ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president’s cynical justifications for his political coup

இலங்கை ஜனாதிபதி தனது அரசியல் சதிக்கு முன்வைக்கும் வஞ்சக நியாயப்படுத்தல்கள்

By Wasantha Rupasinghe 
29 October 2018

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஆற்றிய ஒரு தொலைக்காட்சி உரையில், வெள்ளிக்கிழமை தான் செய்த அரசியல் சதியை நியாயப்படுத்த முயன்றார். இந்தச் சதியில் அவர் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, அவருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை நியமித்தார். விக்கிரமசிங்க அகற்றப்பட்டமை, நாட்டின் அரசியல் நெருக்கடி ஆழமடைந்து வருவதை சமிக்ஞை செய்துள்ளது. பொருளாதாரம் மோசமடைந்து வருவதனாலும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகள் மீது எதிர்ப்பு பெருகி வருவதனாலும் இந்த நெருக்கடி இன்னும் எரியூட்டப்படுகிறது.

இந்த எழுச்சிகள், சிறிசேன 2015ல் இராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து பிரிந்து, விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு முடிவுகட்டியுள்ளன. சிறிசேன-சார்பு மற்றும் இராஜபக்ஷ-சார்பு என பெரும் விளைவுகளுடன் பிளவடைந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), இப்பொழுது சிறிசேனவின் நடவடிக்கைகளை ஆதரிக்க மீண்டும் இணைந்துள்ளது.

இப்போது மோதல் எல்லைகள் வரையப்பட்டுள்ளன. விக்கிரமசிங்க தனது பதவி பறிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்தும் பிரதமரின் உத்தியோகபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் தங்கியிருக்கின்றார். அவரது அரசாங்கம் இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக நிரூபிப்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு பதிலிறுத்த சிறிசேன, நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

வாய்ச்சவடாலுக்கு பேர் போன இராஜபக்ஷவின் கூட்டாளி விமல் வீரவன்ச, நேற்று அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு விக்ரமசிங்கவுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன், அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தினார். ஏற்கனவே இராஜபக்ஷ-சார்பு குண்டர்களுக்கும் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மெய்பாதுகாவலர்களுக்கும் இடையே நடந்த ஒரு வன்முறை மோதலில், ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்துள்ளனர்.

சிறிசேனவின் ஆதாரமற்ற சுய-சேவை மற்றும் வஞ்சக உரை, அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதையும், அடிநிலையில் உள்ள காரணங்களை மூடி மறைப்பதையும், மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களை மேலும் மேலும் எதிர்த்து வந்த மக்கள் பகுதியினருக்கு அழைப்பு விடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

"நாகரீக அரசியலைப் பின்பற்றாது நடந்துகொண்டதாக" விக்கிரமசிங்கவை குற்றம் சாட்டிய சிறிசேனே, "கடந்த சில ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகளால் நல்லாட்சி என்ற நிலைப்பாட்டையும் மேன்மையான எதிர்பார்ப்பையும் அவர் அழித்துவிட்டார்" என்று கூறினார். எவ்வாறெனினும், இவை, அவரும் விக்கிரமசிங்கவும் 2015ல் இராஜபக்ஷவுக்கு எதிராக திரும்பியதை நியாயப்படுத்த பயன்படுத்திய அதே சாக்குப் போக்குகளே ஆகும். இராஜபக்ஷவின் அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் திட்டமிட்ட ஜனநாயக உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பாகும்.

விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பரான புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மரு மகனுக்கு சொந்தமான பேர்பசுவல் றெசரீஸ் என்ற நிதி நிறுவனம், உள்ளக தவல்களை பெற்றுக்கொண்டு, 10 பில்லியன் ரூபாய்கள் (65 மில்லியன் டொலர்கள்) இலாபத்தை கொள்ளையடித்த ஒரு பங்குச்சந்தை மோசடி சம்பந்தமாக, விக்கிரமசிங்க மீது சிறிசேன ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றங்கள் சம்பந்தமாக விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்படவில்லை.

