ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fight for a socialist solution to the political crisis in Sri Lanka

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராடு

By the Socialist Equality Party (Sri Lanka) 
31 October 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்டோபர் 26 அன்று ஒரு அரசியல் சதியை மேற்கொண்டதை அடுத்து, இலங்கை ஆளும் தட்டின் போட்டி கன்னைகளுக்கு இடையே அரச அதிகாரத்தைப் பற்றிக்கொள்வதற்காக கடுமையான அரசியல் உள்மோதல்கள் வெடித்துள்ளன.

ஒரு கன்னை, வெள்ளிக்கிழமை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) மையமாகக் கொண்டுள்ளது. இன்னொன்று, ஜனாதிபதியும், சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீ.ல.சு.க.) சூழ அமைந்துள்ளது.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.), இந்த முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தையும் நிராகரித்து, தனது சொந்த நலன்களுக்காகப் போராட சுயாதீனமாக அணிதிரளுமாறு தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது. இலங்கை முதலாளித்துவத்தின் இந்த கைக்கூலி பிரதிநிதிகள், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பார்கள் என்று எவரும் எவ்வித மாயையும் கொண்டிருக்கக் கூடாது. அதிகாரத்திற்கு வரும் எந்த கட்சியோ அல்லது கட்சிகளோ சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை தீவிரமாக்குவதோடு எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக நசுக்கும்.

தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராட தனது பதாகையின் கீழ் அணிதிரளுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாக விக்கிரமசிங்கவை பதவி நீக்கியமை, இலங்கைக்கு 1948ல் "சுதந்திரம்" எனப்படுவது வழங்கப்பட்டது முதலே, நீண்ட காலமாக பாராளுமன்ற ஆட்சி சீரழிந்து வந்ததன் உச்சகட்டமாகும். இந்த அரசியல் சதியின் மூலம், மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கூர்மையடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச ரீதியாக எழுச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களும் இலங்கையில் கூர்மையாக வெளிப்பட்டுள்ளன.

ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது தொலைக்காட்சி உரையில், பதவி நீக்கப்பட்ட பிரதமரால் அழிக்கப்பட்டு வந்த "நல்லாட்சியின் மேன்மையான எதிர்பார்ப்புகளை பாதுகாக்க" அவசியமாகியது என்று அறிவித்த சிறிசேன, தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றார். திங்களன்று ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் மலர்ந்தது என்று விக்கிரமசிங்க பதிலளித்தார். "முளைவிடும் சர்வாதிகாரம்" தலைதூக்க ஐ.தே.க. அனுமதிக்காது என்றும் "பாராளுமன்ற ஜனநாயகத்தை" பாதுகாக்க உச்சபட்சம் போராடுவதாக அவர் எச்சரித்தார்.

எவ்வளவு பொய், எவ்வளவு பாசாங்குத்தனம்! 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது,​​சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியை கண்டனம் செய்ததோடு "நல்ல ஆட்சியையும்" சிறந்த வாழ்க்கை நிலைமைகளையும் உருவாக்குவதாக வாக்குறுதியளித்தனர். இந்த கோஷங்கள் அனைத்தும், சீனாவிற்கு நெருக்கமானவராக கருதப்பட்ட இராஜபக்ஷவை அகற்றுவதற்கு அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற சதியை மூடி மறைப்பவை மட்டுமே.

ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவும் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை. பாராளுமன்றம் எப்பொழுதும் புகைபடர்ந்த திரையாகவே இருந்து வருகிறது. அதற்குப் பின்னால் முதலாளித்துவமானது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் ஈவிரக்கமின்றி தனது வர்க்க நலன்களை மேம்படுத்திக்கொள்கிறது. போட்டிக் கட்சிகள் “ஜனநாயகத்துக்கான” தமது கடப்பாட்டை பிரகடனம் செய்தாலும் கூட, இப்போது இந்த கட்டமைப்பு பொறிந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.

2008 உலக நிதியச் சரிவுகளில் இருந்து தலைதூக்கிய ஆழமான நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம் சிக்கியுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கையை அழித்த, தனது தீவிரமாக்கப்பட்ட இனவாத யுத்தத்துக்கு பாரியளவில் செலவிடுவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் பிரமாண்டமான கடன்களை வாங்கியது. அதே சமயம் அது, சர்வதேச நாணய நிதியம் கோரிய, பாரிய சமூக சேவை வெட்டுக்களையும் விலை மானிய வெட்டுக்களையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், அந்தச் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது.

