ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Rejecting Macron’s speech, fuel tax protesters call new demonstrations in France

மக்ரோனின் பேச்சை நிராகரித்து, பிரான்சில் எரிபொருள் வரி உயர்வை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Alex Lantier
28 November 2018

மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் நேற்று காலை இமானுவல் மக்ரோனின் பேச்சை நிராகரித்தனர், இப்பேச்சுவார்த்தைகளின் போது அவர் போராட்டக்காரர்களின் பிரச்சனைகளுக்கு கவனம்செலுத்துவதாக கூறி இந்த இயக்கத்தை நிறுத்துவதற்கு முயன்றார். மாலையில் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரான்சுவா டு ருகி (François de Rugy) உடனான நீண்ட சந்திப்புகளுக்குப் பின்னர், அவர்கள் பாரீசில் இந்த வாரயிறுதியில் மற்றொரு சனிக்கிழமை போராட்டத்திற்கு விடுத்திருந்த அழைப்பைத் தொடர்வதாக அறிவித்தனர்.

மக்ரோனின் எரிபொருள் வரி உயர்வுக்கு எதிராக சாலை மறியல்களுக்கு (இவைதான் மஞ்சள் சீருடை இயக்கத்தைத் தொடங்கி வைத்தது) அழைப்புவிடுத்த ஆரம்ப பேஸ்புக் குழுக்களில் சிலவற்றை உருவாக்கியவர்களாகிய, Eric Drouet மற்றும் Priscilla Ludosky உம் அச்சந்திப்பிலிருந்து வெளிவந்து மாலை 10 மணிக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினர். அவர்கள் மக்ரோனின் பேச்சில் இருந்தோ அல்லது டு ருகி உடனான அவர்களின் விவாதங்களில் இருந்தோ திருப்தி அடையவில்லை என்று தெரிவித்தனர்.

ஒரு டிரக் ஓட்டுனரான Drouet கூறினார்: “மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அங்கே நிஜமான விருப்பமில்லை என்பது தான் இன்றைய எங்களின் உணர்வு, உண்மையில் இன்று எங்களிடையே இந்த உணர்வு தான் ஆழமாக உள்ளது.” டு ருகியின் கருத்துக்கள் "இறுதியில் மிகவும் தெளிவின்றி" இருந்தன என்பதையும் சேர்த்துக் கொண்டார் — அவர் அந்த சேதியை கொண்டு சேர்க்க முயல்வதாக தெரிவித்தார், அது தான் அடிப்படையானதாகவும் இருந்தது. பிரெஞ்சு மக்கள் நம்புவதாக இல்லை அல்லது இன்னும் மோசமாகி உள்ளது என்று ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் அறிக்கைகள் குறித்து நாங்கள் கருதியதை எடுத்துரைத்தோம். அது களத்தில் உள்ள மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்குத் தீவிரமாக வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இனி போராட்டங்கள் தொடரும் என்று கூறிய அவர், “கடந்த சனிக்கிழமை போலவே அங்கே சாம்ப்ஸ்-எலிசே வீதியில் ஒரு பேரணி நடத்தப்படும். மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் அதை தொடர விரும்புகிறார்கள்.”

Drouet, கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் நடந்ததைப் போன்ற வன்முறைக்கு மஞ்சள் சீருடையாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்து மிகச் சரியாக பொலிஸ் ஆக்ரோஷத்தைக் குற்றஞ்சாட்டினார். அவர் கூறினார், “சனியன்று நாம் பார்த்த மிதமிஞ்சிய அனைத்தையும் உருவாக்கியது உள்துறை அமைச்சகத்தின் பிடிவாதம் தான். காலை 8 மணியிலிருந்து மதியம் வரையில் கலகம் ஒடுக்கும் பொலிஸ் கண்ணீர் புகைகுண்டுகளுடன் தடியடி நடத்தியமை தான் மஞ்சள் சீருடையாளர்களிடையே பதட்டங்களை உருவாக்கியது என்பதே உண்மை. பொலிஸ் மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தால், அன்று வன்முறை குறைந்திருக்கும்.”

