ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US vice president beats war drums in Asia

அமெரிக்க துணை ஜனாதிபதி ஆசியாவில் போர் முரசு கொட்டுகிறார்

Peter Symonds
20 November 2018

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், போர் முனைவைத் தீவிரப்படுத்தும் சீனாவுக்கு எதிரான ஓர் இறுதி எச்சரிக்கை வழங்க கடந்த வார ஆசிய மாநாட்டு சந்திப்புகளை பயன்படுத்தினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரிக்கைகளுக்கு சீனா தலைவணங்கி மண்டியிட்டு சேவையாற்றும் ஓர் அரை-காலனித்துவ அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது அது அமெரிக்காவின் இராஜாங்க, பொருளாதார மற்றும் இறுதியில் இராணுவ பலத்தின் முழு வலிமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பென்ஸ், ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மாநாட்டில் உரையாற்றுகையில், “பல பல ஆண்டுகளாக அமெரிக்காவிடமிருந்து ஆதாயங்களை" பெற்றிருப்பதாக சீனாவைக் குற்றஞ்சாட்டியதுடன், “அந்த நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன,” என்று அறிவித்தார். “சீனா அதன் வழியை மாற்றிக் கொள்ளும் வரையில் அமெரிக்கா மாறாது,” என்றவர் அப்பட்டமாக எச்சரித்தார், சீனப் பண்டங்கள் மீதான இப்போதைய பாரிய இறக்குமதி தீர்வைகளை அமெரிக்கா "இன்னும் இருமடங்கை விட அதிகமாக்கும்" என்றும் எச்சரித்தார்.

இம்மாத இறுதியில் ஆர்ஜென்டினாவில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டில் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு இடையே ஏதேனும் உடன்படிக்கை ஏற்படுவதை பென்ஸ் திட்டவட்டமாக நிராகரித்தார். சிங்கப்பூர் செல்லும் வழியில் அவர் வாஷிங்டன் போஸ்டிற்குக் கூறுகையில், வெறுமனே சீனா உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை மீது மட்டுமல்ல, மாறாக பரந்த பல பிரச்சினைகள்—அரசியல் மற்றும் இராணுவம் அத்துடன் பொருளாதார பிரச்சினைகள் மீதும், ஜி "உறுதியான முன்மொழிவுகளோடு" அந்த மாநாடுக்கு வர வேண்டியிருக்கும் என்றார்.

“அறிவுசார் சொத்து திருட்டு, பலவந்தமாக தொழில்நுட்ப பரிவர்த்தனை, சீன சந்தைகளை அணுகுவதன் மீதான கட்டுப்பாடுகள், சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளை அவமதிப்பது, சர்வதேச கடல்வழி போக்குவரத்து சுதந்திரத்தைத் தடுக்கும் முயற்சிகள் மற்றும் மேற்கத்திய நாடுகளது அரசியலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குறுக்கீடு,” ஆகிய குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் மீது சீனா "அதன் போக்கை மாற்றி" கொள்ள வேண்டும் என்று பென்ஸ் வலியுறுத்தினார்.

சீனாவுடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரப்படுத்தப்பட்டு வரும் மோதலின் தொனியை அமைத்த அவரது ஆக்ரோஷமான அக்டோபர் மாத சீன-விரோத உரையையே துணை ஜனாதிபதியின் கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கின்றன. அமெரிக்க நிறுவனங்களுடன் போட்டியிடக் கூடிய உயர்-தொழில்நுட்ப நிறுவனங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை பெய்ஜிங் கைவிட வேண்டும், சீனாவை மேற்கொண்டும் அமெரிக்க பெருநிறுவன சுரண்டலுக்குத் திறந்து விட வேண்டும், அமெரிக்கா தீர்மானிக்கும் "சர்வதேச விதிமுறை-அடிப்படையிலான அமைப்புக்கு" தலை வணங்க வேண்டும், மற்றும் அதிகரித்தளவில் ஆக்ரோஷமான சீன-விரோத பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முயற்சிகளையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று நடைமுறையளவில் வாஷிங்டன் வலியுறுத்தி வருகிறது.

