ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The siege of Hodeidah: Washington doubles down on its war crime in Yemen

ஹொடெய்டா முற்றுகை: வாஷிங்டன் யேமனில் அதன் போர் குற்றத்தை இரட்டிப்பாக்குகிறது

Bill Van Auken
7 November 2018

யேமனின் வறுமைப்பட்ட மற்றும் பட்டினியில் சிக்கிய மக்களில் குறைந்தபட்சம் 70 சதவீதத்தினர் உயிர்வாழ்வுக்காக எதிர்பார்த்திருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களுக்கான பிரதான ஜீவநாடியாக சேவையாற்றும் செங்கடல் துறைமுகமான ஹொடெய்டாவில், தொடர்ந்து நடந்து வரும் உலகின் மிகப்பெரிய போர் குற்றத்தை உள்ளடக்கிய இரத்தந்தோய்ந்த சம்பவங்களில் ஒன்று கட்டவிழத் தொடங்கியுள்ளது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக யேமன் மக்களுக்கு எதிராக நாசகரமான போர் தொடுத்துள்ள சவூதி-தலைமையிலான கூட்டணி, அந்நகரைச் சுற்றி சுமார் 30,000 துருப்புகளை அணித்திரட்டி இருப்பதாக அறிவிக்கிறது. எமிரேட் மற்றும் சூடானைச் சேர்ந்த மத ஆதரவாளர்கள், அல் கொய்தா போராளிகள் மற்றும் யேமனிய கூலிப்படைகளை உள்ளடக்கிய இவர்கள் அனைவரும் ஹொடெய்டாவின் புறப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நகரம் வான்வழியிலும் கடல்வழியிலும் இரண்டு விதத்திலும் இடைவிடாது குண்டுமழைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. Save the Children நிவாரணக் குழுவின் பணியாளர்கள் வெறும் வாரயிறுதியில் மட்டும் சுமார் 100 வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர், அக்டோபரின் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகமாகும்.

இந்த தாக்குதலுக்குச் சமீபத்தில் இரண்டு அப்பாவி மக்கள் பலியானார்கள் மற்றும் அண்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் 24 பேர் காயமடைந்தனர், ஒரு யேமன் ஆலை மீது குண்டு வீசப்பட்டதில் ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார் இன்னும் ஐந்து பேர் காயமடைந்தனர், ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட பீரங்கிப்படை தாக்குதலில் இளம் பெண் ஒருவர் காயமடைந்தார், ஹொடெய்டாவின் மத்திய சிறைச்சாலை மீதான குண்டுவீச்சில் அதற்குள் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவீச்சுக்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் மரணத்தின் விளிம்பில் உள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் கடைசி மருத்துவ வசதியான அல் தாவ்ரா மருத்துவமனைக்கு மிக நெருக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை தேவைப்படுவோரால் மருத்துவமனையை எட்ட முடியாமல் போனதுடன், யேமன் எங்கிலும் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு நடந்ததைப் போலவே, அதுவும் இலக்கில் வைக்கப்படலாம் என்று அங்கே அதிகரித்த கவலை நிலவுகிறது.

ஹொடெய்டா  துறைமுகம் மற்றும் அதே பெயரில் உள்ள அதைச் சுற்றிய பிராந்தியத்தில் சுமார் 570,000 மக்கள் வீடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர், அவர்களின் முதுகுகளில் துணி மூட்டைகளைத் தவிர வேறொன்றுமில்லாமல் அவ்வபோது இந்த குண்டுவீச்சுக்கள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பித்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு வாஷிங்டனின் ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளது என்பது சர்ச்சைக்கு இடமற்றது. துருப்புகளின் குவிப்பு, கடற்படை முற்றுகை, முடிவின்றி குண்டுவீச்சு ஆகிய இவையனைத்தும் பென்டகனின் நெருக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை, அது சவூதி குண்டுவீச்சாளர்களது போர்விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பித் தருகின்றது, ஹொடெய்டாவைக் கடல் வழியில் நெருங்குவதிலிருந்து இறுக்கிப்பிடியை வைப்பதற்காக கடற்படையின் ஆதரவு வழங்குகின்றது மற்றும் அந்த துறைமுக நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் குறித்து உளவுத்தகவல் உதவிகளையும் கூட வழங்குகிறது.

