ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan parliament adjourned amid ongoing political crisis

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

By K. Ratnayake
20 November 2018

ஆளும் உயரடுக்கின் போரிடும் பிரிவுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களின் மத்தியில் இலங்கை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக அது பத்து நிமிடங்களுக்கு குறைவான நேரமே கூடியது. "கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமாதானமான மற்றும் இணக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக" நன்றி கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு குறிப்பை வெளியிட்டார்.

சிறிசேனவின் குறிப்பு, பாராளுமன்றத்தின் போட்டி உறுப்பினர்களுக்கிடையில் வன்முறை மோதல்கள் நடந்த கடந்த வாரம் போலல்லாமல், நேற்றைய சுருக்கமான கூட்டத்தில் பிளவுகள் ஏற்படவில்லை வைக்கவில்லை என்பதையே மெல்லியதாக சுட்டிக் காட்டுகிறது. அரசியல் ஸ்தாபகத்தின் போட்டியிடும் கன்னைகளின் தலைவர்கள், அத்தகைய குண்டர் செயற்பாடுகள் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்படுவது, "ஜனநாயகத்தின்" பாதுகாவலர்கள் என்ற தங்களது பாசாங்குகளுக்கு இன்னும் குழிபறிக்கும் என்று அஞ்சுகின்றனர்.

மேலதிக மோதல்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதி நேற்று மூடப்பட்டது. பெருந்தொகை பொலிஸ் கமாண்டோக்கள் கட்டிடத்தை சூழ நிலைகொண்டிருந்தனர்.

"அமைதியான" மற்றும் "இணக்கப்பாடான" நடத்தைக்கான சிறிசேனவின் வாழ்த்துக்கள் இருந்தபோதிலும்கூட, அரசியல் ஸ்தாபகத்திற்குள் கன்னைப் போர் ஆழமாகி வருகிறது.

ஞாயிறன்று அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளதும் கூட்டம் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்தது.

அக்டோபர் 26 அன்று, அரசியலமைப்பிற்கு முரணான ஒரு அரசியல் சதியில், சிறிசேனவும் அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த இராஜபக்ஷவும், தமது எதிர்ப்பாளர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை தடுக்க முயன்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வெளியேற்றப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றினர். தனக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை இருப்பதாக உரிமை கோரும் ஐ.தே.க., விக்கிரமசிங்க பிரதமராக மறுபடியும் நியமிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது.

எனினும், வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு தவறானது என்றும், அத்தகைய தீர்மானம் ஒரு மின்னணு வாக்கெடுப்பு மூலம் அல்லது ஒரு பெயர் அழைப்பு மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் என்று சிறிசேன வலியுறுத்தினார்.

ஐ.தே.க. தலைவர்கள் நேற்று இன்னுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருதாக கூறினர். அதை எதிர்த்தரப்பு தடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது.

இராஜபக்ஷ விசுவாசிகள், இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதை தடுப்பதன் மூலம் இடையூறு செய்தனர். பாராளுமன்ற விவகாரங்கள் பற்றி அடுத்த முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தேர்வுக் குழுவை நியமிப்பதற்கு இரண்டு கன்னைகளும் இறுதியில் உடன்பட்டன.

சுருக்கமான பாராளுமன்ற கூட்டத்தின் போது, ​​இராஜபக்ஷ கன்னையானது தானே அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி அந்த அடிப்படையில் குழுவில் ஒரு பெரும்பான்மையை கோரியது.

எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க, ஐ.தே.க. ஆதரவுடன், அரசாங்கம் ஒன்று இல்லை என கூறி எதிர்த்தார்.

ஒவ்வொரு கட்சியும் கொண்டிருக்கும் ஆசணங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே குழு பிரதிநிதித்துவம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என திசாநாயக்க கூறினார். ஜே.வி.பி., அதிகாரத்திற்குத் திரும்புவதற்கான ஐ.தே.க.வின் முயற்சிகளுக்கும் ஆளும் உயரடுக்கின் ஒரு "ஸ்திரமான" அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் விளைபயனுள்ள விதத்தில் ஆதரவு கொடுக்கின்றது.

இந்த பரிமாற்றங்களுக்குப்பின், துணை சபாநாயகர் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

நேற்று ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், பல ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருக்கும் அவரது அலுவலகத்திற்குமான நிதி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற செயலாளருக்கு ஒரு மனுவை முன்வைத்தனர்.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டம் வரை, பெரும்பான்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேரம்பேசலுக்காக போட்டி கன்னைகளால் எதிர்வரும் நான்கு நாட்கள் பயன்படுத்தப்படும். விக்கிரமசிங்க தனது பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முற்படும் அதேவேளை, இராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதற்கும், மசிய வைப்பதற்கும் முயற்சிப்பார்.

இராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஒரு பெரும்பான்மை பெறுவதற்கு அவகாசம் கொடுப்பதற்காக சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். இது தோல்வியுற்ற பின்னர், சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தார். ஆனால் அவரது கலைப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சிறிசேனவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 500 மில்லியன் ரூபாய்க்கு விலை போவதாக அறிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கைகளில் ஜனாதிபதியே கூட ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஒரு பக்கம் சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான குழுவும் மறுபுறம் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களும் தாமே "ஜனநாயகத்தை பாதுகாப்பதாக" தொடர்ந்தும் உரிமைகோரி வருகின்றனர்.

