ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France shaken by mass protests

பிரான்ஸ் வெகுஜனப் போராட்டங்களால் அதிர்கிறது

Alex Lantier
19 November 2018

சனிக்கிழமையன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எரிபொருள் வரியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அடக்கி வைத்திருந்த கோபத்தின் ஒரு ஆரம்பநிலை வெளிப்பாய்வைக் கண்டன. சமீப வாரங்களில் சமூக ஊடகங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கும் சாலை மறியல்களுக்குமான அழைப்புகள் வரிசையாக வெளியானதன் பின்னர், பிரான்ஸ் எங்கிலுமான மறியல்கள் மற்றும் மெதுவாக வேலைசெய்யும் போராட்டங்களில் மஞ்சள் சீருடை அணிந்து 287,710 பேர் கலந்துகொண்டனர். தொழிலாளர்களின் வேலையிடத்திற்கு செல்வதற்கான மாதாந்திர போக்குவரத்து செலவில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு நடவடிக்கையை எதிர்த்து, பத்தாயிரக்கணக்கானோர், நேற்றிரவு வரையிலும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் சர்வதேச ஆர்ப்பாட்ட அலையின் பகுதியாக இருக்கின்றன. பெல்ஜியத்தில், பிரெஞ்சு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் சுத்திரிகரிப்பு மையங்களை முற்றுகையிட்டனர், அதேநேரத்தில் எரிபொருள் வரியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல்கேரியா மற்றும் சேர்பியாவிலும் கூட வெடித்திருக்கின்றன. ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கண்டுவருவதன் மத்தியில், கிரீசில் படகு நிறுத்தப் போராட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான சிரிசா அரசாங்கத்திற்கு எதிராய் பொதுத்துறை வேலைநிறுத்தம் ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. புக்காரெஸ்டில் மெட்ரோ வேலைநிறுத்தம்; ஜேர்மனியில் அமசன் மற்றும் ரைன்எயர் வேலைநிறுத்தங்கள் மற்றும் கண்டமெங்கிலும் பிற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நிலவும் சமூக நிலைமைகளுக்கு மிகப் பரந்த எதிர்ப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. “உழைத்து சம்பாதிக்கக் கூடிய ஒரு சராசரியான பிரெஞ்சுவாசிக்கு, உண்மையிலேயே விடயங்கள் மிகவும் கடினமாய் இருக்கின்றன... எங்களது வரிகளைக் கட்டுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், ஆனால் இது மிகவும் அதிகம்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் BFM TVயிடம் தெரிவித்தார். “செல்வந்தர்களது ஜனாதிபதி எங்களுக்கு வேண்டாம்” “மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டும்” என்ற சுலோகங்களை காட்சிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், தான் எதிர்த்து நிற்பது “பல தசாப்தங்களாக” பெருகி வரும் பிரச்சினைகளை என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

சிக்கன நடவடிக்கைகள், ஓய்வூதியங்கள் மீதான மக்ரோனின் வெட்டுக்கள் மற்றும் மில்லியனர்களுக்கு சொத்து வரியை குறைக்கின்ற அதேவேளையில் தொழிலாளர்களுக்கு வரிவிதிக்கும் அவரது முடிவின் மீதான கோபத்தின் மத்தியில், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பிரெஞ்சு மக்களில் நான்கில் மூன்று பங்கு பேர் ஆதரவளிக்கின்றனர்.

“எரிபொருள் வரி என்பது ஒட்டகத்தின் முதுகை ஒடித்த கடைசி நடவடிக்கை போன்றது தான், என்றாலும் இது அதனையும் தாண்டிச் செல்கிறது” என்று மார்சைய் அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் WSWSயிடம் தெரிவித்தனர். “வேறுவழியிலான தீர்வுகள் இருக்கின்றன என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும், தனியார் நலன்களால் வழிநடத்தப்படுவதைக் கொண்டு நாங்கள் களைத்துப் போயிருக்கிறோம். ஜனநாயகத்திற்கு, ஊதிய அதிகரிப்புகளுக்கு, உழைக்கும் மக்களால் செலுத்தப்படும் வரிகளிலான வெட்டுக்களுக்கு, வெற்று வாக்குகளை இடுவதற்கும் அத்தனை முக்கியமான சட்டங்களின் மீதும் கருத்துக்கணிப்புகளைக் கொண்டு தீர்மானிப்பதற்கும் கொண்டுள்ள உரிமைக்கும் திரும்புவதற்கு விரும்புகிறோம். பல தீர்வுகள் இருக்கின்றன என்பது எங்களுக்கு நிச்சயமாய் தெரியும். மக்கள் அரசியல் அதிகாரத்தை மீண்டும் கையிலெடுத்தாக வேண்டும்.”

