ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president’s “all party conference” fails to overcome political crisis

இலங்கை ஜனாதிபதியின் "அனைத்து கட்சி மாநாடும்" அரசியல் நெருக்கு தீர்வுகாண்பதில் தோல்வியுற்றது

By Rohantha De Silva 
19 November 2018

அரச அதிகாரத்திற்காகப் போட்டியிடும் பிரிவுகளுக்கு இடையில் நடுநிலை வகிப்பவராக போலியாக காட்டிக்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பாராளுமன்றக் கட்சிகளின் அனைத்து கட்சி மாநாடு ஒன்றை நடத்தினார். இந்த மாநாடு போட்டி குழுக்களுக்கு இடையே எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்தது.

இந்தக் கூட்டத்தில், அக்டோபர் 26 அன்று சிறிசேனவால் பிரதமர் பதவி அபகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டான தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மற்றைய பிரிவானது சிறிசேனவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலானது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகயவையும் இதில் உள்ளடங்கி இருந்தன.

பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அழைக்கப்பட்டிருந்தலும், அது அரசியல் கட்சிகளுக்கு உரியது எனக் கூறி அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிறிசேன மற்றும் ஜயசூரிய இடையே கடுமையான பதட்டங்கள் காண்படுகின்றன. சபாநாயகர், விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. இன் ஒரு மூத்த உறுப்பினராக உள்ள அதேவேளை, ஜனாதிபதி, இராஜபக்ஷ கன்னையை ஆதரிக்கிறார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), சிறிசேனவே நெருக்கடியை உருவாக்கியவர் என்றும் அவரே அதைத் தீர்க்க வேண்டும் என்றும் அறிவித்து அவரது அழைப்பை நிராகரித்து விட்டது. எவ்வாறெனினும், விக்கிரமசிங்கவில் இருந்து தன்னை தூர வைத்துக்கொள்வதற்காக முயற்சிக்கின்ற ஜே.வி.பி., அதிகாரத்தை மீட்பதற்கான அவரது கட்சியின் முயற்சிகளை ஆதரிக்கின்றது.

சிறிசேனவின் கூட்டமானது, இராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கும் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மூன்று நாள் பாராளுமன்றத்தில் நடந்த தொடர்ச்சியான கசப்பான மோதல்களின் பின்னணியிலேயே கூட்டப்பட்டது. ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக இடைக்கால உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் அறிவித்த பின்னர் பாரளுமன்றம் புதனன்று மீண்டும் கூடியது.

புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையும், இராஜபக்ஷவுக்கும் அவரது புதிய அரசாங்கத்துக்கும் எதிராக ஐ.தே.க. மற்றும் எதிர்க் கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவந்தபோது கைகலப்புகள் மற்றும் வன்முறைகளும் வெடித்தன. இந்த இரண்டு நாட்களிலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜயசூரிய அறிவித்தார். வியாழனன்று இராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றினார், ஆனால், எதிர்க்கட்சி அவரது உரையை நிராகரிக்கும் ஒரு தீர்மானத்தை கொண்டுவர முயன்ற போது குழப்பத்தில் போய் முடிந்தது.

சிறிசேன நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதலாவது வாக்கெடுப்பை நிராகரித்ததோடு அவர் இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தது "அரசியலமைப்புக்கு முரணானது" என்ற பகுதியை அகற்றுமாறு ஐ.தே.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்றைய அனைத்து கட்சி மாநாட்டிலும், "திருத்தப்பட்ட" நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வெள்ளியன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பை நிராகரித்த அவர், மின்னணு முறையில் வாக்களிக்கப்பட வேண்டும் அல்லது பெயர்களை அழைத்தே வாக்கெடுப்பு நட்டப்பட வேண்டும், அப்போது அது "மக்களுக்கும் சர்வதேச அளவிலும் நம்பகமானதாக" கருதப்படும் என கூறினார்.

சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களை "ஒழுக்கமாக" செயல்படுமாறு கேட்டுக்கொண்டார், ஆனால் அவருடைய ஆதரவாளர்களின் வன்முறை நடத்தைக்கு எந்தவொரு விளக்கமும் அவர் வழங்கவில்லை. சிறிசேனவும் போட்டி கட்சிகளின் தலைவர்களும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்புகள் இலங்கை வெகுஜனங்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய அரசியல் தாக்கத்தைப் பற்றி கொஞ்சம் விழிப்படைந்துள்ளனர்.

ஐ.தே.க. தலைமைத்துவம், "நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை" ஆதரித்த 113 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறிசேனவை சந்திக்க அழைத்து வர முடியும் என்று கூறியது. சிறிசேன இந்த ஆலோசனையை நிராகரித்தார்.

ஆயினும், கூட்டத்திற்குப் பின்னர், ஐ.தே.க. தலைமை தாம் இன்று பாராளுமன்றத்திற்கு மற்றொரு பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளதாக வலியுறுத்தியது. அத்தகைய ஒரு பிரேரணை "முறையாக" முன்வைக்கப்படாவிட்டால் தாம் அதை அனுமதிக்கப் போவதில்லை என இராஜபக்ஷ ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆதரவைக் கொண்ட விக்கிரமசிங்க, அதிகாரத்திற்கான தனது முயற்சியைத் தொடர சபதமெடுத்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் தூதரகங்களின் அதிகாரிகள், நேற்றைய அனைத்து கட்சி மாநாட்டிற்குப் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் விக்கிரமசிங்கவை சந்திக்க வந்திருந்தனர்.

நவம்பர் 15 அன்று, ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சிங்கப்பூரில் அமெரிக்க, ஜப்பானிய, ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில், இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடி பற்றி கலந்துரையாடப்பட்டது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று, "மாலைதீவில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது உட்பட, ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இணங்க இலங்கையில் அரசியல் அபிவிருத்திகளுக்கு தீர்வுகாண ஊக்குவிப்பதற்கும், பங்களிப்புடனான பிராந்திய நலன்களை மேம்படுத்தும்” கூட்டு முயற்சிகள் தேவை, என அதன் சிரேஷ்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

வாஷிங்டனும் அதன் சர்வதேச நட்பு நாடுகளும், "ஜனநாயகக் கொள்கைகள்" பற்றி எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை, மாறாக அவை தமது சொந்த ஏகாதிபத்திய நலன்களால் உந்தப்படுகின்றன, குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு முழுவதற்கும் குழி பறிப்பதற்கு உறுதிபூண்டுள்ளன.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மஹ்மத் சோலிஹ், வாஷிங்டன் மற்றும் புது டில்லியின் திரைமறைவிலான ஒத்துழைப்புடன் கடந்த மாதம் அதிகாரத்திற்கு வந்தார். பெய்ஜிங் உடனான அவரது நெருங்கிய உறவுகளின் காரணமாக, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்த்தன.

விக்கிரமசிங்கவின் உதவியுடன் வாஷிங்டனால் இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையிலேயே சிறிசேனவும் இலங்கை ஜனாதிபதி ஆனார்.

இராஜபக்ஷவின் சர்வாதிகார வழிமுறைகளுக்கு வாஷிங்டனுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை, மாறாக, பெய்ஜிங் உடனான அவரது நெருங்கிய உறவுகளுக்கே விரோதமாக இருந்தது. இராஜபக்ஷ தலைமையிலான எந்தவொரு அரசாங்கமும் சீனாவிற்கு எதிரான போருக்கான அதன் அரசியல் மற்றும் இராணுவ தயாரிப்புக்களை கீழறுக்கக் கூடிய சீன-சார்பு ஆட்சியாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