மஞ்சள் சீருடையாளர்களின் சாலை மறிப்புகளும் போராட்டங்களும், அமேசன், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உட்பட முக்கிய வேலையிடங்களில் நடந்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கை உடன் மிகவும் நெருக்கமாக இணைந்து வருகின்றன என்பதோடு, சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோனின் ஜனாதிபதி பதவிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பாரிய கோபத்திற்கான பிரச்சினையும் நேரடியாக அதிகரித்து வருகின்றன.

Drouet மற்றும் Ludosky உடனான அவரின் சந்திப்புகளுக்குப் பின்னர் டு ருகி பத்திரிகைகளுக்கு அளித்த தனித்தனியான கருத்துகளில் இதை ஏறத்தாழ அவரே ஒப்புக் கொண்டிருந்தார். “அவர்களின் கோரிக்கைகள் சுற்றுச் சூழல் பிரச்சினை மற்றும் எரிபொருள் பிரச்சினையைக் கடந்து செல்கிறது,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நிச்சயமாக, நாங்கள் உடனடியாக பதில்கள் அளிக்கக்கூடிய நிலையில் இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் மக்ரோன் நிர்வாகத்தின் முன்மொழிவுகளை நிராகரித்திருப்பது, கட்டவிழ்ந்து வரும் அரசியல் நெருக்கடி ஐரோப்பிய பரிமாணங்களை எடுத்துள்ளதை தீவிரப்படுத்துகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்களைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, பாரீசின் மையப்பகுதியில் சனியன்று நடந்த பேரணி மீது பொலிஸைக் கொண்டு வன்முறை தாக்குதல் நடத்தியும் கூட, அதிகரித்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ள மக்ரோன், இறுதியில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க கருதுவதன் மூலம் இந்நெருக்கடியைத் தணிக்க முயல நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

விமானச் சேவைகள், துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், சரக்கு பரிவர்த்தனை துறைகளில் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான சமூக செலவினக் குறைப்புக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு இடையே, மஞ்சள் சீருடையாளர்கள் பிரபல்யமடைந்துவருவதே இந்த முடிவிற்கான பிரதான காரணியாக இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. நுகர்வு சக்தியை அதிகரிப்பது, சமூக சமத்துவமின்மையையும் உழைக்கும் மக்கள் மீதான வரிகளையும் குறைப்பது ஆகியவற்றுக்காக மஞ்சள் சீருடையாளர்களின் கோரிக்கைகளைப் பிரெஞ்சு மக்களில் 72 சதவீதத்தினர் ஆதரிக்கின்றனர் என்பதை BVA இன் ஒரு கருத்துக்கணிப்பு இந்த வாரயிறுதியில் கண்டறிந்தது. முழுமையாக 59 சதவீதத்தினர் இந்த போராட்டங்கள் வளர வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஆனால் மஞ்சள் சீருடை இயக்கம் குறித்து வணிக பெருந்தலைகளின் குழுவுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் ஓர் உரை வழங்குவதென்ற மக்ரோனின் முடிவானது, அவர் அவரது வலதுசாரி கொள்கைகளைப் பின்தொடர விரும்புகிறார் என்பதையும் போராட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை என்பதையும் மட்டுமே தெளிவுபடுத்துகிறது. அவர் போக்கை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும், ஆனால் அடையாள விட்டுக்கொடுப்புகளை மட்டுமே வழங்க முடியும் என்பதையும் வலியுறுத்திய அவர், மக்கள்விரோத எரிபொருள் வரி உயர்வைப் பேணுவதற்கு சூளுரைத்த அதேவேளையில், முடிவில்லா சமூக வெட்டுக்கள், இராணுவ செலவின அதிகரிப்புகள் மற்றும் பணக்காரர்களுக்கான வரி விட்டுக்கொடுப்புகளின் அவரது திட்டநிரலைத் தொடர்வதற்கும் சூளுரைத்தார்.

