ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid mass protests, France announces return to universal military service

வெகுஜனப் போராட்டங்களின் மத்தியில் பிரான்ஸ், கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை அறிவிக்கிறது

By Alex Lantier
20 November 2018

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் எரிபொருள் வரியேற்றத்தையும் உழைக்கும் மக்களின் மீதான அவரது சமூகத் தாக்குதல்களையும் எதிர்த்து நேற்று நூறாயிரக்கணக்கான மக்கள் மஞ்சள் சீருடை அணிந்து பிரான்ஸ் எங்கிலும் சாலைகளிலும் சாலைசந்திப்புகளிலும் மறியல் செய்து போராடியதற்குப் பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை அறிவித்தது. இந்த மசோதாவை முன்மொழிகின்ற இளைஞர் துறைக்கான இளநிலை அமைச்சர் காப்ரியல் அட்டால், Le Parisien பத்திரிகைக்கு நேற்று அளித்த ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறினார்: “2019 ஜூன் இலேயே கட்டாய இராணுவ சேர்க்கையின் முதல் தொகுப்பினரைக் கொண்டுவருவதே எனது இலக்காகும்.”

இந்த அறிவிப்பு வந்த நேரமானது இளைஞர்களது ஒட்டுமொத்த தலைமுறைகளையும் இராணுவ ஒழுங்கிற்குள் கொண்டுவருவதற்கு ஆளும் உயரடுக்கு செய்கின்ற முயற்சிகளுக்கும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வெடித்துக் கொண்டிருக்கின்ற சமூக கோபத்தை ஒடுக்குவதற்கு அது செய்கின்ற முயற்சிகளுக்கும் இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பினை அடிக்கோடிட்டுக் காட்டியது.

கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை அறிவித்த வேளையில் அரசாங்கம், திங்களன்று தொடர்ந்து நடைபெற்ற “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களின் மறியல்களுக்கு எதிராக ஒரு புதிய, வன்முறையான போலிஸ் ஒடுக்குமுறையை ஏவுவதற்கு மிரட்டிக் கொண்டிருந்தது. சுமார் 27,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் பங்குபெற்றனர், பிரான்சின் வடகிழக்கு மற்றும் மேற்குக் கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் அத்துடன் தெற்கில் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட டோட்டல் எண்ணெய் சுத்திரிகரிப்பு மையங்களிலும் மறியலில் ஈடுபட்டனர்.

வார இறுதியிலான ஆர்ப்பாட்டங்களின் மீது ஒரு பலமான போலிஸ் ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டதன் பின்னர் 183 ஆர்ப்பாட்டக்காரர்கள் இப்போதும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த வாரத்தில் “கொஞ்சம் கொஞ்சமாகவும், முறையாகவும்” அவர்களது மறியல் போராட்டங்களில் இருந்து “வெளியில் வீசப்படுவார்கள்” என்று உள்துறை அமைச்சரான கிறிஸ்தோப் காஸ்டனேர் மிரட்டினார்.

"மறியல்களை அகற்றும் நடவடிக்கைகள் வரும் எதிர்வரும் மணித்தியாலங்களில் தொடரும்” என்று சென்ற இரவு அறிவித்த அவர், “எரிபொருள் கிடங்குகளையும் மற்ற பதட்டத்திற்குரிய தளங்களையும் விடுவிப்பதற்கு” ஆயத்தமாக இருக்கும்படி போலிஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் சேர்த்துக் கொண்டார். அவர் கூறினார், “கருத்துச் சுதந்திரமும் ஆர்ப்பாட்ட சுதந்திரமும் அடிப்படையான உரிமை. ஆயினும் இந்த சுதந்திரம் நடமாட்ட சுதந்திரத்தில் அல்லது வணிக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் நீடித்த குறுக்கீடு செய்வதற்கு அனுமதிப்பதில்லை. கண்ணியமாய், அதேசமயத்தில் உறுதியுடன் கேட்டுக்கொள்கிறேன், ஆர்ப்பாட்டங்களை தொடர விரும்புபவர்கள் இடையூறுகள் செய்வதற்கோ அடுத்தவரின் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கோ முயற்சி செய்யாமல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தட்டும்.”

