ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Commission rejects Italy’s 2019 budget

இத்தாலியின் 2019 வரவு-செலவுத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் நிராகரிக்கிறது

By Alexandre Lantier and Marianne Arens 
24 October 2018

இத்தாலியின் அதிவலது அரசாங்கம் முன்வைத்ததான 2019 வரவு-செலவுத் திட்டத்தில், சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (European Union-EU) இத்தாலி அளித்திருந்த வாக்குறுதிகளை அது மீறிவிட்டதாகக் கூறி, அதில் திருத்தங்களை செய்திட ஆணையிட்டு ஐரோப்பிய ஆணையம் நேற்று அதை நிராகரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டம் எதையும் இதுவரை திருத்தி மீளசமர்ப்பிக்க அது கோரியதில்லை, இதுவே முதல் முறையாகும்.

இத்தாலிய மற்றும் உலகளாவிய சந்தையின் வீழ்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு நிதி நெருக்கடியைத் தடுப்பதற்கு முயற்சிக்கின்ற அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றிய சார்பு மற்றும் அதிவலது ஜனரஞ்சகவாத சக்திகள் இரண்டும் தங்களது தனித்துவமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கப் போராடும் நிலையில், ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் உயர்மட்டத்திற்குள் ஒரு வன்முறை மிக்க போராட்டம் கட்டவிழ்ந்துள்ளது. இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் எதிர்ப்பை தொடங்குவதற்கான ஒரு முன்னோக்கை பற்றித்தான் முக்கிய கேள்வி தற்போது எழுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கான உத்திரவு மற்றும் நவ-பாசிச இத்தாலியரான உள்துறை அமைச்சர் மத்தேயு சல்வீனியின் தேசியவாத வாய்வீச்சு, இரண்டும் வலதுசாரி தன்மையில் சமமாக இருப்பதுடன், தொழிலாளர்களுக்கு விரோதமானவையாக உள்ளன.

சல்வீனியின் “மக்களுக்கான வரவு-செலவுத் திட்டம்” (“People’s Budget”) முந்தைய திட்டங்களில் இருந்து “கணிசமான மீறலை” கொண்டிருப்பது குறித்து கண்டிக்கும், மற்றும் தெளிவான விளக்கங்களைக் கோரும் ஒரு கடிதத்தை, அக்டோபர் 18 அன்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது. சல்வீனியின் சிக்கன வரவு-செலவுத் திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மாஸ்ட்ரிச் அளவுகோலின் பற்றாக்குறை வரம்பிற்குள் இருக்கும் அதேவேளை, முந்தைய இத்தாலிய அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின்  0.8 சதவீதத்தைப் போல மும்மடங்கு அதிகமான பற்றாக்குறையை அமைக்க அது முடிவெடுத்துள்ளது.

இந்த ஐரோப்பிய கடிதம் பத்திரச் சந்தைகளில் ஒரு விற்பனையை முடுக்கிவிட்ட நிலையில், பொருளாதார ஆணையர் பியர் மொஸ்கோவிச்சி, ஒரு சந்தை வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு ரோம் உடனான “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு” உறுதியளித்தார். இத்தாலிய வங்கிகள் கடைசியாக 2008ல் நிகழ்ந்த நிதிய பொறிவை தொடர்ந்து 260 பில்லியன் யூரோ மதிப்பீட்டிலான வராக் கடன்களில் ஏற்கனவே சிக்கியுள்ளன, இந்நிலையில், ஜேர்மனியப் பத்திரங்களை விட 4 சதவிகிதம் கூடுதலாக வட்டி செலுத்துகின்ற அளவிற்கு இத்தாலியப் பத்திரங்கள் வீழ்ச்சியை அடையுமானால், இத்தாலிய வங்கிமுறை “பராமரிக்கமுடியாத அழுத்தத்தை” எதிர்கொள்ளும் என சுவிஸ் பன்னாட்டு முதலீட்டு வங்கி Credit Suisse AG மதிப்பிட்டுள்ளது. அக்டோபர் 19 அன்று, இதேபோல ஜேர்மனிய பத்திரங்கள் 3.41 சதவிகிதத்தை எட்டியது குறித்த இத்தகைய “பரவலின்” போது, இது கிட்டத்தட்ட நிகழ்ந்தது.

