ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Vote “yes” on resolution to force out Royal College of Nursing leadership! Build rank-and-file committees!

ராயல் செவிலியர் கல்லூரித் தலைமையை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தில் "ஆம்" வாக்களியுங்கள்! சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமையுங்கள்!

By NHS FightBack
28 September 2018

இன்றைய அவசர பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை ஆதரிக்குமாறு NHS FightBack குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ராயல் செவிலியர் கல்லூரி (RCN) உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்: “ராயல் செவிலியர் கல்லூரியின் இப்போதைய தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, தலைமைக் குழுவை பதவி இறங்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.”

இத்தீர்மானம், தேசிய சுகாதாரச் சேவை (NHS) மீது பழமைவாத அரசாங்கம் நடத்திய சிக்கன நடவடிக்கை தாக்குதல்களுடன் RCN நிர்வாகிகள் கூட்டு சேர்ந்திருந்ததற்கு எதிராக செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கிளர்ச்சிக்குக் குரல் கொடுக்கிறது.

ஒரு விற்றுத் தள்ளப்பட்ட சம்பள உடன்படிக்கையை முன்நகர்த்துவதற்காக தொழிற்சங்க தலைமை பயன்படுத்தும் தவறான திசைதிருப்பும் தகவல்களை இதை முன்மொழிபவர்களின் அறிக்கை கண்டனம் செய்கிறது. எட்டாண்டு கால சம்பள முடக்கத்திற்குப் பின்னர், அந்த சம்பள உடன்படிக்கையானது, நிஜமான-வரையறைகளில் பார்த்தால், மருத்துவத் தொழிலாளர்களுக்கான மற்றொரு சம்பள வெட்டாக இருக்கும். “2018 சம்பள வெகுமதி சம்பந்தமான RCN நடவடிக்கைகளுக்குக் அக்கவுன்சில் தான் பொறுப்பு" என்றது குறிப்பிடுகிறது.

மார்ச் மாதம், RCN உள்ளடங்கலாக, 14 மருத்துவ தொழிற்சங்கங்களில் 13, மூன்றாண்டுகளில் பணவீக்க விகிதம் அக்காலகட்டத்தில் 9.6 சதவீதத்திற்கு உயருமென மதிப்பிடப்பட்டுள்ளதை அறிந்திருந்தும் கூட, அவை 6.5 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொண்டன. அந்த தொழிற்சங்கம் யதார்த்தத்தை தலைகீழாக காட்டி, அந்த சம்பள உடன்படிக்கை "எட்டாண்டுகளில் மிகச் சிறந்த உடன்படிக்கை" என்று அறிவித்தது. இது "அடுத்த மூன்றாண்டுகளுக்கு குறைந்தபட்சம் 6.5% உயர்வுக்கு நிகரானது, இன்னும் சொல்லப் போனால் ஒரு சில உறுப்பினர்களுக்கு 29% வரையில் உயரும்,” என்று வாதிட்டது.

சம்பள உடன்படிக்கை முழுமையாக கருவூலத்தால் நிதியளிக்கப்படுகிறது என்ற தொழிற்சங்கங்களின் வாதமும் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். NHS சேவை வழங்குனர்கள் ஏற்கனவே சுமார் 4.3 பில்லியன் பவுண்ட் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதோடு, NHS அறக்கட்டளைகள் இந்தாண்டு ஒட்டுமொத்தமாக 500 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக பற்றாக்குறையை முன்கணிக்கின்ற சூழலில், இந்த பணம் ஏதோவொரு விதத்தில் NHS இல் இருந்து தான் உருவப்படும்.

தொழிற்சங்கங்களின் முன்வரலாறு தெரிந்ததே என்பதால் —அதாவது, வெட்டுக்கள் மற்றும் சம்பள உயர்வு முடக்கத்தைத் திணிப்பதில் அவை உதவுகின்றன என்பதுடன் NHS பணியாளர் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 107,743 ஐ எட்டுவதிலிருந்து தடுக்க எதையும் செய்வதில்லை (செவிலியர்களுக்கான வெற்றிடங்களோ இந்தாண்டு 41,722 க்கு செல்லுமென அனுமானிக்கப்படுகிறது) என்பதால்— சில உறுப்பினர்கள் அந்த முன்மொழிவுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளவே இல்லை. வெறும் 18 சதவீத RCN உறுப்பினர்கள் மட்டுமே வாக்குப்பதிவில் பங்கெடுத்தனர், அதிலும் பெரும்பாலான வாக்குகள் தலைமையின் பொய்களின் காரணமாக மட்டுமே அந்த உடன்படிக்கையை ஏற்பதற்காக பதிவாயின.

