ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to Macron’s maneuvers to strangle the Yellow Vest protests in France

பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்களின் குரல்வளை நசுக்குவதற்கான மக்ரோனின் சூழ்ச்சிகளை எதிர்ப்போம்

By Alex Lantier
27 November 2018

எரிபொருள் வரி உயர்வுக்கான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக கால் மில்லியன் பேர் மஞ்சள் சீருடை அணிந்து முதன்முதலில் நவம்பர் 17 இல் போராடியதிலிருந்து 10 நாட்கள் ஆகியுள்ளன. பிரான்சில் மக்ரோனினாலும் ஐரோப்பா எங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் நடத்தப்படுகின்ற சமூக செலவினக் குறைப்பு மற்றும் இராணுவவாத கொள்கைகளால் தூண்டிவிடப்பட்ட ஆழ்ந்த எதிர்ப்பு, முழு வேகத்தில் முன்னுக்கு வந்துள்ளது. முன்னாள் வங்கியாளரும் "செல்வந்தர்களின் ஜனாதிபதியுமான" மக்ரோனின் இறுமாப்பும் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஆழ்ந்த சமூக கோபமும், மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களிடையே மட்டுமல்ல, மாறாக பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மத்தியிலும் உருவாகி வருகிறது.

ஞாயிறன்று பாரீஸ் போராட்டம் வன்முறையாக ஒடுக்கப்பட்ட போதும், மஞ்சள் சீருடை போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதோடு, ஐரோப்பிய மட்டத்தில் கட்டவிழ்ந்து வரும் எண்ணற்ற வேலைநிறுத்த இயக்கங்களுடன் அணி சேர்ந்து வருகிறது. போர்ட் (Port), அமேசன் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள் அமைத்த சாலை தடுப்புகளைப் பாதுகாத்து, வேலைநிறுத்தத்தில் உள்ளனர். சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, மக்ரோனின் இராஜினாமாவுக்காக, மற்றும் ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கு எதிராக — அவர்களின் கோரிக்கைகள், முன்பினும் அதிக தொழிலாள வர்க்க பண்பை ஏற்று வருகிறது.

சமூக கோபத்தின் வெடிப்பை முகங்கொடுத்துள்ள மக்ரோன், போராட்டங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று தொழிற்சங்கங்கள் மற்றும் NGO களுடன் விவாதித்த பின்னர் இன்று மாலை உரையாற்றவுள்ளார். அதேநேரத்தில், பத்திரிகைகளோ, மக்ரோன் மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் போராட்டக்காரர்களை "பிரதிநிதித்துவம்" செய்வதற்காக, சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் பல தரப்பினரும் கலந்துள்ள ஓர் இயக்கமாக விளங்கும் இந்த மஞ்சள் சீருடை இயக்கத்திற்கு ஒரு "தலைமையை" திணிக்க முயன்று வருகின்றன.

இந்த பேரம்பேசல்கள் மஞ்சள் சீருடை இயக்கத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கான ஒரு பொறியாகும். மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இங்கே வர்க்கப் போராட்டத்திற்கு சீர்திருத்தத்தால் எந்த பயனும் விளையாது; மக்ரோன் அதிகபட்சமாக பறித்தெடுப்புகளை மட்டுமே வழங்குவார். இத்தகைய மோசடியான பேரம்பேசல்களை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதே முன்னிருக்கும் ஒரே பாதையாகும். பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்கள் முன்னே, அரசு அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவது மீதான கேள்வியை முன்னிறுத்தும் ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, போராட்டத்திற்கான சுயாதீனமான அமைப்புகளும் ஒரு புதிய அரசியல் தலைமையும் அவசியமாகும்.

இன்றைய பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வழங்கும் மக்ரோனின் ஆலோசகரும் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பின் (CFDT) தலைவருமான லோரோன்ட் பேர்ஜே (Laurent Berger), நேற்று Le Parisien பத்திரிகை உடனான ஒரு பேட்டியில், இந்த நெருக்கடியைத் தீர்க்க "உறுதியான நடவடிக்கைகளை" முன்மொழிந்தார். “[பிரதம மந்திரி] எடுவார்ட் பிலிப் உடன் மோதிய" பின்னர், இப்போது “முன்னாள் வங்கியாளர் மக்ரோன் வெல்கிறாரா அல்லது அனுதாப வேட்பாளர் இமானுவல் வெல்கிறாரா" என்பதை தீர்மானிக்க, பேர்ஜே இப்போது மக்ரோனின் ஆத்மாவுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டு, Le Parisien மரத்துப்போன வார்த்தைகளில் எழுதுகிறது.

