ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Plantation unions move to shut down wage struggle amid Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தோட்டத் தொழிற்சங்கங்கள் சம்பளப் போராட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன

By W. A. Sunil 
7 November 2018

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், நாட்டின் ஆளும் உயரடுக்கிற்குள் மேலோங்கி இருக்கும் கசப்பான மோதல்களில் வெவ்வேறு அரசியல் கன்னைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதுடன் இப்பொழுது தங்களது தினசரி ஊதியத்தை 100 சதவிகிதம் அதிகரிக்கக்கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றன.

அக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்த பதவியில் இருத்தினார். பாராளுமன்ற உறுப்பினரான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான், உடனடியாக இராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததோடு அவர் மலையக புதிய கிராமங்கள் மற்றும் உள்கட்டுமான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பாட்டில் உள்ள லங்கா ஜாதிகா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (LJEWU) முன்னாள் செயலாளர் வடிவேல் சுரேஷ், கட்சியில் இருந்து விலகி, இராஜபக்ஷவுடன் சேர்ந்தார். அவருக்கு வெகுமதியாக ஒரு முக்கிய பதவி கொடுக்கப்பட்டு, பெருந்தோட்டத் தொழிற்துறை இராஜாங்க அமைச்சராக அமர்த்தப்பட்டுள்ளார்.

தங்களது நாசகார அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் வளரும் கோபத்தை திசை திருப்பும் முயற்சியில், தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக (2,994 டாலர்) உயர்த்துவதாக இராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார் என தொண்டமானும் வடிவேலும் கூறிக்கொண்டனர்.

மற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களான பி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம், மனோ கனேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் பி. ராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணியும் பதவி நீக்கப்பட்ட பிரதமர் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன.

விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மூன்று தொழிற்சங்க அதிகாரிகளும், அதிகாரத்தை மீட்பதற்கான விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தாங்கள் இழந்த சலுகைகளை மீண்டும் பெற முண்டியடிக்கின்றனர்.

இந்த சூழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, ஊதிய உயர்வு கோரி செப்டம்பர் மாதத்தில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்த தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

கடந்த வாரம் மத்திய மலையகப் பகுதியில் நோர்வுட், ஐரவி, நல்லத்தண்ணி மற்றும் ஹப்புகஸ்தென்னே தோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டங்களின் போது தொழிலாளர்கள் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷை கண்டனம் செய்தனர். சம்பளப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதற்காக தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொழும்பிற்கு தெற்கில் களுத்துறை மாவட்ட நகரான மத்துகமவிலும் சுமார் 100 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு இளைஞர்களதும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர்களதும் பலம்வாய்ந்த ஆதரவு கிடைத்து வருகின்றது.

உதாரணமாக, அக்டோபர் 26 அன்று, கேகாலை மாவட்டத்தில் தெரணிகல மற்றும் தெஹியோவிட தோட்டங்களில் இருந்து சுமார் 1,000 பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலையில் நூற்றுக்கணக்கான பயிற்சி ஆசிரியர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பயிற்சி கல்லூரி ஆசிரியர்களும் கைத்தாடி மருத்துவ கல்லூரி மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதே தினம் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு கோப்பாய் பயிற்சி கல்லூரி ஆசிரியர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, "எங்களுடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்களது படிப்பை தொடர, தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய்க்கு செலுத்தப்பட வேண்டும், எனவே தான் நாங்கள் அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

சிறிசேனவின் அரசியல் சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்டோபர் 24, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்புத் தெரிவித்தது, மத்திய கொழும்பில் காலி முகத் திடலில், கொழும்பிலும் அதன் புறநகர் பகுதியிலும் இருந்து வந்திருந்த தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்களுமாக சுமார் 5,000 இளம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதல் தடவையாக, இலங்கை ஆளும் உயரடுக்கிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

உண்மையில், சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் நெருக்கடியைத் தூண்டிய பிரதான காரணி, சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சீரழிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பே ஆகும். தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய போராட்டம் இந்த வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அதனாலேயே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நிறுத்த முற்படுகின்றன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்ததால்த்தான் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டோம் என தொண்டமானும் வடிவேலும் கூறிக்கொள்ளும் அதேவேளை, பிரச்சினையை திறைசேரி அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும் என இராஜபக்ஷவிடம் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது.

ஆனால், நவம்பர் 5 அன்று திறைசேரி அதிகாரிகளோடு நடந்த பேச்சுவராத்தையில், தோட்ட உரிமையாளர் சங்கமானது மீண்டும் தொழிலாளர்களின் 100 சதவிகித ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. தோட்ட உரிமையாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித அல்லது 100 ரூபாய் அதிகரிப்பை மட்டுமே கொடுக்கும் என்று மீண்டும் கூறியதுடன், உற்பத்தித் திறனுடன் பிணைக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் மூலம் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 400 ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று மேலும் அறிவித்துள்ளது.

தோட்டத் உரிமையாளர் சங்கம், வருடாந்த தீபாவளி பண்டிகைக்காக 10,000 ரூபா போனஸ் கொடுப்பதையும் கூட நிராகரித்ததுடன், பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதால் நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளம் கொடுப்பது என்பது "முற்றிலும் யதார்த்தமற்றது" என்று வலியுறுத்தியுள்ளது.

தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கமும், 1000 ரூபா தினசரி ஊதியம் கொடுப்பது தொழில்துறைக்கு "பேரழிவு" தரும் என்றும் எந்தவொரு ஊதிய உயர்வும் "உற்பத்தித்திறன் மற்றும் வருகையுடன் இணைக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிக வறிய பகுதியைச் சேர்ந்தவர்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களால் தென் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் இன்றும் சிறிய வரிசை வீடுகளிலேயே, அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆரோக்கியமற்ற மற்றும் கல்வி வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் தற்போதைய தினசரி ஊதியம் அடிப்படை உணவு தேவைகளுக்கு கூட போதுமானதல்ல.

கண்டியில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சமீபத்திய அறிக்கையில், 4.5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, தோட்டத் தொழிலாளர்களின் சராசரி வாழ்க்கை ஊதியமாக ஒரு மாதத்திற்கு 44,711 ரூபா தேவை என குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாத அரசியல் சதிக்கு முன்னதாக, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அதைக் கொடுத்தால் தொழில்துறை "சிதைந்து போகும்" என்று கம்பனிகளுடன் சேர்ந்து அறிவித்தார். இராஜபக்ஷ முகாமினதும் நிலைப்பாடு இதுவே ஆகும்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளான தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள், தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவில்லை, மாறாக கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன.

ஆளும் உயரடுக்கின் போட்டி கன்னைகளுடன் தோட்டத் தொழிற்சங்கங்கள் அணிதிரண்டிருப்பது, இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியுடன் அல்லது தோட்டத் தொழிற்துறையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. ஏனைய தொழிற்சங்கங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அல்லது சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளன.

இலங்கை முதலாளித்துவத்தின் எந்த கன்னை அல்லது அரசியல் கூட்டணி இறுதியில் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், புதிய அரசாங்கம் பெருவணிக மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் இலாப கோரிக்கைகளை கொடூரமாக செயல்படுத்தும். தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புக்களின் உதவியுடன், அது தொழிலாள வர்க்கத்தினது அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்.

அதனால்தான், பெரிய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், மற்றும் நாடு முழுவதும் உள்ள வேலைத் தளங்களிலும், அயல் பிரதேசங்களிலும் இருக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்கவும், சோசலிசக் கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் போராட முன்வர வேண்டும்.