ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan crisis: UNP rally demands reconvening of parliament

இலங்கை நெருக்கடி: ஐ.தே.க. பேரணி பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு கோரியது

By our correspondents
1 November 2018

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்தை மீண்டும் உடனடியாக கூட்டுமாறு நெருக்குவதற்காக, செவ்வாயன்று இலங்கை தலைநகர் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அக்டோபர் 26 அன்று, ஒரு அரசியல் சதியின் மூலம் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேன அகற்றிய பின்னர், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற ஐ.தே.க. முன்னெடுக்கும் பிரச்சாரத்தை தீவிரமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

அவரது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்குப் பின்னர், நவம்பர் 16ம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்த சிறிசேன, பிரதமர் பதவியில் தொடர்வதற்கு தனக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற விக்கிரமசிங்கவின் அழைப்பை நிராகரித்தார்.

மத்திய கொழும்பில் உள்ள கொள்ளுபிட்டியில் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். விக்கிரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியாறு மறுத்து வருகிறார். ஐ.தே.க. ஒரு கணிசமான கூட்டத்தை அணிதிரட்டியது -பொலிஸ் அறிக்கையின்படி சுமார் 25,000 பேர் வரை கூடினர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் படையினர் நிலைகொண்டிருந்தனர், ஆனால் கூட்டத்தை கலைக்க அவர்கள் முயற்சிக்கவில்லை.

இந்த எதிர்ப்பை "ஜனநாயகத்தை பாதுகாக்கும்" நடவடிக்கையாக ஐ.தே.க. சித்தரித்திருந்தது. தன்னை ஒரு வீரராக சித்தரித்துக் காட்டிய விக்கிரமசிங்க, "ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பறித்துக்கொண்டார். ஜனநாயகத்திற்காக நாங்கள் போராடுவோம். நாங்கள் அலரி மாளிகையை ஜனநாயகத்தின் சின்னமாக ஆக்கியுள்ளோம்" என கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த "சதியானது" "சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகிய நமது தேசத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதல் ஆகும் -எனவே ஒவ்வொரு இலங்கையருக்கும் ஒரு அச்சுறுத்தல் ஆகும்," என்று விக்கிரமசிங்க பிரகடனம் செய்தார்.

விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவர் ஜனநாயகத்தின் பாதுகாப்பாளராக காட்டிக்கொள்வது ஒரு மோசடி ஆகும். சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கையை கண்டனம் செய்யும் அதேவேளை, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பேர் போன வரலாற்றைக் கொண்டிருக்கும் ஐ.தே.க., அரசாங்க அதிகாரத்தை பற்றிக்கொள்ளும் தனது பிரச்சாரத்திற்கு மக்களை ஏமாற்றி அணிதிரட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

2015ல் அவர்களின் "தேசிய ஐக்கிய" அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்தே, விக்கிரமசிங்கவும் சிறிசேனவும் இணைந்து, வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான மோசமான தாக்குதலை வழிநடத்தி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியதுடன், அந்த தாக்குதல்களை எதிர்த்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

பேரணியில் உரையாற்றிய விக்கிரமசிங்க, இராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்காக 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில், சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர் எப்படி ஆதரவைத் திரட்டினார் என்று தெரிவித்தார். எவ்வாறெனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன், சிறிசேனவை தமது வேட்பாளராக கொண்டுவருவதற்கு எவ்வாறு வாஷிங்டனுடன் சதி செய்தார் என்பதை விக்கிரமசிங்க விளக்கவில்லை. அவ்வாறு செய்வது, ஜனநாயகம் பற்றிய அவரது வாய்ச்சவடால்களை அம்பலப்படுத்தும்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு ஆதரவளித்திருந்த விக்கிரமசிங்க, 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய நடவடிக்கைகளுக்கு உதவினார். புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா, பெய்ஜிங்குடன் அவர் வளர்த்து வந்த உறவை எதிர்த்தது.

போலி-இடது நவ சம சமாஜக் கட்சியின் (ந.ச.ச.க.) தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, செவ்வாயன்று நடந்த வலதுசாரி பேரணியில் முதல் பேச்சாளர்களில் ஒருவராவார். கருணாரட்ன வெட்கமில்லாமல் அறிவித்ததாவது: "நான் இங்கு வந்ததற்கு காரணம் ஜனநாயகம் இங்கே தான் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றத்தை நிறுத்துவதற்கு, அதிகாரத்திலிருந்து அவரை வெளியேற்றிய திருடர்களை விரட்டி அவரை [பிரதமர்] பதவியில் அமர்த்த வேண்டும்."

ஐ.தே.க. மற்றும் விக்கிரமசிங்கவினதும் நிலையான கூட்டாளியான ந.ச.ச.க. தலைவர், விக்கிரமசிங்கவை முற்போக்கானவராகவும் ஜனநாயகவாதியாகவும் சித்தரித்து வருகின்றார். 2015ல், சிறிசேனவிற்கு பிரச்சாரம் செய்வதில் விக்கிரமசிங்கவுடன் கருணாரட்னவும் முன்னணியில் இருந்தார். அத்துடன் அவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு விரோதமாக அதற்கு வக்காலத்து வாங்கி வந்தார்.