எவ்வாறிருப்பினும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்த சுற்றிவளைப்பானது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் யேமனில் "போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தும், சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான 30 நாள் இறுதிக்கெடுவைச் சுட்டிக்காட்டியும் வெளியிட்ட விரிவாக அறிக்கைகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் வருகின்றன.

ஹொடெய்டா மீதான சுற்றிவளைப்பு கட்டமைக்கப்பட்டு வருகின்ற போதும் கூட, நியூ யோர்க் டைம்ஸ், “படுகொலைகளை நிறுத்துமாறு அனைத்து தரப்புகளையும் வலியுறுத்தி" இருப்பதற்காக பொம்பியோ மற்றும் மாட்டீஸைப் புகழ்ந்துரைத்தும், “செயலர்கள் முதல் படியை எடுத்துள்ளனர்" என்று அறிவித்தும், “யேமனின் மரணஓலத்தை நிறுத்துங்கள்" என்று பாசாங்குத்தனமாக தலைப்பிட்ட தலையங்கம் ஒன்றை நவம்பர் 5 இல் பிரசுரித்தது.

இவையெல்லாம் மடத்தனமானவை என்பதோடு, மனிதயின படுகொலைக்கு நெருக்கமான அளவை எட்டி வருகின்ற தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த படுகொலைகளை மூடிமறைப்பதற்கானவை என்பதை களத்தில் நடந்து வரும் சம்பவங்கள் அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றன.

யேமனில் நடக்கும் பாரிய படுகொலைக்கு அமெரிக்க-ஆதரவிலான சவூதி-தலைமை கூட்டணியையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாக பொறுப்பாக்கும் விதத்தில், “அனைத்து தரப்புகளும் படுகொலைகளை நிறுத்த" வலியுறுத்துவது, போர் குற்றங்களிலிருந்து அன்னியப்பட்டு இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாகும்.

Armed Conflict Location மற்றும் Event Data Project ஆகிய அமைப்புகளின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2016 இல் அமெரிக்க-ஆதரவிலான சவூதி தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 56,000 யேமனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரின் முதல் ஒன்பது மாதங்களில் உயிரிழந்தவர்களுடன் சேர்த்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 70,000 மற்றும் 80,000 க்கு இடையே இருக்கலாமென கருதப்படுகிறது, அவற்றில் பெரும் பெரும்பான்மை சவூதி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

அந்நாட்டின் மீதான சவூதி முற்றுகையாலும், குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் ஏனைய அடிப்படை உள்கட்டமைப்பைத் திட்டமிட்டு தகர்த்ததாலும் உண்டான பட்டினி மற்றும் தடுக்கக்கூடிய நோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகும், கடந்த ஆண்டில் மட்டும் அவற்றால் 50,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாமென மதிப்பிடப்படுகிறது.

ஏறத்தாழ 14 மில்லியன் பேர், அதாவது அண்மித்து அந்நாட்டின் மக்கள்தொகையில் அரைவாசி பேர், பட்டினியின் விளிம்பில் உள்ளனர், ஹொடெய்டா சுற்றிவளைப்பும் மற்றும் நிவாரண பொருட்கள் தடுக்கப்பட்டமையும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

