ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Increase in self-harm and suicides in UK immigration detention centres

இங்கிலாந்தின் புலம்பெயர்வு தடுப்பு மையங்களில் சுய-தீங்கிழைப்பு மற்றும் தற்கொலைகள் அதிகரிப்பு

By Simon Whelan
8 November 2018

பிரிட்டிஷ் புலம்பெயர்வு தடுப்பு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் எதிர்கொள்ளும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகள் குறித்து ஒரு பயங்கரமான விவகாரம் எழுந்துள்ளது.

கார்டியன் செய்தித்தாளின் தகவல் சுதந்திர (freedom of information - FoI) கோரிக்கையில் வெளியானதன் படி, இத்தகைய நிலைமைகள், தடுப்புக் காவல் மையங்களில் உள்ளோரில் நாளொன்றுக்கு அண்ணளவாக இருவர் வீதம் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன.

2016 க்கு பின்னர் இது இருமடங்காகியுள்ளதைக் காட்டுகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, மையங்களில் நிகழ்ந்த தற்கொலை முயற்சி பற்றிய முந்தைய புள்ளிவிபரங்கள் எப்பொழுதும் அதிகமாகவே இருந்தன. 2016 இல், தடுப்புக் காவல் மையங்களில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையானது, 2015 இல் இருந்து 11 சதவிகிதம் அதிகரித்து, 393 என பதிவாகியிருந்தது.

ஏப்ரலில், Independent செய்தித்தாளில் வெளியான புள்ளிவிபரங்கள், இங்கிலாந்தின் தடுத்து வைக்கப்பட்டவர்களில் நாளொன்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு சுய-தீங்கிழைப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக சுட்டிக்காட்டியதுடன், வழக்கமான “தற்கொலை கண்காணிப்பில்” இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையும் தவிர்க்கவியலாமல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இப்பத்திரிகை தெரிவித்தது.

எனினும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதிகளின் எண்ணிக்கை வீதம் 22 சதவிகிதம் உயர்ந்தது. இந்த தகவல், உள்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு FoI பதிலிறுப்பின் வழியாக, நாடுகடத்துவதற்கு எதிரான உரிமைகள் அமைப்பிடமிருந்து (No Deportations rights Organisation) பெறப்பட்டது.

மொத்தத்தில், 159 தற்கொலை முயற்சிகள் பதிவாகியிருந்தன, இதில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள கோல்ன்ப்ரூக் (Colnbrook) மற்றும் ஹார்மோண்ட்ஸ்வோர்த் (Harmondsworth) என்ற இரண்டே மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோராவர். தடுத்துவைத்திருப்போரை துரிதமாக நாடுகடத்த உதவும் விதமாக இவ்விரு மையங்களும் அங்கு அமைந்துள்ளன.

முன்னாள் சிறை அதிகாரி ஸ்டீபன் ஷா தெரிவித்தபடி, இறப்புக்கள் குறித்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்த FoI கோரிக்கைகள் ஏன் பயன்படுத்த வேண்டும் எனில், அகற்றுதல் மையங்களில் நிகழும் தற்கொலைகள் பற்றிய புள்ளிவிபரங்கள் உள்துறை அலுவலகத்தால் இரகசியமாக வைக்கப்படுவதாலாகும். புலம்பெயர்வு தடுப்பு அமைப்புமுறை பற்றி மீளாய்வு செய்வதற்காக அரசாங்கத்தால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். புலம்பெயர்வு தடுப்புமையங்களில் உள்ளோரின் இறப்பு பற்றிய தகவல்களை வெளியிடுவதில் நீதித்துறை அமைச்சகத்தினை தொடர்ந்து உள்துறை அலுவலகமும் அவற்றை அனுசரிப்பது இல்லை என ஷா தனது கவலைகளை எழுப்பினார்.

இருப்பினும், புலம்பெயர்வு தடுப்புக் காவல் மையங்களில் நிகழும் இறப்புக்களை கண்காணிப்பது உட்பட, சிறப்பு சமூக சேவை புரியும் விசாரணை உரிமைகள் அமைப்பால் தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள், சென்ற ஆண்டில் புலம்பெயர்வு அகற்றுதல் முகாம்களில் ஆறு பேர் இறந்துபோனதாகக் கூறியது. அதில் நான்கு பேர் சுய-தீங்கிழைத்துக் கொண்டவர்கள் என்பதுடன், அது அவ்வருடத்தை அதிகளவு தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை பதிவான வருடமாக்கியது. ஏப்ரல் 2018 கணக்கெடுப்பு மூலமாக, அறக்கட்டளையின் புள்ளிவிபரம், 2000 இல் இருந்து 35 பேர் இறந்துபோனதாகக் காட்டுகின்றது, அதில் 14 பேர்கள் சுய-தீங்கிழைத்துக் கொண்டவர்கள்.

