ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pakistan’s government bows to Islamist right, victimises anew woman in blasphemy case

பாக்கிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய வலதுசாரிக்கு அடிபணிந்து, மத அவமதிப்பு வழக்கில் புதிதாக ஒரு பெண்ணை பலியிடுகிறது

By Sampath Perera 
9 November 2018

இஸ்லாமிய வலதுசாரி கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, மூன்று மாதம் முடிந்த பாக்கிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (Tehrik-e-Insaaf-PTI) அரசாங்கம், ஒரு வறிய கத்தோலிக்க பெண்மணியான ஆசியா பீபி மீது சுமத்தப்பட்ட மத அவமதிப்பு குற்றச்சாட்டையும், மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் நீக்குவதற்கான நாட்டின் உச்ச நீதிமன்ற முடிவை மறுபரிசீலனை செய்ய அதற்கு ஆணையிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளாக மரண தண்டனைக்கான வரிசையில் காத்திருந்து சோர்வடைந்து இருக்கும் பீபியை நாட்டை விட்டு வெளியேறக் கூடாதெனவும் அரசாங்கம் ஆணையிட்டுள்ளது.

புதனன்று, பாக்கிஸ்தானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளிநாட்டிற்கு செல்ல பீபிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறின. ஆனால், வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளரான டாக்டர் முகம்மது பைசல் இந்த அறிக்கையை கண்டனம் செய்துள்ளார். “அவர் நாட்டை விட்டு வெளியே செல்லலாம் என்ற அறிக்கை பொய்யானது- அதுவொரு போலியான செய்தியாகும்” என்று Dawn செய்தித்தாளுக்கு பைசல் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து, முல்தான் சிறையில் இருந்து பீபியை அதிகாரிகள் வெறுமனே விடுவித்து, இஸ்லாமாபாத்துக்கு கொண்டு சென்று அவரது சொந்த பாதுகாப்பிற்காக அவரை நெருக்கமான காவலில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

பீபியின் 2010 ஆம் ஆண்டு மத அவமதிப்பு வழக்கை பாக்கிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்து, அக்டோபர் 31 அன்று அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்திரவிட்டது. பாக்கிஸ்தானின் பிற்போக்குத்தனமான மத அவமதிப்பு சட்டங்களின் சட்டபூர்வ பாதுகாப்பிற்கு உட்பட்டு உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை வகுத்திருந்த அதேவேளையில், பீபி மீது குற்றம்சாட்டியவர்களின் சாட்சியங்களில் இருந்த ஸ்திரமற்றத்தன்மை உட்பட, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அது கூறியது.

இஸ்லாமிய வலதுசாரி –தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அரணாகவும், இந்தியா போன்ற அதன் மூலோபாய போட்டியாளரை எதிர்க்கும் ஆயுதமாகவும் பாக்கிஸ்தானின் ஆளும் உயரடுக்கு, அதிலும் குறிப்பாக இராணுவ-உளவுத்துறை எந்திரம் நீண்டகாலமாக இதை வளர்த்து வந்துள்ளது– நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலிறுப்பாக உடனடியாக பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.

அக்டோபர் 31 புதன் கிழமை முதல், நவம்பர் 2 வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாக்கிஸ்தான் (Tehreek-e-Labbaik-TLP) கட்சியின் தலைமையிலான வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்களினால் பாக்கிஸ்தான் உலுக்கிப் போடப்பட்டது. கராச்சி, பெஷாவர், லாகூர் மற்றும் ஏனைய நகரங்களில், TLP ஆதரவாளர்கள் பொலிசாருடன் மோதியதோடு, வாகனங்களுக்கும் ஏனைய பொதுச் சொத்துக்களுக்கும் நெருப்பு வைத்தனர்.

TLP இன் இணை நிறுவனர் முகம்மது ஃபாட்டல் பத்ரி லாகூர் பேரணியில், தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு “கொல்லப்பட வேண்டும்” என தெரிவித்தார். “அவர்களது பாதுகாப்பாளர்களோ, அவர்களது ஓட்டுநர்களோ அல்லது அவர்களது சமையல்காரர்களோ அவர்களை கொல்ல வேண்டும்,” எனத் தெரிவித்தார். மேலும், இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவிற்கு எதிராக கலகம் செய்ய பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரிகளை பகிரங்கமாக பத்ரி வலியுறுத்தினார்.

