்டளையிட்டார், என்பதுடன் தனது போர்க்கால பணியை ஒரு கேப்டனாக நிறைவு செய்தார். பின்னர் அவர் ஹார்வர்டில் MBA பட்டம் பெற்று, தனது சொந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னர் McKinsey & Co நிறுவனத்தில் ஒரு ஆலோசகராக பணியாற்றினார். மூன்று முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ராபர்ட் பிட்டென்ஜர், திருமணமான பெண்கள் தங்களது கணவருக்கு கீழ்ப்படிவதை ஆதரிக்கும் அடிப்படைவாத போதகர் மார்க் ஹாரிஸ் என்பவரால் முதல் நிலையில் தோற்கடிக்கப்பட்டார் என்ற நிலையில், அந்த ஆசனத்தை வெற்றி கொள்வதற்கு சாத்தியமானவராக மெக்ரெடி மாறினார். மூன்றிலிருந்து ஒன்று என்பதாக ஹாரிஸை அவர் கடந்து சென்று, ரொக்க கையிருப்பில் பெரும்புள்ளியாக முன்னணி வகித்து பிரச்சாரத்தில் ஈடுபட முனைந்தார்.

ஒஹியோ : ஏழாவது மாவட்டம்


Ken Harbaugh

கென் ஹார்பாக், விமானப்படை போர் விமானிகளின் மகனும் பேரனும் ஆவார். அவரும் கூட கடற்படையில் சேர்ந்து ஒரு பைலட் ஆனதுடன், மத்திய கிழக்கு மற்றும் கொரிய தீபகற்பத்தில் பறக்கும் உளவுப் பணிகளில் ஈடுபட்டார். அவரது தேர்தல் பிரச்சார வலைத் தளம், இராணுவ முனைப்பிலிருந்த மற்றும் கடற்படை விமானத்துடன் சேர்ந்திருந்த ஹார்பாக்கின் புகைப்படங்களை சிறப்பம்சப்படுத்துகிறது. இராணுவத்தில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், யேல் பல்கலைகழகத்திற்கு சட்டம் பயிலச் சென்றார், பின்னர் McKinsey ஆலோசனை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், மேலும் தலைமைச் செயல்பாட்டு அலுவலராகப் பணியாற்றி, பின்னர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான இயற்கை பேரழிவுகளுக்காக சேவையாற்ற மூத்த அனுபவமிக்க இராணுவப் படையினரை அணிதிரட்டும் நிறுவனமான டீம் ருபிக்கன் குளோபல் (Team Rubicon Global) நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார். இவர், கன்டோன்ஸை தளமாகக் கொண்ட மாவட்டத்தை மூன்று முறை தக்க வைத்துக்கொண்ட, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராபர்ட் கிப்ஸை கணிசமானளவு முன்னிலையுடன் கடந்து சென்றுள்ளார்.

பென்சில்வேனியா: ஆறாவது மாவட்டம்


Chrissy Houlahan

க்ரிசி ஹவுலாஹான், விமானப் படையில் ஒரு 10 ஆண்டுகால மூத்த படைவீரராக பணியாற்றி, ஒரு கேப்டனாக அப்பதவியை விட்டார், ஜனநாயகக் கட்சி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற கிட்டத்தட்ட உத்திரவாதம் பெற்றவராக உள்ளார் என்பதுடன், இது, இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ரியான் கோஸ்டெல்லோ திடீரென ஓய்வு பெறும் நிலையில், அம்மாவட்டத்தில் தேர்தலில் நிற்பதற்கான எந்தவொரு முதன்மை போட்டியாளரையும் அது அகற்றிவிட்டது. இந்த 42 வயதான வேட்பாளர், ஒரு பெரும் ஜனநாயகவாத வாக்காளர்களுடன் அவரிடம் விடப்பட்ட பென்சில்வேனியா மாவட்ட எல்லைகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் மறுதேர்தலில் பங்கேற்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை. கூடுதலாக, பிரச்சார நிதிகளில் 2.8 மில்லியன் டாலர் செலவு செய்த குடியரசுக் கட்சி எதிர்ப்பாளரான கிரேக் மெக்கலேவை பின்தள்ள, 174,000 டாலர் வரை செலவு செய்து, சாதகமான ஊடக காட்சியாக்கலின் ஒரு அலையை ஏற்பவராக இருக்கிறார். நியூ யோர்க் டைம்ஸின் ஃபிராங்க் ப்ரூணி என்பவரின் மிகவும் பின்தங்கிய சித்தரிப்பு இவ்வாறு கூறுகிறது: “பொதுவாக நீங்கள் க்ரிசி ஹவுலாஹான் போன்ற ஒரு வேட்பாளரைப் பற்றி மட்டுமே கனவு காண்கிறீர்கள். பிலடெல்பியாவின் புறநகர் பகுதியிலுள்ள மக்கள் உண்மையில் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.”           