மொஸ்கோவிச்சியின் வாக்குறுதிகள் ஒருபுறம் இருந்தாலும், இத்தாலிய வரவு-செலவுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நேற்று கண்டனம் செய்து, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை உத்தரவுக்கு ஒத்துப்போவதாக அதை திருத்தியமைக்குமாறு முறையாக கோரியுள்ளது. “துரதிர்ஷ்டவசமாக தெளிவுபடுத்தல்கள், குறிப்பாக கடுமையான இணக்கமின்மையினால் உருவான எங்களது முந்தைய முடிவுகளை மாற்றும் வகையில் திருப்திகரமானவையாக இல்லை” என்று ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் வால்டிஸ் டோம்பரோவ்ஸ்கிஸ் நேற்று தெரிவித்தார். “இத்தாலிய அரசாங்கம் நனவாகவும் வெளிப்படையாகவும் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது… கூடுதல் கடனைப் பெற்று ஏற்கனவே இருக்கும் கடனை தீர்க்க அது முயற்சி செய்கிறது, ஆனால் சில சமயங்களில் அதுவே மிகுந்த கடன் சுமையாக மாறிவிடும்” என்றும் தெரிவித்தார்.

ஆணையத்தின் முடிவு, ஐரோப்பிய மண்டலத்து யூரோ குழுவின் புதிய தலைவரான போர்ச்சுகலின் மரியோ சென்டேனோவால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையால் களிப்பூட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரோமின் பதில்களை சென்டேனோ “ஆக்கபூர்வமானது” எனப் பாராட்டியதுடன்,  பேரம் ஒன்று எட்டப்படும் என்று முன்கணித்தார்.

இத்தாலிய அரசாங்கம் அதன் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கோ அல்லது பில்லியன் கணக்கான யூரோக்களில் ஐரோப்பிய ஒன்றிய அபராதங்களை எதிர்கொள்வதற்கோ இன்னும் மூன்று வார கால அவகாசத்தையே தற்போது கொண்டிருக்கிறது.

புரூசெல்ஸ்ஸில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்துடனான ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதை சமிக்ஞை செய்யும் அதே வேளையில், புரூசெல்ஸ் மீதான தேசியவாத எதிர்ப்பிற்கு இத்தாலிய அதிகாரிகள் அழைப்பு விடுக்கிறார்கள். ஆட்சியின் வலிமைமிக்கவரான சல்வீனி இவ்வாறு அறிவித்தார்: “இது எதையும் மாற்றாது, ஊகவாதிகள் மீள்உத்தரவாதம் அளிக்கட்டும், நாங்கள் பின்வாங்க மாட்டோம். அவர்கள் ஒரு அரசாங்கத்தைத் தாக்கவில்லை, மக்களைத் தாக்குகிறார்கள். இத்தகைய விடயங்கள் இத்தாலிய மக்களை இன்னும் கோபமடையச் செய்யும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பு இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று மக்கள் புகார் கூறுவார்கள்.”

பிரபல ஐந்து நட்சத்திர இயக்கத்தின் (Five Star Movement - M5S) துணை பிரதமர் லூய்ஜி டி மாய்யோ முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிடிக்காத முதல் இத்தாலிய வரவு-செலவுத் திட்டமாகும். எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், இது புரூசெல்ஸ்ஸில் எழுதப்படாத, ரோமில் எழுதப்பட்ட முதல் இத்தாலிய வரவு- செலவுத் திட்டமாகும்.”

இருப்பினும், இத்தாலிய பிரதமர் யூசெப்ப கொன்தே மிகுந்த எச்சரிக்கையுடனான ஒரு குறிப்பை வெளியிட்டார். மற்றொரு வரவு-செலவுத் திட்டத்திற்கான “B திட்டம் எதையும்” ரோம் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தாலும், இதையும் கூறினார்: “ஒருவேளை, செலவின மதிப்பீட்டை செயல்படுத்தும் அவசியம் நேர்ந்தால், நாங்கள் குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்.” வரவு-செலவுத் திட்டத்தின் “சில அம்சங்களை மாற்றுவதற்கான சில தளர்வுகள்” அவருக்கு கிடைத்துள்ளதாக Bloomberg News க்கு கொன்தே தெரிவித்தார், என்றாலும், வரவு-செலவுத் திட்டத்தின் சாராம்சத்தை மாற்றுவதற்கு அவர் கேட்கப்பட்டிருப்பாரானால், “அது எனக்கு கடினமானதாக இருந்திருக்கும், ஏனென்றால் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறினார்.

