ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
Sri Lanka crisis escalates as Supreme Court overturns Sirisena’s dissolution of parliament

சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை உயர் நீதிமன்றம் இடை நிறுத்தியதால் இலங்கை நெருக்கடி அதிகரிக்கிறது

By K. Ratnayake 
14 November 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை இடை நிறுத்தும் இடைக்கால உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து, இலங்கையின் ஆளும் உயரடுக்கின் உள்ளே கன்னை மோதல் வியத்தகுவகையில் உக்கிரமடைந்துள்ளது. நீதிமன்றம் அதன் இறுதி தீர்ப்பை டிசம்பர் 7 அன்று வழங்கும்.

நவம்பர் 9 அன்று, சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது. ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகளும், "சிவில் சமூக" குழுக்கள் மற்றும் தனி நபர்களும் மனுதாரர்களில் அடங்குவர். சிறிசேனவின் பிரகடனத்திற்கு ஆதரவாக ஐந்து மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நீதிமன்றத் தீர்ப்பானது சிறிசேனவுக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையிலான, மற்றும் அண்மையில் அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த இராஜபக்ஷவுக்கும் முந்தைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பற்ற நிலையுடன், ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் மோதல்களை  ஒரு பெரும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள் கொண்டு சென்றுள்ளது. இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் இடம்பெறப் போகும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் விக்கிரமசிங்க வெல்லும் வாய்ப்புள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்து, ஜனவரி 5 அன்று பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததோடு புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 அன்று கூடும் என்று பிரகடனம் செய்தார். நேற்றைய உயர் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு, தேர்தல் தேதி அறிவிப்பு மற்றும் வேட்புமனு தாக்கலோடும் தொடர்புடையாதாகும். நவம்பர் 19-26 இடைப்பட்ட திகதிகள் வேட்புமனு தாக்கல் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணிகள், அது அரசியலமைப்பை மீறிய செயல் என வாதிட்ட அதேவேளை, பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களைப் பற்றி தீர்மானிக்க உயர் நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ''மாற்றவியலாதது'' என்று அவர் அறிவித்தார். எனினும், பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, மனுக்களை விசாரிக்க முடிவெடுத்தது.

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையின் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது மிகவும் பாரதூரமான ஒன்றாகும். அக்டோபர் 26 அன்று ஒரு அரசியல் சதித்திட்டத்தில், அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தியதோடு, நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்ட சிறிசேன, அந்த திகதியை நவம்பர் 14 ஆக மாற்றினார்.

ஜனாதிபதியின் ஒத்திவைப்பானது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு இராஜபக்ஷவை அனுமதிப்பதற்கான ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். கடுமையான பேரம்பேசலை மேற்கொண்டிருந்த போதிலும், கடந்த வாரம் இராஜபக்ஷ, தேவையான எண்ணிக்கையை பெற்றுக் கொள்ள தன்னால் முடியாமல் போனது என அறிவித்த நிலையிலேயே, சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர், ஐ.தே.க. மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளும் குழுக்களும் இடைக்கால உத்தரவை ஜனநாயகமானது என்றும் மக்களுக்கு "வெற்றி" கிடைத்து விட்டது என்றும் உற்சாகமாக அறிவித்தன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த கூற்றை நிராகரிக்க வேண்டும். இடைக்கால உத்தரவு என்பது, இலங்கை அரசியல் உயரடுக்கை பற்றிக்கொண்டிருக்கும் ஆழமான பிளவின் ஒரு உயர்ந்த மற்றும் வெடிப்புத் தன்மை நிறைந்த அளவிலான ஒரு வெளிப்பாடே ஆகும். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளோ அல்லது முதலாளித்துவ அரசின் மற்றொரு அடக்குமுறை கருவியாக இருக்கும் நீதித்துறை மூலமாகவோ தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது.

இடைக்கால உத்தரவானது, சிறிசேனவின் அப்பட்டமான மீறல்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் அதிகரித்துவரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மேலும் எண்ணெய் வார்க்கும் என்பதையிட்டு ஆளும் வட்டாரங்களில் நிலவும் பீதியைப் பிரதிபலிக்கிறது. அடுத்த மூன்று வாரங்களில் கடுமையான அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு வழி கிடைக்காவிட்டால், நீதிமன்றம் சிறிசேனவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க கூடும்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஐ.தே.க தலைவர் விக்கிரமசிங்க ட்வீட் ஒன்றில், "நாம் முன் சென்று எமது அன்பிற்குரிய நாட்டில் மக்களுடைய இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிப்போம்," என பிரகடனம் செய்தார். அவர், தனது கட்சி ஜனநாயகத்தையும் பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தையும் காப்பாற்றுவதற்காகவும் அரசியலமைப்பை பாதுகாக்கவும் “கடைசி வரை போராடும்,” என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தன்னுடைய எதேச்சதிகார நடவடிக்கைகளை "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக" என சித்தரிக்கும் சிறிசேனவின் அபத்தமான கூற்றுக்களையே விக்கிரமசிங்கவின் ஆடம்பர வாய்வீச்சும் எதிரொலிக்கிறது.