பென்சில்வேனியா: பத்தாவது மாவட்டம்


George Scott

ஜோர்ஜ் ஸ்காட், ஒரு இராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருந்தார், பனாமா மீதான அமெரிக்க படையெடுப்பு, முதல் பாரசீக வளைகுடாப் போர் மற்றும் 2001ல் தொடங்கப்பட்டதான “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதன் உத்தியோகபூர்வ பெயரான சுதந்திரத்தை நீட்டிக்கும் நடவடிக்கை (Operation Enduring Freedom) ஆகியவை உட்பட 20 ஆண்டுகள் செயலூக்கமிக்க பணியாற்றினார். 1,800 க்கு அதிகமான படையினரைக் கொண்ட படைப்பிரிவை கட்டிக்காத்த பின்னர் ஒரு லெப்டினன்ட் கேர்னல் ஆக ஓய்வு பெற்றார். பின்னர், கெட்டிஸ்பேர்க்கில் லூதரன் இறையியல் கருத்தரங்கிற்குள் ஸ்காட் (Lutheran Theological Seminary) நுழைந்தார், மேலும் இப்போது பென்சில்வேனியாவின் கிழக்கு பேர்லினில் உள்ள டிரினிட்டி லூதரன் தேவாலயத்தில் போதகராக உள்ளார். செனட்டர் ஜோன் மெக்கெயினின் மறைவுக்கு பின்னர், ஸ்காட் விடுத்த அறிக்கை, “ஒரு உண்மையான தேசபக்தராக, ஒரு அரசியல் பிரமுகராக, மற்றும் எந்தவொரு உயர் ஸ்தானத்திலும் மதிப்புமிக்க ஆட்சி நிபுணராக எங்கள் நாடு அவரை நினைவுகூரலாம். மேலும், எங்கள் நாட்டின் பெரும் இழப்பாக அவர் இருப்பார்” என்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த ஹாரிஸ்பேர்க் நகரத்தையும் உள்ளடக்குவதாக மாவட்டத்தின் எல்லைகள் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும் கூட, மூன்று முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ஸ்காட் பெர்ரியை எதிர்த்து ஒரு பின்தங்கிய நிலையில் ஜோர்ஜ் ஸ்காட் உள்ளார்.

பென்சில்வேனியா: பதினேழாவது மாவட்டம்


Conor Lamb

கோனார் லாம்ப், மாநிலத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள, 18வது காங்கிரஸ் மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒரு சிறப்பு தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், மறுசீரமைப்பிற்கு பின்னர் அவரது வீடு 17 வது மாவட்டத்திற்கு சென்ற பின்னர், இப்போது அவர் மூன்று முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான கெய்த் ரோத்ஃபஸை சவால் செய்கிறார். லாம்பின் தேர்தல் பிரச்சார சுயசரிதை, அவரை “கடற்படை மற்றும் முன்னாள் கூட்டாட்சி வழக்கறிஞராக,” அடையாளம் காண்பதாகத் தொடர்கிறது, மேலும் சிறப்பு தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தனது இராணுவ பின்னணியை அவர் வலியுறுத்தினார். 2013 வரை தூர கிழக்கில், ஒரு கேப்டனாகவும், நீதிபதி வழக்கறிஞர் ஜெனரலாகவும் (Judge Advocate General) (உண்மையில் ஒரு கடற்படை வழக்கறிஞராக) செயலூக்கத்துடன் கடமையாற்றினார். தற்போது அவர் கடற்படைப் பிரிவில் மேஜராக பணியாற்றுகிறார். இந்த ஆண்டு 7 மில்லியன் டாலருக்கு அதிகமாக நிதி திரட்டி, சிறப்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக 5 மில்லியன் டாலரை செலவு செய்துள்ளார். புதிய 17 வது மாவட்டத்தின் எல்லைகள் ஜனநாயகக் கட்சியை நோக்கி ஈர்க்கப்படுவதால், ரோத்ஃபஸை விட பெரும் ஆதரவு கொண்டவராக வேட்பாளராக லாம்ப் கருதப்படுகிறார்.