அவர் அறிவித்தார், “ஒருவர் சரியான பாதையில் இருந்தால், அதை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்பது தான் சமீபத்திய நாட்களில் நான் கற்றுக் கொண்ட பாடம், ஆனால் நாம் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளலாம், ஏனென்றால் என் சக குடிமக்கள் இந்த பாதை உயர்மட்டத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதாக கருதுகிறார்கள்.”

உண்மையில், மக்ரோனின் அணுகுமுறைகளும் சரி அவரது அரசியல் திட்டநிரலும் சரி, ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலுமான நாடுகளில் உள்ளதைப் போலவே, சர்வாதிகாரமானது மற்றும் சட்டவிரோதமானது, பாரிய பெரும்பான்மை பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்படுகிறது. எதிர்ப்பை அடித்து நொறுக்குவதற்கு பொலிஸை அணிதிரட்டுவதன் மூலமாக அவர் திணித்துள்ள அவரது ஈவிரக்கமற்ற சமூக செலவினக் கொள்கைகள் மற்றும் போர் கொள்கைகள், இப்போது, தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபக அரசியல் கட்சிகளின் உள்ளடக்கத்திற்கு வெளியே வெடித்து வருகின்ற, தீவிரமான முதல்கட்ட எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன.

மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள், “மக்ரோன் அவர் பாதையில் நிற்கட்டும், நாங்கள் எங்கள் பாதையில் நிற்கிறோம்,” என்று கூச்சலிட்டு, மக்ரோனின் கருத்துகளை ஏளனம் செய்தார்கள்.

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பாலும் மற்றும் மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களாலும் அவர் அரசாங்கம் ஆழமாக உலுக்கப்பட்டுள்ளது என்பதை மக்ரோனின் பேச்சு தெளிவுபடுத்துகிறது. சுற்றி வளைத்து இருந்த அவர் பேச்சின் எஞ்சிய பகுதியானது, அச்சுறுத்தல்கள், மக்களுக்கான கர்வமான அவர் சொற்பொழிவுகள், மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சேர்ந்த மக்ரோனின் சூழ்ச்சிகளுக்கு மிக நெருக்கமாக மஞ்சள் சீருடையாளர்களை இணைப்பதன் மூலமாக அவர்களது போராட்டத்தின் குரல்வளையை நெரிப்பதற்கான முன்மொழிவுகள் என இவற்றின் முன்னுக்குப்பின் முரணான கலவையாக இருந்தது.

கடந்த வாரயிறுதியில் அவரின் கலகம் ஒடுக்கும் பொலிஸ் பிரிவுகள் மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுடன் கடுமையான மோதல்களைத் தூண்டிய பின்னர், மக்ரோன் அதிகரித்த ஒடுக்குமுறை குறித்து எச்சரித்தார். வன்முறை நடக்கும் எந்தவொரு போராட்டத்திலும், “நமது பொறுப்பு பொது ஒழுங்கை, பொது ஒழுங்கை மட்டுமே பேணுவதாகும்.” என அவர் கூறினார்.

வரிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் சமூக செலவினங்களை அதிகரிக்க வேண்டுமென்ற மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை, மக்ரோன், குழந்தைத்தனமானது மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று அகந்தையோடு விமர்சித்தார்: “எங்களால் வரிகளைக் குறைக்க முடியாது, நாம் நிறைய பொது சேவைகள், பகல் கவனிப்பு மையங்கள், பள்ளிகள், பொதுச் சேவைகளைக் கொண்டிருக்கிறோம் ... ஆகவே நமது அமைப்பு என்ன என்பதை நாம் மக்களுக்குக் கற்பிக்க வேண்டியுள்ளது.” அவர் தொடர்ந்து கூறுகையில், “மக்களின் வரிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பதை நாம் அவர்களுக்கு விளக்க வேண்டும் ... இதை யாருமே செய்யவில்லை என்றால், பள்ளிகள் இலவசமாக இருப்பதும் அல்லது உங்கள் வாழ்வின் இறுதி காலத்தை எட்டும் போது அரசு பணம் வழங்குவதும் வழமையானதே என்று ஒவ்வொருவரும் நினைப்பார்கள்.”