உண்மையில், புரூசெல்ஸ் உடனான ஒரு உடன்பாட்டை எப்படி எட்டுவது என்பது குறித்து ரோமில் திரைக்குப் பின்னால் பரபரப்பான விவாதங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நடந்து கொண்டிருக்கின்றன. M5S மற்றும் சல்வீனியின் லெகா கட்சிக்கும் இடையிலான ஆளும் கூட்டணி, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேரங்களை ஏற்கனவே வெட்டிக் குறைத்துள்ளது, குறிப்பாக, வசந்த காலத்தில், முன்மொழியப்பட்ட அதன் பொருளாதார அமைச்சரான, யூரோ-எதிர்ப்பு பொருளாதார வல்லுநர், பாவோலோ சாவோனாவைக் கைவிட்டது.

இந்த வார இறுதியில், லெகா கட்சியின் உத்தியோகபூர்வ மற்றும் இத்தாலிய அமைச்சரவை துணைச் செயலாளர் ஜியான்கார்லோ ஜியோர்செட்டி, நிதி அமைப்பில் இருக்கும் அமைப்புமுறை சார்ந்த அபாயத்தை ரோம் புறக்கணிக்க முடியாது என தெரிவித்தார்.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்குள் இருக்கும் சக்திவாய்ந்த பிரிவுகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலமாக ரோமில் சிக்கன நடவடிக்கை ஒப்பந்தத்தை —அவர்கள் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிசா அரசாங்கத்துடன் மேற்கொண்டதைப் போல—ஏற்படுத்திக்கொள்ள முனைந்து வருகின்றன. ஜேர்மனிய நிதி தொடர்பான தினசரி பத்திரிகை Handelsblatt ஆல், “இத்தாலியை விமர்சிப்பது பற்றி அல்ல” என்ற அதன் கட்டுரையில் இந்த மூலோபாயத்திற்கு நேற்று வித்திடப்பட்டது.

Handelsblatt எழுதியது, “இத்தாலியைப் பற்றி ஜேர்மன் பிரபலங்கள் (இன்னும்) வெளிப்படையாக பேசவில்லை என்ற ஒலியே, பேர்லினில் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேட்கவியலா மௌன மொழியாக உள்ளது. அதிபர் அங்கேலா மேர்க்கெலுக்கு கீழுள்ள அனைவரும், நிச்சயமாக, நாம் அனைவரும் யூரோ நெருக்கடி 2.0. இன் விளிம்பில் இருக்கலாம் என கவலைப்பட்டனர்… ஆனால், ஜேர்மனியர்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது மோசமான விடயமாக உள்ளது என்பதை ஜேர்மன் அரசியல்வாதிகள் கூட தெரிந்துவைத்துள்ளார்கள். அது, இடது மற்றும் வலது தொடர்பான ரோமின் ஆளும் பிரபலங்களை வெறுமனே ஊக்கப்படுத்தும். ஜேர்மன் கொடுங்கோன்மைக்கு எதிரான பதாகையின் கீழ், வரவு-செலவுத் திட்ட பைத்தியக்காரத் தனத்தின் உச்சம் குறித்து மேலும் கூடுதலாக அவர்கள் பாயக்கூடும். எனவே, பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் புரூசெல்ஸிடம் இருந்து வரவேண்டுமேயன்றி, பேர்லினில் இருந்து அல்ல.”

ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் பல்வேறு கன்னைகள் மூலமாக எந்தவித சூழ்ச்சிக்கையாளல்கள் தீட்டப்பட்டாலும், ஒரு பெரும் அரசியல் முறிவு என்பது கட்டவிழ்ந்துள்ளது. மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ள நிலையில், இத்தாலியின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளை எப்படிக் கையாளுவது என்பது பற்றிய பேச்சும், அதன் 2.4 டிரில்லியன் டாலர் கடன் குவிப்பும் (இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 130 சதவிகித அளவிற்கானது) ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் நிதிய அடித்தளங்கள் மீதான நீடித்து நிற்கவியலாத் தனமையை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவிற்குப் பின்னர் இருந்து, ஒரு தசாப்தகால பொருளாதாரச் சிதைவு மற்றும் பழிவாங்கும் தன்மை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்குப் பின்னர், பொறிவுக்கு முன்னர் இருந்ததை விட இத்தாலியின் பொருளாதாரமானது மேலும் சிறியதாகியுள்ளது. மேலும் ஐரோப்பா எங்கிலும், நாடுகள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவைகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து பாரிய பணம்-அச்சடிப்பு மூலம் நிதியளிப்பு வழங்கப்பட்டுள்ளது, அது இல்லை என்றால் அவைகள் கடுமையாக திவாலடைந்திருக்கும். இத்தாலி மட்டும் பெருமளவில் கடனில் மூழ்கிப்போகவில்லை, மாறாக, கிரீஸ் (அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவிகிதம்), போர்ச்சுக்கல் (126 சதவிகிதம்), ஸ்பெயின் (99 சதவிகிதம்), பிரான்ஸ் (98 சதவிகிதம்) போன்ற நாடுகளும் கடன்பட்டுள்ளன. ஏன் ஜேர்மனியும் கூட, 60 சதவிகித மாஸ்ட்ரிட் வரம்பைக் காட்டிலுமாக, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவிகித அளவிற்கு கடன்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் இன்னமும் 9.7 சதவிகிதமாக (மொத்த இளைஞர்களில் 31 சதவிகிதம் பேர்) இருப்பது குறித்து, இத்தாலியில் சமூக கோபம் வெடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த “தலைமுறை எப்படி” என்ற கருத்துக் கணிப்பு, பெரும்பாலான ஐரோப்பிய இளைஞர்கள் சமூக ஒழுங்கிற்கு எதிராக வெகுஜன எழுச்சியில் பங்குபெற விரும்புகிறார்கள் என்பதை சென்ற ஆண்டில் கண்டறிந்ததானது, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் அத்தகைய எழுச்சியில் சேர விரும்புவதைக் காட்டியது.

இத்தாலியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை அவர்கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதுதான். இதற்கு, ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் கூட்டு தொழில்துறை மற்றும் சமூக வலிமை என்பதை, நிதி மற்றும் அரசியல் ரீதியாக திவாலாகிப் போன முதலாளித்துவ அமைப்புமுறையை வீழ்த்துவதற்கான ஒரு போராட்டத்தில் அணிதிரட்ட வேண்டும்.

சல்வீனியின் தேசியவாத ஆர்ப்பரிப்பு, “மக்கள் வரவு-செலவுத் திட்டம்” என்ற வெற்றாரவார வாய்வீச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான திரைமறைவிலான அவரது பேச்சுவார்த்தைகள் என்பன வேறோன்றுமல்ல, அது வெகுஜனங்களை சிக்கவைக்கும் ஒரு நவ-பாசிச பொறியாகும். நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் பாரியளவிலான நாடுகடத்தலை முன்னெடுப்பதற்காக ஒரு பரந்த போலிஸ் எந்திரத்தை அவர் கட்டமைக்கும் அதே வேளையில், தனது சொந்த சிக்கன நடவடிக்கைகளையும் சல்வீனி நடைமுறைப்படுத்தி வருகிறார். அவரது வரவு-செலவுத் திட்டம், இராணுவம், போலிஸ் அரசை கட்டமைத்தல், மற்றும் வணிக வரி முறிவுகள் போன்றவை குறித்த செலவினங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களுக்கு உறுதியளிக்கிறது, அதே நேரத்தில் அனைத்து இத்தாலிய குடிமக்களுக்கான ஒரு மாதத்திற்கான “அடிப்படை வருமானமாக” மிகுந்த கஞ்சத்தனத்துடன் வெறும் 780 யூரோக்களை வழங்குகிறது, என்றாலும் அந்த வருமானத்தையாவது பெறவேண்டுமே என்பதற்காக அந்த வேலையை செய்ய அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்.       

சல்வீனியின் சூழ்ச்சிகளின் உச்சக்கட்ட இலக்காக இருப்பது அகதிகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் மட்டுமல்ல, மாறாக, இத்தாலியின் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்குள் சிக்கன நடவடிக்கை குறித்து அதிகரித்துவரும் சமூக கோபமும் கூட அவரது இலக்காக உள்ளது.