பாக்கிஸ்தானில் இஸ்லாமியவாதிகளால் விடுக்கப்படும் இத்தகைய அச்சுறுத்தல்களை வெறும் வாய்வீச்சாக கருதிவிட முடியாது. ஏனெனில், 2011ல், சல்மான் தசீர் என்பவர்- பஞ்சாப் மாகாண கவர்னராகவும், பாக்கிஸ்தானின் அப்போதைய ஆளும் கட்சியான பாக்கிஸ்தான் மக்கள் கட்சியில் (Pakistan People’s Party- PPP) ஒரு செல்வாக்குமிக்க ஒரு தலைவராகவும் இருந்தவர் - பீபியின் விடுதலைக்காக வாதிட்ட பின்னர் அவரது மெய்காப்பாளராலேயே கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு மாதங்களில், பீபியை காவலில் வைத்தது மற்றும் தூக்கிலிடப் போவதாக அச்சுறுத்தியது குறித்து அவரது எதிர்ப்பை தெரிவித்தப் பின்னர், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும் மற்றும் ஒரு கிறிஸ்துவருமான ஷாபாஸ் பட்டி படுகொலை செய்யப்பட்டார். தெஹ்ரிக்-இ-தாலிபான் பாக்கிஸ்தான் (Tehrik-i-Taliban-TTP) எனும் இஸ்லாமிய ஆயுதக்குழு பிந்தைய கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

2015 இல் TLP இன் ஸ்தாபகமும், அதன் அடுத்தகட்ட விரிவாக்கமும் பாக்கிஸ்தான் அரசின் தீர்ப்புடனும் மற்றும் தசீரின் கொலையாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையுடனும் தொடர்புபட்டிருந்தது. குறுங்குழுவாத தாக்குதல்கள் என்பவை – குறிப்பாக TTP உடன் இணைந்த தற்கொலை குண்டுதாரிகளைக் கொண்டவை - சமீபத்திய ஆண்டுகளில், சிறுபான்மையினரை அடிக்கடி இலக்கு வைத்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிப்பதாக உள்ளன.

TTP இன் எழுச்சி என்பது, பல தசாப்தங்களாக பாக்கிஸ்தான் அரசு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்ததன், மற்றொரு புறம், ஆப்கான் முஜாஹிதின் உடனான கூட்டணிக்கு அமெரிக்கா அறிவித்ததன்; மேலும், 2001 இல் இருந்து பாக்கிஸ்தான் பழங்குடிப் பகுதிகளில் தாலிபான்களுக்கு இருந்த ஆதரவை இராணுவ ரீதியில் ஒடுக்குவதில் அது பிரயோகித்த கொடூரமான முறைகள் –கம்பள குண்டுவீச்சு மற்றும் காலனித்துவ-பாணியிலான கூட்டு தண்டனைகள் உட்பட - போன்றவற்றின் விளைபொருளாக இருந்தது.

அக்டோபர் 31 அன்று மாலையில் ஒரு தொலைக்காட்சி உரையில், பிரதமர் இம்ரான் கான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவளித்து, நீதிபதிகளையும் இராணுவத்தையும் எதிர்த்து தங்களது கருத்துக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் சாலை மறியல் செய்தல் போன்றவற்றைக் கண்டித்தார். மேலும், “வேறு வழியின்றி ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்றதொரு நிலைக்கு அரசாங்கத்தை தள்ளுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை அவர் எச்சரித்தார். என்றாலும், இரண்டு நாட்களுக்குப் பின்னர், இஸ்லாமிய வன்செயல் தொடர்ந்தும், லாகூருடன் இஸ்லாமாபாத்தை இணைக்கும் நெடுஞ்சாலை தொடர்ந்து முற்றுகையிடப்பட்டும் வந்த நிலையில், அரசாங்கம் அதன் கடும் வாய்வீச்சுக்களில் இருந்து பின்வாங்கி, TLP இன் பெரும்பாலான கோரிக்கைகளுக்குத் தலைவணங்கியது.

உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கு கூடுதலாக, பீபி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்காக ஒரு நியாயமற்ற பயண தடைக்கு அவரை உட்படுத்திய அரசாங்கம், அதேவேளையில், ஆர்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து கைதுசெய்யப்பட்ட அனைத்து TLP ஆதரவாளர்களையும் உடனடியாக விடுவிக்கவும் ஒப்புக் கொண்டது.

அதற்கு பதிலிறுப்பாக, முக்கியமாக இராணுவத்தை சமாதானப்படுத்தும் விதமாக ஒரு அடையாள மன்னிப்பை TLP வெளியிட்டது.

ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த மாதத்தில், மத அவமதிப்பிற்கு ஒப்பான அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தேர்தல் வேட்பாளர்கள் எடுத்துக்கொண்ட மத உறுதிமொழியை மாற்றுவதற்கான முயற்சிகளாக, முன்னாள் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (நாவஸ்) (Pakistan Muslim League-PML) அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை TLP நடத்தியது. இந்த பிரச்சாரம், TLP ஐ மேன்மைப்படுத்தியதை, பாக்கிஸ்தானின் இராணுவம் மௌனமாக ஆதரித்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் இஸ்லாமாபாத்தை முடக்கியதுடன், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரான ஜாஹித் ஹமீதை இராஜினாமா செய்யக் கோரின, இது “நடுநிலையானது” என்றும் எதிர்ப்புக்களை கலைக்கக்கூடாது என்றும் இராணுவம் அறிவித்த பின்னர், அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

உச்ச நீதிமன்றத்தின் அச்சுறுத்தல் அதன் முடிவை மாற்றி, 50 களின் ஆரம்பத்தில் இருக்கும் மற்றும் ஐந்து பிள்ளைகளுக்கு தாயுமான, இன்னும் உண்மையாக, தூக்குக் கயிற்றின் பிடிக்குள் திரும்பச் செல்லவிருக்கும் பீபியின் பக்கம் திரும்பியது. அவரது மொத்த குடும்பமும் கொலை மிரட்டலுக்கான அல்லது கும்பல் தாக்குதலுக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. மத அவமதிப்பு குற்றச்சாட்டுக்களால் விளைந்த அத்தகைய தாக்குதல்களால், 1990 முதல் குறைந்தபட்சம் 65 பேர் இறந்திருக்கிறார்கள். 2010 இல் இருந்து, பீபியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். மேலும், மனநிலை பாதித்த மற்றும் உடல் ஊனமுற்ற அவர்களது இரு மகள்களும் கூட அவர்களது பாதுகாப்பிற்காக அவரை விட்டு விலகி வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பீபியின் வழக்கறிஞரான சைஃபுல் முலூக் சென்ற சனியன்று நாட்டை விட்டு வெளியேறினார். “தற்போதைய சூழ்நிலையில், பாக்கிஸ்தானில் நான் வசிப்பது சாத்தியமற்றது,” என்றும், “ஆசியா பீபியின் சட்டப் போரில் தொடர்ந்து போராடுவதற்காக நான் உயிருடன் இருந்தாக வேண்டும்” என்றும் AFP க்கு அவர் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானின் மத அவமதிப்பு சட்டங்களின் தோற்றப்பாடு, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து துவங்கியது, அதன் “பிரித்தாளும்” காலனித்துவ மூலோபாயம் எனும் முக்கிய கூறுபாடான வகுப்புவாதத்தை அது ஊக்குவித்தது. இராணுவம், மற்றும் ஒரு நேரத்தில் “இஸ்லாமிய சோசலிச” கட்சியாக இருந்ததாகக் கூறப்பட்டு, இன்று பாக்கிஸ்தானிய தாராளவாதத்தின் தொண்டனாக தன்னை காட்டிக்கொள்ளும் PPP உட்பட, அரசியல் உயரடுக்கின் அனைத்து கன்னைகளின் தலைமையிலான தொடர்ச்சியான அரசாங்கங்களின் கீழ் அவை தொடர்ந்து ஆதரவு பெற்று வந்ததுடன் வியத்தகு அளவில் விரிவடைந்தன.

இந்த மத அவமதிப்புச் சட்டங்கள், அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் முரண்பட்ட விமர்சகர்களை மிரட்டுவதற்கும், நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவிகிதத்தைக் கொண்ட மற்றும் கீழ்சாதி மற்றும் “தீண்டாமைக்கு” எதிரான வரலாற்றுரீதியான வேறுபாடு கொண்ட குழுக்களிடம் இருந்து பெரும்பாலும் இழுக்கப்பட்ட கிறிஸ்துவர் போன்ற நாட்டின் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் உதவியுள்ளன. மத அவமதிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் இதுவரை எவரும் அரசால் தூக்கிலிடப்படவில்லை, என்றாலும், லாகூர் அடிப்படையிலான சமூக நீதி மையத்தின் படி, 1987 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அச்சட்டங்களின் கீழ் 1,472 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