உண்மையில், வரிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் அதிக பொது சேவைகளை வழங்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கை குழந்தைத்தனமான கோரிக்கை அல்ல, மாறாக ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினை பறிமுதல்செய்வதுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். தொழிலாளர்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சமூக வேலைத்திட்டங்கள் வெட்டப்பட்டு வருவதற்கான காரணம், செல்வவளம் பாரியளவில் பில்லியனர்களுக்கு கைமாற்றப்பட்டு வருகிறது என்பது தான். ஏற்கனவே 2010 இல், பிரான்சின் தேசிய செல்வவளத்தின் ஒரு கால்வாசி உயர்மட்ட 1 சதவீதத்தினரிடமும், 62 சதவீதம் உயர்மட்ட 10 சதவீதத்தினரிடமும் இருந்தது; இன்றோ, இந்த பகிர்வு இன்னும் அதிகளவில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும் பில்லியனர் பேர்னார் ஆர்னோ 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்தார் என்ற நிலையில், ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும் செல்வந்தர்களுக்கான ஜனாதிபதியுமான மக்ரோனுக்கு எதிரான மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிரான சமூக கோபம் வெடிப்பார்ந்த மட்டத்தை எட்டி வருகிறது. ஐரோப்பிய இராணுவத்திற்கு நிதி வழங்குவதற்கான அவரின் வரி உயர்வுகளும், ஒருதலைபட்சமான தொழிலாளர் சட்ட உத்தரவுகளும், இரயில்வே துறை தனியார்மயமாக்கல், ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவக் கவனிப்பில் வெட்டுக்களும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி குறைப்புகளும் செல்வவளத்தை பெரும் பணக்காரர்களுக்கு கைமாற்றுவதன் பூரண வெளிப்பாடாகும்.

பெருவணிக முதலாளிமார்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளிடையே அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் கொள்கை குறித்து விவாதிக்க, அவர்களுக்கும், அவர் அரசாங்கத்திற்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கான "கூட்டுழைப்பு" குறித்து ஒரு வெற்று முன்மொழிவையும் மக்ரோன் முன்வைத்தார். அவரது பேச்சில் பூமியைக் காப்பாற்றுவதற்கான ஒரு தீவிர பங்களிப்பாக காட்டும் முயற்சியில், நிலக்கரி மற்றும் அணுசக்தி ஆலைகளை மூடுவதற்கும் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உருவாக்கத்திற்கான செலவுகளை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்த அவர், இருப்பினும் இந்த சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்ற நாடுகளுடன் எவ்வாறு ஒருங்கணைக்கப்படும் என்பதைக் குறித்து விவரிக்கவில்லை.

உண்மையில், மக்களின் துன்பங்களை மக்ரோன் அகந்தையோடு நிராகரிப்பதானது, சுற்றுச்சூழல் நெருக்கடி உட்பட ஒரேயொரு பிரச்சினையைக் கூட, பிரான்சிலும் உலகெங்கிலும் முதலாளித்துவ நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்யாமல் எவ்வாறு தீர்க்க முடியாது என்பது எடுத்துக்காட்டுகிறது.

எவ்வாறிருப்பினும் பிரான்சின் ஜனாதிபதியாக அவரின் உரை அவர் நோக்குநிலையை தெளிவுபடுத்தியது: அதாவது, அவர் அதிகரித்து வரும் சமூக கோபத்தை செவிமடுத்துள்ளார், அவரின் நடுக்கங்கள் என்னவாக இருந்தாலும், அப்பட்டமான ஒடுக்குமுறையை ஏற்று, அதை காலில் இட்டு நசுக்கும் முயற்சியில் அவர் தீர்மானமாக உள்ளார். மஞ்சள் சீருடையாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களானது, இக்கொள்கைக்கு பரந்தளவில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பு எதிர்ப்பு கட்டமைந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆரம்ப விடையிறுப்பாக உள்ளது.