2015ல் இராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கிய பின்னர், சிறிசேன ஜனாதிபதியாகவும் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த "தேசிய ஐக்கிய" அரசாங்கம், இலங்கை வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டனுடன் மறுஒழுங்கு செய்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்தியது. உழைக்கும் மக்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த போது,​​ அவர்களை அடக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்த அந்த அரசாங்கம் தயங்கவில்லை.

பெருகிவந்த வெகுஜன எதிர்ப்பு மற்றும் ஆழமடைந்து வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சந்தித்த பெரும் இழப்புகளுக்கு சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட நிலையில், இந்த "ஐக்கிய" அரசாங்கம் பிளவுபடத் தொடங்கியது. அதே நேரம், அதிகாரத்திற்கான புதிய முயற்சியில் இராஜபக்ஷவால் கிளறிவிடப்பட்ட திட்டமிட்ட சிங்கள பேரினவாத பிரச்சாரத்திற்கு அவர்கள் இருவரும் தாங்களாகவே இணங்கிச் சென்றனர்.

வாழ்க்கை நிலைமைகளின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பு, பல்வேறு பிரிவு தொழிலாளர்கள் அதேபோல் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் பரவலாக உள்ளது. அவர்கள், இன வேறுபாடுகளைக் கடந்து இணையத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், சிறிசேனவின் அரசியல் சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக 5,000 இளம் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரி போராடிவரும் இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் கூடினர். இந்த ஆர்ப்பாட்டம், முதல் தடவையாக சமூக ஊடகங்கள் மூலம் இளம் தொழிலாளர்கள் அணிதிரண்டுள்ளனர் என்று எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் தலையங்கங்களுடன், ஆளும் உயரடுக்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தங்களுக்கிடையேயான கன்னை வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், முழு ஆளும் வர்க்கமும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கண்டு பீதியடைந்துள்ளது. "ஜனநாயகம்" பற்றி பாசாங்கு காட்டிக்கொள்கின்ற போதிலும், தற்போதைய கசப்பான அதிகாரப் போராட்டத்தில் எந்தக் கட்சி வென்றாலும், அது உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு 30 ஆண்டுகால கொடூர இனவாத யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தும்.

தங்கள் ஆணைகளை அமுல்படுத்துவதற்கு ஒரு வலுவான நபரைக் கொண்டுவர கூட்டுத்தாபன வட்டாரங்களில் ஏற்கனவே ஒரு உந்துதல் உள்ளது. இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் சமீபத்திய கூட்டத்தில், ஒரு உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரியான அசோக் பத்திரன, "எங்களுக்கு ஒரு வலுவான தலைமை வேண்டும்; கொஞ்சம் சர்வாதிகாரியானவர் வேண்டும், இன்று ஆளும் கட்சிகள் இரண்டு உள்ளன, ஆனால் எவரும் முடிவு எடுப்பதில்லை," என அங்கிருந்த ஏனையவர்களின் உடன்பாட்டுடன் பிரகடனம் செய்தார்.

1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்தே, ஆட்சியில் இருந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கங்கள், உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை மற்றும் அவசர சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய முதலாளித்துவ வர்க்கத்தின் இயலாமையை தெளிவாக நிரூபித்தன. 1940கள் மற்றும் 1950களில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பில் இருந்து தலை தப்புவதற்காக வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள் வெட்டித் தள்ளப்பட்டுள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும், இந்த போராட்டங்களை வழிநடத்திய கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் -எல்லாவற்றிற்கும் மேலாக லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.)- இப்பொழுது அரசியல் ஸ்தாபனத்தின் உறுதியான அங்கமாகி உள்ளன.

பல தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்கு தமிழர் விரோத பேரினவாதத்தை பயன்படுத்துவதை கொழும்பு அரசியல்வாதிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த கொடூரமான வகுப்புவாத அரசியலானது ஒட்டுமொத்தமாக இறுதியில் உழைக்கும் மக்களுக்கும் பேரழிவுகரமான விளைவுகளுடன் 30 ஆண்டுகால யுத்தத்திற்கு வழிவகுத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் தமிழ் இனவாதம் உட்பட, அனைத்து வடிவிலான தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் எதிர்த்து, தமது பொது வர்க்க நலன்களை பாதுகாக்க ஐக்கியப்படாமல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் முன்நோக்கி அடி எடுத்து வைக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது.