டெக்சாஸ் : இருபத்தியோராவது மாவட்டம்


Joseph Kopser

ஜோசப் கோப்ஸர், ஒரு West Point பட்டதாரி மற்றும் இராணுவ அதிகாரி ஆவார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, “விமானத் தாக்குதல் மற்றும் வான்வீச்சு பயிற்சிகளில் தன்னார்வத் தொண்டு புரிந்த பின்னர், யுத்தத்திற்கு வெளியிலான இராணுவத்தின் கடினமான திட்டமான, ரேஞ்சர் பாடசாலைக்கு ஜோசப் தலைமை வகித்தார். நான்கு மணி நேர தூக்கம் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுடன் கூடிய தீவிர பயிற்சியளிக்க வடிவமைக்கப்பட்டதான இந்தப் பயிற்சி அவரது சொந்த உடல் மற்றும் உணர்ச்சி சகிப்புத்தன்மையின் எல்லைகளுக்கு ஜோசப் ஐ தள்ளியது.” அவர் ஒரு West Point பயிற்றுவிப்பாளராக ஆனார், என்றாலும், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் போது தன்னார்வ பணிக்கு அவர் அங்கு சென்றதோடு, இரண்டுக்கு அதிகமான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, பெரும்பாலும் மொசூலில் 14 மாதங்களைச் செலவிட்டார். அமெரிக்காவிற்கு அவர் திரும்பிய பின்னர், எதிர்கால போர் முறை (Future Combat System) திட்டங்களை அபிவிருத்தி செய்யும் உயர்மட்ட பென்டகன் வேலைகளுக்கு அவர் பணிக்கப்பட்டார், அத்துடன் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உரையாசிரியராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். 2011ல் இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர், RideScout நிறுவனத்திற்கு அடிப்படையாக இருந்த ஒரு சவாரி-பகிர்வு தளத்தை அவர் உருவாக்கினார், தொடர்ந்து டைய்ம்லர்-பென்ஸ் நிறுவனத்துக்கு அதை விற்றது அரசியலில் நுழைவதற்கான வளங்களை அவருக்கு அளித்தது. 15 முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானவரும், ஒரு மோசமான புலம்பெயர் எதிர்ப்பு கிளர்ச்சியாளருமான, லாமர் ஸ்மித் ஓய்வு பெற்றதால் காலியாக விடப்பட்ட இடமான, சான் அன்டோனியோ-ஆஸ்டின் பிரதேசத்தில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றும் போட்டியில் குடியரசுக் கட்சி உறுப்பினரான சிப் ரோயை விட அதிகளவு நிதியை கோப்ஸர் திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் : இருபத்தி மூன்றாவது மாவட்டம்


Gina Ortiz-Jones

கினா ஓர்டிஸ் ஜோன்ஸ், ஈராக்கில் ஒரு விமானப்படை உளவுத்துறை அதிகாரியாக இருந்தார். இவ்வம்மையாரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, “12 ஆண்டு கால அவரது கடமையுணர்வுமிக்க சேவையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தனது தொழில் வாழ்க்கையை கினா தொடர்ந்து கட்டமைத்து வந்துள்ளார் – இது, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கியதையும், தெற்கு சூடானின் சுதந்திரமான பொதுஜன வாக்கெடுப்புக்கு ஆதரவளித்ததும் மற்றும் லிபியா நெருக்கடி புலனாய்வுக் குழுவில் (Libya Crisis Intelligence Cell) செயலாற்றியதுமான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கியதையும் உள்ளடக்கியது.” பின்னர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதித்துவ அலுவலகத்தின் (Office of the America Trade Representative) முதலீட்டிற்கான இயக்குநராக அவர் ஆனார், அங்கு அவர் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்துக்களை விளைவிக்கும் சாத்தியமுள்ள வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றி மறுஆய்வு செய்யும் துறைக்கு தலைமை வகித்தார். 23வது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசனத்திற்கான இந்த போட்டி உண்மையில் உளவுக்கு எதிரான உளவாக உள்ளது, இது, டெக்சாஸ்-மெக்ஸிகோ எல்லையோரத்துடன் எல்-பாஸோவிலிருந்து லார்டோவிற்கு அருகிலான பகுதியிலும், மற்றும் சான் அன்டோனியோ புறநகர் பகுதி வரையிலும் நடைபெறுகிறது என்பதுடன், முன்னாள் சிஐஏ முகவரான, இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான வில் ஹார்ட் உடனான போட்டியாகவும் உள்ளது.