சர்வதேச நாணய நிதியமும் சிறிசேன மற்றும் இராஜபக்ஷ மீது அழுத்தம் கொடுக்கின்றது. அது கொழும்பிற்கான 1.5 பில்லியன் டாலர் கடனின் கடைசி தவணையை தாமதிப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் இட்ரஜீத் கூமரஸ்வாமி, கடந்த புதன்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தள்ளிவைக்கப்பட்டமை, அரசியல் நெருக்கடியின் விளைவே என கூறியுள்ளார். இந்த முடிவில் வாஷிங்டனுக்கு தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே, ஷீ ஜின்பிங் இராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததை, பெய்ஜிங் செல்வாக்கு செலுத்துவதற்கான "ஆதாரம்" என்று சர்வதேச ஊடகங்கள் பரந்த அளவில் பயன்படுத்தின. அமெரிக்க பூகோள-அரசியல் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சீனா, இராஜபக்ஷ ஆட்சி பெய்ஜிங் உடனான கொழும்பின் உறவுகளை அதிகரிக்கும் என்று நம்புகிறது.

எவ்வாறெனினும், இராஜபக்ஷ, அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் தனது அரசாங்கம் வேலை செய்ய தயாராக இருப்பதாக சமிக்ஞைகளை அனுப்பியுள்ளார். செப்டம்பரில், அவர் புது டில்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். டொனால்ட் ட்ரம்ப் 2017இல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆனபோது இராஜபக்ஷ உடனடியாக அவருக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

விக்கிரமசிங்க, வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தில் நடந்த கடுமையான மோதல்கள் "ஜனநாயகத்திற்கு ஒரு அடி" என்றும் "இறையாண்மையைக் கொண்டுள்ள இலங்கையின் வாக்காளர்களான எம் அனைவருக்கும் ஒரு அடி" என ஊடகங்களிடம் சிடுமூஞ்சித்தனமாக கூறினார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால போரைத் தொடக்கி வைத்த ஐ.தே.க. அரசாங்கங்கள், இலங்கையின் ஏனைய அனைத்து முதலாளித்துவ ஆட்சிகளையும் போலவே, இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு ஒடுக்கி வந்துள்ளது.

புதிய தேர்தல்களுக்கான சிறிசேனவின் அழைப்பு அங்கீகரித்த இராஜபக்ஷ, ஜனநாயக உரிமைகளின் "பாதுகாவலனாக" தன்னை தொடர்ந்தும் காட்டிக் கொண்டுள்ளார். இலங்கை பாராளுமன்றம் அரசியல் நெருக்கடியை தீர்க்கத் தவறினால், "மக்கள் தலையிட அனுமதிக்கப்பட வேண்டும், வாக்காளர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படும் போது, எவருக்கும் பிரச்சனை இருக்காது," என்று அவர் அறிவித்தார்.

இந்த கூற்றுக்கள் பொய்யானவை. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்கள் மற்றும் யுத்தத்தின் போது தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரத்தக்களரி அட்டூழியங்களுக்கு எதிராகவே, 2015 ஜனாதிபதித் தேர்தலில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் இராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தனர்.

விக்கிரமசிங்க மற்றும் சிறிசேன-இராஜபக்ஷ பிரிவினரின் "ஜனநாயக" வாய்வீச்சு போலித்தனமானது. அவர்களின் உண்மையான கவலை "ஜனநாயகம்" அல்ல, மாறாக பரந்த சமூக அதிருப்தி மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடையே எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடிப்பதைப் பற்றியே அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இரு அமைப்புகளும், அவர்களது முன்னாள் கூட்டாளிகளும், இலங்கையின் கைக்கூலி முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளாகும். எந்த கன்னை அரசாங்கத்தை வென்றாலும், சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதரவோடு, உழைக்கும் மக்களின் சகல உரிமைகள் மீதும் தாமதமின்றி கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடும்.

சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அவசரமாக தலையீடு செய்ய வேண்டும், மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட தொழிலாள வர்க்கமானது இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை தம்முடன் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.