எலிசே ஜனாதிபதி மாளிகையை நோக்கிய ஒரு பேரணிக்கும் வரும் வார இறுதியில் புதிதான பெருந்திரள் மறியல் நடவடிக்கைகளுக்கும் சமூக ஊடகங்களில் அழைப்புகள் பரவிவரும் நிலையில், அரசாங்கம் பெருகும் சமூக எதிர்ப்புக்கு எதிராக ஒரு பெரும் போலிஸ் ஒடுக்குமுறைக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

பிரான்சில் 1997 இல் ஒழிக்கப்பட்டுவிட்டிருந்த கட்டாய இராணுவ சேவைக்கு மக்ரோன் அரசாங்கம் மீண்டும் திரும்புவதென்பது ஐரோப்பாவெங்கிலும் இராணுவவாதத்தை தூண்டுவதற்கும் போருக்கான தயாரிப்புகளுக்கும் நடந்து வருகின்ற ஒரு விரிந்த செயல்பாடுகளின் பாகமாக இருக்கிறது. 2017 இல் சுவீடன் ரஷ்யாவுடனான போருக்கான தயாரிப்புகளின் பகுதியாக கட்டாய இராணுவ சேவையை மீண்டும் ஸ்தாபித்தது, “கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டமை, உக்ரேனிலான மோதல் மற்றும் நமது அண்மைப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது” ஆகியவற்றை இந்த நடவடிக்கைக்கான சாக்காக அது மேற்கோள் காட்டியது. 2016 இல் ஜேர்மன் அதிகாரிகள், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதை தாங்களும் பரிசீலித்துக் கொண்டிருப்பதாக அறிவித்தனர்.

பிரான்சில் மக்ரோன் 2017 ஜனாதிபதி பிரச்சார உரை ஒன்றில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு சூளுரைத்திருந்தார், அந்த உரையில் அவர் அறிவித்தார்: “போர் என்பது மறுபடியும் அரசியலின் ஒரு சாத்தியமான விளைவாக ஆகத்தக்கதான சர்வதேச உறவுகளின் ஒரு சகாப்தத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம்.” ஆயினும், தேவைப்படும் போது கட்டாய இராணுவ சேவையை கொண்டுவருவதற்கு அவசியமான உள்கட்டமைப்பைக் கட்டுவதையும் தாண்டி, தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தைத் தூண்டுவதும், அரசியல் சூழலை வலதுக்கு நகர்த்துவதுமே அதன் மையமான நோக்கமாக இருக்கிறது.

மாணவ மாணவிகள் உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டில் நுழைவதற்கு முன்பாக ஒரு மாத கால இராணுவ சேவைக்கு எடுக்கப்படுகின்ற விதமான ஒரு வேலைத்திட்டத்திற்கான ஒரு முன்னுரையாக, அடுத்த ஆண்டில் பிரான்ஸ் “பல நூறு அல்லது பல ஆயிரம் பேரை” கட்டாய இராணுவ சேர்க்கைக்குள் கொண்டுவரவிருப்பதாக, இப்போது, அட்டல், Le Parisien ஆல் வெளியிடப்பட்ட கட்டாய இராணுவச் சேர்க்கை குறித்த சிறப்புக்கட்டுரைகளின் ஒரு நீண்ட வரிசையில் அறிவித்திருக்கிறார். சாத்தியமான இலக்கு “2026, என்றாலும் விரைவான சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்று அட்டல் தெரிவித்தார். “கட்டாய இராணுவ சேவையானது இராணுவத்திற்கும் தேசத்திற்கும் இடையிலான இணைப்புகளை பலப்படுத்துவதாக இருந்தாக வேண்டும்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

“ஒவ்வொரு ஆண்டிலும், கிட்டத்தட்ட ஒரே வயதுடைய சுமார் 800,000 மாணவ மாணவிகள், அவர்கள் ஒன்றாக தங்கக்கூடிய 15 நாட்கள் உள்ளிட ஒரு மாத காலத்திற்காய் அழைக்கப்படுவர்” என்று அந்த பத்திரிகை விளக்கியது. அதற்குப் பின் இராணுவ சேவையில் மேலும் மூன்று மாதங்களுக்கு பணியாற்றக் கூடிய வாய்ப்பையும், இராணுவப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடிய வாய்ப்பையும் அவர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும்.

