ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chinese president tells military to prepare for war

சீன ஜனாதிபதி போருக்குத் தயாராகுமாறு இராணுவத்திற்கு கூறுகிறார்

By Peter Symonds
30 October 2018

வேகமாக அதிகரித்து வரும் அமெரிக்க-சீன பதட்டங்கள் மற்றும் மோதல் அபாயத்தின் மற்றொரு அறிகுறியாக, ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயாராக இருக்குமாறு அவர் நாட்டின் இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வியாழனன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) தெற்கு பிராந்திய கட்டளையகத்தில் அவர் வழங்கிய உரை, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கு மட்டும் விடையிறுப்பாக இருக்கவில்லை, மாறாக சீனா மற்றும் ரஷ்யா இரண்டுடனும் பகிரங்கமாக இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருவதற்கும் விடையிறுப்பாக இருந்தது.

சீன இராணுவ தலைமை தளபதியாகவும் விளங்கும் ஜி, “போர்களில் சண்டையிட்டு ஜெயிக்கக்கூடிய" இராணுவப் படைகளின் தேவையை வலியுறுத்தியதுடன், “போரில் சண்டையிடுவதற்கான தயாரிப்புகளில் ஒருமுனைப்படுமாறு" கட்டளையகத்திற்குக் கூறினார். அவர் அறிவித்தார்: “இராணுவச் சிப்பாய்களின் ஆற்றலை அதிகரிக்கவும் போருக்குத் தயாரிப்பு செய்யவும், நாம் போர்படை தயாரிப்பு பயிற்சிகள், கூட்டு பயிற்சிகள் மற்றும் எதிர்த்து தாக்கும் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும்,” என்றார்.

“நீங்கள் தொடர்ந்து முன்னணியில் பணியாற்றி வருகிறீர்கள், தேசிய எல்லை இறையாண்மை மற்றும் கடற்போக்குவரத்து நலன்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறீர்கள்,” என்று ஜி அறிவித்தார். இந்த கட்டளையகம் "அனைத்து சிக்கலான நிலைமைகளையும் கவனிப்பில் எடுப்பதற்கும் அதற்கேற்ப அவசரகால திட்டங்களை மேற்கொள்வதற்கும்" “பலமான இராணுவ பொறுப்புக்களை" ஏற்றிருக்க வேண்டும் என்றார்.

போருக்கான இரண்டு அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளாக விளங்கும் தென் சீனக் கடல் மற்றும் தாய்வான் ஜலசந்திக்கு PLA இன் தெற்கு பிராந்திய கட்டளையகம் பொறுப்பாகிறது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் நடத்தியதை விட, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், பென்டகன் ஏற்கனவே தென் சீனக் கடலில் அதிக ஆத்திரமூட்டும் கடற்போக்குவரத்து சுதந்திர நடவடிக்கைகளை (மொத்தம் எட்டு) மேற்கொண்டுள்ளது.


அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் குழு
, புகைப்படம்: அமெரிக்க கடற்படை

ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சீனக் கட்டுப்பாட்டிலான தீவுக்குன்றுகளின் 12 நாட்டிக்கல் மைல் எல்லைக்குள் பயணித்த USS Decatur போர்க்கப்பல் சீன கடல்எல்லை உரிமைகளுக்கு வேண்டுமென்றே சவால்விடுத்த போது, இம்மாத ஆரம்பத்தில் நடந்த இந்த சமீபத்திய அமெரிக்க ஆத்திரமூட்டல், ஒரு சீன போர்க்கப்பலுக்கும் USS Decatur போர்க்கப்பலுக்கும் இடையே மோதலின் நெருக்கத்திற்குச் சென்றது. அமெரிக்க கடல்பகுதியில் முக்கிய இராணுவ தளங்களுக்கு அருகில் சீனப் போர்க்கப்பல்கள் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அந்நடவடிக்கை வாஷிங்டனிடம் இருந்து ஓர் ஆவேச எதிர்ப்பைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிகரமாக ஒரு பதிலடி எடுக்க தூண்டியிருக்கும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை.