ஜனநாயகத்தின் பாதுகாப்பாளராக இருப்பதற்கு மாறாக, விக்கிரமசிங்க பெருவணிக மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாப்பவராவார். அதிகாரத்தில் இருந்தபோது, 1980 பொது வேலைநிறுத்தத்தில் 100,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தமை, 1983ல் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான நீடித்த இனவாத யுத்தத்தை ஆரம்பித்தமை, குறைந்த பட்சம் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்ட 1989-1990 கிராமப்புற இளைஞர்கள் மீதான கொடூரமான அடக்குமுறை உட்பட, உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு அவருடைய கட்சி பேர் போனதாகும்.

உடனடியாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுக் ஐ.தே.க. இன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று ஜனாதிபதியை சந்தித்தார். மீண்டும் ஆள்வதற்கு, 126 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதாக அவர் அறிவித்தார். இது 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் ஒரு தெளிவான பெரும்பான்மை ஆகும். ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் லீக்குக்கும் எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினதும் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.

சிறிசேன இந்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து, "உகந்த" நிலைமை வரும்போது பாராளுமன்றத்தை கூட்டுவதாக கூறிவிட்டார். பிரதமராக இராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசப்படுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் இலஞ்சம் கொடுப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்வதற்கே அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.

ஜனாதிபதி, நவம்பர் 5 அன்று கொழும்பில் ஒரு எதிர்-ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான திட்டங்களை கலந்துரையாடுவதற்காக தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) அமைப்பாளர்களை சந்தித்தார். அவரது பிரச்சாரத்தின் பேரினவாத தொனிக்கு இணங்க, தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சமஷ்டி அரசியலமைப்பு அனுமதிக்கப்படமாட்டாது என்று சிறிசேன அறிவித்தார்.

இராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும், இதற்கு முன்னர், தீவின் வடக்கு மற்றும் கிழக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான மாகாண அரசாங்கங்களுக்கு கையளிக்கக் கூடிய ஒரு சமஷ்டி அரசியலமைப்பை திட்டமிட்டு வருவதாக சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

அரசியல் நெருக்கடி தொடர்கையில், கொழும்பு ஒரு இராஜதந்திர போர்க்களமாகி வருகிறது. அமெரிக்காவும் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் நட்பு நாடுகளும், ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டாரெஸ் உடன் சேர்ந்து, விக்கிரமசிங்கவின் பக்கம் சார்ந்து, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென அவரது கோரிக்கைக்கு ஆதரவளிக்கின்றன.

நேற்று ஐ.நா.வின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துங்-லாய் மார்கு, பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டாரீஸ், கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் மற்றும் ஜேர்மன் தூதர் ஜோர்ன் ரூட ஆகியோர் பாராளுமன்ற சபாநாயகர் ஜயசூரியவை சந்தித்து "இலங்கையில் மேலோங்கி வரும் அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை கூட்டுமாறு," வேண்டுகோள் விடுத்தனர்.

டெய்லி மிரர் பத்திரிகையின் படி, சபாநாயகரின் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இந்த இராஜதந்திரிகள் திடீரென ஏற்பட்ட அரசியல் திருப்பங்கள் பற்றி தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று சுட்டிக் காட்டியதோடு, நாட்டில் "பாதகமான விளைவுகளை" எற்படும் என எச்சரிக்கை செய்துள்ளதாக கூறப்படுகிறது -வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எச்சரிக்கை ஆகும். "தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க அவசரப்படக்கூடாது" என்று தூதர்களுக்கு சபாநாயகர் கூறியதாக தெரியவருகின்றது.

சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லூ காங், சீனா "இலங்கையில் சூழ்நிலையில் மாற்றங்களை மிக நெருக்கமாக அவதானித்து வருகிறது" என்று நிருபர்களிடம் கூறினார். அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் சக்திகளுக்கு முரணாக, "இலங்கையிலான மாற்றங்கள் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். சீனா தலையிடா கொள்கையை பின்பற்றுகிறது" என லூ கூறினார். எனினும், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், இராஜபக்ஷவை பிரதமராக வரவேற்றதன் மூலம் சீனா எந்தப் பக்கம் உள்ளது என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புவிசார்-அரசியல் போட்டிகள், அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கைப்பற்றுவதற்காக போட்டியிடும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகளின் போராட்டம் உக்கிரமடையும் நிலையில், அது கொழும்பில் உள்ள அரசியல் நெருக்கடியை மட்டுமே குவிக்கும். எவ்வாறாயினும், இரு தரப்பினரும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் பெருகிவரும் இயக்கத்தை கண்டு அஞ்சுகின்றன, மற்றும் அதிகாரத்திற்கு வந்தால், இந்த வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ்-அரச நடவடிக்கைகளை பயன்படுத்த தயங்கப் போவதில்லை.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராடு

[31 அக்டோபர் 2018]