அரசாங்கம் அதன் திட்டங்களுக்கு போலியான ஜனநாயக முலாம் பூசுவதற்கும், இராணுவ நடவடிக்கை அல்லது உள்நாட்டு ஒடுக்குமுறைக்கான திட்டங்களுடன் அவை கொண்டிருக்கும் தொடர்புகளை மறுப்பதற்கும் செய்கின்ற முயற்சிகள் பட்டவர்த்தனமான முரண்பாடுகளால் நிரம்பியிருக்கிறது. “ஒரு ஒட்டுமொத்த தலைமுறையும் ஆயுதங்களைக் கையாள பயிற்றுவிக்கப்பட வேண்டிய அவசியம் பிரான்சுக்கு இனி கிடையாது” என்று அட்டல் கூறினார். பொதுப் பள்ளி முறைக்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நோக்கத்தை, விசித்திரமாய், எதிரொலிக்கும் விதமாக, கட்டாய இராணுவ சேவை “குடியரசின் விழுமியங்களின் அடிப்படையில் சமூக வர்க்கங்களின் கலப்பு”க்கு அனுமதிக்கும் என்று அவர் கூறிக் கொண்டார்.

1997 இல் ஒழிக்கப்படுவதற்கு முன்பாக இராணுவ சேவை இதனைச் செய்ததா என்பதில் Le Parisien ஆல் நேர்காணல் செய்யப்பட்ட கல்வியாளர்கள் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர். இந்த திட்டத்தில் நுழைகின்ற இளைஞர்கள் இராணுவ மற்றும் குடிமை சேவைகளின் பல்வேறு வகைகளுக்கு இடையில் தெரிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பதால், “சமூக கலப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனது, 1997 இல் காலாட்படையின் சண்டையிடும் பிரிவுகளில் ஏழ்மைப்பட்ட சமூக வர்க்கங்களைச் சேர்ந்த இளம் ஆண்கள் மட்டுமே அங்கு இருந்தனர்” என்று வரலாற்றாசிரியர் Bénédicte Chéron தெரிவித்தார்.

மக்ரோனின் திட்டங்கள் குறித்து “குழப்பமான மற்றும் ஓரளவுக்கு எதிர்மறையான பார்வை” கொண்டிருக்கின்ற இளைஞர்கள் மத்தியில், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டங்கள் மிகவும் வெறுப்பை சம்பாதித்திருக்கின்றன என்பதை Le Parisien ஒப்புக்கொண்டது. “இந்த திட்டம் பயனற்றது என்பதான ஒரு உணர்வு”க்கு இது இட்டுச் செல்கிறது, இது பிரெஞ்சு இளைஞர்களிடையே பரவலாய் இருக்கிறது, என்று அந்த பத்திரிகை மேலும் சேர்த்துக் கொண்டது. இராணுவ சேவையானது “நெருக்கடி நிலைமைகளில் எதிர்வினையாற்றுவது” குறித்தும் “சுற்றுசூழல் மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் தொடர்புடைய நடவடிக்கைகள்” குறித்தும் இளைஞர்கள் கூடுதலாக கற்றுக் கொள்ள உதவும் என்பதையெல்லாம் சொல்லி கட்டாய இராணுவ சேவைக்கு மக்ரோன் விளம்பரம் செய்ய முனைய வேண்டும் என்று அது சிடுமூஞ்சித்தனத்துடன் பரிந்துரைத்தது.