பென்ஸ், சீனாவின் ஒரே பாதை ஒரே இணைப்பு திட்டத்திற்கும் சவால் விடுத்தார்—இத்திட்டம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் சுற்றி வளைக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியில் யுரேஷிய பெருநிலத்தை இன்னும் நெருக்கமாக சீனாவுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு பாரிய உள்கட்டமைப்பு மூலோபாயமாகும். சீனா மீதான ஒரு தாக்குதலில், பென்ஸ் போலித்தனமாக APEC கூட்டத்தில் தெரிவித்தார்: “அமெரிக்கா ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்களின் பங்காளிகளைக் கடன் கடலில் மூழ்கடிக்க மாட்டோம், நாங்கள் வற்புறுத்தவோ, அல்லது உங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்குமாறோ செய்ய மாட்டோம் ... நாங்கள் குறுகிய கண்ணோட்டத்தில் ஒரு இணைப்பு பாதையையோ அல்லது ஒரு-வழி சாலையையோ வழங்க மாட்டோம்.”

பென்ஸ் நடைமுறையளவில் APEC மாநாட்டை சேதப்படுத்தினார், சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதத்தில் உலக வர்த்தக அமைப்பில் உள்ளார்ந்த மாற்றங்கள் குறித்த வார்த்தைகளை அந்த மாநாட்டின் இறுதி அறிக்கையில் அமெரிக்கா வலியுறுத்தியதும், அம்மாநாடு அதன் 29 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக ஓர் இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.

தென் சீனக் கடலில் ஒருமுனைப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டமை தான் பென்ஸ் கருத்துக்களின் மிகவும் கபடத்தனமான அம்சமாக உள்ளது, அங்கே ட்ரம்ப் நிர்வாகம் ஆத்திரமூட்டும் வகையில் சீனா உரிமை கோரும் கடல் எல்லைகள் மற்றும் வான் பிரதேசங்களுக்குள் ஊடுருவ, போர்க்கப்பல்கள் மற்றும் அணுஆயுதமேந்தும் தகைமை கொண்ட குண்டுவீசிகளை அனுப்பி "சுதந்திர கடற்போக்குவரத்து" நடவடிக்கைகள் என்றழைக்கப்படுவதை அதிகரித்துள்ளது.

ஒரு தற்செயலான சம்பவமானது பகிரங்கமான மோதலுக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருக்கின்ற போதும், இதுபோன்ற இராணுவ ஆத்திரமூட்டல்கள் தொடருமென பென்ஸ் வலியுறுத்தினார். அமெரிக்காவின் ஒரு மத்திய ரக போர்க்கப்பலுக்கும் மற்றும் ஒரு சீன கப்பலுக்கும் இடையே கடந்த செப்டம்பரில் மோதலுக்கு நெருக்கமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது, இதற்காக வாஷிங்டன் சீனக் கடற்படை மீது பழி சுமத்தியது. யதார்த்தத்தில், அமெரிக்க எல்லையிலிருந்து ஆயிரக் கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஆனால் முக்கிய சீன இராணுவ தளங்களுக்கு நெருக்கமான அந்த கடல் எல்லைகளில், பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பாகிறது.

ஊடகங்களுக்கு உரையாற்றுகையில், பென்ஸ் அறிவித்தார்: “எங்களைப் பயமுறுத்த முடியாது. நாங்கள் பின்வாங்க மாட்டோம்.” அமெரிக்காவுடன் ஒரு "பனிப்போரை" தவிர்க்கும் வழியில் நடக்க பெய்ஜிங் உடன்படவில்லை என்றால் என்னவாகும் என்று கேட்கப்பட்ட போது, “அப்படியா அப்படியே இருக்கட்டும். நாங்கள் இங்கேயே இருப்போம்,” என்றார்.