ஜனாதிபதி மீண்டும் ஒரு ஆதாரம் அற்ற கூற்றை முன்வைத்தார். பெயர் குறிப்பிடாத அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் உடந்தையுடன் தன்னை "படுகொலை செய்ய ஒரு பெரும் சதி" உள்ளதாக அவர் அறிவித்தார். இராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு இந்தச் சதி என்று சொல்லப்படுவதே "மிக உடனடியான மற்றும் சக்தி வாய்ந்த காரணம்" என்று சிறிசேன கூறிய போதிலும், அவர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. படுகொலைத் திட்டம் எனப்படுவது பற்றிய விசாரணை சம்பந்தமாக, அவர், விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான பொலிஸ் மா அதிபரை கண்டனம் செய்தார்.

“சலுகை படைத்த வர்க்கத்தைச் சேர்ந்த, மக்களின் நாடியை அறிந்திராத மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதை ஒரு விளையாட்டாக கையாண்ட” விக்கிரமசிங்கவுடன் சிறிசேன தன்னை “மக்கள் நாயகனாக” வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள சிடுமூஞ்சித்தனமாக முயற்சித்தார்.

உண்மையில், சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவும், 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்து உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்கி வந்த, இலங்கையின் விலை போகும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளாவர். ஆட்சியில் இருந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கங்கள், சமூக செலவினங்களையும் தொழில்களையும் வெட்டி, வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்தி வந்துள்ளதுடன் தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கு சிங்கள பேரினவாதத்தையும் தூண்டிவிடுவதன் மூலமே, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணித்து வந்தன. 1983 முதல் 2009 வரை தீவை சீரழித்த கொடூரமான இனவாத யுத்தத்திற்கு இந்த இரு கட்சிகளும் நேரடி பொறுப்பாளிகளாகும்.

சிறிசேன, தன்னுடைய நடவடிக்கைகள் "முற்றிலும் அரசியலமைப்பிற்கும் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கும் ஏற்ப" முன்னெடுக்கப்பட்டதாக கூறினாலும், ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று விவாதிக்க அவர் முயற்சிக்கவில்லை. 2015ல் அதிகாரத்திற்கு வருகையில், பாரதூரமான எதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்ட நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதாக வாக்குறுதியளித்தார். உண்மையில், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அதிகாரங்களில் திருத்தங்களை மட்டுமே செய்தது. ஆனால், ஒருதலைப்பட்சமாக பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை அது அகற்றியது. சிறிசேன இப்போது விக்கிரமசிங்கவை பதவி நீக்க அரசியலமைப்பை மீறியுள்ளார்.

பாராளுமன்றத்தை எதேச்சதிகாரமாக ஒத்திவைப்பதில் சிறிசேனவின் குறிக்கோள், விக்ரமசிங்க இன்னமும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக உறுதிப்படுத்துவதை தடுப்பதையும், பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்வதற்கு இலஞ்சம் கொடுக்கவும் வளைத்துப் போட்டுக்கொள்ளவும் நேரம் எடுத்துக்கொள்வதாகும். கொழும்பு அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத "கட்சித் தாவல்களுக்கு" பேர் போனவர்களாவர். இராஜபக்ஷ நேற்று விரைவில் புதிய தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்தார், ஆனால் இந்த ஆட்சி விரைவிலோ அல்லது எப்போதாவதோ தேர்தல் நடத்தும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது.

ஜனாதிபதி தன்னை தேசப்பற்றாளனாக காட்டிக் கொண்டதன் மூலம் உரையை முடித்தார். இது, விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டை விற்பதாக கண்டனம் செய்யும் அதிதீவிர வலதுசாரி சிங்கள பேரினவாத கும்பல்களுக்கு அழைப்பு விடுக்கும் வாய்ச்சவடால் ஆகும். "கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரக் கொள்கை வெளிநாட்டு முதலீடுகளைச் சார்ந்தே உள்ளதுடன் இது நமது உள்ளூர் தொழிற்துறைகளை பலவீனப்படுத்தியது" என்று அவர் அறிவித்தார்.

