ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Factional conflict in Sri Lankan elite underscores dangers facing working class

இலங்கை ஆளும் உயரடுக்கிலான கன்னை மோதல்கள் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை கோடிட்டுக் காட்டுகிறது

By K. Ratnayake 
9 November 2018

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்கிறது. சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆகியவற்றிற்கு இடையிலான மோதல்கள், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுகின்றன.

உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக அடக்கி வைத்திருக்கும் அரசியல் உயரடுக்கின் இரு பிரிவுகளும், அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளவும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை வெகுஜனங்கள் மீது திணிக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக தங்களை பாசாங்காக காட்டிக்கொள்கின்றன.

அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அவர்களின் முயற்சியில், சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தினசரி அடிப்படையில் அமைச்சர்களை நியமித்து வருவதுடன் 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க பேச்சாளரும் துறைமுக அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, நியமனங்கள் நவம்பர் 14 ஆம் திகதி முடிவடையும் என நேற்று தெரிவித்தார்.

சிறிசேன ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்தி வைத்தார், ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக, திகதியை இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தார். புதிய அமைச்சர் நியமனங்கள் மற்றும் இதர பேரம்பேசல்கள் மூலம், பாராளுமன்ற பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ள இராஜபக்ஷவுக்கு நேரத்தை வழங்குவதே இந்த ஒத்திவைப்பின் நோக்கமாகும்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் நவம்பர் 14 நிழக்ச்சி நிரலைப் பற்றி கலந்துரையாட சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்தனர். இராஜபக்ஷவுக்கு எதிராக 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்குவதாக ஜயசூரிய தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பு பெரும்பான்மையைக் கொண்டிருப்பது யார் என்பதை தீர்மானிக்கும்.

பாராளுமன்றத்தின் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவின் உரை முதலில் வரவேண்டும், அதன்பின்னர் அமைச்சகங்களுக்கு தற்காலிக வரவு-செலவு ஒதுக்கீடுகளை வழங்கவும், தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவும் ஒரு "கணக்கு வாக்கெடுப்பு" நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்ற ஆதரவை பெருமளவில் பெற முயற்சிக்கும் சிறிசேன, ஆர். சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அதன் ஆதரவு பாராளுமன்ற பெரும்பான்மைக்கு தீர்க்கமானதாகும். இதுவரை, இராஜபக்ஷ ஒரே ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவை வென்றிருக்கிறார். இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சிறிசேன இராஜபக்ஷவை நியமித்ததை எதிர்த்ததோடு பெரும்பான்மை யாருக்கு என்பதை தீர்மானிக்க முன்கூட்டியே பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர். முதலாளித்துவ தேசியவாத அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையும் சலுகைகளையும் பாதுகாக்க, வாஷிங்டன் மற்றும் புது டெல்லியிலிருந்து வரும் அரசியல் சமிக்ஞைகளையே பொதுவாக பிரதிபலித்து வந்துள்ளது.

சிறிசேன, ஜனாதிபதியின் எதேச்சதிகார மற்றும் ஒடுக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்தவே இந்த நெருக்கடியை பயன்படுத்துகிறார். அரசியலமைப்பின் கீழ் அவர் வைத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சுப் பதவிக்கு மேலாக, சிறிசேன பொலிஸ் மற்றும் ஊடக அமைச்சை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை தன்வசம் வைத்துள்ளார்.

இராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் ஆலோசனை தெரிவிக்கும் பலர், ஜனாதிபதி ஒரு புதிய பிரதமரை நியமனம் செய்தது அரசியலமைப்பிற்கு உட்பட்டது என கூறிக்கொள்வதோடு, தேவைப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்க அவருக்கு அதிகாரம் இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கூற்றுகள், 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முற்றிலும் மீறுவதாகும். சிறிசேன தானே அறிமுகப்படுத்திய 19 ஆம் திருத்தமானது, அவருக்கு உள்ள சில அதிகாரங்களை குறைத்துள்ளது.

இத்தகைய சுய-சேவை விளக்கங்கள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் கூடுதலான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. இது வெறுமனே சிறிசேன-இராஜபக்ஷ பிரிவை பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதற்காகவும் பயன்படும்.

விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. பாராளுமன்றத்தை உடனடியாக மீண்டும் கூட்ட அழைப்பு விடுத்து திங்களன்று கொழும்பில் மற்றொரு பேரணியை நடத்தவுள்ளது.

நேற்று விக்கிரமசிங்க தனது ஆதரவாளர்களிடம் சுருக்கமாக பேசினார். தாம் ஜனநாயகம் மற்றும் தேசத்தின் சுதந்திரத்தை பாதுகாக்க போராடுவதாக அறிவித்தார். இது ஒரு பொய் வதந்தி ஆகும். விக்கிரமசிங்க இலங்கையின் பழமையான முதலாளித்துவக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். அது எப்போதும் பெருவணிகத்தின் நலன்களுக்காக செயற்பட்டு, மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மிதித்து வந்துள்ளது.

ஐ.தே.க. சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுவதன், குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவில் தங்கியிருக்கிறது. சபாநாயகர் ஜயசூரிய திங்கட்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், பெரும் வல்லரசுகளின் ஆதரவுக்கு இடைவிடாமல் வேண்டுகோள் விடுக்கும் அதன் நிலைப்பாடு மீண்டும் தலை நீட்டியது.

அரசியலமைப்பின் படி, பாராளுமன்ற சபாநாயகர் பக்க சார்பற்றவராக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், ஜயசூரிய ஐ.தே.க. இன் மூத்த உறுப்பினர் ஆவார். அவரது கடிதத்தின் சில பகுதிகள் புதன்கிழமை ராய்ட்டர் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டன.