யதார்த்தத்தில், என்ன உருவாகி வருகிறதோ அது அமெரிக்காவுக்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரின் ஒரு புதிய பதிப்பு அல்ல, மாறாக 1930 கள் திரும்ப வருகின்றன, அப்போது வர்த்தக போர், இராணுவ ஆத்திரமூட்டல்கள் மற்றும் மோதல்கள் பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஓர் உலகப் போர் வெடிப்பதற்கு வேகமாக இட்டுச் சென்றன. சோவியத் ஒன்றியம் எந்த பொருளாதார சவாலும் முன்னிறுத்தாதது இருந்த மற்றும் உலகளவில் அமெரிக்கா பொருளாதாரரீதியில் செல்வாக்காக இருந்த 1950 கள் மற்றும் 1960 களைப் போலன்றி, இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்று வீழ்ச்சியில் இருப்பதுடன், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவை அதன் உலக மேலாதிக்கத்திற்கான ஒரு பிரதான அச்சுறுத்தலாக கருதுகிறது.

வாஷிங்டனின் மூலோபாயம் "பனிப்போர்" காலத்து கட்டுப்படுத்தி வைக்கும் கொள்கையல்ல, மாறாக “ஆளும் ஆட்சியை மாற்றும்” கொள்கையாகும், இக்கொள்கை கைவிடப்படுவதற்கு முன்னர், இது கொரியப் போரின் போது சீனா மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் அமெரிக்காவை முற்றுமுதலான மோதலின் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்தது. ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" கீழ் தொடங்கப்பட்டு, அது ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டு, பென்டகன் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளதுடன் இந்தோ-பசிபிக் பிரதேசம் முழுவதும் கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்காண்மையைப் பலப்படுத்துவதில் அது ஈடுபட்டுள்ளது.

பாப்புவா நியூ கினியின் மானஸ் தீவில் ஒரு மிகப்பெரிய புதிய கூட்டு இராணுவத் தளத்தை ஸ்தாபிப்பதில் ஆஸ்திரேலியா மற்றும் பாப்புவா நியூ கினிக்கு பென்ஸ் அமெரிக்காவின் ஆதரவை அறிவித்தமை தற்செயலானது அல்ல. மூலோபாயரீதியில் அமைந்த இத்தீவு பசிபிக் போரின் போது அமெரிக்க இராணுவப் படைகளால் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாமில் இருந்து, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் வரையில், பின்னர் இந்தியா வரையில் சீனாவைச் சுற்றி வளைப்பதற்கான இராணுவத் தளங்களுக்கான புதிய உடன்படிக்கைகளுடன் சேர்ந்து, இந்த புதிய மானஸ் தளமும், ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பென்டகன் விரிவாக சீரமைத்து வருவதன் பாகமாக உள்ளது.

இந்தாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவராக ஆவதற்கு முன்னதாக, அட்மிரல் பிலிப் டேவிட்சன் செனட் குழுவுக்குக் கூறுகையில், அவர் பென்டகனின் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு ஏற்ப PACOM இன் 375,000 இராணுவச் சிப்பாய்கள் மற்றும் படைத்துறைசாரா அதிகாரிகளையும், 200 போர்க்கப்பல்கள் மற்றும் அண்மித்து 1,100 விமானங்களையும் "மறுசீரமைப்பு" செய்ய இருப்பதாக தெரிவித்தார். ஜனவரியில் வெளியிடப்பட்ட அந்த மூலோபாய ஆவணத்தின் பிரதான ஒருங்குவிப்பு பயங்கரவாதத்தின் மீதல்ல, வல்லரசு போட்டியின் மீதிருந்ததுடன், ரஷ்யாவுடன் சேர்த்து சீனாவையும், எதிர்த்து சண்டையிட வேண்டிய "திருத்தல்வாத சக்திகளாக" குறிப்பிட்டு அது முத்திரை குத்தியது.