தற்போதைய நெருக்கடியின் மத்தியில் ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. ஆகிய பிரதான முதலாளித்துவக் கட்சிகள் இரண்டின் மீதான பரந்த எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அரசியல் வாய்ச்சவடால்கள் மற்றும் பாசாங்குகளுக்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி விசேட எச்சரிக்கை விடுக்கின்றது. எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்ற ஜே.வி.பி. இன் பிரகடனம் ஒரு பொய்யாகும். கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி. இரு கட்சிகளுக்கிடையில் வெட்கமின்றி சூழ்ச்சித் தந்திரங்களை கையாண்டுள்ளது. அது 2005ல் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. பின்னர் 2015ல் "தேசிய ஐக்கிய" அரசாங்கத்தை ஆதரித்தது. இன்றும் அது, சோசலிசம் ஒருபுறமிருக்க, ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியினருடன் கொடுக்கல் வாங்கல்களுக்குச் செல்லவே "மக்கள் சக்திக்கு" அழைப்பு விடுக்கின்றதே அன்றி, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராட அல்ல.

தற்போதைய அரசியல் நெருக்கடியும், உத்தியோகபூர்வ சுதந்திரத்தின் பாசாங்கு தனத்தை அம்பலப்படுத்துகிறது. ஜே.வி.பி. உட்பட இலங்கையில் உள்ள அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், பேரழிவுகரமான போருக்கு வழிவகுக்கும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உக்கிரமடைந்து வரும் போட்டியியின் சிப்பாய்கள் ஆகும். இராஜபக்ஷ அதிகாரத்திற்கு திரும்பியதை சீன ஜனாதிபதி வரவேற்றுள்ளார். அதேவேளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விக்கிரமசிங்க விடுக்கும் அழைப்பை ஆதரிக்கின்றன. பிரதமர் பதவிக்கான உரிமை கோரலை அது பலப்படுத்தும் என்று அவர் கணக்கிடுகின்றார்.

அமெரிக்கா, இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஒரு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ போர்க்களமாக மாற்றி, போருக்கான தயாரிப்பில் சீனாவுக்கு எதிராக அணிதிரளுமாறு நாடுகளை வற்புறுத்துகிறது. சீனா தன் பக்கத்தில், எந்த முற்போக்கான தீர்வையும் கொண்டிருக்காததோடு, தனது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவை எதிர்த் நிற்க முயலும் அதே சமயம், அதன் சொந்த இராணுவத் தளவாடங்களை கட்டியெழுப்புகிறது. இலங்கையிலும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், முடிவில் மனிதகுலத்திற்கு ஒரு பேரழிவை மட்டுமே தரக்க்கூடிய, அணு ஆயுதம் கொண்ட இரு சக்திகளுக்கு இடையேயான ஒரு போரின் முன்னரங்கில் தங்களது சொந்த மக்களையே முன்நிறுத்துகின்றன.

இலங்கையில் கடந்த ஏழு தசாப்த கால முதலாளித்துவ ஆட்சி, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முற்றிலும் நிரூபித்துள்ளது. முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கமானது ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமையையும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளையும் ஸ்தாபிப்பது உட்பட அடிப்படை ஜனநாயக பிரச்சினைகளைத் தீர்க்க இலாயக்கற்றது, என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, உலக அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பகுதியாக, ஜனநாயகப் புரட்சியின் பணிகளை முன்னெடுக்கவும் சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தவும், கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னுடன் அணிதிரட்டிக்கொள்ள முடியும்.

இந்த அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரே கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். அரசியல் நிலைமை சம்பந்தமாக ஒரு மதிப்பீட்டை செய்துகொண்டு, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் சொந்த சுயாதீனமான வழியை வகுத்துக்கொள்ள வேண்டும் என தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.

தொழிலாளர்கள் வேலைத் தளங்களிலும் அயல் பிரதேசங்களிலும் பெருந்தோட்டங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்நடவடிக்கை எடுத்து, தங்களது ஜனநாயக உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதன் பேரில், கிராமப்புற ஏழைகளதும் இளைஞர்களதும் ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்திற்கான போராட்டமானது அரச அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையோடும், சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடனும் பிணைந்துள்ளது.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும், எல்லவாற்றுக்கும் மேலாக உலக யுத்த ஆபத்தை, இலங்கைக்குள் தீர்க்க முடியாது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துக்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக அழைப்பு விடுக்கின்றது. இந்த முன்னோக்குக்காக போராடுவதற்குத் தேவையான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.