ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian state government arrests at least 14 union leaders

இந்திய மாநில அரசாங்கம் குறைந்தபட்சம் 14 தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்தது

By Kranti Kumar 
29 October 2018

இந்து-தீவிரவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலமான ஹரியானாவில், கடந்த வெள்ளியன்று, அரசுக்கு சொந்தமான ஹரியானா போக்குவரத்துக் கழகத்தில் வேலைநிறுத்தம் செய்த பொது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவளித்து 200,000க்கும் அதிகமான பொதுத்துறைத் தொழிலாளர்கள் ஒரு தொழில்துறை நடவடிக்கையை மேற்கொண்டபோது, அவ்வரசாங்கம் குறைந்தபட்சம் 14 தொழிற்சங்கத் தலைவர்களை கைதுசெய்துள்ளது.

அரசு அறிவித்திருந்த அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டத்தை (Essential Services Maintenance Act-ESMA) மேற்கோள்காட்டி, வெள்ளியன்று, ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களின் வீடுகளில் கூட போலிசார் திடீர்சோதனைகளை நடத்தியுள்ளனர். மேலும், ஏனைய தொழிற்சங்க “ஆர்வலர்கள்” குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

“அத்தியாவசிய சேவைகள்” என அரசாங்கம் வரையறுக்கும் விடயங்களில் வேலைநிறுத்தங்களுக்கு ESMA தடைவிதிப்பதுடன், பொதுத்துறைத் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான மாநில அரசாங்கங்கத்திற்கு சாதகமான அரசியல் ஆயுதமாகவும் அது பயன்படுகிறது.

பொது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க பிஜேபி மாநில அரசாங்கம் பலமுறை முயன்றதற்கு எதிராக பல மாதங்கள் நீடித்த போராட்டங்களை ஹரியானா போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தனியார் ஒப்பந்தக்காரரிடம் இருந்து 700 பேருந்துகளைப் பெற்று அவற்றிற்கான ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் பொது போக்குவரத்துத் தொழிலாளர்களை விட மிகக்குறைந்த ஊதியமளிக்கவும், கூடுதல் மணி நேரங்களுக்கு அவர்களை வேலைவாங்கவும் அரசாங்கம் முயற்சிப்பதை எதிர்த்து தான், அக்டோபர் 16 அன்று அவர்களது சமீபத்தியப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஹரியானா அரசாங்கம் வெளியிட்ட மாத ஊதிய அட்டவணையின் படி, ஒரு பேருந்து ஓட்டுநர் அல்லது நடத்துநரின் ஊதிய மட்டமானது, குறைந்தளவு போனஸ் தொகையுடன் சேர்த்து ரூ.5,200-20,200 (75-270 அமெரிக்க டாலர்கள்) வரையிலானதாகும்.

வணிக சார்பு மாநில அரசாங்கத்திற்கு எதிராக பரவலாக கோபம் நிலவுவதால்,   போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு ஏனைய பொதுத்துறைத் தொழிலாளர்கள் முன்வருவதற்கும் வெறுக்கப்பட்ட பிஜேபி அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புவதற்கும் எந்த தூண்டுதலும் அவசியமாக இருக்கவில்லை.

ஏனைய அரசாங்க சேவைகளை தனியார்மயமாக்குவதை நோக்கிய முதல் படியாகவே பொது போக்குவரத்து சேவையை தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என அனைத்து தொழிலாளர்களும் புரிந்து கொண்டுள்ளனர், அதாவது, இது சேவை வெட்டுக்கள், மற்றும் ஊதியங்கள், வேலை பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான துடைத்துக்கட்டும் தாக்குதல்கள் என இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும்.

ஹரியானா, பிஜேபி அரசாங்கத்தின் கொள்கைகள், தேசிய அரசாங்கத்தின், அதிலும் இந்து மேலாதிக்கவாத பலசாலியான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் கீழான கடுமையான வணிக சார்பு கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து வணிக சார்புடைய கொள்கைகளையே மோடி அரசாங்கம் தொடர்ந்து திணித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு இணையாக, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்தில், மத சிறுபான்மையினர் மீதான, அதிலும் குறிப்பாக முஸ்லீம் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் மோடி அரசாங்கம் ஊக்கமளித்து வந்துள்ளது. 

செப்டம்பர் ஆரம்பத்தில், தொழிலாளர்களை கடுமையாக தாக்கி 23 தொழிற்சங்கத் தலைவர்களை கைதுசெய்ய ஒரு பெரும் போலிஸ் படையை ஹரியானா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது. அதாவது, போக்குவரத்து தொழிலாளர்களின் “Chakka jam” (முழு வேலைநிறுத்தம்) என்ற திட்ட அறிவிப்பை தடுப்பதே மாநில அரசு ஒடுக்குமுறையின் நோக்கமாக இருந்தது.

ஹரியானாவில், பல்லாயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள், மின்சார வாரியங்களின் இளம் பொறியாளர்கள் மற்றும் சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளால் கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ஜப்பானிய நிறுவனமான மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் நிகழ்த்தியதான வாகனத் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறைக்குப் பின்னர் இந்த மாநிலம் சர்வதேச அளவில் இழிபுகழ் பெற்றதாக உள்ளது. பெருநிறுவன கைக்கூலி தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து நிறுவியதான மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) பதின்மூன்று தலைவர்கள் ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.    