உண்மையில், இளம் தொழிலாளர்களையும், நடுத்தர வர்க்க இளைஞர்களையும், நிதிப் பிரபுத்துவத்தின் வாரிசுகளையும் இராணுவ முகாம்களில் தோளாடு தோள் நிற்கச் செய்ய அனுமதிப்பதன் மூலமாக முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதல்ல கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதன் நோக்கம். மக்ரோன் தனது மக்கள்வெறுப்பை சம்பாதித்திருக்கும் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை தொடர்ந்து திணிக்க இயலுகின்ற வகையில், சமூக மோதலை வலுக்கட்டாயமாக ஒடுக்குவதற்கு இளைஞர்கள் மத்தியில் இராணுவ ஒழுங்கைத் திணிப்பதே அதன் நோக்கமாய் இருக்கிறது. மக்ரோன் கட்டாய இராணுவ சேவைக்குத் திரும்புவதென்பது, சொந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கம் செய்கின்ற முயற்சிகள் எவ்வாறு இராணுவவாதத்திற்கும் சர்வதேச அளவில் போர் அபாயத்தின் அதிகரிப்புக்கும் இட்டுச் செல்கிறது என்பதற்கான குறிப்பான ஒரு திடுக்கிட வைக்கும் விளக்கச்சித்திரமாய் இருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோரும் பிரெஞ்சு மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினரும் தற்போதுள்ள அமைப்புமுறைக்கு எதிரான ஒரு “வெகுஜன எழுச்சி”யில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 2017 “தலைமுறை எது?” கருத்துவாக்கெடுப்புக்கு பின்னர், இளைஞர்கள் மத்தியில் வர்க்க மோதலை ஒடுக்குவதை அதிமுக்கியமானதாக ஆளும் உயரடுக்கு காண்கிறது.

“ஒன்று கூடுவதற்கான ஒரு தருணம்” என்ற தலைப்பிலான தனது தலையங்கத்தில் Le Parisien இதனை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டது, அது எழுதியது: “பிரான்ஸ் அதன் ஐக்கியத்தை அச்சுறுத்துகின்ற பிளவுகளால் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதொரு சமயத்தில், ஒரு தேசிய சேவை வேலைத்திட்டத்தை மீண்டும் உரிய இடத்தில் அமர்த்துவது என்ற யோசனை ஒரு சரியான காலத்திலான முன்முயற்சியாகும்.”

இந்தக் கொள்கையின் இராணுவவாத குணாம்சமானது, மக்ரோன், மஞ்சள் சீருடைக்காரர்களின் ஆர்ப்பாட்டங்களது சமயத்தில் வார இறுதியில் பேர்லினுக்கு பயணம் செய்து, அங்கு அவர் ரஷ்யா, சீனா, மற்றும் அமெரிக்காவை எதிர்த்து நிற்கத் திறம்படைத்த ஒரு ஐரோப்பிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான தனது முந்தைய அழைப்புகளை எதிரொலித்ததின் மூலம், அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. மக்ரோனின் திட்டங்களை எட்டுவதற்கு அவசியமாயிருக்கும் இராணுவச் செலவினங்களில் பிரான்ஸ் 2023க்குள்ளாக 300 பில்லியன் யூரோக்கள் செலவிடவிருப்பதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிகாரிகள் மதிப்பிட்டிருந்தனர்.

“ஏனைய சக்திகளின் விளையாட்டுப்பொருளாக” ஆகாத ஒரு “கூடுதல் வலிமையான மற்றும் கூடுதல் இறையாண்மையுடனான ஐரோப்பா”வுக்கு இந்த வார இறுதியில் மக்ரோன் அழைப்புவிடுத்தார்; ஒரு ஐரோப்பிய இராணுவம் விடயத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி ஒத்துழைப்பு குறித்து குறிப்பிட்ட அவர் பின்வருமாறு அறிவித்தார்: “புதிய பிராங்கோ-ஜேர்மன் பொறுப்புடைமையானது ஐரோப்பாவுக்கு அதன் இறையாண்மையை அடைவதற்கு அவசியமான கருவிகளை வழங்குவதைக் கொண்டிருக்கிறது.”