ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian police detain thousands of striking Tamil Nadu auto workers

வேலைநிறுத்தம் செய்யும் ஆயிரக்கணக்கான தமிழ் நாடு வாகனத் தொழிலாளர்களை இந்திய போலிஸ் தடுத்து அடைப்பு

By Arun Kumar 
25 October 2018

செவ்வாயன்று, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அருகிலுள்ள ஓரகடம் தொழிற்துறை மையத்தில் வேலைநிறுத்தம் செய்யும் 2,000 க்கும் அதிகமான வாகனத் தொழிலாளர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யமஹா இந்தியா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் மியோங் ஷின் இந்தியா ஆட்டோமொபைல் (MSI) ஆலைகளில் வேலை செய்யும் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒரகடத்தில் மூன்று திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாலையில் குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

ஊதிய வெட்டுக்கள், நிலைமைகள் மற்றும் போர்க்குணம்மிக்க தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் ஆகியவை தொடர்பான ஒரு நீடித்த மோதலின் ஒரு பகுதியாக செவ்வாயன்று காலையில் காஞ்சிபுரம் நிர்வாக அலுவலகத்தை நோக்கி தொழிலாளர்கள் நடை பயணம் மேற்கொண்டனர். அப்போது போலீசார் அதனை தடுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளிள் ஈடுபட்டனர். இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.


போலீஸால் சூழப்பட்ட வேலைநிறுத்த தொழிலாளர்கள்

இந்த பெருமளவிலான சுற்றி வளைப்பு, இந்திய வாகன தொழிலாளர்கள் மீதான ஒரு பரந்தளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாக பூகோள வாகன பெருநிறுவனங்கள், பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான மத்திய அரசாங்கம், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகள் மற்றும் போலீஸ், நீதிமன்றங்கள் உட்பட, அரசு அதிகாரிகளினால் நடத்தப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கடந்த மாதத்தில், போலீஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களது ஆர்ப்பாட்டங்களை நசுக்க முயற்சி செய்யப்பட்டது, மற்றும் தொடர்ந்து பரந்தளவில் கைது செய்யப்பட்டனர்.

இப்படியான தாக்குதல்கள், கடந்த ஆண்டின் தொடக்கத்தில், வட மாநில ஹரியானா நீதிமன்றம் ஒன்றினால் 13 தொழிலாளர்கள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதன் ஒரு பகுதியாகும். அவர்கள், ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான மாருதி சுசுகி ஹரியானா ஆலையில், ஊதிய வெட்டு மற்றும் நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சுயாதீன தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க போராடியதற்காக ஜோடிக்கப்பட்டனர். கடந்த வாரம், ஹரியானா நீதிமன்றம், தங்களது மேல் முறையீடு விண்ணப்பம் விசாரணைக்கு வரும் வரையில் பிணையில் விடுவிக்கும்படி கேட்டு தாக்கல் செய்த வழக்கை தூக்கி வீசியது.

யமஹா இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஊழியர்கள் கடந்த மாதத்தில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். MSI தொழிலாளர்கள் 50 நாட்களுக்கு முன்னர் தொழில் சார்ந்த நடவடிக்கையை தொடங்கினர்.

சிஐடியு உடன் இணைந்த, யமஹா தொழிலாளர் சங்கம் அல்லது யமஹா மோட்டார் தொழிலாளர்கள் அமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு சக ஊழியர்களை மறுபடி பணியில் அமர்த்தக்கோரி யமஹா தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். தொழிற்சங்கங்கள் அமைக்க மற்றும் ஊதிய உயர்வுக்கான முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை எதிர்த்து என்ஃபீல்டு மற்றும் MSI போராட்டங்கள் வெடித்தன.