இந்த இயக்கம் தொழிலாளர்கள், சுயாதீனமான டிரக் ஓட்டுநர்கள் மற்றும் சிறு வணிகர்களை ஈர்க்கின்ற விதமான சமூகரீதியான பலகூறுத்தன்மை கொண்டதாகும். ஆர்ப்பாட்டக்காரர்களில் அரசியல்ரீதியாக பிற்போக்கான கூறுகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவை ஒரு மிகச் சிறு சிறுபான்மையாகவே இருக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களை வலது-சாரி ஆத்திரமூட்டலாகக் கூறி கறுப்புமை பூச தொழிற்சங்க அதிகாரத்துவம் செய்கின்ற முயற்சிகள் அரசியல் அவதூறு வகையானவையாகும். அரசாங்கத்திற்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் மதிப்பிழக்கச் செய்வதற்கும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள் செய்கின்ற முயற்சிகளை நியாயப்படுத்துவதே வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் குறித்த பொய்யான சித்திரங்களைக் காட்டுவதன் உண்மையான நோக்கமாய் இருக்கிறது.

தொழிலாளர்கள் இந்த மறியல்களில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறும் துண்டறிக்கைகளை ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) வேலையிடங்களில் விநியோகித்தது; இந்த போராட்டங்கள் அதி வலதுகளால் தலைமை கொடுக்கப்படுவதாக கூறி CGTயின் தலைவரான பிலிப் மார்ட்டினஸ், தான் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றார்: “இத்தகைய கட்சிகள் மற்றும் தனிமனிதர்களோடு தோளோடுதோளாய் CGT நடைபோட்டு செல்வது முடியாது...அவர்கள் எங்களின் முன்மாதிரி அல்ல, அவர்களின் தோளோடுதோளாய் எங்களால் அணிநடை போட முடியாது.”

இந்த ஆர்ப்பாட்டங்களில் இருந்து வலது-சாரி அல்லது அதி-வலது சக்திகள் ஆதாயம் பெறுகின்ற அபாயம் இருப்பதை பொறுத்தவரை, அதற்கு எல்லாவற்றுக்கும் மேலான முதற்காரணமே “இடது” என்று தங்களை காட்டிக்கொள்ளும் அமைப்புகள் மக்ரோனை ஆதரிப்பது தான். ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கைக்கும் இராணுவவாதத்திற்குமான ஒரு அடையாளமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரெஞ்சு ஜனாதிபதிக்கான ஒரே எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ள இது வலதுகளை அனுமதிக்கிறது. இந்த வசந்த காலத்தில் தான், CGT, தேசிய இரயில்வே (SNCF) தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை மொத்தத்தில் தனிமைப்படுத்தி கழுத்தை நெரித்தது; SNCF மீதான மக்ரோனின் தாக்குதலுக்கு இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் 95 சதவீத எதிர்ப்பு இருந்தநிலையிலும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அது அழைப்புவிடுத்தது.

இப்போது, பாரிய எதிர்ப்பானது வழக்கமான தொழிற்சங்க பாதைகளுக்கு வெளியில் வெடிப்பதால், வலது மற்றும் “இடது” என சொல்லிக் கொள்பவை என ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் அதிர்ச்சியில் இருப்பதோடு, இந்த இயக்கம் முன்னெப்போதினும் அதிகமாய் தொழிலாள-வர்க்க குணாம்சத்தை எடுக்கும் என்றும் அஞ்சுகின்றன. ஹிட்லரின் சார்பாக 1940 முதல் 1942 க்கு இடையில் பிரான்ஸை ஆட்சி செய்த பாசிச மார்ஷல் பெத்தான் மீது, சென்ற வாரத்தில்தான் புகழுரையை குவித்திருந்த மக்ரோன், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு குரோதமானவராகவும் அதற்கு மனம் கலங்காதவராகவும் இருக்கிறார். ஜேர்மன் சான்சலரை சந்திக்கவும் 2023க்குள்ளாக பிரான்சின் வரிகொடுப்பாளர்களது 300 பில்லியன் யூரோக்களை செலவிட்டு ஒரு ஐரோப்பிய இராணுவத்தை கட்டுவதற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடவும் பேர்லினுக்கு பயணம் செய்த மக்ரோன், ஆர்ப்பாட்டங்கள் குறித்த எந்த கேள்விகளையும் தவிர்த்து விட்டார்.

நேற்று மாலை France2 TV நேர்காணலில் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் எட்வார்ட் பிலிப் எரிபொருள் வரியேற்றத்தை தொடர்ந்து பராமரிக்க உறுதியெடுத்தார்: “நாங்கள் அமைத்திருக்கும் பாதையில், தொடர்ந்து பின்தொடர்ந்து செல்வோம். காற்று பலமாய் அடிப்பதனால் ஒருவர் பாதை மாறிச் சென்று விடுவதில்லை” என மஞ்சள் சீருடையாளர்களை கண்டனம் செய்த அவர், அவர்கள் “அராஜகத்தைப் போன்ற காட்சிகளை” உருவாக்கியதாக கூறினார்.

