ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political crisis in Sri Lanka: Its lessons for the international working class

இலங்கையில் அரசியல் நெருக்கடி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அதன் படிப்பினைகள்

Keith Jones and K. Ratnayake
16 November 2018

இலங்கையில் கடந்த மூன்று வாரங்களாக இழுபட்டு வரும் அரசியல் நெருக்கடியானது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கவனமான அவதானத்தை ஈர்க்கிறது.

22 மில்லியன் மக்கள் உள்ள இந்த தீவில் நடக்கும் சம்பவங்கள், பூகோளம் முழுதும் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார வாழ்வை வடிவமைக்கின்ற, உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சியில் வேரூன்றியுள்ள, அதே வழிவகையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றுள் முதன்மையானவை:

* அமெரிக்கத் தலைமையில் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதும் பெரும் வல்லரசுகளின் மூலோபாயப் போட்டியும். இவை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லையேல், மனிதகுலத்தை ஒரு மூன்றாம் உலக யுத்தத்துக்குள் தள்ளுவதற்கு அச்சுறுத்துகிறது;

*  தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பரந்த சமூக சமத்துவமின்மைக்கு முடிவுகட்ட உழைக்கும் மக்கள் முயற்சிக்கின்ற நிலையில் வர்க்கப் போராட்டம் மீள எழுச்சிபெறுகின்றது;

* முதலாளித்துவ உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும் எதிர்ப்போக்கு மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்பியுள்ள நிலையில் ஜனநாயக, சட்ட-அரசியலமைப்பு வடிவங்கள் வீழ்ச்சியடைகின்றன.

மூன்று வாரங்களுக்கு முன்னர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சட்ட விரோதமாக பதவி நீக்கம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தினார்.

இது ஒரு திடீர் தலைகீழ் மாற்றமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள இலங்கையை, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய மோதல்களுக்குப் பின்னால் பிணைத்துக்கொள்ளும் நீண்டகால அமெரிக்க முயற்சிகளை குறுக்கே வெட்டுகின்ற நிலையில், இந்த மாற்றம் உடனடியாக வாஷிங்டனில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது.

2014 இறுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியமானது தனது நெருக்கமான பிராந்திய கூட்டாளியான இந்தியாவின் உதவியுடன், முன்னர் இராஜபக்ஷவுக்கு விசுவாசியாக இருந்த சிறிசேனவுடனும், விக்கிரமசிங்க மற்றும் அவரது ஐ.தே.க. உடனும் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியது. 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னரும், இராஜபக்ஷ அரசாங்கத்தை விட்டு விலகிய சில நாட்களிலுமே, இராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு "பொது வேட்பாளராக" சிறிசேன அறிவிக்கப்பட்டார்.

2005 இல் இருந்து, அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் 2015 இல் அவர் அகற்றப்படும் வரை, பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிர்மூலமாக்கும் யுத்தத்தை அவர் முன்னெடுத்த நிலையிலும், இராஜபக்ஷ வாஷிங்டனின் உறுதியான ஆதரவை அனுபவித்திருந்தார். ஆனால் அவர், உட்கட்டமைப்பு உட்பட பெரியளவிலான சீன முதலீட்டை ஏற்றதன் மூலம் வாஷிங்டனுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.

சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியினால் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் திணிக்கப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு, தொழிலாள வர்க்கத்தை முன்னணியாகக் கொண்டு வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்புகள், ஆளும் வட்டாரத்துக்குள் நெருக்கடியைக் கிளறிவிட்டன. இந்த நெருக்கடியே, அக்டோபர் 26 அன்று, சிறிசேனவின் அரசியலமைப்பு சதியைத் தூண்டிவிட்டது. முந்தைய மாதங்களில், அரசாங்க பங்காளிகளாக இருந்து வந்த சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க, பொதுமக்களின் மோசமடைந்துவரும் நிலைமைகளுக்கான பழியை, ஒருவரையொருவர் மாறி மாறி சுமத்திக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டனர். அதே சமயம், இராஜபக்ஷ, அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக முண்டியடித்தார். அவர் தன்னை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழ்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிடக் கூடிய, மேலும் பெருவணிக-சார்பு "மறுசீரமைப்பை" முன்னெடுக்கக் கூடிய ஒரு "வலுவான மனிதராக" தன்னைக் காட்டிக்கொண்டார்.