இராஜபக்ஷ ஆதரவாளர்கள் நேற்று ஒரு செய்தியாளர் மாநாட்டில், "நெருக்கடிக்கு தீர்வு காண ஒரே வழி" ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதே என்று அறிவித்தனர். பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி பெரும்பான்மை சபைகளை வென்றதில் இருந்தே இராஜபக்ஷ அத்தகைய அழைப்புகளை விடுத்து வருகிறார்.

அதன் ஊடகவியலாளர் சந்திப்பில், விக்கிரமசிங்க பிரிவின் தலைவர்கள் "ஒரு சட்டவிரோத அரசாங்கம்" அதிகாரத்தில் இருக்கும்போது தேர்தல் நடத்தப்படுவதை எதிர்ப்பதாக கூறினர்.

"இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராடு" என்ற சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அறிக்கை விளக்கியதாவது:

"ஆளும் வர்க்கத்தின் எந்த கன்னையும் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப் போவதில்லை. பாராளுமன்றம் எப்பொழுதும் ஒரு புகைபடர்ந்த திரையாகவே இருந்துவருகிறது; அதற்குப் பின்னால் முதலாளி வர்க்கம் ஈவிரக்கமற்ற முறையில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் தனது வர்க்க நலன்களை மேம்படுத்திக்கொள்கிறது. இப்போது போட்டிக் கட்சிகள் ’ஜனநாயகத்துக்கான’ தங்கள் விருப்பத்தை பிரகடம் செய்தாலும் கூட, அந்த திரை பொறிந்து கொட்டிவிட்டது."

பெருகிவரும் சமூக மற்றும் பூகோள அரசியல் அழுத்தங்களின் மத்தியில், இலங்கையின் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி கசப்பான மோதல்களே இப்போது இடம்பெற்று வருகின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் இனவாத யுத்தத்தின் போதான யுத்தக் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறல் உள்ளிட்ட இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சி மீதான பரந்த விரோதப் போக்கை சுரண்டிக் கொண்டே 2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார்.

சிரிசேனவின் 2015 வெற்றி அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டது. இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு வாஷிங்டன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக சீனாவுடன் பிராந்தியம் பூராவும் அமெரிக்கா மோதல் நிலைமைகளை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையின் கீழ், அவர் பெய்ஜிங் உட்ன ஏற்படுத்திக்கொண்ட நெருக்கமான உறவுகளுக்கு அது விரோதமாக இருந்தது.

தற்போதைய நெருக்கடியில், வாஷிங்டன், ஒரு புதிய சிறிசேன-இராஜபக்ஷ அரசாங்கமானது பெய்ஜிங்கை நோக்கி நகர்ந்து, புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவில் அமெரிக்க செல்வாக்கை கீழறுக்கும் என்று ஆழமாக கவலை கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா, அதன் நெருக்கமான நட்பு நாடான இந்தியாவுடன் சேர்ந்து, விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை சமிக்ஞை காட்டியுள்ளது. அதற்கு கைமாறாக விக்கிரமசிங்க, தனது போலியான “ஜனநாயகத்துக்கான” பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு "சர்வதேச சமூகத்துக்கு" அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய தோரணைகளுக்குப் பின்னால், ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும், தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட சிறிசேன-விக்கிரமசிங்க "ஐக்கிய அரசாங்கம்", சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கட்டளையின் ஒரு பாகமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது.

இந்த நடவடிக்கைகள், பிரதான தொழிலாளர் பகுதியினர் மற்றும் மாணவர்களிடையே தொடர்ச்சியான போராட்டங்களை தூண்டியது. சிரிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்களுக்கு எதிராக பலமுறையும் இராணுவம் மற்றும் பொலிசை ஏவிவிடுவதன் மூலமே பிரதிபலித்தது.

ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், அதன் கன்னைகளுக்கு இடையிலான வன்முறை மோதல்கள் பரந்த சமூக எதிர்ப்பை அதிகரிக்கச் செய்து, பெரும் வல்லரசுகளுடனான இலங்கையின் உறவுகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் என அஞ்சுகின்றன.

கடந்த வாரம் சண்டே ஐலண்ட் ஆசிரியர் தலையங்கம், இவ்வாறு கூறியது: "கடந்த வாரம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூன்று நாட்களாக பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதுபோல், இலங்கையின் பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சேறு பூசுவதானது அனைத்து மக்களையும் பாதிக்கும்."

சண்டே டைம்ஸ் ஆசிரியர் தலையங்கம் அறிவித்ததாவது: "அவர்களது வாழ்வு இதன் முடிவிலேயே தங்கியிருக்கின்ற நிலையில், இந்த அரசியல்வாதிகள், ஒரு பிழையான முறையில் ஆட்சியை அபகரிக்கும் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் போது, நாட்டின் எஞ்சிய பகுதி, வெறுப்பு, அதிருப்தி மற்றும் ஒரு நேரடியான புதிர் நிலைமையில் உள்ளது." அது அப்பட்டமாக எச்சரித்ததாவது: "உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலை தொடர்ந்தால், இந்த நாடு விரைவில் ஒரு அராஜகமான இலங்கை என்ற விளிம்பிலிருந்து ஒரு இடைநிலையான மாநிலமாக மாற்றிவிடும்."

ஆளும் செல்வந்த தட்டினரின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பழைய வடிவிலான பாராளுமன்ற ஆட்சியின் பொறிவு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இது எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவத்தை நோக்கி மேலும் நேரடியாக  நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளிலும் முறித்துக் கொண்டு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் அதன் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சாதாரண மக்களுடைய நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைக்கத் தொடங்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டமே இப்போது அவசியமானதாகும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.