ஒரு வறிய பண்ணைத் தொழிலாளியான பீபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், பஞ்சாபிலுள்ள கிராமப்புறங்களில் 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு தகராறின்போது வெளிப்பட்டது. ஃபால்ஸா பெர்ரி அறுவடை செய்யும் போது, மீதமுள்ள பண்ணைத் தொழிலாளர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்கப்பட்டார். அடுத்த கிணற்றிலிருந்து ஒரு கோப்பை தண்ணீரை பருகிய பின்னர், அவரது அண்டை நிலம் சார்ந்த முஸ்லீம் ஒருவர் அவரிடம் பேசுவதற்கு அணுகினார். ஒரு கிறிஸ்துவராக அவர் களங்கப்படுத்தப்பட்டதாகக் கூறி, அதே கிணற்றிலிருந்து தண்ணீரைப் பருக அந்தப் பெண்ணும் ஏனைய விவசாயிகளும் மறுத்துவிட்டனர். தொடர்ந்து நடந்த விவாதத்தின் விளைவாக, நபிகள் நாயகத்தை அவர் அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கான் அரசாங்கம் பின்னடைவு கண்டதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. கான், மத அவமதிப்புச் சட்டங்களை முன்னிலைப்படுத்துவது, மற்றும் பல மில்லியன் கணக்கில் வலுவான அஹ்மதிய மத சிறுபான்மையினரின் வாக்குரிமை பறிப்புகளுக்கு ஆதரவளிப்பது உட்பட, இஸ்லாமிய வலதுசாரிகளுக்காக நீண்டகாலமாக வழக்காடுகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விசுவாசதுரோகிகளாகக் கருதும் அஹ்மதிய பிரிவினரை உறுப்பினராக சேர்ப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக TLP அச்சுறுத்திய போது, செப்டம்பரில், அவரது பொருளாதார ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர் அட்டிஃப் மியானை நியமித்ததை கான் திரும்பப் பெற்றார். “மத தலைவர்களுடனும், சமுதாயத்தின் அனைத்து பிரிவினருடனும் இணைந்தே அரசாங்கம் முன்னேறிச் செல்ல விரும்புகிறது,” என்ற கானின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் தகவல்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி அறிவித்தார்.

பாக்கிஸ்தானில் இஸ்லாமிய உரிமை குறித்த வளர்ச்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. இது, ஜெனரல் ஜியா உல்-ஹக் (1977-1988) தலைமையிலான ஒரு இராணுவ ஆட்சியை உறுதியாக ஆதரித்தது, அவரது “இஸ்லாமியமயமாக்கல்” பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்திற்கும் இடதுசாரிகளுக்கும் எதிரான ஒரு அரசியல்-தத்துவார்த்த தாக்குதலை முன்னெடுத்ததுடன், ஆப்கானிஸ்தானின் சோவியத்-ஆதரவிலான அரசாங்கத்தின் மீதான போரைத் தொடுக்க முஜாஹிதினை ஒழுங்குபடுத்தும் மற்றும் ஆயுதமயமாக்கும் CIA வின் அச்சாணியாக பாக்கிஸ்தானின் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை உருவாக்கியது. 

ஜியா தலைமையின் கீழ், நபிகள் நாயகத்திற்கு எதிரான மத அவமதிப்பு குற்றச்சாட்டுக்கள் குறித்த தண்டனைகள் என்பது, “மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ” எழுப்பப்பட்டது.

இஸ்லாமிய வலதுசாரிகளை சமாதானப்படுத்தும் மற்றும் வன்முறைமிக்க அதன் அச்சுறுத்தல்களுக்கு தலைவணங்கும் அதேவேளையில் அரசாங்கம், PTI ஆதரவுடனான பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் எஞ்சியிருப்போரது உடந்தையானது, பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தலை பயன்படுத்தியதுடன், அதன் அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும் எட்டுவதற்கும் சீர்குலைவை பயன்படுத்துகிறது.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராகவும், மற்றும் இடதுசாரிகளை கைது செய்யவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை பயன்படுத்துவதை இது உள்ளடக்கியுள்ளது என்பதுடன், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களை மேலும் மிகக் கடுமையாக தணிக்கைக்கு உட்படுத்துகிறது. சென்ற வாரம், Dawn பத்திரிகையின் ஆசிரியர்கள், TLP தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது வன்முறை மிக்க அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் பதிலிறுக்கின்ற போதிலும், “அவர்களது வேலையை செய்து, தினசரி நிகழ்வுகள், உண்மைகள் மற்றும் தகவல்களை தொகுத்து வழங்கிவரும்,” “தொகுப்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; செய்தித்தாள்களின் விநியோகத்திற்கு இடையூறுகள் செய்யப்படுகின்றன; செய்தி சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டன அல்லது அநாமதேய வழிகளில் ஒளிபரப்பு செய்தன” என்றெல்லாம் புலம்பினார்.