சமீபத்தில் பென்டகன், பசிபிக் கட்டளையகத்தை இந்தோ-பசிபிக் கட்டளையகம் என்று பெயர் மாற்றியதில் அடையாளப்படுத்தியது போல், சீனாவை சுற்றிவளைத்து, தனிமைப்படுத்தி, அடிபணியச் செய்வதற்கான அதன் உந்துதலில், முழு தெற்காசியாவையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் அமெரிக்கா ஒரு மைய இயங்கு தளமாக மாற்றியுள்ள நிலைமைகளின் கீழ், இலங்கை முதலாளித்துவத்திற்குள்ளான அரசியல் நெருக்கடி மற்றும் மோதல்கள், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பூகோள அரசியல் போட்டியில் சிக்கிக்கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மற்றும் ஓரளவு இந்தியாவினதும் ஆதரவுடன் விக்கிரமசிங்கவும் அவரது ஐ.தே.க. வும் சிறிசேனவை மீறி, இராஜபக்ஷவை பிரதமராக அங்கீகரிக்க அல்லது அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

சிறிசேன மேலும் மேலும் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடன் பிரதிபலித்தார். பேரம்பேசல்களுக்கூடாக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற இராஜபக்ஷவால் முடியாமல் போனபோது, சிறிசேன சட்ட விரோதமாக பாராளுமன்றத்தை கலைத்ததோடு புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார். உயர் நீதிமன்றம் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்துடன், இறுதி தீர்ப்பை டிசம்பர் 7 வரை ஒத்தி வைத்த பின்னரும், மற்றும் புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்ஷ மீது நம்பிக்கை இல்லை என வாக்களித்த பின்னரும், சிறிசேன, அரசியலமைப்பை வெளிப்படையாக மீறி, தனது தேர்வு பாராளுமன்றத்தின் ஆதரவைக் கொண்டுள்ளதா இல்லையா என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல், தான் யாரை நியமிப்பாரோ அவர்தான் பிரதமர் என்ற எதேச்சதிகார கொள்கையை உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே அரசியலமைப்பின் கீழ் முப்படைத் தளபதியான சிறிசேன, பொலிஸ் மற்றும் ஊடகங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இன்னும் அதிக அதிகாரங்களை எடுத்துக்கொண்டுள்ளார். மற்றும் இன்னும் அபாயகரமான அபிவிருத்தியில், கொழும்பின் புறநகர் பகுதிகளில் படையினரும் டாங்கிகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு பாராளுமன்றத்திற்கும் அனைத்து அரசாங்க அமைச்சுக்களுக்கும் வெளியே பொலிஸ் கமாண்டோக்கள் நிலைகொண்டுள்ளன.

விக்கிரமசிங்கவும் அவரது ஐ.தே.க. வும் சிறிசேன-இராஜபக்ஷ குழுவின் சட்டவிரோத நடவடிக்கைகளை, ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள சுரண்டிக்கொள்கின்றன. என்ன ஒரு கொடூரமான மோசடி! வாஷிங்டன், லண்டன் மற்றும் புது டில்லியினதும் உதவியுடன், விக்கிரமசிங்க, அரச இயந்திரத்தை தன் கைக்கு மீண்டும் பெற ஆவலாக உள்ளார், எனவே அவரால் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் நடவடிக்கைகளுடன் இலங்கையை ஒருங்கிணைக்கும் அதேவேளை, இலங்கை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத்தை திட்டத்தை சுமத்த முடியும். சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீ.ல.சு.க.) விட தமிழர்-விரோத பேரினவாதத்தில் ஐ.தே.க. எந்த விதத்திலும் குறைந்ததல்ல, என்பதை கூறியாக வேண்டும். 1983 முதல் 2009 வரை தீவை மூழ்கடித்திருந்த தமிழர்-விரோத உள்நாட்டுப் போரை ஜே. ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐ.தே.க. அரசாங்கமே ஆரம்பித்தது. சுதந்திரம் பெற்றபோது தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்து, சிங்கள பேரினவாதத்தை இலங்கை அரசின் உயிரணுக்களுக்குள் நுழைத்தது ஐ.தே.க. வே ஆகும்.

இவற்றில் எதுவுமே, அமெரிக்க-சார்பு தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை; சிங்கள ஜனரஞ்சகவாத “இடது” என காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி.; மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களையும் ஐ.தே.க. இன் போலி ஜனநாயக பதாகைக்கு பின்னால் அணிதிரள்வதை தடுக்கவில்லை.

ஆளும் வர்க்கத்திற்குள் கடந்த மூன்று வாரங்களாக நிகழும் மோதல்களின் சகல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களிலும், முதலாளித்துவத்தின் இரு போட்டி முகாம்களில் இருந்தும் சுயாதீனமாகவும் மற்றும் எதிராகவும், தொழிலாள வர்க்கம் தனது சொந்த வர்க்க நலன்களை வலியுறுத்துவதற்காக அணிதிரள வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே வலியுறுத்தி வந்துள்ளது, வலியுறுத்தி வருகின்றது.

