ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers and retirees rally against French government’s austerity policies

பிரெஞ்சு அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By Anthony Torres
10 October 2018

பிரெஞ்சு இரயில்வே வேலைநிறுத்தம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், சிக்கன கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த கோடை விடுப்புகாலம் முடிந்ததும், நேற்று முதலாவது ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கின்ற நிலையில், மக்ரோன் மீதான விமர்சனங்கள் பொலிஸ் படையில் அதிகரிப்பதுடன் மந்திரிசபையிலிருந்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டமாக இராஜினாமா செய்து வருவதற்கு இடையே, தொழிலாளர்களும் ஓய்வூதியதாரர்களும் இளைஞர்களும் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

அதேநேரத்தில், தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளுக்கு இடையே ஆழ்ந்த அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. இரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவதற்கு இரயில்வே தொழிலாளர்களிடையே 95 சதவீத எதிர்ப்பு இருந்த போதும், தொழிற்சங்கங்கள் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தங்களை மட்டுமே ஒழுங்கமைத்தன. அதேவேளையில் அவை மக்ரோனுடன் தனியார்மயமாக்கல் குறித்து தொடர்ந்து பேரம்பேசியதுடன், இறுதியில் கோடையின் போது வேலைநிறுத்தங்களை கலைத்துவிட்டன. தொழிலாளர்களிடையே மிகப் பெரியளவில் ஆதரவு இருக்கின்ற போதினும், மக்களிடையே அரசாங்கம் செல்வாக்கிழந்துள்ள நிலையிலும் தொழிற்சங்கங்களால் ஒரு வெற்றியை ஒழுங்கமைக்க முடியாமல் இருப்பது, அவர்களின் ஆழமான திவால்நிலைமையின் நிராகரிக்கமுடியாத நிரூபணமாக உள்ளது.

இந்த அனுபவம், மிகவும் பலமாக தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஏற்கனவே செல்வாக்கு செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதிகரித்த எண்ணிக்கையிலான தொழிற் சங்கங்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருப்பதுடன், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் மற்றும் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


பாரீஸ் பல்கலைக்கழகம் - IV வேலைநிறுத்தம்

மொத்தத்தில், பிரான்ஸ் எங்கிலும் 100 க்கும் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT), தொழிலாளர்கள் சக்தி (FO) மற்றும் ஐக்கிய சங்கங்கள் ஆகியவை, சுதந்திர ஜனநாயக உயர்நிலைப்பள்ளி மாணவர் கூட்டமைப்பு, தேசிய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. தொழிற்சங்கங்கள் இரயில்வே வேலைநிறுத்தத்தைச் சேதப்படுத்தி இருந்ததால், ஜூன் 28 இல் நடந்த கடைசி தேசிய போராட்ட நடவடிக்கையின் போதிருந்ததை விட நிறைய மக்கள் கலந்து கொள்ளவில்லை.

பாரீஸின் போராட்ட பேரணியில் பொலிஸ் படைகளுக்கும் சுமார் 100 அளவில் இருந்த ஒரு குழுவுக்கும் இடையே மோதல்கள் வெடித்து, ஐந்து பேர் கைது செய்யப்படுவதற்கு இட்டுச் சென்ற நிலையில், அங்கே தொழிற்சங்கங்கள் 50,000 போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக கணக்கிட்டன (இது பொலிஸ் ஆதார தகவல்களின்படி 21,000 ஆக இருந்தது). மார்சைய்யில், லியோன், நாந்தேர் மற்றும் லு ஹாவ்ர் உட்பட பிற நகரங்களில் 3,000 மற்றும் 5,000 பேருக்கு இடையே பேரணியில் இருந்தனர்.

மக்ரோனுக்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்த பாரிஸ் வந்திருந்த பிரிட்டானியில் வசிக்கும் ஒரு ஓய்வூதியதாரர் Joyce உடன் WSWS செய்தியாளர்கள் உரையாற்றினர்: “எங்களுக்கு மிகவும் குறைந்த ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன, அவை அதிகரிக்கப்படுவதே இல்லை. அவர்கள் வயதானவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கிறார்கள், ஆனால் அந்த வரம்புக்கு கீழே இருக்கும் குறைந்த ஓய்வூதியங்களை அவர்கள் அதிகரிப்பதே இல்லை. பல பெண்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், வீட்டில் அவர்களை பராமரிக்க வேண்டியிருக்கின்றது, பின் நாங்கள் தற்காலிக வேலைகளைத் தேட வேண்டியிருக்கிறது, பின்னர் வேலையிட விபத்தில் நாங்கள் சிக்கினால்… அதன் பின்னரும் உங்களுக்கு நல்லதொரு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. அந்த தொகையில் நாங்கள் எவ்வாறு வாழ முடியும்? ஓய்வூதியதாரர்களான எங்களிடம் இருந்து அனைத்தும் பறிக்கப்படுகிறது, தொழிலாளர்களுக்கும் அதே நிலைமை தான். இரயில்வே தொழிலாளர்களுக்கு கூட, ஒவ்வொன்றும், அவர்களின் அனைத்து சமூக உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

மத்திய கிழக்கில் பிரெஞ்சு அரசின் போர்களைக் கண்டித்த Joyce, நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவத்திற்கு செலவிடும் அதன் திட்டங்களையும் கண்டித்தார்: “சிரியாவில், அந்நாட்டில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அது எவ்வாறாயினும் எங்களது வேலையா? அங்கே நமக்கு எதுவும் வேலையில்லை. சுத்தமாக எனக்கு அதில் உடன்பாடில்லை,” என்றார்.