எரிபொருள் வரி உயர்வைத் திணிப்பதையும், வங்கியாளர் மக்ரோனின் சமூக செலவினக் குறைப்பு திட்டநிரலைத் தொடர்வதைத்தான் பேர்ஜே "உறுதியாக" முன்மொழிகிறார். “அரசால் எல்லாவற்றையும் செய்ய முடியாது" மேலும் "அரசு தலைவரைப் பதவியிறங்குமாறு நிச்சயமாக என்னால் கேட்க முடியாது,” என்று பேர்ஜியே அறிவிக்கிறார். “எரிபொருள் வரி உயர்வுடன் சேர்ந்து, பிரெஞ்சு மக்களுக்கு வலி ஏற்படுத்தாத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.” “வாகனப் பயணத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், சுற்றுச்சூழல் போக்குவரத்து, மற்றும் சூரியஒளி எரிசக்தியைப் புதுப்பிப்பதற்கான" சில நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்பவை மட்டுந்தான் அவர் முன்மொழிந்த நடவடிக்கையாக இருந்தன.

அரசு செய்தி தொடர்பாளர் Benjamin Griveaux கூற்றின்படி, மக்ரோன் "கொள்கை மாற்றத்தை அல்ல, அணுகுமுறையில் மாற்றத்தை" முன்மொழிந்து வருகிறாராம். சுருக்கமாக கூறுவதானால், சில மக்கள் தொடர்பு நடவடிக்கைகள், மஞ்சள் சீருடையாளர்கள் நிராகரிக்கும் மற்றும் மக்களின் அதிக பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் இந்த ஜனாதிபதி காலத்தைச் சந்தைப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளன. AFP இவ்வாறு குறிப்பிட்டு நிறைவு செய்தது: “முதலாவதாக, இந்த வெடிப்பைத் தூண்டிவிட்ட எரிபொருள் வரி உயர்வு மீது அங்கே எந்த முக்கிய நிதியியல் முடிவுகளோ அல்லது கடன் இரத்து நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.”

பல தரப்பினர் வியாபித்திருக்கின்ற ஓர் இயக்கத்தை விற்றுத் தள்ளுவதற்காக அதன் மீது பேரம்பேசல்களை எவ்வாறு திணிப்பது? அந்த இயக்கத்திற்காக மக்ரோனுடன் பேச விரும்புவதாக கூறிக்கொள்ளும் எட்டு மஞ்சள் சீருடையாளர்கள் கொண்ட ஒரு "பிரதிநிதிகள் குழுவை" பத்திரிகைகள் இப்போது ஊக்குவித்து வருகின்ற அதேவேளையில், எவ்வாறிருப்பினும் அந்த இயக்கம் "அரசியலற்றது" என்றும் வாதிடுகின்றன. அந்த எட்டு பேரில் பலர் சுய தொழில்முனைவோர், ஒருவர் விமானப்படையின் முன்னாள் சிப்பாய், ஒருவர் CFDT தொழிற்சங்க நிர்வாகி, இவர்கள் அரசுடன் "துரிதமாக" பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர கோரி வருகின்றனர்: “மூன்று மாதங்களுக்கு நாம் நாட்டை முடக்கிக் கொண்டிருக்க முடியாது, நாம் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும்.”

பேஸ்புக்கில் அழைப்பு விடுத்து ஆரம்பத்தில் போராட்டத்தைத் தொடங்கி வைத்த மஞ்சள் சீருடையாளர்களில் ஒருவரான, டிரக் ஓட்டுனர் Eric Drouet, கண்கூடாகவே பெரிய உற்சாகம் ஏதுமின்றி இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். “இந்த எட்டு பேர் பிரதிநிதிகள் குழுவால் ஒன்றும் முடிவு செய்ய முடியாது,” என்றவர் அறிவித்தார்.

அதேநேரத்தில், Le Parisien, இந்த மஞ்சள் சீருடையாளர்கள் மீது மேலோங்கியுள்ள ஒரு புரட்சிகர முன்னோக்கின் அபாயத்தைக் குறித்து மிரட்சியோடு குற்றஞ்சாட்டுகிறது: “தொழில்ரீதியில் தொந்தரவூட்டும் ஒருசிலர் இந்த இயக்கத்திற்குள் தாங்களாகவே உள்நுழைந்து, ஒவ்வொன்றையும் அழிக்கவும், தேர்தல்களின் ஜனநாயக மாதிரியை ஏன் மறுத்து இல்லாதொழிக்கக் கூடாது என்றும் முன்மொழிந்து வருகிறார்கள். ஒரேமாதிரியான வறட்டுவாதங்கள் மீது தொடர்ந்து சுற்றிக் சுழன்று கொண்டு, பலவீனத்தின் அறிகுறியாக இந்த பறவைகள் கீச்சிடுவதற்கு இந்த மஞ்சள் சீருடையாளர்கள் ஒரு களத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.”