பெய்ஜிங் நீண்டகாலமாக அதன் எல்லை என்று உரிமைகோரி உள்ள பகுதியான, தாய்வானில் இருந்து சீனாவைப் பிரிக்கும் குறுகிய தாய்வான் ஜலசந்தி வழியாக அமெரிக்கா அதிகரித்த எண்ணிக்கையிலான போர்க்கப்பல்களையும் அனுப்பி வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம், தைப்பெய் உடன் அதன் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தி தாய்வான் விவகாரத்தில் வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகிறது.

சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe கடந்த வாரம் அறிவிக்கையில், தாய்வான் "சீனாவின் மைய நலன்களைத் தொட்டு நிற்பதாக" தெரிவித்தார். அவர் பட்டவர்த்தனமாக எச்சரித்தார்: “இந்த விவகாரத்தில், சீனாவின் அஸ்திவார வழியில் மீண்டும் மீண்டும் சவால் விடுப்பது அதீத அபாயகரமானது. தாய்வானை யாரேனும் பிரிக்க முயன்றால், சீனாவின் இராணுவம் என்ன விலை கொடுத்தாவது அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளும்,” என்றார்.

இருப்பினும் துல்லியமாக ட்ரம்ப் நிர்வாகம் அதை தான் செய்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு ஓர் எச்சரிக்கையாக அமெரிக்க கடற்படை நவம்பரில் "ஒரு மிகப்பெரிய படை அணிவகுப்பைக் காட்ட" தயாரிப்பு செய்து வருவதாக இம்மாத தொடக்கத்தில் CNN அறிவித்தது. தென் சீனக் கடல் மற்றும் தாய்வான் ஜலசந்தியில் சீன கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க போர்கப்பல்களும் போர்விமானங்களும் அனுப்புவதை உள்ளடக்கிய ஒரு வாரகால ஒருங்குவிந்த தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் அந்த வரைவு முன்மொழிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்ற திட்டங்கள் சீனாவுடனும், அத்துடன் சேர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் "ஒரு திருத்தல்வாத சக்தி" என்றும் மூலோபாய போட்டியாளர் என்றும் பென்டகன் முத்திரை குத்தி இருந்த ரஷ்யாவுடனும், அமெரிக்காவின் போருக்கான பரந்த தயாரிப்புகளின் பாகமாக உள்ளன. அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இம்மாத தொடக்கத்தில் ஓர் ஆத்திரமூட்டும் உரையில், சீனாவுடனான ட்ரம்ப் நிர்வாகத்தின் மோதல் இன்னும் வேகமாக தீவிரப்படுத்தப்படும் என்பதை சமிக்ஞை செய்தார், ஏற்கனவே இது ஒரு மோசமடைந்து வரும் வர்த்தக போருக்கு இட்டுச் சென்றுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் இம்மாதம் இரண்டு பிரதான இராணுவ நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, நிச்சயமாக இது பெய்ஜிங்கில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்க செய்திருக்கும்.

பென்ஸ் உரை நிகழ்த்தி ஒருநாளுக்குப் பின்னர், பென்டகன் ஓர் அறிக்கை வெளியிட்டது, இதை முழுமையான போருக்கான பொருளாதார தயாரிப்பு என்று மட்டுமே பொருள் விளங்கப்படுத்த முடியும். மூலோபாய பண்டங்கள் மற்றும் சாதனங்களின் இறக்குமதிகளுக்காக, குறிப்பாக சீனா போன்ற போட்டியாளர்களைச் சார்ந்திருப்பதை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அந்த அறிக்கை வலியுறுத்தியதுடன், ஒரு நீடித்த இராணுவ மோதலைத் தாக்குப்பிடிக்க “ஓர் உறுதியான பாதுகாப்பு தொழில்துறை தளம் மற்றும் சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் வினியோக சங்கிலிகளை” அமைக்க வலியுறுத்தியது.

