ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As evidence mounts of Khashoggi’s murder
Trump rejects calls for US to end arms sales to Saudi monarchy

கஷோகி படுகொலையின் ஆதாரங்கள் பெருகி வரும் நிலையில்

சவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார்

By Jordan Shilton
13 October 2018

சவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்கு ஆதாரம் பெருகி வருவதற்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரியாத்திற்கான அதன் பாரிய ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளைத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

சவூதி பத்திரிகையாளர் காணாமல் ஆக்கப்பட்டு வெளிப்படையாக படுகொலை செய்யப்பட்டமை சவூதி அரசாங்கத்திற்கான அமெரிக்க ஆயுத விற்பனைகளைப் பாதிக்குமா என்று வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் தெரிவித்தார், “அமெரிக்காவுக்குள் 110 பில்லியன் டாலர் முதலீட்டை நிறுத்தும் கருத்தில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அவர் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும்? அவர்கள் அந்த பணத்தை எடுத்து ரஷ்யா அல்லது சீனா, அல்லது வேறு ஏதாவது இடத்தில் செலவிடுவார்கள்,” என்றார்.

வாஷிங்டன் வினியோகித்த அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் முக்கிய தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை உதவிகளைப் பயன்படுத்தி, யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அண்மித்து இனப்படுகொலைக்கு நிகரான அதன் போரை சவூதி முடியாட்சி அதிகப்படுத்தி வருகின்ற போதும், கடந்த ஆண்டு ரியாத்துடன் அவர் நிர்வாகம் செய்து கொண்ட 110 பில்லியன் டாலர் அமெரிக்க ஆயுத விற்பனை உடன்படிக்கையை ட்ரம்ப் குறிப்பிடுகிறார்.

ஈரானைத் தனிமைப்படுத்தி, நிலைகுலைத்து அதன் மீதான இராணுவத் தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்வதற்காக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒரு பொதுவான முன்னணியைக் கட்டமைப்பதற்கான முயற்சியின் மையப்பகுதியாக, அடுத்தடுத்து வந்த குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினது நிர்வாகங்களால் பேணி காக்கப்பட்ட சவூதி அரேபியா உடனான அமெரிக்க கூட்டணியை ட்ரம்ப் நிர்வாகம் ஆழப்படுத்தி உள்ளது.

வியாழனன்று காலை, “Fox & Friends” உடனான ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறுகையில், கஷோகி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அமெரிக்க புலனாய்வாளர்கள் சவூதி மற்றும் துருக்கிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார், ஆனால் ரியாத் உடனான அமெரிக்க உறவுகள் "சிறப்பாக" இருப்பதைச் சேர்த்துக் கொள்ள அவர் தயங்கவில்லை.

புதனன்று, செனட் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியதாக கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகள் மீது தடையாணைகள் விதிக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க நிர்வாக பிரிவுக்கு 120 நாட்கள் அவகாசமளிக்கும் 2016 மாக்னெட்ஸ்கி சட்டத்தைப் (Magnitsky Act) பிரயோகித்து, சவூதி அரசாங்கம் மீது தடையாணைகள் விதிக்குமாறு ட்ரம்பை வலியுறுத்த இருகட்சியினது சார்பாக ஒரு கடிதம் அனுப்பினர்.

உயர்மட்டத்தில் தொடர்புகள் வைத்திருந்த வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளரும் முன்னாள் சவூதி ஆட்சியுடன் உள்ளிணைந்து இருந்தவருமான கஷோகியின் வெளிப்படையான படுகொலை, அந்த கொடுங்கோல் ஆட்சி மீதான ட்ரம்பின் மிதமிஞ்சிய புகழுரைகள் சம்பந்தமாகவும் மற்றும் யேமனில் அப்பாவி மக்கள் பாரியளவில் கொல்லப்படுவதிலும் மற்றும் அந்நாட்டின் மீது சுமத்தப்பட்டு வருகின்ற மனிதாபிமான சீரழிவிலும் அமெரிக்காவின் பாத்திரம் சம்பந்தமாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தினுள் தந்திரோபாயரீதியிலான கருத்து வேறுபாடுகள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், ஸ்தாபக ஊடகங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் இருகட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளோ சவூதி ஆட்சியிடமிருந்து தங்களைத் தொலைவில் நிறுத்திக் கொள்ளவும் மற்றும் அதனுடனான நீண்டகால உறவுகளை மூடிமறைக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