பெருகிவரும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் பூகோள அரசியல் பதட்டங்கள், அதேபோல் தங்கள் சமூக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு விரோதமாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் ஆழமடைந்து வரும் சமூக எதிர்ப்பைபையும் சமாளிக்க என்ன செய்யவது என்பது பற்றி ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை போட்டி முதலாளித்துவக் கட்சிகள் மக்களின் ஜனநாயக அல்லது சமூக உரிமைகளை ஒருபோதும் பாதுகாக்கவில்லை; மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதே அவர்களின் ஒரே சரித்திரம் ஆகும்.

நேற்று, உத்வேகமடைந்த ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, உயர் நீதிமன்ற உத்தரவை அறிவிப்பதற்காக பொதுக்கூட்டத்தில் தனது உரையைத் திருப்பினார். சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின் "சதி" தோற்கடிக்கப்பட்டதுடன், "இன்னும் சதித்திட்டங்கள்" இடம்பெறலாம் என பிரகடனம் செய்த அவர், தனது கட்சி அவற்றைத் தோற்கடிக்கப் போராடும் எனக் கூறினார்.

உண்மையில், ஜே.வி.பி., சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின் சூழ்ச்சிகளுக்கு எதிரான ஐ.தே.க.யின் போலியான "ஜனநாயகம் பாதுகாக்கும்" பிரச்சாரத்தை சிடுமூஞ்சித்தனமாக தழுவிக்கொண்டுள்ளது. எவ்வாறெனினும், 2015 ஜனவரியில், அது சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, இராஜபக்ஷவை அகற்றுவதற்காக சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அணிதிரண்டது.

சபாநாயகர் இன்று பாராளுமன்றம் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறிய போதிலும், ​​நிகழ்ச்சி நிரல் தெளிவாக இல்லை. பாராளுமன்றம் அவருக்கு பெரும்பான்மை இருப்பதாக நிரூபிக்கும் என ஊடகங்களுக்கு விக்கிரமசிங்க தெரிவித்தார். "நாம்தான் சட்டபூர்வமான அரசாங்கம் என்று நாங்கள் காண்பிப்போம்," எனக் கூறிய அவர், “அரசியலமைப்பைப் பின்பற்றுமாறு” அரசாங்க ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பொலிஸார் தன்னுடைய அறிவுரைகளைக் "கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் அவர் அறிவித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், இராஜபக்ஷ அரசாங்கம் என்று அழைக்கப்படுவதைச் சேர்ந்த பல அமைச்சர்கள், சபாநாயகருக்கு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை, எனக் கூறினர்.

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் இராணுவ தளபதிகளுடன் நேற்று இரவு விசேட கூட்டம் ஒன்றை நடாத்தியதன் மூலமே நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிரதிபலித்தார். அவர் கொடுத்த அறிவுரைகளை என்ன என்பது பற்றிய எந்த விவரமும் வெளிப்படுத்தவில்லை, ஆனால், நாடு முழுதும் பாதுகாப்பை இறுக்கமாக்குமாறு தளபதிகளை அவர் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவும். எந்தவொரு வன்முறையையும் கட்டுப்படுத்த பொலிஸுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்தபின்னர் அமெரிக்க மற்றும் பிற முக்கிய சர்வதேச சக்திகள் சிறிசேன மீது தமது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளன. சிறிசேன, இராஜபக்ஷ இருவருமே சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க முயல்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளின் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் ராய்ட்டர் செய்திகளின் படி பிரிட்டன், நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து தூதர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தமது பிரதிநிதிகளை அனுப்பியிருந்த அதே வேளை இந்தியா ஒரு இளநிலை அதிகாரியை அனுப்பி இருந்தது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை விமர்சித்த ஒரு அமெரிக்க அறிக்கை, "பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு, இலங்கை ஜனநாயக நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது" எனக் கூறியதுடன், ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில், "பாராளுமன்றத்தின் முழுமையான செயல்பாடு, ஜனநாயகத்தின் அத்தியாவசிய தூண் ஆகும்," என அறிவித்துள்ளது.

அரசியல் நெருக்கடி மற்றும் "பாராளுமன்றத்தின் கலைப்பு" பற்றிய அதன் கவலைகளை நேற்று ஜப்பான் வெளிப்படுத்தியது. இந்த பெரும் வல்லரசுகள் இலங்கையில் அல்லது வேறு எங்கும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகம் அல்லது சமூக உரிமைகளைப் பற்றி கவலைப்படவில்லை.

2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு சிறிசேனவை கொண்டுவந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையை வாஷிங்டன் ஆதரித்ததுடன், இலங்கையுடன் அதன் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை பலப்படுத்திக்கொண்டுள்ளது. கொழும்பில் இப்போது அதிகரித்துவரும் நெருக்கடிகளில் அதன் தற்போதைய தலையீடுகள், அந்த உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதே ஆகும்.

அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் தற்போது விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்ற அதே வேளையில், அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பாரெனில் வாஷிங்டன் இராஜபக்ஷவுடன் செயற்படவும் விரும்பாமல் இல்லை.

இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கமும் கிராமப்புற வெகுஜனங்களும் எந்தவொரு ஆளும் வர்க்கக் கட்சிக்கு அல்லது நீதித்துறைக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலமும் தமது ஜனநாயக அல்லது சமூக உரிமைகளை பாதுகாக்க முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவிற்கும் எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசியமாகும்.