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களை வழக்கமான சூழ்நிலையில் தடுப்புக் காவலில் வைக்கக்கூடாது என்ற உள்துறை அலுவலக அதிகாரிகளின் கொள்கை ஒருபுறம் இருந்தாலும், அத்தகைய கைதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். Guardian பத்திரிகைக்கு அனுப்பப்பட்ட மற்றொரு FoI பதிலிறுப்பு, இங்கிலாந்தில் வந்திறங்குவதற்கு முன்னரே தடுப்புக் காவல் கைதிகள் சித்திரவதைக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது குறித்த நம்பகத்தன்மை தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக, மருத்துவ நிபுணர்கள் 10,000 க்கும் அதிகமான அறிக்கைகளை உள்துறை அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர் என தெரிவித்தது.

பிரிட்டனை வந்தடைவதற்கு முன்னர் தவறான நடவடிக்கைகளினால் ஏற்கனவே அவர்கள் பாதிக்கபட்டிருக்கவில்லை என்றாலும், தடுப்புக் காவல் மையங்களை வந்தடைந்தவுடன் அவர்களில் பலர் அந்த நிலைக்கு ஆளாகின்றனர். ஆண்டின் இறுதிப் பகுதியான டிசம்பர் 2016 இல், சிறைச்சாலை அதிகாரி வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 28,908 பேர் தடுப்புக் காவலுக்குள் நுழைந்தனர். எந்த நேரத்திலும், பிரிட்டனில், புலம்பெயர்வு தடுப்புக் காவலில் 3,500 க்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் முக்கியமாக அங்குள்ள புலம்பெயர்வு அகற்றுதல் மையங்கள் ஒன்பதில் ஏதேனும் ஒன்றிலோ, அல்லது மூன்று குறுகியகால தடுப்புக் காவல் மையங்களிலோ, அல்லது சிறைச்சாலைகளிலோ காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள். அக்டோபர் 3, 2016, ஒரே நாளில் மட்டும், புலம்பெயர்வு சட்டங்களின் கீழ், 442 பேர் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அக்டோபரில் Guardian பத்திரிகை, பிரிட்டிஷ் தடுப்புக் காவல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 புலம்பெயர்ந்தவர்களை மாதிரிகளாக எடுத்துக் கொண்டால், குறைந்தபட்சம் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களாகவோ, சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களாகவோ, அல்லது தீவிர நோய்வாய்பட்டவர்களாகவோ இருந்ததாக அறிக்கை செய்தது.

பெட்போர்ட்ஷையரில் (Bedforshire) உள்ள Yarl’s Wood புலம்பெயர்வு தடுப்புக் காவல் மையத்தில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 120 பேர் காவலில் இருந்தனர், இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய தடுப்புக் காவல் முகாம்களில் ஆதிக்கம் செலுத்தும் “மனிதாபிமானமற்ற” நிலைமைகளை எதிர்த்து இங்கிலாந்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. முக்கியமாக பெண் கைதிகளுக்கு உள்துறை அலுவலகமும் தனியார் பாதுகாப்பு நிறுவனமான Serco வும் அளிக்கும் “திட்டமிட்ட சித்திரவதை” பற்றி விவரித்து, அவர்களை காலவரையற்ற தடுப்புக் காவலில் வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை வைத்தனர்.

Yarl’s Wood ஒரு “தடுப்புக் காவல்” அல்லது “நாட்டைவிட்டுஅகற்றல் மையமாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களுக்காக, இது ஒரு சிறைச்சாலையாகவே இயங்குகிறது, பல மைல்கள் கொண்ட திறந்தவெளிப் பகுதியின் மையத்திலும், உயர் வேலிகள் மற்றும் முட்கம்பிகள் சூழவும் இது அமைந்துள்ளது. இங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களது தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்ற, மற்றும் நாடு கடத்தப்படுவதற்காக அல்லது விடுவிக்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கின்ற  நிலையிலும் கூட, பூட்டு போடப்பட்ட காவலில் தான் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய புலம்பெயர்வு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 28 வயதான போலந்து நாட்டவரான Marcin Gwozdzinski இன் மிகசமீபத்திய தற்கொலை வழக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளது. அவர் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு முடிவில் அதிகரித்தளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். செப்டம்பர் 2017 இல் அவர் தற்கொலை செய்து கொண்டார், அடுத்து வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், Harmondsworth தடுப்புக் காவல் மைய பணியாளர், ஒரு குறுகிய நேரளவிலான மூன்று நிமிட கூட்டத்தில், வெறும் “பல்வலி”யின் காரணமாகவே அவர் அழுத்ததிற்கு உள்ளாகி இருந்தார் எனத் தெரிவித்தார்.

Gwozdzinski, ஏன் தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்பது பற்றி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. Harmondsworth மையத்தில் இருந்த Gwozdzinski இன் சக தடுத்துவைக்கப்பட்டிருப்பவர் ஒருவர் தந்த தகவல் படி, அவருக்கான உயிர் பாதுகாப்பு கருவி நிறுத்தப்பட முன்னர், போலந்தில் இருந்து அவரது தாயார் பேருந்தில் பயணம் செய்து தனது மகனைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். மேலும், Gwozdzinski இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது எனவும், ஆனால் உள்துறை அலுவலகம் அவரை விடுவிக்க தவறிவிட்டது எனவும் தடுப்புக் காவல் கைதிகள் கூறினர்.