PACOM க்கான அவர் திட்டங்களை விவரித்து டேவிட்சன் அறிவித்தார்: “மேற்கு பசிபிக்கில் ஒதுக்கப்பட்ட படைகள் தொடர்ந்து சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவது, சீனாவின் துரிதமான நவீனமயப்படுத்தலுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட முன்நகர்வை அபிவிருத்தி செய்வது, அவசியப்படும் போது அமெரிக்கா அதன் பலத்தைக் காட்டுவதற்கு அனுமதிக்கும் வகையில் ஆதரவு நாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை அந்த முயற்சிகள் உள்ளடக்கி இருக்கும்.” சீனாவுடன் போருக்கான தயாரிப்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற தகைமைகளாக, “ஹைபர்சோனிக் முறையில் இலக்கை குறிவைத்து தாக்கும் வலிமையான ஆயுதங்கள், விண்வெளி, இணையவழி மற்றும் வலையமைப்புகளை எதிர்க்கும் தகைமைகள்" உள்ளடங்கலாக புதிய ஆயுத வகைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் 1987 இல் செய்யப்பட்ட மத்திய-தூர அணுஆயுத தளவாடங்கள் மீதான உடன்படிக்கையில் (INF) இருந்து விலகுவதென்ற சமீபத்திய முடிவு தான் அமெரிக்காவினது மிகவும் அச்சுறுத்தலான நகர்வாக உள்ளது, இது பிரதானமாக சீனாவை இலக்கில் வைக்கும் விதத்தில் குறுகிய-தூர மற்றும் மத்திய-தூர அணுஆயுத ஏவுகணைகளின் புதிய தளவாடங்களைத் தயாரிக்க பென்டகனுக்குச் சுதந்திரம் அளிக்கிறது. சீன பெருநிலத்திற்கு அருகிலுள்ள இராணுவத் தளங்களில் இருந்து பாரியளவில் அணுஆயுதமல்லாத வான்வழி ஏவுகணை தாக்குதலைக் கொண்டு சீனாவுடனான போருக்கு அறிவுறுத்திய பென்டகனின் முந்தைய வான்வழி-கடல்வழி போர் மூலோபாயத்துடன், இப்போது ஒரு பேரழிவுகரமான அணுஆயுத தாக்குதலுக்கான திட்டங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன அல்லது அது பிரதியீடு செய்யப்பட்டு வருகின்றன.

பில்லியன் கணக்கில் இல்லையென்றாலும், தவிர்க்கவே இயலாதவாறு பல மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்புகளை உள்ளடக்கிய, சீனா உடனான ஒரு போருக்கு ட்ரம்ப் நிர்வாகம் பாதையை அமைத்து வருகிறது. 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கையில், இரண்டாம் உலக போருக்கு முன்னதாக, ட்ரொட்ஸ்கி எச்சரிக்கையில், மனிதயினம் இரண்டே இரண்டு மாற்றீடுகளை, அதாவது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதையே முகங்கொடுக்கிறது என்றும், எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகத்தைக் காலங்கடந்து பிளவுபடுத்தி வைத்திருக்கும் முதலாளித்துவத்தை அகற்றுவதற்காக, உலகெங்கிலுமான தொழிலாளர்களை அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதற்கு, துரோகத்தனமான சமூக ஜனநாயக கட்சி தலைவர்கள் மற்றும் ஸ்ராலினிச தலைவர்களால் எதிர்க்கப்படுகின்ற, ஒரு புதிய புரட்சிகர அகிலம் அவசியப்படுவதாக எச்சரித்தார்.

இந்த சவாலைத் தான் இன்று சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது—சோசலிச சர்வதேசவாத முன்னோக்கிற்காக போராடுகின்ற ஒரே கட்சிக்களாக இருப்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் பிரிவுகள் மட்டுமே ஆகும். அதில் இணைந்து அவற்றைக் கட்டமைக்குமாறு அழைப்புவிடுக்கிறோம்.