டெக்சாஸ் : முப்பத்தியோராவது மாவட்டம்


Mary Jennings Hegar

மேரி ஜென்னிங்ஸ் ஹெகர், விமானப்படைக்கான ஒரு ஹெலிகாஃப்டர் பைலட்டாக இருந்து, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஆப்கானிஸ்தானில் கடமை ரீதியான மூன்று சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். ஹெகர் அவரது வலைத் தளத்தில் தெரிவித்துள்ளபடி, இது, “எதிரியால் சுட்டு வீழ்த்தப்படுகையில் எனது குழுவினரையும் நோயாளிகளையும் பாதுகாப்பது, மற்றும் Purple Heart விருதை சம்பாதித்தது” என்பதை உள்ளடக்கியது. பெண்கள் போரில் ஈடுபடுவதைத் தடுக்கும் பென்டகன் கொள்கைக்கு எதிரான ஒரு வழக்குதொடுத்ததன் மூலமாக ஹெகர் முக்கியத்துவம் பெற்றார், மேலும் அவரது நினைவுநாளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரவிருக்கும் சுயசரிதை திரைப்படமான Shoot Like a Girl: One Woman’s Dramatic Fight in Afghanistan and on the Home Front இன் கருப்பொருளாகவும் அது உள்ளது. ஆஸ்டினில் இருந்து வடக்கே நீளும் இந்த மாவட்டத்தில் எட்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோன் கார்ட்டரை விட பின்தங்கியவராக ஹெகர் இருந்தார், என்றாலும், 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கணிசமானளவு கார்ட்டரை கடந்து சென்றார்.

வேர்ஜினியா : இரண்டாவது மாவட்டம்


Elaine Luria

எலைன் லுரியா, ஒரு அணுசக்தி கப்பலில் அதிகாரியாக பணியாற்றிய முதல் கடற்படை பெண்களில் ஒருவராவார். அவரது தேர்தல் பிரச்சார சுயசரிதையின்படி, அவர் “மத்திய கிழக்கு மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளுக்கு ஒரு ஆணுவாயுத பயிற்சி பெற்ற மேற்பார்வை படை அதிகாரியாக ஆறு முறை நியமிக்கப்பட்டார்.” ஒரு வழிகாட்டி ஏவுகணை கப்பல் படையின் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும், கடற்படை பிரிவு (Marine Corps) பணிக்கு துணைபுரியும் தாக்குதல் படைப்பிரிவுக்கு கட்டளையிடுபவராகவும் அவர் இருந்தார். ஒரு முன்னாள் கடற்படை SEAL ஆகவும், ஒரு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வான ஸ்காட் டெய்லருக்கு எதிராக ஆரம்பத்தில் ஒரு பின்தங்கிய நிலையில் லுரியா இருந்தார், என்றாலும், நவம்பரில் மற்றொரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை ஒரு சுயேட்சை வேட்பாளராக நிறுத்த போலி கையெழுத்திட்டு டெய்லரின் ஊழியர் பிடிபட்டதால் டெய்லர் எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டுப் போன பின்னர் தேர்தலில் தனது நிலைப்பாடு மேம்படுவதை லுரியா கண்டார். இந்த ஜனநாய கட்சியாளரின் மீது சமீபத்தில் கூட்டாட்சி மோசடி குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் வாக்குச்சீட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளார், என்றாலும் இந்த விவகாரம் பற்றிய அனைத்து விபரங்களையும் டெய்லர் மறுக்கிறார்.