இரண்டாவது நகர்வு —அதாவது மத்திய-தூர அணுஆயுத தளவாடங்கள் மீதான உடன்படிக்கையிலிருந்து (INF) வெளியேறுவதென்ற ட்ரம்பின் முடிவு— இன்னும் அதிக ஆத்திரமூட்டுவதாக உள்ளது. 1987 இல் அமெரிக்காவுக்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை குறுகிய-தூர மற்றும் மத்திய-தூர அணுஆயுத ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வதை உத்தியோகபூர்வமாக தடுத்திருந்தது. இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறியதன் மூலம், டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக, ஆசியாவில் அணுஆயுதங்களுடன் சீனாவை வளைக்கவும் திருப்பி விடப்பட்ட அமெரிக்க அணுஆயுத தளவாடங்களைப் பாரியளவில் விரிவாக்குவதற்கான அவர் உத்தேசங்களைச் சமிக்ஞை செய்தார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் அணுஆயுத மோதலின் அபாயம், “பெய்ஜிங்கின் அணுஆயுத தெரிவு: அமெரிக்க-சீன போர் ஏன் கட்டுப்பாட்டை இழக்கக் கூடும்,” என்று தலைப்பிட்ட Foreign Affairs இன் சமீபத்திய பதிப்பின் கட்டுரை ஒன்றின் விடயமாக இருந்தது. அமெரிக்காவின் அணுஆயுதமல்லாத எந்த தளவாடங்களின் மோதலும் கூட தவிர்க்கவியலாமல் ஒப்பீட்டளவில் சீனாவின் சிறிய அணுஆயுத தளவாடங்களை அச்சுறுத்தும் என்று பகுப்பாய்வாளர் Caitlin Talmadge நிறைவு செய்திருந்தார்.

அவ்வாறு நடந்தால், சீன இராணுவம் அதன் அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தெரிவை எதிர்க்கொள்ளும் அல்லது அமெரிக்க அணுஆயுத தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுக்கவியலாமல் தோல்வியடையும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அணுஆயுத போர் நடக்க வாய்ப்பில்லை என்ற பென்டகனின் வழமையான உறுதிமொழிகளை Talmadge கைவிட்டிருந்தார். “[ஓர் எதிரியின் இராணுவ உடைமைகளைச் சேதப்படுத்துவதற்கு] பென்டகனின் விருப்பத்திற்குரிய அணுஆயுதமல்லாத போர் பாணி, சீனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டாலும் கூட, அது அணுஆயுத போராக தீவிரமடைவதற்கு ஒரு செயல்சாதனமாக இருக்கும்,” என்றவர் எச்சரித்தார்.

அமெரிக்காவின் ஆக்ரோஷமான அச்சுறுத்தலுக்கு ஜி ஜின்பிங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் (CCP) இருந்து வரும் விடையிறுப்பில் எந்த முற்போக்குத்தன்மையும் கிடையாது. CCP ஆட்சியானது, சீனாவில் 1978 இல் தொடங்கிய முதலாளித்துவ மீளமைப்பின் நிகழ்ச்சிபோக்குகளினூடாக பெரும் செல்வவளங்களைக் குவித்துக் கொண்ட பெரும் செல்வந்த தன்னலக் குழுக்களின் ஒரு சிறிய அடுக்கின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. அதுபோலவே, முதலாளித்துவம் மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடுக்க, பெய்ஜிங் சீனாவில் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவித முறையீடும் செய்ய அமைப்புரீதியில் தகைமையற்று உள்ளது. அதற்கு மாறாக, ஜி விட்டுக்கொடுப்புகளை வழங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சாந்தப்படுத்த முனைந்துள்ளார் என்பதோடு, அதேவேளையில் போருக்கான ஒரு செயல்சாதனமாக சீனாவின் சொந்த இராணுவ ஆயத்தப்பாட்டைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்டு ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவானது, அமெரிக்காவை மையமாக கொண்டு, உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் விளைவாகும். அதன் சொந்த வரலாற்று வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக மோலாதிக்கத்திற்கு சீனாவைத் தற்போதைய தலையாய அச்சுறுத்தலாக கருதுவதுடன், அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு சீனாவை அடிபணிய செய்ய அது எங்கும் நிற்க போவதில்லை.

அதிகரித்து வரும் அணுஆயுத போர் அபாயமானது, மனிதயினத்தைக் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சீனாவிலும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக பதிலளிக்கப்பட வேண்டும்.