இதுபோன்ற நிந்தனைகள், பேர்ஜே முன்மொழிந்த தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளை இகழ்வதற்குத்தான் தகுதியுடையவை என காட்டுகிறது. ஜனநாயகத்தை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மக்ரோனுக்கு எதிரான மஞ்சள் சீருடையாளர்களின் எதிர்ப்போ அல்லது அபிவிருத்தி அடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்போ அல்ல, மாறாக மோசடி பேரம்பேசல்களைக் கொண்டு மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பின் குரல்வளையை நசுக்க முயன்று வருகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் மக்ரோன் அரசாங்கம் தான் ஜனநாயகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

புரட்சிகர பாதையை எடுப்பதற்கு இதுவே சரியான தருணம். மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமில்லை. நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு எதிராக வேறுவழியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரெஞ்சு வாக்காளர்களில் பாதிக்கும் குறைவானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகின்ற அவர், வங்கிகளின் அப்பட்டமான கட்டளைகளை திணிக்கிறார். எது எவ்வாறு இருப்பினும், பிரெஞ்சு மக்களின் அதிக பெரும்பான்மையினரின் எதிர்ப்புக்கு இடையிலும் அவசரகால நிலைமையின் கீழ் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கி, ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பு கூட இல்லாமல் தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றியதன் அடிப்படையில் அமைந்த அவரது சமூக செலவின குறைப்பு கொள்கைக்கும் மற்றும் 2024 க்குள் 300 பில்லியன் யூரோவை ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்காக செலவிடுவதற்கான அவர் திட்டத்திற்கும் எந்த சட்டப்பூர்வதன்மையும் கிடையாது.

தங்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போக்கிற்கு ஏற்ப மக்ரோனை மாற்றுவதற்காக, மஞ்சள் சீருடையாளர்களால் மக்ரோனுக்கு அழுத்தமளிக்க முடியாது. பல கோடி பில்லியனர்களின் ஓர் ஒட்டுண்ணித்தனமான பிரபுத்துவத்திற்கு சொத்துக்களை உருவாக்கி அளித்த, தசாப்தகால தொழில்துறை அழிப்பு மற்றும் சமூக செலவினக் குறைப்பால் பட்டவர்த்தனமாக ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் கடன்களின் கீழ் சிதைந்தவாறு, 1968 இல் அது செய்ததைப் போல, சமூக சமரச கொள்கைகளை மேற்கொள்வதற்கு அதனிடம் எந்த ஆதாரவளங்களும் இல்லை. உண்மையில், தொழிற்சங்கங்களும் மற்றும் 1968 நடுத்தர-வர்க்க மாணவர் இயக்கத்திற்குப் பின்னர் மேலெழுந்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற நடுத்தர வர்க்க கட்சிகளும் மஞ்சள் சீருடையாளர்களிடம் இருந்து ஒதுங்கி நிற்கின்றன என்பதோடு, கண்டனமும் கூட தெரிவித்தன.

என்ன செய்ய வேண்டும்? இந்த நிதியியல் பிரபுத்துவத்தைத் தூக்கியெறிந்து ஆட்சியைக் கைப்பற்ற, பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயம் மற்றும் முன்னோக்கை வழங்க அதை ஒழுங்கமைப்பதே செய்ய வேண்டிய பணியாகும். இது பிரான்சில் அப்போது மேலெழுந்த போராட்டங்கள் குறித்து WSWS நெறிப்படுத்திய முன்னோக்குகளை ஊர்ஜிதம் செய்கிறது:

மக்ரோனுக்கு எதிராக அபிவிருத்தி கண்டு வரும் புரட்சிகரப் போராட்டங்கள், தொழிலாளர்களை 1968 க்குப் பிந்தைய காலத்தில் “இடதாக” சொல்லி கடந்து போயிருக்கும் கட்சிகளுடன் தவிர்க்கவியலாமல் மோதலுக்குள் கொண்டுவரும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவாக PES (Parti de l’égalité socialiste - சோசலிச சமத்துவக் கட்சி) ஸ்தாபிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும். இது பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தின் பிரசன்னத்தை மறுஸ்தாபகம் செய்து, போலி-இடதுகளுக்கும் மற்றும் அத்தனை முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்காகப் போராடுகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்துவதில் பகிரங்கமாக பங்கேற்று வருகின்ற நேரத்தில், PES, பிரான்ஸ் எங்கிலும் வேலையிடங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் தொழிலாள-வர்க்க சமூகங்களிலும் சாமானியர் அமைப்புகளை (rank-and-file organizations) உருவாக்கப்பட அழைப்பு விடுக்கிறது. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் சமூகத் தாக்குதல்களுக்கும் மற்றும் போர் திட்டங்களுக்குமான எதிர்ப்பை விவாதிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் களம் தருவதற்கு இவை இன்றியமையாதவையாக இருக்கின்றன.