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற மோடியின் திட்டத்தின் கீழ், வேலை நிலைமைகள் அதிகரித்தளவில் கொடூரமானதாகிவிட்டன, அதேவேளை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழிலாள வர்க்க எதிர்ப்பை அரசாங்கம் நசுக்குகின்றது. இருப்பினும், எதிர்ப்பு வளர்ந்து வருவதுடன் வர்க்க மோதல்களின் கடும் எழுச்சி அலையின் மத்தியில், ஹரியானா பொதுத்துறை ஊழியர்கள் நடத்தும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், தென் மாநிலமான தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான இருச்சக்கர (motorcycle) வாகனத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அம்மாநில அரசாங்கமும் கூட, பரந்தளவிலான கைது நடவடிக்கைகள் மற்றும்  வேலைநிறுத்தம் நடைபெறும் ஆலைகளில் தொழிலாளர்கள் நடத்தும் மறியல்களுக்கு தடைவிதிப்பது உட்பட அடக்குமுறை நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.  

ஹரியானா மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள தேசிய தலைநகரம் தில்லியில், அதன் அரசாங்கம் கடும் அடக்குமுறையை செயல்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக ESMA ஐ பிரயோகித்தாலும் கூட, நீண்டகாலமாக போராடி வரும் தில்லி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நகராட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நாள் வேலைநிறுத்தத்துடன் போராட்டத்தைத் தொடங்க இன்று உறுதிபூண்டுள்ளனர்.  

அறிக்கைகளின் படி, 1988க்குப் பின்னர் DTC க்கு எதிரான முதல் பெரும் வேலைநிறுத்தமாகும் இது.

தேசிய தலைநகரப் பகுதியான தில்லி, தற்போது, முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (AAP, Common Man’s Party) தலைமையின் கீழ் உள்ளது. பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி போன்ற பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலமாக AAP தன்னை உயர்த்திக்கொள்ள முனைந்ததுடன், சிறந்த பொது சேவைகளை வழங்குவோம் என வாக்குறுதிகளையும் வழங்குகிறது.

நூறாயிரக்கணக்கான பயணிகளுக்கு, தினசரி போக்குவரத்து வசதியை வழங்கும், தில்லி போக்குவரத்துக் கழகம் (DTC), ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இயந்திர வல்லுநர்கள் உட்பட, அதன் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை தற்காலிக ஒப்பந்தங்களின் கீழ் வேலைக்கு அமர்த்தியள்ளது. இந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தை ரூபாய் 3,500-4,500 (47.88-61.56 அமெரிக்க டாலர்கள்) என்ற மட்டத்திற்கு குறைப்பதற்கு, அதாவது அவர்களது மாத ஊதியத்தில் கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தை வெட்டுவதற்கு கெஜ்ரிவால் அரசாங்கம் திட்டமிடுவதாக ஆகஸ்ட் மாத இறுதியில் அவர்களுக்கு  அறிவிக்கப்பட்டது.

வணிக மற்றும் அரசாங்கத் துறைகளுக்கு குறைந்தபட்ச ஊதியங்களை உயர்த்துவதற்கு AAP அரசாங்கம் வெளியிட்ட 2017ம் ஆண்டு உத்தரவை தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆகஸ்ட 4, 2018 இல்  இரத்து செய்தது, இதனை தில்லி அரசாங்கம் அதன் நியாயப்படுத்துதலுக்கு ஆதாரமாக காட்டியது.  திறமையற்ற, பகுதியளவு திறமை பெற்ற மற்றும் முழு திறமை பெற்ற தொழிலாளர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு முறையே ரூ.13,350 (180 அமெரிக்க டாலர்), ரூ.14,698 (200 அமெரிக்க டாலர்) மற்றும் ரூ.16,182 (220 அமெரிக்க டாலர்) என அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை தனியார் நிறுவனங்கள் சவால் செய்தன என்பதுடன், வியப்புக்கு இடமின்றி, ஒரு வணிக சார்பு கண்ணோட்டத்தில் வெளிப்படையாகவே செயல்படும்  ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையும், அரசாங்க உத்தரவை புறக்கணித்து அவர்களுக்கு ஆதரவான தீர்ப்பை அறிவித்தன. DTC ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வைக் கூட, AAP அரசாங்கம், திரும்பப் பெறுவதற்கு தேவையான மூடிமறைப்பை இந்த தீர்ப்பு வழங்கியது.

இந்த தாக்குதலை எதிர்கொள்வதில், DTC வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கும், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கம், ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களின் எந்தவொரு தொடர்ச்சியான வேலைநிறுத்த நடவடிக்கையை எடுப்பதற்கும் மறுத்துவிட்டது, அண்டை மாநிலமான ஹரியானாவில் நடைபெறும் வேலைநிறுத்தங்களுடன் DTC தொழிலாளர்களை இணைப்பது என்பது ஒரு புறமாக உள்ளது. மாறாக ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்கம் ஒரு நாள் நடவடிக்கையை எடுக்க முடிவெடுத்தது.

ஹரியானா மற்றும் தில்லியில் எழுந்த தொழிலாள வர்க்க போராளிகளின் சமீபத்திய வெடிப்புக்களானது. வளர்ந்துவரும் சந்தைகள் என்று அழைக்கப்படும் பெரும் கடன் நெருக்கடி உட்பட, பொருளாதார நெருக்கடியை தொழிலாளர்களின் முதுகில் ஏற்றுவதற்கு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே அவை உள்ளன.