ஜூலையின் சம்பள காசோலைகள் வந்தடைந்தபோது, பல சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வெறும் 1.5 சதவீத அற்ப உயர்வு மட்டுமே இருந்தது, அதிலும் இந்த முதலாம் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான உயர்வு அவர்களின் வருடாந்தர சம்பள உயர்வு தேதி வரையில் தாமதிக்கப்பட்டது. முந்தைய ஐந்து மாதங்களுக்கான சம்பள அதிகரிப்பாக சராசரியாக வெறும் 75 பவுண்டு மட்டுமே சுகாதாரத்துறை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் என்று செய்தி வெளியானதும் ஆகஸ்டில் கோபம் அதிகரித்தது.

தொழிற்சங்கங்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு சுகாதாரத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களைக் கையிலெடுத்தனர். தலைவர்களை இராஜினாமா செய்ய அழைப்பு விடுக்கும் RCN உறுப்பினர்களின் ஒரு மனு, கையெழுத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதும் வெறும் 24 மணி நேரத்திற்குள் 1,000 க்கும் அதிகமான கையெழுத்துக்களைப் பெற்றதால், ஓர் அவசர பொதுக்குழு கூட்டத்தைக் கூட வேண்டியதாகிவிட்டது.

ஒரு முழு அளவிலான கிளர்ச்சியின் தலையைத் துண்டிக்க மற்றும் சேதங்களைக் குறைப்பதற்கான முயற்சியாக, RCN தலைமை நிர்வாகியும் பொது செயலாளருமான ஜெனெட் டேவிஸ் கடந்த மாதம் பதவியிலிருந்து விலகினார், மேலும் RCN கவுன்சில் "2018 சம்பள உடன்படிக்கையின் நிகழ்முறைகள் மற்றும் தகவல் தொடர்புகள் மீது வெளியிலிருந்து ஒரு சுதந்திரமான ஆய்வை" மேற்கொண்டது. கவுன்சில் இந்த சம்பள உடன்படிக்கையை மீள்பார்வை செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக உள்ளது!

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு பொறுப்பேற்றுள்ள ஓர் அரசாங்கத்திற்காக தொழிற்சங்கங்கள் அருவருக்கத்தக்க வேலை செய்து வருகின்றன என்பதை அறிய ஓர் ஆய்வு தேவையே இல்லை. RCN இன் "நடைமுறைகளும் தகவல் தொடர்புகளும்" முழுமையாக அதன் உறுப்பினர்களிடம் அழுகிய உடன்படிக்கையை விற்பதற்காக செயல்பட்டன.

அந்த சுதந்திரமான ஆய்வின் இடைக்கால அறிக்கையில், அக்கவுன்சில் தலைவருடன் பெப்ரவரி 21 இல் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை பேச்சுவார்த்தையாளரின் அறிவுரையிலிருந்து ஒரு துண்டுச்செய்தி உள்ளடக்கப்பட்டிருந்தது என்றளவுக்கு இந்த உடன்படிக்கையை அலங்கரித்துக் காட்டுவதற்கான முயற்சிகள் அப்பட்டமாக இருந்தன, அந்த செய்தி குறிப்பிடுகிறது, “தொழிற்சங்கங்கள் (இதன் அர்த்தம், யூனிசன் மற்றும்/அல்லது RCN அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக இரண்டு மிகப் பெரிய தொழிற்சங்கங்கள்) உறுப்பினர்களுக்கான ஒரு நேர்மறையான பரிந்துரையுடன் உறுப்பினர்களிடம் செல்ல முடியாவிட்டால், கருவூலம்… இதை முன்னெடுப்பதை மிகவும் அபாயமென கருதி, இந்த வடிவத்தைப் பரிசீலிப்பதை கைவிடும்.”