பொம்பியோ மற்றும் மாட்டீஸ் வெளியிட்ட அறிக்கைகளை உள்ளார்ந்து ஆராய்வது அவர்களின் நிஜமான நோக்கத்தைத் தெளிவுப்படுத்துகிறது. “போர்நிறுத்தத்திற்கான” பொம்பியோவின் அழைப்பு இவ்வாறு உள்ளது, “இப்போது விரோதங்களைக் கைவிடுவதற்குரிய நேரமிது, ஹௌதி கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து சவூதி அரேபிய முடியாட்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்குள் நடத்தப்படும் ஏவுகணை மற்றும் UAV தாக்குதல்களும் இதில் உள்ளடங்கும். இதன் பின்னர் தான், யேமனில் மக்கள் மிகுந்த பகுதிகள் மீதான கூட்டணியின் வான்வழி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏவுகணை தாக்குதல்களை நிறுத்துவதற்கு அந்நாட்டின் மக்கள் மிகுந்த பகுதியான சனாவின் தலைநகரம் ஹொடெய்டாவைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அதிக சுமை ஏற்றப்பட்டுள்ளது, ஆனால் அவர்களது ஏவுகணை தாக்குதல்களில் எதுவுமே சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட் க்கு எந்தவித குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படுத்தி இருக்கவில்லை. “அதன் பின்னர்", அதாவது ஒருதலைபட்சமான அந்த அடிபணிவு நடவடிக்கைக்குப் பின்னர், “மக்கள் மிகுந்த பகுதிகள்" மீது அமெரிக்க-ஆதரவிலான சவூதி படைகள் வான்வழி தாக்குதல்களை நிறுத்தினாலும், மக்கள் மிகுதியாக வசிக்காத பகுதிகளாக கருதப்படுவதன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்பது ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

ஞாயிறன்று Fox News இன் ஒரு நேர்காணலில், பொம்பியோவிடம் அவரது அறிக்கைகள் மற்றும் மாட்டீஸ் அறிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட போது, “வெளிப்படையாகவே, அதில் புதிதாக ஒன்றுமில்லை,” என்று விடையிறுத்தார், அதேவேளையில் அவர் யேமனில் பட்டினியானது ஈரான் "சவூதி அரேபியாவில் சண்டையிட்டு வருகின்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை" வினியோகிப்பதால் உண்டாக்கப்பட்டது என்று வாதிட்டார். அரசின் பொய்கள் சற்றேனும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருகிறது என்பதற்கு வாஷிங்டன் இதுவரையில் எந்த நம்பகமான ஆதாரமும் வழங்கவில்லை என்ற நிலையில், சவூதி அரேபியாவில் ஹௌதியர்கள் சண்டையிட்டு வருகிறார்கள் என்ற கருத்து —இது அவர்களை வலிந்து தாக்குபவர்களாக ஆக்குகிறது என்பது உணரக்கூடிய விதத்தில் இருப்பதுடன்— உலகை தலைகீழாக காட்டும் ஒரு கற்பனையாகும்.

யேமன் போர்நிறுத்தத்திற்கான 30 நாள் இறுதிக்கெடு என்று கூறப்படுவது, படுகொலையில் இறங்கி சாத்தியமான அளவுக்கு விரைவாக, எத்தனை மனித உயிர்களை விலை கொடுத்தேனும் ஹொடெய்டாவைக் கைப்பற்றுங்கள் என்று சவூதியர்களுக்கு அனுப்பப்பட்ட தந்தி சேதியாக பயன்படுத்தப்பட்டது என்பது இப்போது தெளிவாகிறது. இந்த பாரிய இரத்தக்களரிக்கு சவூதிக்கு ஒரு நீடிப்பு தேவைப்பட்டாலும், வரவிருக்கும் நாட்களில் வழங்கப்படும் என்பதில் ஒருவர் ஐயப்பட வேண்டியதில்லை.

வாஷிங்டன், பாரிய யேமன் மக்கள் படுகொலையை, மத்திய கிழக்கு எங்கிலும் ஈரானின் செல்வாக்கை துண்டிப்பதற்கும் தெஹ்ரானில் நடைமுறையளவில் ஆட்சி மாற்றம் நடத்துவதற்குமான அதன் முயற்சியின் முப்பட்டகம் வழியாக பார்க்கிறது. தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஹொதெய்தா சுற்றிவளைப்பானது, ஒரு போர் நடவடிக்கைக்கு ஒத்த தண்டிக்கும் வகையிலான ஈரானுக்கு எதிரான தன்னிச்சையான சட்டவிரோத அமெரிக்க தடையாணைகள் திணிக்கப்பட்டதுடன் பொருந்தி வருகின்றன என்பது தற்செயலானதல்ல. சவூதி அரேபியா மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்திற்கான அச்சாணியாக பார்க்கப்படுகிறது, ஈரான் உடனான மோதலில் முக்கிய கூட்டாளியான அது அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுக்கான பில்லியன் கணக்கான இலாபங்களுக்கு ஆதாரவளமாக விளங்குகிறது. இத்தகைய நலன்களைப் பாதுகாக்க, வாஷிங்டன் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கவும் தயாராக உள்ளது.

