ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

David North’s lecture at Peradeniya University in Kandy attracts significant support from students and workers

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த்தின் விரிவுரை, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து கணிசமான ஆதரவை ஈர்க்கிறது

By our reporters
5 October 2018

கண்டியிலுள்ள  பேராதனை பல்கலைக்கழகத்தில் புதனன்று டேவிட் நோர்த்தால் "வரலாற்று படிப்பினைகளும் சோசலிசத்திற்கான சமகால போராட்டமும்" என்ற தலைப்பில் வழங்கப்பட்ட உரை, திடமான 200 பார்வையாளர்களிடமிருந்து ஒரு உற்சாகமான வரவேற்பை பெற்றது. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), 1938 ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விரிவுரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.


பேராதனை பல்கலைக்கழக கூட்டத்தில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

நோர்த், உலக சோசலிச வலைத் தள (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் ஐக்கிய அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமாவர். அவர், சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) இன் அழைப்பின் பேரில், 80 வது ஆண்டுநிறைவு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகளில் பங்கேற்க இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார்.

பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரைதான் நோர்த்தின் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முதலாவது நிகழ்ச்சியாகும். அவர், கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்தில் அக்டோபர் 7 ம் திகதி மற்றொரு விரிவுரையை வழங்குவார்.

புதனன்று விரிவுரைக்கான முன் தயாரிப்பாக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள், பேராதனை மற்றும் கண்டி நகர மேல் பகுதிகளில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வியாளர்கள் அல்லாதவர்கள் மற்றும் வேலைத் தளங்களில் மும்மரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களையும், உலக சோசலிச வலைத் தள கட்டுரைகளையும் விநியோகித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE, பல்கலைக்கழகத்தில் மார்க்சிச இலக்கியங்களை கண்காட்சிக்கு வைத்தனர், அது காலை 9 மணியிலிருந்து தொடங்கி விரிவுரை வரைக்கும் நடைபெற்றது, அது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், கட்சி பிரச்சாரகர்களுடன் தீவிர விவாதத்திற்கு வழிவகுத்தது.


டேவிட் நோர்த்

ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்து, மற்றும் ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் போன்ற டேவிட் நோர்த் எழுதிய புத்தகங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த இலக்கிய தொகுப்பு, கண்காட்சியில் மற்றும் விரிவுரை மண்டபத்தின் நுழைவாயிலில் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டது. அத்தகைய அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் 14,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது.

பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையிலிருந்து செவிலியர்கள் அத்துடன் சோ.ச.க. மற்றும் IYSSE  உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட மாலை விரிவுரையின் பார்வையாளர்களாக இருந்தனர்.

இந்த நிகழ்வானது சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜே டயஸ் தலைமையில் நடைபெற்றது. அவர், பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கில ஆசிரியர் பிரிவுக்கு நன்றி தெரிவித்தார், அது பல்கலைக்கழக கலைப்பிரிவின் பிரதான மண்டபமான கலை அரங்கினை விரிவுரைக்கு பெற்றுக்கொள்ள உதவியது.


விஜே டயஸ்

சோசலிசத்திற்கான போராட்ட வரலாற்றின் படிப்பினைகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து டயஸ் பேசினார். உலக முதலாளித்துவம் ஒரு ஆழ்ந்த நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது 2008 இல் அமெரிக்க நிதி நெருக்கடி தொடங்கி உலகம் முழுவதும் பற்றிக் கொண்டதலிருந்து  உக்கிரமடைந்தது என்றார். சமீபத்தில் அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பாவில் நடந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்தும் அதே போல் இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் தோற்றம் குறித்தும் சுருக்கமாக ஆய்வு செய்தார்.

ஒரு புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கின் வழிகாட்டல் தொழிலாள வர்க்கத்திற்கு தேவை என்று டயஸ் கூறினார். நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டு போராட்டத்தை ஆய்வு செய்வது இந்த முன்னோக்குக்கு இன்றியமையாதது என்று அவர் வலியறுத்தினார்.

விரிவுரையாளரை அறிமுகம் செய்த டயஸ், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் நோர்த் ஒரு முன்னணி பாத்திரம் வகித்ததாக கூறினார். "ட்ரொட்ஸ்கிச வரலாறு தொடர்பாக நோர்த் ஒரு ஆளுமை மிக்கவர் அத்தோடு அதைப் பாதுகாப்பதற்காக ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்," என்றும் டயஸ் விளக்கினார்.

அவரது விரிவுரையின் ஆரம்பத்தில், நோர்த், அப்போது சிலோன் என்று அறியப்பட்ட இலங்கையின் முன்னோடி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பெரும் பங்களிப்பு குறித்து வலியறுத்தினார், அவர்கள் 1935 இல் லங்கா சம சமாஜக் கட்சியையும் (LSSP) பின்னர் 1942 ல் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியையும் (BLPI) ஸ்தாபித்தனர். புரட்சிகர சோசலிசத்திற்கான அவர்களின் பங்களிப்பு உலகெங்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளினால் நன்கு அறியப்பட்டது.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் வரலாற்றின் படிப்பினைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நோர்த் கூறினார்: "ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, அவசியமாக, வரலாறு குறித்து நனவுபூர்வமானது. ஒரு வரலாற்று ரீதியாக-வேரூன்றிய முன்னோக்கு இல்லாத நிலையில், அரசியல் பகுப்பாய்வு மேலெழுந்தவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோற்றப்பாடுகளின் நிலைக்கு தரம் தாழ்ந்து போகிறது."