“அத்தகைய மோசமான பராமரிப்பிற்காக யாரும் பொறுப்பாக்கப்படவில்லை என்பது அவமானகரமான ஒன்றாகும். நாங்களும் மனிதர்கள் தானே, விலங்குகள் இல்லையே” என்பதை Gwozdzinski இன் மரணம் தெரிவித்த பின்னர், ஒரு எதிர்ப்பு கடிதத்தில் Harmondsworth மையத்தில் உள்ள ஐம்பத்தொன்பது தடுத்துவைக்கப்பட்டிருப்போர் கையெழுத்திட்டனர்.

Gwozdzinski தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு வெறும் ஒரு நாளுக்கு முன்னர், பிரிட்டஷின் மற்றொரு தடுப்புக் காவல் மையத்தில், சிலர் தற்கொலை செய்து கொண்டது உட்பட, நலிவடைந்த தடுத்துவைத்திருப்போரை காவலாளிகள் துஷ்பிரயோகம் செய்வதை காட்டும் ஒரு ஆவணப்படத்தை BBC வெளியிட்டது. 2015 இல், Channel 4 News தயாரித்த ஒரு இரகசிய திரைப்படம், மிருகத்தனமான சூழ்நிலையில் தடுப்புக் காவல் கைதிகள் வாழ்வது பற்றிய கவலைக்குள்ளாக்கும் ஆதாரங்களை வழங்கியது. 2013 இல், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட, சுய-தீங்கிழைப்பினால் நிகழ்ந்த 74 சம்பவங்கள் தொடர்பாக விசாரித்ததில், “அவர்கள் தங்கள் மணிகட்டை வெட்டிக் கொள்ளட்டும். இதுவெல்லாம் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் செய்வது தான்” என்று ஒரு காவலாளி கூறியதை ஒருவர் கேட்டிருந்தார்.

Guardian உம் மற்றும் ஏனைய பத்திரிகைகளும் நடத்திய அடுத்தக்கட்ட ஆய்வு, ஒவ்வொரு ஆண்டும் 25,000 க்கும் அதிகமான மக்கள் தஞ்சம் புகுந்தனர், ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், பல நூற்றுக்கணக்கானோர் ஆழமான அதிர்ச்சியடைந்தவர்களாக இருந்தனர். ஆகஸ்ட் 31 அன்று, நாடுகடத்தல் வழக்குகளில் தொடர்புபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு தற்காலிக விபர ஆய்வில், தடுப்புக் காவல் கைதிகளில் கிட்டத்தட்ட 56 சதவிகிதத்தினர் உடல் அல்லது மன ரீதியான நோய்களினால் பாதிக்கப்பட்டோ அல்லது சித்திரவதைக்கு ஆளாகியோ இருந்தனர் என்பது கண்டறியபட்டது. மேலும் இந்த ஆராய்ச்சியில், சராசரியாக நான்கு மாத காலத்திற்கு தடுப்புக் காவல் கைதிகள் மையங்களில் வைக்கப்படுகின்றனர் என்பதும், அதிலும், 84 சதவிகித கைதிகளுக்கு அவர்கள் எப்போது நாடுகடத்தப்படுவார்கள் என்ற விபரமும் சொல்லப்படவில்லை என்பதும் தெரியவந்தது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தனர் என்பதுடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட நாட்டில் சிலர் வாழ்ந்துள்ளதாக செய்தித்தாள்கள் தெரிவித்தன.

ஐரோப்பாவிலேயே ஒரு மிகப்பெரிய புலம்பெயர்வு தடுப்பு அமைப்பை இங்கிலாந்து கொண்டுள்ளது என்பதுடன், இப்பிராந்தியத்திலேயே இந்த ஒரு நாடு மட்டும் புலம்பெயர்வோரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான கால அளவில் ஒரு சட்டபூர்வ வரையறையை கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்வோரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான கால வரையறை எதுவும் அங்கில்லை என்றாலும், ஒரு நியாயமான காலத்திற்குள் இது நிகழும் என்ற ஒரு உண்மையான எதிர்பார்ப்பு இருந்தால் மட்டும் கைதிகளை அகற்றுவதை சட்டபூர்வமாக கருதி நீதிமன்றங்கள் இந்த தடுப்புக் காவலை செயல்படுத்துகின்றன. இது உறுதியான வகையில் பின்பற்றப்படவில்லை என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர் மீது நிகழ்த்தப்படும் திட்டவட்டமான காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு தொழிலாளர்களும் இளைஞர்களும் கோரிக்கை விடுக்க வேண்டும். அனைத்து புலம்பெயர்வு தடுப்புக் காவல் மையங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என்பதோடு, முழு குடியுரிமை உரிமைகளை கொண்டிருப்பது, மற்றும் நலன்புரி திட்டங்களான வீட்டுவசதி, சுகாதார பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றை அணுகுவது என அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் அவரவர் விருப்பப்படி நாட்டில் வாழ்வதற்கான உரிமையையும் அது நிலைநாட்டுகிறது.