பத்திரிகையாளரும் முன்னாள் ரியாத் உள்அங்கத்தவருமான ஜமால் கஷோகி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் சவூதி தூதரகத்தில் பேரச்சமூட்டும் விதத்தில் அரசியல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஊடகங்கள், இந்த அரசியல் படுகொலை மீதான நெருக்கடி சவூதி பிரபுக்கள் சபையுடன் இன்னும் ஆதாயமான உறவைப் பெறுவதற்குரிய நிறைவேற்றும் சாதனமாக பயன்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் பயனுள்ளதாக இருக்குமென தெரிந்ததால் அதை குறித்து வீறுகொண்டு எழுந்து செய்திகள் வெளியிட்ட நிலையில், யேமனில் நடக்கும் பாரிய மக்கள் படுகொலையைப் பெரிதும் இருட்டடிப்பு செய்துள்ளன.

கஷோகி படுகொலை மற்றும் யேமனில் மனிதயினப் படுகொலை இரண்டையும் குறித்த செய்திகள் பெரிதும் குறைந்து வலுவிழந்து போன ஒரு மாதத்திற்குப் பின்னர், அவை வாஷிங்டன் மற்றும் ரியாத்திற்கு இடையே ஏதோ ஒரு வகையில் ஏற்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. ஹொதெய்தா சுற்றிவளைப்பில் அமெரிக்க இராணுவம் முழுமையான ஒரு பங்காளியாக இருக்கின்ற நிலையில், அது குறித்த செய்திகள், அமெரிக்காவில் பெரும்பாலான மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, தீர்க்கமாக இருக்கக்கூடிய இடைக்கால தேர்தலுக்கு மத்தியில், இரண்டு பெருவணிக கட்சிகளில் எந்தவொன்றிலும் எந்த வேட்பாளரும் யேமனில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரிய மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வாஷிங்டன் வழங்கிய மறுக்கவியலாத ஆதரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிரச்சினையாகவே தேர்ந்தெடுக்கவில்லை. நடுவானில் எரிபொருள் நிரப்பித் தருவது, உளவுத்தகவல்கள் பகிர்ந்து கொள்வது, இலக்கு வைப்பதில் ஒத்துழைப்பது, கடற்படை முற்றுகைக்கான ஒத்துழைப்பு மற்றும் பாரியளவில் அமெரிக்க ஆயுதங்களின் விற்பனை என ஜனநாயக கட்சியின் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு மற்றும் ட்ரம்பின் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் கீழ் தொடரப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு பிரதான கட்சிகளும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத விதத்தில், சவூதி தலைமையிலான போருக்கு அனைத்து ஒத்துழைப்பு சாதனங்களும் வழங்கி, இந்த போர் குற்றத்தில் முழுதும் உடந்தையாய் உள்ளன.

யேமன் பிரச்சினைகளில் மற்றும் ஈரானுடன் ஒரே சீராக மோதலைத் தீவிரப்படுத்துவதில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு இடையே என்ன மாதிரியான தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவ்விரு முதலாளித்துவ கட்சிகளும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தைச் சவாலுக்கு இடமின்றி திணிக்கும் ஒரு கொள்கைக்கு பொறுப்பேற்றுள்ளன, இக்கொள்கையானது கூறவியலாத கொடூரமான விதத்தில் "நாசகரமான சேதங்களாக" யேமனிய மக்களின் உயிரைப் பறித்து வருகிறது.