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச விரோத தத்துவத்திற்கு எதிராக, 1917 அக்டோபர் புரட்சியில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான புரட்சிகர மூலோபாயத்தை வழங்கிய சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கு மற்றும் செயல் திட்டத்தை உயர்த்தி பிடிப்பதற்காக ட்ரொட்ஸ்கி முன்னெடுத்திருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தின் முக்கிய நிலைப்பாடுகளை நோர்த் விளக்கினார். மார்க்சிசத்தை பாதுகாக்க ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டம் 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது.

நோர்த் இவ்வாறு முடித்தார்: "மனிதகுலம், ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்தபடி, பல தசாப்தங்களான போர், எழுச்சிகள், குறுகிய சமாதான இடைவெளி, புதிய போர்கள் மற்றும் புதிய எழுச்சிகள் ஆகியவற்றினூடாக கடந்துவந்துள்ளது." மிகவும் சாதகமற்ற சூழ்நிலைகளின் கீழ், மார்க்சிசத்தின் மரபை, அரசியல்ரீதியாக நசுக்கப்பட்ட ஒரு சிறுபான்மையாக இருந்து பாதுகாத்து வந்த நான்காம் அகிலம், சர்வதேச குழுவின் தலைமையின் கீழ் மிகப்பெரும் அனுபவத்தை திரட்டியள்ளது. நிகழ்வுகள் அதன் வரலாற்று முன்னோக்கை நிரூபித்துள்ளன.

"இப்பொழுது, மிகவும் இறுதிக்கட்டத்திலானதும் முதலாளித்துவத்தின் மரண வேதனை அதன் மிக உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதுமான நிலையில், நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சியின் வெகுஜன கட்சியாக கட்டியெழுப்புவற்கான நிலைமைகள் இருக்கின்றன."


கூட்டத்தில் பங்குபற்றியோரின் ஒரு பகுதி

சிங்களத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விரிவுரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நோர்த் பதிலளித்தார்.

அமெரிக்காவில், சோசலிசத்திற்கான வாய்ப்பு பற்றி ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்க தொழிலாளர்களிடையே அரசியல் வர்க்க நனவின் வளர்ச்சியை ஒடுக்கிய புறநிலை நிலைமைகள், அனைத்துக்கும் மேலாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரமாண்டமான செல்வமும் சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிக்கமும் ஆழமாக வீழ்ச்சி கண்டுள்ளது என நோர்த் விளக்கினார். அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சியும் நெருக்கடியும் இப்பொழுது வர்க்க நனவின் வளர்ச்சிக்கான தூண்டுதலை வழங்கியுள்ளது.

"ட்ரொட்ஸ்கி ஒரு தடவை எழுதியதைப்போல் உலகத்திலேயே மிகவும் பீதியடைந்து இருப்பது அமெரிக்க ஆளும் வர்க்கம்தான். அது, தொழிலாளர்களிடையே சோசலிசத்தின் வளர்ச்சி குறித்து எப்பொழுதும் அஞ்சுகிறது. இதனால்தான் மார்க்சிச எதிர்ப்பு பிரச்சாரம் எப்போதும் ஊடகங்களில் மிகவும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சோசலிசத்தை இழிவுபடுத்தும் அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும்கூட, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது."

அமெரிக்க தொழிலாளர்களிடையே போர்க்குண வளர்ச்சி குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச குணாம்சத்தை அவர்கள் புரிந்து கொள்வதை வளர்ச்சி செய்வதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி எடுக்கும் முயற்சிகள் பற்றி நோர்த் குறிப்பிட்டபோது, ​​அங்கே கைதட்டல் வெடித்தது.

புத்தக கண்காட்சி மற்றும் விரிவுரையின் முன்னர், ​​மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE உறுப்பினர்கள் பேசினர்.


சித்தாரா

சித்தாரா, ஒரு முதல் வருட உளவியல் மாணவி கூறினார்: "முதலாளித்துவத்திற்குள் மனிதகுலத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்று நான் ஏற்கெனவே நம்புகிறேன். எனவேதான் நான் சோசலிசத்தில் ஆர்வம் காட்டுகிறேன். நான் ஜே.வி.பீ.யின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆதரவாளராக இருந்தேன். ஆனால் அது சோசலிசத்திற்கான போராட்டத்தில் எந்த வகையிலும் பங்களிப்பு செய்யவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்."