வேர்ஜினியா : ஏழாவது மாவட்டம்


Abigail Spanberger

அபிகெயில் ஸ்பான்பெர்ஜெர், ஒருநேரத்தில், தனது தேர்தல் பிரச்சார வலைத் தளத்தில் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: “சிஐஏ வில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் பணியாற்றிய பின்னர், வேர்ஜினியாவின் ஏழாவது மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நான் விளைந்துள்ளேன்… ஒரு சட்ட அமலாக்க அதிகாரியாக, ஒரு சிஐஏ அதிகாரியாக, மற்றும் ஒரு சமூக தன்னார்வ தொண்டராக எனது முந்தைய சேவைகள், செவி சாய்த்து கேட்பதன் முக்கியத்துவத்தை எனக்கு போதித்திருக்கின்றன.” ஒருவேளை இந்த அறிவிப்பின் அச்சுறுத்தும் தாக்கங்களை அங்கீகரிப்பதில், இது நீக்கப்பட்டுவிட்டது, இருப்பினும் இந்த தளம் இன்னும் பின்வருமாறு தெரிவிக்கிறது, “ஒரு செயற்பாட்டு அதிகாரியாகத்தான் சிஐஏ வில் அபிகெயில் சேர்ந்தார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்தும் அங்கு வாழ்ந்தும், உளவுத்துறை தகவல்களை சேகரிப்பது, சொத்துக்களை நிர்வகிப்பது, மற்றும் அமெரிக்காவிற்கு சேவையாற்றும் உயர்தர திட்டங்களை பார்வையிடுவது போன்ற பணிகளைச் செய்தார்.” ஜனநாயகக் கட்சி முதல்நிலை தேர்வில் மற்றொரு இராணுவ-உளவுத்துறை வேட்பாளரை ஸ்பான்பெர்ஜெர் தோற்கடித்தார், மேலும், ரிச்மாண்ட் புறநகர் பகுதிக்கு வடக்கே விரிவடைந்ததான ஒரு மாவட்டத்தில், இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான டேவிட் பிராட்டுடன் தற்போது ஒரு சமவாய்ப்புள்ள போட்டியாளராக உள்ளார்.

மேற்கு வேர்ஜினியா : இரண்டாவது மாவட்டம்


Talley Sergent

டேலி செர்ஜென்ட், ஜனநாயகக் கட்சியின் முதல்நிலை தேர்தல்களில் போட்டியிட்ட அரை டசின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகளில் ஒருவராவார், மேலும், இரண்டில் இருந்து ஒன்று என வெளியேற்றப்பட்ட போதிலும், ஈராக் போரில் ஈடுபட்ட ஒரு மூத்த அனுபவமிக்க போர் வீரரான மற்றொரு தேசிய பாதுகாப்பு வேட்பாளருக்கு எதிராக போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் கீழ் வெளியுறவுத்துறையில் சேருவதற்கு முன்னதாக ஜனநாயக கட்சி செனட்டர் ஜே ராக்பெல்லருக்கு செர்ஜென்ட் வேலை செய்தார், அங்கு அவர், “மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின்” ஒரு பகுதியாக வாஷிங்டனால் இலக்கு வைக்கப்படும் நாடுகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படும் நுட்பங்களான பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். பின்னர், முதல் நிலை மற்றும் பொதுத் தேர்தல்கள் என இரண்டாகப் பிரித்து கிளிண்டன் தீவிரமாக பிரச்சாரம் செய்த மேற்கு வேர்ஜினியாவில், கிளிண்டனின் பேரழிவுகரமான மாநில அளவிலான பிரச்சாரத்தை நடத்துவதற்கு முன்னர், கோக்கோ கோலா நிறுவனத்தின் அட்லாண்டா தலைமையகத்தில் ஒரு பெருநிறுவன விளம்பர முகவராக அவர் ஆனார். கிட்டத்தட்ட ஒன்றுக்கு பத்து பங்கு நிதி திரட்டும் அநுகூலத்தைக் கொண்டவரும், இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானவருமான அலெக்ஸ் மூனிக்கு எதிராக மிகவும் பின்தங்கிய நிலையில் செர்ஜென்ட் உள்ளார்.