2017 தேர்தலில் மக்ரோனின் எதிரியாக இருந்த, நவ-பாசிச மரின் லு பென், மேலதிக ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட முனையவில்லை, மாறாக ஆர்ப்பாட்டங்களை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவருகின்ற விதத்தில் அவரை பின்வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார். “பிரெஞ்சு மக்களில் 75 சதவீதம் பேர் இந்த இயக்கத்தை ஆதரித்தனர், ஆதரிக்கின்றனர், அரசாங்கம் கண்ணியத்துடன் நடந்து கொள்வதற்கும் துரிதமாய் முடிவுகளை எடுப்பதற்கும் இது ஊக்குவிக்க வேண்டும்.... செய்தியை பெற்று விட்டிருப்பதைக் காட்டுவதற்கும் அமைதியை மீண்டும் கொண்டுவருகின்ற முடிவுகளை எடுப்பதற்கும் அரசாங்கத்தை நான் ஊக்குவிக்கிறேன்.”

CGTயின் பல்வேறு அரசியல் கூட்டாளிகளைப் பொறுத்தவரை -அவை ஆரம்பத்தில் சமூக ஊடகங்களிலான ஆர்ப்பாட்ட அழைப்புகளுக்கு ஆர்வமின்மையுடனும் குரோதத்துடனும் எதிர்வினையாற்றின- சமூக எதிர்ப்பின் வெடிப்பை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு ஒரு அரசியல் பொறிமுறையை ஏற்பாடு செய்வதற்காகவே அவை முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

ஜோன் லூக் மெலோன்சோன், சுற்றுசூழலியல் முகாந்திரங்களின் அடிப்படையில் எரிபொருள் வரிகளை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அவரது அடிபணியா பிரான்ஸ் கட்சிக்குள்ளாக ஒரு உட்கட்சி விவாதம் நடந்து முடிந்த பின்னும், LFI நிர்வாகியான Clémentine Autain அவர் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்பதை அறிவித்த பின்னுமே, தனது வலைப் பதிவில் ஆர்ப்பாட்டங்களின் “வெற்றி”க்கு அழைப்புவிடுத்தார். பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியானது, தன் பங்கிற்கு, மஞ்சள் சீருடையாளர்களால் தொடக்கப்பட்ட ”போராட்டத்தை தொடர்வதற்கு தொழிற்சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு” அழைப்பு விடுத்தது.

உண்மையில், ஐரோப்பாவெங்கும் சமூக கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், பிரான்சில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் LFI, NPA போன்ற அவற்றின் அரசியல் கூட்டாளிகளது பிடிக்கு வெளியில் மட்டுமே உண்மையான எதிர்ப்பு வெளிப்பட முடியும் என்பதே சனிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் இருந்தான மையமான படிப்பினையாகும். இப்போது அத்தகைய எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கும் நிலையில், அது ஒடுக்கப்படாமல் காப்பது மிக இன்றியமையாததாகும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டுவது, மற்றும் தொழிலாள வர்க்கத்தில் அரசியல் அதிகாரத்தின் சவாலை எழுப்புகின்ற ஒரு முன்னணிப் படையைக் கட்டியெழுப்புவது ஆகியவை குறித்த பிரச்சினைகள் தீர்மானகரமானவையாகும்.

1930களின் போராட்டங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளப்பட முடியும். 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் வெடிப்பதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய “நடவடிக்கைக் குழுக்களின் பக்கம் நிற்போம் - மக்கள் முன்னணியின் பக்கம் அல்ல” என்ற அவரது கட்டுரையில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் சுயாதீனமாக ஒழுங்கமைப்படுவதன் இன்றியமையாத பிரச்சினையை வலியுறுத்தினார்.

பிரான்சில், பரந்த மக்களின் புரட்சிகர ஆற்றலானது விட்டுவிட்டான கொப்பளிப்புகளில், தனிமைப்பட்ட வெடிப்புகளில் கலைந்து போய்....உணர்ச்சியின்மைக்கு பாதை வகுக்கிறது என்ற உண்மையில் தான் மிகப்பெரும் அபாயம் அமைந்திருக்கிறது. இன்றைய நிலைமையில், நனவான துரோகிகளால் அல்லது நம்பிக்கையற்ற மரமண்டைகளால் மட்டுமே, மேலே அரசாங்கத்திடம் இருந்து அவர்கள் ஆசிர்வதிக்கப்படுகின்ற அந்தத் தருணம் வரையில், பரந்த மக்களை அணிதிரளாமல் பிடித்து வைப்பது சாத்தியமென்று கருதமுடியும்... பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமை இந்த இயக்கங்களை தடுப்பது அல்லது முடக்குவதில் அல்ல, மாறாக அவற்றை ஐக்கியப்படுத்தி சாத்தியமான மிகப்பெரும் சக்தியை அவற்றுக்கு இடுவதில் தான் இருக்கிறது.

சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட மேலெழுச்சிக்கு மத்தியில், இந்த விண்ணப்பமானது தீவிரமான அரசியல் பொருத்தத்தைப் பெறுகிறது.

ஆயினும் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிசத் தலைமையைக் கட்டுவதே அனைத்திலும் மிக முக்கியமான பிரச்சினையாகும். பெருகிவரும் வெகுஜன இயக்கமானது அரசியல்ரீதியாக ஒரு நனவான சோசலிசத் தன்மையைப் பெறுவதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் இந்த வழியில் மட்டுமே சாத்தியமானதாகும்.