"தொடர்ச்சியான முழு சம்பவங்களும் [சிறிசேனவின் நடவடிக்கைகள்] பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தாமல் செய்த ஒரு சதி என்று மட்டுமே விவரிக்கப்பட முடியும்," என ஜயசூரிய கடிதத்தில் குறிப்பிட்டார். "முழு விவகாரமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என தொடர்ந்த அது, சிறிசேன "வெளிப்படைத்தன்மையையும், ஒழுக்கத்தையும், ஜனநாயகம், நல்லாட்சி ஆகியவற்றின் விதிமுறைகளுக்கும் முரணாகவும், தான் மதிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் கூறி சத்தியப்பிரமாணம் செய்த அரசியலமைப்பிற்கு எதிராகவும்,” செயற்படுகின்றார், என குற்றம் சாட்டியது.

பெரும் வல்லரசுகளை நேரடியாக தலையீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதற்கு சமமான ஒன்றாக அந்த கடிதம் இருந்தது. ஐ.தே.க. வெளிநாட்டு சக்திகளின் பக்கம் திரும்புவதாக சிறிசேனவும் இராஜபக்ஷவும் வெளிப்படையாகக் குற்றம் கூறுகின்ற அதேவேளை, அவர்களின் அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பெரிய சக்திகளின் கட்டளைகளுக்கும், அவற்றின் நிதி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக அடிபணிந்திருக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா, இராஜபக்ஷவின் நியமனத்திற்கு விரோதமானதாக இருந்தது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில், வாஷிங்டன் இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டு சிறிசேனவை நியமித்தது.

அமெரிக்கா, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் கொடூரமான யுத்தத்தை ஆதரித்ததோடு, அவரது ஜனநாயக விரோத ஆட்சியை கண்டும் காணாதது போல் இருந்த அதேவேளை, அவர் பெய்ஜிங்குடன் ஏறப்டுத்திக்கொண்ட நெருக்கமான உறவுகளை கடுமையாக எதிர்த்தது. அந்த உறவுகளை அமெரிக்க தனது மூலோபாய நலன்களுக்கு ஒரு தடையாகக் கருதியது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ், நவம்பர் 6 அன்று ஜயசூரியவை சந்தித்தார். ஒரு ட்விட்டர் செய்தியில், "இந்த அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்டுவதற்கு பாராளுமன்றத்தை கூட்டுவதன் முக்கியத்துவத்தை பற்றி" கலந்துரையாடியதாக அவர் கூறினார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை செவ்வாயன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.

வாஷிங்டன் கடந்த வாரம் அதன் தலையீட்டை முடுக்கிவிட்டுள்ளது. புதனன்று ட்வீட் ஒன்றில், அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹீதர் நூர்ட் அறிவித்ததாவது: "அரசியல் நெருக்கடியை தீர்க்க உடனடியாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்." எந்தவொரு தாமதமும் "இலங்கையில் ஸ்திரமின்மையை தீவிரமாக்கும் மற்றும் அதன் சர்வதேச புகழை கீழறுக்கும்" என்று அவர் எச்சரித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம், இலங்கையில் அல்லது அமெரிக்கா உட்பட வேறு எங்கும் ஜனநாயகத்தைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அது சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இந்த வார ஆரம்பத்தில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான குழு ஒன்று, ஒரு நிலைப்பாட்டை எடுப்பது பற்றி சம்பந்தன் உட்பட தமிழ் கூட்டமைப்பு தலைமையை சந்தித்தது. இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் சிறிசேனவின் அரசியலமைப்புச் சட்டங்களை மீறிய நடவடிக்கைகளை தோற்கடிக்க உடன்பாட்டுக்கு வந்தன.

நேற்று செய்தியாளர் மாநாட்டில், திசாநாயக்க, சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சபாநாயகர் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்தார். அவரது கடிதம் "மிகவும் வலுவானது" என்று திசாநாயக்க கூறியுள்ளார். ஜே.வி.பி. "அரசியலமைப்பு மீறல்களுக்கு" எதிரான பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், ஐ.தே.க. இன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜே.வி.பி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவது ஒரு கன்னையுடன் தொடர்ச்சியாக சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, இப்பொழுது சிதைந்து போய்க்கொண்டிருக்கும் பாராளுமன்ற ஜனநாயக முகமூடி சம்பந்தமாக மாயையைகளை விதைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றது. அது தனது நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்காக கொழும்பில் மற்றொரு எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களின் பின்னணியில், ஆளும் தட்டின் அனைத்து கன்னைகளும் வலதிற்கு நகர்ந்துள்ளதுடன், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக பெரும் தாக்குதலை நடத்த தயாராகின்றன.

அரசியல் நெருக்கடியை பற்றிய அதன் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி எழுதியதாவது: "அரசியல் நிலைமை சம்பந்தமாக ஒரு மதிப்பீட்டை செய்துகொண்டு, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் சொந்த சுயாதீனமான வழியை வகுத்துக்கொள்ள வேண்டும் என தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.”

"தொழிலாளர்கள் வேலைத் தளங்களிலும் அயல் பிரதேசங்களிலும் பெருந்தோட்டங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்நடவடிக்கை எடுத்து, தங்களது ஜனநாயக உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதன் பேரில், கிராமப்புற ஏழைகளதும் இளைஞர்களதும் ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்திற்கான போராட்டமானது அரச அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையோடும், சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடனும் பிணைந்துள்ளது."

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியுடன் அணிதிரண்டு இந்த முன்னோக்கிற்காக போராட முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.