மக்ரோனின் கீழ் தொழிலாளர்கள் மீது அதிகரித்தும் வரும் அழுத்தங்களை Joyce சுட்டிக்காட்டினார்: “செவிலியர்கள் பலர் இருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து நான் வருகிறேன். என்னுடைய மருமகளைப் போல, அவர்கள் வேலையில் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். … அவர்கள் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறார்கள், நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது, பின்னர் பரிசோதனைகளுக்காக வேறெங்காவது செல்ல வேண்டும், பின்னர் இன்னும் கூடுதலான பரிசோதனைகள் செய்வதற்காக 200 கிலோமீட்டருக்கு அங்காலே செல்ல வேண்டியிருக்கிறது,” என்றார்.


வெளிநாடுகள் மீது இனி போர் வேண்டாம், உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான வேட்டையாடல் வேண்டாம்

மக்ரோன் "பணக்காரர்களுக்கு [மட்டும் தான்] நண்பர்" என்று தெரிவித்த Joyce, புரட்சிகர பாதையை ஏற்பதே முன்னே உள்ள ஒரே வழி என்றார்: “பிரான்சில் மிகப் பெரியளவில் சமூக சமத்துவமின்மை இருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொருவரும் கண்ணியமான வழியில் வாழ வேண்டும், போதுமான உணவு வேண்டும், அவர்கள் வசிப்பதற்கு ஓர் இடம் வேண்டும். எல்லாவற்றையும் பங்குச் சந்தையில் உள்ள மக்ரோனின் நண்பர்களுக்கு வழங்க வேண்டியதில்லை. எந்தவொரு விடயத்திலும் நம்மை குறித்து சுத்தமாக எதுவும் கண்டு கொள்ளாத ஓர் அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம், ஆகவே தான் நாம் வெளியில் வந்து போராடுகிறோம், ஆனால் இது எதுவும் நல்லது செய்துவிடாது. நாம் விரும்பிய வரைக்கும் நாம் போராடலாம், இறுதியில் அடிப்படையிலேயே நாம் 1789 செய்ததைப் போல செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.

ஒரு தொழில்துறை நகரமும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கோட்டையாக விளங்கியதும், தொழில்துறை அழிப்பால் கடுமையான பாதிக்கப்பட்டதுமான அமியான் நகரில் 1,000 க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர், அங்கே மருத்துவத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு தொழிலாளர்களும் பெருந்திரளான அணிவகுப்பாளர்களில் இருந்தனர்.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு இரயில்வே தொழிலாளரான பிலிப், இரயில்வே வேலைநிறுத்தம் விற்றுத்தள்ளப்பட்டதையும் CGT பொதுச் செயலாளர் பிலிப் மார்ட்டினேஸ் வகித்த பாத்திரம் குறித்து கண்டிக்கவும் WSWS செய்தியாளர்களுடன் அமியான் இல் பேசினார்: “அவர் முதலாளித்துவத்திற்கு எதிரான போராளி இல்லை, முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களின் அரசாங்கங்களுடன் எந்த உடன்படிக்கைகளும் செய்யக் கூடாது. மக்ரோனை நீக்க வேண்டியுள்ளது, அவர் விட்டுக்கொடுப்புகளை வழங்க மாட்டார். இது தான் வேலைநிறுத்தத்தின் படிப்பினை. இதற்கு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுதிரண்ட ஓர் இயக்கம், புரட்சி, அவசியப்படுகிறது,” என்றார்.

மார்சைய்யில், WSWS செய்தியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டிருந்த துறைமுக தொழிலாளர்கள், உள்ளாட்சி அரசு தொழிலாளர்கள், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் வாழ்க்கை தொழில் சார்ந்த உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களிடையே உரையாற்றினர்.


வேலைநிறுத்தத்தில் இருக்கும் இரயில்வே தொழிலாளர்கள் – அதே மக்ரோன், அதே போராட்டம்

மார்சைய்யில் Diderot உயர்நிலைப் பள்ளியின் ஒரு பேராசிரியரான மார்க் WSWS க்கு கூறுகையில், அவர் "சமூக சமத்துவமின்மையை வலுப்படுத்தும் மக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்ப்பதாக" தெரிவித்ததுடன், “வாழ்க்கை தொழில் சார்ந்த கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், அவை சமூகத்தில் குடிமக்கள் ஒரு நிஜமான இடத்தை அடையும் வகையில் அவர்கள் நடந்து கொள்வதற்கு மக்களைப் பயிற்றுவிக்கவோ மற்றும் அவர்கள் ஒருங்கிணைப்பதற்கோ எங்களை அனுமதிக்காது. உண்மையில் பொதுக்கல்விக்காக செலவிடப்படும் மணிதியாலங்களைக் குறைக்க இந்த அரசாங்கம் திட்டமிடுகிறது, அவ்விதத்தில் வேலை வாங்குவதற்கு அருகதையான ஆனால் சிந்தனைப்பூர்வமாக இருக்காத சுரண்டலுக்கான மூலப்பொருளாக அவர்களை மாற்றுகிறார்கள்,” என்றார்.