தொழிற்துறை வேலைகள் மீது நடத்தப்படும் ஒரு பரந்த தாக்குதலின் மத்தியில், தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். ஒரகடம் தொழிற்துறை மண்டலத்தில் உள்ள ஹனிவெல் தயாரிப்பு நிறுவனம், திடீரென செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அவர்களுக்கு வெறும் இரண்டு மாத ஊதிய இழப்பீடு வழங்கியது.

யமஹா இந்தியாவில் இருந்து சுமார் 800 தொழிலாளர்கள், ராயல் என்ஃபீல்டிலிருந்து 1,500, MSI இல் இருந்து 200 பேர் செவ்வாய்க்கிழமை பேரணியில் பங்கேற்றனர்.


அணிவகுப்பில் உள்ள ஒரு பகுதி வாகன தொழிலாளர்கள்

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் கட்டுப்பாட்டில் உள்ள சிஐடியு தமிழ்நாட்டில் மற்றும் நாடு முழுவதும் தொழிலாளர்களின் பரந்த அளவிலான அணிதிரட்டலை தடுக்க முற்படுகிறது. அதற்கு மாறாக நீதிமன்றங்கள் மற்றும் பிற அரசு அதிகாரங்களிடம் வீணான முறையீடுகள் செய்யும்படி தொழிலாளர்களை வழி நடத்தியுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு, வாகன நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை தடுப்பதற்கு நீதிமன்றத் தலையீடு செய்யக்கோரி ஒரு மனுவை சிஐடியு தாக்கல் செய்தது. செவ்வாயன்று, தொழிற்சங்கம், ஏற்பாடு செய்த நடை பயணம் "மாநில அரசு மற்றும் மத்திய அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்" என்று கோரியது.

மாருதி சுஜூகி தொழிலாளர்களின் மீதான ஜோடிப்பு வழக்கு தெளிவாக்குவது போல், இந்திய நீதிமன்றங்கள் தொழிலாளர்களுக்க எதிராக பெருவணிகத்தின் இரக்கமற்ற பாதுகாவலர்களாக செயல்படுகின்றன.

சிஐடியு விண்ணப்பம் செய்யும், தமிழ் நாடு அரசாங்கம், தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்து வரும் ஒரு நீண்ட பதிவைக் கொண்ட அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினால் (அஇஅதிமுக) தலைமை தாங்கப்படுகிறது.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வலதுசாரி பிஜேபி மத்திய அரசாங்கத்திற்கு அஇஅதிமுக ஆதரவளிக்கிறது, இது சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் நிலைமைகளின் மீதான ஒரு தாக்குதலின் ஒரு பகுதியாக ஒப்பந்தம் மற்றும் தற்காலிக உழைப்பு முறையை விரிவுபடுத்துகிறது.

மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்துள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் செவ்வாய் எதிர்ப்பில் பங்கு பெற்றது. வெளிப்படையாக நீதிமன்றங்கள் மற்றும் அஇஅதிமுக ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் சிபிஎம் குறித்து அது எந்த விமர்சனமும் செய்யவில்லை.

கூட்டப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, சிபிஎம் தலைவர் மற்றும் சி.ஐ.டி.யு.வின் தமிழ்நாடு மாநில தலைவரான ஏ. சௌந்தரராஜன், அரசு அதிகாரங்களுக்கு அவரது சங்கத்தின் அடிபணிவை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

தொழிலாளர்கள் போலிஸ் தலையீட்டை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் தங்கள் ஜனநாயக உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் விரும்பியதை உணர்ந்த சௌந்தரராஜன் அமைதியாக இருக்குமாறும், வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்களை (போலிஸ்) தடுத்து அடைப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"தொழிற்சாலை என்ற சிறைச்சாலையில் இருப்பதை விட சிறைச்சாலையில் இருப்பதே மேல்" என்று சௌந்தரராஜன் சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார். "இன்று நாங்கள் சமாதானமாக கைது செய்யப்படுவோம், தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்."