சோசலிச சமத்துவக் கட்சி உடன் நடத்திய விவாதங்களை அவர் மனமார ஏற்றுக் கொள்வதாக கூறினார்; "சோசலிசம் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சோசலிசமாகும். எனக்கிருந்த கேள்வி என்னவென்றால், 'தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர பாத்திரத்தை எப்படி உணர்கிறது; அது எவ்வாறு அதன் விழிப்புணர்வை பெற்றுக் கொள்கிறது? 'விவாதத்தின் போது அவர்களுக்கு கல்வியூட்டவும் வழிநடத்தவும் ஒரு புரட்சிகரக் கட்சி அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன்."


விஷாங்கா (வலது), புத்தக கண்காட்சி பகுதியில் சோ.ச.க. உறுப்பினருடன் பேசுகிறார்

ஒரு மேல் பட்டதாரி உளவியல் மாணவரான விஷாங்கா கூறினார்: "நான் புரிந்து கொண்ட மிக முக்கியமான விஷயம் ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் நாம் சோசலிசத்திற்காக போராட முடியாது என்பதுதான். நாம் சர்வதேச சோசலிசத்திற்காக போராட வேண்டும், அனைத்து போலி-இடது குழுக்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வைக்க வேண்டும். முதலாளித்துவத்தை தனிப்பட்ட முயற்சிகளால் கவிழ்க்க முடியாது. முதலாளித்துவ நெருக்கடியின் அடிப்படைக் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக் கழகங்களில் இம்மாதிரியான தலையீடு உண்மையில் தீர்மானகரமானது என்று நான் நினைக்கிறேன்.

ஒரு சோசலிச முன்னோக்கு இல்லாத நிலையில், மக்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்பட்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கு அடிபணிய முடியும் என்று ஒரு புவியியல் மாணவர் லக்ஷிதா தெரிவித்தார். 2015 ல் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்: "நான் உட்பட பல பேர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர், அவர் மகிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார், அவரை "குறைந்த தீமை" உடையவர் என கருதினார்கள்.

"ஆனால் இப்போது நாம் பார்ப்பது என்னவென்றால் இராஜபக்ஷ என்ன செய்தாரோ அதைத்தான் அவருடைய அரசாங்கமும் தொடர்கிறது. ஜே.வி.பி உட்பட அனைத்து போலி இடது கட்சிகளும் சிறிசேனவுக்காக பிரச்சாரம் செய்தன. உண்மையான பிரச்சனை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிதான் என்று நீங்கள் விளக்கியதைப்போல் யாருமே விளக்கவில்லை."

பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் பற்றி லக்ஷிதா பேசினார். "ஒவ்வொரு அரசாங்கமும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு நல்ல நிலைமைகளை உருவாக்க வேண்டும்," என்று அவர் கூறினார். "எனவே, அவர்கள் தங்கள் நாடுகளுக்குள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் தங்களை ஒரு சர்வதேச வர்க்கமாக அடையாளம் காண வேண்டும்."


லக்ஷிதா (இடது)

விஜயா, ஒரு இறுதி ஆண்டு கலை மாணவர், விவாதத்தில் சேர்ந்தார், பல்கலைக்கழக மாணவராக அவர் எதிர்கொள்கின்ற கஷ்டங்களை விவரிக்கிறார். "என் தந்தை இறந்துவிட்டார்," என்று அவர் விளக்கினார். "எனது சகோதரர் தோட்டத் தொழிலாளி. என் அம்மாவை பார்க்க ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு வருகிறேன். வீட்டிற்கு செல்ல ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் செலவாகிறது. நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை காப்பாற்றுவதற்கு பல்கலைக்கழக உணவகத்தில் இருந்து மலிவான உணவை சாப்பிடுகிறேன்."

சோசலிசம் தான் முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தீர்வு என்று தான் நம்புவதாக விஜயா கூறினார், ஆனால் ஒரு சோசலிச சமுதாயம் எவ்வாறு நிறுவப்பட முடியும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்தார். தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அரசியல் அறிவின் வளர்ச்சி தான் மிக முக்கியமானது என்று அவர் ஒப்புக் கொண்டார் மற்றும் விஞ்ஞான மார்க்சிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிராத ஆயுதமேந்திய போராட்டங்களால் புரட்சிகள் வெற்றிகரமாக அமையாது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளம் உட்பட பல கட்சி வெளியீடுகளை அவர் வாங்கினார்.

விரிவுரைக்குப் பின்னர், அவர் கிரகித்த முக்கியமான விஷயங்கள் குறித்து விஜயா விவாதித்தார். ஸ்ராலினிசம் அக்டோபர் 1917 புரட்சியை காட்டிக்கொடுத்தது என்பதையும், ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் துல்லியத்தையும் அவர் புரிந்து கொண்டதாக கூறினார். இந்த வரலாற்றுப் பதிவுகளை புரிந்துகொள்வதில் இருந்து மாணவர்களை தடுக்க முற்படும் ஜே.வி.பி. தலைமையிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் கூட்டமைப்பு, "பல்கலைக்கழகங்களில் அரசியல் வேண்டாம்" என்று கூறுவதை கண்டனம் செய்தார்.