துருக்கியில் அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணைச் சந்திக்க செல்வதற்கு முன்பாக அவரது விவாகரத்து ஆவணங்களைப் பெறுவதற்காக சென்றிருந்த கஷோகி அந்த தூதரகத்திற்கு உள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் காணொளி மற்றும் ஒலிப்பதிவுகளைத் துருக்கிய அதிகாரிகள் வைத்திருப்பதாக வெள்ளியன்று CNN அறிவித்தது. கஷோகி காணாமல் ஆக்கப்பட்டதன் மீதான துருக்கிய விசாரணைகளுடன் பரிச்சயமான ஓர் ஆதாரநபர் கூறுகையில், அங்கே உள்ளே ஒரு தாக்குதலும் போராட்டமும் நடந்ததை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றார். அந்த ஆதாரத்தின் தன்மை "அதிர்ச்சியூட்டுவதாகவும் அருவருப்பூட்டுவதாகவும்" இருப்பதாக அவர்கள் விவரித்தனர்.

“அவரின் குரலையும், அரபிய மொழி பேசுபவர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது,” என்று ஓர் ஆதார நபர் வாஷிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தார். “அவர் எவ்வாறு விசாரிக்கப்பட்டார், சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார் என்பதை கேட்க முடிகிறது.”

வெள்ளிக்கிழமையும், துருக்கி மற்றும் சவூதி அரேபியா கூட்டாக சேர்ந்து ஒரு விசாரணை நடத்தவிருப்பதாக அவை அறிவித்தன. கஷோகியின் மரணத்திற்கு ரியாத் தான் பொறுப்பு என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பலமாக அறிவித்துள்ளார் என்றாலும், அவர் பகிரங்கமாக சவூதி அரேபியாவைக் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

கஷோகி காணாமல் போன அந்நாளில் 15 சவூதி உளவுத்துறை அதிகாரிகளின் ஒரு அதிரடிப்படை இஸ்தான்புல் வந்திருந்ததாகவும், பின்னர் உடனடியாக திரும்பி சென்றதாகவும் முன்னதாக செய்திகள் குறிப்பிட்டிருந்தன. அவர்களில் ஒரு பிரேத பரிசோதனை நிபுணர் எலும்பு-அறுவை கருவியுடன் வந்திருந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது. கஷோகியின் பிரேதம் அத்தூதரகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக துண்டுதுண்டாக வெட்டப்பட்டதாக சில செய்திகள் குறிப்பிட்டன.

ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், கஷோகியின் படுகொலையானது சர்வதேச சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதன் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது. அது சவூதி ஆட்சியின் ஈரவிரக்கமற்ற தன்மையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக அதன் பிரதான பின்புல ஆதரவாளரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதையும் வெளிப்படுத்துகிறது, இது மத்திய கிழக்கில் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அதன் முனைவில் ரியாத்தை ஒரு முக்கிய பிராந்திய கூட்டாளியாக ஆயத்தப்படுத்தி உள்ளது.

வாஷிங்டன் இஸ்ரேலை முன்னோடியாக கொண்டு டிரோன் படுகொலைகளுக்கான கொள்கையை ஏற்றுள்ளதுடன், அதை முன்னொருபோதும் இல்லாதளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லிபியா, சோமாலியா மற்றும் பிற நாடுகளிலும் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தி உள்ளது. அது, காசா-இஸ்ரேல் எல்லையில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிராயுதபாணியான பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சுட்டுக் கொல்லும் விடையிறுப்புக்கு அதன் ஒப்புதல் முத்திரை வழங்கி உள்ளது, இதன் விளைவாக கடந்த ஆறு மாதங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக் கணக்கானவர்கள் அங்கே கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைமையில் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் பில்லியன் கணக்கான டாலர்களில் இராணுவ தளவாடங்களையும் உதவிகளையும் ரியாத்திற்கு வழங்கி உள்ளன, அது வாஷிங்டனின் ஆயுத ஏற்றுமதிகளுக்கான முக்கிய வாடிக்கையாளர்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆயுதங்களில் பல யேமனில் இரத்த ஆறை ஓடச் செய்வதற்கும் மற்றும் அந்த சர்வாதிபத்திய ஆட்சிக்கு எதிராக சவூதி அரேபியாவிற்குள் எழும் எந்தவொரு சமூக எதிர்ப்பின் அறிகுறியையும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் சவூதி ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்-சம்பள நிறுவனங்களில் ஒன்று கிளிண்டன்களுடன் பிணைந்துள்ளது. அந்த அரச குடும்பத்திடமிருந்து மாதம் 150,000 டாலர் பெறுகின்ற Glover Park குழுமம் முன்னாள் கிளிண்டன் நிர்வாக அதிகாரிகளால் தொடங்கப்பட்டதாகும்.

சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் இப்போது பாசாங்குத்தனமாக தங்களை ரியாத்திடமிருந்து தொலைவில் நிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றன என்பதுடன், ஒரு கடுமையான போக்கிற்கு அழைப்பு விடுத்தும் வருகின்றன. பல வணிக பிரமுகர்களும், நியூ யோர்க் டைம்ஸ், சிஎன்என், புளூம்பேர்க் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் உட்பட ஊடக நிறுவனங்களும், மகுடம் சூட்டவிருக்கின்ற இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் இம்மாத இறுதியில் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர் மாநாட்டிலிருந்து பின்வாங்குவதென்ற அவற்றின் விருப்பத்தை அறிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்ஸ்டோன் குழுமம் மற்றும் ஜேபிமோர்கன் சேஸ் ஆகியவற்றின் தலைமை செயலதிகாரிகளும், மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசினும், “பாலைவனத்தின் டாவோஸ்" என்று கூறி, அக்கூட்டத்தில் கலந்து கொள்வதென்ற அவர்களின் திட்டங்களை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கஷோகி விவகாரத்தில் ஆணவத்துடன் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியமை மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் “மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" என்ற அக்கறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களின் ஏகாதிபத்திய நோக்கங்களை மூடிமறைப்பதற்கான அவர்களின் முயற்சிகளைப் பாதிக்குமே என்பதற்குத் தான் இந்த வட்டாரங்கள் பிரதானமாக பயப்படுகின்றன. கஷோகி படுகொலையும் ஏனைய பிற மூர்க்கமான நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவிற்கு உள்ளேயும் மற்றும் சர்வதேச அளவிலும், சவூதி அரச குடும்பம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்றும் அவர்கள் கவலைக் கொண்டுள்ளனர்.

முதலீட்டில் உள்ள பில்லியன் கணக்கிலான டாலர்கள் பணயத்தில் உள்ளன. சவூதி அரேபிய பொது முதலீட்டு அமைப்பின் தகவல்படி, அந்த அரசாட்சியில் மொத்த அமெரிக்க முதலீடுகள் சுமார் 55 பில்லியன் டாலருக்கு நிகராக உள்ளது. 2017 இல் மட்டும், இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் அவரது நவீனமயப்படுத்தல் முனைவு என்றழைக்கப்படுவதைத் தொடங்கிய நிலையில், 16 புதிய அமெரிக்க நிறுவனங்கள் அண்ணளவாக 100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுடன் சவூதி சந்தைக்குள் நுழைந்தன.

அமெரிக்கா ரியாத்தின் பிரதான ஆதாரவாளர் என்றாலும், ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டனின் வெளிவேடமான கூட்டாளிகளும் இந்த சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுப்பதில் ஆழமாக உடந்தையாய் உள்ளனர். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை அனைத்தும் பில்லியன் டாலர்கள் கணக்கில் ஆயுத தளவாடங்களை சவூதி அரேபியாவுக்கு விற்பனை செய்துள்ளன என்பதுடன், இந்த விற்பனைகள் மூன்றரை ஆண்டுகால யேமன் போரின் போதுதான் அதிகரிக்கப்பட்டன.

கட்டாருக்கு எதிரான அதன் விவகாரத்தின் மீது ரியாத்துடனான இராஜாங்க பூசலை சமீபத்தில் சீர்படுத்தி உள்ள ஜேர்மன் அரசாங்கம், கஷோகி விவகாரத்தில் கவலை வெளியிடும் அடையாள அறிக்கைகளுக்குக் கூடுதலாக எதுவுமின்றி, ஒப்பீட்டளவில் வாய்மூடி உள்ளது. கஷோகி காணாமல் போவதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையின் பக்கவாட்டில் அவரது சவூதி சமதரப்புடன் ஒன்றாக சேர்ந்து தோன்றிய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், "அப்பிராந்தியத்திலும் உலகெங்கிலும் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டிற்காக முக்கிய பாத்திரம் வகித்து வரும்" ஒரு நாடாக சவூதி அரேபியாவைப் பாராட்டினார்.