அரசாங்கத்திலிருந்து அமைச்சர்களின் இராஜினாமா அலையை மார்க் சுட்டிக்காட்டினார்: “மக்ரோனின் அரசியல் புதிய போத்தில்களில் அடைக்கப்பட்ட பழைய வைன் என்பதை இன்று நாம் காண்கிறோம். (உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கொலொம் அவர் முன்னர் இருந்த நகராட்சி ஆசனத்தை திரும்ப பெற விரும்புகிறார். (சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலா) உலோ இந்த அரசாங்கத்திற்கு ஓர் இடது மூடுமறைப்பாக சேவையாற்றினார், காலநிலை மாற்றம் என்பது இன்றைய மிகப் பெரிய பிரச்சினை என்கின்ற போதினும், இந்த அரசாங்கம் நிச்சயமாக அதற்காக செயல்படக் கூடியதல்ல. இந்த அரசாங்கம் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சக்தி வாய்ந்த நபர்களை பதவிகளில் நியமித்தது,” என்றார்.

இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திலிருந்து அவர் என்ன தீர்மானங்களை எட்டினார் என்று கேட்கப்பட்ட போது, அந்த வேலைநிறுத்தத்தை "நியாயமானதாக" நினைப்பதாக தெரிவித்தார். “தேசிய இரயில்வே உள்ள நமது தோழர்கள் வேலைநிறுத்தம் செய்யும் அவர்களின் அணுகுமுறையை மாற்ற முயன்றார்கள் ஆனால் இறுதியில் அவர்களின் கோரிக்கைகளில் எதையும் அவர்கள் பெறவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்படும் பாரம்பரிய அடையாளப் போராட்டங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை மார்க் சுட்டிக்காட்டினார்: “தொழிலாளர்களும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களும் தங்களை விலக்கி கொள்ளும் நிலைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு நிலைமையில் நாம் இருக்கிறோம். நடைமுறைரீதியில் போராடுவதற்கு இன்னும் கூடுதலான வழிகளை நாம் காணவில்லை, ஒருவேளை அது சமூக ஊடகங்களைச் சிறப்பாக பயன்படுத்துவதை உள்ளடக்கி இருக்கலாம்,” என்றார்.

வேலைவாய்ப்பற்ற ஒரு தொழிலாளரான Graciela மார்சைய்யில் WSWS செய்தியாளர்களுக்கு கூறுகையில், "நமது விருப்பத்திற்குரிய ஜனாதிபதியின் கொள்கையை எதிர்ப்பதாக" தெரிவித்தார். “அவர், நமது உரிமைகளைச் சூறையாடி நம்மிடையே வாழும் வறியவர்களைத் தாக்கும் சட்டங்களைத் திணிக்க முயன்று வருகிறார், அதேவேளையில் நமது முதுகுக்குப் பின்னால் அரசியல்வாதிகளும் ஆதரவு வட்டாரங்களும் இலாபமடைந்து வருகின்றனர்,” என்றார்.

தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை ஒழுங்கமைக்க புதிய தகவல்தொடர்பு வழிமுறைகளைக் கருத்திக் கொள்ள வேண்டும் என்றும் Graciela வலியுறுத்தினார்: “பத்திரிகைகள் நம்மை குறித்து வாய்மூடி உள்ளன. நாம் சமூக ஊடகங்கள் வழியாக செயல்பட வேண்டும், அவ்விதத்தில் ஒவ்வொருவரையும் நாம் ஒருங்கிணைத்து கொண்டு வர முடியும்.” பிரான்சில் ஒரு புரட்சிகர நெருக்கடி எழுந்தால் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இராணுவம் மக்களை ஆதரிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்: “உங்களுக்குத் தெரியுமா, இராணுவத்தில் இணைவதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் கோரிக்கை மனுக்கள் சுற்றில் விடப்பட்டுள்ளன,” என்றார்.

மக்ரோனின் இரயில்வே தனியார்மயமாக்கம் மற்றும் இரயில் தொழிலாளர்களின் கூலி மட்டங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்ட போது, மக்ரோனின் சீர்திருத்தம் நிராகரிக்கப்பட்டு, கழித்தொதுக்கப்பட வேண்டும் என்று Graciela தெரிவித்தார். “இத்தகைய சட்டங்களை நிறுத்துங்கள், நாங்கள் அவற்றை நிராகரிக்கிறோம் என்று கூற, மக்கள் வீதிகளில் இறங்க முடியும் என்று நான் நம்ப விரும்புகிறேன். ஒவ்வொருவரும் வீதிகளில் இறங்க வேண்டும்,” என்றார்.