அக்டோபர் 31 அன்று, "இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காக போராடு" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், "அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான" சிறிசேன-இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. இன் முயற்சிகளை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது. "இலங்கை முதலாளித்துவத்தின் விலைபோகும் பிரதிநிதிகள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பார்கள் என்பதில் யாரும் எவ்வித மாயையும் கொண்டிருக்கக் கூடாது" என்று அது அறிவித்தது.

"இந்த அரசியல் சதியின் மூலம், மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கூர்மையடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச ரீதியாக எழுச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களும் இலங்கையில் கூர்மையாக வெளிப்பட்டுள்ளன," என்று அது தொடர்கிறது.

பாராளுமன்றம் எப்பொழுதும் புகைபடர்ந்த திரையாகவே இருந்து வருகிறது. அதற்குப் பின்னால் முதலாளித்துவமானது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் ஈவிரக்கமின்றி தனது வர்க்க நலன்களை மேம்படுத்திக்கொள்கிறது, என அந்த அறிக்கை மேலும் விளக்கியது. இன்று, பூகோள அரசியல் நெருக்கடி மற்றும் முதலாளித்துவத்தின் பீதி மற்றும் அச்சம் உட்பட, குவிந்து வரும் சமூக எதிர்ப்பு மற்றும் தமிழ், சிங்கள தொழிலாளர்களின் வளர்ந்து வரும் வர்க்க ஐக்கியத்தின் மத்தியில், அத்தகைய திரை உடைந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.

நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் நடந்த குத்துச் சண்டையில் வெளிப்பட்டவாறு, மேலும் மேலும் கசப்படைந்து வரும் கன்னை மோதலில் இறுதியில் எந்தக் கன்னை வெற்றி பெற்றாலும், அது சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதற்கு அர்ப்பணித்துக்கொண்ட பெருமளவில் எதேச்சதிகார பண்பைக் கொண்ட அரசாங்கமாக இருக்கும், இல்லையேல் முதலாளித்துவக் கும்பலின் கொள்ளையடிக்கும் நலன்களை அமுல்படுத்தும். வாஷிங்டனுடன் வேலை செய்வதற்கான தன் தயார் நிலையை இராஜபக்ஷ பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

எனினும், இந்த கட்டத்தில், அமெரிக்கா அவரது அழைப்புக்களை துண்டித்துவிட்டது. ட்ரம்ப் நிர்வாகமானது பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் தாக்குதலில் எந்தவிதமான பின்வாங்கலும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதை அடிக்கோடிட்டு காட்டுவதற்காக, அமெரிக்க தூதர் அலியா டெப்லிட்ஸ், தானே தனிப்பட்ட முறையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை பார்க்க கூடியவாறு, புதன்கிழமை பாராளுமன்ற அமர்வுக்கு சென்றார். மற்றும் அதோடு தொடர்புபட்ட ஒரு அபிவிருத்தியில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுடன் இரகசியமாக செயல்படும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல், பேஸ்புக்கும், உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ்-மொழி பேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையை, அகற்றியது.

ஜனநாயக உரிமைகளை, சமூக சமத்துவத்தை பாதுகாக்கக் கூடிய மற்றும் ஏகாதிபத்தியத்திலிருந்து உண்மையான சுதந்திரத்தை பெறக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. அது, சோசலிச-சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளை தன் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.

இதேபோல், அமெரிக்காவின் போர் உந்துதலுக்கான ஒரே முற்போக்கான எதிர்முனை, முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும். 1990 களில் முதலாளித்துவத்தை மீட்டதில் இருந்து தலைதூக்கிய தன்னலக்குழுவின் பிரதிநிதியான சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, அதன் சொந்த இராணுவ கட்டியெழுப்பல் மற்றும் பூகோள பொருளாதார மற்றும் இராஜதந்திர செல்வாக்கிற்கான முன்நகர்வினதும் ஊடாக வாஷிங்டனை எதிர்த்து நிற்க முயல்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய பிரச்சாரத்திற்கு மட்டுமே அனுகூலமாகக் கூடிய ஒரு நடவடிக்கையில், சீன ஜனாதிபதி ஷி, சிறிசேனவின் அக்டோபர் 26 அரசியல் சதியை வரவேற்றார்.

குவிந்துவரும் சமூக நெருக்கடி மற்றும் பெருகிவரும் உலகப் பதட்டங்களின் மத்தியில் இலங்கையின் பாராளுமன்ற ஒழுங்கின் சீரழிவானது, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புரட்சிகர தலைமையை -இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளையும்- கட்டியெழுப்புவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. அத்தகைய புரட்சிகரத் தலைமையினால் மட்டுமே, தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் புறநிலை தர்க்கம் மற்றும் உலகளாவிய குணாம்சத்துடன் தொடர்புடைய ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் அதன் ஆரம்ப இயக்கத்தை ஆயுதபாணியாக்க முடியும்.