சிறிசேன பிரகடனம் செய்ததாவது: "பல மதிப்புமிக்க சொத்துக்கள் வெளிநாட்டவர்களுக்கு ஒப்பந்தங்கள் இல்லாமல் வழங்கப்பட்டன. கட்டிட அனுமதிகள் கூட ஒப்பந்தம் இல்லாமல் வழங்கப்பட்டன.” “கடந்த வாரம் விசேட காணி கட்டளைச் சட்டம் அமைச்சரவையினாலும் பின்னர் பாராளுமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், எங்கள் தாய்நாட்டின் அனைத்து நிலங்களையும் எந்தவொரு சிரமமும் இன்றி வெளிநாட்டினர் வாங்கியிருப்பர்," என அவர் மேலும் கூறினார்.

இந்த கண்டனங்கள் தெளிவான பேரினவாதத்தைக் கொண்டுள்ளன. இராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகள் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களில் பெரும்பாலானவை, இந்தியாவிற்கு எதிராகவும், அதன் மூலம் மறைமுகமாக தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டவை ஆகும். அதிதீவிரவாத சிங்கள தேசியவாதிகள், தமிழ் சிறுபான்மையினரை இந்திய விரிவாக்கத்தின் முகவர்களாக முத்திரை குத்தி வருகின்றனர். கொழும்பு அரசியல்வாதிகள், உழைக்கும் மக்களை பிளவுபடுத்த நீண்டகாலமாக தமிழர்-விரோத பேரினவாதத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். வாழ்க்கைத் தரம் மோசமடைந்து வருவது சம்பந்தமாக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் கூர்மையாக அதிகரித்து வரும் நிலைமையின் மத்தியில், அத்தகைய பிரச்சாரம் இப்பொழுது கிளறிவிடப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல.

இந்த இந்திய-விரோத வாய்வீச்சு, ஒருபக்கம் சீனா, மறுபக்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கும் இடையே, தெற்காசியாவில் தீவிரமடைந்து வரும் பூகோள-அரசியல் போட்டிகளிலும் பயன்படுகிறது. இராஜபக்ஷ சீனாவிற்கு மிக நெருக்கமாக இருக்கின்றார் என கருதியதால், 2015ல் இராஜபக்ஷவை வெளியேற்றி சிறிசேனவை நியமித்த ஆட்சி மாற்ற நடவடிக்கையை அமெரிக்கா திட்டமிட்டது. ட்ரம்ப் நிர்வாகமானது, சீனாவுடன் அதன் வர்த்தக போர் மற்றும் மோதல்களை தீவிரப்படுத்துகின்ற நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையில், பெய்ஜிங்-சார்பானது என கருதப்படும் ஒரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. திரைக்குப் பின்னால் நடக்கும் சூழ்ச்சிகள், கொழும்பில் அரசியல் நெருக்கடியை இன்னும் குவிக்கின்றன.

இராஜபக்ஷவின் புதிய அமைச்சரவையை இன்று சிறிசேன பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். சனிக்கிழமையன்று ஜனாதிபதி செயலகமானது அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும், அரச நிறுவனங்களின் தலைவர்கள், சட்டத்துறை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுக்கும், முந்தைய அரசாங்க அமைச்சர்களின் பதவி முடிவடைந்ததுவிட்டதாக அறிவித்துள்ளது. சிரேஷ்ட ஐ.தே.க. தலைவர்கள், அரசாங்கத்தை வெளியேற்றியதை எதிர்க்க மக்களை “வீதிக்கு இறங்குமாறு” அழைப்பு விடுத்துள்ளனர், இது இராஜபக்ஷ-சார்பு சக்திகளுடன் மேலும் மோதல்களுக்கே இட்டுச்செல்லும்.

ஸ்தாபனக் கட்சிகளில் எதுவும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஏழைகளின் நலன்களை பாதுகாக்கவில்லை. முந்தைய அரசாங்கத்தைப் போலவே புதிய ஆட்சியும், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்த முனைவதுடன், எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி அடக்கும். இந்த அரசியல் நெருக்கடியில், தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கத்தின் இரு பகுதியையும் மற்றும் அவர்களின் பிரிவினை பேரினவாத அரசியலையும் நிராகரித்து, தனது சுயாதீன பாதையை உருவாக்கி, சோசலிசக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட வேண்டும்.