திரைக்குப் பின்னால் இந்த தில்லுமுல்லு வெளியே வந்ததற்கு ஒரு செய்தி கசிவுற்றதற்குத் தான் நன்றி கூற வேண்டும், பேரம்பேசல்களின் ஒரு கட்டத்தில் இத்தொழிற்சங்கங்கள் சுகாதார தொழிலாளர்களுக்கான வருடாந்தர விடுப்பில் ஒரு நாளை விட்டுக்கொடுக்க அரசாங்கத்துடன் சூழ்ச்சி செய்து வந்தன என்பதையும் அது எடுத்துக்காட்டியது.

தொழிற்சங்க விற்றுத்தள்ளலுக்கு எதிராக போராடி வருகின்ற செவிலியர்கள், உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளை வேறொருவரால் பிரதியீடு செய்வதன் மூலமாக முன்நகர முடியாது. கடந்த மூன்று தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பு அமைப்புகள் என்பதிலிருந்து அரசாங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுக்கான தொழில்துறை பொலிஸ் படையாக தரந்தாழ்ந்துள்ளன.

இதுவொரு உலகளாவிய நிகழ்வுபோக்காக உள்ளது. நியூசிலாந்தில், செவிலியர்கள், நியூசிலாந்து செவிலியர் அமைப்பு மத்தியஸ்தம் செய்த விற்றுத்தள்ளப்பட்ட சம்பள உடன்படிக்கையை நான்கு முறை நிராகரித்துள்ளனர்.

இங்கிலாந்தில், தொழிற்சங்கங்கள் பொதுத்துறையின் நிஜமான கூலிகளில் 14 சதவீத வீழ்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளன என்பதுடன், திருப்பி போராடியதையும் காட்டிக்கொடுத்துள்ளன. 2016 இல் பிரிட்டிஷ் மருத்துவ கூட்டமைப்பு தரக்குறைவான ஒப்பந்தங்களுக்கு எதிரான இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தியது, இது அவர்களின் தோல்விக்கு இட்டுச் சென்றது.

இந்தாண்டு, பல்கலைக்கழக கல்லூரி சங்கம் (UCU) அவர்களின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக அதன் 50,000 உறுப்பினர்களின் தீர்க்கமான போராட்டத்தை நிறுத்தியது. வேலைநிறுத்தங்கள் இரத்து செய்யப்பட்டன, உள்ளூர் கிளைகளின் தேவையான அங்கீகரிப்பு இல்லாமல், ஓர் அழுகிய உடன்படிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த உடன்படிக்கையை மறுத்தளிக்க வேண்டுமென கோரி UCU இலண்டன் தலைமையகத்தைச் சுற்றி நூறாயிரக் கணக்கானவர்கள் ஒன்றுகூடினர் என்றளவுக்கு அந்த விற்றுத்தள்ளலுக்கு எதிரான கோபம் மிகப் பெரியளவில் இருந்தது.

UCU தலைமையைப் பொறுப்பாக்குவதற்கான அங்கத்தவர்களின் அடுத்தடுத்த அனைத்து முயற்சிகளும் ஒடுக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் Sally Hunt மற்றும் அவரின் கைக்கூலிகளை விமர்சித்தும், கூடுதல் ஜனநாயகம் கோரிய தீர்மானங்கள் இந்தாண்டின் UCU கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த போது, குற்றகரமான அதிகாரத்துவவாதிகள் அதை முன்கூட்டியே முடித்து விட நிர்பந்திக்கும் விதத்தில் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய தீர்மானம் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபம் மற்றும் போராடுவதற்கான தீர்மானத்தை எடுத்துக்காட்டுகின்றது என்றாலும் இந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். NHS மற்றும் பொதுத்துறை முழுவதிலும் அனைத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடங்குவதற்காக, RCN மற்றும் பிற சுகாதாரத்துறை சங்கங்களிலிருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர்களின் குழுவை உருவாக்குவதே அடுத்தக் கட்டமாக இருக்க வேண்டும்.

NHS FightBack மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி, இந்த முக்கிய அடுத்த படிக்கான பரந்த ஆதரவை அணித்திரட்டுவதற்காக இன்றைய அவசர பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

இன்றே NHS FightBack ஐ இங்கே தொடர்பு கொள்ளுங்கள். எங்களின் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.