வேலைநிறுத்தக்காரர்களின் ஒரு பகுதி

"இந்த வேலைநிறுத்தத்திற்கு காரணமான நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் அதிகாரங்களிடம் மன்றாடினார். ஆலைநிறுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற தொழிலாளர் ஆணையரின் ஆலோசனையை பின்பற்ற தவறிவிட்டது என்று சௌந்தரராஜன் நிறுவனத்தின் மீது கண்டனம் தெரிவித்தார்.

வறுமை ஊதியங்கள் மற்றும் மோசமான பணி நிலைமைகளின் அடிப்படையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக சுதந்திர சந்தைக் கொள்கைகளை செயல்படுத்துகின்ற பெரிய வணிகக் கட்சிகள் பற்றி சௌந்தரராஜன் எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை. CPM தலைமையிலான இடது முன்னணி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநில அரசாங்கங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது அதேபோன்ற தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை அமுல்படுத்தியது.

செவ்வாயன்று, தொழிற்சங்கங்களுடன் மாவட்ட நிர்வாகி ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களை நிறுவனம் புறக்கணித்ததாக சிஐடியு தலைவர் வினவினார். "அடுத்த 14 நாட்களுக்குள் இந்த போராட்டம் தீர்க்கப்படவில்லையென்றால், எங்கள் 40 தொழிற்சங்கங்கள் இந்த பிராந்தியத்தில் வேலைநிறுத்தம் செய்யும் என்று நாங்கள் அறிவிக்கிறோம், இந்த போராட்டத்தை மாநில முழுவதும் பல்வேறு வடிவங்களில் நாங்கள் எடுத்துச் செல்வோம்" என்று அவர் அறிவித்தார்.

இந்த கருத்துக்கள் வெற்று சொல்லாட்சியை விட வேறு ஒன்றும் இல்லை. தொழிற்சங்கம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது என்னவென்றால் அது, வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுப்பதற்காக நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒன்றுபட்டு வேலை செய்கிறது.

கைது செய்யப்பட்டபின் ஒரு தொழிற்சங்க அறிக்கையில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. "தொழிலாளர்கள் மீது போலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது” குறித்து அஇஅதிமுக அரசாங்கத்தை அந்த அறிக்கை கண்டனம் செய்தது, அதன் பின்னர் இந்த விவகாரத்தில் "தலையீடு" செய்யும்படி மற்றொரு வேண்டுகோளும் விடுத்தது.

WSWS நிருபர்கள் செவ்வாயன்று பேரணியில் பங்கெடுத்த தொழிலாளர்களுடன் பேசினர்.

27 வயதான யமஹா இந்தியா தொழிலாளி கதிர், "எங்கள் முக்கிய கோரிக்கை, இரண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மறுபடி வேலையில் இணைக்க வேண்டும். நாங்கள் எங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகிறோம்.

"நாங்கள் சம்பள உயர்வை விரும்புகிறோம். நான் மற்றொரு வாகன நிறுவனத்தில் வேலை செய்தேன். நிரந்தர தொழிலாளியாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த நிறுவனத்தில் நான் இணைந்துகொண்டேன். நான் இப்போது நிரந்தரமாக இருந்தாலும், என் சம்பளம் மிகவும் குறைவு. இரண்டு சக்கர வாகன நிறுவனங்களில் பெரும்பாலானவை, மாத சம்பளமாக 25,000 ரூபாய் [340 அமெரிக்க டாலர்] மட்டுமே வழங்குகின்றன."

"கம்பெனி விதிகளை ஏற்க வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதற்காக நிர்வாகம் எங்களை பயமுறுத்துகிறது. அப்போதுதான் அவர்கள் எங்களை வேலைக்குத் திரும்ப அனுமதிப்பார்களாம். எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்."

மற்றொரு யமஹா இந்தியா தொழிலாளி செல்வம் கூறினார்: "ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. அனைத்து வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையும் மறுபடி வேலையில் வைக்க வேண்டும் என்ற எங்கள் போராட்டம் தொடரும்."