மேற்கு வேர்ஜினியா : மூன்றாவது மாவட்டம்


Richard Ojeda

ரிச்சார்ட் ஓஜெடா, 2016ல் மேற்கு வேர்ஜினியா மாநில செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒரு ஜனநாயகக் கட்சி உறுப்பினராக போட்டியிட்டு, அதே தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு தனது சொந்த வாக்குகளை அளித்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பல சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டது, மற்றும் அங்கு மேஜர் பதவி வரை அவர் உயர்வு பெற்றது உட்பட, அமெரிக்க இராணுவ வான்வழிப் படையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சேவையாற்றியதை தனது அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டவராவார். மாநில அலுவலகத்தை வெல்வதற்கு முன்னர், கடைசியாக அவர் பெக்லேயில் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான நிறைவேற்று இயக்குநர் பதவியில் இருந்தார், இதன் மூலம் மேற்கு வேர்ஜினியா மற்றும் வேர்ஜினியாவில் உள்ள இளைஞர்களை வலியுறுத்தி பென்டகனுக்கு பீரங்கித் தீவனமாக மாற்ற முயன்றார். தொழிற்சங்க சார்பு வாய்வீச்சுடன் ஒரு இராணுவவாத அணுகுமுறையை ஓஜெடா இணைத்துக் கொண்டுள்ளதால், அவர் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களின் ஆதரவை வென்றார், இது நாட்டின் மிக வறிய பகுதிகளில் ஒன்றான தென்மேற்கு வேர்ஜினியாவில் உள்ள தொழிலாளர்களை முறையாக காட்டிக்கொடுத்தது. அமெரிக்க செனட் பதவிக்காக ஓடி, குடியரசுக் கட்சியின் முதல் நிலைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இரண்டு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான இவான் ஜென்கின்ஸை வெற்றிகொள்ள, ஒரு செல்வாக்குள்ள மாநில சட்டமன்ற உறுப்பினரான கரோல் மில்லர் உடனான ஒரு சமவாய்ப்புள்ள பந்தயத்தில் ஓஜெடா உள்ளார்.

விஸ்கான்சின் : ஏழாவது மாவட்டம்


Margaret Engebretson

மார்கரெட் எங்கேபிரட்சன், அமெரிக்க கடற்படையில் 24 வருடகால நீண்ட அனுபவமிக்க கடற்படை வீரர் ஆவார், மூன்றாண்டு கால செயலூக்கமிக்க கடமைக்கு பின்னர், கடற்படை ரிசர்விலும், மின்னசோட்டா தேசிய விமானப் பாதுகாப்பு படையிலும் (Air National Guard) 21 ஆண்டுகள் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றுள்ளார். அந்த நேரத்தில், அவரது “சிவிலிய” பணிகளுக்கு மத்தியில், மின்னசோட்டா, துலூத் சென் லூயிஸ் கவுண்டி சிறையில் திருத்தங்கள் செய்வதற்கான ஒரு துணை ஷெரீஃப் ஆகவும் அவர் பணியாற்றினார். மின்னசோட்டா மாநில எல்லைக்கு சற்று ஊடாக அமைந்துள்ள வடக்கு விஸ்கான்சினில் அவர் வசிக்கிறார், மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதியை உள்ளடக்கி பெரும்பாலும் கிராமப்புற மற்றும் சிறிய மாநிலத்தில் இவர் போட்டியிடுகிறார். ஜனநாயகவாதியான டேவிட் ஒபே இந்த மாவட்டத்தை 42 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருந்த போதிலும், எங்கேபிரெட்சன் சிறிதளவு பணத்தைத் திரட்டியுள்ள நிலையில், முன்னாள் “ரியாலிட்டி தொலைக்காட்சி” போட்டியாளரும், நான்கு முறை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானவருமான சீன் டஃபிக்கு எதிராக மிகவும் பின்தங்கிய நிலையில் தான் அவர் உள்ளார். ஜூலை 25 வரை, 6,000 டாலருக்கு குறைவாக எங்கேபிரெட்சன் நிதி திரட்டியிருந்ததுடன் ஒப்பிடுகையில், அவரை விட 2.5 மில்லியன் டாலர் கூடுதலான நிதியுடன் ஒரு பிரச்சாரப் போரை டஃபி நடத்திக் கொண்டிருந்தார்.